நான் இனி நீ – 27
தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது அவன்பாட்டில் காரைக் கிளப்பிவிட்டான்.
அத்துனை வேகம்.. எதை பிடிக்கவோ??!! இல்லை எதில் இருந்து தப்பிக்கவோ..??!!
இரண்டுமே தெரியவில்லை..
ஆனால் அப்படியொரு வேகம்..
வீட்டிற்கு செல்லவோ, இல்லை அவனுக்கிருக்கும் வேலைகள் பார்க்கவோ மனதில்லை. அதில் நாட்டமும் செல்லவில்லை. எத்தனை எத்தனை வேலைகள். அவனைக் காண காத்திருப்போர் எத்தனை. எத்துனை பெரிய ஆட்கள் எல்லாம் இவனைக் கண்டிட வேண்டும் என்று நேரம் கேட்டிருக்க, அதெல்லாம் தாண்டி அவளைக் காணச் சென்றால் இப்படி பேசுகிறாள்.
‘என்ன பேச்சு பேசறா??!!!’ இது மட்டுமே அவனின் மனதில்… சிந்தையில்.. புத்தியில் எல்லாம்..
“என்ன பேச்சு டி உனக்கு…” என்று பல்லைக் கடித்தவன், ஸ்டியரிங்கை ஓங்கி ஒரு குத்து குத்த, என்ன செய்தும் அவனின் ஆத்திரம் மட்டும் அடங்குவதாய் இல்லை..
“ராட்சசி… எப்போ பாரு ஏதாவது பண்ணி ஹாஸ்பிட்டல் வந்து படுத்திடுறா.. ரத்தக் காயம் எல்லாம் இவளுக்கு பாடி மசாஜ் போல..” என்றெண்ணியபடி காரின் வேகத்தினை இன்னும் கூட்ட,
அவனின் பின்னேயே மற்றுமொரு கார் அப்போதிருந்து தொடர்ந்து வருவது நன்கு தெரிந்தது. கண்ணாடி வழியே கொஞ்சம் உற்றுப்பார்த்தவனுக்கு புரிந்தும் போனது வருவது ஆர்த்தி என்று.
‘ஆர்த்தி…’ என்று உச்சரித்தவன், காரின் வேகத்தினை கம்மி செய்து செல்ல, அவள் தன்னை தாண்டிச் செல்கிறாளா இல்லை பின் தொடர்ந்து வருகிறாளா?? என்று பார்த்தான்.
தீபன் காரின் வேகத்தினை கம்மி செய்யவுமே, ஆர்த்தியுமே வேகத்தினை குறைத்திட ‘இவ எதுக்கு என்னை பாலோ செய்யணும்..’ என்று அதுவும் ஒரு எரிச்சல் கொடுக்க, முன்னை விட காரினை மேலும் வேகமாய் செலுத்தினான் தீபன்.
ஆர்த்தியும் நான் உனக்கு சளைத்தவள் அல்ல எனும்விதமாய் அவனை விடாது தொடர,
“ஏய்…” என்று பல்லைக் கடித்தவன், காரினை சாலையின் ஓரமாய் நிறுத்தியவன், வேகமாய் அதனினுள் இருந்து இறங்கினான்..
ஆர்த்தியும் காரினை நிறுத்திட, இவன் இறங்கி வந்தவன் “ஹேய்… இறங்கு..” என்றான் கோபமாய்.
ஆர்த்தி இறங்கிட “என்ன??!! பண்ணது எல்லாம் போதாதா?? இப்போ ஏன் பின்னாடி வர??” என்று அதட்ட,
“தீப்ஸ் ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..” என,
“இன்னும் என்ன கதை விடப்போற.. இப்போ நான் இப்படி நிக்கிறேனா அதுக்கு காரணமே நீ தான்…” என்று விரல் நீட்டி தீபன் கத்த,
“தீப்ஸ் ப்ளீஸ்..” என்றாள் இறைஞ்சும் விதமாய்.
ஆர்த்தி எப்போதும் அவனிடம் அதிகம் உரிமை எடுத்துப் பேசுவாள், அவனைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் நடந்துகொள்வாள், ஆனால் இதுபோல் கெஞ்சியது இல்லை..
ஏற்கனவே இருப்பது போதாது என்று இப்போது இதுவேறா என்று அவனுக்குத் தோன்ற, இன்னும் எத்தனை பேரைத்தான் காயப்படுத்தப் போகிறோம் என்றும் எண்ணம் வந்திட, “ம்ம்ச் என்ன???” என்றான் பார்வையை அவள்பக்கம் பதிக்காமல்.
“ஐம் சோ சாரி தீப்ஸ்.. நீ.. உனக்கும் அனுராகாக்கும் ரிலேஷன்ஷிப் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை..” என்று ஆரம்பிக்க,
“இது உனக்கு தேவையில்லாத விஷயம்..” என்று தீபன் ஆத்திரம் தாள முடியாது அவளின் காரினை ஓங்கி ஒரு மிதி மிதிக்க,
“தீப்ஸ் ப்ளீஸ்.. நான்.. நான் உன்னோட கொஞ்சம் தனியா பேசணும்.. இங்க ரோட்ல வச்சு எதுவும் வேண்டாமே..” என்றாள் பரிதவிப்பாய்.
“உனக்கும் எனக்கும் தனியா பேசுற அளவு இதுவரைக்கும் எதுவுமில்லை இனியும் எதுவுமில்லை ஆர்த்தி.. இப்போ நான் இறங்கி வந்து பேசுறதுகூட இனியாவது நீ என் வழியில வராம இருக்கணும்னுதான்.. புரிஞ்சு நடந்துக்கோ…” என்றவன், திரும்பி நடக்கத் தொடங்க,
“தீப்ஸ்.. நோ.. நான் பேசியே ஆகணும்..” என்று அவனின் பின்னேயே வந்தவள், அவனின் கைகளைப் பற்ற,
“ஏய்…” என்று கைகளை உதறியவன், “என்ன பண்ற நீ???” என்று சீற,
“நான் பேசணும் தீப்ஸ்.. ஒன் டைம்…” என்றவளுக்கு கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
தீபன் அவளின் முகத்தினை எடை போடுவது போல் பார்க்க “ப்ளீஸ்…” என்றாள் திரும்பவும்.
“என்ன??!!”
“இங்க வேண்டாமே.. எங்காவது போலாம்.. நீ.. நீயே டிசைட் பண்ணு..” என,
“நீயெல்லாம் திருந்தமாட்ட..” என்றவன், மீண்டும் அவனின் கார் நோக்கி செல்ல,
“தீப்ஸ்.. இப்போ நீ என்னை கூட்டிட்டு போகலை.. இப்படியே வர வண்டியில ஏதாவது முன்னாடி போயி விழுந்திடுவேன்..” என்று மிரட்டலுக்கு மாறினாள் ஆர்த்தி.
அவள் அப்படிச் சொல்லவும் நிதானமாய் அவளின் முகம் பார்த்தவன் பின் “பெரிய வண்டியா பார்த்து விழுந்துடு..” என்றுவிட்டு போக, ஆர்த்தி ஸ்தம்பித்துப் போனாள்.
கெஞ்சியாகி விட்டது. மிரட்டலும் செய்தாகி விட்டாது. எதற்குமே அவன் அசையவில்லை எனில் என்ன செய்வது??!!
ஒருப்பக்கம் பயமாகவும் கூட இருந்தது.. இனி என்ன பேசி அவனை அவள் சொல்லை கேட்க வைப்பது என்று தெரியவில்லை. நின்றது நின்றபடி ஆர்த்தி யோசிக்க, தீபன் காரினைக் கிளப்பிக்கொண்டு செல்ல, அவளோ அவன் போவதைப் பார்த்தவள் மெதுவாய் எட்டுக்கள் வைத்து சாலையின் பக்கம் செல்லத் தொடங்கினாள்.
தீபன் முதலில் இதனை கவனிக்கவில்லை.. கவனிப்பு என்ன, அவளை கண்டுகொள்ளவேயில்லை. சொல்லப் போனால் இப்படி அவளிடம் பொறுமையாய் பேசியதே அதிசயம் தான்.
அதிலும் மிரட்டல் வேறு.. வண்டியின் முன் விழுந்து வைப்பேன் என்று..
“விழுந்தா விழு.. எனக்கென்ன…” என்று சொல்லிக்கொண்டவனின் பார்வை தன்னைப்போல் பக்கவாட்டு கண்ணாடி வழியே பின்னே பார்க்க, ஆர்த்தி சாலையின் நடுவே செல்வது தெரிய, நொடிப் பொழுது அதிர்ந்துவிட்டான் தீபன் சக்ரவர்த்தி.
“இடியட்…” என்று உறுமியவன், காரினை திருப்பிச் செலுத்திக்கொண்டு வந்தவன், “ஆர்த்தி நில்லு..” என்றபடிதான் இறங்கினான்.
அவளுக்குத் தெரியும். எப்படியும் தீபன் திரும்பி வருவான் என்று… முரடன் தான். ஆனால் மோசமான ஆள் இல்லை என்பது ஆர்த்திக்கு தெரிந்திருக்காதா என்ன??!!
அவள் அப்போதும் திரும்பி வராது சாலையில் நிற்க, “ஆர்த்தி சொன்னா கேளு.. வா..” என்று தீபன் சத்தமாய் அழைக்க,
“ஏன் தீப்ஸ்.. பெரிய வண்டி எதுவும் வரலையா…” என்றாள் கலங்கிய குரலில்..
“நீ இப்போ வரலை.. கார் எடுத்துட்டு வந்து நானே உன்மேல ஏத்திடுவேன்..” என,
‘இப்போ கூட வந்து கூட்டிட்டு போறானா.. நின்ன இடத்துல இருந்து என்னை வர சொல்றான்..’ என்றுதான் அவள் மனம் எண்ணியது..
அவனின் செயலில் அக்கறை எல்லாம் இல்லவே இல்லை.. மாறாகா இவள் வேறு பிரச்னைகளை கிளப்பிவிட கூடாதே என்ற எண்ணம் தான். இத்தனை வருடங்கள் அவனின் பின்னே சுற்றியதற்கு இது தானா அவன் காட்டும் உணர்வு..
மனது கசந்து தான் போனது ஆர்த்திக்கு..
எது எப்படி இருந்தாலும், யார் என்ன சொன்னாலும் அவளுக்கு என்றுமே தீபன் சக்ரவர்த்தி மீது ஒரு தனி பிரியம் உண்டுதான்.. இப்போதும் கூட..
ஒருவித விரக்தி புன்னகையோடு திரும்பி அவனிடம் வந்தவள், “இப்போ கூட எனக்காக நீ கொஞ்சம் பதறனும்னு தோணலையா தீப்ஸ்..” என,
“இங்க பார் ஆர்த்தி.. இப்படி வசனம் பேசுறது எல்லாம் வேண்டாம்.. என்ன விசயம் சொல்லு..” என்று அவனும் அவனின் நிலையில் நிற்க,
“தனியா பேசணும்னு சொன்னேன்..” என்றாள் அவளும் பிடிவாதமாய்.
“ம்ம்ச்…” என்று எரிச்சலை அடக்கியவன், “வா என்னோட.. பத்து நிமிஷம் தான் டைம்.. திரும்ப இதே ப்ளேஸ்ல வந்து இறக்கி விட்ருவேன்.. கார்லயே எதுவா இருந்தாலும் சொல்லிடு..” என்றவன் அவனின் காரில் அழைத்துச் செல்ல,
இந்தமட்டும் செய்தானே என்றுதான் இருந்தது அவளுக்கு.
காரினில் ஏறி அமரவும், ஆர்த்தி சிறிது நேரம் அமைதியாய் இருக்க, “ஆர்த்தி…” என்றான் பல்லைக் கடித்து..
“ம்ம் சாரி..” என்றவள், அவனிடம் ஒரு பென் டிரைவை நீட்ட, ‘என்ன இது..’ என்று பார்த்தான்.
“இந்தா தீப்ஸ்.. இதை போட்டு பாரு..” என,
“ஆர்த்தி…!!!!” என்று இப்போதும் அவளின் பெயரை கடித்துத் துப்ப, “ப்ளீஸ் தீப்ஸ்.. இதுல என்ன இருக்கு தெரியாது. ஆனா நிச்சயமா இதுல இருக்கிறது உனக்கு எதிரான ஒன்னு.. அதுமட்டும் நல்லா தெரியும்..” என,
“வாட்..??!!!” என்றவன் சடன் ப்ரேக் போட்டு காரினை நிறுத்தியிருந்தான்..
“எஸ்… எனக்கு இதுல என்ன இருக்குனு நிஜமா தெரியாது.. ஆனா இதுல இருக்கிறது உனக்கு அப்போசிட்டா இருக்கிறதுன்னு மட்டும் தெரியும்..” என்றாள் திரும்பவும்.
“எ.. என்ன சொல்ற ஆர்த்தி??!!”
“ம்ம் மாமா இதை ஒருத்தர்க்கிட்ட கொடுத்து நான் சொல்றதுபோல செய்ங்க.. தீபன் ஆட்டம் இனி க்ளோஸ் அப்படின்னு சொல்லிட்டு இருந்தார்..” என,
‘செத்தடா சேட் நீ…’ என்றுதான் தீபனின் உள்ளம் சொன்னது.
தீபன் அமைதியாய் இருக்க, “நான் அவங்க பேசினதை கேட்டது யாருக்கும் தெரியாது.. உன்னோட நேம் வரவும் தான் எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை.. இதை கொடுத்தும் மாமா அவரை அனுப்பிட்டார்.. நான் அவரை பாலோ செஞ்சி போய் அவருக்கே தெரியாம இதை எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..
உன்னைப் பார்க்க வரணும்னு வந்திட்டு இருக்கப்போ தான் உன்னோட கார் பார்க்கவும் பின்னாடியே வந்தேன்.. வே.. வேற எதுவும் இல்லை தீப்ஸ்.. நான்.. நான் உன் மேல வச்ச லவ் ட்ரூ தான்.. ஆனா அதுக்காங்க நீயும் என்னை லவ் பண்ணனும்னு எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது இல்லையா..
சோ.. இது என்னால முடிஞ்சா ஒரு ஹெல்ப் ஆர் எனிதிங்.. நடந்த இத்தனை குழப்பத்துக்குமான பிராயசித்தம் அப்படின்னு கூட நினைச்சுக்க..” என்றவள் பேசி முடிக்க, தீபனுக்கு கனத்து போனது மனது..
தனக்கு உதவிட வேண்டும் என்று வந்தவளை போய் தான் ‘பெரிய வண்டியில விழு..’ என்று சொன்னது இப்போது எண்ணிட, அவனை எண்ணியே ச்சே என்றானது..
என்ன மனுசன்டா நீ என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொள்ள, “ம்ம் தேங்க்ஸ்…” என்றபடி அந்த பென் டிரைவை வாங்கிக்கொண்டான்.
அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஆக ஷர்மா இவனுக்கு எதிராய் திரட்டி வைத்திருந்த ஆதாரங்கள் இதில் தான் இருக்கிறதா??! இது மட்டும் தானா?? இல்லை இது போல இன்னும் இருக்கிறதா?? அதெல்லாம் எதுவும் தெரியாது.
ஆர்த்தி அவனை காத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை கொணர்ந்து கொடுத்திருக்கிறாள்..
இது.. இது மட்டுமே அவனுக்கு பெரிய விசயமாய் பட “தேங்க்ஸ் எ லாட்..” என்றான் உணர்ந்து.
“ம்ம்.. டேக் கேர்..” என்றவள், “கார் ஸ்டாப் பண்ணிடு தீப்ஸ்.. நான் இப்படியே இறங்கிக்கிறேன்..” என,
“இல்லை உன்னோட கார் கிட்ட டிராப் பண்றேன்..” என்றவனுக்கு மனதினில் இப்போது வேறொரு யோசனை..
அப்படியொரு யோசனை வரவுமே தீபனுக்கு ‘இப்படியொரு சுயநலவாதியாகிப் போனாயே தீபன்..’ என்றுதான் தோன்றியது.
இருந்தும் வேறு வழியில்லை.
அங்கே காதருக்கு அதிர்ச்சியாய் இருந்தது சதீஸ் சொன்ன சங்கதிகள் எல்லாம் கேட்டு.. நம்புவதா வேண்டாமா என்ற எண்ணம் கூட.. ஏனெனில் அவருக்கு மிதுன், தீபன் இருவரும் ஒன்றுதான்.. இருவருமே அவர் தூக்கி வளர்த்த பிள்ளைகள் தான்.
ஆனால் இப்போது வந்து சதீஸ் சொல்வதை எல்லாம் கேட்டால் தலையே சுற்றுவதாய் இருந்தது..
தீபனை கண்காணிக்க சொன்னானா??! அதுவும் மிதுனா??!!
அப்பாவிற்கு தெரியவேண்டாம் என்றபோதே சுதாரித்து இருக்கவேண்டுமோ என்று எண்ணியவர், தீபனுக்கு அழைக்க அவனோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தெரியவர, யோசனைகளை எல்லாம் தாண்டி மனதினில் ஒரு பதற்றம் குடிகொண்டது அவருக்கு.
பேசாது அனைத்தையும் சக்ரவர்த்தியிடம் சொல்லிவிடலாமா என்று யோசிக்க,
“ச்சே வேணாம்.. இதுதான்னு முழுசா தெரியாம எதையாவது சொல்லி நம்ம குழப்பிட கூடாது..” என்று எண்ணியவர், தீபனுக்கு அழைத்துப் பார்த்து பார்த்து, பின் ஒன்றும் முடியாது போக, வேறு வழியே இல்லாது நாகாவிற்கும் தர்மாவிற்கும் அழைத்தார்.
“டேய் பசங்களா… அங்க இருந்தது போதும் இங்க வாங்க..” என,
அவர்களோ “என்ன பாய்… நீங்க கூப்பிடுறீங்க..” என்றனர் இருவரும்.
“தீபன் எங்க இருக்கான்னே தெரியலை.. போனும் போகலை.. ரொம்ப முக்கியன விஷயம்.. நீங்க வந்துட்டா நல்லாருக்கும்..” என,
“பாய்.. நாங்க வந்த வேலை இன்னும் முடியலை..” என்றனர்.
“டேய்… இங்க தீபனோட பாதுகாப்பு முக்கியமா இல்லை போன வேலை முக்கியமா.. சொன்னா கேளுங்க.. வாங்க..” என்றுவிட்டு வைத்தார் அலைபேசியை..
காதருக்கு படபடப்பாய் இருந்தது..
மற்ற ஆட்கள் வைத்து விசாரித்துப் பார்க்கையில் தீபன் இப்போது ஊரினில் இல்லை என்பது மட்டுமே தெரிய வர, அவரின் படபடப்பு மேலும் கூடியது.