Advertisement

     தோற்றம் – 11

புகழேந்தி, பொன்னியின் வீடு சென்று பேசிவிட்டு வருகையில் அவனை ஒரு முறைப்போடு எதிர்கொண்டது அவனின் அன்னையே.. மகராசி அவனைப் பார்த்த பார்வையே பலகதைகள் சொன்னது அவனுக்கு.. இருந்தும் அதனை கண்டுகொள்ளாது அப்படியே அறைக்குள் நுழைய நினைத்தவனை,

“புகழு.. எங்க போயிட்டு வர இப்போ.. நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு கிளம்பி போனா என்ன அர்த்தம் கண்ணு???” என்று மகராசி கேட்க,

“ம்மா.. இப்போ என்ன?? அவசரமா ஒரு வேலை…” என்றான் பட்டும் படாமல்..

“அப்படியென்ன தலைப்போற வேலை.. அவ்வளோ நேரம் விட்டத்த பார்த்து தான படுத்திருந்த.. இப்போ பரிசம் கூட முடிஞ்சிருக்கும்…” என்று மகராசி முகத்தை சுளிக்க,

“ம்மா அங்க பரிசமும் நடக்கல ஒன்னும் நடக்கல.. மாப்பிள்ள வீட்ல இருந்து வரல.. போ போய் முதல்ல ட்ரெஸ் மாத்து…” என்று புகழ் சொல்லியபடி அங்கிருந்து நழுவப் போக,

“என்னது பரிசம் நடக்கலையா?? என்னடா கண்ணு சொல்ற??” என்றபடி மகராசி எழுந்து வர, “ஆமா நடக்கல…” என்றான் இவனும்..

“ஏன்?? ஏன் நடக்கல?? என்னாச்சு???” என்று அவர் கேட்கவும், இவனும் விபரம் சொல்ல,  

“அட கடவுளே…” என்று வருந்தியவர் “ஆமா இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்.. ???” என்றார் சந்தேகமாய்..

“அது.. அது நான்… அங்க பொன்னி வீட்டுக்கு தான் போயிட்டு வர்றேன்…” என்றான் தயக்கமாய் ஆரம்பித்து பின் தெளிவாய்..

“என்ன?? என்ன கண்ணு சொல்ற???” எனும்போதே அங்கே அன்பரசியும் நித்யாவும் வந்திட,

“ம்மா இப்போ ஏன் இவ்வளோ டென்சன்.. நான் பொன்னிய பார்த்துட்டு தான் வந்தேன்.. இப்போ நான் போய் குளிக்கணும்..” என்றவன் நகரப்போக,

“புகழு நில்லுடா..” என்று அன்பரசி சொல்ல,

“க்கா குளிச்சிட்டு வந்திடுறேன்.. கசகசன்னு இருக்கு…” என்றவன் நிற்காமல் சென்றுவிட்டான்..

பெண்கள் மூவரும் என்னதிது என்று ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து நின்றிருக்க, புகழேந்தி வேகமாய் அவனின் அறைக்கதவையும் அடைத்துக்கொண்டான். முதலில் அவனுக்கே அவனின் செய்கைகள் அதிர்ச்சிதான்.. எந்த எண்ணத்தில்.. என்ன வேகத்தில்.. எந்த உறுதியில்.. என்ன முடிவில் கிளம்பிச் சென்றான் என்பது அவனுக்கே புரியாத புதிர்…     

அவசரப்பட்டுவிட்டோமோ என்று அவனுக்கு இப்போதும் தோன்றவில்லை மாறாக கொஞ்சம் நிதானித்து செய்திருக்க வேண்டுமோ என்று இருந்தது.. அதிலும் இப்போது, அவனை அவனே நிதானம் செய்துகொள்ள நேரம் வேண்டுமானதாய் இருந்தது..

எப்படியிருந்தாலும் வீட்டில் பேசித்தான் ஆகவேண்டும்.. ஆனால் அதை எப்படி ஆரம்பிக்க.. என்னவென்று ஆரம்பிக்க.. எதை சொல்லி ஆரம்பிக்க என்று தான் ஒன்றும் புரிபடவில்லை.. கண்களை இறுக மூடி அமர்ந்தவனுக்கு பொன்னியின் பிம்பங்களே..

அவன் அங்கே போனதில் இருந்து அவன் பேச பேச அவளின் முகத்தில் தோன்றி மறையும் கலவையான பாவனைகள்.. அதிர்ச்சி.. ஆச்சர்யம்.. லேசாய் ஒரு பதற்றம்.. அதனினும் லேசாய் ஒரு கோவம் பிடிவாதம்.. இறுதியாய் அவன் கேட்டதற்கு சரி என்று அவளும் அறியாது தலையாட்டிய தருணம்.. எல்லாம் சேர்ந்து இப்போது புகழுக்கு மொத்தமாய் ஒரு பித்து நிலை தான்..

அடுத்தது என்ன செய்ய போகிறான் என்றே தெரியாத ஒரு பித்து நிலை..

அவள் மீது காதலா??? தெரியாது..

அவளைப் பிடித்திருக்கிறதா ??? தெரியாது..

அவள் மீது அன்பா?? அதுவும் தெரியாது..

ஆனால் அதெல்லாம் தாண்டி பொன்னி அவனுக்கு சொந்தமாகவேண்டும் என்ற எண்ணம் மட்டும் புகழேந்தியின் மனதில் பெரும் ஓசை எழுப்பிக்கொண்டு இருந்தது.. அதுவும் அவளுக்கு வேறு யாரோடோ பரிசம் என்று கேள்விப் பட்டதும் அவனால் பொறுமையாய் நின்று எதையும் யோசிக்க முடியவில்லை…

எத்தனை நேரம் அப்படியே அறையினுள் இருந்தானோ, வெளியே மன்னவன், இளங்கோ எல்லாம் பேசும் குரல் கேட்டது.. எப்படியும் மகராசி அவர்களிடம் எதுவும் பேசுவார் அடுத்து தன்னை அழைப்பர் என்று காத்திருந்தவன் என்ன நடந்தாலும் சரி இதிலிருந்து பின்வாங்கிட மட்டும் கூடாது என்று மனதில் உறுதியாய் இருந்தான்..

“புகழு குளிக்க போய் எத்தன நேரம்?? இன்னும் என்ன பண்ற??” என்று அன்பரசி அழைக்கும் குரல் கேட்க,

அப்போதுதான் அவனுக்கு நினைவே வந்தது குளிக்கணும் என்று வந்து இன்னும் அதை செய்யாமல் இருப்பது..

“ம்ம்ச்…” என்று தலையில் அடித்துக்கொண்டவன், வேக வேகமாய் குளித்து வெளிவர, அப்போது தான் இளங்கோவும் வீட்டினுள் நுழைந்துகொண்டு இருந்தான்..  

“மாப்ள…”என்று ஜெயபால் அழைக்க,  அண்ணன் தம்பி இருவருமே திரும்பினர்.

“என்ன விஷயம் அக்காவும், அன்புவும் என்னவோ சொல்றாங்க…” என்று புகழைப் பார்த்துக் கேட்க, “என்ன விஷயம் மாமா???” என்றான் அவனும் அசராது..

“இதான்.. நான் கேட்டதுக்கும் பட்டும் படமா பேசிட்டு உள்ள போயிட்டான்..” என்று மகராசி சொல்லவும்,

“ம்ம்ச் சும்மா இரு மகா.. நான் பேசிக்கிறேன்…” என்ற மன்னவன் “புகழ்… என்னாச்சு உனக்கு.. நீ ஏன் அங்க போன???” என்றார்..

சரி அனைத்தும் தெரிந்து தான் கேட்கிறார்கள் என்றதும் “இல்லப்பா அந்த பொண்ணுக்கு பரிசம்னு தெரியவும் தான் போனேன்.. எனக்கும் வேற வழி இல்லப்பா…” என,

“என்னடா சொல்ற?? என்ன வழி?? ஏன் இப்படி பேசுற???” என்றார் மன்னவனும்..

“அது….” என்று ஒருநொடி தயங்கியவன், “நான் பொன்னிய கட்டிக்கணும்னு விருப்பப்படுறேன்…” என்றதும் வீட்டில் அங்கே அப்படியொரு அமைதி..

யாரும் எதுவும் பேசவில்லை.. இளங்கோ மட்டும் இதை நான் எதிர்பார்த்தேன் என்பதுபோல் பார்க்க, மகராசி அப்படியே அமர்ந்துவிட்டார்.. அமுதாவின் முகத்தில் மட்டும் கொஞ்சம் சிரிப்பு எட்டிப்பார்த்ததோ என்னவோ.. ஆனால் புகழேந்தி முகத்தினில் இதுமட்டுமே என் முடிவு என்பதுபோல் நின்றுவிட்டான்.. அவனுக்கே அவனின் திடம் ஆச்சர்யமே… அத்தனை பிடிப்பா அவளின் மீது?? அவனே அவனைக் கேட்டுக்கொண்டான்..

“டேய் என்னடா இப்படி சொல்ற?? அப்போ நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்…” என்று ஜெயபால் கேட்க,

“மாமா… நம்ம எல்லாம் இருக்கோம்னு நம்மலே சொல்லிக்கிட்டா தான் ஆச்சு… அவன் தான் அங்கவே போய் பேசிட்டுள்ள வந்திருக்கான்…. முடிவெடுக்காமயா போய் பேசிருப்பான்…” என்று அன்பரசி இடைசொருக,

புகழேந்திக்கு நான் என்ன சொல்கிறேன் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று இருந்தது.. ஒருசில விஷயங்கள் எல்லாம் எடுத்து சொன்னாலும் புரியாது, சிலதை எடுத்துசொல்லவும் முடியாது.. புகழேந்தியின் உணர்வுகளும் அப்படியானதே…

“டேய் பேசுடா…” என்று இளங்கோ அவனை உசுப்ப,

“என்னண்ணா பேச சொல்ற?? நான் சொல்றதை நீங்க எல்லாம் சரியா புரிஞ்சுப்பீங்களா என்ன??” என்றான் ஒருமாதிரி..

“இப்போ நீ என்ன சரியா சொல்லிட்ட நாங்க புரிஞ்சுக்காம போக.. என்ன புகழு நீ.. உங்கிட்ட இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…” என்று அன்பரசி பேச,

“அக்கா இப்போ என்ன நான் தப்பு பண்ணிட்டேன்..” என்றான் இவனும்..

மகராசியோ ஒன்றுமே பேசவில்லை.. அவரால் எதுவும் பேசிடவே முடியவில்லை. அமுதாவின் பிரச்சனையே அவருள் ஒரு பெரும் தாக்கத்தை உண்டு செய்திருந்தது. அது முடிந்தது என்று நினைத்த வேளையில், இப்போது புகழேந்தி இப்படி செய்வான் என்று அவரும் சரி மன்னவனும் சரி யாரும் எதிர்பார்க்கவில்லை..

“மாமா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஏதாவது பேசுங்க….” என்று ஜெயபால் மன்னவனைப் பார்த்து சொல்ல,

“என்ன மாப்ள சொல்ல சொல்ற??” என்றார் அவரோ அமைதியாய்..

“என்ன மாமா.. புகழு இப்படி பேசிட்டு இருக்கான்.. நீங்களும் அக்காவும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்???” என்று ஜெயபால் கேட்க,

“அவன் மனசுல இருக்கிறதை சொல்லிட்டான்.. ஹ்ம்ம்…” என்று தலையை ஆட்டிய மன்னவன், மனைவியின் முகம் பார்க்க, மகராசியும் அமைதியாய் இருக்க,

“என்ன மகா.. என்ன பண்றது..???” என்றார்.

“என்ன பண்றதுங்க… ரெண்டு மாசம் முன்ன அந்த வீட்டோட பிரச்னை.. எல்லாம் சரியாகி கொஞ்ச நாள் முன்ன போய் மன்னிப்பு வேற கேட்டோம்.. இப்போ போய் பொண்ணு கொடுங்கன்னு சம்பந்தம் பேச சொல்றான் இவன்… என்ன சொல்ல..?? எனக்கு ஒன்னும் புரியல…” என்றவர், அப்படியே சாய்ந்துகொள்ள,

“அச்சோ அம்மா என்னாச்சு???” என்று பதறியது அன்பரசி அருகே செல்ல,

“எனக்கு ஒண்ணுமில்ல ஒருமாதிரி இருக்கு அவ்வளோதான்..” என்ற மகராசி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்..

“அமுதா நீ போய் அம்மா கூட இரு…” என்று இளங்கோ அமுதாவை உள்ளே அனுப்பியவன், “அப்பா.. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.. யோசிச்சு நல்ல முடிவா எடுப்போம்…” என,

“ஹ்ம்ம் அமுதா கல்யாணம் முடிச்சிட்டு புகழுக்கு பண்ணலாம்னு இருந்தோம்…” என்றுமட்டும் மன்னவன் சொல்ல,

“அதெல்லாம் எங்க இவனுக்குத் தெரிய போகுது.. ஆஸ்பத்திரில வச்சே பார்த்தோமே.. அவ கையை இவன் பிடிச்சு இழுத்துட்டு போனதை…” என்று அன்பரசி கடிய,

“அன்பு…” என்று ஜெயபால் அதட்ட,  

“ஹ்ம்ம் இந்த வீட்ல ரெண்டு கல்யாணம் நடந்துச்சு.. வீட்ல வயசு பொண்ணு இருக்கப்போ எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருக்கணும்.. ஏற்கனவே எப்படி ஒரு பிரச்சனை…” என்று நித்யாவும் தன் பங்கிற்கு பேச, புகழேந்திக்கு அந்த நேரத்தில் பெரும் அடியாய் போனது இந்த வார்த்தைகள்..

வீட்டில் தங்கை ஒருத்தி இருக்க உனக்கு என்ன இவ்வளவு அவசரம் என்று சொல்லாமல் சொன்னதாய் இருக்க, மனதிற்குள் இந்த வார்த்தைகள் பெரும் காயத்தை கொடுக்க, அவமானமாய் உணர்வது போல் இருந்தது அவனுக்கு.. இதற்கு என்ன பதில் சொல்வது என்றுகூட அவனுக்குத் தோன்றவில்லை..

“அச்சோ போதும்… இப்போ ஏன் எல்லாம் இப்படி பேசிட்டு இருக்கீங்க.. அப்பா.. அமுதாக்கு தான் இப்போ கல்யாணம் வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும்னு முடிவு பண்ணோமே பின்ன ஏன் இந்த பேச்சு…” என்று புகழேந்திக்கு சப்போர்ட்டாய் பேசியது இளங்கோவே..

இளங்கோ இப்படி பேசியதும் புகழேந்திக்கு அவனை திடுக்கிட்டுத்தான் பார்த்தான்..

“என்னடா பாக்குற…” என்றவன், “அப்பா ட்ராக்டர் ரிப்பேர் ஆகிடுச்சு.. நானும் புகழும் போய் மெக்கானிக்க கூட்டிட்டு வர்றோம்.. நீங்க இதை போட்டு ரொம்ப யோசிச்சுக்க வேண்டாம்..” என்றவன் புகழேந்தியையும் இழுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்..

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் “அண்ணா என்னண்ணா.. ஏன் இப்போ கூட்டிட்டு வந்த.. நீயே போயிருக்க வேண்டியது தான..”என,

“நீ அங்க இருந்தா இன்னும் எல்லாம் பேசுவாங்க.. அதான்.. இங்கபாரு ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, என்னோட கல்யாணத்தப்போ என்கிட்ட யாரும் உனக்கு நித்யாவ கட்டிக்க சம்மதமான்னு கேட்கலை.. அதுக்காக எனக்கு அவளை பிடிக்கலைன்னு அர்த்தம் இல்லை.. எங்க வாழ்க்கை சிறப்பா இருக்கு.. ஆனா யாரும் சம்மதமான்னு கேட்கலை… அந்த வருத்தம் எனக்கு இப்பவும் இருக்கு..

உனக்கு ஒரு வாய்ப்பு உனக்கு பிடிச்ச வாழ்க்கையே நீயே முடிவு பண்ண.. அமுதாவ நினைச்சு எதும் வருந்திக்காத.. ஏன் அக்காக்கு எனக்கெல்லாம் கல்யாணம் பண்ணலையா?? அவ இப்போ தெளிவா இருக்காடா.. இதுக்கு கண்டிப்பா நான் சப்போர்ட் பண்ணுவேன்.. அதுனால நீ எதும் குழம்பாம இரு…” என,

“இளங்கோ….” என்று வேகமாய் அவனை அணைத்துக்கொண்டான் புகழேந்தி..

“டேய் டேய்.. ரொம்ப உருகாத.. இந்த விசயம் என்னவோ எனக்கு சரின்னு பட்டுச்சு அதுனால சொல்றேன்…. கிளம்பு கிளம்பு வேலை இருக்கு…” என்று இளங்கோ சொல்ல,

“என்னவோ போண்ணா.. எனக்கு இப்போ அவ்வளோ நிம்மதியா இருக்கு…” என்று புகழேந்தி சொல்லி, பின் இருவரும் கிளம்பி மெக்கானிக்கை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு செல்ல, அப்போதான் பொன்னியின் அழைப்பு அவனுக்கு வந்தது..

அவளுக்கு ஒருவிதமாய் சமாதனம் சொன்னவனுக்கோ மனதினில் பாரம் கூடிக்கொள்ள, வீட்டிற்கு வந்தாலோ ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.. அமுதா மட்டுமே அவனிடம் வந்து பேசினாள்..

மகராசியோ “என்ன கண்ணு இப்படி பண்ணிட்ட???” என்று மட்டுமே கேட்டார்.. அவ்வளவே அதற்கு மேல் யாரும் எதுவும் பேசாமல் இருக்க, அனைவரின் மௌனமுமே அவனை கொள்வதாய் இருந்தது..

இரவெல்லாம் அவனால் உறங்க முடியவில்லை…. அசோக்கிடமும், பொன்னியிடமும் பெரிதாய் பேசிவிட்டு வந்தாகிவிட்டது அவர்களும் அதனை நம்பி மங்கையிடம் பேசிவிட்டனர்.. இப்போது வீட்டினர் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று இருந்தது..

கொஞ்சம் அவகாசம் கேட்க வேண்டுமோ??? நேற்று போய் அப்படி பிடிவாதமாய் அவளிடம் சம்மதம் வாங்கிவிட்டு நாளைப் போய் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கேட்டால் அங்கே என்ன நினைக்க மாட்டார்கள் என்றெல்லாம் தோன்றி அவனது உறக்கத்தை கெடுக்க,  எழுந்து போய் வீட்டின் பின் பக்கம் இருந்த படிக்கட்டுகளில் வெகுநேரம் அமர்ந்திருந்தான்..

நேரம் எத்தனை சென்றுகொண்டு இருந்தாலும், அவனுக்கு ஒரு தெளிவு மட்டும் கிடைப்பதாய் இல்லை.. எப்போது உறங்கினானோ, மறுநாள் விடிந்தபின்னே அன்பு தான் வந்து எழுப்பினாள்..

“புகழு.. என்ன.. என்ன இப்படி இங்க படுத்திருக்க…” என்று எழுப்ப, கண்ணை கசக்கியபடி எழுந்தவன் “நைட்டு வந்து உக்காந்தேன்.. அப்படியே தூங்கிட்டேன் போல..” என்றபடி லேசாய் தள்ளாடி எழுந்து நிற்க,

“ஏன் டா?? ஏன் இங்க வந்த??” என்றாள் அவளும் கொஞ்சம் பதற்றமாய்..

“ம்ம்ச் தூக்கம் வரல.. இங்க வந்தேன்.. அதுக்கூட செய்ய கூடாதாக்கா…” என்று புகழ் கடிய,

“என்ன புகழு இப்படி பேசுற.. உன்னைய பேச எங்களுக்கு உரிமை இல்லையா என்ன..? நீ ஒருவிசயம் சொன்ன.. அதுக்கு உடனே எல்லாரும் சரின்னு சொல்லிட முடியுமா என்ன??” என்று அன்பு கேட்க,

“இல்லக்கா ஒண்ணுமில்ல விடு..” என்றவன் அறைக்கு சென்றுவிட்டான்..

அன்பரசி இப்படிதான் எதுவென்றாலும் சட்டென்று பேசிடுவாள் ஆனால் மனதில் ஒன்றும் இருக்காது.. புகழேந்தி இங்கே வந்து படுத்துக்கிடந்தது எப்படியோ இருக்க, நேராய் சென்று “மாமா தம்பி ராத்திரியெல்லாம்  பின்னாடி தூங்கிருக்கான்.. இப்போதான் எழுப்பிவிட்டேன்.. சங்கடமா இருக்கு..” என,

“அதுக்கென்ன பண்ண சொல்ற?? அவன் சொன்னது சின்ன விசயமா.. அதும் வேற யாராவதுன்னா கூட தைரியமா போய் பொண்ணு கேட்கலாம்.. இவங்க வீட்டுக்கு எந்த முகத்தை வச்சுட்டு போக சொல்ற??” என்று ஜெயபால் கடிய,

“அதுக்கில்ல மாமா.. அவன்…” என்று அன்பரசி சொல்ல வரும்போதே,

“இல்ல அன்பு எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ண கூடாது.. ஏற்கனவே அப்படி பண்ணி தான் இவ்வளோ பிரச்சனை.. இதுல அக்காவும் மாமாவும் எடுக்கிற முடிவுதான்..” என்றுவிட்டான் தெளிவாய்..

புகழேந்தி மன்னவனிடம் சென்றவன் “அப்பா…”என்றழைக்க, “புகழு.. எனக்கு நாளைக்கு வர அவகாசம் குடு… என் முடிவை சொல்ல…” என்றார் அவரும்..

“ம்ம் சரிப்பா…” என்றவன் அப்படியே கிளம்பி தோட்டத்திற்கு போனவன் தான், இரவுதான் வீடு வந்தான்.. வந்தவன் அமைதியாய் அவனது அறைக்கு சென்றுவிட, இளங்கோ தான்,

“இப்போ எதுக்கு நீ இப்படி பண்ற.. அப்பாதான் நாளைக்கு சொல்றேன் சொல்லிருக்காருல்ல.. வா வந்து சாப்பிடு…” என்று அழைத்துக்கொண்டு போனான்.. அப்போதும் யாரும் எதுவும் பேசவில்லை.

மறுநாள் காலையில் மதியம் போல் புகழேந்தி அவனது அறையில் இருந்தபடி வேலைப் பார்த்துக்கொண்டு இருக்க, “அண்ணா அப்பா கூப்பிடுறார்…” என்றுவந்து அமுதா அழைக்க, எழுந்து வந்தான்..

வீட்டினர் அனைவரும் இருக்க, சரி என்னவோ ஒரு முடிவு தெரியப்போகிறது என்றுதான் தோன்றியது அவனுக்கு..

“புகழு.. நானும் நம்ம கோவில் பெரிய மனுசங்கக்கிட்ட எல்லாம் கலந்து பேசினேன்.. நல்ல குடும்பம்.. நல்ல பொண்ணுன்னு தான் சொல்றாங்க… இருந்தாலும்….” என்று மன்னவன் இழுக்க, இவனுக்கோ இதயம் தாறுமாறாய் துடித்தது..

“நான் பேசின அளவு எல்லாம் நல்லவிதமா தான் சொல்றாங்க.. இதுக்கு மேல இங்க இருக்கவங்களும் சரின்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம்..” என்று மன்னவன் அவரின் முடிவை சொல்லிட, புகழேந்திக்கு அப்பாடி என்று இருந்தது..

பொதுவாய் மன்னவன் எடுக்கும் முடிவுதான் வீட்டில். மறுப்பாய் யாரும் எதுவும் பேசிட மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.. ஆனாலும் மகராசி எதுவும் சொல்வாரோ என்று பார்க்க,

“ஹ்ம்ம் அப்போ போய் பேசிட்டு வரலாம் சொல்றீங்களா??” என்றார் அவரும்..

“ஹ்ம்ம்” என்ற மன்னவன், “எல்லாரும் என்ன சொல்றீங்க??” என்று வீட்டில் இருந்த மற்றவர்களைப் பார்த்துக் கேட்க, அனைவருமே உங்கள் முடிவு என்றுவிட்டனர்.  

அதன்பின் என்ன அன்று மாலையே மன்னவனும் மகராசியும் பொன்னியின் வீடு சென்றனர்.. இத்தனையும் கேட்ட பொன்னியோ கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தாள்..  

புகழேந்தியோ, “என்ன கண்ணு பேசாம இருக்க??” என்றுகேட்க,

“ஹ்ம்ம் என்ன பேசன்னு தெரியலை.. எல்லாமே வேகமா நடந்திடுச்சா எதையும் யோசிக்க கூட முடியலை…” என்றவள்,

“ ஆனா எனக்கு என்னவோ மாமா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு வேற காரணம் எதுவும் இருக்குமோன்னு தோணுது…” என்றாள் அவனை பார்த்து..

“வேறயா?? வேற என்ன காரணம்.. எங்கப்பா  எப்பவுமே சொல்வார்.. உள்ளூர்ல பொண்ணு கொடுத்தாலும் எடுத்தாலும் நல்லாதுன்னு..” என்று புகழ் சொல்லும் போதே,

“என்னது என்னது.. என்ன சொன்னீங்க??” என்றாள் திரும்ப..  புகழும் “பேசிட்டு இருந்தவனை நிறுத்தி திரும்ப சொல்லுன்னா எப்படி..??” என்று கேட்க,

“ம்ம்ச் சொல்லுங்க…” என்று அவனின் கரத்தை அழுத்த, அவனும் சாதாரணமாய் திரும்ப சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டவள், “ஹ்ம்ம் சோ.. இதான் விசயமா??!!!” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்து..

“என்ன என்ன விஷயம் கண்ணு???” என்று புரியாமல் புகழ் பார்க்க, “இங்க பாருங்க இப்போ சொல்றதுதான்.. நம்ம கல்யாணத்தை சாக்கா வைச்சு அமுதா அசோக் கல்யாணம் பத்தி யாராவது பேசினாங்க.. நான் என்ன செய்வேன்னு தெரியாது..” என்றாள் கோபமாய் விரல்களை நீட்டி..

இப்படியும் இருக்குமோ என்று பொன்னிக்கு மனதில் தோன்றியது.. அவளின் திருமணத்தை சாக்காய் வைத்து, அசோக்கிற்கும் அமுதாவிற்கும் சம்பந்தம் பேசுவாரோ என்று தோன்றிவிட்டது.. ஆனால் புகழேந்தி பொன்னி இப்படி சொன்ன பிறகுதான் இதற்கு இப்படியும் ஒரு விளக்கமா என்று தோன்ற,

“ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது…” என்றான் வேகமாய்..

“இருக்காது இல்லை.. இருக்க கூடாது அவ்வளோதான்…” என்றாள் இவளும் பிடிவாதமாய்..  

      

Advertisement