மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, பொறுப்பா செய்யணும் என்று சொல்லியும்விட்டு, பணம் பரிவர்த்தனைகள் எல்லாம் கலந்தாலோசித்துவிட்டு, காரில் ஏற, சுற்றிலும் கட்சி ஆட்கள்..
கார் கதவினை ஒருவன் திறந்துவிட “அண்ணா.. நான் டிரைவ் பண்ணவா??” என்று ஒருவன் கேட்க,
“சொன்ன வேலையை பாருங்கடா…” என்றவன், கிளம்பிவிட, மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
எப்போது அனுராகா அங்கே இருக்கிறாள் என்று தெரிந்ததோ, அப்போதே அவளின் பந்தோபஸ்த்திற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டான்..
அவனுக்கு நன்கு தெரியும், முழு நேரமும் எல்லாம் தாரா அங்கே இருக்கமாட்டார் என்று.. அவர் இருந்தாலும் கூட ஏற்பாடுகள் செய்திருப்பான் அது வேறு.
இப்போது அங்கே இருந்து அழைப்பு வந்திட “வர்றேன்..” என்றவன் நேராய் மருத்துவமனைக்குத் தான் சென்றான்
அனுராகா, அவளோடு யாருமில்லை.. யாருமில்லை என்று தெரிந்து தான் வந்திருந்தான்.
அவளோடு ஒரு நர்ஸ் இருக்க, யாரென்று பார்த்துத்தான் இவனை உள்ளே விட “தூங்குறாங்க சார்..” என்றாள் மெதுவாய்..
“தூங்கட்டும்.. நீங்க போங்க..” என,
“இல்ல சார்..” என்று தயங்க..
“அட போங்க.. போய் வேலை பாருங்க..” என, மறுக்க முடியாது திரும்பி திரும்பிப் பார்த்தபடி அந்த நர்ஸ் போக, தீபனின் பார்வை அனுராகா பக்கம் திரும்பியது.
ட்ரிப்ஸ் எடுத்திருந்தார்கள். ஓரளவு உடல் தேறியிருந்தது. ஆனால் முகத்தினில் தெளிவு இல்லை.. வாட்டம் இருந்தது. கண்களைச் சுற்றிலும் லேசாய் கருவளையம் வேறு.. அவளைக் காண காண ஒரு பெருமூச்சு கூட வர, இன்னும் இரண்டொரு நாளில் வீட்டிற்க்கும் கிளம்பிடுவாள். இதுபோல் வந்து பார்த்திட எல்லாம் முடியாது. அதற்கு அவளும் அனுமதிக்க மாட்டாள்.. இது எல்லாம் தெரிந்து தான் வந்திருந்தான்.
நல்ல உறக்கத்தில் இருக்க, அவனோ அவளின் அருகே அமர்ந்து கன்னத்தில் கை வைத்து உறங்கும் அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்.
‘இந்த ஹாஸ்பிட்டல் ட்ரெஸ் உனக்கு சூட்டே ஆகலை ராகா..’ என்று அவனுள்ளம் நினைக்க,
‘என்னவெல்லாம் பேசி சொதப்பி வச்சிட்ட தீப்ஸ் நீ.. எவ்வளோ சென்ஸ்டீவ் விஷயம்.. இப்படியா செய்றது..’ என்று அவனை அவனே கடிந்தும் கொண்டான்..
நேரம் மெதுவாய் நகர்வது போலிருக்க, அனுராகா அசைவதாய் கூட இல்லை..
“சாரி பேபி…” என்று அவன் மனம் தான் முனுமுனுப்பு செய்ததே தவிர, அது வார்த்தையை வெளி வரவில்லை.
“நம்ம இன்னும் சரியாவே லவ் பண்ணலை… அதான் இப்படி எல்லாம் தப்பு தப்பா நடக்குது..” எனும்போதே,
கதவினை தட்டிவிட்டு ஒரு நர்ஸ் அங்கே வர, அவன் அமர்ந்திருந்த விதம் கண்டு ஒருநொடி திடுக்கிட்டாலும், கேள்வி கேட்க முடியாதே ஆக “சார் ஆயின்மென்ட் போடணும்..” என,
“போடுங்க..” என்றான் அவனும் கூலாக.
“சார்..!!” என்று திகைத்தவள் “நீ.. நீங்க முன்னாடி வெய்ட் பண்ணுங்க..” என,
“ஓ!!” என்றவன், “ஆயின்மென்ட் எதுக்கு??” என்று கேட்க,
“காயம் எல்லாம் தலும்பாகிடாம இருக்கிறதுக்கு..” என்று அவளும் சொல்ல,
“ம்ம்..” என்று தலையை ஆட்டியவன், பின் ஒரு பார்வை அனுவைப் பார்த்துவிட்டு “கொடுத்துட்டு போங்க.. நான் போட்டுவிடறேன்..” என,
“சார்..!!!” என்று இன்னமும் அந்த நர்ஸ் திகைக்க, இவர்களின் சத்தம் கேட்டு அனுராகாவும் கண்விழிக்க, மெதுவாய் எழுந்து அமர முயற்சி செய்யவும்,
“பார்த்துட்டு என்ன சும்மா நிக்கிறீங்க.. ஹெல்ப் பண்ணனும் தெரியாதா??” என்று தீபன் குரல் உயர்வும்
“இ.. இதோ..” என்ற நர்ஸ், அனுராகா எழுந்தமர உதவி செய்யவும், அனுவோ ‘நீ என்ன இங்க??!!’ என்றுதான் பார்த்தாள் அவள்.
“ராகா.. ஆர் யூ ஓகே…” என,
அவளோ “ம்ம்..” என்றுமட்டும் சொல்லிவிட்டு நர்ஸிடம் “என்ன விஷயம்..” என,
“ஆயின்மென்ட் போடணும்..” என்று சொல்ல, தீபனை ‘வெளியே போ..’ என்று சொல்லாமல் சொல்லிப் பார்க்க, அவனோ அங்கேயே அமர்ந்துவிட்டான்..
“மேம்…” என்று நர்ஸ் தயங்க, சொன்னால் கேட்கமாட்டான் என்று தெரிந்து “தீப்ஸ்.. முன்னாடி வெய்ட் பண்ணு..” என, அவனுக்கே அவள் பேசியது கண்டு ஆச்சர்யம் தான்..
“பார்த்து போடுங்க…” என்றவன் “தென்.. அந்த நெக்ல இருக்க காயம் அப்படியே இருக்கட்டும்.. தழும்பு விழுந்தாலும் பரவாயில்லை..” என்றுவிட்டு போக,
அனுராகாவோ ‘ராஸ்கல்…’ என்று கோபமாய் முனுமுனுக்க, தீபன் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டு முன்னே இருந்த சோபாவில் போய் அமர்ந்துகொண்டான்.
“நல்லவேளை மேம் நீங்க முழிச்சிட்டீங்க…” என்று நர்ஸ் சொல்லியபடி, காயங்களுக்கு ஆயின்மென்ட் போட்டுவிட்டு பின் கடைசியாய் கழுத்தில் இருந்த காயத்திற்கு வர,
“வேண்டாம்…” என்றாள் அனுராகா..
“மேம்..!!!”
“வேணாம் .. அப்படியே இருக்கட்டும்…”
“டாக்டர் பார்த்தா திட்டுவாங்க மேம்..”
“நான் சொல்லிக்கிறேன்.. நீங்க போங்க..” என்றவள், கண்களை மூடி சாய்ந்துகொண்டாள்.
அன்றைய தினம் காலையில் தான் கழுத்தில் இருக்கும் காயத்தின் பிளாஸ்திரி பிரிக்கப்பட்டு இருந்தது.. தீபன் சொல்லியிருக்காவிட்டாலும், அனுராகாவிற்கு அங்கே மருந்திட இஷ்டமில்லை.. அவ்விடம் இன்னும் கொஞ்சம் வலிக்கட்டும் என்ற எண்ணம்.
ஆனால் அவன் வந்தும் அதையே சொல்ல, ‘ராஸ்கல்.. ராஸ்கல்..’ என்றுதான் அவள் மனம் கடிந்தது.
நர்ஸ் சென்றதும் ஸ்க்ரீனின் அந்தப் பக்கம் நின்று “நான் வரலாமா??!!” என்று தீபன் கேட்க,
‘அவ்வளோ நல்லவனாடா நீ…’ என்று தோன்றினாலும், “அப்படியே போயிடு..” என,
“தேங்க்ஸ் பேபி…” என்றபடி அவளின் முன்னே வந்து மீண்டும் அமர, அப்போதும் அப்படியே தான் பார்த்தாள்.
‘இங்கு ஏன் வந்தாய்..’ என்று..
அவளின் பார்வை புரிந்தாலும் “ம்ம்ச்.. என்ன ஹாஸ்பிட்டல் இது..?? கன்றாவியா இருக்கு இந்த ட்ரெஸ் உனக்கு.. அண்ட் நீயே கொஞ்சம் அப்படிதான் இருக்க..” என,
“ரொம்ப கூலா ஆக்ட் பண்ணாத தீப்ஸ்…” என்றாள், இறுகிய குரலில்.
அவனுக்குமே அவன் செய்த தவறு தெரியும்.. ஆனால் அதை மாற்ற முடியாதே.. அதற்காக அதையே பேசிக்கொண்டு இருக்கவும் முடியாது தானே.. கேட்க கூடாத வார்த்தை தான். அத்தனை பேர் நிறைந்திருக்கும் சபையில் அப்படியொரு நிகழ்வு நடந்தே இருக்கக் கூடாது தான்.
ஆனாலும் நடந்தேறி அது முடிந்தும் விட்டது..
இனி என்ன??!!!
தீபன் அமைதியாகிட “சொல்லு தீப்ஸ்.. இப்போ எதை மனசுல வச்சிட்டு வந்து இப்படி பேசிட்டு இருக்க?? இப்போ மட்டும் என் கேரக்டர் உனக்கு ஓகே வா??” என.,
“இன்னொரு தடவ கேரக்டர் அது இதுன்னு பேசின அடிச்சு பல்லை பேத்துடுவேன்..” என்று கோபத்தில் கத்திவிட்டான் தீபன்..
“என்ன டி.. சும்மா அதையே சொல்ற.. அன்னிக்கு அப்பா முன்னாடியும் அப்படித்தான் சொல்ற.. இங்கபார் நான் ஒன்னும் அப்படி மீன் பண்ணி சொல்லலை.. ஆனா என்னவோ அது அப்படியாகிடுச்சு.. அதுக்காக அப்படியே சொல்லிட்டு இருப்பியா நீ??!! தப்புதான் இப்போ என்ன டி செய்ய சொல்ற??” என்று கத்த,
அமைதியாய் அவனைப் பார்திருந்தவளின் விழிகளில் நீர் வழிய
“ம்ம்ச் இப்போ என்ன அழுகை உனக்கு.. ஏற்கனவே முகம் பார்க்க நல்லா இல்லை.. இப்போ அழ வேற செய்ற…” என.
“பிடிக்கலைல அப்போ கிளம்பி போ..” என்றாள் வேகமாய்..
“பிடிக்கலை சொன்னேனா??!!!”
“நல்லா இல்லைன்னு சொல்ற.. அப்போ அதானே அர்த்தம்.. போடா நீ..” என,
“முடியாது…” என்று சட்டமாய் அமர்ந்துகொள்ள,
“தீப்ஸ்.. ப்ளீஸ்… கிளம்பு நீ..என்னால இப்போ எதுவும் யோசிக்கிற மைன்செட்ல எல்லாம் இல்லை..” என்றவள், அவன் அசையாது இருக்கவும்,
“திரும்ப எமர்ஜென்சி பட்டன் பிரஸ் பண்ண வைக்காத தீப்ஸ்..” என்றாள் சலிப்பாய்.
“பண்ணு.. யார் வந்து என்னை கேள்வி கேட்கிறான்னு பார்ப்போம்…” என,
“ச்சே..” என்று கடிந்தவள், என் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாத..” என்றாள் உணர்வுகள் அற்ற குரலில்.
தீபன் இப்போது வந்து ஆயிரம் சமாதானங்கள் செய்தாலும், என்னவோ அனுராகாவால் அன்று நடந்ததை மறந்திட முடியவில்லை.. அத்தனை பேர் கூடியிருக்கும் ஓரிடத்தில், ஒரு பெண்ணை இகழ்ந்து பேசுவது என்பது…?!!!
நல்ல விசயமா என்ன??!! அது யார் செய்திருந்தாலும் அதை ஏற்றுகொள்ள முடியுமா என்ன??!!
இல்லை தானே…
தீபனோ “ம்ம் அப்புறம்…” என,
“டார்ச்சர் பண்ணாத நீ..” என்று சொல்லிக்கொண்டவள், திரும்பவும் அப்படியே கண்களை மூடி சாய்ந்துகொள்ள,
தீபன் எழுந்து வந்து, கட்டிலில் அவளின் அருகே அமர்வது தெரிந்தது. இருந்தும் கண்கள் திறக்கவில்லை.. உடல் இறுக அப்படியே இருக்க, அவனோ மெதுவாய் அவளின் கழுத்தினில் இருக்கும் காயம் தொட, வலியை தாண்டி ஒரு சிலிர்ப்பு அவளுள் ஓடியது நிஜம்..
‘தீப்ஸ்…’ என்று சத்தம் வராது அவளின் இதழ்கள் முனுமுனுக்க, இன்னமும் நெருங்கி அமர்ந்தவன்,
“காயம்னால அந்த மச்சம் மறைஞ்சிடுமா…??” என்றவனின் குரல் மிக மிக அருகே அவளின் செவிகளுக்குக் கேட்க, இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது அனுராகாவிற்கு..
“தீப்ஸ் வேணாம்..” என்று அவளின் கரங்களை அவன் நெஞ்சில் வைத்து தடுக்க,
“சொல்லு ராகா மறைஞ்சிடுமா??!!” என்றான் அதே குரலில்..
கண்களை இன்னும் இறுக மூடியவள், அவளின் படபடப்பை வெளிக்காட்டாது “எதுவுமே மாறாது மறையாது.. மறக்கவும் செய்யாது…” என,
“எஸ்..!! எதுவும் மறக்கவும் செய்யாது..” என்றவன், மெதுவாய் அவளின் காயம் மீது இதழ் பதிக்க,
அனுராகா மொத்தமாய் உடைந்து போனாள்.
“போடா நீ…” என்று அவனை விலக்கியவள், அப்படியே முகத்தை மூடிக்கொண்டு அழ,
“ஹேய் ப்ளீஸ் ப்ளீஸ் ராகா.. அழாத.. ப்ளீஸ்…” என்று அவன் சமாதானம் செய்ய,
“நீ போ… போயிடு தீப்ஸ்.. நீ.. என் கண் முன்னாடியே வராத.. போயிடு நீ..” என,
“போ போ சொல்லாத…” என்று கத்தினான்..
அவனுக்குமே தெரியும், இந்நிலையில் அவளோடு இப்படியெல்லாம் நடந்திட கூடாது என்று. ஆனால் அவள் வேண்டாம் என்கையில், போ என்கையில் அவனின் பொறுமை எல்லாம் மறைந்துதான் போனது..
அவனையும் மீறி அவனுள் ஏதோ ஒன்று புகுந்து அவனைப் படுத்த, அவளோ கண்ணீர் விழிகளோடு அவனைக் காண
“எங்க டி போக சொல்ற நீ???” என்றான் கோபமாய், கட்டிலை ஓங்கி குத்தி.
அது அவளை அதிரச் செய்ய “இப்போ என்னதான் செய்ய சொல்ற???” என்றாள் ஆற்றாமையோடு..
அவளின் குரலே அவனை அசைக்க அவளின் கரம் பிடித்து தன் நெஞ்சில் வைத்தவன் “ஒன்னு என்னோட வாழ்ந்திடு.. இல்லை என்னை இப்படியே கொன்னுடு.. பட் நீ எனக்கு வேணாம்னு மட்டும் சொல்லிடாத ராகா..” என்றவனின் குரலிலும் கரகரப்பு..
அவனின் குரலும், பார்வையும், வார்த்தையும், அவளின் உள்ளத்தை உருக வைத்தாலும், அப்படியே அவனோடு சாய்ந்துகொள்ள உடல் பரபரத்தாலும்
‘எல்லாம் மறந்திடு அனு…’ என்று அவள் மனம் சொன்னாலும், அது அவளால் முடியவில்லை..
காதல் இருக்கிறதுதான்.. அதைத்தாண்டி இப்போது காயம் நிறைய இருக்க, மறுப்பாய் தலையை அசைத்தாள்.
“என்ன??!!” என்று தீபன் பார்க்க,
“வே..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “வேண்டாம் சொன்ன இப்படியே கழுத்தை நேரிச்சிடுவேன் ராகா…” என்று அவனும் சொல்ல,
“ம்ம் நீ அப்படி பண்ணதுக்கு என்னை கொன்னிருக்கலாம் தீப்ஸ்..” என,
“ச்சே…” என்று கைகளை பட்டென்று எடுத்துவிட்டான்..
“என்ன என்ன பேசுற நீ…”
“நீ பேசினது விடவா??!!”
“அய்யோ…!!! அதை விடேன்.. பேசிட்டேன்.. ஆனா உன்னை தப்பா எல்லாம் நினைச்சு பேசலை…” எனும்போதே,
“அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?? எனக்கும் இவளுக்கும், இவளுக்கும் பிரஷாந்துக்கும் என்ன இருக்குனு தெரியுமான்னு கேட்டியே அதுக்கு என்ன அர்த்தம்???” என்று அனுராகாவும் பதிலுக்கு கேட்க,
“போதும் நிறுத்து ராகா…” என்று கத்தியவன்,
“இன்னொரு டைம் நீ இப்படி நினைக்கவே கூடாது..” என்று விரல் நீட்டி மிரட்டியவன் “இப்போ என்ன நான் உன்னைத் தேடி வரக்கூடாது?? அதானே…” என,
அவளின் பார்வை கண்டு “வரலை போதுமா..” என்றும் சொல்லிவிட்டு அப்படியே திரும்பிச் சென்றுவிட்டான்.
அவன் சொல்லிய வார்த்தைகள் தான்.. அதன் கணம் தாளாமல் தான் அவளிடம் மீண்டும் மீண்டும் வருவதே, ஆனால் அவளே அவ்வார்த்தைகள் வைத்து அவளை அவளே தாழ்த்திப் பேசுவது அவனுக்குத் தாங்கவில்லை.. ரம்பம் வைத்து நெஞ்சை கொய்வது போலிருக்க,
‘எப்படி பேசுறா…. ஐயோ!!!’ என்று சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வேகமாய் சென்றான். எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல்.
அவன் – வேண்டாம் எனாதே…
அவள் – அதுவொன்றே என்னிடம்..
காதல் – நீங்க ரெண்டுபேருமே எனக்கு வேணாம்யா…!!!