Advertisement

தூறல் – 6

“ரூபன் கடைல இருந்து புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா???” என்று மஞ்சுளா கேட்டபின்னே தான் அவனுக்கு அந்த விசயமே நினைவு வந்தது..

“ச்சோ..!!” என்று முகத்தை சுளிக்க,

“என்னடா மறந்துட்டு வந்தாச்சா??? இப்போல்லாம் என்னாச்சு ரூபன் உனக்கு.. எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்லாம இருக்க??” என்று தன்னருகே வந்த மஞ்சுளாவை எவ்வித பாவனையும் இல்லாத ஒரு பார்வை பார்த்தான் அதிரூபன்.

“என்ன ரூபன்… இந்த பொண்ணு எதுவும் உனக்கு பிடிக்கலையா??? அதனால தான் இப்படி இருக்கியா???” என்று கேட்ட மஞ்சுளாவின் முகத்தில் யோசனை சாயல்.

ஒருவேளை தான் தேர்ந்தெடுத்த பெண் மகனுக்கு பிடிக்கவில்லையோ, அதனால் தான் இப்படி இருக்கிறானோ என்ற எண்ணம் அவருக்கு. அவனுக்கோ தான் என்ன நினைக்கிறோம், தன் மனதில் என்ன ஓடுகிறது இதுவே புரியவில்லை.. அவனுக்கு பெண் பார்க்க போவதே, இப்போது மஞ்சுளா சொல்லித்தான் நினைவு வந்தது.. அந்தநிலையில் அவன் இருக்க, மஞ்சுளாவின் முகத்தில் தெரிந்த உணர்வுகளோ    

“அப்படில்லாம் இல்லைம்மா…” என்று சொல்ல வைத்தது.

“பின்ன என்னடா எப்பவும் போல இருக்க வேண்டியதுதானே..”

“ம்மா நான் எப்பவும் போலதான் இருக்கேன்.. நீ ஏன் இப்படி என்னையே ஆராய்ச்சி பண்ற…” என்று வேண்டுமென்றே கிண்டல் தொனியில் அதிரூபன் சொல்ல,

“போடா.. என்னவோ உங்க ரெண்டு பேரையும் வச்சு வளர்க்கிற குள்ள…” என்று மஞ்சுளாவும் கிண்டலாகவே சொல்ல,

“என்னாது எங்களை வளக்குறியா ம்மா.. இதெல்லாம் டூ மச்…” என்ரபாத் டைனின் ஹாலில் இருந்து தட்டையும் தூக்கிக்கொண்டே நிவின் வந்துவிட்டான். 

நிவின் அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருக்க, அம்மாவும் அண்ணனும் பேசுவதை பார்த்துக்கொண்டே உண்டுகொண்டு இருந்தவன், மஞ்சுளா சொன்னது பொறுக்காமல் எழுந்து வந்திட,

“இதோ அடுத்து இவன்…” என்றார் மஞ்சுளாவும்.

“ம்மா…” என்று சலுகையாய் அதிரூபன் மஞ்சுளாவின் தோளில் சாய்ந்துகொள்ள,

“என்னடா என்னாச்சு?? கடைல எதுவும் பிரச்சனையா ?? எப்பவும் நீ இருக்க மாட்டியே??” என்றார் அவரும் கரிசனையாய்.

“அதெல்லாம் இல்லம்மா…” என்று அதிரூபன் சொல்லும்போதே, “ண்ணா… கண்ஸ் அண்ணனுக்கு வாட்ச் டிசைன் பண்ணியாச்சா??” என்று அப்போது தான் நினைவு வந்தவனாய் நிவின் கேட்க,

அதிரூபனுள் ‘கண்ஸ்..’ என்ற பெயரை கேட்டதும் ஒரு அதிர்வு ஓடியது மஞ்சுளாவிற்கே உணர முடிந்தது.. ஆனால் அவனோ முகத்தினில் ஒன்றும் காட்டாது “ஹ்ம்ம் கொடுத்தாச்சு…” என்றுமட்டும் சொல்ல,

“ஓ… டிசைன் பாக்கலாம் நினைச்சேன்…” என்று நிவினும் சொல்ல,

“இன்னிக்கு தான் ரெண்டுபேரும் வந்து வாங்கிட்டு போனாங்க..” என்றான் அதிரூபன்..

“கண்ஸ்… வந்தாளா??” என்று கேட்டபடி நிவின் தோசையை விழுங்க, அத்தனை நேரம் மஞ்சுளாவின் தோளில் சாய்ந்திருந்த அதிரூபன் நிமிர்ந்து தன் தம்பியை வித்தியாசமாய் பார்க்க, மஞ்சுளாவோ இவர்கள் இருவரையும் விசித்திரமாய் பார்த்தார்.

“என்னண்ணா?? என்னம்மா??!!” என்று இருவரையும் நிவின் கேட்க,

“கண்ஸ் யாரு??” என்று மஞ்சுளாவும் சொல்ல, “ம்மா அவ பேரு கண்மணி… அழாகான பேர எல்லாம் கண்ஸ் கண்ஸ்னு கன்றாவி பண்றாங்க..” என்ற அதிரூபனின் முகம் அத்தனை எரிச்சல் காட்டியது.

நிவின் இதனை பெரிதாய் எடுக்கவில்லை என்றாலும், மஞ்சுளாவால் அப்படி இருக்க முடியுமா என்ன??

“உனக்குத் தெரியுமா ரூபன்…” என்று கேட்க,

“ம்ம் என்னம்மா???” என்றான் அவனோ உணராது..

“இல்ல அந்த பொண்ண தெரியுமான்னு கேட்டேன்..”

“ம்மா கடைக்கு ரெண்டு தடவ வந்திருக்கா…” என்றவன், “அவனோட கிளாஸ் மேட்…” என்று நிவினை கை காட்டி விட,

“ஆமாம்மா… நல்ல பொண்ணு… அமைதியான டைப்…” என்று இவனும் அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க,

“ஓ…!!!!” என்றதோடு மஞ்சுளா நிறுத்திக்கொள்ள, ஆனால் அவர் மனதில் அதிரூபன் முகத்தினில் தோன்றிய மாற்றங்களே வந்துபோயின..

‘என்னாச்சு இவனுக்கு…’ என்ற கேள்வி அவருள்..

அதிரூபனுக்குமே அது தான்.. ‘என்னாச்சு எனக்கு??’ என்ற கேள்விதான்.. இயல்பாய் அவனின் இயல்பில் இருக்க முடியவில்லை.. என்னவோ ஒன்று வந்து தாக்குவது போலொரு இம்சை உணர்வு..

ஒருவேளை காதலோ???!!!

அப்படி நாம் சொன்னால் தான் உண்டு.. இன்னும் அவன் உணரவில்லை.. காதல் வந்ததுமே உணர்ந்துகொண்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது?? அது போட்டு ஒரு யுத்தம் செய்து, இதயக் கதவுகளை தாக்கி நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்லும் தருணம் வரவேண்டும் தானே..

அப்படியான தருணம் எப்போ வருமோ??

மஞ்சுளாவிற்கு மனதினில் ‘எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும்..’ என்ற எண்ணம்.. அதே எண்ணத்தில் இறைவனை வேண்டிக்கொண்டு உறங்கச் செல்ல, அண்ணன் தம்பி இருவரும் கொஞ்ச நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டு பின் உறங்கச் சென்றனர்.        

கண்மணியோ அவள் வீட்டில் உறக்கமே வராது புரண்டுகொண்டு இருந்தாள்.. சரியாய் பன்னிரண்டு மணிக்கு கண்ணனை வாழ்த்த வேண்டுமே.. எப்போதும் இப்படித்தான். ஆனால் கண்ணனின் காதல் தெரிந்தபின்னே, பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் முன்னமோ பின்னயோ சென்று வாழ்த்துவாள்..

எப்படியும் தீபா அந்த நேரத்தில் பேசுவாள் என்று தெரியும் ஆக இப்படி மாறிக்கொண்டாள். வீட்டில் அப்பாவும் அம்மாவும், காலையில் பூஜை அறையில் வைத்து புது துணி கொடுத்து தான் எப்போதும் வாழ்த்துவார்கள். அதனால் இவளின் நேரத்திற்காக காத்துக்கொண்டு இருக்க, நேரம் பார்த்தவள் பன்னிரண்டு ஆக, இன்னும் ஐந்து நிமிடம் இருப்பது கண்டு, எழுந்து கண்ணனின் அறைக்குப் போக, அவனோ இவள் வருவாள் என்றே காத்திருந்தான் போல..     

 “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…” என்று தலையை சரித்து, அழகான ஒரு மென்னகையோடு வாழ்த்திய கண்மணிக்கு,

“தேங்க்ஸ் டா…” என்று கண்ணனும் பதில்சொல்ல,

“தூங்கலையா??!!” என்றாள் கண்மணி வேண்டுமென்றே..

‘தெரிஞ்சுக்கிட்டே கேட்கிற..’ என்பதுபோல லேசாய் தலையை தூக்கி, கண்ணன் பார்க்க, அடுத்த நொடியே கண்மணி “கண்டிப்பா நீ இன்னிக்கு தீபாவ பார்க்க போற…” என்றாள் கொஞ்சம் அழுத்தமாய்..

எப்போதாவது தான் கண்மணி இப்படி அழுத்தம் கொடுத்து பேசுவது எல்லாம்.. அப்படி அவள் பேசும் விசயமும் முக்கியமானதாய் இருக்கும் என்று கண்ணனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் இன்று அவனுக்கு மீட்டிங் என்ற பெரும் சுவர் வந்து குறுக்கே நிற்க, அவன் எங்கே தீபாவை பார்க்கப் போவது என்று தான் இருந்தது.

“இல்ல கண்ஸ்…” என்று கண்ணன் சொல்லும்போதே,

“எனக்கு தெரியாது.. நீ போற.. போகணும்..” என்றுவிட்டு கண்மணி போய்விட, ‘என்னடா இது…’ என்று கண்ணன் கொஞ்சம் நேரம் பார்த்து நிற்க, சரியை பன்னிரண்டு மணிக்கு தீபா அழைத்துவிட அத்தனை நேரமிருந்த யோசனை மாறி ஒரு புன்னகையோடு அழைப்பை ஏற்றான் கண்ணன்.

பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு தீபாவும் “இன்னிக்கு ஒரு டென் மினிட்ஸ் மீட் பண்ணலாமே…” என்று கேட்க, இருவரும் சொல்லி வைத்துக்கொண்டு பேசுவது நன்கு புரிந்தது கண்ணனுக்கு..

ஆனால் இப்போது மறுத்து எதுவும் பேசினால், தேவையில்லாது தீபாவின் மனம் சுறுங்கும் என்பதால் “ம்ம் டைம் கிடைக்கிறப்போ நானே உன் ஆபிஸ் வர்றேன் தீப்ஸ்…” என,  அவளுக்கு அப்போது தான் நிம்மதியே ஆனது..

மனதிற்குள்ளே கண்மணிக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லிக்கொண்டாள்.. இருக்காதா பின்னே, கண்ணன் வர நேரமிருக்காது என்று சொன்னதுமே, அவள் கண்மணியிடம் அந்த கடிகாரத்தை கொடுத்துவிடுவது என்ற முடிவில் தானே இருந்தாள்.

ஆனால் கண்மணிதான் அங்கே அதிரூபனின் கடையில் வைத்தே “நோ தீப்ஸ் நீதான் கொடுக்கணும்..” என்று திண்ணமாய் மறுத்துவிட,

“ம்ம்ச் என்ன கண்ஸ் நீ இப்படி சொல்ற??” என்றாள் பாவமாய்.

“உன்னோட கிப்ட் இது…”

“ஆனா உன் அண்ணன் டைம் இல்ல சொல்லிட்டானே…” என்று தீபா பார்க்க, அதுக்கு நான் என்ன செய்ய என்றுதான் பார்த்தாள் கண்மணி.

“ப்ளீஸ் கண்ஸ்….”

“ம்ம்ஹும்.. அண்ணன் வருவான்.. நீதான் கொடுக்கணும்.. இதுல நான் வரமாட்டேன்..” என்று கண்மணி அழுத்தம் திருத்தமாய் மொழிந்துவிட்டு, கிளம்பிவிட, இதோ இந்த நொடி வரைக்கும் கூட தீபாவிற்கு கண்ணன் வருவானா மாட்டானா என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.   

இப்போது அதற்கான விடை கிடைத்துவிட, நிம்மதியாய் சந்தோசமாய் கண்ணனோடு பேசிவிட்டு உறங்கச் சென்றாள் தீபா..

கண்ணனும் சொன்னதுபோலவே கிடைத்த கொஞ்ச நேரத்தில் தீபாவை காண செல்ல, அவளின் பரிசை பார்த்தவன் கொஞ்சம் அசந்துதான் போனான்..

“வாவ்….!!!” என்றவனின் முகத்தினில் தோன்றிய பாவனை கண்டு, “எப்படி இருக்கு??” என்று தீபா கேட்க,

“செம…. எங்க வாங்கின” என்றான் அவனின் சந்தோசத்தை குரலிலும் முகத்திலும் தேக்கி.

“உங்க ஏரியாதான்.. அலங்கார்ல…” என்று சொல்லவும் கண்ணனுக்கு அன்று கண்மணியோடு அங்கே சென்று வந்தது நினைவில் வர,

“கண்ஸ் வந்தாளா??!!” என்றான் பட்டென்று..

“ம்ம்.. நானும் அவளும்தான்..”

கண்ணனின் மனதில் இப்போது வேறெதுவும் சிந்தனை இல்லை. கண்மணி வீட்டினில் பார்த்த மாப்பிள்ளைக்கு சரி என்று சொன்னதால் அவன் வேறெதுவும் யோசிக்கவில்லை.. சரி ஏற்கனவே இரண்டு முறை அங்கே சென்று வந்திருக்கிறாள் என்பதுமட்டும் புரிந்துகொண்டான்.

அடுத்து அப்படியே அவனுக்கு அழைப்பு வந்துவிட, கண்ணனும் கிளம்ப தீபா சந்தோசமாகவே அவனை வழியனுப்பினாள். அந்த பத்து நிமிட நேரம் கூட அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது. கண்ணனுக்கும் அப்படித்தான். அந்த கடிகாரம் அவனுக்கு மிக மிக பிடித்துவிட, அடுத்து எப்போதாவது அங்கே அலங்காருக்கு சென்றால் அதிரூபனிடம் நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் கையில் இருந்த புது கடிகாரம்  கண்டு கண்மணி லேசாய் புன்னகைக்க “ரெண்டு பெரும் என்னென்னவோ செய்றீங்க” என்று கண்ணனும் சிரிக்க,

சியாமளா வந்தவரோ மகன் கையில் இருக்கும் கடிகாரம் பார்த்துவிட்டு “என்னடா புதுசா??!!” என்று கேட்கவும் அண்ணனும் தங்கையும் ஒருநொடி பார்த்துக்கொள்ள

“என்னடா??!!” என்றார் திரும்பவும்.

“ஆ… ஆமாம்மா… பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து…” என்று அவன் சொல்லும் போதே, கண்மணி அவனை முறைத்துவிட்டு அறையினுள் சென்றுவிட்டாள்.

அவள் ஏன் அப்படி முறைக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாதா என்ன?? முகத்தினில் எட்டிப்பார்த்த ஒரு சிறு கவலையோடு நிற்க, “நல்லாருக்குடா கண்ணா…” என்ற சியாமளா, “பிரெஷ் ஆகிட்டு வா..” என்றுவிட்டு போக, அவர் போனதும் கண்மணியை தேடி அவளின் அறைக்குப் போனான்..

“கண்ஸ்… இப்போ என்ன கோவம்..” என்று தெரிந்தே கேட்க, அவளோ பதிலே சொல்லாது முறைத்தாள்..

“ப்ளீஸ்டா.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ…”

“என்ன புரியணும்…??” என்று கண்மணி பதிலுக்கு கேட்க, கண்ணனோ மௌனமாய் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்துகொண்டான்..

“அண்ணா.. நீ பண்றது உனக்கே நல்லாருக்கா…” என்றவளின் பார்வையில் அவ்வளவு கவலை.. அது அவனுக்கும் புரிய,

“ஷ்…!!!! ப்ளீஸ் கண்மணி.. நீயும் ஏதாவது சொல்லாத…” என்றவன் “நாளைக்கு இந்த அலயன்ஸ் உனக்கு ஓகே ஆகிட்டா அடுத்து நான் வீட்ல சொல்லிடுறேன் போதுமா??” என்றான் ஒரு முடிவோடு..

“ஓ..!! செட் ஆகலைன்னா??” என்றாள் கொஞ்சம் சீற்றலாய்.

“கண்ஸ்….”

“என்னவோ பண்ணு..” என்பதுபோல் பார்த்தவள், முகத்தினை திருப்பிக்கொள்ள “கண்டிப்பா நல்லதே கண்ஸ்….” என்றுவிட்டு போனான் கண்ணன்..

‘நல்லது நடக்கவேண்டுமே…’ என்ற எண்ணம் அவனுள்ளும்.. 

இப்படியாக அந்த நாள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் கழிய, மறுநாள் காலையில் இருந்தே மஞ்சுளா அதிரூபனை ஒருவழி செய்துகொண்டு இருந்தார்.. அவரின் அண்ணன் குடும்பமும் வந்திருக்க, அதிரூபனால் ஓரளவிற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை..

“கடைக்கு இன்னிக்கு ஒருநாள் போகலைன்னா என்ன ரூபன்…” என்று மஞ்சுளா சொல்ல,

“ம்மா… கடையை தாண்டிதான் கோவில் போகணும்… நீங்க எல்லாம் கிளம்பி நேரா போங்க.. நான் கடைல இருந்து அப்படியே வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்…”  என்று இவனும் கிளம்ப, மகனின் முகத்தினைப் பார்த்தவர் பதிலே சொல்லாது வேலையை செய்ய, அவனும் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

இன்னமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இருந்தது இவர்கள் கிளம்ப, அதுவரைக்கும் வீட்டில் இரு என்றால் அவன் என்ன செய்வான். அனைத்தையும் பார்த்த சுப்பிரமணி என்னவோ சொல்ல வர,    

 “அண்ணா நீ எதுவும் அவன்கிட்ட கேட்கவேணாம்.. அவன் இஷ்டம்போல பண்ணட்டும்..” என்று மஞ்சுளா சொல்லிக்கொண்டு இருக்க,

“அண்ணி.. நீங்களும் தான் கொஞ்சம் விட்டு பிடிங்களேன்…” என்றார் சுப்பிரமணியின் மனைவி சாந்தி..

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட அதிரூபனோ, முகத்தினை சுருக்கி அம்மாவை ஒருபார்வை பார்த்துவிட்டு உண்ண அமர, “ரூபன் எதுவும் டென்சனா இருக்கா??” என்றார் சாந்தி..

அவன் பதில் சொல்லும்முன்னே,  “என்ன டென்சன்.. பொண்ணு பாக்க போறப்போ இப்படிதான் உம்முன்னு இருக்கிறதா?? இவன் முகமே சொல்லுது இவனுக்கு இஷ்டமில்லைன்னு…” என்று லேசாய் சுப்பிரமணி கடிந்துகொள்ள,

“அப்படில்லாம் எதுவும் இல்ல மாமா…” என்றான் அதிரூபன் சன்னமாய்..

நிவின் லீவ் போட்டிருக்க,  அவனோ “ண்ணா.. என்னண்ணா ஆச்சு…??” என்றான் அண்ணனின் தோள் தொட்டு.

“டேய் நிஜமா ஒண்ணுமில்லடா..”

“பின்ன ஏன் இப்படி இருக்க??”

“எப்படியும் இல்லை.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.. நீங்க எல்லாம் கேட்கிறதுதான் எப்படியோ இருக்கு.. இல்லையா நீங்க எல்லாம் போய் பேசி முடிச்சிட்டு வாங்க..” என்று கொஞ்சம் கடுமையாவே சொல்லிவிட, அதன்பின் தான் அனைவரும் வாயை மூடினர்.

தட்டில் என்ன இருக்கிறது என்றுகூட பாராமால், உண்டேன் என்று பேர் செய்து உண்டுவிட்டு கிளம்பிவிட்டான் அதிரூபன்.. மஞ்சுளா அவனை ஒன்றும் சொல்லவில்லை.. எப்படியோ அவன் அங்கே வந்தால் போதும் என்றானது அவருக்கு..

அதிரூபனுக்கோ வீட்டில் இருப்பதே ஒருவித அழுத்தமாய் இருந்தது. அவனுக்கு பெண் பார்க்க போகும் நிகழ்வை மறந்து, கண்மணியை பெண் பார்க்க வரும் அந்த நிகழ்வே மனதினில் ஓட, கடவுளே என்று தன்னை தானே உலுக்கிக்கொண்டான்.  கடைக்கு வந்தவனுக்கோ வேலையும் ஓடவில்லை, ஆக வெறுமெனே நேரத்தை கடத்திக்கொண்டு இருந்தான்.

அங்கே கண்மணி வீட்டிலோ சடகோபன் “அவங்க வர்றதுக்கு முன்னாடியே நம்ம போயிடனும்.. ” என்று சொல்லிக்கொண்டு இருக்க,

“கண்மணி ரெடியாகிட்டா கிளம்பிடலாங்க..” என்றார் சியாமளாவும். கண்ணன் நேராய் கோவிலுக்கு வந்துவிடுவதாய் சொல்லிவிட, கண்மணிக்கோ மனதினுள் ஒரு இனம் புரியாத பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

ஏற்கனவே ஓரிரு முறை பெண் பார்த்து அது தோது வராது போக, இம்முறை கண்ணன் தீபாவிற்காகவாவது இது அமைய வேண்டும் என்ற எண்ணம் அவளுள் இருந்தது. அதிரூபனை பற்றிய சிந்தனை எல்லாம் அவளுக்கு எங்கு ஓடியது என்றே தெரியவில்லை ..

இப்போது மனதில் இருக்கும் எண்ணமெல்லாம், இந்த சம்பந்தம் அமைந்துவிட்டால், அடுத்து எப்படியேனும் கண்ணனை வீட்டினில் பேச வைத்துவிடவேண்டும் என்பதாகவே இருக்க, அதே சிந்தனையோடு தயாராகிக்கொண்டு இருந்தாள்.

ஒருவழியாய் அனைவருமே மத்திய கைலாஷ் கிளம்பும் நேரம் வர, ஒருபுறம் இருந்து அதிரூபன் குடும்பமும், மறுபுறம் இருந்து கண்மணியும் குடும்பமும் கிளம்பிச் செல்ல, அங்கே கோவில் வந்த அதிரூபனின் கண்களோ கண்மணியை தேடியது.

கோவிலின் பின்புறம் கண்மணி குடும்பத்தார் இருக்க, பக்கவாட்டில் இவர்கள் இருந்தனர். அதிரூபனோ ஒருவித அவஸ்தையோடு அமர்ந்திருக்க, அதே உணர்வுதான் கண்மணிக்கும்.. அவளுக்கு நேரெதிரே மாப்பிள்ளையாய் வந்தவன்.. சியாமளாவோ “நல்லா பார்த்துக்கோ…” என்று சொல்ல, இவளால் நேருக்கு நேர் பார்க்க கூட முடியவில்லை.

ஒருவேளை வீட்டினில் என்றால் கூட எப்படியேனும் பார்த்திருப்பாளோ என்னவோ, ஆனால் இப்படி நேருக்கு நேராய் அமர்ந்துகொண்டு பார் என்று சொன்னால் அவள் எப்படி பார்ப்பாள்.. ஆனால் மாப்பிள்ளையாய் வந்திருந்த வருணோ அவளையே பார்த்துகொண்டு இருக்க, அதுவும் ஒரு லஜ்ஜையாய் இருந்தது.

அந்த பக்கம் அதிரூபனுக்கு அருகே இருந்த நிவினோ, “ண்ணா பொண்ண பார்த்துக்கோ…” என்று சொல்ல அவனுக்கு அது மனதில் கூட பதியவில்லை..

“ண்ணா…” என்று நிவின் லேசாய் அவனின் தோளை இடிக்க, “என்னடா…” என்றான் சலிப்பாய்..

“பொண்ணு பிடிச்சிருக்கான்னு அம்மா கேட்குது…”

“ம்ம்ச்…” என்றவன் அப்போது தான் நிமிர்ந்து பார்க்க, சரியாய் அவன் நிமிர்ந்து பார்த்த நேரம் கண்மணியும் வருணும் இந்த பக்கம் வர,  அதிரூபனின் பார்வை அப்படியே அவர்களிலேயே நிலைத்துவிட்டது.

வருண் ஒருவித நிமிர்வோடு முன்னே நடந்துவர, கண்மணி ஒருவித தயக்கத்தோடு அவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நடந்துவந்தாள்.. முடிவை சொல்லுமுன் வருண் கண்மணியோடு பேசவேண்டும் என்று சொல்ல, அவளோ கொஞ்சம் தயக்கமாய் அப்பா முகம் பார்க்க,

சடகோபனோ “தைரியமா பேசிட்டு வா..” என்று அனுப்பி வைத்தார்.

அதன்பொருட்டே இருவரும் எழுந்து இந்தபக்கம் வர, அதிரூபனோ எதிரே அவன் பார்க்கவேண்டிய பெண்ணை மறந்து கண்மணியை பார்த்துகொண்டு இருந்தான்.

இளம் ரோஜா நிற சில்க் காட்டன் சேலையில், லேசான ஒரு ஒப்பனையோடு கொஞ்சம் பதற்றமாக, அதை மறைக்க முயன்று முகத்தினில் சின்னதாய் ஒரு புன்னகை சிந்த முயலும் அவளின் அவஸ்தை தப்பாமல் அவனின் கண்களுக்கு பட, வருண் என்ற ஒருவன் அவளின் அருகே வருகிறான் என்பதெல்லாம் அதிரூபனுக்கு அவுட் ஆப் போக்கஸில் போய்விட்டது..

   

        

                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement