Advertisement

தோற்றம் – 13

பொன்னியும் புகழேந்தியும், கிளம்பி செல்லும் போதே அசோக் ஊருக்கு செல்ல, கிளம்பி வெளியே வந்திருந்தான்.. அவனை வழியனுப்ப என்று மங்கையும் வந்து வாசலில் நின்றிருந்தார்… இவர்கள் இருவரும் வருவர் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை போல.. இருவரையும் பார்த்ததும் அசோக் மங்கை இருவருக்குமே ஒரு சந்தோஷ அதிர்ச்சி..

“வாங்க வாங்க…” என்று வரவேற்று, புகழேந்தியோடு அசோக் கை குலுக்க,  பொன்னியோ “நானும் தான் வர்றேன்…” என்றாள் கிண்டலாய்..

“அடடா.. நீங்களும் வாங்க மகாராணி…” என்று சிரித்தான் அசோக்..

“ஹ்ம்ம் வந்தேன் வந்தேன்…” என்று பொன்னி சிரிக்க,

“அதானே பார்த்தேன்.. பேசியே புகழை கூட்டிட்டு வந்திருப்ப..” என்றான் அசோக்கும் சிரித்தபடி..

“தோடா…” என்று அண்ணனைப் பார்த்தவள் “ஏன் நான் பேசலைன்னா நீங்க என்னை கூட்டிட்டு வரமாட்டீங்களா??” என்று கணவனைப் பார்க்க,  அவனோ பதில் சொல்லாது ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்தான்..

“அடடா போதும் போதும் அண்ணனும் தங்கச்சியும் பேச ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாதே..” என்று கடிந்த மங்கை, “உள்ள வாங்க தம்பி…” என்று மருமகனை வரவேற்க, அனைவரும் உள்ளே சென்றனர்..

பொன்னிக்கு நன்கு தெரியும் புகழேந்தி தான் சொன்னதினால் மட்டும் தான் வந்திருக்கிறான் என்று.. என்னவோ வந்தானே அந்தமட்டும் சரி என்றெண்ணியவள், தேவையில்லாத பேச்சுக்கள் வந்திட கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள்.. ஆகா பெரும்பாலான பேச்சை தனதாக்கிக் கொண்டாள்.

புகழேந்திக்கு அவளைப் பார்க்க கொஞ்சம் ஆச்சர்யமாய் தான் இருந்தது..  அங்கே அவன் வீட்டிலும் பேசுகிறாள் சிரிக்கிறாள் சந்தோசமாக இருக்கிறாள் தான். ஆனாலும் இப்படியான ஒரு கலாட்டா அவளிடம் அங்கே இல்லை..  அது அவனும் அவளும் மட்டுமாக இருக்கும் தருணங்களிலும் கூட.. கேலி கிண்டல் அவ்வப்போது இருக்கும்.. ஆனால் அதையும் தாண்டி எதுவோ ஒன்று குறைவதாய் இப்போது புகழுக்குத் தோன்றியது..

பொன்னியின் பேச்சினை தாண்டி, அசோக்கும் புகழும் பொதுவாய் பேச, புகழேந்தியும் “நானுமே ரெண்டு நாள்ல சென்னை வந்திடுவேன்…” என்றுசொல்ல,

“ரொம்ப சந்தோசம்… எங்க ஸ்டே பண்ணுவீங்க புகழ்..??” என்றான் அசோக்.

“பிரண்ட்ஸ் இருக்காங்க ரூம் ஷேர் பண்ணிக்கலாம்.. பிரச்சனை இல்லை.. ஒன் வீக் ஆர் டென் டேஸ் தான்.. குவாட்டர்ஸ் காலியா இருந்தா டூ டேஸ்ல கீ கிடைச்சிடும் அப்படியில்லைன்னாலும் வேற வீடு ஆபிஸ் பக்கத்துல பார்த்துக்கலாம்..” என,

“ஓ..!!! அப்.. அப்போ.. நீங்க என்கூட வந்து ஸ்டே பண்ணலாமே.. நான் மட்டும் தான் இருக்கேன்..” என்று அழைப்பு விடுத்தான் அசோக்..

அவனை பொருத்தமட்டில் புகழேந்தி தன் தங்கையின் கணவன்.. அதுவும் சொந்தமாய் அங்கே வீடிருந்து அவன் மட்டுமே இருக்கையில் ஏன் புகழேந்தி எங்கோ சென்று யாரின் அறையையோ ஷேர் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டான்..

அசோக் சொன்ன யோசனை மங்கைக்கும், பொன்னிக்கும் சரியாய் பட, மங்கை “தம்பி நீங்க ஏன் எங்கயோ இருக்கணும்.. நம்ம வீடு இருக்கே…” என்றார் மருமகனிடம்..

பொன்னியும் அவனை ஆவலாய் பார்க்க, புகழோ கொஞ்சம் அமைதியாய் இருந்தவன், “இல்லை.. ஆல்ரடி பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேன் வர்றேன்னு.. இப்போ இல்லைன்னு சொன்னா சரியா வராது..” என்று மறுத்துவிட, பொன்னியின் முகம் கொஞ்சம் சுருங்கியதாய் இருந்தது..

ஆனால் அவன் மறுத்ததை அசோக் பெரிதாய் எடுக்காமல்,  “ஓ.. ஓகே.. பட்.. கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்..” என்றான்.

சட்டென்று புகழேந்திக்கு வாய் வரைக்கும் வார்த்தை வந்தது “நீ வந்தாயா ???” என்று கேட்க, ஆனால் நேரம் காலம் சூழல் உணர்ந்து வார்த்தைகளை விழுங்கிவிட்டான்..

மறுவீடுக்கு பிறகு இப்போதுதான் வந்திருக்கிறார்கள்.. எதற்கு தேவையில்லாத பேச்சுக்கள்.. அது கடைசியில் பொன்னியைத்தான் பாதிக்கும்.. இதெல்லாம் தான் புகழேந்தியின் மனதில்.. அசோக் மீது வேறெந்த வருத்தமும் இல்லை..

ஆனாலும் திருமணத்திற்கு பிறகு அவன் அங்கே புகழேந்தியின் வீட்டிற்கு வராது போனது ஒருவித வருத்தம் தான்.. பொன்னி முன்பு காட்டவில்லை என்றாலும் அவன் வீட்டினர் அவனிடம் கேட்காமல் இருப்பார்களா என்ன??

அகஸ்மாத்தாய் ஒருநாள் ஜெயபால் கூட “என்ன புகழு.. நம்ம எல்லாத்தையும் மறந்து தானே போய் பொண்ணு கேட்டோம்.. கல்யாணமும் பண்ணி கொடுத்துட்டு இப்போ வீட்டுக்கு வரலைன்னா என்ன அர்த்தம்.. அப்போ நம்ம எல்லாம் மான ரோசம் இல்லாதவங்கன்னு அர்த்தமா??” என்றிட,

இளங்கோ தான் “மாமா ஏன் மாமா?? விடுங்க எல்லாம் சரியாகும்… கல்யாணம் முடிஞ்சு பத்துநாள் கூட ஆகல.. விடுங்க…” என்று சமாதானம் செய்தான்..

அண்ணனும் மாமனும் பேசினார்களே தவிர புகழ் ஒன்றும் சொல்லமுடியவில்லை.. என்ன சொல்ல்லிட முடியும்?? இல்லை அசோக் வராமல் இருப்பது சரி என்று அவனால் அவர்களோடு வாதாட முடியுமா என்ன ??

பொன்னியிடமும் கூட ஒன்றும் சொல்லவில்லை.. ஆனாலும் அசோக் வராது போனது மனதின் ஓரத்தில் சின்னதாய் புகழின் ஈகோவை தட்டிப் பார்த்தது.. சக வயதினர்கள் அல்லவா ??? ஆகையால் கூட அப்படியிருக்கலாம்..

மனித மனம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று சொல்லி வைத்தவன் இப்போது இருந்திருந்தால் ஏனடா அப்படி சொன்னோம் என்றுகூட தன் கருத்திற்கு மாற்று கருத்தாய் ஏதாவது ஒன்றை யோசித்திருப்பானோ என்னவோ??

பொன்னியை திருமணம் செய்யும் வேகத்தில் புகழேந்தியின் மனம் வேறெதையும் எண்ணாத போது, இப்போ திருமணம் முடிந்து கொஞ்சம் இளைப்பாய் மற்றதை பற்றி சிந்திக்கையில் நிறைய நிறைய விஷயங்கள் மனதில் பதியத்தான் செய்தன..

அப்படி பதியும் விஷயங்கள் தனக்கேற்றார் போல் ஒரு வண்ணத்தையும் கொடுக்கத்தான் செய்தன..

பொன்னிக்குமே இப்போது புகழேந்தியைப் பார்க்க கொஞ்சம் வித்தியாசமாய் இருப்பதுபோல் இருந்தது.. அசோக் கிளம்பிக்கொண்டு இருந்தவன் இவர்கள் வரவும் திரும்பவும் வீட்டிற்குள் வந்தான்.. ஆனால் இவனோ அவன் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க, கொஞ்சம் சங்கடமாய் இருந்தது அவளுக்கு..

அசோக்கும் மங்கையும் ஒன்றும் நினைக்காமல் இருந்தாலும் அவளுக்கு அப்படி இருக்க முடியுமா என்ன??

“அசோக்  எத்தன மணிக்கு பஸ் உனக்கு??” என்று வினவ, “ஹ்ம்ம் இதோ இப்போ கிளம்பினா சரியா இருக்கும்..” என்றவனோ கிளம்பாமல் அமர்ந்துகொண்டே இருக்க,

“உங்களுக்கு லேட் ஆனா நீங்க கிளம்புங்க அசோக்.. நீங்க ஊருக்கு போறதுனால உங்கள பார்த்துட்டு அப்படியே நானும் கிளம்புறதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தோம்….” என்று புகழும் சொல்ல,

“நீங்க வந்தது நிஜமாவே ரொம்ப சந்தோசம்..” என்றவன், அடுத்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அசோக் கிளம்பியதும், பொன்னிக்கு, தானும் கிளம்பிவிட்டாள் மங்கை மட்டும் தனியே இருக்கவேண்டும் என்பதை நினைத்து கொஞ்சம் சங்கடமாய் இருந்தது.. மங்கையும் எதையும் வெளிக்காட்டவில்லை என்றாலும் அவரின் பார்வையிலும்  ஒருவித தவிப்பு தெரிய,

புகழேந்தி “நீ பேசிட்டு இரு.. நான் போய் பசங்களை பார்த்துட்டு  வந்து கூட்டிட்டு போறேன்..” என,

“இல்ல.. அத்தை சீக்கிரம் வர சொன்னாங்க..” என்றாள் பொன்னியும்.

அவளுக்கும் கொஞ்ச நேரம் மங்கையோடு இருந்து பேசவேண்டும் என்று ஆசைதான்.. ஆனாலும் மகராசி சொல்லியே அனுப்பினார் அல்லவா சீக்கிரம் வந்துவிடவேண்டும் என்று அதனையும் மறுக்க முடியவில்லை.. ஏதாவது நினைப்பரோ என்று இருந்தது..

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை நீ போன் பண்ணு நான் வந்து கூட்டிட்டு போறேன்…” என்றவன், “வந்திடுறேன் அத்தை…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்..

“நல்ல குணம்.. நீயும் நானும் தனியா பேசிக்கணும்னு விட்டுட்டு போறாரு..” என்று மங்கை மருமகனை சிலாகிக்க,

“ஆமா ஆமா..” என்று மங்கையின் கரங்களை பற்றியவள் “ஏன்ம்மா நீயும் பேசாம அசோக் கூட போய் இருக்க வேண்டியது தான.. நானும் அடுத்து ஊருக்கு போயிட்டா நீயா எப்படி இருப்ப??” என்றாள் பொன்னி கலங்கி..

நிஜமாகவே அவளுக்குக் கலக்கமாய் தான் இருந்தது.. அவளின் அப்பா இறந்தபிறகு அசோக் மங்கை பொன்னி இவர்கள் மூவருக்குள்ளும் இன்னும் பிடிப்பு அதிகமானது என்று சொல்லலாம்..

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் சார்ந்து, ஒருவர் நலம் மற்றவர் பேணி என்று அவர்களின் உலகில் அவர்கள் மட்டுமே இருக்க,

திடீர் என்று நடந்த அமுதாவின் பிரச்சனை அனைவரையும் ஒரு கலக்கத்தில் ஆழ்த்திவிட்டது.. அது ஒருவிதமாய் நல்லபடியாய் முடிந்தது என்று நினைக்க, அடுத்து புகழேந்தி திருமணம் என்ற பேச்சை எடுக்க, பொன்னிக்கே இன்னமும் புரிபடவில்லை எந்த எண்ணத்தில் தான் இதற்கு சம்மதித்தோம் என்று..

ஆனால் இப்போது எல்லாதிற்கும் மேலாய் மங்கை மட்டும் இங்கிருக்க வேண்டும் என்றிருக்க, அவளால் தன் கலக்கத்தை மறைக்கமுடியவில்லை..

“இதென்ன புது ஊரா.. நான் பிறந்து வளர்ந்த ஊரு… இங்க இருக்க என்ன பயம்.. அங்க சென்னைக்கு வந்தாதான் எனக்கு எல்லாமே புதுசா தெரியும் பொன்னி.. இதுவே பழகிடுச்சு.. இனியென்ன நீயும் சரி அசோக்கும் சரி அடிக்கடி இங்க வருவீங்க இல்லையா..

அடுத்து அசோக் கல்யாணம்.. உனக்கு பேர்காலம்னு எவ்வளோ இருக்கு.. அதெல்லாம் இங்க இருந்தா தான் சரியா இருக்கும்.. எனக்கும் இதுதான் பிடிச்சிருக்கு..” என்றார் மங்கை..

“ஹ்ம்ம் நீ என்னவோ சொல்றம்மா.. ஆனா எனக்கு கஷ்டமா இருக்கு.. திடீர்னு எல்லாமே நடந்துபோச்சு.. நீ துணைக்கு கூட யாரையும் வந்து இருக்க சொல்லும்மா.. இந்த பக்கத்து வீட்டு பாட்டி என்ன பண்ணுது  கூட வந்து இருக்கவேண்டியது தான..”

“அடடா.. என்ன இது.. நீ எப்போ இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்ச.. இப்போ உன்னோட வாழ்க்கையை மட்டும் நினைச்சுக்கோ பொன்னி.. என்னை நான் பார்த்துப்பேன்..” என்றவர் ஒருவாறு பேசி அவளை தேற்ற, நேரம் போனது தெரியவில்லை..

“இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்…” என்று மங்கை சொல்ல, “இல்லம்மா.. அத்தை சீக்கிரமே வந்திடுங்கன்னு சொன்னாங்க.. நான் இன்னொரு நாள் வர்றேன்.. இவர் ஊருக்கு போகவும்..” என்றவள் புகழுக்கு அழைத்தாள்..

அவனும் அடுத்த பத்து நிமிடத்தில் வந்துவிட, இருவரும் மங்கையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.. பொன்னியோ அவள் அம்மாவையும், வீட்டையும் திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்தவள்,

“என்னங்க ஒருநிமிசம்.. மாடு கன்னுக்குட்டி எல்லாம் பாக்கல..” என்று சொல்லி நிற்க,

அவளைப் பார்த்து சிரித்தவன் “இவ்வளோ நேரம் என்ன பண்ண நீ…” என்றுவிட்டு “சரி போ.. போய் பார்த்துட்டு வா.. நான் இங்கயே நிக்கிறேன்..” என,

“டூ மினிட்ஸ் தான்..” என்றவள் வேகமாய் வீட்டின் பின் பக்கம் ஓடினாள்..

“பார்த்து போ…” என்று புகழ் சொல்லியபடி நிற்க,

மங்கையோ வீட்டின் பின் வாசலுக்கு சென்று பொன்னியிடம் “பொன்னி இது சரியில்ல.. கிளம்பு.. இப்படி மாப்பிள்ளையை நிக்கவச்சிட்டு இங்க வந்து என்ன இதுங்களை கொஞ்சிட்டு நிக்கிற…” என்று கடிய,

“ம்மா இரும்மா…” என்றவள் கன்றை வருடி அதன் நெற்றியில் முத்தம் வைக்க, “அட போதும்.. கிளம்பு…” என்று விரட்டினார் மங்கை..

“ம்மா பார்த்துக்கோம்மா..” என்றவள் மீண்டும் திரும்பிப் பார்த்தபடி செல்ல, “என்ன கண்ணு கொஞ்சல்ஸ் எல்லாம் முடிஞ்சதா??” என்றான் புகழ்..

“ஹா ஹா.. உங்களுக்கு எப்படி தெரியும்??”

“தெரியும் தெரியும்…”

“ஹ்ம்ம் உங்களுக்கு பொறாமை…” என்றபடி பொன்னி நடக்க, “அடிப்பாவி அப்போ நானும் கன்னுக்குட்டியும் ஒண்ணா??..” என்றவனும் அவளோடு நடக்க,

பொழுது நன்றாய் இருட்டிவிட்டதால், ஆட்கள் யாருமில்லை தெருவில்.. கிராமம் வேறல்லவா ஊரடங்கிப் போனது.. முன்னால் என்றால் அனைவரும் வீட்டு வாசலில் எல்லாம் அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டு இருப்பர் இப்போது டிவி என்ற ஒன்று வந்துவிட்டபின் கதையாவது இன்னொன்றாவது டிவியே ஆயிரம் கதைகளை சொல்கிறதே என்று அதிலேயே முக்காவாசி நேரம் முடங்கிவிடுகிறது..

அங்கும் அப்படியே ஒரு அமைதியாந சூழலே நிலவ, கொஞ்சம் கொஞ்சமாய் இருவருக்குமே நடை வேகம் குறைந்தது.. பொன்னி கொஞ்சம் தள்ளியே நடந்துவந்தவளுக்கு, எப்போது அவன் அவளை உரசியபடி நடக்கத் தொடங்கினான் என்று தெரியவில்லை..

தெருவிளக்கின் வெளிச்சமும், தூரத்தில் எங்க குலைக்கும் நாயின் சத்தமும், ஒவ்வொரு வீட்டையும் தாண்டும்போது உள்ளே ஒலிக்கும் டிவியின் சப்தமும், எங்க ஒரு சில வீட்டில் வெளியே கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த பெருசுகளும் தவிர்த்து அங்கே யாருமில்லை..

“என்ன இவ்வளோ அமைதியா இருக்கு??” என்று பொன்னி கேட்க,

“தினமும் இப்படிதான் இருக்கும்.. ஆனா நமக்கு இன்னிக்குதான் தெரியுது…” என்றவன் அவளின் கரத்தோடு சேர்த்து தன் விரல்களை பிணைத்துக் கொள்ள, அவனை நிமிர்ந்து பார்த்தவள், இதழில் ஒரு சிறு புன்னகை காதலாய் வந்து அமர்ந்துகொண்டது..

மகராசி சீக்கிரம் வரசொன்னார் என்று சாப்பிடாமல் கூட கிளம்பியவளுக்கு சீக்கிரம் வீடு போகவேண்டுமா என்று எண்ணம் வர, மேலும் மெதுவாய் நடக்கத் தொடங்கினாள் பொன்னி.. புகழேந்தியோ அவளுக்கும் மேலாய், அடிப்பிரதச்சனம் செய்யாத குறைதான்..

வாய் மட்டும் சொல்லிக்கொண்டது “சீக்கிரம் வாங்க லேட்டாச்சு…” என்று..  

“ஹ்ம்ம் போலாம் போலாம்.. ஆனா நாளைக்கும்  இப்படி நைட் ஒரு வாக் வரலாம்…” என,

“ஹா.. அதுசரி.. அப்போ நீங்கதான் அத்தைக்கிட்ட கேட்கணும்..” என்றாள்..

“தாய் மகராசி தானே.. சொல்லிட்டா போச்சு…”

“ஹா ஹா இதென்ன.. எப்போ பாரு அத்தையை பேர் சொல்லி சொல்றீங்க.. அவங்களும் ஒன்னும் சொல்றதில்லை..” என,

“ஏன் சொன்னா என்ன?? பேர் சொல்றதுக்கு தான் பிள்ளை.. எங்கம்மா பேரைத்தானே சொன்னேன்..” என்றான் இவன் பதிலுக்கு..

“நீங்க சொன்ன சரிங்கதாங்க…” என்று கிண்டாலாய் நீட்டி முழக்கி சொன்னவள் வாயில் கை வைத்துகொள்ள,  நடையை நிறுத்தி அவளைப் பார்த்தவன்,

“எங்க போச்சு இந்த பேச்செல்லாம்…. இங்க வந்ததுமே உன் முகத்துல தனி ப்ரைட்னஸ்..” என்றவன் அவனின் பார்வையை அவள் முகத்தில் பதிய வைத்து, அவளின் பிடியை இன்னும் இருக்க,

கண்களை அகல விரித்தவள், “ஷ்.. என்னதிது.. ரோட்ல வச்சு…” என்றாள் தயக்கமாய்..

“ம்ம்ச்.. போ.. என்னவோ தெரியல.. இப்போ இந்த செக்கன்ட் ஊருக்கு போறதை நினைச்சா நிஜமாகவே கஷ்டமா இருக்கு…” என்றவன் அவளின் நெற்றியில் முட்டுவதுபோல் நெருங்கி வந்தான்..

“ஹ்ம்ம்ம்.. போதும் போதும்.. கஷ்டமெல்லாம் வீட்ல போய் படலாம்…” என்றவள் அவன் கரங்களை தோளோடு பிடித்து, இழுக்காமல் இழுத்துக்கொண்டு சென்றாள்..

அங்கே வீட்டிற்கு போனாலோ அனைவரும் இரவு உணவு உண்டுகொண்டு இருக்க, புகழும் “என்ன டிப்பன் ம்மா..” என்று கேட்டபடி அங்கே செல்ல, பொன்னியும் அவனோடு சென்றாள்..

“ரெண்டு பெரும் சாப்பிடாமையா வந்தீங்க?? நீங்க சாப்பிட்டு வருவீங்கன்னு நினைச்சு எங்களுக்கு மட்டும் தான் பண்ணோம்…” என்று நித்யா சொல்லிட, சாப்பிட அமரப் போனவன் அப்படியே நின்றுவிட்டான்.. பொன்னி அமரப் போனவளையும் அப்படியே கைகளை பிடித்து நிறுத்திவிட்டான்..

பொன்னிக்கு இதென்ன பேச்சு என்றாகிவிட்டது.. சரி அப்படியே அவர்களுக்கு மட்டும் செய்திருந்தாலும் உண்ணப் போகையில் இப்படியா சொல்வது?? இப்போதென்ன உணவு தீர்ந்தாலும் அடுத்து ஒரு தோசை சுட்டால் சரியாக போகிறது என்று பொன்னி நினைக்க, நித்யா சாதாரணமாய் கேட்டாளோ இல்லையோ, ஆனால் உண்டுகொண்டு இருந்தவர்கள் எல்லாம் அவர்களைத்தான் நிமிர்ந்து பார்த்தனர்..

மறுவீடு முடிந்து இப்போதுதான் முதல்முறையாய் சென்றிருக்கிறார்கள் ஆகையால் உண்டுவிட்டுத்தான் வருவர் என்று இவர்கள் நினைக்க,

பொன்னியோ மகராசி சீக்கிரம் வந்துவிடவேண்டும் என்றதையே நினைத்து கிளம்பியிருந்தாள்.. இதில் யார் மீது தவறு ??

யார் மீதும் தவறில்லை.. ஆனால் சூழலும் வார்த்தைகளும் இருக்கிறதே.. எதையும் செய்யும்.. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றும்..

புகழ் நின்றவன் “இல்ல சாப்பிட்டோம்..” என்றுசொல்லி பொன்னியையும் அழைத்துக்கொண்டு அறைக்குப் போக திரும்ப,

“டேய் டேய் நில்லு..” என்று இளங்கோ எழ,

“இல்லண்ணா.. நீங்க எல்லாம் சாப்பிடுங்.. நாங்க சாப்பிட்டு தான் வந்தோம்…” என்றவன் பொன்னியைப் பார்த்து “உள்ள போ…” என்றான்..

“இல்லங்க அது…” என்று பொன்னி தயங்கி நிற்க,

மன்னவனோ “புகழு.. இப்போ என்ன.. நீங்க சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சு நித்யா சொல்லிடுச்சு.. அதுக்கேன் இவ்வளோ கோபம் உனக்கு.. வாங்க ரெண்டு பேரும்…” என்றழைக்க,

மகராசியும் “கண்ணு.. சாப்பிட வாங்க..” என்றார்.

ஆனால் புகழுக்கு மனது சமானாகவில்லை.. அன்றும் அப்படித்தான் அமுதாவின் பிரச்சனை என்ன என்ன என்று கேட்டு ஊருக்கு போகிறேன் என்று கிளம்பி நின்றபின்னர் தான்வ் வீட்டினர் சொன்னார்கள்.. இப்போதோ சாப்பிட அமர்கையில் இப்படியா சொல்வது என்று தோன்ற, எரிச்சலாய் இருந்தது..

“என்னங்க… ப்ளீஸ்..” என்று பொன்னி சொல்ல, “ம்ம்ச் விடு.. கொஞ்ச நேரம் ஆகட்டும்…” என்றான்..

“புகழு.. நான் ஒன்னும் தப்பா எல்லாம் கேட்கல.. ரெண்டுபேரும் சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சுதான் சொன்னேன்…. இது தப்பா..?? தப்புன்னா மன்னிசுக்கோ சாமி..” என்றாள் நித்யா பட்டென்று..

“ஏய் லூசு என்ன பேசிட்டு இருக்க.. கூட கூட..” என்று இளங்கோ அதட்டியவன், “டேய் இப்போ நீ வர்றியா இல்லையா???” என்று கேட்க, அதன் பின்னரே தான் வந்தமர்ந்தான்..

பொன்னியும் அவனுக்கு எடுத்து வைக்க, உண்டவன் அமைதியாய் எழுந்து சென்றுவிட்டான்.. அதன்பின் பெண்கள் அமர, மகராசி அப்போதுதான் நித்யாவை கடிந்துகொண்டார் “என்ன பேசுறதுன்னு தெரியாதா??” என்று..

“நான் சாதாரணமாதான் கேட்டேன் அத்தை…” என்றவள் அதற்குமேல் இதெல்லாம் பெரிதில்லை என்பது போல் இருக்க,

பொன்னி நித்யாவை ஒருபார்வை பார்த்தவள் “அத்தை விடுங்க இதில்லென்ன இருக்கு.. அம்மா சாப்பிட்டு போகத்தான் சொன்னாங்க.. ஆனா நீங்க சீக்கிரம் வர சொல்லவும் தான் அப்படியே கிளம்பி வந்துட்டோம்..” என,

“ஹ்ம்ம் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் கண்ணு..” என்றவர், வேலையெல்லாம் முடித்து பொன்னி உறங்கப் போகையில்,

“அவனை கொஞ்சம் சமாதனம் பண்ணு.. சகஜமா இருப்பான் ஆனா கோவம் மட்டும் சட்டுன்னு வந்திடும்..” என்று சொல்லியனுப்பினார்..

அறைக்கு உள்ளே வந்தவளின் கண்களுக்கு புகழ் முகத்தை சுளித்து படுத்திருப்பதே தெரிய, “என்னங்க நீங்க??” என்றபடி அவனின் அருகே சென்றாள்..

“ம்ம்..” என்றவன் ஒன்றும் சொல்லாமல் படுத்திருக்க,

“என்னாச்சு உங்களுக்கு.. நானும் பார்த்திட்டுத்தான் இருக்கேன்.. அங்க அசோக் கூட பேசும்போதும் எப்படியோ இருந்தீங்க.. இங்க வந்தும் இப்படி சட்டுன்னு கோபம்… ஏன் எதுவும் பிரச்சனையா??” என்றாள் அவளும் சாதாரணமாகவே..

“எனக்கென்ன பிரச்னை?? ஒண்ணுமில்ல..” என,

“பின்ன ஏன் இப்படி படுத்திருக்கீங்க??” என்றவள், மெதுவாய் அவனின் முகத்தை நீவ, “ம்ம்ச் விடு..” என்றவன் அவளின் கரங்களை அப்படியே முகத்தினில் வைத்து அழுத்திக்கொண்டான்..

“ஹ்ம்ம் ஏன் உங்களுக்கு சட்டுன்னு இவ்வளோ கோவம் வருது??”

“கோவமெல்லாம் இல்லை.. நான் எல்லார்கிட்டவும் நல்லபடியா நடந்துக்கணும்.. ஆனா அதை திரும்ப எதிர்பார்க்கக் கூடாது போல..” என,

“என்ன சொல்றீங்க..” என்று நிமிர்ந்து பார்த்தாள்..

“எதுவும் சொல்லலை.. கொஞ்சம் பேசாம படு கண்ணு.. நாளைக்கு எழுந்து பேக் பண்ணனும்.. ஊருக்கு போற நேரத்துல எதுவும் பேசிட்டு இருக்க வேணாம்..”  என்றவன்,

அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு கண்களை மூடி கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனான்..

ஆனால் பொன்னியால் வெகு நேரம் உறங்கமுடியவில்லை.. மனதில் பலவிதாமான எண்ணங்கள்.. எல்லாமே சரியாய் இருப்பதுபோல் இருந்தாளும், எதோ ஒரு இடத்தில் சின்னதாய் விரிசலும் இருப்பதாய் தோன்றியது..

அந்த விரிசல் யாரிடம் ?? எங்கே ?? என்ன காரணமாய் ?? இதெல்லாம் அவளுக்குப் புரியவில்லை.. ஆனாலும் தோன்றியது..  

 

                                           

Advertisement