Advertisement

தூறல் – 7

“நீங்க பேசவே மாட்டீங்களா கண்மணி..?? இவ்வளோ அமைதியா இருக்கீங்க??” என்ற வருணின் பேச்சில் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி..

“பாக்குறீங்க ஆனாலும் பேசினா நல்லாருக்குமே…” என்று வருண் சொன்ன விதத்தில் அவளுக்கு லேசாய் புன்னைகை அரும்பிட, அதுவும் அவன் கண்களுக்கு தெரிந்திட,

“பேச சொன்னா சிரிக்கிறீங்களே…” என்றான் சலுகையாய்..

மனதினுள்ளே இத்தனை நேரம் இருந்த பதற்றம் குறைவது போல் கண்மணி உணர, “அப்.. அப்படில்லாம் இல்ல..” என்றாள் மெதுவாய்..

“அப்போ சிரிக்கமாட்டீங்களா??” என்று வருண் அடுத்த கேள்விக்கு போக,

“அப்படியும் இல்லை…” என்றவளின் புன்னகை இன்னமும் மலர்ந்தது..

வருணின் இந்த சகஜ பேச்சே, அவளை ஒரு இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்க, ஆனாலும் இந்த புதியவனோடு என்ன பேசுவது என்றும் யோசனை. மாப்பிள்ளையும் பெண்ணும் தங்களின் முடிவினை சொல்வதற்கு முன்னே பேசிக்கொள்வது எல்லாம் இப்போது சகஜமாகிவிட்ட நிலையில்,

கண்மணியோ அப்படியான எந்த எண்ணமும் இல்லாமல் தான் இங்கே வந்தாள்.. வீட்டில் பார்த்திருக்கிறார்கள். போட்டோ பார்க்கையில் நன்றாகவேதான் இருந்தான். படிப்பு, வேலை குடும்பம் என்று எதிலும் குறை சொல்ல முடியாது. அதையும் மீறி அவனை பற்றி தனிப்பட்ட கருத்து என்பது அவளுக்கு என்ன இருக்க போகிறது..

ஆனால் வருணோ அவளைப் பற்றி நன்கு தெரிந்தவன் போலவே பேச அவளுக்கு ஆச்சர்யமாய் போனது.. ‘எப்படி இப்படி பேசுறான்…’ என்று தான் எண்ணினாள். அவளது எண்ணம் அவளின் கண்களில் எப்போதும் போலவே பிரதிபலிக்க,

“நீங்க நினைக்கிறது புரியுது.. பட் பேசினாதானே கொஞ்சமாவது தெரியும்…” என்றான் வருணும்..

“ம்ம்…” என்று கண்மணி தலையை ஆட்ட,

‘அவன் என்ன சொல்றான்.. இவ எதுக்கு தலையை ஆட்டுறா..’ என்று எண்ணியது வேறு யாராய் இருக்க முடியும்.. எல்லாம் அதிரூபனே..

கண்மணியும் வருணும் அங்கே வந்து நின்றதில் இருந்தே அவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. எழுந்து போய் ‘இங்க என்னடா பேச்சு??’ என்று வருணை பிடித்து கேட்கவேண்டும் போல இருக்க, அதிரூபன் திணறித்தான் போனான்..

‘டேய்.. உனக்கு என்ன அங்க பார்வை… உனக்கு நேரா நீ பார்க்க வந்த பொண்ணு இருக்கு.. அங்க பாரு…’ என்று அவன் மனம் எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க, அவனால் மூச்சு விடுவது கூட சிரமமாய் இருந்தது..

“ச்சே…” என்று தலையை உலுக்க, “என்னண்ணா என்னாச்சு???” என்றான் நிவின்..

“என்னடா??”

“இப்போ எதுக்கு ச்சே சொன்ன?? பொண்ணு பிடிக்கலையா???”

“அது…” என்றவன் யோசிப்பது போல் முகத்தினை வைக்க,

 “நீ பொண்ண பாக்கவே இல்லைன்னு தெரியும்… ஒழுங்கா பொண்ண பார்த்துட்டு உன் முடிவ சொல்லு அம்மா அப்போயிருந்து என் கால சொரண்டிட்டே இருக்கு.. இல்ல நீ வந்து இப்படி உட்காரு…” என்று பேசிக்கொண்டே நிவின் அதிரூபனை பார்க்க, அவனின் பார்வை அப்படியே நீண்டு கண்மணி வருணை கண்டது.

“அட நம்ம கண்ஸ்…” என்று நிவின் கொஞ்சம் சத்தமாகவே சொல்லிட,

“டேய் மெதுவாடா…” என்று தட்டிய அதிரூபன், “ஆமா அவதான்.. அவளுக்கும் இன்னிக்கு பொண்ணு பார்த்து வந்திருக்காங்க…” என்றான் கடுப்பாய்..

அண்ணனின் முகத்தினை கவனிக்காது, குரலை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்த நிவினோ “வாவ்… எல்லாம் முடியவும் நான் போய் விஷ் பண்ணிட்டு வரணும் ண்ணா” என்று சொல்ல,

“ரொம்ப முக்கியம்…” என்று கடிந்தான் பெரியவன்..

“என்னண்ணா…??!!”

“என்னடா… சும்மா என்னை எரிச்சல் பண்ணாத.. நான் கிளம்புறேன்.. இங்க இருக்கவே எப்படியோ இருக்கு…” என்று அதிரூபன் சொல்லும்போதே,

“ரூபன் என்னடா உனக்கு ஓகே வா…” என்று மகனின் அருகேயே வந்துவிட்டார் மஞ்சுளா..

“ம்மா அண்ணன் கிளம்புறானாம்…” என்று நிவினும் சொல்லிட,

“என்னாது கிளம்புறியா?? என்னடா…??” என்று மஞ்சுளா மகனின் முகம் பார்க்க, “ம்மா எனக்கு என்னவோ போல இருக்கு…” என்றவனின் பார்வை அவனையும் அறியாது கண்மணி பக்கம் சென்று வர, மஞ்சுளாவும் மகனின் பார்வையை தொடர்ந்தார்..

அவருக்குத்தான் யாரென்று தெரியாதே, எதோ ஒரு பொண்ணும் பையனும் தனியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுமட்டும் புரிய, “ஓ.. உனக்கும் பொண்ணுகூட தனியா பேசணுமா டா??” என்றார் இவனிடம்.

‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ…’ என்று நிவின் அதிரூபனை காண, அவனோ வெளிப்படையாகவே மஞ்சுளாவை முறைத்துக்கொண்டு இருந்தான்.

பொதுவாய் அதிரூபன் மஞ்சுளாவிடம் தன் கோபத்தினை வெளிப்படுத்த மாட்டான். அப்பாவின் மறைவிற்கு பிறகு அவன் மஞ்சுளாவிடம் இன்னமுமே பாசமாய் இருப்பதுபோல் இருக்கும். உண்மையும் அதுதான். அவனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ மஞ்சுளாவின் மனது நோகாது நடந்துகொள்வான்..

ஆனால் இப்போது அவனின் பேச்சு.. அவனின் பார்வை.. அவனின் செயல் எதுவுமே அவனிடத்தில் அவனின் கட்டுப்பாட்டில் இல்லை. அவன் இருக்கும் இடம் மறந்து, அவன் வந்திருக்கும் விஷயம் மறந்து சொல்லப்போனால் அவனையே அவன் மறந்துவிட்டான் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.

“ரூபன் என்னடா??? எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க…” என்று மஞ்சுளா திரும்பவும் கேட்க,

“என்னம்மா செய்ய சொல்ற என்னை??” என்று பட்டென்று கேட்டுவிட்டான் அதிரூபன்.

அங்கே வருண் கண்மணியிடம் பேச பேச, இங்கே இவனுக்கு பற்றிக்கொண்டு இருந்தது. ஒருவேளை காதல் தீயோ என்னவோ.. ஆனால் அதனின் வெம்மை மட்டும் அதிரூபனால் தாங்கவே முடியவில்லை.

‘அவன் பேசுறான்.. இவ சிரிக்கிறா…’ என்று இப்போது பல்லைக் கடித்துக்கொண்டு அங்கே பார்க்க,

“ரூபன்…” என்று மஞ்சுளாவும் பல்லைக்கடித்தார்..

நிவினோ இவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாது போனாலும் அண்ணனின் பார்வை எல்லாம் அங்கே கண்மணியிடம் இருப்பது கண்டு, “ம்மா அதோ அந்த பொண்ணுதான் கண்ஸ்.. கண்மணி… என்னோட கிளாஸ் மேட்.. அவளுக்கும் இன்னிக்கு பொண்ணு பார்த்து வந்திருக்காங்க போல…” என்று சொல்ல,

அடுத்தநொடி வேகமாய் தன் பார்வையை அதிரூபன் மீது செலுத்தியவர், பின் அதனினும் வேகமாய் கண்மணியைப் பார்த்தார்..

வருண் எதுவோ சொல்லிக்கொண்டு இருக்க அவளோ ‘சம்மதம்…’ என்பதுபோல் தலையை குனிந்து, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தாள்..

“ரூபன்…” என்று திரும்பவும் மகனை அழைத்தவர் அவன் திரும்பாதது கண்டு, அவனின் கண் இமைகள் கூட இமைக்காதது கண்டு “ரூபன்…” என்று அவனின் தோள் தொட,

“ஆ.. என்னம்மா…” என்றான் அவன் முகத்தினை சுருக்கி..

“பொண்ண பார்த்தியா?? பிடிச்சிருக்கா??” என்றவரின் கேள்வியில் அத்தனை அழுத்தம்…

“அது…” என்றவன் திரும்பவும் நெற்றியை சுருக்க,

“பாரு.. பார்த்துட்டு உன் முடிவ சொல்லு..” என்றார் அதே குரலில்..

“ண்ணா பாருண்ணா.. அவங்களும் எவ்வளோ நேரம் வெய்ட் பண்ணுவாங்க…” என்று நிவினும் சொல்ல,

“ம்ம்ம்….” என்று மெதுவாய் தலையை ஆட்டியவன் நிமிர்ந்து பார்க்க, அங்கேயே அவன் பார்க்க வந்த பெண்ணோ வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருப்பது போல் இருந்தது.

ஒருவேளை தன் எண்ணம் தான் பார்வையில் இப்படி படுகிறதோ என்று அதிரூபன் யோசிக்க, ஒருநொடி கண்களை இறுக மூடித் திறந்தவனுக்கு மீண்டும் கண்மணி ‘சம்மதம்…’ என்று தலையை ஆட்டுவது தெரிய,

‘நோ….’ என்ற இதழசைப்போடு கண்களை திறக்க, அங்கே வருணும் இல்லை கண்மணியும் இல்லை.. சென்றுவிட்டார்கள் போல..

அதிரூபனின் பார்வை, இப்படி அப்படி என்று அலைபாய, “அண்ணா…” என்றழைத்த நிவின் “அம்மாக்கு மாமாக்கு எல்லாம் ஓகே.. நீதான் சொல்லணும்.. உன்னதான் எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க …” என்றுசொல்ல,

“என்.. எனக்கு என்ன சொல்றது தெரியலைடா.. ஒருமாதிரி இருக்கு.. ரொம்ப குழப்பமா இருக்கு..” என்றுவிட்டான் அதிரூபனும்..

“குழப்பமா இருக்கா??” என்று நிவின் குழம்பிப் போய் பார்க்க,

“எஸ்… நான் கடைக்கு போறேன்.. எனக்கு முடியலை.. இதுக்குமேல இங்கே என்னால இருக்க முடியாது…” என்றவன் சொன்னதுபோலவே எழுந்தும் விட்டான்..

அதிரூபன் எழுந்ததுமே அனைவரின் பார்வையும் அவன்மீது விழ, மஞ்சுளாவோ அதிர்ந்து போய் மகனின் முகம் பார்க்க, சுப்பிரமணியும் சாந்தியும் என்னவென்பது போல் பார்த்தனர்.

“அது.. அதும்மா.. கடைல இருந்து ஒரு இம்பார்ட்டன் கால் அண்ணன் போகணுமாம்…” என்று நிவின் சொல்ல, மஞ்சுளாவோ தன் இரண்டு பிள்ளைகளையும் முறைத்தார்..

“ம்மா நீங்க பேசிட்டு வாங்க.. நான் கிளம்புறேன்…” என்றவன் கிளம்பியே விட்டான் அதிரூபன்.

அவனால் திரும்ப ஒருமுறை கண்மணியையும் வருனையும் சேர்த்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. எதில் இருந்து இல்லை யாரில் இருந்து தப்பிக்க இவன் இப்படி ஓடுகிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை.. ஆனால் அங்கே இருக்க பிடிக்கவில்லை..

எங்கே இதற்குமேலும் அங்கே இருந்தால் அவனாகவே வந்த விசயம் மறந்து கண்மணியிடம் நேரே போய் பேசிவிடுவானோ என்று அவனுக்கே தோன்றிவிட்டாது..

‘பேசிடுவேனோ…’ என்று கிளம்பியவனுக்கு ‘பேசிடலாமா…’ என்றும் தோன்றிவிட,

“என்ன பேச போற??” என்ற கேள்வியோடு ஆஜர் ஆனது அவனின் மனசாட்சி..

கடைக்கு வந்தவன் நேராய் மேலே சென்றுவிட, சிறிதுநேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்துவிட்டான் அங்கே.. அங்கே இருந்த கடை ஆளையும் கீழே போகும்படி சொல்லிவிட்டு அவன் மட்டுமே அமர்ந்துவிட்டான்..

அவனின் மனசாட்சி கேட்க கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை. “என்ன பேச போற ரூபன்..??” என்று திரும்பவும் அவனின் மனசாட்சி கேட்க,

“எனக்கு.. எனக்கு  தெரியலை….” என்று அவனே சொல்லிக்கொள்ள,

“தெரியலையா?? ஹா ஹா பின்ன ஏன் ஓடி வந்த…” என்று எள்ளி நகையாடியது..

“நோ நோ… எனக்கு அங்க இருக்க பிடிக்கலை அவ்வளோதான்…” என்று அதிரூபனும் சொல்ல,

“அதான் ஏன் பிடிக்கலை.. ஒருவேளை கண்மணியை பிடிச்சதுனால உனக்கு அங்க இருக்க பிடிக்கலையோ??” என்ற அடுத்த கேள்வியும் வந்தது..

ஆனால் அந்த கேள்வியில் அதிரூபன் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்.. இந்த நொடி முதல் கண்மணியை தனக்கு பிடிக்கும் என்ற கோணத்தில் அவன் சிந்திக்கவே இல்லை.. ஆனால் இப்போதோ கண்மணி மட்டும் தான் பிடிக்கும் போல இருந்தது..

‘கண்மணி….’ என்று அவனின் இதழ்கள் உச்சரிக்க, “எஸ்.. எஸ்.. கண்மணி… கண்மணி தான் எனக்கு பிடிக்கும்…” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டான் அதிரூபன்..

“இப்போ பிடிச்சு என்ன செய்ய, அங்க அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு…” என்று அவன் மனம் எடுத்து சொல்ல,

“நோ நோ நடக்காது…..” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் வேகமாய் நிவினுக்கு அழைத்தான்..

அதிரூபன் பேசும் முன்னமே “கங்க்ராட்ஸ் அண்ணா… இங்க உனக்கு பேசி முடிச்சிட்டாங்க.. அண்ட் இன்னொரு சந்தோசமான விஷயம் கண்ஸ்க்கும் பேசி முடிச்சிட்டாங்க…” என்றுசொல்ல,

“என்னது??!!!!!” என்று ஆடிப்போனான் அதிரூபன்..

“ண்ணா…. நீதானே சொல்லிட்டு வந்த நீங்க பேசிட்டு வாங்கன்னு.. அதான் அம்மா சரின்னு சொல்லிட்டாங்க.. பொண்ணு வீட்லயும் ஓகேன்னு சொல்லவும், மாமா அத்தை அம்மா எல்லாம் பேசிட்டு இருக்காங்க… நான் இப்போதான் கண்மணிய பார்த்துட்டு அவங்க எல்லார்கூடவும் பேசிட்டு வந்தேன்…” என்று நிவின் சொல்லிக்கொண்டே போக,

அப்படியே தோய்ந்து அமர்ந்துவிட்டான் இவன்.. அந்த பக்கம் நிவின் என்ன பேசினானோ தெரியாது.. ஆனால் அவன் பேசியது எதுவுமே இவனுக்கு கேட்கவில்லை.. மாறாக கண்மணிக்கு பேசி முடித்துவிட்டார்கள் என்பதே மனதில் ஓடியது அவனுக்கு..

‘இனி என்ன செய்றது??’ என்ற கேள்வி பிறக்க,

“உனக்கும் தானே பேசி முடிச்சிட்டாங்க..” என்றும் தோன்ற, எதிரே இருந்த கண்ணாடி மேஜையை ஓங்கி குத்திவிட்டான் அதிரூபன்..

மேஜை கல் என்றால் தாங்கியிருக்கும்.. கண்ணாடி அல்லவா.. சுக்கு நூறாய் அவனின் மனம் போலவே உடைந்து சிதற, அவனின் கைகளிலோ சுட சுட சிவப்பாய் ரத்த கோலம்..

“ஷ்….!!!!” என்று வலி தாங்காமல் அதிரூபன் சொல்ல, கண்ணாடி உடைந்த சத்தம் நன்றாகவே நிவினுக்கு கேட்டபடியால்

“ண்ணா என்னாச்சு??” என்றான் பதற்றமாய்..

அதேநேரம் கடையில் வேலையில் இருப்பவர் ஒருவரும் சாதாரணமாய் மேலே வர, இதனை பார்த்துவிட்டு “அய்யோ என்ன சார் ஆச்சு…” என்றபடி இவனருகே வர,

‘என்னாச்சு எனக்கு…??’ என்று அப்படியே வெறித்து நின்றிருந்தான் அதிரூபன்..

அங்கே கண்மணியின் வீட்டிலோ அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. மூர்த்தியும் அவர் மனைவியும் இங்கே வந்திருக்க சடகோபன், கண்ணன், சியாமளா அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தனர்..

தன்னறையில் இருந்த கண்மணிக்கோ மனது இப்போது ஒரு புதிய உணர்வை உணரத் தொடங்கியது. வருணை பிடித்திருக்கிறதா இல்லையா?? அதெல்லாம் தெரியாது. ஆனால் அவன் அவளிடம் பேசிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. நேருக்கு நேராய் பார்த்து வெளிப்படையாய் பேசிய விதம் அவளுக்கு அவன்மீது ஒரு நன்மதிப்பை கொடுத்திருந்தது..

இவன் தனக்கு பொருத்தமானவனா என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. ஆனால் ஏதோவொன்று வீட்டினர் உனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்கையில் சரி என்றும் சொல்ல வைத்துவிட்டது.

“கண்ஸ்  நல்லா யோசனை பண்ணி சொல்லு.. இப்பவும் ஒண்ணுமில்ல ரெண்டு நாள் கழிச்சு முடிவு சொல்றோம்னு கூட சொல்லிக்கலாம்..” என்று கண்ணன் சொல்ல,

“இல்ல அண்ணா.. எனக்கு சரின்னுதான் தோணுது…” என்றுவிட்டாள்..

“சரின்னு தோணுதா ?? பிடிச்சிருக்குன்னு தோணுதா??” என்று கண்ணன் அடுத்து கேட்க, கண்மணியோ அவனை செல்லமாய் முறைத்தாளே தவிர வேறெதுவும் பேசினாள் இல்லை..

சடகோபனுக்கோ மிகுந்த மகிழ்ச்சி.. தான் எப்படியொரு வரனை மகளுக்கு முடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தாரோ அப்படியே அச்சரம் பிசகாமல் வந்து அமைந்ததில் பேரானந்தம் அவருக்கு.

“ரொம்ப சந்தோசம் மூர்த்தி…” என்று நண்பனின் கரங்களை பிடித்துக்கொண்டு சொல்ல,

“எப்படியோ நல்லபடியா அடுத்து அடுத்து வர எல்லா விசயங்களும் நடந்து நம்ம பசங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்.. ஆண்டவன் அதைமட்டும் செஞ்சு கொடுத்துட்டா போதும்…” என்று மூர்த்தியும் சொல்ல,

சியாமளாவோ “அண்ணா, கோவில்ல வச்சு சம்பிரதாயத்துக்கு பார்த்தாச்சு.. ஒருதரம் அவங்க எல்லாம் இங்க வீட்டுக்கு வந்தா நல்லாருக்கும்..” என்றார் கணவரையும் ஒரு பார்வை பார்த்தபடி..

“ஆமா மூர்த்தி.. ஒருதரம் வீட்டுக்கும் வந்துட்டா மேற்கொண்டு பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சிட்டு அடுத்து அடுத்து வேலைகளை ஆரம்பிக்கலாம்..” என்று சடகோபனும் சொல்ல, 

அந்த நொடி என்னவோ கண்ணனுக்கு இவர்கள் அவசரப் படுகிறார்களோ என்று தோன்றியது. அனைவரும் சந்தோசமாய் பேசும்போது மறுப்பு சொல்லும்விதமாய் வேறெதுவும் பேசவும் கூடாது..

சடகோபன் இருக்கையில் அது முடியவும் முடியாது. ஏதாவது ஒன்றை சொல்லி, இல்லை எங்கள் காலத்தில் என்று அவர் சிறு வயதில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஏதாவது ஒன்றை சொல்லி மற்றவரை பேசவே விடாது செய்திடுவார்..

சியாமளாவும் சடகோபனும் இப்படி சொல்லவும், மூர்த்தி கொஞ்சம் யோசிக்க, “என்ன மூர்த்தி யோசிக்கிற??” என்று கேட்டேவிட்டார் சடகோபன்.

“வருணுக்கு இன்னிக்கு சாயங்காலம் டெல்லிக்கு பிளைட்டு.. லீவ் அடுத்து இல்லை சித்தப்பான்னு சொல்லிட்டு இருந்தான்.. அதான் யோசிக்கிறேன்…” என்று மூர்த்தி சொல்லும்போதே,

கண்ணனோ இதுதான் சமயம் என்றெண்ணி “அதுக்கென்னா மாமா… அடுத்து எப்போ லீவ் கிடைக்கும்னு கேளுங்களேன்..” என்றான் சாதாரணமாய்..

சடகோபனோ மகனைப் பார்த்தவர் “மாப்பிள்ளைக்கு லீவ் இல்லைன்னா என்ன மூர்த்தி, வீட்டு பெரியவங்க எல்லாம் வரட்டுமே.. நம்மத்தானே பேச போறோம்.. அடுத்து எப்போ லீவோ அப்போ மாப்பிள்ளை வரட்டும்…” என்று சொல்ல,

“சரி சடகோபா நான் பேசிட்டு சொல்றேன்…” என்றவர் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்..

அவர்கள் கிளம்பியதும், சியாமளாவும் சடகோபன் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று தங்களுக்குள் ஆலோசனையில் ஈடுபட, கண்ணனோ தங்கையை தேடி வந்தான்..

உடையை மாற்றிவிட்டு, ஒப்பனைகளை அகற்றிவிட்டு எப்போதும் போல் கண்மணி இருக்க, இவனைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்தாள்.. கண்ணனுக்கும் அவளது புன்னகை மனதில் ஒரு திருப்தி கொடுத்ததுவோ என்னவோ, ஆனால் திரும்பவும் அவன் அதே கேள்வியை கேட்டான்..

“கண்ஸ்.. உனக்கு வருண் பிடிச்சிருக்குதானே…” என்று கேட்க,

அத்தனை நேரம் அவனைப் பார்த்து சிரித்தவள், இப்போது கண்களை இடுக்கி லேசாய் முறைக்க,

“சும்மா சொல்லு கண்ஸ்…” என்றான் இவனும் பிடிவாதமாய்..

“எனக்கு தெரியலைன்னா.. ஆனா ஓகே ன்னு தான் தோணுது…” என்று அவளும் சொல்ல,

“ம்ம்… ஆனா வீட்ல என்னவோ ரோமப் ஸ்பீடா இருக்கிறது போல இருக்கு..” என்றான் தன் மனதில் தோன்றியதை மறைக்காமல்..

ஆனால் கண்மணியோ “அதெல்லாம் அப்பா அம்மா பார்த்துப்பாங்க ண்ணா..” என்றவள், ஒருமுறை பார்வையை வெளியே செலுத்தி யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு

“நீ.. நீ வீட்ல பேசிடுண்ணா.. அதான் எனக்கு பிக்ஸ் ஆகிடுச்சே.. இப்போவாது நீ உன் விசயம் பேசேன்…” என்றாள் கெஞ்சலாய்..

அவ்வளவுதான் கண்ணனுக்கு மனது என்னவோபோல் ஆகிவிட்டது.. ஆக தனக்காகவும் தீபாவிற்காகவும் தான் கண்மணி இந்த வருணுக்கு சரி என்றாளா என்று தோன்ற,

“கண்மணி….” என்று அதிர்ந்து பார்த்தவன், அவனுக்கு தோன்றியதை கேட்டும் விட்டான். 

                       

 

              

       

                                 

             

Advertisement