Advertisement

காதல் சிந்தும் தூறல் – 3

மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள் தாங்கிக்கொள்வர், ஆனால் பேசாது இருந்தால் யாரினால் தான் தாங்க முடியும்..

அதுவும் வீட்டில் மூவரே என்று இருக்கும்போது. மஞ்சுளாவின் இந்த மௌனம் அதிரூபன் மற்றும் நிவினை ரொம்பவுமே பாதிக்கச் செய்தது..

“ம்மா ம்மா…” என்று இருவரும் பின்னேயே சுற்ற, அவரோ காதே கேளாதது போல் அல்லாடிக்கொண்டு இருந்தார்.  

“எல்லாம் உன்னால தான்..” என்று நிவின் அதிரூபனை முறைக்க,

“டேய் நான் என்னடா பண்ணேன்..” என்று அவனும் அம்மா பின்னாடி சுற்ற,

“பின்ன பாக்குற எல்லா பொண்ணையும் வேணாம் வேணாம் சொன்னா யாருக்குத்தான் கோவம் வராது.. இப்போ உன்னால அம்மா என்கிட்டவும் பேசலை…” என்று நிவின் முகத்தினை தூக்கினான்.

“டேய் டேய்.. அம்மா இப்போவே உன்னையும் ட்ரைன் பண்ணுதுடா..” என்று அதிரூபன் சொல்லவும்,

‘இஸ் இட்….’ என்று நிவின் மஞ்சுளாவையும் அதிரூபனையும் பார்த்தவன், “ம்மா நான்லாம் உனக்கு எந்த கஷ்டமும் வைக்கவே மாட்டேன்.. இப்போக்கூட நீ பொண்ணு பாரு நான் சரின்னு சொல்வேன்…” என்று நிற்க,

‘டேய் டேய் நல்லா வருவடா…’ என்றுதான் அதிரூபன் பார்த்தான்..

பொதுவாய் அதிரூபனுமே யாருடனும் அதிகம் பேசிட மாட்டான் தான். அது அடுத்தவரிடம். இவர்கள் மூவரும் மட்டும் என்றால் இப்படித்தான். மஞ்சுளாவிற்கு இதெல்லாமே தெரியும். கணவர் இறந்தபின்பு பிள்ளைகளுக்கு தான் மட்டுமே தான் என்ற எண்ணம் அவருக்கு நிரம்பவே இருந்தது.

அதனாலேயே என்னவோ ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார். எப்போதுமே பிள்ளைகள் விசயத்தில் சரியாய் இருக்கவேண்டும் என்பது அவரின் கருத்து.

அதிரூபன் வேலையை விடப்போகிறேன் என்றதுமே பெரும் அதிர்ச்சி தான். ஆனாலும் அவன் சொன்ன விஷயங்கள் மனதிற்கு நியாயமாய் பட, அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் தான் கடை வைக்க சம்மதித்தார்.

ஆரம்பத்தில் சில பல தடுமாற்றங்கள் இருந்தாலும், அவன் சொன்னதுபோலவே கொஞ்ச நாளில் தொழிலில் ஒரு நிலையான நிலையை அடைய, அவருக்கு நிம்மதியானது.

நிவினுக்கு இப்போது தான் இருபத்தி நாலு. நல்ல வேலையிலும் இருக்கிறான் ஆக, அவனைப் பற்றிய எந்த கவலையும் இப்போதில்லை.. அதிரூபன் முப்பதை நெருங்க, ‘இன்னும் கல்யாணம் பண்ணலையா??!!’ என்ற உறவுகளின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அதிலும் இன்ற ஓராண்டில் நிறைய. அவருக்கும் மனதினில் எண்ணம் இருந்ததுதான். மகனுக்கு ஒரு நல்லது செய்திட வேண்டும் என்று. ஆக பெண் தேடும் படலம் தொடங்கியது அதிரூபனோ இது வரைக்கும் ஒரு பெண்ணை கூட சரி என்று சொல்லாததும் அவருக்கு கஷ்டமாய் தான் இருந்தது..

“விடு மஞ்சுளா.. அவனுக்கு பிடிச்சமாதிரி பார்த்து கட்டி வைக்கிறது தான் நல்லது..” என்று மஞ்சுளாவின் அண்ணன், சுப்ரமணியும் சொல்லிட, அதற்கும் சரி என்றுதான் பொறுமையாய் இருந்தார்..

ஆனால் இப்போது அவரால் அதனை கடைபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவர் தெரிவு செய்திருந்த இரண்டு பெண்களுமே, படிப்பு, குடும்பம், வேலை, அழகு என்று எதிலும் குறை சொல்லிடவே முடியாது. ஜாதகம் கூட இரண்டுமே இவனதோடு பொருந்திப் போக, அதன்பொருட்டே நிவினிடம் அன்று கடைக்கே கொடுத்து அனுப்பினார்.   

ஆனால் அதிரூபனோ ஒன்றுமே சொல்லாது திரும்ப அதனை நிவினிடம் கொடுத்துவிட, வீட்டிற்கு வந்தவனோ “அவன் ஒண்ணுமே சொல்லலை..” என்றுவிட, இவருக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.

வீட்டிற்கு போனதுமே ‘ஏன்டா ஒண்ணுமே சொல்லாம இருக்க?? இந்த பொண்ணுங்களுக்கு என்ன குறைச்சல்…’ என்றுதான் சண்டை போடுவார் என்று அதிரூபன் அதே எண்ணத்தில் வர, அவரோ சண்டை என்ன சண்டை, ஒரு வார்த்தைக் கூட இல்லை என்று அமைதியாய் இருந்துகொண்டார்.

வந்தவனும் அப்போதைக்கு இதை பெரிதாய் எடுக்காது அமைதியாய் உண்டுவிட்டு உறங்கச் சென்றிட, மறுநாளும் இதுவே தொடரவும் தான் அண்ணனும் தம்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு “ம்மா ம்மா…” என்று பின்னே சுற்ற, அவரோ அதற்கு மறுநாள் வரைக்குமே அசரவில்லை. இரண்டு நாட்களும் இப்படியே செல்லவும், அடுத்து இவர்களும் விடுவதாகும் இல்லை..

அன்று வார விடுமுறை என்றதால், அதிரூபனும் நிவினும் வீட்டினில் தான் இருந்தனர்.. இதற்குத்தானே மஞ்சுளாவும் ஆசைப்பட்டது. அதிரூபனிடம் மட்டும் பேசாதிருந்து, நிவினோடு பேசினால், இளையவன் பேசி பேசியே தன்னை சமாளித்து அதிரூபனோடு பேச வைப்பான் என்று தெரியும். ஆகையாலேயே தான் அவனோடும் பேச்சை நிறுத்த, அவர் எண்ணியது போலவே நிவினும் அதிரூபனை ‘எல்லாம் உன்னால தான்..’ என்று சொல்ல,

‘அப்படி வாங்கடா வழிக்கு…’ என்றெண்ணியவர், பிகு செய்வதுபோல் செய்து “என்ன? என்ன வேணும் சும்மா ஏன் பின்னாடி வர்றீங்க??” என்று கறாராக கேட்டார்..

“ம்மா பேசாம ஏன் இருக்க?? இருக்கிறது நம்ம மூணு பேருதான்…” என்று அதிரூபன் சொல்ல,

அவனை ஒரு பார்வை பார்த்த மஞ்சுளா “அது புரிஞ்சா சரி..” என்றார் வெடுக்கென்று.

அவனுக்கும் தெரியும், மஞ்சுளாவின் கோபம் எதற்கென்று, ஆனால் அவனுக்கு இது பிடிக்காத விஷயம், பேசாமல் இருப்பது. கோபமா திட்டலாம் சண்டை போடலாம் அதைவிட்டு என்ன இப்படி முகம் திருப்பவது என்ற எண்ணமே அவனுக்கு எப்போதும்..

அம்மாவிடம் என்றுமட்டும் இல்லை, யாரிடமும் அப்படித்தான். கல்லூரியில் கூட நண்பர்களுக்குள் ஏதாவது என்றால் சண்டை போடுவான் எல்லாம் செய்வான் ஆனால் யாரோடும் பேசாது இருந்ததில்லை.. வீட்டினில் நிவினோடும் அப்படித்தான்.

“இப்போ நான் என்னம்மா புரியாம இருக்கேன்..” என்றவன் நிவினைப் பார்க்க, அவனோ நீங்கள் என்னவோ செய்யுங்கள் என்று இருவரையும் வேடிக்கை மட்டும் பார்த்தான்..

“அவனை ஏன்டா பாக்குற..?? நீ பண்றது உனக்கே நல்லாருக்கா??”

“அப்படி என்னம்மா பண்ணிட்டேன்..??”

“என்ன பண்ணல.. சரி இதுக்கு முன்னாடி பார்த்த பொண்ணுங்கல வேணாம் சொன்ன, நானும் சரின்னு வேற வேற பார்த்தேன்.. இப்போ செலெக்ட் பண்ணிருக்க ரெண்டு பொண்ணுக்கும் என்னடா குறைச்சல்.. அதுல ஒண்ணு உனக்கு ஓகே சொல்ல முடியாதா???” என்றவரை,

‘இதெல்லாம் உனக்கே நியாயமா…’ என்றுதான் பார்த்தான் அதிரூபன்..

“என்னடா பாக்குற… இந்த ரெண்டு பொண்ணுல ஏதாவது ஒரு பொண்ணுக்கு சரின்னு சொல்ற.. வேணும்னா நாளைக்கு வர டைம் எடுத்துக்கோ..” என்றவரை இப்போது அதிரூபன் முறைக்க,

“இங்க பார் நாங்களா பேசி முடிவு பண்ணிட்டு ஒன்னும் உன்கிட்ட சொல்லலை.. முடிவு உன்னைத்தான் எடுக்க சொல்றேன்.. ஆனா அது நல்லதா இருக்கனும்..” என்றவர் நிவினையும் சேர்த்து முறைத்துவிட்டு செல்ல,

‘சுத்தம்…!!!!’ என்று நிவின் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்..

அதிரூபன் ஒன்றும் பேசாது அமைதியாகவே இருக்க, கொஞ்ச நேரம் பொறுத்தவன், “ஏண்ணா வேணாம் சொல்ற?? உனக்கு நிஜமாவே பிடிக்கலையா???” என்றான்..

“ஏன்டா நீயும் லூசுத்தனமா பேசுற…??”

“அப்போ அம்மா பேசினது லூசுத்தனம்னு சொல்ற??” என்று நிவின் சொன்னதுமே “டேய் டேய்..” என்று பல்லைக் கடித்தவன்,

“கொஞ்சமாது புரிஞ்சுக்க பாருடா.. ரெண்டு பொண்ணுங்க போட்டோ காட்டி எது பிடிச்சிருக்குன்னு கேட்டா என்னடா அர்த்தம்?? இதென்ன சாதாரண விசயமா?? கல்யாணம்டா.. லைப் லாங் வரபோற ஒருத்திய போட்டோ பார்த்து தான் சொல்ல முடியுமா பிடிச்சிருக்குன்னு..

அம்மாதான் அது இதுன்னு சொல்லுதுன்னா உனக்குமா புரியலை.. நாளைக்கு உனக்கும் இப்படிதான் செய்வாங்க.. அப்போவாது புரியும் உனக்கு என்னோட நிலைமை..” என்று நீளமாய் பேசியவனை பாவமாய் பார்த்தான் நிவின்..

அவனுக்குமே வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அம்மாவிடம் பேசினால் அவர் சொல்வது சரியென்று இருந்தது. அண்ணனிடம் பேசினால் அவன் சொல்வதும் சரியென்று இருக்க, அவன் பாவமா இல்லை எதிரில் இருப்பவன் பாவமா என்று அவனுக்குத் தெரியவில்லை..

“வாய் திறந்து பேசுடா…” என்று அதிரூபன் சொல்லவும்,

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா.. நிஜமா.. அம்மா சொன்னதுபோல யோசி.. யோசிச்சு முடிவு சொல்லு..” என்று அவனும் சொல்ல,

‘உன்கிட்ட பேசினேன் பாரு..’ என்று முறைத்துவிட்டு எழுந்து கடைக்கு வந்துவிட்டான் அதிரூபன்.

மனது ஒருவித எரிச்சலுக்கு சென்றுவிட்டது. இத்தனை நாள் சொன்னபோது எல்லாம் சரி என்று விட்டவர்கள் இன்று  ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கடுப்பாய் போனது. இதில் யோசித்து நல்ல முடிவாய் வேறு சொல்லவேண்டுமாம்.

இதற்கு ஏன் யோசிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது அவனுக்கு. கடைக்கு வந்தவனுக்கு வேறு எதிலும் மனம் செல்லாது இருக்க, கொஞ்சம் நேரம் அந்த வாரத்தின் கணக்கு வழக்குகள் எல்லாம் பார்த்தவன், பின்னே அடுத்த வார ஆடர்களின் நிலைகளை ஆராய பொழுது போனது அவனுக்கு அப்படியே..

என்னதான் வேலையில் கவனம் செலுத்தினாலும் அடிமனதில் வீட்டில் நடந்தவையே ஓடிக்கொண்டு இருக்க, அவ்வப்போது அவனின் பார்வையும் கணினியில் பதிந்து பதிந்து மீண்டுகொண்டு இருந்தது. கீழிருக்கும் இரண்டு தளங்களின் காட்சிகளும் அவனின் எதிரே இருந்த கணினி திரையில் நகர்ந்துகொண்டு இருக்க, திடீரென்று அவனின் பார்வை கூர்மையானது..

கண்மணிதான்.. கண்ணனோடு வந்திருந்தாள்..

இன்று அவனுக்கு விடுமுறை என்று வீட்டிலிருக்க, இவளும் போரடிக்கிறது என்று சொல்ல, அண்ணனும் தங்கையும் வெளியே வந்திருந்தனர்.. போதாதகுறைக்கு சடகோபனும் நண்பர் ஒருவரின் வீட்டு விசேசத்திற்கு சென்றிருக்க, இருவருமே ஹாயாக கிளம்பி வந்திருந்தனர்..

“வருசா வருஷம் நீயும் பர்த்டேக்கு ஷர்ட் வாங்கித்தான் கொடுக்குற.. ஆனா அப்பா வாங்கிக் கொடுக்கிறதை தான் போடணும்னு சொல்லிடுற..” என்றபடிதான் கண்ணனும் கிளம்பி வந்திருந்தான்..

“அப்பா வாங்கிக் கொடுக்கிறதை போட்டா அவருக்கு சாந்தோம்.. நான் வாங்கிக் கொடுத்தாலே எனக்கும் உனக்கும் சந்தோசம்…” என்று கண்மணி எப்போதும் சொல்லும் வசனத்தை சொல்ல,

“ஹ்ம்ம்… அடுத்த வருசமும் இதே சொல்லு…” என்று சிரித்தான் கண்ணன்.

இப்படியாக அண்ணன் தங்கை இருவரும் அலங்காருக்கு வந்திருக்க, அன்று வார விடுமுறை என்பதால் கடையில் ஆடை பிரிவு இரு தளங்களிலும் சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது..

“நானும் ரொம்ப நாள் இங்க வரணும்னு நினைச்சேன் கண்ஸ்..” என்றபடி கண்ணன் அவனுக்காக சட்டைகளை பார்வையிட, இவர்கள் இருவரையும் கணினி வழியாய் அதிரூபன் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்..

இருவரையும் பார்த்ததும் ‘யாருடா இவன்…’ என்று தோன்றிய அடுத்த நொடி, அடுத்தநொடி அண்ணனாய் இருக்கும் என்று எண்ணிக்கொன்டாது. அதுதான் அவர்களின் முக ஜாடையிலேயே தெரிந்ததே..

ஆனால் அதிரூபன் பார்வை எல்லாம் கண்மணி முகத்தினிலேயே இருக்க, அவனுக்கு அந்தநொடி ஒன்று மட்டுமே தோன்றியது..

‘எப்படி ஸ்மைல் பண்ணிட்டே இருக்கா…’ என்ற எண்ணம் தோன்றியதுமே இன்னமும் அவளின்மீதே பார்வை நிலைபெற, பார்த்துகொண்டு இருந்த வேலையை  விட்டுவிட்டு அப்படியே இறங்கி அவர்கள் இருந்த தளம் சென்றான்.

எதார்ச்சையாய் வருவதுபோல் அங்கே செல்ல, அங்கே வேலையில் இருந்தவர்களின் முகம் இப்போது இன்னமும் வேலை செய்வதாய் பாவனை காட்டியது.

கண்ணன் சட்டைகளை பார்த்துகொண்டு இருக்க, கண்மணி அவன் பார்ப்பதை பார்த்துகொண்டு இருக்க, இவர்களையே பார்த்தபடி வந்தவனோ, இவர்களை கவனிக்காதவாறு தாண்டி சென்று அங்கே இருந்த வேலையாளிடம் என்னவோ கேட்பது போல் நின்றான்.. 

அதிரூபன் இவர்களை கடந்து செல்லவுமே கண்மணி அவனை கவனித்துவிட, திடீரென்று தெரிந்தவர்களை பார்த்தால் முகத்தினில் ஒரு பாவனை வருமே அவதுவே அவளின் முகத்தில்..

ஆனால் அது சில வினாடிகளே.. அவன் வேலையாய் இருப்பதுபோல் இருக்கவும், இவளும் வந்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.. கடை ஆளுடன் பேசுவதுபோல் பாவனை செய்தவன், எதிரிலிருந்த கண்ணாடி வழிய பின்னே இருக்கும் கண்மணியைத் தான் பார்த்தான்.. என்ன செய்கிறாள் என்று..

அவளது முகத்தினில் தோன்றிய மறைந்த அந்த சிறு மாற்றம் அவனின் விழிகளில் தவறாமல் விட, ‘இப்போ என்ன செய்யலாம்… போய் பேசலாமா….’ என்று கேள்வி எழ,

‘எத்தனையோ பேர் வர்றாங்க எல்லார்டையும் போய் பேசுறியா???’ என்று கேள்வி கேட்டது யாராய் இருக்கும் அவனின் மனசாட்சியே.

‘ஹா.. அது.. அது.. இந்த பொண்ணு நிவின் பிரண்ட்…’ என்று அவனே ஒரு நொண்டி சாக்கு சொல்ல,

‘அடேங்கப்பா அவனுக்கே இப்படி ஒரு பொண்ணு கூட படிச்சது ரெண்டுநாள் முன்னாடித்தான் தெரியும்.. இதுல பிரண்டாம்…’ என்று அவனையே அவன் மனசாட்சி கலாய்த்துவிட்டு செல்ல, நொடிக்கொரு முறை கண்மணியின் பார்வையும் இவனைத் தான் தொட்டு மீண்டது..

ஒருநிலையில் கண்ணாடி வழியே அவனின் பார்வையும் அவளின் பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள, இருவரின் முகத்திலும் அடுத்த நொடி ஒரு திணறலான புன்னகை..

கண்மணி ‘சிரிப்போமா வேணாமா..’  என்ற யோசனையோடு சிரிக்க, அவனோ அடுத்து  ‘பேசணுமா வேணாமா…’ என்ற எண்ணத்தில் சிரித்தான்..

“கண்ஸ்.. இந்த ஷர்ட் பாரு..” என்று கண்ணன் அவளை அழைத்து ஒரு சட்டையை காட்ட.

“ஆ.. என்னண்ணா…” என்று  திரும்பியவள், அவன் கரத்தினில் இருந்த சட்டையை பார்த்து,

“ம்ம் இது உனக்கு பிடிச்சிருக்கா??” என்றாள் திரும்பவும் அதிரூபனை பார்த்துவிட்டு..

“ஹ்ம்ம் எனக்கு பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகேவா..” என்று கண்ணன் கேட்கையில் அதிரூபன் இவர்களை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.

“எனக்கும் ஓகே தான்..” என்றவள் “எதுக்கும் ட்ரெயல் பண்ணி பாரேன்..” என்றதும், கண்ணன் சுற்றி முற்றி பார்த்தவன்,

“எக்ஸ்கியூஸ் மீ சார்.. ட்ரெயல் ரூம் எங்க இருக்கு…” என்று அதிரூபனிடமே கேட்க,

“லெப்ட் சைட்..” என்று வழி காட்டியவன், கண்மணியை பார்த்து சிநேகமாய் ஒரு முறுவல் சிந்த, இருவரையும் பார்த்த கண்ணன், கேள்வியாய் கண்மணியின் முகம் பார்த்தான்.

அண்ணனின் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்தவள் “என்.. என்னோட க்ளாஸ்மேட் நிவினோட ப்ரதர்.. இவங்க ஷாப் தான் இது…” என்று மெதுவாய் சொல்ல,

“ஓ..!!!” என்றவன் “ஹலோ…” என்று அதிரூபனிடம் கரம்குலுக்க, அவனும் கரம்குலுக்க,

“ட்ரெயல் பண்ணிட்டு வந்திடுறேன்…” என்று அடுத்து கண்ணன் சொல்லிவிட்டு செல்ல, அவன் சென்ற அடுத்த நொடி, கண்மணி அதிரூபனிடம் திரும்பியவள்,

“வாட்ச் பத்தி எதுவும் சொல்லிடாதீங்க..” என்றாள் வேகமாய். 

கண்மணி வேகமாய் தான் சொன்னாளே தவிர சத்தமாக சொல்லிடவில்லை. கடையில் ஆட்கள் இருந்தமையால், அதிரூபனுக்கு அவளருகே இருந்தாலும் அவள் சொன்னது தெளிவாக கேட்கவுமில்லை.. பார்வையை கூர்மையாகி அவள் முகத்தில் பதித்தவன்,

“ம்ம்.. என்ன சொன்னீங்க??” என்று கேட்க,

“அது.. வாட்ச்…” என்று அவள் சொல்வதற்குள் அவனை “சார்…” என்று கடை ஆள் ஒருவர் அழைக்க, “ஒன் செக்கன்ட்..” என்றுவிட்டு அங்கே சென்றான்.

ஆனால் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக, அதிரூபன் திரும்ப வந்து “என்ன சொன்னீங்க…” என்று திரும்ப கேட்கும்போதே,

“வாட்ச்.. வாட்ச் பத்தி அண்ணா முன்னாடி சொல்லிடவேணாம்..” என்று தலையை மறுப்பாய் அசைத்து கண்மணி சொல்ல, அதிரூபனின் மொத்த பார்வையும் மென்மையாய் அசைந்து அதனினும் மெல்லமாய் சத்தம் எழுப்பிய அவளின் இதழின் மீது தழுவிப் போக,

அவனையும் அறியாமலேயே “ம்ம்ஹும் சொல்லமாட்டேன்…” என்று அவளைப் போலவே மெதுவாய் சொல்ல,

இவர்கள் இருவரும் இப்படி ரகசியம் பேசுவது சட்டையை போட்டு பார்த்துவிட்டு வந்த கண்ணனின் கண்களில் விழுந்தது..

அவனுக்கு கண்மணி பற்றி நன்கு தெரியும்.. தேவையில்லாது வீட்டினரிடம் கூட ஜாஸ்தி பேசிடமாட்டாள்.. அப்படியே பேசினாலும் கேட்ட கேள்விக்கு பதில் அதுமட்டுமே அவளிடம் வரும்.. ஆனால் இங்கே வந்ததில் இருந்து அவளின் பார்வை அவ்வப்போது அவனிடம் சென்று வந்ததை அவனும் தான் பார்த்தான்.

அதன்பின் அவளே நிவினின் அண்ணா என்று அறிமுகம் செய்து வைக்க அவனுக்கு பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து நின்று எதுவோ ரகசியம் பேசுவதாய் இருக்க, அது சாதாரண பேச்சாக இல்லாது சற்றே வித்தியாசமாய் பட்டது.

அவனும் ஒருத்தியை காதலிப்பவன் தானே.. சில விசயங்களில் இருக்கும் வேறுபாடுகள் புரியாதா என்ன??     

ஆனால் இதில் போய் என்ன பேசினீர்கள் என்று நேரடியாய் கேட்டிட முடியாதே. ஒருவன் புதியவன். இவளோ உடன்பிறந்தவள்.. யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. ஆக, ஒன்றையும் கவனிக்காதவன் போல வந்தவன்,

“இது நல்லாருக்கு..” என்றுசொல்ல,

“அப்போ இதுவே எடுத்துக்கோண்ணா…” என்றவள் சிரிக்க, கண்ணன் அவளின் முகத்தினையே பார்த்துகொண்டு இருக்க,

“என்னண்ணா.. பிடிச்சிருந்தா எடுத்துக்கோ பில் போட சொல்லலாம்..” என்றாள் சந்தோசமாய்..

எப்போதுமே அவளின் முகத்தினில் அவன் புது ஷர்ட் வாங்குகையில் இருக்கும் மகிழ்வு தான் இன்றும். ஆனால் என்னவோ ஒன்று அதிகமாய் இருப்பதாய் பட, தன்னப்போல் கண்ணனின் பார்வை அதிரூபனை பார்த்தது.

அவனோ வேறு யாரோ ஒருவரிடம் அவர் கையில் வைத்திருந்த சட்டையை காட்டி என்னவோ சொல்லிக்கொண்டு இருந்தான்.. கண்ணனுக்கு என்ன தோன்றியதோ தானாகவே ‘ம்ம்ம்…’ என்று மேலும் கீழுமாய் தலையை ஆட்டியவன்,

“ஓகே பில் போடலாம்..” என்று பில் போடும் இடம் போக, கண்மணியும் அவனோடு சென்றாள்..

அதிரூபனும் இவர்களோடு நின்றிருப்பான் தான். ஆனால் கடைக்கு வந்தவர் ஒருவர் அழைத்து எதோ சந்தேகம் கேட்க அவரிடம் பேசவென்று சென்றுவிட்டான். இத்தனை நேரம் உடன் நின்றவனிடம் போகையில் சொல்லிவிட்டு போவது தான் முறை என்று தோன்ற,

“ண்ணா.. அ.. அவர்க்கிட்ட சொல்.. சொல்லிட்டு போகலாம்…” என்று கண்மணி, கண்ணனை பார்த்தபடி பின்னே அதிரூபனை நோக்கி கை நீட்ட, கண்ணனுக்கோ கண்கள் சுருங்கியது யோசனையில்.

திடீரென்று யாரோ ஒருவர் நம் வாழ்வில் வருவர். திடீரென்று நமக்கு நட்பாகிவிடுவர்.. திடீரென்று நமக்கு உறவும் கூட ஆகிவிடுவார்.. திடீரென்று நம் வாழ்வில் ஓரங்கமாகவே மாறிடுவார்.. அப்படியான அந்த திடீர் யாரோ ஒருவர்தான் கண்மணிக்கு அதிரூபனும்.. அதிரூபனுக்கு கண்மணியும் போல.                    

    

 

Advertisement