Advertisement

                              நான் இனி நீ –  3

“நீரு… இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..

“பட் அனு…” என்று அவள் சொல்லும்போதே,

“எஸ்… நான் கண்டிப்பா போகத்தான் போறேன்.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா நீரு.. டாட் என்னை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிருக்கிறதுல இருந்து அது உனக்கும் தெரியும்ங்கிறது வரைக்கும் எல்லாமே எனக்குத் தெரியும்…” என்றவளின் முகத்தில் கோபம் எதுவும் தெரிகிறதா என்றுதான் பார்த்தாள் நீரஜா.

ம்ம்ஹும்.. எதுவுமில்லை.. எப்போதும் போலவே அனுராகா இருந்தாள். நீரஜாவிற்கு நன்கு தெரியும். அவளுக்கு இப்படியான விஷயங்கள் எல்லாம் சிறிதும் பிடிக்காது என்று. சுதந்திர பறவை அவள். டிரைவர் அனுப்பினால் கூட

‘ஏன் எனக்கு டிரைவ் பண்ண தெரியும்தானே.. பின்ன ஏன் டிரைவர் வேற??’ என்பாள்.

அப்படி இருப்பவளை கண்காணிக்க ஆள் அனுப்பினால், நிச்சயம் ஒரு களேபரம் செய்வாள் என்று பார்த்திருக்க, அவளோ அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதுபோல் இருக்க, நீரஜாவிற்கு கொஞ்சம் டென்சன் கூடியது.

“இல்லை அனு.. அது… அங்கிள் என்ன சொன்னாருன்னா…” என்று இழுக்க,

“ஹவுஸ் அர்ரெஸ்ட்க்கு பதிலா இது என்ன ரிசார்ட் வச்சு லாக் பண்றதா..?? ஐ மீன் நான் இந்த கோவா குள்ள எங்கவேணா போகலாம்.. ஆனா அதை தாண்டி எங்கயும் போக முடியாது அப்படிதானே…” என்றவளோ நிதாமனாகவே இருந்தாள்.

அனுராகா பேசுவதை கேட்ட நீரஜாதான் ஆடிப்போனாள்.

உண்மை தெரிந்துபோனது, இனி என்னாகுமோ என்று ஒருவிதமாய் அவளுக்கு பயம் வர, “பிரஷாந்த்… உ.. உனக்கு செட்டாக மாட்டான்னு…” எனும்போதே,

“யார் சொன்னா அப்படி??!!” என்றாள் அனு.

“அனு ப்ளீஸ் யா.. ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்…”

“ஐ டோன்ட் வான்ட் டு அண்டர்ஸ்டாண்ட் எனிதிங் நீரு.. நான் டிசைட் பண்ணிட்டேன்.. சோ க்ளியரா இருக்கேன்… தட்ஸ் ஆல்..” என்று தோளைக் குலுக்கிவிட்டு சென்றாள்.

நீரஜாவிற்கு தான் பயம் தொற்றிக்கொண்டது. எந்த நொடி எப்போது இங்கிருந்து அனுராகா கிளம்புவாளோ என்று. அவள் கிளம்பிப்போனால் என்றால், தன்னை தானே அங்கிளும் ஆன்ட்டியும் கேள்வி கேட்பார்கள் என்று. உடனே தாராவிடம் இதனை சொல்லவேண்டும் என்று தாராவிற்கு அழைக்க,

அவரோ “அப்படியா?? நீ வொர்ரி பண்ணிக்காதே நீரு.. அனு உன் பிரன்ட் தானே.. உன்னை அப்படி எல்லாம் கோவிச்சுக்க மாட்டா..” என,

“கோவிச்சா பரவாயில்லை ஆன்ட்டி.. பிரண்ட்ஷிப்பே வேணாம் சொல்லிட்டா??!!” என்று நீரு கேட்க,

“நான் பார்த்துக்கிறேன்..” என்றவர், அடுத்து மகளுக்கு அழைத்தார்.

“ம்ம் சொல்லும்மா.. எப்போ வர்றீங்க நீயும் அப்பாவும்??” என்று வெகு இயல்பில் கேட்க, தாரா தான் ஒருநொடி குழம்பிப்போனார்..

“பாங்க்சனுக்கு முதல் நாள் வந்திடுவோம்..” என்றவர் “உனக்கு அங்க எல்லாம் ஓகே தானே அனு..” என,

“ம்ம்ம் ஓகே தான்.. என்ன.. நான் குளிக்கிறதை மட்டும் தான் நீங்க அனுப்பின ஆளுங்க பார்க்கலை..” என்றதும்,

“அனு!!!!!” என்று கத்தியேவிட்டார் தாரா.

“ஹா ஹா ஜஸ்ட் பார் ஜோக் ம்மா..” என்று அனு சிரிக்க, ‘என்ன செய்து வைக்கப் போகிறாளோ…’ என்று தாராவிற்கும் ஒரு பயம் தொற்றிக்கொண்டது..

அடுத்தநொடி அனுவின் அழைப்பை துண்டித்துவிட்டு, கணவருக்கு அழைத்து “அவ பிரஷாந்த் கிட்ட பேசணும் சொல்லும்போதே நீங்க பேச வச்சிருக்கலாம். இப்போ என்ன செய்ய போறா தெரியலை…” என,

“எதுவும் ஆகாது நான் பார்த்துக்கிறேன்..” என்றார் லோகேஸ்வரன்.

“எனக்கென்னவோ பயமா இருக்கு லோகேஷ்.. அவ இப்படி பீகேவ் பண்ணதே இல்லை..”  

“ஷ்..!!! தாரா.. ஏன் ஓவர் ரியாக்ட் பண்ற நீ.. இன்னும் த்ரீ டேஸ்ல நம்ம அங்க இருப்போம்.. அதுவரைக்கும், அதுக்கப்புறமும் கூட அனு எதுவும் செய்ய முடியாது போதுமா.. அப்படியே டெல்லி போனாலும் பிரஷாந்த மீட் பண்ண மாட்டா ஓகே வா..” என்றவர் வைத்துவிட்டார். 

இப்போது நீரஜாவோடு, தாராவிற்கும் மனதில் அடுத்தது என்னவோ, இந்த அனுராகா என்ன செய்வாளோ என்று இருக்க, தாராவிற்கு இனியும் இங்கே இருக்க முடியும்போல் தெரியவில்லை.

மீண்டும் லோகேஸ்வரனுக்கு அழைத்தவர் “கோவா போறேன்…” என்று சொல்லி அடுத்த ப்ளைட்டில் கிளம்பியும் விட்டார்.         

யாரவள் தெரியாது, ஆனால் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது தீபன் சக்கரவர்த்திக்கு. பிறர் அவளைப் பார்ப்பதும் கூட பிடிக்கவில்லை. அதுவும் தன் நண்பனே என்றாலும் கூட. இத்தனை நாள் இவள் இங்கில்லை..

மனது நிச்சயமாய் சொன்னது “விஐபி புக்கிங்” என்று..

சினிமா நடிகைகள், பெரிய பெரிய வசதிபடைத்தவர்கள் மட்டுமே இந்த ரிசார்ட்டில் தங்க முடியும். இவள் நடிக்கையும் இல்லை. ஆக எதோ ஒரு பெரிய வீட்டு பெண் என்று தெரியாது. அவள் முகம் கூட அத்தனை தெளிவாய் மனதில் பதியவில்லை. மாறாக அவளின் உருவம் பதிந்தது.

அவள் நீந்திய விதமும், நீரில் அவள் மிந்தத விதமும் அவனை அவள்பால் இழுத்தது. கண்களை மூடி அவளின் முகத்தினை நினைவு படுத்த முயன்றான். அது முடியவேயில்லை. ஏற்கனவே தர்மாவிடம் விசாரிக்கவும் சொல்லியிருந்தான். நேரம் தான் சென்றதே தவிர பதில் இன்னும் வரவில்லை.

புனீத்தும், தேவ்வும் வெளியே போகலாம் வா என்றதற்கு கூட தீபன் வரவில்லை. என்னவோ ஒரு யோசனை, அவனைப் போட்டு படுத்திக்கொண்டு இருக்க, நேரம் பார்த்தவன், தர்மாவிற்கு அழைக்க, முதலில் தர்மா எடுக்கவேயில்லை..

“ஷிட்…!!!!” என்று அலைபேசியைத் தூக்கி கட்டில் மீது விட்டெரிய, வெளிய நண்பர்கள் இருவரும் கூட வந்துவிட்டனர்.

“டேய் என்னடா??!!!” என்றவர்களிடம்,

“நத்திங்…” என்றவனோ மீண்டும் அலைபேசியை எடுக்கும் நேரம், தர்மா அழைத்துவிட்டான்.         

அந்த நொடி அப்படியே தீபனின் முகம் மாறிட, “தர்மா நான் சொன்னது என்னாச்சு???” என்ற கேள்விக்கு, அவன் எதிர்பார்த்து காத்திருந்த விடை கிடைத்திட,

“ஓஹோ…!!!!! ஐசி… எத்தனை நாள் இங்க இருப்பாங்கன்னு தெரியுமா??” என,

“அடுத்த வாரம் வரைக்கும்..” என்ற தர்மாவின் பதிலில், தீபனின் முகத்தில் ஒரு பளிச்சிடல்..

“தட்ஸ் குட்…” என்று சொல்லும்போதே, “பட் ரெண்டு பேரு வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க…” என்று தர்மா சொல்ல,

“யாரது??” என்றவனின் குரல் அப்படியே மாறிப்போனது..

“அது தெரியலை.. பட் ரெண்டு பேரு  இருக்காங்க மேம்மோட மூவ்ஸ் வாட்ச் பண்றதுக்கு…” என,

“தூக்கிடு.. இல்லை நம்மாள மாத்திடு.. இன்னிக்கே.. இப்போவே.. ரைட்..” என்று தீபன் சொல்ல,

“ஓகே..” என்று தர்மா போனை வைத்திட, ‘நீ என்னடா பண்ணிட்டு இருக்க??’ என்றுதான் பார்த்தனர் புனீத்தும், தேவ்வும்..

“என்ன??!!” என்று இருவரையும் பார்த்து தீபன் கேட்க,

“என்ன என்னடா?? யாரை தூக்க சொல்ற?? யாரை மாத்த சொல்ற??” என்று தேவ் கேட்க,

“எல்லாம் முடியட்டும் சொல்றேன்..” என்ற தீபனோ மீண்டும் போய் பால்கனி அருகே நின்று பார்த்தான் அவள் தெரிகிறாளா என்று.

ஆனால் அந்தப்பக்கமே ஆள் அரவமற்றதாய் இருக்க, ‘எவன் அவன் வாட்ச் பண்றவன்..??’ என்று கண்களை கூர்மையாக்கி பார்த்தவனுக்கு, அங்கே யாரும் இருப்பதாய் தெரியவில்லை..

“என்னடா இவன் வித்தியாசமா பீகேவ் பண்றான்??” என்று புனீத் கேட்க,

“ஒன்னும் புரியலை.. வேற எதுவும் விசயமோ??” என்று தேவ்வும் கேட்க,

“நமக்குத் தெரியாம அப்படி என்ன??” என்று புனீத் சொல்லும்போதே, “நான் தான் எல்லாம் முடியட்டும் சொல்றேன் சொல்லிட்டேனே..” என்றபடி வந்தமர்ந்தான் தீபன் சக்ரவர்த்தி.

“அதுவரைக்கும் நீ காட்டுற வித்தை எல்லாம் நாங்க பாக்கணுமா??”

“கண்ணை மூடிக்கோ…”

“ஷப்பா…” என்ற தேவ்விற்கு அழைப்பு வந்தது.

யாரென்று பார்த்தவன் எடுத்துப் பேச, “ஹேய் ரியல்லி எப்போ பார்த்த நீ?? அப்போவே கூப்பிட்டு இருக்கலாமே..” என, எதிர்புறம் என்ன சொன்னதோ,

“ஓகே ஓகே லோகேசன் சொல்லு…” என்று தேவ் கேட்டதின் பதில் கிடைக்க,

“வாவ்.. வீ ஆர் தேர் ஒன்லி.. கம் கம் லெட்ஸ் மீட்..” என்று வைத்தவன்,

“என்னோட கசின் நீரஜா.. பிரன்ட் ஓட இங்கதான் ஸ்டே பண்ணிருக்காலாம்..” என்றான்..

“வாவ்…” என்று புனீத் சொல்ல, “ஓஹோ!!!” என்றான் தீபனும்.

அவனின் எண்ணமெல்லாம் அந்த நீச்சல் ராணி மீதிருந்தது. அவள் எப்போது வருவாள் என்றிருந்தது. எப்படி அவளிடம் பேசலாம் என்றிருந்தது.

‘தீபன்.. என்னாச்சு உனக்கு?? ஏன் இப்படியெல்லாம் உன்னோட திங்கிங் போகுது.. நீ இப்படியில்லையே..’ என்று அவனின் மனம் கேட்க,

“ஏன் இப்படி இருந்தா என்ன??” என்று அவனே முணுமுணுத்துக்கொண்டான்.

“என்னடா இவன் இவனா பேசுறான்??” என்று புனீத் தேவ்விடம் கேட்க, “இப்போதைக்கு நம்ம அவன்கிட்ட பேசாம எழுந்து போறதுதான் சரி..” என்று அவனும் சொல்ல, நண்பர்கள் இருவரும் சத்தமில்லாது நகர்ந்து சென்றனர்.

ஆனால் தீபனின் அலைபேசி சப்தமிட, எடுத்துப் பார்த்தவன் நாகா அழைக்கிறான் என்றதும் அப்படியே அவனின் சிந்தனை, முக பாவனை எல்லாமே மாறிப்போனது.

“நாகா?? என்னாச்சு?? ஷர்மா உண்மையை சொன்னானா இல்லையா??” என்று படபடக்க,

“இல்லை.. அவன் எதுவுமே சொல்லலை..” என்று நாகாவும் சொல்ல,

“டேமிட்…” என்று பல்லைக் கடித்தவன் “ஓகே ரிலீஸ் ஹிம்.. அவன் எங்க போகணுமோ அங்க போகட்டும்.. பார்த்துக்கலாம்.. பட்.. நம்ம பார்வைல இருந்து ஷர்மா எங்கயும் போயிட கூடாது..” என,

“ஓகே…” என்றுவிட்டு நாகா வைத்துவிட, இப்போது தீபன் சக்கரவர்த்தியின் நினைவில் துளியும் அனுராகா பற்றிய சிந்தனை இல்லை.    

இந்த ஷர்மாவிற்கு எத்தனை தைரியம், இது மட்டும் தான் செய்தானா இல்லை இன்னும் வேறேதேல்லாம் செய்திருக்கிறான் என்ற யோசனை போனது.. எதுவும் சட்டென்று புத்தியில் வரவில்லை. ஏனெனில் அந்த சேட் பலவருட பழக்கம். கோடிக்கணக்கில் பண புழக்கம் இருந்தது.

அப்படியிருக்க நிச்சயம் அந்த சேட் இதை செய்திருக்க வாய்ப்பேயில்லை. இந்த ஷர்மாதான் யாரிடமோ விலை போயிருக்கவேண்டும் என்று தீபனின் மனது அடித்துச் சொல்ல, மிதுனுக்கு அழைத்தான்.

அங்கே வீட்டினிலோ சக்கரவர்த்தி, “என்ன மிதுன்.. நீ சொல்லியும் அவன் கேட்கலையா??” என்று கேட்க,

“யார் சொல்லித்தான் ப்பா அவன் கேட்டான்??” என்றான் மிதுன்..

“இது மத்த விஷயம் போல இல்ல மிதுன்.. சேட்டுக்கும் நமக்கும் எத்தனை வருஷ பழக்கம்.. அது தெரியலையா இவனுக்கு??” என்று சத்தம் போட,

“எல்லாம் சொல்லியாச்சுப்பா.. பட் ஷர்மா பண்ணதும் தப்புதானே…” என்று மிதுன், தீபனுக்கு சாதகமாய் பேச,

“ஷர்மாவை தூக்கி வச்சிருக்க்கிறது வெளிய தெரிஞ்சா எவ்வளோ பெரிய பிரச்சனை ஆகும் தெரியுமா??” என்று சக்கரவர்த்தி சொல்லும்போதே,

“போதும் போதும்… டைனிங் டேபிள்ல இப்படியான ஆர்கியுமென்ட்ஸ் இருக்கவே கூடாதுன்னு சொல்லிருக்கேன் தானே…” என்று இருவருக்கும் உணவு பரிமாறினார் உஷா..

அப்பாவும், மகனும் உஷாவின் முகம் பார்க்க “என்ன என்ன??? சப்பிடுறப்போ பிரச்னைகளை பத்தி பேசினா, சாப்பாடோட சேர்த்து பிரச்சனையும் தான் நமக்குள்ள போகும்… சோ அமைதியா சாப்பிடுங்க.. அப்புறம்.. சின்னவன் பத்தி ரொம்ப பேசாதீங்க….” என்றவரும் தட்டு வைத்து அமர, இப்போது அப்பா மகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மிதுன் இப்போது அமைதியாகிட, சக்ரவர்த்தி தான் “சின்ன மகனை சொன்னா மட்டும் ஏன் இவ்வளோ கோவம் வருது உனக்கு…” என, அந்த சின்ன மகனே பெரிய மகனை அழைத்து,

“ஷர்மாவை ரிலீஸ் பண்ண சொல்லிருக்கேன்… பட் எனக்கென்னவோ இது சரியா படலை மிதுன்…” என்றான்.

“ஏன் என்னாச்சு??!!” என்ற மிதுனோ யார் பேசுகிறார்கள் என்றே காட்டிக்கொள்ளவில்லை.

தீபனின் குரலே சொன்னது, இது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தெரியவேண்டாம் என்று

“வாயே திறக்கலை அவன்.. சேட் கண்டிப்பா செஞ்சிருக்க வாய்ப்பில்லை. பட் ஷர்மா?? என்னவோ இருக்கு மிதுன்.. அப்பாவோட மீட்டிங்க்ஸ் எல்லாம் என்னதுன்னு எனக்கு பார்வேர்ட் பண்ணு…” என,

“நீ ஒன்ஸ் இங்க வா..” என்றான் மிதுன்..

“வருவேன்.. நீங்கயெல்லாம் இங்க எப்போ வர்றீங்க??”

“ரிசப்சன்க்கு வருவோம்தானே..” என்று மிதுன் சொல்ல, “ஓகே பார்த்துக்கலாம்..” என்ற தீபன் வைத்துவிட்டான்.

யாரிடம் பேசுகிறான் என்பது கட்டிக்கொள்ளவில்லை என்றாலும், பெற்றவர்களுக்குத் தெரியாதா என்ன? சக்கரவர்த்தி அமைதியாய் பார்க்க, உஷா தான்,

“ஏன் எங்கக்கிட்ட எல்லாம் பேசமாட்டானா??” என்றார்.

“ம்மா பேசாம எங்க போயிட போறான்..” என்று மிதுன் சொல்ல,

“நான் சொன்னது என்னாச்சு??” என்றார் சக்கரவர்த்தி.

“ரிலீஸ் பண்ண சொல்லிட்டானாம். பட் அப்பா.. இதுல வேற என்னவோ இருக்குனு சொல்றான்..”

“ம்ம் என்ன இருக்கப் போகுது… ஹா ஹா நம்ம யார்கிட்ட பணம் வாங்கறோம் கொடுக்கறோம்னு எவிடென்ஸ் கலக்ட் பண்ணி எவனாவது டிவி பேப்பர்னு போடுவான்.. அதான் இன்னும் மூணு மாசத்துல எலெக்சன் வரப்போகுதே.. இதெல்லாம் பார்த்தா நான் இத்தனை வருஷம் அரசியல் பண்ணிருக்க முடியுமா என்ன??” என்றுவிட்டு எழுந்து போனார்.

உஷாவோ என்னவோ பேசிக்கொள்ளுங்கள் என்று உண்டுகொண்டு இருக்க, “ம்மா என்னம்மா நீ??” என்றான் மிதுன்.

“என்ன??”

“இங்க பேசிட்டு இருக்கோம் நீ சாப்பிட்டுட்டு இருக்க??”

“என்னைப் பொறுத்த வரைக்கும் வீட்டுக்குள்ள அரசியல் வரக்கூடாது.. அரசியல்குள்ள சொந்தம் போகக் கூடாது.. ரெண்டுமே மண்டைவலி தான்.. எனக்கு இப்போ விசயமெல்லாம் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்..” என,

“போச்சுடா…” என்றுவிட்டு மிதுனும் எழுந்து போனான்.     

தர்மா, லோகேஸ்வரன் தன் மகளை கண்காணிக்கவென அனுப்பியிருந்த ஆட்களை மாற்றியிருந்தான். எல்லாம் பணம் தான். எதற்கும் ஒரு விலையுண்டு என்பது சரிதானோ என்னவோ. ஆனால் அக்காரியம் செய்த தர்மாவிற்கே ஆச்சர்யம், தீபன் ஏன் இதை செய்யச் சொன்னான் என்று.

இதுவரைக்கும்  இப்படியான ஒரு செயல் செய்யச் சொன்னதில்லை. அப்படியிருக்க இப்போது பெரும் தொகை ஒன்றை கொடுத்தே அந்த ஆட்களை அப்புறப்படுத்த முடிந்தது. காரணம் லோகேஸ்வரனே ஒரு பெரிய தொகை தான் கொடுத்திருந்தார் அவர்களுக்கு.

பணம் இருப்பவர்கள் என்னவும் செய்யலாம் என்பது இது தானோ என்னவோ.

அந்த ஆட்களை மாற்றிவிட்டு, பதிலுக்கு தீபனின் ஆட்கள் இருவரை நியமித்திருக்க, அவர்களும் அவ்வப்போது அனுவின் கண்ணில் பட்டனர் தான்

‘அப்பா ஆள் மாத்திட்டாரோ..’ என்றுதான் எண்ணினாள்..

தாராவும் அங்கே வந்திருக்க, “என்னம்மா?? பயந்துட்டு வந்திட்டியா??” என,

“நீ என்னவேனா சொல்லு.. நீயும் சரியில்லை லோகேஷ் பண்றதும் சரியில்லை..” என்றார் பொதுவாய்.     

“நான் என்ன செஞ்சேன்..??” என்றவள் “ஷாப்பிங் போகலாமா??” என, மகளை வித்தியாசமாய் தான் பார்த்தார் தாரா.

“மாம்.. பங்க்சன் இருக்கு.. நான் எதுவுமே ஷாப்பிங் பண்ணலை.. பிக் பீஸ் எல்லாம் வருவாங்க.. நான் இப்படியே வர முடியுமா என்ன??” என,

“ம்ம் போலாம்..” என்ற தாரா, நீரஜா மற்றும் அனுராகாவோடு ஷாப்பிங் செல்ல இவர்களின் பின்னேயே சிறிது நேரத்தில் தீபன் சக்ரவர்த்தியும் கிளம்பினான்.   

காரை புனீத் செலுத்த,   “அனுராகா… ம்ம்.. அனு… ம்ம்ஹும்.. ராகா… ம்ம் இதான் சரி… ராகா.. டைட்டன் ராகான்னு கூப்பிட்டா கொன்னுடுவாளோ… கொன்னா கொன்னுக்கட்டும்.. யார் வேணா சொன்னா???” என்ற சிந்தனையில் தீபன் சக்கரவர்த்தி இருக்க,

“தீப்ஸ்…. சத்தியமா முடியலைடா…” என்றான் புனீத்..

‘டோன்ட் டிஸ்டர்ப் மீ….’ என்று பார்த்தவன், மீண்டும் அனுவின் கார் அவன் கண் பார்வையில் தான் உள்ளதா என்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

“டேய்… நீரஜா என் கசின் தான்.. வேணும்னா நானே கூட்டிட்டு போய் இன்ட்ரோ செய்றேன்.. படுத்தாத…” என்று தேவ் சொல்ல,

‘ஐ க்னோ வாட் ஐ டூ..’ என்று பார்த்தான் தீபன்.  

“என்ன லுக்கு… உன்னால நானும் நீரஜாவை இன்னும் பார்க்கலை.. திஸ் இஸ் டூ மச் தீப்ஸ்..” என,

“இப்போ போறோம் தானே பார்த்துடலாம்…” என்றான் தீபன்.

“ம்ம் உன்னைப் பார்த்தா நீ சும்மா வர்றது போல தெரியலை..”

“ஹா ஹா… டேய் பேசாம வாங்கடா ரெண்டுபேரும்…” என்றவனுக்கே தெரியவில்லை தான் ஏன் அவளை தொடர்ந்து செல்கிறோம் என்று.

எப்போதுமில்லாத ஓர் உந்துதல் இப்போது.. பெண்களையே பார்த்தவன் இல்லை என்று சொல்லிட முடியாது. ஆனாலும் பெண்களிடம் அவனின் எல்லைகள் தெரிந்தவன் தீபன் சக்ரவர்த்தி. நட்போடு சிலரும், பொழுது போக்கிற்கு பலரும் என்ற வகையில் இருக்க, அந்த பெண்கள் எல்லைத் தாண்டிட நினைக்கும் நேரத்தில் தீபன் அவர்களை கத்தரித்துவிடுவான்.

அவனுக்கு அனைத்தையும் விட, அவனின் பெயரின் பின்னால் இருக்கும் ‘சக்கரவர்த்தி…’ என்ற பெயரின் மதிப்பும் கௌரவமும் மிக மிக முக்கியம்.

‘ப்ரேக் அப்..’எல்லாம் தானாக ஏற்படுத்திக் கொள்வது..

மற்றபடி அவனின் எண்ணங்களில் எப்போதும் யாரையும் ஏமாற்றும் எண்ணமில்லை. ஆனாலும் ஒரு ஜாலிக்காக ஒவ்வொரு முறை யாரோ ஒருத்தி ‘உன்னை நம்பினேன் பாரு..’ என்று சொல்லிவிட்டு செல்லும்போதெல்லாம் நண்பர்களுக்கு ப்ரேக் அப் பார்ட்டி கொடுப்பான்.

அப்படியிருந்தவன் இப்போது முகம் கூட சரியாய் தெரியாதவளை கண்காணிக்க ஆள் வைப்பதும், அவளை பின்தொடர்ந்து செல்வதும் விந்தையாய் தான் இருந்தது.

அனுராகாவின் கார் ஒரு பெரிய ஷாப்பிங் மாலின் முன் நிற்க, வெகு ஸ்டைலாய் தான் காரை விட்டிறங்க, தீபன் அவனின் காரினுள் இருந்து பார்த்தபடி இருந்தான்.

தேவ் ‘நீ வந்தா வா.. இல்லையோ போ..’ என்று நீரஜாவை பார்க்க இறங்கிட, புனீத்தும் அவனோடு செல்ல, தீபன் இவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

அனுராகா, போட்டிருந்த கூலிங் கிளாஸ் கலட்டவேயில்லை. முகமும் அவளின் கைகளும் மட்டுமே அவளின் நிறம் காட்ட அவள் போட்டிருந்த உடை முழுவதுமே கருப்பு நிறம் தான்.

உஷாவிற்கு பெண்கள் கருப்பு நிற ஆடை அணிந்தாலே பிடிக்காது. நேரம் காலமில்லாது தீபனுக்கு அது நினைவு வர, லேசாய் சிரித்துக்கொண்டான். அதற்குள் தேவ்வும், புனீத்தும் அவர்களை அணுகியிருக்க, நீரஜா தேவ்வை தாராவிடமும் அனுவிடமும் அறிமுகம் செய்துவைக்க, பதிலுக்கு தேவ், புனீத்தை அறிமுகம் செய்ய, ஐவரும் பேசியபடி நின்றிருந்தனர். தாரா தான் எதுவோ பேசிக்கொண்டு இருக்க,  அப்படியே அனைவரும் மாலினுள் செல்ல, அதன்பின்னே தான் தீபன் இறங்கினான்.

“நீங்களும் அந்த ரிசப்சன்காகத் தான் வந்தீங்களா??” என்று தாரா கேட்க,

“இல்லை ஆன்ட்டி.. நாங்க இங்க வந்து டென் டேஸ் ஆச்சு.. பட் எங்களோட பிரன்ட்காக இங்க இருக்கோம்..” என்று தேவ் சொல்ல,

நீரஜாவோ “யாரது?? உன்னோட பிரண்ட்ஸ் யாரும் இப்படி ஒரு பிளேஸ்ல நிக்க மாட்டாங்களே..” என,

“தீபன் தெரியுமா?? தீபன் சக்கரவர்த்தி.. சென்ட்ரல் மினிஸ்டர் சக்கரவர்த்தியோட சன்..” என்றான் தேவ்..

மற்ற பெண்கள் இருவரின் முகத்திலும் சின்னதாய் ஒரு வியப்பு இருக்க, அனுவின் முகத்தில் அவன் யாரோ எவனோ என்ற பாவனையே இருக்க, சரியாய் அதே நேரம் தீபன் சக்ரவர்த்தியும் வந்து அவர்களின் முன்னே நின்றான்.

காதல் – நான் வந்துவிட்டால் நீங்கள்

இருவரும் என் கைதிகள்..

காதலர்கள் – கைதாகினோம்.. கட்டுண்டு நின்றோம்

விடுதலைக்கு விருப்பமில்லை.  

Advertisement