Advertisement

தூறல் – 26

 

“பசங்க வந்து லவ் பண்றேன்னு நிக்கிறப்போ, அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத, நம்ம பசங்க நம்மள மீறி எந்த முடிவும் எடுத்திட மாட்டாங்கன்னு திடமா நம்பிட்டு இருக்க பெத்தவங்களுக்கு அந்த நிமிஷம் எப்படி இருக்கும்னு இப்போ உங்களுக்கு சொன்னா புரியாது. நீங்க எல்லாம் எங்களோட வயசுல இருக்கிறப்போ கால மாற்றம் ஆகிருக்கலாம்.. ஆனா.. நாங்க எல்லாம் அப்பா முன்னாடி நின்னு பேசவே பயந்த காலத்துல பிறந்து வளந்தவங்க..

ஆனாலும் கூட எங்களோட பிள்ளைங்களுக்கு எது சிறப்பா இருக்கும்னு பார்த்து பார்த்துதான் செய்ய நினைக்கிறோம்.. என்ன பண்றது விருப்பங்கள் மாறுபட்டு போறப்போ நாங்கதான் திகைச்சு நிக்க வேண்டியதா இருக்கு..  காதலிக்கிறோம்னு சொன்னதுமே நாங்க சரின்னு சொல்ல முடியுமா?? முதல்ல பெத்தவங்களுக்கு அதை ஜீரணிக்கிற அவகாசம் கொடுங்க…” என்று ஒட்டுமொத்த பெற்றவர்களின் சார்பாய் தான் சடகோபன் பேசியதாய் இருந்தது அதிரூபனுக்கு..

ஒருவேளை அவனின் தந்தை இருந்திருந்தாலும் கூட அவரும் இப்படிதான் சொல்லியிருப்பாரோ என்னவோ.. சொல்லபோனால் மஞ்சுளாவின் எண்ணம் கூட இதுதானே.. என்ன அவர் வேறு வழியில் வெளிப்படையாய் காட்டிவிட்டார்.

சடகோபன் வீட்டினில் கண்மணியிடம் வார்த்தைகளில் வெளிக்காட்டாதவர், அதிரூபன் அவரிடம் பேசியபோது இதோ இப்படி சொல்லிவிட, அவனுக்கு அவர் சொல்வதும் சரி என்றுதான் பட்டது.. பதில் சொல்லாது அவன் அமைதியாகவே இருக்க,

“என்ன தம்பி.. பேசணும்னு நிறுத்திட்டு இப்போ அமைதியா இருக்கீங்க..” என்றவரின் பார்வையை அவனால் நிச்சயம் அந்த நொடி எதிர்கொள்ள முடியவில்லை..

அனுபவமும், நிதானமும், ஓரு பெண்ணின் தந்தை என்ற பொறுப்பும் கலந்த அவரின் பார்வை அதிரூபனுள் ஒரு பிசைவு கொடுத்தது உண்மையே.. ஆனாலும் முன்னே வைத்த காலை பின்னே வைக்க முடியுமா?? காதலின் நீதி தர்மங்கள் என்றுமே வேறுதானே..

கண்மணி கலங்கிய குரல் அவனின் செவிப்பறையில் கேட்க, மனதை ஒருநிலைப் படுத்தியவன் “நீங்க சொல்றது எல்லாமே சரிதான் சார்.. கண்டிப்பா உங்களோட நிலைல யார் இருந்தாலும் இதை சொல்லத்தான் செய்வாங்க..” என்றவன், பின் அவரின் முகத்தினை நேருக்கு நேராய் பார்த்து

“எனக்கு கண்மணி டென்சன் ஆகுறதும், கலங்கித் தவிக்கிறதும் சுத்தமா பிடிக்கல சார்.. அதுவும் என்னாலன்னு சொல்றப்போ இன்னமும் எனக்கு கஷ்டமா இருக்கு.. இப்போன்னு இல்ல, எப்பவுமே எனக்கு கண்மணி டென்சன் ஆகறதோ, வருத்தமா பேசுறதோ, இல்லை அழறதோ ஏத்துக்கவே முடியாது.. எனக்கு கண்மணிக்கிட்ட பிடிச்ச விசயமே அவளோட முகத்துல எப்பவுமே இருக்க அந்த சிரிப்புதான்.. அது யார்னாலயும் தொலைஞ்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்..” என்று நீளமாய் பேச,

‘எப்படியான ஒரு பேச்சு இது??!!’ என்று கொஞ்சம் திகைத்துப் போய்தான் பார்த்தார் சடகோபன்..

அதிரூபனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவருக்கு திகைப்பைக் கொடுத்தது நிஜமே. அவரும் தான் தினமும் கண்மணியைப் பார்க்கிறாரே.. அப்பா பேசமாட்டாரா?? என்று அவள் ஏக்கமாய் பார்ப்பது இப்போது அவரின் கண்முன்னே வந்து போனது.

‘நான் இருக்கப்போவே என் மகளைப் பத்தி இன்னொருத்தன் கவலைப் படுறதா.. அப்போ அப்பான்னு நான் எதுக்கு இருக்கேன்??’

இந்த கேள்வி அவரின் முன்னே வந்து நிற்க, அவருக்கு அவரிடம் பதில் இல்லை. ஆனால் அவரின் நிலையும் தவறு என்று சொல்லிட முடியாது. ஆனாலும் உடனே சம்மதிக்க முடியுமா??

அவரின் மனதில் கண்மணியின் வாழ்வு பற்றி நிறைய நிறைய கனவுகள் இருந்தது. அதிலும் கண்ணனின் திருமணம் அவனின் விருப்பம் என்றானபின் கண்மணிக்காவது தான் பார்த்து பார்த்து எல்லாம் நடத்திட வேண்டும் என்ற முடிவு அவருள் திடமாய் இருந்தது. ஆனால் வருண் விசயத்தில் அது பொய்த்து போயிட, மகளுக்கு மேம்பட்ட நல்லதொரு வாழ்வையே அமைத்துக்கொடுக்க எண்ணினார்.

அப்படியானவருக்கு கண்மணியின் காதல், இனிப்பாகவா இருக்கும்???

இத்தனைக்கும் அவர் ஒருவார்த்தை மகளை திட்டவில்லை.. என்ன ஏதென்று கேட்கவில்லை. மௌனமாகிப் போனார். நிஜமாய் அவருக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருக்குள் எதுவோ ஒரு தோற்று போன உணர்வு இருந்தது. அதிலிருந்து வெளிவரவே அவருக்கு நாள் பிடிக்கும் என்று நினைத்துக்கொண்டு இருக்கையில், இதோ அதிரூபனின் பேச்சு அவரை தூண்டிவிட்டது..

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே இருக்கும் ஒருவித ஈகோ..

‘என்னோட பொண்ணு டா..’ என்று சொல்லும் திடம்..

‘நான் இருக்கப்போ என்னோட பொண்ணு கலங்கி நிக்கிறதா.. அதுக்கு இன்னொருத்தன், அவளுக்குப் பிடிச்சவனாவே இருந்தாலும் அவன் வக்காலத்து வாங்கிட்டு வர்றபோ அப்போ நான் இருந்து என்ன?? இல்லாட்டி என்ன??’ என்ற உணர்வு அவருள் பிறக்க,

அதிரூபனின் முகத்தினைப் பார்த்தவர் “ஹ்ம்ம்… என் பொண்ணுக்கு என்ன செய்யணும், அதை எப்போ செய்யணும் இதெல்லாம் நான் யோசிக்காம இருந்ததில்ல… கண்ணன் கல்யாணம் முடியட்டும்.. உங்க வீட்டு பெரியவங்களை பேச சொல்லுங்க.. அப்புறம் முடிவு பண்ணலாம்” என்றவர்,

‘நான் சம்மதிச்சா தான் என் பொண்ணுக்கு எதுவுமே..’ என்று சொல்லாமல் பார்க்க, அந்த பார்வையின் அர்த்தம் அதிரூபனுக்குப் புரியாமல் இருக்குமா என்ன??

அவரின் வார்த்தைகள் அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், சம்மதம் என்று உடனே சொல்லாது வீட்டு பெரியவர்களை பேச சொல்ல சொன்னது ஓரளவு கொஞ்சம் நிம்மதி கொடுத்தது தான்.

“தேங்க் யூ.. தேங்க் யூ சோ மச்..” என்றவன் “எ.. எனக்கு அப்பா இல்ல.. அம்மா தம்பி மட்டும் தான்.. அம்மா முன்னாடி நின்னு பேச தயங்குவாங்க.. சோ என்னோட மாமாவும் அத்தையும் தான் பேசுவாங்க..” என்றுசொல்ல,

“ம்ம்..” என்றுமட்டும் தலையை அசைத்துக்கொண்டார்.

மிகைப்படியான பேச்சுக்களோ, சட்டென்று உறவு கொண்டாடும் முறைகளோ இருவரிடமும் எதுவுமில்லை. அதிரூபனுக்கு நன்கு புரிந்தது, கண்மணி அவனோடு வாழும் வாழ்வு மட்டுமே இந்த மனிதருக்கு மனதினில் நம்பிக்கையும் திருப்தியும் கொடுக்கும் என்று.

“சார் உங்க நம்பர் கொடுங்க.. ஒவ்வொரு விசயத்தையும் நான் கண்மணிக்கிட்ட சொல்லி உங்கக்கிட்ட கேட்க சொல்லி, அவ அதுக்கும் கொஞ்சம் டென்சனாகி, இதெல்லாம் வேண்டாமில்லையா?? நானே உங்கக்கிட்ட பேசிப்பேன்.. எதுனாலும்… ” என்றவன் “இதுல என் நம்பர் இருக்கு..” என்றுசொல்லி அவனின் விசிடிங் கார்டினை நீட்ட,

சடகோபனுக்கும் தோன்றிவிட்டது ‘இவன் பேசியே காரியம் சாதிக்கும் ரகம்..’ என்று.

அவரின் அலைபேசி எண்ணை சொன்னவர், அவனின் கார்ட்டையும் வாங்கிக்கொண்டு வீடு கிளம்பிவிட்டார்..

‘யப்பா சரியான அழுத்தம் போல..’ என்று அதிரூபன் எண்ணியவன், இவர் வீடு போய் சேரும் முன்னே கண்மணியிடம் அனைத்தையும் சொல்லவேண்டும் என்று அழைத்து சொல்ல,

அவளோ அத்தனை நேரம் ஊரில் இருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல்கள் வைத்துக் கொண்டு இருந்தவள் அதிரூபன் சொன்னதைக் கேட்டு “அப்.. அப்போ.. அப்பா ஓகே சொல்லிட்டாரா??!!!” என்றாள் திணறிப்போய்..

இன்னமும் அவளால் நம்பிட முடியவில்லைதான்.

“ஓகேன்னு சொல்லல.. இப்போதைக்கு ஓ மட்டும் தான் சொல்லிருக்கார்..” என்று அதிரூபன் சொல்ல,

“ம்ம்ச்.. அவர் எப்போவாது சொல்லட்டும்.. என்கிட்டே பேசினா மட்டும் போதும்..” என்று அவள் சொன்னது கேட்டு அதிரூபன் ஆடிப்போனான்.

“அடிப்பாவி கண்மணி.. அப்போ நம்ம லவ்காக நீ பேச சொல்லலையா ?? உன்கிட்ட உங்கப்பா பேசணும்னு தான் என்னை போக சொன்னியா??” என்று அவன் கேட்ட விதத்தில் கண்மணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“நானா போக சொன்னேன்?? நீங்களாதானே பேசுறேன் சொன்னீங்க..” என,  

“சரிதான்..  நீ இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ.. போ போய் உங்கப்பா வரவும் மிச்ச கதை கேட்டுக்கோ…” என்றவன் வைத்துவிட, அடுத்த கொஞ்ச நேரத்தில் சடகோபனும் வீட்டிற்கு வந்துவிட்டார்.

வந்தவர் எதுவும் பேசவில்லை, சியாமளாவிற்கு இதெல்லாம் எதுவும் தெரியாது என்பதால் அவர் எப்போதும் போல இருக்க, கண்மணி வந்து “அப்பா…” என்றாள் மெதுவாக..

அவரோ ஏறிட்டும் பார்க்கவில்லை.

சியாமளாவிற்கு இதனைப் பார்க்க சங்கடமாய் இருக்க “என்னங்க..” என்று பேச ஆரம்பிக்க, “நீ எதும் பேசாதே..” என்று பார்க்க, அவரின் வாயும் மூடிக்கொண்டது..

“ப்பா.. ப்ளீஸ் ப்பா.. பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா.. என்னை திட்டவாது செய்யுங்கப்பா…” என்று கண்மணி அவரின் கைகளை பற்றிக்கொள்ள, அவளை திரும்பிப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாது மீண்டும் திரும்பிக்கொண்டார்.

“ப்பா ப்ளீஸ் ப்பா..” எனும்போதே அவளின் குரல் உடைய, அவருக்கோ அதிரூபனின் வார்த்தைகளே மனதினுள் ஒலித்தது.

கண்களை இறுக மூடித் திறந்தவர், “சியாமி.. அ.. அந்த பையன் வீட்டுக்கு போய் பத்திரிக்கை வைக்கணும்.. உனக்குத்தான் வீடு தெரியுமில்லையா.. கண்மணியை சொல்ல சொல்லிடு நம்ம வர்றோம்னு..” என்றுவிட்டு மகளின் கரங்களுக்குள் இருந்த தன் கரத்தினை மெல்ல உறுவிக்கொண்டவர், கண்மணியின் திகைத்தப் பார்வையையும் பொருட்படுத்தாது அவளின் கை மீது மெதுவாய் ஒரு தொடுகை

‘நான் இருக்கிறேன்..’ என்று சொல்வது போல், செய்துவிட்டு எழுந்து உள்ளே போய்விட்டார்.

அம்மாவிற்கும் பெண்ணுக்கும், சடகோபன் என்ன சொல்லி சென்றார் என்று புரிய நொடிகள் தேவைப்பட, புரிந்த பின்னேயோ கண்மணி அப்படியே அமர்ந்து முகத்தினை மூடி விசும்பவே தொடங்கிவிட்டாள்.

“ஹே!!! கண்மணி என்னதிது…” என்று சியாமளா அவளை சமாதானம் செய்ய, இதழ்கள் துடிக்க, புன்னகை சிந்தியவளோ கண்களைத் துடைத்துக்கொண்டு,

“என… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலம்மா..” என்றவளின் உடலோ இன்னும் அழுகையில் குலுங்கியது.

ஆனந்த கண்ணீர்..

அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“ச்சே லூசு.. நல்லது நடக்குறப்போ அழலாமா..” என்ற சியாமளா, மெதுவாய் திரும்பிப்பார்க்க, சடகோபனோ வேகமாய் அறைக்குள் இருந்து எட்டிப்பார்ப்பதை பின்வாங்கிக்கொண்டார்.

“இப்போவாது உங்கப்பா பத்தி புரிஞ்சதா??” என்றவர், “போ.. போய் முகம் கழுவு..” என்றுவிட்டு கணவரிடம் செல்ல, கண்மணியோ வேகமாய் கண்ணனுக்குத் தான் அழைத்தாள்.

அவனோ வேலையில் இருக்க, இவளின் அழைப்பை எடுக்க முடியாது போக, அடுத்து தீபாவிற்கு அழைத்தாள். அவளின் சந்தோசத்தை யாரிடமாவது பகிர்ந்தே ஆகவேண்டும் போலிருந்தது கண்மணிக்கு.. தீபா உடனே எடுத்துவிட,

“தீப்ஸ்…” என்றவள், நடந்த அனைத்தையும் சொல்லிட, “ஹேய் வாவ்..!!!! கண்ஸ்.. செம போ… அப்போ உன் ரூட்டும் கிளியரா… அடி தூள்..” என்று வாழ்த்த,

“தேங்க்ஸ் தீப்ஸ்…” என்றவள் மேற்கொண்டு பேசிவிட்டு வைக்க, அடுத்து கண்ணனும் அழைத்துவிட அவனிடமும் கண்மணி சொல்ல,

“வாவ்.. சூப்பர் கண்ஸ்.. நிஜமாவே அப்பா தான் கலக்கிட்டார் போ..” என்றவன் “சரி இவங்க போறதை அதிரூபன்கிட்ட சொன்னியா இல்லியா??” என்றுகேட்க,

“ஷ்..!!!” என்று தன் தலையில் தானே தட்டிக்கொண்டவள், “இ.. இதோ சொல்லணும்ணா..” என்றாள்.

“முதல்ல சொல்லு கண்ஸ்.. அவங்க அம்மாக்கிட்டயும் அதிரூபன் சொல்லனும்தானே…” என,

“சரிண்ணா..” என்றவள், அதிரூபனுக்கு அழைக்க, “என்ன மேடம் ஜி உங்கப்பா உங்க கூட பேசிட்டாரா???” என்றான் கொஞ்சம் கடுப்பாகவே..

“ம்ம்ஹும்.. ஆனா உங்க வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க கிளம்பிட்டு இருக்காங்க..” என,

“என்னது?!!!!” என்று அதிர்ந்து கேட்டான்.

“உங்க வீட்டுக்கு அப்பாவும் அம்மாவும், கல்யாண பத்திரிக்கை வைக்க கிளம்பிட்டு இருக்காங்க.. உங்கக்கிட்ட சொல்ல சொன்னாங்க..” என்று கண்மணி ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிதானமாய் சொல்ல,

‘அட கடவுளே..’ என்று தலையில் கை வைத்தான்..

“ஹ.. ஹலோ.. என்னங்க..??!!!” என்று கண்மணி அழைக்க,

“சொல்லும்மா சொல்லு…” என்றான் நொந்து போய்.

“ஏன் என்னவோ போல பேசுறீங்க..??”

“ஹ்ம்ம் இவ்வளோ நேரம் உங்கப்பா… இனி எங்கம்மா.. அம்மாக்கு தெரியாது கண்மணி நான் உங்கப்பா கிட்ட பேசினது..” என்றவனுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

“அச்சோ..!!!!” என்று கண்மணி சொல்லிக்கொள்ள, அது மிக மெதுவாகவே அதிரூபனுக்கு கேட்க,  

“நீ உதட்ட குவிச்சது எல்லாம் போதும்…” என்றவன் “எப்போ கிளம்புறாங்க..??” என்று கேட்க,

“நீ.. நீங்க சரின்னு சொன்னா, நான் அப்பாக்கிட்ட சொன்னதும் கிளம்பி வருவாங்க..” என்றாள் அவளும் யோசனையாய்.

“ஹ்ம்ம் எனக்கு நிஜமாவே கொஞ்சம் டைம் வேணும் கண்மணி.. அம்மாக்கிட்ட பேசணும்.. நான் உங்க அப்பாக்கிட்ட பேசினதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை..” என்றான் இறங்கிய குரலில்..

கண்மணி அவன் சொல்வது நன்றாய் புரிந்தது. ஏற்கனவே அவனின் மாமாவிடம் சொல்லி பேச்சு ஆரம்பித்த நிலையில், இப்போது வீட்டினருக்குத் தெரியாது அதிரூபன் வந்து பேசியது தெரிந்தால் யாருக்கும் சங்கடமாய் தான் இருக்கும். என்ன செய்வது என்று யோசித்தாள். கண்டிப்பாய் அப்பாவிடமும் சொல்ல முடியாது.

ஆனால் சியாமளாவிடம் சொல்ல முடியுமே..

“நான்.. நான் அம்மாக்கிட்ட பேசிட்டு சொல்றேனே..” என்று கண்மணி சொல்ல, “ம்ம் நீ பேசு.. நானும் வீட்டுக்கு போய் அம்மாக்கிட்ட எப்படி சொல்லணுமோ அப்படி சொல்றேன்..” என்று அவனும் சொல்ல,

“திட்டுவாங்களா??!!!” என்றாள் பாவமாய்.

‘இத்தனை நாள் மட்டும் கொஞ்சிட்டா இருந்தாங்க..’ என்றெண்ணியவன் “ஹ்ம்ம் திட்டு வாங்குறது எல்லாம் சகஜம்.. கல்யாணத்துக்கு முன்னாடி அம்மாகிட்ட மட்டும், கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்டயும் சேர்த்து..” என்று சொன்னவன்

“ஓகே கண்மணி..” என்றுசொல்லி வீட்டிற்கு கிளம்ப, இங்கே கண்மணியோ “ம்மா…” என்று சியாமளாவை அழைத்தாள்.

“என்ன கண்மணி??!!!” என்று உள்ளே வந்தவரிடம் “ம்மா…” என்று தயங்கியே விஷயத்தை சொல்ல,

“ஓஹோ.. அப்படியா??” என்றவர் “அப்பா கிளம்பிட்டு இருக்காரே கண்மணி..” என,

“ப்ளீஸ் ம்மா.. நீதான் ஏதாவது செய்யணும்.. அவர் அவங்க அம்மாக்கிட்ட பேசிட்டு சொல்லட்டுமே..” என்றாள் கெஞ்சலாய்..

“ஹ்ம்ம்.. என்னதான் பிள்ளைகளோ..” என்றவர், “இரு சமாளிக்க முடியுமா பாக்குறேன்..” என்று போக, அங்கே சடகோபனோ அதிரூபனிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தார்..

வீட்டிற்கு கிளம்பியவனுக்கு ஒரு யோசனை. அதனால் சடகோபனுக்கே அழைத்தவன் “சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் எங்கம்மா கிட்ட பேசிட்டு சொன்னப்புறம் நீங்க பத்திரிக்கை வைக்க வர முடியுமா??” என்றான் தன்மையாகவே..

சடகோபனோ பதில் சொல்லாது யோசிக்க “மார்னிங் உங்களோட பேசினது இன்னும் அம்மாக்கிட்ட சொல்லலை.. நேரா கடைக்கு வந்திட்டேன்.. இப்போ வீட்டுக்குத் தான் கிளம்பிட்டு இருக்கேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க.. எங்கம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்று அதிரூபன் அவனின் நிலையை விளக்க,

“ம்ம் சரி.. நீங்க சொல்லுங்க அப்போ வர்றோம்..” என்றவர் வைக்கவும், சியாமளா அவரை வியப்பாய் பார்த்தார்..

“என்ன?? என்ன சியாமி.. அழறதை நிறுத்திட்டாளா..??” என்ற கணவரை இன்னும் வியப்பாய் பார்த்தவர் “நீங்களும் பேசினாதான் என்ன??” என்றார் இவரும்..

“ம்ம் பேசாம எங்க போயிட போறேன்.. கொஞ்சம் என் போக்குல விடு..” என்றுவிட்டார் இதோடு விஷயம் முடிந்தது என்பதுபோல்.

அதிரூபன் அவனின் வீட்டிற்கு செல்ல, எப்போதும் இந்த நேரத்தில் வராதவன் வீட்டிற்கு வரவும் “என்ன ரூபன்??!!” என்றார் மஞ்சுளா.

“அ… அதும்மா.. அது வந்து.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என,

“அதுக்கேன் டா இப்படி திக்குற..??” என்ற மஞ்சுளா அடுப்பை அணைத்துவிட்டு மகனிடம் வந்து அமர,

“இல்லம்மா நீ.. நீ எப்படி எடுதுப்பியோன்னு..” என்று பார்வையை மட்டும் நிமிர்த்தி பார்த்தான்.

அந்த பார்வையே அவனின் கள்ளத்தனம் காட்டிக்கொடுக்க “என்ன பண்ணிட்டு வந்து இப்போ என்னை கன்வின்ஸ் பண்ற ரூபன்??” என்று சரியாய் பிடித்தார் மஞ்சுளா..

“அ.. ம்மா… அது.. நான்.. இனிக்கு பேங்க் போயிருந்தேனா.. அங்க கண்மணி அப்பாவப் பார்த்தேன்..” என்று சொல்லும்போதே,

“ஓ.. உடனே தைரியமா போய் பொண்ணு கேட்டுட்டியா??” என்றார் பட்டென்று..

“ம்மா !!!”

“பின்ன என்னடா  என்னத்தையோ பண்ணிட்டு வந்திருக்க, இப்போ முழிச்சிட்டு உக்காந்து இருக்க.. அதானே.. சொல்லித் தொலை…” என்றவர் திரும்ப அடுப்படிக்குள் போக,

“ம்மோய்.. உக்காந்து கேளும்மா…” என்றான் ஹாலில் இருந்தே..

“ஏன் துறை இங்க வர மாட்டீங்களோ…” என்ற மஞ்சுளா அவரின் வேலையை ஆரம்பித்துவிட, அதிரூபன் முகத்தினை பாவமாய் வைத்தே எழுந்து வந்தான்.

கையில் கரண்டியோடு அவனை மஞ்சுளா பார்க்க “மாமா ஏற்கனவே அவர் பிரன்ட் கிட்ட சொல்லி பேசினார்ல ம்மா, கண்மணியும் வீட்ல சொல்லிருப்பா போல.. அ.. அதான்.. அவரோட பேசி…” என்று அதிரூபன் இழுக்க,

“ம்ம்.. இப்போ என்ன?? உனக்கு பொண்ணெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாரா??” என்றார் நக்கலாய்..

“ம்மா??!!!!!!!!!!!!!!”

“பின்ன என்ன டா.. டேக் டைவர்சன் போல.. சுத்திட்டே இருக்க.. நேர விஷயத்தை சொல்லு..” என்று மஞ்சுளா ஒரு அதட்டல் போடவும்,

“அது.. நம்ம வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வரணும் சொல்றாங்க.. கண்ணனுக்கு கல்யாணம் இல்லையா..” என்றான் வேகமாய்.

“ஓஹோ…!!!” என்ற மஞ்சுளாவின் பார்வையில் என்ன இருக்கிறது என்று சத்தியமாய் இவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

                                                   

                   

 

Advertisement