Advertisement

                              தோற்றம் – 38

“டேய் என்னடா நீ.. ஊர் வரைக்கும் வந்துட்டு, இப்போ அவங்க வீட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு இருக்க…?? நான் மட்டும் எப்படி போறது???” என்று மங்கை நான்கைந்து முறை சொல்லியும் அசோக் அசரவில்லை..

“இல்லம்மா நான் வர்றது சரியா வராது.. நீ போயிட்டு வா.. அங்க புகழ் இருக்கார் தானே.. வேணும்னா பக்கத்து வீட்டு அத்தையை கூட்டிட்டு போ..” என்று அவனும் சொன்னதையே தான் சொல்லிக்கொண்டு இருந்தான்..

“ஆமாடா இப்போ நம்ம போய் பேசினதும் அப்படியே சரின்னு சொல்லி தட்டு மாத்திட போறாங்களா?? கேட்கத்தான் போறோம்.. அப்படியிருக்கப்போ அடுத்தவங்களை எப்படி கூட்டிட்டு போறது.. என்ன நடந்தாலும் பொன்னி வீட்டு ஆளுங்களை நம்ம விட்டு குடுக்க முடியுமா???”

“அதேதான் ம்மா நானும் சொல்றேன்.. எனக்காகவே அப்படின்னாலும் பொன்னியை நான் விட்டுக்கொடுக்க முடியுமா???” என்றான் அசோக் குரலை உயர்த்தி..

“டேய்.. என்னடா என்ன பேசுற நீ…” என்று மங்கை புரியாது கேட்க,

“ம்மா இத்தனை நாள் இல்லாம இப்போ நான் அங்க வர்றது சரியா இருக்குமா என்ன??” என்று அசோக் சொன்ன பிறகு தான் மங்கைக்கு புரிந்தது..

“ம்ம்ம்ம் என்ன இருந்தாலும் இப்போ நானா போறதும் சரியா இருக்காதுடா…” என்று தயங்கினார்..

“அதுக்காக பொன்னியை நம்ம இந்த இடத்துல விட்டு கொடுக்க முடியாதும்மா.. தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு  வரலை.. இப்போ இவனுக்கு பொண்ணு வேணும்னு வர்றான்னு என் மனசே என்னை கேட்கும்.. மத்தது எல்லாம் சரிம்மா.. ஆனா இதுக்கு நான் சரின்னு சொல்ல மாட்டேன்.. நான் புகழ் கிட்ட பேசுறேன்…” என்றவன் புகழேந்திக்கு அழைத்து விஷயத்தை சொல்ல,

அவனோ “ஓ… ஆமால்ல.. இதை நான் யோசிக்கலை அசோக்… ம்ம்ம்ம்.. நான் நைட்டே வீட்ல பேசிட்டேன்.. அத்தையை வர சொல்லுங்க.. கூட வேற யார் வந்தாலும் சரி.. பார்த்துக்கலாம்..” என்றுவிட்டான்..

புகழேந்தி பேசிருந்தான் தான்.. ஆனால் அவன் எப்படி பேசினான் என்பது அவனுக்கும் அவனது வீட்டினருக்கும் தானே தெரியும்.. முதல் நாள் இரவு அவன் உண்டு முடித்து வந்து அமரவுமே,

இளங்கோ ஒன்றுமே தெரியாதவன் போல “என்னடா இப்படி திடீர்னு கிளம்பி வந்திருக்க.. அதுவும் நீ மட்டும்.. பொன்னியும் கூப்பிட்டு வந்திருக்கலாம்ல..” என்றுசொல்ல,

“அதுண்ணா.. ஒருவிசயம் பேசணும்.. அப்பா வேற மாப்பிள்ளை போட்டோ எல்லாம் அனுப்பினாரா அதான் நேர்லயே பேசிடலாம்னு வந்துட்டேன்.. எனக்கும் உங்களை எல்லாம் விட்டா வேற யார் இருக்கா…” என்று அழகாய் பிள்ளையார் சுழி போட்டான்..

பரஞ்சோதியின் காதில் அண்ணன் தம்பி இருவரின் பேச்சும் விழ, எதுவோ முக்கியமாய் பேசுகின்றனர் என்று புரிந்து நன்றாய் நங்கூரம் போட்டதுபோல் அங்கேயே அமர்ந்துகொண்டார்.. மன்னவனும் மகராசியும் தங்கள் பிள்ளைகளின் முகத்தினை மாறி மாறி பார்க்க, மற்றவர்களும் எதுவும் புரியாமல் தான் பார்த்து இருந்தனர்..

ஜெயபால் தான் “என்ன மாப்பிள்ள என்ன விஷயம்??” என்று கேட்க,

“அது மாமா.. பொன்னியோட அம்மா அங்கதானே இருக்காங்க, நம்ம அமுதாவும் அடிக்காடி அங்க வந்து போறா இல்லையா.. அம்முவ பிடிச்சிருக்கும் போல அவங்களுக்கு.. அதான் அசோக்குக்கு பேசலாமான்னு கேட்டாங்க..” என்று சொன்னதுமே ஒரு பெரும் அமைதி அங்கே..

அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.. ஆச்சர்யம்.. நிஜமா என்ற கேள்வி?? இதெப்படி இப்படி என்ற ஒரு சந்தேகம் எல்லாம் கலந்து கட்டி அடிக்க, முதலில் சுதாரித்து பரஞ்சோதி தான்..

“ஆ… அதெப்புடி… அன்னிக்கு நம்மளும் இதை சொன்னதுக்கு தான் உன் பொண்டாட்டி என்னென்னவோ சொல்லிட்டாளே. அப்போ ஒத்து வராதது எல்லாம் இப்போ மட்டும் எப்படி வருமாம்???”  என்று ஆரம்பிக்க, அவரின் பேச்சில் தான் அனைவரும் சுதாரிப்பிற்கு வந்தனர்..

இளங்கோவிற்கு இது ஏற்கனவே தெரியுமென்பதால், அடுத்து எப்படி பேசுவது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே பரஞ்சோதி ஆரம்பித்து இருந்தார்.. ஆக அவரின் பேச்சையே இளங்கோ பிடித்துகொண்டான்..

“ஆமான்டா புகழு.. அப்போ பொன்னி வேணாம்னு சொல்லுச்சு.. இப்போ அத்தையே இப்படி கேட்கிறாங்கன்னா நம்ம என்ன பண்றது.. இதுல அசோக் முடிவு என்னன்னு தெரிய வேணாமா???” என,

“என்னண்ணா நீ மங்கை அத்தை அவங்க பையன்கிட்ட கேட்டிருக்க மாட்டாங்களா என்ன?? அவங்கக்கூட நாளைக்கு ஊருக்கு வர்றாங்க போல.. அசோக்கும் அத்தையும்…” என்று புகழ் சொல்ல, மற்றவர்கள் யாரும் பேசும் வாய்ப்பே அங்கே கிடைக்கவில்லை.. மாறி மாறி இவர்கள் பேசுவதையே அனைவரும் பார்த்துகொண்டு இருக்க,

அன்பரசி தான் “அதெல்லாம் சரி, முதல்ல பொன்னி என்ன சொன்னா??” என்று சரியாய் பாயிண்டை பிடித்தாள்..

“பொன்னி என்னக்கா சொல்ல போறா..” எனும்போதே, “ஏன் பொன்னிதானே ஆரம்பத்துல இதெல்லாம் ஒத்து வராதுன்னு சொன்னா..” என்றாள் நித்யா..

“ஆமா மதினி உண்மைதான்.. ஆனா பொன்னிக்கும் இப்போ மனசு மாறியிருக்கலாம் இல்லையா.. அப்போதான் பொன்னி நம்ம வீட்டுக்கு வந்தா.. நம்மளை பத்தி என்ன தெரிஞ்சிருக்கும்.. இப்போ அத்தையே விரும்பி அமுதாவை கேட்கிறாங்க..

ஒரு இடத்துல எங்க பொண்ண கட்டிக்கோங்கன்னு கேட்கிறது சிறப்பா இல்ல, உங்க பொண்ண எங்க வீட்டு மருமகளா அனுப்புங்கன்னு கேட்க வைக்கிறது சிறப்பா.?? நீங்களே சொல்லுங்க…” என்று முடிவினை அழகாய் புகழேந்தி மற்றவர்கள் கையினில் கொடுத்துவிட்டான்..

இத்தனை நேரமும் மற்றவர்கள் எல்லாம் பேசினார்களே தவிர மன்னவனும், மகராசியும் ஒன்றுமே சொல்லாது அமைதியாய் தான் இருந்தனர்.. அதுவும் இப்போது கடைசியாய் புகழ் சொல்லியது கேட்டு, பரஞ்சோதி “அண்ணே என்னண்ணே இப்படியே அமைதியாவே இருந்தா எப்படி???” என்று கேட்க,

“ஹ்ம்ம் என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றார் மன்னவன் நிஜமாகவே..

“என்னப்பா??!!!” என்று புகழ் சற்று வியந்தார் போல் கேட்க,

“அதில்லடா புகழு, சம்பந்தியம்மா கேட்டது பொறுத்து சந்தோசம்தான்.. ஆனா ஏற்கனவே இதை வச்சுதான் வீட்ல அத்தனை பிரச்சனை நடந்தது.. அதுவுமில்லாம அமுதாக்கு இதுல விருப்பமான்னு தெரியனும்.. அதையும் மீறி பொன்னிக்கு இதுல சம்மதமான்னு தெரியனும்..” என்று மன்னவன் சொல்ல,

மகராசியும் “ஆமா கண்ணு.. என்ன இருந்தாலும் பொன்னி புள்ளதாச்சி பொண்ணு.. அவ மனசு நோகுற மாதிரி எதுவும் நடந்திட கூடாது பாரு..” என்று சொல்ல,

“அப்பா.. அம்மா நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனா நானும் இதெல்லாம் யோசிக்காம வந்திருப்பேனா என்ன???” என்றான் புகழேந்தி..

“டேய் மாப்ள நீ பேசுறது பார்த்தா முடிவு பண்ணிட்டு வந்து பேசுற மாதிரியில்ல இருக்கு…” என்று ஜெயபால் சொல்ல,

இளங்கோ வேகமாய் “அட என்ன மாமா இது.. அவன் நம்மளை விட்டா வேற யார்கிட்ட போய் பேசுவான்…” என்றபடியே “புகழு.. அமுதாக்கு தெரியுமா???” என்றான்..

“இல்லண்ணா.. ஹாஸ்ட்டல்ல இருந்து கூட்டிட்டு போய் வீட்ல விட்டுட்டு அப்படியே நான் கிளம்பிட்டேன்.. பொன்னியும் இங்க சரின்னு முடிவு வந்தா மட்டும் தான் அமுதாக்கிட்ட சொல்லுவா.. இல்லைன்னா சொல்ல மாட்டா… பாவம் ஏற்கனவே அமுதா ரொம்ப நொந்து போயிருக்கா..” என்று எதுவுமே நடவாதவன் போல் சொல்ல,

“ம்ம்ம் சம்பந்தியம்மா என்னிக்கு வர்றேன்னு சொன்னாங்க???” என்றார் மன்னவன்..

“நாளைக்கு நான் சொன்னா வந்து பேசுவாங்கப்பா… இல்லைன்னா இல்லை..”

என்னவோ மன்னவனுக்கு உடனே சரியென்று சொல்லவும் முடியவில்லை.. வேண்டாம் என்று சொல்லிடவும் முடியவில்லை.. காரணம் அசோக்கை அவர் நன்கு அறிவார்.. இப்போது பரஞ்சோதி கொண்டு வந்திருக்கும் வரன் கூட, ஒருவகையில் தெரிந்தவர் என்றாலும் மாப்பிள்ளையை பற்றி அத்தனை ஒன்றும் எதுவும் தெரியாதே..

அசோக்கா எந்த மாப்பிள்ளையா என்று பார்த்தால், அசோக்கின் பக்கமே தராசின் முள் சாய்ந்தது..

ஆனாலும் அமுதா.. பொன்னி.. இவர்களை எண்ணி சட்டென்று சரி என்றிடவும் முடியவில்லை.. பெண் எடுக்கையில் எதுவும் யோசிக்காது அங்கிருந்து பெண் எடுத்துவிட்டார்.. ஆனால் இப்போ பெண் கொடுப்பது என்றால் அப்படியில்லை அல்லவா…

புகழேந்தியும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.. அவர்களே ஒரு முடிவிற்கு வரட்டும் என்று இருந்தான்.. எப்படியும் பாதகமான முடிவு எதுவும் வராது என்ற நம்பிக்கை இருந்தது.. இருந்தாலும் எதுவும் அழுத்தி பேசக்கூடாது என்றே பொறுமையாய் இருந்தான்..

மகராசியோ “கண்ணு, பொன்னிக்கு ஒரு போன் போட்டு குடு…” என்றுசொல்ல, “ஏன் ம்மா..??” என்றான் இவன்..

“ம்ம்ச் குடு டா.. பேசணும்…”

“ம்ம்ம்…” என்றபடியே பொன்னிக்கு அழைத்துவிட்டு அலைபேசியை அப்படியே இவன் பேசாது மகராசியிடம் கொடுத்துவிட அது தெரியாத அவளோ “ம்ம் சொல்லுங்க…” என்றிருந்தாள்..

மகராசிக்கு இதில் லேசாய் ஒரு சிரிப்பு வந்துவிட, “கண்ணு நான் அத்தை பேசுறேன்…” என்றார்..

“ஆ.. அத்தை.. சொல்லுங்க… அது.. அ..அவர் நம்பர் வரவும்…”

“ஹா ஹா அதுனால ஒண்ணுமில்ல…” என்றவர் “புகழு எல்லாத்தையும் சொன்னான் கண்ணு..” என, பொன்னிக்கு திடுக்கென்றது..

புகழேந்தி அப்படி முழு விஷயத்தையும் சொல்லியிருக்க மாட்டான் என்பது தெரியும் இருந்தாலும் சொன்ன அளவு என்ன சொன்னான் என்பது தெரியாதே, ஆக எதுவும் பேசாமல்,

“ம்ம் சொல்லுங்க அத்தை…” என்றாள்..

“அதில்ல கண்ணு, இதுல உனக்கு…” என்று இழுக்க,

“உங்க எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் பரிபூரன சம்மதம் தான் அத்தை.. சூழ்நிலை எப்பவும் ஒரேமாதிரி இருக்காது இல்லையா….” என்றாள் பொதுவாக..

“நீ சொல்றது சரிதான் கண்ணு.. ஆனாலும் உங்க மாமாக்கு ஒரே யோசனை..”

“யோசிக்கட்டும் அத்தை.. பொண்ணு கொடுக்கிறதுன்னா சும்மாவா??? நம்ம அமுதா மட்டும் எதுல குறைச்சல்….  இப்போ அம்மாவே கேட்கிறாங்க.. அவங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு போகணும்னு..

அண்ணனுக்கும் சரின்னு தான் எண்ணம் போல.. எதுவும் தானா நடக்கனும்னு தான் அத்தை நான் அப்பாவும் சொன்னேன்..” என்று இப்போதும் இது தான் விஷயம் என்று சொல்லாது பொதுப்படையாகவே பொன்னியும் பேச, ஓரளவு மகராசியின் மனது சமாதானமாய் போனது..

“சரி கண்ணு சந்தோசம்.. அமுதா என்ன செய்றா?? ”

“ரெண்டு பேரும்தான் டிவி பார்த்துட்டு இருந்தோம் அத்தை.. இவர் போன் வரவும் எந்திருச்சு வந்தேன்…”

“அப்படியா?? சரி சரி.. நாளைக்கு பேசிக்கிறேன் அமுதாக்கிட்ட..” என்றவர் புகழேந்தியிடம் கொடுக்க, “அப்புறம் பேசுறேன்…” என்று வைத்துவிட்டான்..

பொன்னிக்கு சிரிப்பு அப்படியொரு சிரிப்பு வந்தது.. என்னென்ன செய்கிறான் இவன் என்று.. பேச்சு பேச்சு பேச்சு.. இதை வைத்தே அழகாய் அனைத்தையும் நடத்திவிடுகிறான் என்றுதான் தோன்றியது..

ஆனால் அங்கே வீட்டினருக்கு இதெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை, மகராசி பொன்னி சொன்னதை சொல்ல, அன்பரசியுமே ஓரளவு தெளிந்ததாய் தெரிந்தது..

“ஹ்ம்ம் என்னவோ இது தான் நடக்கனும்னு இருக்கும்போது என்ன தடை வந்தாலும் நடந்து தான் தீரும்.. அப்படித்தானோ என்னவோ.. ஒருவேளை நம்ம அமுதாக்கு பொன்னியோட அண்ணன்தான்னு எழுதியிருந்தா அதை யாரு மாத்த முடியும்…” என, பரஞ்சோதிக்கு உள்ளே கோபம் புசு புசுவென்று வந்தது..

“என்ன அன்பு இப்படி மாத்தி மாத்தி பேசுற?? நேத்து நான் கொண்டு வந்த மாப்பிள்ளை போட்டோவ பார்த்து நம்ம அமுதாக்கு தோதா இருப்பார்னு சொன்ன இப்போ இப்படி சொல்ற…” என்று கடிந்தார்..

“அத்தை.. அந்த மாப்பிள்ளை போட்டோல பார்க்க நல்லாத்தான் இருந்தார்.. இப்பவும் நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதை தவிர வேறென்ன தெரியும் நமக்கு.. என்னதான் சத்யா வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சவங்கன்னாலும் உள்ள போய் பார்த்துட்டு வர முடியுமா நம்ம?

இதேது பொன்னியோட அண்ணன்னா இதே ஊர் ஆளுங்க.. நமக்கும் நல்லா தெரியும்.. அதுனால அப்படி சொன்னேன்…”

“ஓ… அப்போ நேத்து வரைக்கும் ஒரு பேச்சு.. இன்னிக்கு இன்னொரு பேச்சா?? அண்ணே இதெல்லாம் நல்லாவேயில்லை சொல்லிட்டேன்.. நான் சத்யா வீட்டு ஆளுங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்..?? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட இந்த சம்பந்தம் நல்லபடியா முடியனும்னு சொல்லிட்டு இப்போ எல்லாரும் இப்படி மாத்தி பேசினா எப்படி…” என்று ஒரேதாய் குரலை உயர்த்திவிட்டார் பரஞ்சோதி..

புகழேந்திக்கு பதிலுக்கு நன்றாய் பேசவேண்டும் என்றுதான் வேகம் வந்தது.. ஆனாலும் இது சத்தம் போட்டு சண்டை போட்டு ஒருவரை ஒருவர் பேசும் நேரமல்ல.. அவனுக்கு அவன் நினைத்த காரியம் நடக்கவேண்டும்.. அதெல்லாம் மீறி அமுதாவிற்கு நல்லதொரு வாழ்வு அசோக்கோடு அமைந்திட வேண்டும்.. அது மட்டுமே முதலில்..

ஆக நேரடியாக பரஞ்சோதியிடம் எதுவும் பேசாது இளங்கோவைப் பார்த்தான்.. இளங்கோவிற்கும் பரஞ்சோதி பேசுவது எப்போதுமே பிடிக்காது தான்.. ஆனால் இப்போது அமுதாவிற்காக அவனும் வாய் திறக்காமல் நித்யாவை முறைத்தான்..

நித்யாவிற்கும் உள்ளூர வருத்தம் எழத்தான் செய்தது.. இப்படி தன் அம்மா கொண்டு வந்த வரனுக்கு சரி என்று சொல்லி, இப்போது புகழ் வந்து சொல்லவும் அவனின் மச்சானுக்கு முடிக்க பார்க்கிறார்கள் என்று.. ஆனால் அதெல்லாம் தாண்டி அவளுக்கு அவளுடைய பிறந்த வீட்டு உறவு மிக மிக முக்கியம்..

பரஞ்சோதி முதல் நாள் இங்கே வரவுமே இளங்கோ அவளிடம் சொல்லியிருந்தது, “இங்க பாரு நித்யா, உங்கம்மா வந்தா, வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போகணும்.. அண்ணே வீடு அது இதுன்னு சொல்லிட்டு தேவையில்லாம எதுவும் பேசினாங்க செஞ்சாங்கன்னு வை அப்புறம் இதோட அவ்வளோதான்.. ஒண்ணு நீ அவங்களோட போயிடனும்.. இல்லை இனிமே அங்க போகவேகூடாது.. நீ தான் பார்த்துக்கணும்..” என்று முடிவாய் சொல்லிவிட்டான்..

நித்யாவிற்கே பரஞ்சோதி வந்ததில் இருந்து ஒரு டென்சன் மனதில் இருந்துகொண்டே இருக்க, இப்போதோ அதெல்லாம் மீறி, அமுதாவை யாருக்கு கட்டி கொடுத்தால் என்ன இந்தாம்மா சும்மா இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாள்..

மன்னவன் பரந்ஜோதியிடம், “என்ன ஜோதி இது.. எல்லாரும் பேசிட்டு தானே இருக்கோம்.. இப்போ என்ன முடிவு பண்ணிட்டோம்??” என்று தன்மையாகவே பேச,

“அதெல்லாம் இல்லண்ணே.. எல்லாரும் என்னை அசிங்கப்படுத்தணும்னு ஒரு முடிவோட தான் இருக்கீங்க…” என்று பரஞ்சோதி எகிரும்போதே,

“ம்மா இப்போ நீ எந்திருச்சு உள்ள வர்றியா இல்லையா???” என்றாள் நித்யா..

நித்யா தன்னை அடக்குவது போல் பேசுவாள் என்று எதிர்பாராத பரஞ்சோதி “ஏன் டி.. இது என் பிறந்த வீடு.. நான் அப்படித்தான் கேட்பேன்.. உனக்கென்ன..” என்று கத்த,

“நீ முதல்ல உள்ள வா..” என்று நித்யா அவரின் கைகளை பிடித்து இழுக்க,

“இதெல்லாம் கொஞ்சமும் சரியில்ல நித்யா.. அப்போ நீயும் என்னை அவமானப் படுத்துற…” என்று அவளின் பிடிகளை உதறினார் பரஞ்சோதி..

“இங்கபாரு எதுன்னாலும் நீ ரூம்ல வந்து என்கிட்டே பேசு.. இங்க இவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்…” என்று சொல்லியபடி பரஞ்சோதியை இழுக்க முடியாது இழுத்துக்கொண்டு நித்யா அறைக்குள் செல்ல,

“ஏய் என்னடி நீயும் இப்படி பண்ற??” என்று மகளை, கொன்றுவிடுவது போல் தான் பார்த்தார்..

“ஷ்.. கத்தாத ம்மா…” என்றவள், கதவினை அடைத்துவிட்டு,

“இப்போ என்ன உனக்கு?? இல்ல என்ன உனக்குன்னு கேட்கிறேன்.. அமுதாவ யாருக்கு கட்டி குடுத்தா உனக்கு என்ன??” என்று இப்போது நித்யா எகிற,

“ஏய் என்னடி இப்படி சொல்றா நீ.. அதுக்காக என்னோட உரிமையை நான் விட்டுகொடுக்க முடியுமா??” எனும்போதே,

“சரி அப்படியா.. நீ உன்னோட உரிமையை நிலை நாட்டிட்டே இரு.. ஆனா ஒண்ணு நான் உன்கூட ஒரேதா அங்க வந்திடுவேன்.. இல்ல உன்னோட உறவே வேணாம்னு இங்க இருந்திடுவேன்.. ரெண்டுல ஒண்ணுதான் நடக்கும்..” என்றிருந்தாள் நித்யா..

“நி.. நித்யா என்ன சொல்ற நீ???!!!!” என்று பரஞ்சோதி கொஞ்சம் ஆடித்தான் போனார்..

“ஆமா நீ இங்க பண்ணது எல்லாம் போதும்மா.. உனக்கு இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்துக்காத.. நீ பண்ற வேலைக்கு எல்லாம் அவர்க்கிட்ட நான் பேச்சு வாங்கிட்டு இருக்கேன்.. உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுகிறேன் நீ இதோட வாய் மூடுற…” என்ற நித்யா மிரட்டுவதாகவே பேச, பரஞ்சோதி நிஜமாகவே வாய் மூடிவிட்டார்..

நித்யாவிற்கு தெரியும் இதெல்லாம் கொஞ்ச நேரம்தான்.. பிறவி குணம் என்ற ஒன்று எப்போதும் மாறாதல்லவா.. பரஞ்சோதி இனியும் பேசுவார்.. எப்போதுமே இப்படிதான் என்று அவளுக்குத் தெரிந்தாலும், முடிந்தமட்டும் இப்போது அவர் வாய் மூடியது கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி..

“வெளிய நீ வரக்கூடாது..” என்றவள், கதவினை திறந்துகொண்டே வெளிய சென்றிட, இளங்கோ தன் மனைவியை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்துகொண்டான்..

“என்ன நித்யா இதெல்லாம்..” என்று மகராசி நித்யாவை வருந்த,

“இருக்கட்டும் அத்தை, சும்மா எல்லாரும் பேசிக்கிட்டே இருந்தா எதுவும் நடக்காது.. நமக்கு அமுதா வாழ்க்கைதான் முக்கியம்..” என்று இதோடு பேச்சை நிறுத்திவிட்டாள்..

மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது அங்கே.. அத்தனை அமைதி.. அனைவருக்குமே மனதில் அமுதாவை அசோக்கிற்கு கொடுத்தால் நல்லது என்ற எண்ணமே.. இருந்தாலும் உடனே சரி என்று சொல்லிடவும் முடியவில்லை.. மன்னவன் யோசித்துக்கொண்டே இருந்தார்.. கொஞ்சம் பரஞ்சோதியை முன்னிட்டும்..

மகராசிக்கு பொன்னி பேசியதிலேயே மனம் சாய்ந்துபோனது.. அவருக்குதான் அசோக்கை ஏற்கனவே பிடிக்குமே.. ஆனாலும் மன்னவன் முடிவுக்காக பார்க்க,

ஜெயபால்தான், “என்ன மாமா இப்படியே அமைதியா இருந்தா எப்படி.. நாளைக்கு அவங்களை வர சொல்றதா வேணாமா???” என்றான்..

“அதில்ல மாப்ள…” என்று அவர் நாடியை தடவ,

“மாமா, இளங்கோ சத்யா, நான் அன்பு, எங்களுக்கு சொந்தத்துல முடிச்சிட்டீங்க.. புகழுக்கு அந்நிய சம்பந்தம்தான்.. இப்போ அமுதாவை அங்க கொடுத்தா ஒன்னுக்குள்ள ஒண்ணுன்னு ஆகிடும்.. நாளைக்கு பின்ன யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. எல்லாம் ஒரே குடும்பம்னு ஆகிடும்..” என்று சொல்ல, மன்னவனுக்கு கொஞ்சம் மனது திடமானது..

“நீ என்னடா சொல்ற??” என்று இளங்கோவைப் பார்த்து கேட்க,

“என்னப்பா இது..  நம்ம அம்முக்கு எது சரியோ அது பண்ணா எல்லாருக்கும் சரிதான்..” என்றான் அவன்..

“நீ அன்பு…” என்று மகளையும் கேட்டார்..

“ப்பா.. இது நம்ம முதல்லயே விருப்பப்பட்டது தான்..  இப்போதான் நேரம் கூடி வந்திருக்கு போல..” என்று அவளும் சம்மதம் போலவே சொல்லிட, அடுத்து மகராசி முகத்தினை பார்த்தார்..

“எனக்கு ரொம்ப சந்தோசம்ங்க…” என்று அவரும் சொல்ல, இறுதியாய், புகழேந்தியிடம் “சரி புகழு.. நாளைக்கு அவங்க வந்து பேசட்டும் பார்த்துப்போம்..” என்றுவிட்டார்..

புகழேந்திக்கு அப்போது தான் நிம்மதியாய் இருந்தது.. எப்படியோ ஒருவழியாய் இது சுமுகமாய் முடிந்ததே என்று.. இளங்கோவைத்தான் ஒரு புன்னகையோடு பார்த்தான்.. அவனுக்கும் தெரியும் பரஞ்சோதி ரொம்ப நேரத்திற்கு எல்லாம் இதனை பேசாமல் இருக்க மாட்டார் என்று.. ஆனாலும் பார்த்துகொள்வோம் என்ற எண்ணம் வந்துவிட்டது..

மறுநாள் அசோக் அழைத்து நான் வரவில்லை என்று சொல்ல, இது பொன்னிக்காக என்று அவனுக்கும் புரிந்தது.. ஆகையால் மங்கையை மட்டும் வர சொல்லிவிட்டான்.. மங்கைக்குத்தான் மனது சங்கடமாகவே இருக்க, கிளம்புவதற்கு முன் பொன்னிக்கு அழைத்து பேசினார்..  

“இவன பாரு பொன்னி.. இங்க வந்திட்டு.. அங்க வரலைன்னு சொல்லிட்டு இருக்கான்..” என்று மங்கை சொல்லவும் முதலில் அவளுக்கு புரியவில்லை..

“என்னம்மா சொல்ற???” என்றாள்.

“அசோக் தான் டி.. என்னை மட்டும் போக சொல்றான்.. அவன் வரமாட்டானாம் உங்க வீட்டுக்கு…” என்று மங்கை சொன்னதும்,

“என்ன?? என்ன சொன்ன..” என்றாள் நம்பாமல்..

“ஆமா பொன்னி..” என்று திரும்ப மங்கை சொல்ல, பொன்னிக்கு இத்தனை நாள் அவன் வரவில்லை என்ற கவலை போய், இப்போது அவன் சொன்ன வரவில்லை என்பதில் மனது அத்தனை குளிர்ந்து போனது..

தானாக ஒரு மலர்வு வந்து முகத்தினில் தங்கிட, “ம்மா விடும்மா.. அவனுக்கு வெக்கமா இருக்கும்.. நீ போயிட்டு வா..” என்றாள்..

“நீயும் இப்படி சொல்ற.. என்னவோ போங்க.. ரெண்டு பெரும் முன்னாடி மாதிரி இல்லை…” என்றபடி மங்கை கிளம்பி அங்கே செல்ல, அசோக், பொன்னி, அமுதா மூவருக்கும் அங்கே என்ன நடக்கிறதோ என்று மனது அடித்துக்கொண்டே இருந்தது..

காரணம் புகழேந்தி யாரிடமும் எதுவும் இப்போது வரைக்கும் சொல்லவில்லை.. வீட்டில் பேசியது நடந்தது எதுவும் அவன் சொல்லவில்லை.. எதுவாகினும் சரி முதலில் பெரியவர்கள் பேசி முடிக்கட்டும் என்று பொறுமையாய் இருந்தான்.. பொன்னியும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை..

                 

                            

  

          

                         

 

   

Advertisement