தோற்றம் – 35

“மதினி ப்ளீஸ் மதினி… நீங்க இப்படி இருக்காதீங்க… எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. கோபம்னா எல்லாரையும் திட்டிடுங்க.. ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க மதினி…” என்று அமுதா அழுதுகொண்டே பேச, பொன்னி எதுவும் கண்டுகொள்ளாது அவளது வேலைகளை செய்துகொண்டு இருந்தாள்..

இதற்கு அசோக்கும் சரி, புகழேந்தியும் சரி அங்கேதான் இருந்தனர்.. வார விடுமுறை நாள்.. ஆக வழக்கம் போல் அமுதா வர, அசோக்கும் வந்திருந்தான்.. மங்கையும் அங்கிருக்க, பொன்னிதான் இவர்கள் யாரோடும் எதுவும் பேசுவதில்லையே..

ஒருவாரத்திற்கும் மேலானது..

“என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க…” என்றவள் தான்.. அதன்பின் கணவனோடும் சரி, அண்ணனோடும் சரி பேசுவதேயில்லை…

மங்கையோடு தேவைக்கு அளவாய் பேசினாள்….

எப்போதும்போல் அவளது கடமைகளை செய்தாள், வேலைக்குப் போனாள்.. புகழேந்தி வீட்டினர் யாரும் பேசினால் அவர்களோடு இயல்பாகவே பேசினாள்.. புகழேந்தியும் சரி அவளே யோசித்து கொஞ்சம் சரியாகட்டும் என்று இரண்டு நாள் அமைதியாகவிட்டான்.. அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை..

“ம்ம்ச் கண்ணு… ஒன்னு சண்டை போடு.. திட்டு… ஆனா இப்படி அமைதியா இருக்காத…” என்று சொல்ல, அவளோ அவனை ஒருபார்வை பார்த்தாளே தவிர, வேறொன்றும் சொல்லவில்லை..      

“ப்ளீஸ் கண்ணு.. இப்படி இருக்காத.. கஷ்டமா இருக்கு டி..” என்று அவனும் விடாது பேச,

“என்ன பேச.. என்னை யாருமே புரிஞ்சுக்கலைன்னு தெரியும்போது பேசறது முட்டாள்தனம்..” என்றவள், உறங்கிப்போனாள்..

இதுவே தினமும் நடக்க, புகழேந்திக்கு தாங்க முடியவில்லை, “இப்போ என்ன டி செய்ய சொல்ற என்ன? சொல்லு உனக்கு மட்டும் தான் கஷ்டமா?? ஏன் எனக்கில்லையா… இத்தனை மாசமா இதை மனசுக்குள்ள போட்டு போட்டு நான் பட்டது எனக்குத்தான் தெரியும்..

பெருசா சொல்ற.. புரிஞ்சுக்கலைன்னு.. என்ன உன்னை புரிஞ்சுக்காம இதுவரைக்கும் நான் நடந்திருக்கேன் சொல்லு.. உன்கிட்ட சொல்லக்கூடாது, இதுக்கு நீ சம்மதிக்க மாட்டன்னு நான் சொல்லாம இல்லை.. உனக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயந்து தான் சொல்லாம இருந்தேன்.. அதை முதல்ல நீ புரிஞ்சிக்க பாரு…” என்று அவனும் கத்த,

“ஓ.. சரி..” என்றவள் மீண்டும் மௌனம் காக்க,

“பொன்னி…. வேணாம் இதுக்குமேல என்னை சோதிக்காத….. நான் அப்பா ஆகப்போற சந்தோசத்தை கூட என்னால முழுசா அனுபவிக்க முடியாம இருந்தேன்.. கொஞ்சம் நினைச்சு பாரு… நீ கூட சொன்ன மாறிட்டீங்கன்னு… இப்போ கூட வேற வழியே இல்லாமத்தான்  உன்கிட்ட பேச சொன்னேன் அசோக்கை..” என்றான் கசந்துபோன குரலில்..

அவனின் வேதனை அவனுக்கு… அவளது வேதனை அவளுக்கு..

புகழ் பேச பேச அமைதியாகவே இருந்தாள் பொன்னி.. மனம் கனத்து போயிருந்தது.. கடைசியில் அனைவரும் தன்னை ஒரு வில்லி போல் நினைத்தாய் பட்டது.. அதுவும் அவளது உடன் பிறந்தவன்… தன்னை இந்த அளவுகூட இவர்கள் புரிந்துகொள்ள வில்லையா என்று அவளுக்கு இதை எண்ணி எண்ணியே வருத்தமாய் போனது..

அந்த வருத்தமே அவளை இறுக வைக்க, அனைவர்க்கும் இடையில் சிக்கி புகழேந்திதான் தவித்தான்..

மங்கை ஒருபுறம் கவலையாய் முகத்தை வைக்க, அசோக் அமுதாவிடம் அனைத்தையும் சொல்ல, அவளோ “அண்ணா…” என்று அழுதுகொண்டு பேச,  புகழேந்தியோ எதுவும் செய்ய முடியா நிலையில் நின்றான்..

பொன்னி எதையும் கண்டுகொண்டாள் இல்லை.. ஆனால் புகழேந்தி ஆபிஸ் கிளம்பும் நேரத்தில் எல்லாம் பார்த்து செய்வாள்.. அவனுக்கு எடுத்து வைக்க வேண்டியது எல்லாம் பார்த்து பார்த்து செய்வாள்..

அதுபோலவே அவன் வேலை முடிந்து வந்தாலும் இத்தனை நாள் எப்படி கவனித்தாளோ அதுபோலவே இருந்தாள் ஆனால் பேச்சு மட்டுமில்லை..

அதுவே அவனை தவியாய் தவிக்க வைக்க,  அவனது கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறக்க,

“இப்போ என்னை என்னதான் டி செய்ய சொல்ற…??” என்று கத்தினான்..

“இப்போ எதுக்கு கத்துறீங்க… நான் அமைதியா தானே இருக்கேன்.. இல்லை நான் சண்டை எதுவும் போடுறேனா..??” என்று அவளுமே கூட வாய் திறக்க,

“சண்டை தான் போடேன் டி.. அதையாவது போடு.. இல்லை ஏதாவது பெரிய கல்லைத் தூக்கி என் தலையில போடு.. ஆனா இப்படி அமைதியா இருந்து கொல்லாத.. அமுதாவை விரும்பினது அசோக்.. ஆனா தண்டனை நீ எனக்கு தர பொன்னி…” என்றவன், அப்படியே கட்டிலில் பொத்தென்று அமர,

பொன்னிக்கு என்ன தோன்றியதோ “யாரையும் யாருக்கும் தண்டிக்கிற உரிமை இல்லை.. இது அவங்க அவங்க வாழ்க்கை.. அவங்க அவங்க விருப்பம்.. நான் தான் அன்னிக்கே சொல்லிட்டேனே.. அப்புறமும் என்ன??” என்றாள் பார்வையை எங்கோ பதித்து..

“என்ன செய்யணுமோ செஞ்சுக்கோன்னு சொல்லிட்ட சரிதான்.. ஆனா எனக்கு அதை விட நீ இப்படி இருக்கிறது எவ்வளோ பாதிக்குது தெரியுமா.. இந்த நாலு மாசமும் சொல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம நான் தவிச்சது எனக்குதான் தெரியும்..”எனும்போதே,

“உங்களை யார் அப்படி இருக்க சொன்னா?? நான் சொன்னேனா??? சொல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிங்கன்னு.. நீங்க அப்படி இருந்தது எனக்கு எவ்வளோ கஷ்டமா இருந்ததுன்னு எனக்குதானே தெரியும்.. கஷ்டம் எல்லாருக்கும் தான் உங்களுக்கு மட்டுமில்லை.. இது அமுதா விஷயம் அப்படிங்கறனால தானே இவ்வளோ பொறுமையா போனீங்க இல்லைன்னா???!!” என்று கேட்டவளுக்கு புகழேந்தியால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை..

பொன்னி புரிந்துகொள்ளாமல் பேசுவதாகவே அவனுக்கு பட, இதற்குமேல் இதை அசோக் பேசிக்கொள்ளட்டும் அவனுக்காக பேசி தங்கள் இருவருக்கும் சண்டை முளைப்பதை அவன் விரும்பவில்லை…

“சரி கண்ணு.. இப்போ நான் என்ன செய்யணும்?? அதை சொல்லு.. உனக்கு என்மேல என்ன கோபம்.. எதுவா இருந்தாலும் சொல்லிடு இன்னிக்கே..” என்றவன் அவளின் கைகளை இறுக பற்றிக்கொள்ள,

“எனக்கு யார் மேலயும் கோபமில்ல, வருத்தம் தான்..” என்று அவள் நகரப் போக,

“முடியாது விடமாட்டேன்..” என்றவன் அவனின் பிடியை இறுக்கினான்..

“ம்ம்ச் எனக்கு கால் வலிக்குது.. எவ்வளோ நேரம் நிக்க?? ஏற்கனவே கால் லேசா வீங்குது…” என்று பொன்னி சொன்னதுமே,

“நீ.. நீ முதல்ல உட்கார்…” என்று எழுந்தவன் “இல்ல இல்ல நீ சாஞ்சு உட்கார்…” என்று அவளை கட்டிலில் சாய்த்து அமரவைத்தவன்,

“தூங்கு…” என்றுசொல்ல, அவளுக்கு அவனின் பேச்சில் தெரிந்த மாற்றம் லேசானதொரு புன்னகையை கொடுத்தது..

அவளின் அந்த சிறு புன்னகையே புகழேந்திக்கு யானை பலம் கொடுப்பதாய் இருக்க, “நான் வேணா கால் பிடிச்சு விடவா???” என்றான் அவளை நெருங்கி அமர்ந்துகொண்டு..

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்…” என்று பொன்னி சொல்லும்போதே, புகழ் அவளின் பாதங்களை தன் மடியில் ஏந்தியிருக்க,

“நீ வேணாம் சொன்னாலும் நான் பிடிச்சு விடுவேன்…” என்றான்..

புகழேந்தி, லேசாய் வீங்கியிருந்த அவளின் பாதங்களை மெதுவாய் ஒவ்வொரு விரலாய் சொடுக்கு எடுத்து பிடித்துவிட, பொன்னி அமைதியாய் அவனின் முகத்தினையே பார்த்தபடி இருந்தாள்…

“ஏதாவது பேசு கண்ணு… இப்படி இருக்காத..” என்று புகழ் திரும்ப ஆரம்பிக்க,

“எனக்கு நிஜமா என்ன பேசன்னு தெரியலை..” என்றவள் அப்படியே கண்களையும் மூடிக்கொள்ள, மனதினுள்ளே நிறைய நிறைய பேச தோன்றியது..

கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தவள், “என்கிட்ட ஏன் மறைக்கணும்னு நினைச்சீங்க எல்லாம்..” என, புகழேந்தியின் கரம் அப்படியே அவளின் விரலில் நிற்க,

“போதும்…” என்று கால்களை பொன்னி மடக்கப் போக, “இல்லை இப்படியே கொஞ்ச நேரம் இருக்கட்டும்..” என்றவன்,

“மறைக்கணும்னு யாருமே நினைக்கல.. ஆனா இப்போ இந்த நேரத்துல இதை சொன்னா உனக்கு எதுவும் டென்சன் ஆகுமோன்னு தான் எல்லாம் தயங்கினோம்…” என்றான்..

“ஹ்ம்ம் இப்போக்கூட எனக்கு தெரிஞ்சுபோச்சு எனக்கு எதுவும் ஆச்சா???!!!” என்றாள் ஒருமாதிரி கசங்கிய குரலில்..

“பொன்னி இப்படி பேசாத டி…” என்று புகழ் அதட்ட,

“ஹ்ம்ம்ம்ம்….. பேசலை.. நான் எதுவுமே பேசலை…” என்றவள் அப்படியே அமைதியாகவே இருந்து உறங்கியும் போனாள்..

பொன்னிக்கு வருத்தமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. சொல்லியிருந்தால் நான் வேண்டாம் என்றா சொல்லியிருக்கப் போகிறேன்.. அப்படி என்ன நான் டென்சனாகி எதையாவது இழுத்து வைத்திருப்பேன்.. என்ன கொஞ்சம் அதிர்ச்சி இருக்கும்.. இப்போதும் இருக்கிறது..

எந்த விஷயத்தை வேண்டாம் என்று பொன்னி மறுத்தாளோ, எதை தன் அண்ணன் செய்யமாட்டான், அவன் மனதில் அப்படியெல்லாம் இல்லை என்று நம்பினாளோ அது இன்று நடந்துவிட்டது.. ஆனால் அனைத்தையும் மீறி இது அசோக் வாழ்வு சம்பந்தப்பட்ட ஒன்று என்று வருகையில் நிச்சயம் அதற்கு பொன்னி குறுக்கே நிற்க போவதில்லை..

ஆனாலும்……………………..

மனதில் ஒரு நெருடல்… புகழின் வீட்டினர் நாளை தன்னை என்ன நினைப்பர் என்றும் தோன்றியது…

‘பெருசா என்னவோ சொன்ன… அமுதா படிக்கனும்.. எங்கண்ணன் மனசுல எதுவும் இல்லைன்னு.. இப்போ என்னாச்சு…’ என்று யாரும் கேட்டால் சொல்வதற்கு இவளிடம் பதில் இல்லை..

இதே யோசனைகளே மனதில் ஓடிக்கொண்டு இருக்க, எப்போது உறங்கினாளோ தெரியவில்லை.. ஆனால் புகழேந்தி அசோக்கிற்கு அழைத்து,

“பொன்னி ரொம்ப பீல் பண்றா.. என்னால கண்டிப்பா இதை பார்க்க முடியலை.. நீங்க வேணும்னா அத்தை கூட போய் எங்க வீட்ல பேசுங்க… என்னால இதைமட்டும் தான் சொல்ல முடியும்..” என்றுவிட்டான்..

அசோக்கிற்கும் மனது உருத்திக்கொண்டே தான் இருந்தது.. பொன்னியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவேயில்லை.. மங்கையிடமும் அதையே தான் புலம்பினான்..

“நான் என்னம்மா செய்ய???” என்று..

“அன்னிக்கு போனவன் அடுத்து வரவேயில்ல.. அவளுக்கு எப்படியிருக்கும்.. வந்து பேசி பாரு.. முடிஞ்சா அமுதாவை பேச சொல்லு…” என்றுவிட்டார்..

அமுதா ஏற்கனவே வருகிறேன் என்றவளை புகழ் வேண்டாம் என்று சொல்லியிருக்க, இன்றோ அவளே கிளம்பி வந்துவிட்டாள்.. அசோக்கும் சரி..

அசோக் வந்தவன் பொன்னியின் அருகே வந்தமர்ந்து “ஹெல்த் எப்படியிருக்கு பொன்னி…” என்றுகேட்க,

“அதை கேட்க உனக்கு இத்தனை நாள்???” என்றாள் வெடுக்கென்று..

அடக்க முயன்றும் ஏனோ அவளுக்கு பேச்சு அப்படி வந்துவிட்டது.. புகழேந்தியும் இருந்தான் தான் ஆனால் எதிலும் தலையிடவில்லை.. அண்ணன் தங்கை பேசி சரி செய்துகொள்ளட்டும் என்று நினைக்கையில் தான் அமுதாவும் வந்து சேர்ந்தாள்..

அடுத்த நொடி பொன்னி புகழேந்தியை பார்க்க, அவனோ ‘நான் சொல்லலை..’ என்று தலையை ஆட்ட, மங்கை தான் “வா மா…” என்றார் அமுதாவை..

அசோக் அமுதாவை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் இருக்க, பொன்னி அவளது வேலையை பார்க்கவேண்டு உள்ளே எழுந்து சென்றுவிட, அமுதா பாவமாய் புகழேந்தியை பார்த்தாள்..

“என்னை ஏன் பார்க்கிற அமுதா…. நானும் உங்களை மாதிரிதான் அவ முகம் பார்த்து நின்னிருக்கேன்..” என்று அவனும் சொல்ல,

மங்கையோ “முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க.. அப்புறம் பொன்னிக்கிட்ட பேசுங்க… பசில இருக்கப்போ எதுவும் பேசவேணாம்..” என்று அனைவர்க்கும் எடுத்து வைக்க பொன்னியும் அனைவரோடும் அமர்ந்த உண்டாலும் யாரோடும் ஒருவார்த்தை பேசவில்லை..

உண்டுவிட்டு தட்டு கழுவ போகையில் தான் அமுதா வந்து அழுதுகொண்டே பேச, பொன்னிக்கோ ‘அய்யோ என்ன இவ இப்படி பண்றா…’ என்று தோன்றியது..

இவள் அழுதபடி பேசுவது பொன்னியை என்னவோ குற்றவாளி ஆக்குவதாய் பட, “அமுதா கை விடு..” என்றாள் கொஞ்சம் தன்மையாகவே..

“இல்ல.. இல்ல மதினி.. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க.. கோபம்னா சண்டை போடுங்க ஆனா இப்படி எல்லார்கிட்டயும் பேசாம இருக்காதீங்க ப்ளீஸ்.. இப்பவும் சொல்றேன் நீங்க சரின்னு சொல்லாம இங்க எதுவும் நடக்காது.. உங்களை பிடிக்கலைன்னா இது நடக்கவே நடக்காது…” என்று மேலும் கண்களில் நீர் வடிக்க,

“ம்ம் அப்புறம்…??!!!!” என்றாள் மற்றொரு கையை தன் இடுப்பில் வைத்து..

அவள் நின்ற தோரணையும், பார்த்த விதமும் அமுதாவிற்கு பேச்சை மறக்க வைக்க, மற்றவர்களுக்கும் அதனை வேடிக்கைப் பார்த்துகொண்டு தான் இருந்தார்.. மங்கையோ யாருக்கு சொல்வது என்று தெரியாது நின்றிருந்தார்..

ஒருபக்கம் மகன்.. இன்னொரு பக்கம் மகள்.. அவரவர் பக்கம் நியாயம் இருக்கிறது.. இன்னொரு பக்கம் மகன் விரும்பும் பெண் அதுவும் மாப்பிள்ளையின் தங்கை… எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாய் நின்று இடியாப்ப சிக்கலாகவே தெரிந்தது.. 

“பொன்னி…” என்று அவர் மகளிடம் எதுவோ பேச வர,

“ம்மா…” என்று அவரை ஒரு பார்வை பார்த்தவள், பேசாதே என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு,

“என்ன அசோக் இவ்வளோதான் உன்னோட லவ்வ அமுதாக்கு புரிய வைச்சியா??” என்றாள் கிண்டலாய் சொல்வது போல் சொல்லி..

இந்த வார்த்தை அமுதாவையும் சரி அசோக்கையும் எத்தனை காயப்படுத்தும் என்று அவளுக்கும் தெரியும்.. ஆனால் இதென்ன காதல்??? நீங்கள் சரி என்று சொன்னால் மட்டுமே இதனை நான் ஏற்பேன் என்பது… அது தான் பொன்னிக்கு தோன்றியது..

ஒருவிசயம் நமக்கு வேண்டுமென்றால், அதுவும் வாழ்வு முழுவதற்குமான சங்கதி என்றால், அதிலும் உணர்வுகளும் நேசமும் கலந்த உறவென்று மனதில் விருப்பம் வந்துவிட்டால் யார் சரி என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் எனக்கு இந்த உறவு வேண்டும் என்றல்லவா திடமாய் நிற்க வேண்டும்..

அப்படியில்லாமல் அமுதா வந்து, பொன்னி சரி சொன்னால் தான்.. பொன்னிக்கு பிடித்தால் தான் என்றால்?? பொன்னி முடியாது என்றுசொன்னால் பின்னே என்ன செய்வார்களாம்??? அமுதா வேறொருவனையும் அசோக் வேறொருத்தியயையும் மணப்பார்களா??          

இதெல்லாம் பொன்னிக்கு தோன்ற அப்படியொரு கோபம் வந்தது அவளுக்கு.. இப்படி அடிப்படை உறுதியே இல்லாத என்ன காதல் இது…??

அண்ணா சொன்னால்தான்  எனக்கு சம்மதம்.. அண்ணி சொன்னால்தான் எனக்கு சம்மதம்.. வீட்டினர் சொன்னால்தான்  எனக்கு சம்மதம் என்ற நிலை அமுதாவிற்கு சரியா முதலில்.

இது ஒருவகை தப்பித்தல் நிலை அல்லவா..

ஆனால் அமுதாவின் நிலையில் இருந்து பார்த்தால் அவளால் இது மட்டுமே சொல்ல முடியும்.. அவளது சூழல் அப்படி.. அவள்போய் இப்போது வீட்டில் தான் அசோக்கை நேசிக்கிறேன் என்று சொன்னால் அவ்வளவு தான் பேசியே ஒருவழி செய்துவிடுவார்.. அதுவும் பொன்னிக்கு தெரியும்..

அசோக்கை தான் முறைத்து கொண்டு நின்றாள்..

“கண்ணு…” என்று புகழ் அவளை சமாதானம் செய்ய முயல,

“நீங்க என்ன சொல்ல போறீங்க?? எனக்கு ஒருவிசயம் புரியலை.. நமக்கு ஒருவிசயம் பிடிச்சிருக்குன்னா அதை சொல்றதுல என்ன கஷ்டமிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சது தயங்காம வந்து கேட்டீங்க.. எனக்கும் அப்படித்தான் உங்களை பிடிச்சது சரின்னு சொன்னேன்..

இப்போ அசோக்குக்கு அமுதாவை பிடிச்சிருக்கு, அமுதா ஒன்னு சரின்னு சொல்லணும் இல்லை வேண்டாம்னு சொல்லணும்.. ரெண்டும் இல்லாம அண்ணா சொல்லணும் மதினி சொல்லணும்.. வீட்ல சொல்லனும்னா என்ன அர்த்தம்…” என்று பொரிந்தவள்,

“இப்போ நாங்க யாருமே சம்மதிக்கலை அப்போ என்ன செய்வ அமுதா???” என்று கேள்வியை அவளை நோக்கி வீச, அமுதாவிற்கு திக்கென்று ஆகிப்போனது..

அழுகை நின்று அதிர்ந்து பார்த்தவள், முழிக்க, அசோக்கையும் பார்த்து அதே கேள்வியைத்தான் கேட்டாள் பொன்னி..

“சொல்லுண்ணா.. நான் சம்மதிக்கலை.. இவரும் ஒதுங்கிக்கிட்டார்.. அப்போ எங்களை பகைச்சிட்டு போய் எங்க வீட்ல நீ அமுதாவை பொண்ணு கேட்பியா??” என, அசோக்கும் ஆடித்தான் போனான்..

பொன்னி அப்படி எல்லாம் சொல்லிட மாட்டாள் என்று மனது நினைத்தாலும், ஒருவேளை முடியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றும் நினைக்க,

“பொ.. பொன்னி.. அது…” என்று அவன் திக்க,

“அப்போ நீ யோசிக்கலை.. ஒருவேளை இப்படியும் நடந்தா என்ன செய்றதுன்னு??” என்ற பொன்னியின் கேள்விக்கு பதிலே இல்லை யாரிடமும்..

“நீங்க சொல்லுங்க.. ஒருவேளை எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு சரின்னு சொல்லலை… அவ்வளோ ஏன் நானும் சரின்னு சொல்லலை அப்போ நீங்க என்ன பண்ணிருப்பீங்க???” என்று பொன்னி புகழைப் பார்த்து கேட்க,

‘இப்போ எதுக்கு இந்த கேள்வி..’ என்று பார்த்தான் ..

“சும்மா சொல்லுங்க…”

“நீ சம்மதிக்கலைன்னா கண்டிப்பா என்னோட லவ்வ உனக்கு புரிய வைச்சிருப்பேன்.. நீ சரி சொல்றது வரைக்கும் வெய்ட் பண்ணிருப்பேன்.. அப்படியும் உனக்கு என்னை பிடிக்கலைன்னா கண்டிப்பா உன்னை டிஸ்டர்ப் பண்ணிருக்க மாட்டேன்..

ஆனா உனக்கும் பிடிச்சு,  நம்ம சம்மதிக்கலைன்னா எப்படியாவது அடம் பண்ணியோ இல்லை ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணி கூட கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன்…” என்று   புகழேந்தி சொல்ல,

‘பார்த்தாயா…??!!!’ என்றுதான் அமுதாவை பார்த்தாள் பொன்னி.. அப்படியே அசோக்கையும்..

மங்கையே கூட மருமகனது பேச்சில் கொஞ்சம் ஆடித்தான் போனார்….

“எங்க கல்யாணம் நடக்குறதுக்கு முன்ன ரெண்டு குடும்பமும் அடிதடி சண்டை எல்லாம் போட்டுச்சு.. ஆனா இப்போ அப்படி இல்லை.. பிரச்சனைகள் இருந்தது தான்.. ஆனா அவ்வளோ ஒன்னும் நீங்க நினைச்சதுபோல எல்லாம் இல்லை.. நான் அதை அப்படித்தான் இப்போ எடுத்துக்கிட்டேன்..” என்றவள்,

அமுதாவிடம் “இங்க பார் அமுதா, அமைதியான பொண்ணுன்னு பேர் எடுக்கிறதை விட, நமக்கு ஒரு விஷயம் அதுவும் நியாயமான விசயமா இருந்து அது வேணும்னா அதை தக்க வச்சுக்கிறதுக்கும், நமக்கு சொந்த மாக்கிக்கிறதுக்கும் நம்ம போராடனும்.. அது தான் புத்திசாலித்தனம்.. இந்த காலத்துல பொண்ணுங்க புத்திசாலியா தான் இருக்கணும்.. அதைவிட்டு அமைதியா இருந்தா எந்த பிரயோஜனமும் இல்லை.. இப்படி அழுதுட்டு தான் நிக்கணும்…” என்றவள்,

“இங்க பார் அசோக்.. முதல்ல அவளுக்கு நீ வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணட்டும்.. அப்புறம் என்னோட முடிவுக்கு எல்லாம் வாங்க.. ” என்றுவிட்டு,

“எப்பவும் என்னை வீக்கென்ட்ல கோவிலுக்கு கூட்டிட்டு போவீங்க.. இன்னிக்கு எப்படி???!!” என்று புகழேந்தியை பார்த்து வினவ,

இத்தனை நாள் கழித்து பொன்னி கொஞ்சம் அவனிடம் கோர்வையாய் பேசத் தொடங்கியதில் அவனது மனம் மகிழ்வுற “போ.. போலாமே…” என்று கார் எடுக்கப் போக,

“ம்மா கோவில் போயிட்டு வர்றோம்…” என்றுசொல்லி பொன்னியும் கிளம்பிச் சென்றுவிட்டாள்