இதனை எல்லாம் பார்க்க பார்க்க, பொன்னிக்கு அவர்கள் ஊரின் பால்வாடிதான் நினைவு வந்தது.. இது போல் அது இல்லை தான்.. ஆனாலும் குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகள் தானே..
பால்வாடி என்றதுமே, அதனோடு சேர்த்து புகழேந்தியின் ‘பால்வாடி டீச்சர்…’ என்ற அழைப்பும்.. சேர்த்து நியாபகம் வர, அவளின் இதழின் ஓரத்தில் ஒரு புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது..
“ஷ்… கண்ணு..” என்று மெதுவாய் அழைத்து அவளின் கரம் பற்றியவன், “என்ன நின்னுட்ட…” என,
“இல்ல ஒண்ணுமில்ல…” என்று தலையை ஆட்டியவளின் முகத்தினில் இருந்த புன்னகையே அவனுக்கு அவளின் எண்ணத்தை சொல்ல,
“ஹ்ம்ம் சந்த்ரு வொய்ப்போட அம்மாதான் இந்த ஸ்கூல் ரன் பண்றாங்க.. நம்ம கல்யாணத்துக்கு இன்வைட் பண்றப்போ உன்னைபத்தி கேட்டாங்க.. அப்போ சொன்னப்போ, ஒன்ஸ் இங்க கூட்டிட்டு வர சொன்னாங்க.. உனக்குமே கிட்ஸ் கூட இருக்க பிடிக்குமே.. நீ இங்க வந்ததுமே கூட்டிட்டு வரணும் நினைச்சேன்.. ஆனா முடியலை…” என்றான்..
இருவருக்குமே ஏன் முடியவில்லை என்ற காரணம் தெரியுமென்பதால் அதற்குமேல் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை..
பியூன் வந்து, “சார் மேடம் உங்களை உள்ள வர சொல்றாங்க…” என்று சொல்ல,
பொன்னி மாட்டேன் என்று சொல்வாளா?? என்ன?? வேகமாய் தலை ஆடியது சரி என்று..
“ஹ்ம்ம் நீ சரின்னு சொல்றப்போ எல்லாம் இப்படிதான் உன் தலை ஆடுமா???” என்று சிரிப்பினூடே கேட்டவன், அவளையும் உள்ளே அழைத்துக்கொண்டு சென்றான்..
பொன்னிக்கோ மிக மிக மனது சந்தோசமாய் இருந்தது.. தனக்காக என்று யோசித்து புகழ் இதனை செய்திருப்பது நிச்சயமாய் அவளுக்கு மகிழ்ச்சியே.. அதுவும் அவளுக்கு பிடித்த மாதிரி ஒருவேலை… அவளே கூட இதனை யோசிக்கவில்லை..
ஆனால் அவளுக்காக அவன் யோசித்திருக்க, அதுவும் அவளுக்கு பிடித்த ஒன்றை யோசித்திருக்க, பொன்னிக்கோ முதல்நாள் புகழ் பேசியது எல்லாம் மறந்தே போனது தான்.
‘ச்சே.. இவங்கள தப்பா நினைச்சிட்டோம்… என்னை கோவிக்காம வேற யாரை கோவிக்க முடியும்…’ என்று தனக்கு தானே நினைக்கவும் செய்தாள்..
சந்தோசமாகவே இங்கே வேலையில் சேர சம்மதம் என்று சொல்லிவிட்டாள் பொன்னி, சந்த்ருவின் மாமியாரிடமும்.. புகழுக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு எண்ணம் என்னிடம் சொல்லவில்லை மாட்டேன் என்று சொல்வாளோ என்று.. ஆனாலும் சொன்னதும் வேகமாய் சரி என்று பொன்னி சொன்னதும் ஹப்பாடி இனியாவது அதை இதை என்று எதையும் எண்ணாமல் அவளும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பாள் என்று நிம்மதி கொண்டான்..
வீட்டுக்கு வந்தபின்னோ “என்னங்க என்னங்க…” என்று பொன்னி அவன் பின்னேயே சுத்த, அவனோ இதெல்லாம் பெரிதே இல்லை என்பதுபோல் அவளை கண்டுகொள்ளாமல் வேலை இருப்பது போல் பாசாங்கு செய்துகொண்டு இருந்தான்..
“என்னங்க முன்னாடியே ஏன் சொல்லலை..” என்றவளின் குரலில் பழைய ஒட்டுதல்..
“என்ன சொல்லலை….??” என்றபடி அவனோ இங்கிருக்கும் பொருளை வேறு இடத்தில் வைப்பது போல இங்கும் அங்கும் நடந்துகொண்டு இருக்க,
“ம்ம்ச்.. இப்படியே பின்னாடி சுத்த வைக்கிறீங்க..” என்றபடி அவனின் முன்னே போய் நின்றாள் பொன்னி..
“அடடா ஒரு வேலை செய்ய விடுறியா..?? என்ன வேணும் இப்போ…”
“அடஅட.. உலக நடிப்புடா சாமி..” என்று கைகளை விரித்து வியந்தவள், “எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சுக்கோங்க.. ஒன்னும் சொல்லிடாதீங்க…” என்று சிரித்தபடியே சொல்ல,
“அடிப்பாவி புல்லுக்கட்டு நேத்து தான் இதை நீ வேற மாடுலேஷன்ல சொன்ன…” என்று வாயில் கைவைத்து புகழ் சிரிக்க,
“ச்சி போங்க… எப்போ பாரு புல்லுக்கட்டுன்னு…” என்று அவன் மார்பில் குத்திவிட்டு போனாள் பொன்னி..
‘அடிப்பாவி பிடிச்சதை பண்ணா இப்படி.. இல்லைன்னா நேத்து மாதிரி பேசுறது… கடைசிவரைக்கும் இப்படிதானோ…’ என்று புகழ் நினைத்துகொண்டவன்,
“சரி சரி பால்வாடி டீச்சர்….. இது ஓகே வா…” என்று அவளின் பின்னேயே போக,
“ம்ம் ம்ம் ஓகே ஓகே..” என்றாள் சந்தோசமாய்..
அடுத்து அடுத்து வந்த நாட்களும் இருவருக்கும் மகிழ்ச்சியாய் தான் சென்றது.. யாரை பற்றியும் நினைக்கவில்லை.. எதை பற்றியும் சிந்திக்கவில்லை.. காலையில் எழுந்தால், இருவருக்குமே வேலைகள் இருக்கும்.. பொன்னிக்கு எத்தனை முடியுமோ அத்தனை உதவுவான் புகழ்..
அவனோடு சேர்ந்தே அவளும் கிளம்பிடுவாள்.. புதிய சூழல். அதுவும் சிறு பிள்ளைகளோடு.. பொன்னிக்கு மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.. அவளின் அந்த மகிழ்ச்சி அவர்களின் வாழ்விலும் பிரதிபலிக்க, புகழேந்திக்கு வாழ்வு இப்படியே சென்றுவிட்டால் போதும் என்று தோன்றியது..
ஆனால் விதி அப்படி இருக்குமா என்ன???
ஒருநாள் காலை மன்னவன் அழைத்திருந்தார்.. புகழேந்திக்குத்தான்.. சத்யாவிற்கு திருமணம் பேசி முடித்திருக்கிறது என்று சொல்லவும்,
“சரிப்பா அதுனால என்ன.. நீங்க போய் இருந்து நல்லா செஞ்சு குடுத்துட்டு வாங்க…” என்றுவிட்டான் புகழும்..
பொன்னிக்கு இந்த விசயம் தெரியவுமே, அவளுக்குமே மனதில் ஒரு நிம்மதிதான்.. இப்படியே எல்லாம் நல்லவிதமாய் நடந்துவிட்டால் போதும் என்று.. ஆனால் நிம்மதிகள் வேண்டும் என்று நாம் நினைத்தால் மட்டும் போதுமா.. மற்றவர்களும் நினைக்க வேண்டுமே..
பத்தே நாள் கழித்து, நித்யா பொன்னிக்கு அழைத்தாள்.. பொன்னிக்கு ஆச்சர்யம் தான்.. திருமணமான இத்தனை நாளில் நித்யாவாக அவளுக்கு அழைத்திருப்பது இதுதான் முதல்முறை.. ஆனால் அந்த நேரம் பார்த்து பொன்னி ப்ளே ஸ்கூலில் இருக்க,
“அக்கா நானே ஒரு பத்து நிமிசத்துல கூப்பிடுறேன்..” என்று வைத்துவிட்டாள்..
சொன்னதுபோல் பத்தே நிமிடத்தில் கிடைத்த இடைவெளியில் பொன்னி திரும்ப நித்யாவிற்கு அழைக்க,
“அது ஒண்ணுமில்ல பொன்னி.. சத்யா கல்யாணம் வருதுல்ல.. புது துணி எடுக்கணும்.. அங்க வரலாம்னு இருக்கோம்.. நீதான் கூட வந்து கொஞ்சம் எல்லாம் செய்யணும்..” என,
‘அட…’ என்று பொன்னிக்கு ஆச்சர்யமாய் போனது..
“நானாக்கா???!!!” என்று அதே ஆச்சர்யத்தோடு பொன்னி கேட்க,
“ஆமா.. நீ அங்கேயே படிச்சவ… உனக்கு தெரியும்ல எந்த கடை எப்படின்னு… அதான்.. நாங்க எல்லாம் வர்றோம்..” என,
பொன்னி சந்தோசமாகவே சரி என்றாள்.. அடுத்து மகராசி வாங்கி “கண்ணு.. நித்யாக்கிட்ட பணம் கொடுத்து அனுப்புறேன்.. நீயும் உனக்கு பிடிச்சது எடுத்துக்கோ..” என,
சொன்னதுபோலவே அந்த வார இறுதியில் இளங்கோ, நித்யா.. அன்பரசி.. ஜெயபால் மற்றும் பிள்ளைகள் என்று அனைவரும் வர, வீடே களைகட்டியது.. இவர்கள் எல்லாம் வரவும் அமுதாவும் வீட்டிற்கு வந்திட, சொல்லவும் வேண்டுமா..
பொன்னிக்கு என்னவோ முன்போல் அத்தனை ஒன்றும் ஒதுக்கம் காட்ட முடியவில்லை.. அனைவரும் அவளிடம் நல்லபடியாகவே பேச, அவளும் அவளின் எல்லையில் நிற்க முடியவில்லை.. ஆனால் புகழேந்திக்கு தான் வேலை வேலை வேலை எல்லாம்..
“கால் டாக்சி புக் பண்ணி எல்லாரையும் கூட்டிட்டு போயிட்டு வா கண்ணு… கடைல சாப்பிட்டுக்கோங்க…” என்று புகழ் அவனின் கார்டை நீட்ட,
“அப்போ நான் எதுவும் வாங்கிக்க வேணாமா??” என்றாள் வேண்டுமென்றே..
“அப்படி சொன்னேனா???” என்றவன் “அப்படியே எனக்கும் சேர்த்து ஏதாவது வாங்கிட்டு வா..” என்றவன் கிளம்பிவிட்டான்..
அனைவரும் கிளம்பி ஜவுளி கடைக்குப் போக, நித்யாவும் அன்பரசியும் ஒரு சேலை தேர்வு செய்யவே அத்தனை நேரம் செய்தனர்.. பொன்னி ஏதாவது நன்றாக இருக்கிறது என்று தனியே எடுத்து வைத்திருந்தாள், நித்யா வந்து “இது நல்லாருக்கு இது நான் எடுக்கவா..???” என்பாள் அதிலிருந்து ஒன்றை எடுத்து..
அன்பரசியோ கையில் இரண்டு புடவையை வைத்து “இதுல எது நல்லாருக்கு..??” என்று கேட்பாள், ஏதாவது ஒன்றை நன்றாயிருக்கிறது என்று சொன்னால்,
“அப்போ நீ வச்சிக்கோ…” என்று கொடுப்பாள்..
பொன்னிக்கு இதெல்லாம் கொஞ்சம் புதிதுதான்.. ஆனால் கவனித்துப் பார்க்கையில், அன்பரசி நித்யாவிடமும் சரி அமுதாவிடமும் சரி இப்படிதான் என்பது நன்கு புரிந்தது.. நித்யாவும் மற்றவர்களிடம் அப்படித்தான் என்றும் புரிந்தது.. தானாகவே அவளுள் ஒரு சிரிப்பு..
குடும்பம் என்றால் இதுதான்… சண்டை சச்சரவுகள் எல்லாம் தான் இருக்கும்.. அதே நேரம் ஒரு நல்ல விஷயம் என்று வருகையில் அனைவரும் ஒன்றாய் நின்றால் தானே மகிழ்வு இரட்டிப்பாகும்… பொன்னியும் அந்த தருணத்திற்கு தான் காத்திருந்தாள்..
எப்படியோ அனைவரின் மன பிணக்குகளும் மறைந்து சத்யா திருமணத்தில் குடும்பமாய் அனைவரும் ஒன்றாய் சென்றுவருவோம் என்று…
இளங்கோ அழைத்து “டேய் அத்தையும் மாமாவும் அங்க பத்திரிக்கை வைக்க வரணும் சொல்றாங்க.. நீ வீட்ல தானே இருப்ப…” என்று புகழிடம் கேட்க,