Advertisement

தோற்றம் – 39

“மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க,

மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்…” என்றார் தயக்கமாய்..

“நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.. ஆனாலும், பெத்த அம்மாவோட அக்கறை போல வேற எதுவும் பெருசில்ல.. நீங்க வாங்க, நம்ம சேர்ந்தே ஆளுக்கு ஒரு கைல காப்பு கட்டுவோம்..” என்று மகராசி விடாது, மங்கையை அழைத்துக்கொண்டு பொன்னியின் அருகே சென்றார்..

எழு மாதம் நிறைவுற்று இருந்ததால், பொன்னிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.. புகழ் ஒன்பதாம் மாதம் செய்யலாம் என்று முகத்தை தூக்கினான்.. ஆனால் அடுத்த மாதம் அசோக், அமுதா திருமணம் இருப்பதால், எழாம் மாதம் தான் வைக்கவேண்டும் என்று மன்னவனும் மகராசியும் சொல்லிட,

பொன்னியும், “ரொம்பத்தான் அலம்பல் பண்ணாதீங்க.. வளைக்காப்பு முடிஞ்சு ஒரு வாரத்துல அங்கதான் வரப்போறேன்..” எனவும், போனால் போகிறதென்று சரியென்று சொன்னான்.

இதோ அந்த நாளும் சிறப்பாய் வந்திட, பொன்னி அவளின் திருமண புடவை கட்டி, லேசான ஒப்பனையோடு மனையில் அமர வைக்கப்பட்டு இருந்தாள். அவளை சுற்றிலும் பெண்கள் தான்.. அதிலும் அமுதா தனியாய் தெரிந்தாள். பின்னே கல்யாண பெண்ணில்லையா. அந்த ஜொலிப்பு அவளின் முகத்தினில் நன்றாகவே தெரிந்தது..

முதல் நாள் தான் அவளுக்கும் அசோக்கிற்கும், கோவிலில் ஊர் பெரியவர்கள் முன் வைத்து, இருவரின் சம்மதம் கேட்டு பேசி முடிச்சு நிச்சயம் முடித்தார்கள்.. நிச்சயம், வளைகாப்பு எல்லாம் ஒரே நாளில் வைத்துகொள்வோம் என்றுதான் முதலில் முடிவெடுத்தனர்.

பின் மகராசி என்ன நினைத்தாரோ, “வேணாம்.. ஊர் வாய்ல விழனும்.. கண்ணு படும்.. அடுத்த நாளும் முஹூர்த்த நாள் தானே அன்னிக்கு வளைக்காப்பு வச்சுப்போம் இல்லையோ நிச்சயம் வச்சுப்போம்..” என்று சொல்ல,

மங்கையோ “முதல்ல நிச்சயம் வச்சுப்போம்.. மறுநாள் வளைகாப்பு வச்சுப்போம்..”  என்றுசொல்ல அப்படியே முடிவானது..

முதல்நாள் நிச்சயம் அழகாய், அமைதியாய், எளிமையாய் முடிந்திருக்க, இதோ வளைக்காப்பு இருபக்க நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்தனர்.. மன்னவன் ஒன்றுமட்டும் தான் சொன்னார், அசோக் அமுதா திருமணம் முடியும் வரைக்கும் தடபுடல் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று.

அசோக் கூட சொன்னான் “ம்மா வளைகாப்பு நம்ம வீட்டு செலவுதானே, மண்டபத்துல வைப்போம்…” என்று.

ஆனால் மங்கையும் “இல்லடா நிச்சயத்துக்கு அடுத்து வளைகாப்பு.. எல்லாரும் எப்போடா பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்குன்னு பார்த்துட்டு இருப்பாங்க.. அளவா வீட்லயே வச்சு முடிச்சுக்கலாம்..” என்றுவிட்டார்..

அதன்படியே  நிச்சயதார்த்தம் முடிந்து, மறுநாள் வளைகாப்பும் நல்முறையில் நடந்துகொண்டு இருந்தது…

வந்தவர்களில் புகழேந்தியின் ஊர்கார நண்பர்கள் சொன்னது “டேய் புகழு சரியான காரியக்காரன்டா நீ… ஒரே வீட்ல ரெண்டு சம்பந்தம் பண்ண வச்சிட்ட.. பயங்கராமான ஆளுதான் நீ..” என்று கிண்டல் செய்ய,

“நான் என்ன பண்ணேன்…” என்றான்  சிரித்துக்கொண்டு…

அசோக்கும் அவனருகே தான் அமர்ந்திருந்தான்.. இன்றுதான் வந்திருக்கிறான்.. முதல் நாள் நிச்சயம் கோவிலில் நடந்ததால் கோவில் மட்டும் தான் வந்தான்.. இங்கே வீட்டிற்கு வரவில்லை.. இன்று பொன்னியின் வளைகாப்பு முன்னிட்டுதான் இங்கே வந்தான்.. அதுவே அனைவர்க்கும் அத்தனை சந்தோசம்..

இளங்கோ கூட “மாப்பிள்ள இனிமேலாது வந்துபோக இருப்பீங்களா???!!” என்று கிண்டல் செய்ய,

ஜெயபால் “பின்ன பொண்ண எடுக்குறாரு.. வராம இருக்க முடியுமா..” என்றுசொல்ல, அசோக் மட்டுமில்லை அவனோடு சேர்த்து பொன்னியும் சிரித்தாள்.. சந்தோசமாய்…

இருக்காதா பின்னே, சரியான நேரத்தில் நான் உன் அண்ணன் என்பதனை உணர்த்திவிட்டான் அல்லவா. அதிலும் மங்கை அன்று இவர்கள் திருமண விசயம் பேசச் செல்ல, புகழேந்தி வீட்டினில் அனைவருக்குமே ஒரு சந்தோஷ மனநிலையில் தான் இருந்தனர், பரஞ்சோதி தவிர..

வந்தவரை வா என்று கூட அவர் சொல்லவில்லை.. ஆனால் மங்கை சும்மாயில்லை, பரஞ்சோதியிடம் “சத்யா கல்யாணம் நல்லபடியா நடந்ததுங்களா?? நல்லா இருக்காளா??” என்று விசாரிக்க, அவருக்கு முகத்தினை எங்கே கொண்டு போய் வைத்துகொள்ள என்று தெரியாமல் போனது..

“ம்ம் ம்ம்..” என்றுமட்டும் சொல்லிக்கொள்ள, நித்யா அவரை உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்..

மன்னவன் “மனசுல எதுவும் வச்சுக்காதீங்கம்மா…” என்றுசொல்ல,

“இதுல என்னண்ணா இருக்கு…” என்று வந்த விசயம் பேச தொடங்கிவிட்டார் மங்கை.

புகழேந்தி “வாங்க அத்தை..” என்று சொன்னதோட சரி, பெரியவர்கள் பேசி முடிவு எடுக்கட்டும் என்று பாரவையாளனாய் இருந்துகொண்டான்..

அன்பரசிதான் “முதல்லயே பொன்னிக்கிட்ட சொன்னோம்.. அப்போவே சரின்னு சொல்லிருந்தா இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்கும்…” என்று சொல்கையில் முன்னிருந்த அந்த கோபம் எல்லாம் இல்லை.. ஆனாலும் அவளால் இதனை சொல்லாமல் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே..

அவரவர் குணம் அப்படி. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருப்பது அல்லவே.. அதேபோலே ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல் சிந்திப்பதும் இல்லை.. இருப்பதுமில்லை.. மகராசியும், ஜெயபாலும் “அன்பு…” என்று கடிய,

“எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு இருக்கேம்மா…” என்றார் பொதுவாய் மங்கை..

“அது உண்மைதான்.. நேரம் கூடி வரணும்..” என்று மன்னவன் சொல்ல,

“எங்களுக்கு இதுல பூரண சம்மதம்…. நீங்களும் முதல்ல இதே எண்ணத்துல தான் இருந்தீங்க.. அதுனால ஜாதகம் ஜோசியம் எல்லாம் பார்க்கனுமா??” என்றார் மங்கை..

ஜோசியக்காரன் சொன்னதினால்தானே அமுதாவிற்கு திரும்ப அவசரமாய் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததே.. இப்போது திரும்பவும் பார்க்கவேண்டுமா என்று மன்னவன் யோசிக்க,

ஜெயபால் “மாமா, எனக்கு அன்புக்கும் சரி, இளங்கோ நித்யாகும் சரி எதுவுமே பார்க்கலை.. புகழுக்கும் கூட அப்படித்தான்.. நாங்க நல்லாதானே இருக்கோம்.. யோசிக்காதீங்க..” என்றிட,  

புகழும், இளங்கோவும் “குடும்பத்துல இப்படி ஒருத்தர் இருக்கனும்டா…” என்றுதான் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்..

“அமுதாக்கிட்ட கேட்கணுமே..” என்று நித்யா தான் ஆரம்பித்தால்..

மகராசியோ “அதெல்லாம் பொன்னி பேசிக்குவா…” என்றுவிட, கொஞ்ச நேரத்தில் புகழ் பொன்னிக்கு அழைத்து பேச, அவள் என்ன பேசினாலோ, வீட்டினரிடம் “அமுதாக்கு நம்ம எடுக்கிற முடிவுதானாம்..” என்றான்..    

இப்படி பேசித்தான் நாள் குறித்தனர், நிச்சயம்… வளைக்காப்பு.. அதன் பின்னே ஒரு மாதத்தில் திருமணம் என்று..

பொன்னிக்கு மகராசியும், மங்கையும் முதலில் இரு கைகளிலும் வேம்பு காப்பு கட்டிவிட, அடுத்து நித்யாவும் அன்பரசியும் வளையல் போட, அமுதா பொன்னியின் அருகேயே நின்றிருந்தாள்.. பரஞ்சோதி இதெல்லாம் வேண்டா வெறுப்பாய் பார்த்துகொண்டு இருக்க, அவரால் ஒன்றுமே பேசவும் முடியவில்லை செய்யவும் முடியவில்லை..

வந்திருந்த பெண்கள் எல்லாம் வளையல் போட்டிட, அடுத்து அன்பரசி புகழேந்தியை அழைத்தாள்..

“புகழு வா.. நீ வந்து பொட்டு வச்சி விடு..” என, அவனோ கொஞ்சம் சங்கோஜமாய் உணர்ந்தான்..

“அட போடா.. இதுக்கேன் இவ்வளோ வெக்கம்..” என்று இளங்கோ அவனை கிளப்ப,

“போங்க புகழ்..” என்று அசோக்கும் சொல்ல, 

“அப்போ நீங்களும் வாங்க அசோக்..” என்று அசோக்கையும் சேர்த்தே தான் இழுத்துக்கொண்டு சென்றான்..

“முதல்ல மாப்பிள்ள வைக்கட்டும்.. அடுத்து நீ வை…” என்று மங்கை சொல்ல, அசோக் கொஞ்சம் பின்தங்கி நிற்க,

மகராசியோ “முதல்ல மாப்பிள்ளைய பொட்டு வைக்க சொல்லுங்க மதினி.. என்ன இருந்தாலும் பொறக்க போற குழந்தைக்கு தாய் மாமா இல்லையா.. ” என்று அசோக்கை முதலில் வைக்க சொல்ல, முதலில் யார் வைப்பது என்ற குழப்பம் இருவருக்குமே..

அசோக் “நீங்க வைங்க புகழ்..” என்றுசொல்ல,

புகழேந்தி “நீங்க வைங்க அசோக்..” என்றுசொல்ல, அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே சிரிப்பு வந்திட்டது..

சொந்தத்தில் வந்திருந்த ஒரு பாட்டி கூட “அடடா யாராவது ஒருத்தர் வைங்கப்பா..” என்றுசொல்ல, அனைவருமே கொள்ளென்று சிரித்துவிட்டனர்..

பொன்னியோ “என்னதிது…” என்று பார்க்க, அமுதாவிற்கு சிரிப்பை அடக்கவும் முடியவில்லை, சிரிக்காமலும் இருக்க முடியவில்லை….

கொஞ்சம் அவஸ்தையாகவே அசோக்கினைப் பார்த்து புன்னகைக்க, அவனும் மெல்லமாய் சிரித்துகொண்டான்.. புகழேந்தி தான் முதலில் பொன்னிக்கு திலகம் வைத்துவிட, அவளின் உணர்வுகளுக்கும் சரி, அவனுக்கும் சரி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லைதான்..

“கண்ணு…” என்ற அவனின் அந்த ஒரு அழைப்பில், ஆயிரம் ஆயிரம் உணர்வுகள் வெளிப்பட, அப்படியே புகழ் பொன்னியின் அருகேயே இந்தப்பக்கம் நின்றுகொள்ள, அடுத்து அசோக் திலகமிட,

“இப்பவும் நீ எனக்கு எதுவும் வாங்கிட்டு வரல…” என்றுசொல்லி வேண்டுமென்றே அவனை சீண்டினாள் பொன்னி..

“பொன்னி…” என்று புகழ் தடுக்க, அதற்குள் அசோக் தன் பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு ஒரு நகை டப்பாவினை எடுத்துவிட்டான்.. பொன்னியே சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டாள் ஆனால் அசோக் நிஜமாகவே அவளுக்கு வாங்கி வந்திருந்தான்..

அழகாய் சிறு சிறு வெள்ளை நிற கற்கள் பதித்த பிரேஸ்லெட்.. எடுத்து மங்கையிடம் கொடுத்தவன், “ம்மா போட்டு விடு…” என்றுசொல்ல,

புகழேந்திக்கு ‘அடடா நம்ம ஒன்னும் வாங்கலையே…’ என்று தோன்ற, பொன்னியின் முகத்தினை பார்த்தான்.. அவள் எதுவும் தன்னை பார்க்கிறாளா என்று.. ஆனால் அவளோ அசோக்கைப் பார்த்துகொண்டு இருக்க, புகழுக்கு மனதினுள் சிறியதாய் ஒரு சங்கடம்..

இது எப்போதுமே மாறாது.. அவ்வப்போது உறவுகளில் இதுபோன்ற உணர்வுகள் எல்லாம் எழும்.. அதுதானே நிதர்சனமும் கூட..

‘கூடவே இருந்துட்டு ஒருவார்த்தை சொல்லல… சரியான அழுத்தம்..’ என்று புகழேந்திக்கு அந்த நேரத்தில் கடிய மட்டுமே முடிய,

மங்கையோ “அமுதாக்கிட்ட குடு அசோக்.. அவ போட்டுவிடட்டும்..” என, அசோக் கொஞ்சம் திரும்பி அமுதாவை தேட, அவளை அன்பரசி நகட்டிக்கொண்டு போயிருந்தாள்..

“கல்யாணம் முடியுறவரைக்கும் இப்படி பக்கத்துல நிக்கிறது.. போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் வேணாம் டி.. அவரு வந்ததுல இருந்து எல்லாரும் உங்க ரெண்டு பேரையும் தான் மாத்தி மாத்தி பார்த்துட்டு இருக்காங்க..” என்றுசொல்லி அன்பரசி, அமுதாவை அழைத்துக்கொண்டு சற்று தள்ளி போய்விட,

அசோக் தேடுவதை பார்த்து, புகழ் “அமுதா..” என்றழைக்க, அவளோ போகவா என்றுதான் அன்பரசி முகம் பார்த்தாள்..

“என்ன புகழு..” என்று அன்பு கேட்க, “அம்முவ வரசொல்லு…” என்று சைகை செய்தான்..

“ம்ம் சொன்னதை மனசுல வச்சிக்கோ..” என்ருசொல்லியே அன்பரசி அமுதாவை அனுப்ப, மங்கை நீட்டிய ப்ரேஸ்லெட் வாங்குவதற்கு முன் அமுதாவிற்கு உள்ளே நடுக்கம் ஏற்பட்டுவிட்டது..

‘நான் போடலாமா???’ என்று மகராசியை காண, அவரோ நடக்கும் அனைத்தையும் ஆனந்தமாய் ரசித்துக்கொண்டு இருந்தார்..

‘போட்டுவிடு…’ என்று மன்னவன் தலையை ஆட்ட, அடுத்து அசோக்கினை பார்த்தவள், பொன்னிக்கு அதனை போட, யாரோ மன்னவனிடம் “பரவாயில்லப்பா நல்ல எடத்துல பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்குற…” என்று சொல்வது கேட்டது..

வளைகாப்பு முடியவுமே, ஜெயபாலுக்கும், இளங்கோவிற்கும் தான் வேலை சரியாய் இருந்தது.. புகழும் அசோக்கும் வந்ததற்கு “நீ போய் பொன்னி கூட இரு.. நைட்டு கிளம்பணுமே நீ..” என்றுவிட்டு “நீங்க கல்யாண மாப்பிள்ள.. இதெல்லாம் செய்ய கூடாது..” என்றுசொல்லி இருவரையும் அமர வைத்துவிட்டனர்..

அனைத்தும் முடிந்து பொன்னி, மங்கையோடு அவளின் பிறந்தவீடு செல்ல, புகழும் கிளம்பியதற்கு “அதெல்லாம் போக கூடாது..” என்றுவிட்டனர்..

இரண்டு நாட்கள் தான் லீவ் எடுத்திருந்தான்.. இன்றிரவு கிளம்பினால் தான் சரியாய் இருக்கும்.. ஆனால் வந்ததில் இருந்து பொன்னியோடு இன்னமும் மனசுவிட்டு எதுவும் பேசவும் முடியவில்லை ஒன்றும் முடியவில்லை.. சரி இப்போது கூட போகலாம் என்று பார்த்தால், கூடாது என்றுவிட்டனர். முகத்தை இறுக்கமாய் வைத்துகொண்டு போய் படுத்துவிட்டான்..

ஸ்வேதாவும், முகேஷும் “பாப்பா எப்போ வரும்…” என்று அவனிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டு இருக்க,

பிள்ளைகளை அழைக்கவென வந்த மகராசி “ஏன்டா கண்ணு இப்போ முகத்தை இப்படி வச்சிட்டு படுத்திருக்க, பார்க்க சகிக்கல.. சாயங்காலம் போயி பார்த்துட்டு கிளம்பு….” என்றுசொல்லிவிட்டு போனார்…

அந்த சாயங்காலம் வருவதற்குள் புகழேந்திக்கு பொழுதை நெட்டி தள்ளுவதாய் இருந்தது.. வீட்டினில் ஆட்களும் இருக்க, வீட்டினரோடு கூட எதுவும் அமர்ந்து பேச முடியவில்லை.. அமுதாவை பார்த்தான் என்ன செய்கிறாள் என்று.. அவளும் தான் அவனோடு கிளம்புகிறாள்.. இவர்களோடு அன்பரசியும் ஜெயபாலும் கூட..

புகழ் மட்டுமென்றால் அவனாகவே போயிருப்பான். அமுதாவிற்கு இப்போதுதான் நிச்சயம் முடிந்தது என்பதனால் இவர்களும் வர, மகராசி “ரெண்டு நாளைக்கு தம்பி கூட இருந்துட்டு வாங்க..” என்றிருந்தார்..

அமுதா “அப்போ நானும் வீட்ல இருந்து காலேஜ் போறேன்..” என, அன்பரசி சந்தோசமாகவே கிளம்பினாள்..    

அமுதாவிற்கு இப்போதிருந்தே அறிவுரைகள் வழங்கும் படலம் நடந்துகொண்டு இருக்க, ‘ச்சே நம்மள விட இவ சிட்ச்சுவேசன் ரொம்ப கஷ்டம்..’ என்று நினைத்துக்கொண்டான்.

பரஞ்சோதி எதிலும் அத்தனை சிரத்தை எடுத்து கலந்துகொள்ளாமல் இருக்க, யாரும் அவரை எதற்கும் வற்புறுத்தவும் இல்லை.. இருக்கிறாயா இரு.. போகிறாயா போ.. இந்தளவுதான்.. மன்னவன் “சாப்பிட்டியா ஜோதி..” என்றுமட்டும் விசாரித்துகொண்டார்..

புகழேந்தி அனைத்தையும் பார்த்துகொண்டு இருந்தவன், மாலை ஆனதும், “அமுதா எல்லாம் எடுத்து வச்சிக்கோ.. நான் போய் பொன்னிக்கிட்ட சொல்லிட்டு வந்திடுறேன்.. ரெடியா இரு…” என்றுவிட்டு, யாரும் எதுவும் சொல்வதற்குள் கிளம்பிவிட்டான்..

அங்கே சென்றாலோ அங்கேயும் உறவினர்கள்தான்.. அசோக் பார்த்துவிட்டு “வாங்க புகழ்..” என்று உள்ளே அழைத்துச்செல்ல “நானும் அமுதாவும் ஊருக்கு கிளம்புறோம்.. அதான் சொல்லிட்டு போலாம்னு…” என்றபடி புகழும் நடக்க,

“ஓ.. நான் நாளைக்கு கிளம்புறேன் புகழ்..” என்றவன் என்ன நினைத்தானோ ஒருநொடி நின்று “தேங்க்ஸ் புகழ்…” என்று சொல்ல, புகழேந்தியே இதை எதிர்பார்க்கவில்லை..

பின் அவன் சொன்னது புரிந்து, சுதாரித்து “அட இதுல என்ன இருக்கு விடுங்க..” என்றவன் பொன்னியை காண சென்றான்..

அவளோ ஒரு சேரில் அமர்ந்து, இன்னொரு சேரின் மீது காலை நீட்டி சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்க, அறைக்குள் வந்தவன், மெதுவாய் நடந்துவந்து அவளின் பாதங்களை மெதுவாய் பிடிக்க, என்னவோ எதோ என்று பொன்னி வேகமாய் அசைய,

“ஹேய் ஹேய் கண்ணு.. நான்தான்..” என்று அவளைவிட வேகமாய் சமாதானம் செய்தான் புகழேந்தி..

“ச்சு.. நீங்களா.. ஒரு செக்கன்ட் பயந்துட்டேன்..” என்றவள் கொஞ்சம் ஆசுவாசமாய் மூச்சுவிட்டு, “உட்காருங்க..” என்று நீட்டியிருந்த கால்களை எடுத்துவிட,

“பரவாயில்ல நீ நீட்டி உட்கார்..” என்றவன் வேறொரு சேரை எடுக்கப்போக, “இல்லங்க வேணாம்..” என்றவள் எழுந்து வந்து கட்டிலில் கால் நீட்டி அமர்ந்துகொள்ள, புகழும் அவளை ஒட்டி அமர்ந்துகொண்டான்..

சிறிது நேரம் இருவருக்கும் பேச்சுக்கள் இல்லை.. ஆனாலும் நிறைய பேசவேண்டும் போல் இருந்தது.. என்ன பேசவேண்டும் என்ற யோசனையும் வரவில்லை.. பொன்னிதான், “ஊருக்கு கிளம்பிட்டீங்களா??” என்று கேட்க,

“ஹ்ம்ம் ஆமா.. அமுதாவை பேக் பண்ணுன்னு சொல்லிட்டு வந்தேன்..” என்றவன்,

“நீ நெக்ஸ்ட் வீக் வந்துடுவ தானே..” என, அவன் குரலே காட்டி கொடுத்தது அவனின் எண்ணங்களை..

“கண்டிப்பா வந்திடுவேன்… நீங்கதான் டெலிவரி அங்கதான் பார்க்கனும்னு பிடிவாதம் செய்றீங்களே…” என்று குறைபட்டு கொண்டே புகழின் தோள்களில் சாய்ந்துகொள்ள,

“பெருசா எந்த ரீசனும் இல்லை.. ஆரம்பத்துல இருந்து அங்கதான் காட்டுறோம்.. அதான்..” என்று அவளின் தோள்களை மெதுவாய் வருடியவன்,

“சீக்கிரம் வந்திடு கண்ணு..” என,

“ஹ்ம்ம் ஒருவாரம் எத்தனை சீக்கிரம் போகுதோ அத்தனை சீக்கிரம் வந்திடுறேன்.. போதுமா..” என்றுசொல்லி சிரித்தாள் பொன்னி..       

 

                       

                  

Advertisement