Advertisement

                                       தூறல் – 26

“ம்மா என்னம்மா???” என்று அதிரூபன் புரியாது கேட்க,

“அப்போ, அவங்க பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொல்லாட்டி நீ இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லிருக்கவே மாட்ட அப்படிதானே ரூபன்???” என்ற மஞ்சுளாவின் கிடுக்கிப் பிடி பார்வை, அதிரூபனை கொஞ்சம் திகைக்க வைத்தது.

‘ஆகா அம்மா சரியா பாயிண்டை பிடிக்குதே…’ என்று பார்த்தவன்,

“அ.. அதும்மா… உன்கிட்ட சொல்லாம இருப்பேனா???” என்று சமாளிக்கப் பார்த்தான்.

“நீயா??? ம்ம்.. ஆனாலும் உன்ன என்னவோன்னு நினைச்சேன் டா… இவ்வளோ அமுக்கலா இருப்பன்னு நினைக்கல..” என்ற மஞ்சுளாவின் குரலில் மறைக்க முயன்றும் அவரின் ஆற்றாமை வெளிப்பட,

“ம்மா ப்ளீஸ் ம்மா.. நான் உன்கிட்ட எதையுமே மறைக்கணும்னு நினைக்கல.. அப்படியே ஒரு சிலது சொல்லாம விடறேன்னா அது உனக்கு தேவையில்லாத டென்சன் கொடுக்கக் கூடாதுன்னு தான். வேறெதுவும் இல்லைம்மா..” என்றான் அவனும் உள்ளத்தில் இருந்து.

மகனின் முகத்தினை ஆழ்ந்து பார்த்த மஞ்சுளாவிற்கு பழையது எல்லாம் நினைவு வந்தது. கணவர் இறந்த சமயத்தில் அதிரூபனின் ஆதரவும் தைரியமும் மட்டுமில்லை என்றால் நிச்சயம் மஞ்சுளா இத்தனை தேறியிருக்க மாட்டார்..

நிவின் கூட வெகுவாய் கலங்கிப் போனான். ஆனால் மனதில் இருக்கும் வருத்தம் வேதனை இதெல்லாம் துளியும் முகத்தினில் காட்டாது, அன்றைய சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு குடும்பப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டான் அதிரூபன்.

அதெல்லாம் மஞ்சுளாவின் மனதில் எப்போதுமே இருக்கும். அதனால் தானோ என்னவோ அவருக்கு அதிரூபன் என்ன செய்தாலும் ஓரளவிற்கு மேல் அவனை ஒன்றும் சொல்ல முடிவதில்லை. அதையும்விட என் மகன் தவறாய் எதுவும் செய்திட மாட்டான் என்ற நம்பிக்கையும் கூட. இப்போதும் அதை நினைக்க, 

அதிரூபனோ “ம்மா நான் எப்பவுமே உன்னோட பையன் தான் ம்மா..” என்றான் அவரின் கரங்களைப் பிடித்து. 

அவனின் தொடுகையில் சட்டென்று தன்னை மீட்ட மஞ்சுளாவோ,  “டேய் டேய் சும்மா சால்ஜாப்பு எல்லாம் சொல்லாத… போ போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து வீடு கிளீன் பண்ணு..” என்று அசால்ட்டாய் சொல்ல,

“ம்மா??!!!!” என்று அதிர்ந்து பார்த்தான்.

வீடு சுத்தம் செய்வது எப்போதுமே நிவினின் வேலை. வார விடுமுறை நாட்களில் அவன்தான் மஞ்சுளாவிற்கு செய்துகொடுப்பான். அதிரூபன் மற்ற வேலைகள் எல்லாம் செய்துகொடுப்பான். ஆனால் இப்போதோ மஞ்சுளா இவனை வீடு சுத்தம் செய்ய சொல்ல, அவனுக்கு அதிர்ச்சியாய் தான் போனது..

“என்னடா?? போ போ பண்ணு.. உன் வருங்கால மாமனார் மாமியார் தானே வர்றாங்க.. செய்றதுல தப்பில்ல..” என்று அவன் முதுகை பிடித்து தள்ள,

“ம்மா இதெல்லாம் சரியே இல்லம்மா…” என்று புலம்பியபடியே போனான் அதிரூபன்.

“ஒழுங்கா செய்யணும்.. சும்மா மெப்பனைக்கு செய்ய கூடாது ரூபன்…” என்று அம்மாவின் குரல் பின்னோடு வர,

“ம்மா அடுத்த வாரம் இருந்து வீட்டு வேலைக்கு ஒரு ஆள் போட்டுக்கலாம்..” என்றான் உள்ளிருந்தே..

“ஓஹோ…!!!! பொண்டாட்டி வரப்போறான்னு இப்போவே எல்லாம் செஞ்சு வைக்கிறியா…” என்று மஞ்சுளா அதற்கும் பதில் கொடுக்க,

‘அம்மா இன்னிக்கு புல் பார்ம்ல இருக்கு போல.. எதுவும் பேசி வாங்கிக் கட்டிக்காத ரூபன்…’ என்று தனக்கு தானே பத்திரம் சொன்னவன், நிவினுக்கு அழைத்தான்.

“டேய் லீவ் போட்டு வர முடியுமா??” என்று.

“என்ன ப்ரோ.. மாமனார் என்ன சொல்றார்…” என்று அவன் பங்கிற்கு ஆரம்பிக்க,

“பத்திரிக்கை வைக்க வர்றாங்கடா..” என்றவன்,  “அம்மா என்னை வீடு கிளீன் பண்ண சொல்லுதுடா..” என்றான் கடுப்பாய்..

“ஹா ஹா.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. குடும்பஸ்தான் ஆகப்போற இதெல்லாம் பழகிக்கணும்டா அண்ணா…” என,

‘இவனுக்கு ஏன்டா  அழைத்தோம்…’ என்றுதான் ஆனது அதிரூபனுக்கு..

“போடா டேய் எரும..” என்று அவனை திட்டிவிட்டு வைத்தவன், “ம்மா அவங்களை எப்போ வர சொல்லட்டும்..” என்றான்.

“மாமாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்டா.. அவங்க வர்றப்போ மாமா அத்தை இருந்தா நல்லாருக்கும்..” என்ற மஞ்சுளா, சுப்பிரமணிக்கு அழைத்து சொல்ல,

“அப்படியா ரொம்ப சந்தோசம்..” என்றவர் மதியத்திற்கு மேல் வருவதாய் சொல்ல, அதை மஞ்சுளா அதிரூபனிடம் சொல்ல,

“ஏம்மா.. அங்க இருந்து கிளம்பினா பத்து நிமிஷம் ஆகுமா.. இப்போ வந்தா என்னவாம்??” என்றான் வீடு துடைத்தபடி.

“ஏன் உனக்கென்ன அவ்வளோ அவசரம்???” என்று மஞ்சுளா பார்க்க,

“அவசரமா.. இ.. இல்லையே.. எனக்கென்ன அவசரம்..” என்று அஷ்ட கோணலாய் அதிரூபன் இளிக்க,

“கேவலமா இருக்குடா.. சாயங்காலம் அவங்களை வர சொல்லி சொல்லிடு.. உன் போனுக்காக காத்திட்டு இருக்கப் போறாங்க..” என்றபடி மஞ்சுளா அவரின் வேலையைப் பார்க்க, ‘ஓ.. அதுவேற இருக்கோ..’ என்று நினைத்தவன், சடகோபனுக்குத் தான் அழைத்தான்.

அவரே மனதினை மாற்றிக்கொண்டார் தான். மாலை செல்வோம் என்று சியாமளாவிடம் சொல்லிக்கொண்டு இருக்க சரியாய் அதிரூபனும் அழைத்து அதையே சொல்ல,

“ம்ம் சரி.. சாயந்திரமே வர்றோம்..” என,

“தேங்க்ஸ்… அ.. அது சார் நான் இன்னொரு விஷயம் கேட்கலாமா??” என்றான் அதிரூபன் தயங்கி..

“ம்ம்..”

“நீங்க.. நீங்க கண்மணிக்கிட்ட பேசிட்டீங்களா???”

அதிரூபன் இதை கேட்கவேண்டும் என்று கேட்கவில்லை, ஆனாலும் அந்த நேரத்தில் அது தோன்றிட மனதில் வைத்து கொள்ளாமல் கேட்டுவிட்டான். இவன் இதைக் கேட்பான் என்று சடகோபன் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ, கொஞ்சம் திடுக்கிட்டவர்,

“இல்லை..” என,

“பேசிடுங்களேன் சார்.. என்கிட்டவே பேசுறீங்க.. நியாயமா பார்த்தா என்மேல தான் உங்களுக்கு கோபம் வரணும்.. கண்மணி என்ன செய்வா ?? உங்களோட பேசினதை சொன்னதுமே, கண்மணி முதல்ல கேட்டது அப்போ என்கிட்டே அப்பா பேசிடுவாரான்னு தான்…” என, சடகோபனுக்கு மனது கொஞ்சம் பெருமையாய் உணர்ந்தது..

“ஹ.. ஹலோ…” என்று அதிரூபன் திரும்ப சொல்ல,

“நா… நான் பேசிக்கிறேன்…” என்றவர் வைத்துவிட்டார்..

“என்னங்க… யாரு போன்ல?” என்று சியாமளா கேட்டதற்கு, “அந்த தம்பி தான்..” என்றவர்.

பின் “நான் கண்மணிக்கிட்ட பேசணுமாம்.. சிபாரிசு..” என்று சொல்லும்போது மெல்லிசாய் அவர் முகத்தினில் புன்னகை தோன்றி மறைந்தது போலிருந்தது சியாமளாவிற்கு.

‘மனசுக்குள்ள எல்லாம் இருக்கு.. ஆனா இப்படி எப்படிதான் இருக்காரோ…’ என்று தோன்றினாலும் அதை கேட்கவில்லை, மாறாய் “எப்போ போறது??” என்று கேட்க,

“சாயங்காலம்..” என்றவர், அடுத்து வேறு வேலையாய் வெளியே கிளம்பிவிட, கண்ணனும் அன்றிலிருந்து விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்துவிட்டான்.

கண்மணியோ அண்ணனை அழைத்து மீண்டும் அனைத்தையும் சொல்ல, “ஹ்ம்ம் இப்போதான் உன் முகத்துல சந்தோசமே தெரியுது..” என்றவனுக்கும் சந்தோசமே..

வருணை, கண்மணியும் அதிரூபனும் பார்க்கில் சந்தித்தது கண்ணனுக்கு மட்டுமே தெரியும். வீட்டினில் சொல்லவேண்டாம் என்று கண்மணியே சொல்லிவிட்டாள். அது வேண்டாத பேச்சுக்களை எல்லாம் கொடுக்கும் என்று.

அதுபோல அந்த பவித்ரா விஷயம் வீட்டினில் எப்போதுமே யாருக்குமே தெரியக் கூடாது என்பதில் அதிரூபனும் உறுதியாய் இருந்தான். சொல்லியிருக்க வேண்டுமெனில் அப்போதே சொல்லியிருக்க வேண்டும். இனிமேல் அதை பேசி எவ்வித அர்த்தமும் இல்லை என்கையில் அதை அப்படியே விட்டுவிட, ஆனால் கண்மணியிடம் மட்டும் சொல்லியிருக்க,

அவளோ ‘இருங்க ஒருநாள் நான் சொல்லி விடுறேன்..’ என்று அவ்வப்போது மிரட்டவும் கூட செய்தாள்.

இப்படியாக இருவரின் காதலும் ஒருவழியாக வீட்டினில் சொல்லி, அதுவும் சம்மதம் என்ற முடிவையும் வாங்கிவிட, கண்மணிக்கு சடகோபன் பேசவில்லை என்பது மட்டும் மனதினில் உறுத்தல்.

“அப்பா பேசலை.. ” என்று கண்ணனிடம் சொல்ல,

“பேசிடுவார் கண்ஸ்.. இவ்வளோ பண்றார்.. பேசாம இருப்பாரா??” என்றார் ஆதரவாய்.

“ம்ம்…” என்றவள், அவளாகவே அடுத்தும் சென்று சடகோபனிடம் பேச, அவரோ அவளின் முகத்தினைப் பார்த்தாரே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.

மாலை ஆனதும், சடகோபனே அதிரூபனுக்கு அழைத்து “வருகிறோம்…” என்றுசொல்ல,

கண்மணிக்கோ ‘அவர்க்கிட்ட எல்லாம் பேச முடியும்..’ என்ற எண்ணம் மேலோங்க, முகத்தை லேசாய் சுறுக்கியே நின்றிருந்தாள்.

கண்ணன் வெளியில் சென்றிருக்க, கண்மணி மட்டும் வீட்டினில் இருக்க, சடகோபனும் சியாமளாவும் கிளம்பி வெளியே வர, கண்மணிக்கு என்னவோ ஒரு பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது.. முதல் முறையாய் அப்பா அங்கே  செல்கிறார் என்ற பதற்றம். என்ன பேசிக் கொள்வார்களோ?? இதெல்லாம் யோசித்து வாசலில் வந்து நின்றாள்.

சியாமளாவோ “கண்ணன் வந்தா ஏதாவது கலக்கி குடு.. கொஞ்சம் முகத்துல போட்டுட்டு உக்காரட்டும்.. அவனுக்கு முகமே எப்படியோ இருக்கு..” என்று சொல்ல,

சடகோபனோ “உள்ள லாக் பண்ணிக்கோ.. பத்திரமா இரு கண்மணி..” என்று சொல்லிவிட்டு செல்ல,

அப்பா பேசியதில் “அ… அப்பா.. என்னப்பா சொன்னீங்க??!!” என்றாள் வேகமாய்.

அவளுக்கு நம்பவே முடியவில்லை. போகிறபோக்கில் சடகோபன் பேசிச் செல்ல, அவளுக்கு அவரின் குரல் மட்டும்தான் காதில் விழுந்ததே தவிர வார்த்தைகள் விழவில்லை. அவர்களின் பின்னோடே கண்மணி கேட்டுகொண்டே வர, சடகோபன் நின்று பார்த்தவரோ “ஒருதடவ சொன்னா காதுல வாங்கிக்கணும்..” என்றுவிட,

சியாமளாவோ “இப்படியே எங்களோட வந்திடுவ போல நீ.. உள்ள போ..” என்றுவிட்டு இருவரும் கிளம்பி அதிரூபன் வீட்டிற்கு செல்ல, சடகோபன் பேசியது அவளுக்கு அத்தனை சந்தோசமாய் இருந்தது.

மனதிற்குள் உற்சாகம் பொங்கி வழிய, அதிரூபனுக்கு அழைத்து “அப்பா அம்மா கிளம்பிட்டாங்க.. அப்பா என்கிட்டே பேசிட்டார்…” என்றாள் சந்தோசமாய்..

“சூப்பர் கண்மணி.. இங்கயும் எல்லாம் ரெடி.. பஜ்ஜி சொஜ்ஜி கூட இருக்கு..” என்று அவனோ கிண்டலடிக்க,

“சரி சரி.. அடக்க ஒடுக்கமா நல்ல மாப்பிள்ளையா நடந்துக்கோங்க..” என்றாள் பதிலுக்கு இவளும்..

“பாரேன் நீ கூட பேசுற…” என்று பதிலுக்கு சொன்னவன், மஞ்சுளா அந்தபக்கம் வரவும்  “ஓகே கண்மணி.. கால் யு லேட்டர்..” என்று வைத்துவிட்டான்.

சடகோபனும் சியாமளாவும் பத்திரிக்கை வைக்கப் போக, அங்கே சுப்பிரமணியும் சாந்தியும் இருப்பது கண்டு, அவர்களின் வீட்டிற்கும் வந்து பத்திரிக்கை வைப்பதாய் சொல்ல,

“இதுல என்னங்க இருக்கு..” என்றார் சுப்பிரமணி.

“அப்படியில்லங்க.. முறைன்னு ஒண்ணு இருக்கே..” என்ற சடகோபன், அங்கே அவர்களின் வீட்டிற்கும் சென்று அழைத்துவிட்டு தான் வந்தார்.

மஞ்சுளாவிற்கு இந்த ஒரு விசயமே மிக மிக திருப்தியாய் போய்விட்டது “பரவாயில்ல வழமையான ஆளுங்களா இருக்காங்க..” என்று சொல்லிக்கொண்டார்.

கண்ணனுக்கே ஆச்சர்யம் அப்பா இத்தனை தூரம் இறங்கி வந்தது. அதனை அவரிடமும் சொல்ல “உறவாகனும்னு முடிவு பண்ணியாச்சு.. அதை நல்ல முறைல ஆகிட்டா எல்லாருக்கும் நல்லதுதானே..” என்றுவிட்டார் சடகோபன்.

அடுத்த ஐந்து நாட்களில் கண்ணன் தீபா திருமணம். கண்மணி வீட்டினில் ஆட்கள் வந்திருக்க, “என்ன சடகோபா, அடுத்து கண்மணிக்கு பாக்கனுமே..” என்று அவரின் அக்கா கேட்க,

“பார்த்து பேசி வச்சிருக்குக்கா…” என்றார்..

“என்னாது பார்த்து பேசியாச்சா ???!! எங்கக்கிட்ட ஒருவார்த்தை சொல்லலை…” என்று அவர் ஆரம்பிக்க,

கண்மணிக்கு திடுக்கென்றது. கடவுளே எல்லாம் சுமுகமாய் போகும்போது இப்போது இதென்ன என்று ஒருவித தவிப்புடனே அப்பாவினைப் பார்த்தாள். அவரோ மகளைப் பார்த்தவர், பின்

“சொல்லக்கூடாதுன்னு இல்லைக்கா.. தெரிஞ்சவங்க மூலமா வந்தது. சரின்னு விசாரிச்சு பாக்குறப்போ எல்லாம் தோதா இருக்கு.. மேற்கொண்டு பேச்செல்லாம் கண்ணன் கல்யாணம் முடியவும் தான் செய்யணும்.. நீங்க எல்லாம் நேர்ல வர்றப்போ அவங்களை அறிமுகப் படுத்தலாம்னு இருந்தேன்..” என்றார், உள்ளதை  சொல்லாது.

கண்மணிக்கும் காதல் திருமணம் என்று சொல்ல அவருக்கு அப்போது மனமில்லை. வீண் பேச்சுக்கள் வரும்.. சியாமளாவும் வீட்டிற்கு வந்தவர்களிடம் இதையே சொல்ல,

“நேத்து கூட பேசினியே ஒருவார்த்தை சொல்லவேணாமா..” என்று சடகோபனின் அக்கா அலுத்துக்கொள்ள,

“அதான் உங்க தம்பியே சொல்லிட்டாரே அண்ணி…” என்று சிரிப்புடனே சமாளித்துவிட்டுப் போனார் சியாமளா..

இப்படி அப்படியென கண்ணன் தீபா திருமண நாளும் வந்திட, அதிரூபன் தன் மொத்த குடும்பத்தோடும் வந்திருந்தான்.. கிளம்பும்போதே மஞ்சுளா கேட்டார் “என்னடா போறோமே.. வாய் நிறைய வாங்கன்னு கேட்பாளா.. இல்லை எப்பவும் போல கண்ணு மட்டும்தான் பேசுமா??” என்று.

அவர் என்னவோ கிண்டலாய் தான் கேட்டார். ஆனால் நிவினோ “ம்மா உன் மாமியார் கொடுமையை இப்போ இருந்தே ஆரம்பிக்கிறியா??” என்று அவனும் அதிரூபனை ஏத்திவிட, அவனோ இது எதுவுமே காதில் விழாதது போல நின்றிருந்தான்.

“ம்மோய் அங்க போனாதான் அவனுக்கு ஐம்புலனும் வேலை செய்யும்..” என்ற நிவினின், கழுத்தில் கை போட்டு இழுத்துக்கொண்டு போனான் அதிரூபன்.

மண்டபத்தில் இவர்களைப் பார்த்ததும் சடோபனும், சியாமளாவும் வந்து வரவேற்க, கண்மணி தீபாவோடு மேடையில் இருந்தவள் இவர்களை கவனிக்கவில்லை. பின் சியாமளா தான் போய் அழைத்து வந்தார்.

‘வாங்க அத்தைன்னு சொல்லணும்.. அவங்க உனக்கு சித்தி சித்தப்பா முறை.. முறை சொல்லி சொல்லணும்..’ என்று வரும்போதே மகளுக்கு உபதேசம் செய்து அழைத்து வர,

நொடிபொழுதில் கண்மணிக்கு அதிரூபன் மீது பார்வை தொட்டு மீண்டது. அவ்வளவே. ஆனால் அவனின் பார்வையோ அவள்மீதே இருக்க, “டேய் அண்ணா  சுத்தி எல்லாம் இருக்காங்க..” என்றான் நிவின்..

“இருக்கட்டும்…” என்று அதிரூபனின் இதழ்கள் முணுமுணுக்க,

அவளோ அதிரூபனையும் நிவினையும் பார்த்து வரவேற்ப்பாய் ஒரு புன்னகை சிந்த, மஞ்சுளாவை பார்த்து “வா.. வாங்கத்தை..” என்றவள் சுப்பிரமணி சாந்தியைப் பார்த்து “வாங்க சித்தப்பா.. சித்தி..” என்றாள் மென்மையாக.

மஞ்சுளாவிற்கு கண்மணி மீது ஒரு ஆராய்ச்சிப் பார்வை, பின் அதுவே திருப்தியை காட்ட, நிவினோ “ஹலோ மேடம்.. என்னை எல்லாம் தெரியுமா தெரியாதா?? நாலு வருஷம் ஒன்னாதான் படிச்சோம்.. அப்போவும் பேசலை.. இப்போவும் பேசலை..” என்றான் வம்பிலுக்கும் நோக்கில்.

அவன் கேட்ட விதத்தில் கண்மணி இன்னும் மலர்ந்து சிரிக்க, ‘ம்ம்ஹும் பேசிட்டாலும்…’ என்று எண்ணியது மஞ்சுளாவே.

இவர்கள் அனைவரோடும் சேர்ந்து கண்ணன் – தீபா திருமணம் என்பது அவளுக்கு நிறைய நிறைய சந்தோசங்களை கொடுத்தது.. சடகோபனும்  சியாமளாவும் அவர்கள் பக்கத்து நெருங்கிய உறவுகளுக்கு அதிரூபன் குடும்பத்தினரை அறிமுகம் செய்துவைக்க, அப்படி இப்படி என்று கண்மணி அதிரூபன் திருமணம் செய்தி மண்டபத்தில் ஒரு பேச்சாய் இருந்தது.

ஒருவழியாய் நல்ல முறையில் திருமணம் நடைபெற, அனைவரும் ஒன்றாய் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மகளின் முகத்தினில் தெரியும் செழிப்பும், சிரிப்பும் சடகோபனுக்கு அதிரூபன் மீதான கண்மணியின் காதலை சொல்லாமல் சொல்லியது..

தீபாவோ “ஹேய் கண்ஸ்..” என்று அவளை மெதுவாய் தன்னருகே இழுத்தவள்,

“என்ன?? எங்க கல்யாணத்துக்கு வந்திட்டு எல்லாம் உங்க கல்யாணம் பத்தி பேசுறாங்க…” என,

“உங்க கல்யாணம்தான் முடிஞ்சு போச்சுல..” என்றாள் ஒரே போடாய் கண்மணி.

“நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ..” என்று தீபா சொல்ல,

“ஷ்..!! சத்தமா சொல்லிடாத தீப்ஸ்..” என்றுவிட்டு போனாள் கண்மணி.

இப்படி ஆரம்பித்தது தான் எல்லாம்.. இதோ ஒரு மாதம் கழித்து கண்மணி அதிரூபன் நிச்சயதார்த்தத்தில் வந்து நிற்கிறது.. நாட்கள் இத்தனை வேகமாய் ஓடுமா என்று தான் நினைக்கத் தோன்றியது. அதிலும் கண்மணிக்கும் அதிரூபனுக்கும் சொல்லவேண்டியதே இல்லை.. நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறப்பது போலிருந்தது..

மஞ்சுளா “சிம்பிளா வீட்டுலையே வச்சுக்கலாமே..” என,

சடகோபனோ “இல்லை மண்டபத்துல வச்சுக்கலாம்..” என்றார்.

சுப்பிரமணியோ “மஞ்சு அவங்க பொண்ணுக்கு செய்ய ஆசைப் படுறாங்க..” என்று சொல்ல, மஞ்சுளா சரி என்றுவிட்டார்.

நிச்சயம் முடிந்து அடுத்த ஐந்து மாதம் கழித்துத் தான் திருமணம் என்று முடிவாகியது. இத்தனை தாமதமா?? என்று அனைவரின் மனதிலும் நினைத்தாலும் அதற்கு காரணம் அதிரூபனே.

அவனுக்கு விருப்பமான கை கடிகார வடிவமைப்பில் மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. இவனைப் போலவே பெங்களூரு கண்காட்சியில் பங்கேற்ற ஒருவன் அங்கேயே அதிரூபனுக்கு நல்ல பழக்கமாகி இருந்தான்.

அவன் ஒருநாள் அழைத்து “சார் இங்க இன்னோர ஷாப் ஒண்ணு இருக்கு.. அதுல நீங்க உங்களோட வாட்ச் ஷோ ரூம் போல தனியா வைக்க முடியுமா?? பார்ட்னர்ஷிப் போல பண்ணிக்கலாம்..” என,

ஆரம்பத்தில் அதிரூபன் கூட யோசித்தான். எப்படியும் மாதத்திற்கு இரு முறையேனும் அங்கே சென்று வரவேண்டும். அதுவும் இப்போது இருக்கும் சூழலில் இது சாத்தியமா என்று யோசித்தான்.

நிவினோ “சான்ஸ் வர்றபோ விட்டுடாத.. உனக்கு முடியுறப்போ நீ போ.. வீக்கென்ட் லீவ் டைம்லனா நான் போயிட்டு வர்றேன்..” என,

மஞ்சுளாவோ “முதல்ல போய் அங்க என்ன எதுன்னு விசாரிச்சிட்டு நேர்ல பேசிட்டு வா.. அப்புறம் முடிவு சொல்லு..” என்றார்.

கண்மணியிடமும் சொன்னான் இதனை. அவளோ “உங்களுக்கு நல்லதுன்னு மனசுக்கு பட்டா மட்டும் எடுத்து செய்யுங்க..” என, ஒருமுறை இடையில் பெங்களூர் வேறு சென்றுவந்தான்.

மஞ்சுளாவோ “நீ தனியா போகவேணாம்.. நிவினும் கூட வரட்டும்..” என்று இரு மகன்களையும் தான் அனுப்பி வைத்தார்.

போய் பேசி, அந்த கடை, மற்றும் அதன் சுற்றுப்புறம் எல்லாம் பார்க்கையில் அதிரூபனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் சிட்டியின் மெயின் ஏரியா என்கையில் நிறைய நிறைய முதலீடு செய்யவும் வேண்டும். பணம் பற்றி அத்தனை பிரச்சனையில்லை தான். லோன் கூட போட்டுக்கொள்ளலாம். ஆனால் எதுவானாலும் இப்போது செய்யலாமா?? இல்லை திருமணம் முடிந்து செய்யலாமா என்ற யோசனை..

திருமணம் முடிந்த பிறகு என்றால் உடனே இங்கே வந்து எல்லாம் பார்க்க முடியாது. கடை வேலை நடக்கையில் எப்படியும் அதிரூபனும் உடன் இருக்கவேண்டும்

நிவினும் அதையே தான் சொன்னான் “கல்யாணத்துக்கு முன்னாடின்னா உனக்கு அவ்வளோ கமிட்மெண்ட்ஸ் இருக்காது.. கொஞ்சம் சிரமம் பாக்காம அலஞ்சிட்டா கூட செஞ்சு முடிச்சுடலாம்..” என,

“எனக்கு ஒன்னும் இல்லடா.. ஒருவேளை நிச்சயம் முடியவுமே கண்மணி வீட்ல கல்யாணம் வைக்கணும் சொல்லிட்டா என்ன செய்ய?? அதான் யோசனை..” என்றான் அதிரூபனும்.

“ரொம்ப யோசிக்கத, நேரா போய் உன் மாமனார் முன்னாடி நில்லு.. அவரே ஒரு யோசனை சொல்லுவார்..” என்று நிவின் சொல்ல, அதிரூபன் சென்னை வந்ததும் அதைதான் செய்தான்.

சடகோபனிடம் விஷயத்தை சொல்ல, “ஓ.. அப்படிங்களா??” என்றவர் “அங்க கடை ரெடியாக எத்தனை நாள் ஆகும்..” என்றார்..

“எப்படியும் ரெண்டு மாசமாவது ஆகும் மாமா…” என்றவனுக்கு, என்ன சொல்வாரோ என்றிருந்தது.

‘என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு நீ என்னவும் செய்..’ என்பாரோ என்று எண்ணினான்.

அவரோ “ஹ்ம்ம் ஒன்னும் பிரச்சனையில்லை.. இப்போ நிச்சயம் பண்ணிக்கலாம்.. அடுத்து உங்களுக்கு எப்போ தோதோ அப்போ பார்த்து கல்யாண நாள் முடிவு பண்ணலாம்..” என்றுசொல்லி நாள் குறிக்கப் பார்க்க, அதுவோ ஐந்தாவது மாதத்தில் வந்து நின்றது.

மஞ்சுளாவோ “அப்போ இந்த மாச கடைசியில நிச்சயம் வச்சுக்கலாம்..” என்று ஒரு நாளை சொல்லிட, இதோ அதிரூபன் கண்மணியின் நிச்சய விழா ஆழகாய் நடந்தேறிக்கொண்டு இருந்தது.

அனைவரும் நிச்சயத்திற்கு மோதிரம் போடுவார்கள் என்றால், அதிரூபனோ தானே வடிவமைத்த கடிகாரம் கட்டிவிட்டான் கண்மணியின் கரங்களில். அதுவும் தங்கத்தில்..

மேடையில் அருகேயிருந்து அதனைப் பார்த்த அனைவருக்குமே கண்களில் ஒரு பிரமிப்பு தோன்றி மறைய “வாவ்…” என்று கண்களை விரித்துப் பார்த்த கண்மணியின் கண்களிலோ அத்தனை காதல்.

தீபாவோ கண்ணனிடம் “பாருங்க இதெல்லாம் உங்களுக்குத் தோனிச்சா??!!” என்று வம்பிழுக்க,

“அதுசரி.. இதெல்லாமே நீ ஆரம்பிச்சது தான்..” என்று அவனோ தெரியாமல் வாயை விட,

“அப்போ எனக்கு இதுமாதிரி ரெண்டு வாட்ச் வாங்கிக் கொடுங்க..” என்றாள் கெத்தாய்..

நிச்சயப் பத்திரிக்கை வாசித்து, இரு வீட்டு ஆட்களும் தட்டு மாற்றிக்கொள்ள, அடுத்தது என்ன புகைப்பட படலம்தான்.. அதுவும் இப்போதுதான் எத்தனையோ வகைகள் வந்துவிட்டனவே. போட்டோக்ராபரோ “சார் ரெயின் எப்பெக்ட் எடுக்கலாம்..” என்று சொல்லி அறைக்குள் இருவரையும் அழைத்து செல்ல,

அவர்களுடனே கண்ணன், தீபா, நிவின் எல்லாம் செல்ல, இவர்களுக்கு நல்ல வேடிக்கையாய் இருந்தது. தீபாவோ “இது நமக்கு எடுக்கலையே…” என்று கண்ணனைப் பார்க்க, நிவினோ பாவமாய் பார்த்தான் கண்ணனை..

“இவங்களுக்கு எடுக்கவும் நமக்கும் வேணா எடுத்துப்போம்..” என்றவன் “உங்க அப்பா அம்மா கிளம்பனும் சொன்னாங்க.. வா போய் பார்த்துட்டு வருவோம்..” என்று அழைத்துக்கொண்டு சென்றிட,

அதிரூபனோ தம்பியிடம் “நீயேன் டா இப்படி நின்னு பார்த்துட்டு இருக்க..” என்று காதினை கடித்தான்..

“வெளிய போன்னு சொல்ற.. ஹ்ம்ம் எனக்கும் ஒரு நேரம் வரும்டா..” என்று முனங்கிவிட்டு செல்ல,

கண்மணியோ ‘ஏன் இப்படி???’ என்று பார்த்து வைத்தாள்..

“எப்பவுமே நாங்க இப்படிதான்..” என்று அதிரூபன் சொல்லிக்கொண்டு இருக்க, “சார் இப்படி நில்லுங்க.. இந்த லைட்க்கு முன்னாடி…” என்று குடையை கொண்டு வந்து போட்டோகிராபர் கையினில் கொடுக்க, அறையினில் இருந்த விளக்கினை அணைத்துவிட்டு, வேறொரு ஆங்கிளில் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படும் லைட்டை வைத்து,

“டேய் தம்பி நான் சொல்றபோ சரியா பின்னால இருந்து குடை மேல இந்த டம்பிளர் தண்ணியை ஊத்தணும்…” என்று அவரின் அசிஸ்டெண்டிடம் கூறிவிட்டு

“ரெடி ஸ்டார்ட்.. ரெண்டு பேரும் லேசா திரும்பி ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கோங்க…” என, கண்மணியும் அதிரூபனுக்கும் இதெல்லாம் வித்தியாசமாய் உணர்ந்தாலும் கொஞ்சம் ஆவலாகவும் இருந்தது.

போட்டோக்ராபர் சொன்னதுபோல இவர்கள் நிக்கவும் “எஸ் கூட்.. அப்படிதான்… ஓகே டன்…” என்று கட்டை விரலை உயர்த்த, அவரின் அசிஸ்டெண்ட், பின்னிருந்து தண்ணீரை   இவர்கள் கையினில் இருக்கும் குடையின் மீது  ஊற்ற, தண்ணீர் பட்டு தெறிக்கும் அந்த நொடியில் அழகாய் புகைப்படம் எடுக்கப் பட்டது..

“எங்க காட்டுங்க..” என்று அதிரூபன் கேமராவில் பார்க்க, அத்தனை அழகாய் வந்திருந்தது அப்படம்.. கண்மணிக்கோ சொல்ல வார்த்தைகளே இல்லை..

அவளின் முகம் பார்த்த அதிரூபன் “இதே போல வேற வேற போஸ்ல எடுக்கலாமா??” என்று போட்டோக்ராபரிடம் கேட்க, அடுத்த அரைமணி நேரம் அந்த அறையில் தண்ணீர் மழை தான் புகைப்படமாய்..

எடுத்த அனைத்துப் புகைப்படத்தையும் இவர்களும் பார்த்துகொள்ள “இதுபோல மாடில நின்னு எடுத்தா நல்லாருக்கும்..” என்றாள் கண்மணி மெதுவாய் அதிரூபனிடம்..

“எடுத்திடுவோம்.. மாடி என்ன மண்டபம் முழுக்க கழுவிவிட்டுடு கூட போவோம்..” என்று அதிரூபன் சொல்ல, கண்மணி செல்லமாய் முறைத்துகொண்டாள்.

ஆனால் போட்டோக்ராபர் “சார், மேடம் கொஞ்சம் டச் அப் பண்ணிக்கிறதுன்னா பண்ணிட்டு வாங்க, சைட்ல இருக்க தோட்டம், மாடி இங்கல்லாம் எடுக்கலாம்..” என்றுவிட்டு போக,

கண்மணியோ தன்னை சரி செய்துகொள்ளும் பொருட்டு, அங்கிருந்த கண்ணாடியின் முன்னே நிற்க, அதிரூபனோ அவளைப் பார்த்துக்கொண்டே அவளின் பின்  நின்றிருந்தான்..

அவளின் பார்வை அவ்வப்போது அதிரூபனைத் தொட்டு மீண்டாலும், முகத்தினால் லேசாய் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீரை துடைக்கும் பொருட்டு, கண்மணி கர்சீப் கொண்டு துடைக்கப் போக,

“ஏய் என்ன பண்ற நீ??” என்று வேகமாய் அவளின் அருகே வந்து கைகளைப் பற்றினான் அதிரூபன்..

“ஏ.. என்னாச்சு???” என்று கண்மணிப் பார்க்க,

“இப்படி துடைச்சா மேக்கப் போயிடும்..” என்றவன் “மெதுவா இப்படி ஒத்தி எடுக்கணும்..” என்று அவளின் கை பிடித்தே, லேசாய் முகத்தினை ஒற்றி எடுக்க, கண்மணியின் பார்வையோ அதிரூபன் முகத்தினில் நிலைக்க,

மெது மெதுவாய் அதிரூபனின் இதழ்களோ, அவளின் கன்னத்து ஈரத்தை ஒற்றி எடுத்து மீண்டும் ஈரம் செய்ய, கண்மணியின் இதழ்களோ புன்னகையில் வளைந்தது அவளின் மனதினைப் போலவே அவன்பால்..

               காதல் தூறல் சிந்தியது – கன்னத்து முத்தமாய்…

                                                     

                                     

           

 

Advertisement