Advertisement

தூறல் – 4

“ம்ம் போய் சொல்லிட்டு வா.. நான் பைக் ஸ்டார்ட் பண்றேன்..” என்று கண்ணன் சொல்லவும்,

“இல்லல்ல இரு இரு..” என்றவள், பின்னே திரும்பி அதிரூபனைக் காண, அவனோ யாரிடமோ பேசிக்கொண்டே எதேர்ச்சையாக இவர்கள் பக்கம் திரும்ப, ‘நாங்க கிளம்புறோம்..’ என்பதுபோல் கண்மணி சைகை செய்ய,

‘யா ஓகே..’ என்று அவனும் தலையை ஆட்டியவனின் பார்வை ஒருமுறை கண்மணி மீது தேங்கி மீள,  

‘என்னாடா இது…’ என்று கண்ணன் இருவரையும் பார்த்தவன், ஒன்றும் சொல்லாது வெளி வர, கண்மணியும் அவனோடு சேர்ந்தே வந்தாள்.

கடையை விட்டு வெளி வந்தவர்களுக்கு ஆளுக்கு ஒருமாதிரி எண்ணம். கண்ணனுக்கு கண்மணி பற்றிய யோசனை. கண்மணிக்கோ அண்ணனுக்கு சட்டை வாங்கிக்கொடுத்த சந்தோசம். அதை காட்டிலும் அவனோடு சேர்ந்து இப்படி வெளியே வந்தது இன்னும் சந்தோசம்.

பொதுவாய் வீட்டினிலேயே  இருப்பவர்கள் வெளிய கொஞ்ச நேரம் சென்றுவந்தால் கூட அவர்களுக்கு அது ஒரு தனி உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும். அப்படித்தான் இருந்தது கண்மணிக்கு.. எப்போதுமே அவளின் முகத்தினில் இருக்கும் புன்னகை இன்று சற்றே விரிந்து மேலுமொரு அழகை அவளுக்குக் கொடுக்க,

“ஜூஸ் குடிச்சிட்டு போலாமா??!!” என்றவளை வித்தியாசமாய் பார்த்தான் கண்ணன்..

பொதுவாய் கண்மணி இப்படியெல்லாம் வாய் விட்டு கேட்கும் ரகமேயில்லை. இவன்தான் அதுவேண்டுமா இது வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அதற்குமே கண்மணி வேண்டாம் என்றுதான் சொல்வாளே தவிர அவளாய் தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்பது மிக மிக அரிது.

“அண்ணா…!!!!” என்று கொஞ்சமே கொஞ்சம் சத்தமாய் அவனை அழைக்க, “ஆ..!!! கண்ஸ்…” என்றான் தன்னையே உலுக்கி..

“என்னாச்சு??!!!”

“ஒண்ணுமில்ல எந்த ஜூஸ் கார்னர் போலாம்னு யோசிச்சேன்…” என்று சமாளித்தவன் பைக்கை கிளப்ப, அவளும் அண்ணனோடு சென்றாள்.

இருவரும் அடுத்து வீட்டிற்கு வர மேலும் ஒருமணி நேரமாகியது.. வீட்டிற்கு வந்ததுமே இருவரும் பார்த்தது அப்பா வீட்டிற்கு வந்துவிட்டாரா என்றுதான். சடகோபன் ஒன்றும் சொல்லமாட்டார் தான். ஆனாலும் என்ன ஏதென்று கேள்விகள் கேட்டு ஒருவழி செய்துவிடுவார்..

“அப்பா சாயங்காலம் மேலதான் வருவர்..” என்றபடி வந்த சியாமளா “எங்க காட்டு..” என்றுசொல்லி கண்ணனின் சட்டையை பார்க்க, “நல்லாருக்கே…” என்றும் சொல்லிக்கொண்டார்..

இப்படியாக அடுத்து அடுத்து இவர்களின் பொழுது நகர, மாலை சடகோபன் வீட்டிற்கு வர, அவரோடு இன்னொருவரும் வந்தார்.. வந்தவர் சும்மா வரவில்லை, கண்மணிக்கு ஒரு வரனோடு வந்தார்.

“சியாமளா…” என்ற சடகோபனின் குரலில், அறையினில் இருந்து வெளிவந்த சியாமளா, அவரோடு வந்திருக்கும் மூர்த்தியை பார்த்ததும், “வாங்கண்ணா…” என்று சந்தோசமாய் வரவேற்க,

“என்னம்மா எப்படி இருக்க?? பசங்க எங்க வீட்ல தான் இருக்காங்களா??” என்று அடுத்தக் கட்ட பேச்சிற்கு போனார் மூர்த்தி..

“நல்லருக்கோம்ண்ணா…” என்ற சியாமளாவை சடகோபன் ஒரு பார்வை பார்க்க, அவரும் லேசாய் தலையை ஆசைத்துவிட்டு, “கண்ணா… கண்மணி…” என்றழைக்க,

ஹாலில் நடக்கும் பேச்சுக்குரல் அவரவர் அறையினில் இருந்த இருவருக்கும் கேட்டாலும், அம்மாவின் அழைப்பிற்காகவே காத்திருந்தது போல் இருவருமே அடுத்தநொடி வெளிவர, மீண்டும் ஒரு வரவேற்பு மற்றும் நலவிசாரிப்பு படலம். கண்ணன் அங்கேயே அமர்ந்துவிட, கண்மணி ஒரு இரண்டு நிமிடம் இருந்துவிட்டு திரும்ப அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.

“அப்புறம் கண்ணா.. வேலையெல்லாம் எப்படி போகுது…” என்று மூர்த்தி கேட்டதும் “நல்லா போகுது அங்கிள்…” என்றவனின் முகத்தினில் அடுத்தது என்னவோ என்ற பாவனை தெரிய,

“உனக்கும் சேர்த்தே பொண்ணு பார்த்துடலாம்னு சொன்னா, உங்கப்பா கேட்கவே மாட்டேங்கிறான்.. யாருக்கு முன்னாடி அமையுதோ அவங்களுக்கு கல்யாணம் பண்றது நல்லது தானே…” என்று மூர்த்தி சொல்ல, அவர் சொன்னது நியாயமான விஷயம் என்றாலும்கூட சடகோபனை எதிர்த்து யார் பேச முடியும்..

கண்ணன் ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொள்ள, சியமாளாவிற்கு மனதினுள் ஆசைதான்.. கண்ணனுக்கும் பெண் பார்க்கத் தொடங்கவேண்டும் என்று. இருவருக்குமே பார்ப்போம், யாருக்கு முதலில் அமைகிறதோ அவர்களின் திருமணம் முதலில் நடக்கட்டும் என்றுதான் அவரும் நினைத்தார்..

ஆனால் சடகோபனோ, “கண்மணிக்கு பார்த்த பிறகுதான் கண்ணனுக்கு..” என்றுவிட்டார்.

ஆசை யாரைவிட்டது, ஆக இதுதான் வாய்ப்பு என்றெண்ணி சியாமளா “மூர்த்தி அண்ணன் சொல்றது சரிதானேங்க.. யாருக்கு எப்போன்னு நமக்கு எப்படி தெரியும்.. அவனுக்கும் பார்க்க ஆரம்பிச்சா யாருக்கு முன்ன அமையுதோ அவங்களுக்கு கல்யாணம் பண்ணலாமே…” என்றார் மிக மிக பவ்யமாக.

கண்ணனுக்கோ ‘ம்மா.. ஏன் ம்மா அவர் கேட்டாரா இப்போ… இல்ல நான்தான் கேட்டேனா இப்போ எனக்கு பொண்ணு பாருங்கன்னு…’என்று நொந்தவன், அப்பாவின் வாயில் இருந்து என்ன வார்த்தைகள் வருமோ என்று ஒரு பீதியுடனே பார்த்தான்..

அவனுக்குத் தெரியும், அவர் திடீரென்று என்ன முடிவு எடுப்பாரோ அவருக்கே வெளிச்சம் என்று.. இதுதான் நேரமென்று அவரும் சரி பெண் பார்ப்போம் என்று சொல்லிவிட்டாள், பின்னே இவன் இவனின் காதலை பற்றி சொல்லவேண்டியது வரும்.

இத்தனை நாள் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி வரும். இதேது கண்மணிக்கு ஒரு திருமணம் நிச்சயம் என்று ஆகிவிட்டால், வீட்டினில் எதையாவது சொல்லி சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சட்டென்று கண்ணனுக்கு மனதினில் ஒரு பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது..

அப்பாவின் முகத்தினையே அவனும் பார்க்க, இத்தனை நாள் அமைதியாய் இருந்த மனைவியும் இன்று இதையே சொல்ல, கொஞ்சம் யோசிப்பது போலிருந்த சடகோபன்,  “எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமே சியாமி…” என்றவர்,

மூர்த்தியை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “இப்போதான் நல்லநேரம் வந்திருக்குன்னு நினைச்சுக்கனும்…” என, சியாமளாவிற்கும், கண்ணனுக்கும் புரியவில்லை இவர் என்ன சொல்கிறார் என்று.

மூர்த்தியோ தன் பேகில் இருந்த ஒரு புகைப்படத்தையும் ஜாதகத்தையும் எடுத்து அவரிடம் கொடுக்க, சடகோபனோ அதை வாங்கி அப்படியே சியாமளாவிடம் கொடுத்தார்.

“மூர்த்தியோட சொந்த அண்ணன் பையன்.. டெல்லில சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை.. போட்டோ பார்த்தே எனக்கு ரொம்ப பிடிச்சது.. ஜாதகமும் நம்ம கண்மணிக்கு பொருத்தமா இருக்கு…” என்று சடகோபன் சொல்ல,

புகைப்படத்தை வாங்கிப் பார்த்த சியாமளாவின் முகத்தினிலும் ஒரு திருப்தி தெரிய, “பையன் தங்கமான பையன்ம்மா.. தாராளமா நம்பி பொண்ணு குடுக்கலாம்..” என்று மூர்த்தியும் சொல்ல, சியாமளா அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை கண்ணனிடம் காட்ட, அவனுக்கும் மாப்பிள்ளையின் தோற்றம் திருப்தியாகவே இருந்தது..

ஆனால் கொஞ்ச நேரம் முன்பு தான் கண்மணி மனதினில் வேறு எதுவும் எண்ணம் இருக்கிறதா என்ற எண்ணமே இவனுக்கு வந்திருக்கிறது.. அப்படியிருக்க, இப்போது அவனின் யோசனையை விட்டுவிட்டு மீண்டும் கண்மணி பற்றிய சிந்தனை வந்து உட்கார்ந்துவிட்டது.

“என்னடா பார்த்துட்டே இருக்க..??” என்று சியாமளா கேட்க,

“இல்லம்மா ஒண்ணுமில்ல..” என்று திரும்ப அந்த போட்டோவினை அம்மாவிடமே கொடுக்க, “ஜாதகம் கூட நம்ம கண்மணிக்கு பொருத்தி இருக்கு..” என்றார் திரும்பவும் சடகோபன்..

“எப்போங்க பார்த்தீங்க???” என்று சியாமளா கேட்கவும்,

“மூர்த்தி இப்படி விசயம்னு சொல்லி போட்டோ காட்டவுமே, வரும்போதே அவனையும் வச்சே ரெண்டு ஜாதகத்தையும் ஜோசியர் கிட்ட காட்டிட்டுத்தான் வர்றோம் சியாமி.. என் போன்ல நம்ம கண்மணி ஜாதகம் போட்டோ எடுத்து வச்சிருந்தேன்ல..” என்று சடகோபன் சொல்லவும்,

“ரொம்ப சந்தோசம்…” என்று சியமாளா சொல்ல, “எனக்கும் ரொம்ப சந்தோசம்மா.. உங்களை எல்லாம் கலந்து பேசி ஒரு முடிவு பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தான்..” என்று மூர்த்தி அடுத்த கட்டத்துக்கு பேச்சினை இழுத்தார்..

“சியாமி கண்மணிக்கிட்ட காட்டிட்டு, விவரம் சொல்லி அவ என்ன சொல்றன்னு கேட்டுட்டு வா…” என்றவரின் சொல்லுக்கு இணங்கி, சியாமளா மகளைப் பார்க்கப் போக,

“ம்மா நீ பேசிட்டு இரு.. நான் போய் காட்டிட்டு வர்றேன்..” என்று வேகமாய் கண்ணன் அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு கண்மணியை காணச் சென்றான்..

அவளோ கதைப் புத்தகம் ஒன்றை கையில் வைத்து அமர்ந்திருக்க, “கண்ஸ்…” என்றவன் அவன் கையில் இருந்த போட்டோவை காட்ட,

“என்னண்ணா??!!” என்றவளும் வாங்கிப் பார்க்க, ஓரளவு வெளிய பேசிக்கொண்டு இருந்தது இவளுக்கும் கேட்டது தான். அதனால் முகத்தினில் அப்படியொன்றும் எவ்வித ரியாக்சனும் இல்லை..

“டெல்லில வேலையாம்.. அப்பாக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல கண்ஸ்.. ஜாதகம் கூட ஓகே போல.. அம்மாக்கு திருப்தி.. நீ என்ன சொல்ற??” என்றவனை கேள்வியாய் பார்த்து வைத்தாள்.

“என்ன கண்ஸ்???!!”

“உனக்கு..??”

“என்ன எனக்கு??”

“இல்லண்ணா.. அப்பாக்கு பிடிச்சிருக்கு.. அம்மாக்கு திருப்தி இதெல்லாம் சொன்ன. ஆனா உனக்கு ஓகேவான்னு எதுவுமே சொல்லலை..” என்று கண்மணி கேட்கவும் கண்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“என்னண்ணா??!!!” என்று மெதுவாகவே கேட்டாலும், அவளின் கேள்வியில் தெரிந்த அழுத்தம் கண்டு,

“ஹா ஹா எந்த வீட்ல பசங்கட்ட கேட்கிறாங்க?? தங்கச்சிக்கோ இல்லை அக்காக்கோ வரன் பார்த்தா டேய் உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு எந்த வீட்ல கேட்கிறாங்க சொல்லு.. ஆனா பொண்ணுக்கு ஒரு அக்கா தங்கச்சி இருந்தா அவங்களை கேட்பாங்க..” என்று கிண்டலாய் அவன் சொல்ல, அவன் சொன்னது புரிந்து அவளும் சிரித்துக்கொண்டாள்..

“சரி சரி சிரிச்சது போதும்… போட்டோ பார்த்துட்டு ஓகேவான்னு சொல்லு..”  என்றவனுக்கு ‘என்ன சொல்ல போகிறாளோ??’ என்று இருக்க,

அவளோ திரும்பவும் ஒருமுறை போட்டோ பார்த்துவிட்டு “ம்ம் ஓகே…” என்றுமட்டும் சொல்லி திரும்பிக் கொடுக்க,

“கண்ஸ்.. என்ன நக்கலா???!!” என்றான் கண்ணன்..

“நா…” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, சியாமளா அங்கே வந்தவர் “கண்மணி.. உனக்கு பிடிச்சிருக்காடா…” என்று சந்தோசமாகவே கேட்க, அவரை ஒரு பார்வை பார்த்தாள்.

அதன் பொருள் என்ன என்று இருவருக்குமே புரியவில்லை.. இத்தனை நேரம் கண்ணனிடம் வாயடியவள், அம்மாவை இப்படி பார்க்கவும்,

“என்னடி.. போட்டோ பார்த்தியே.. அண்ணன் எல்லாம் சொல்லிருப்பான்ல…” என்று மகனின் முகத்தை சியாமளா பார்க்க, அவனோ தங்கையின் முகம் பார்த்தான்..

“ம்ம்…” என்று தலையை உருட்டிய கண்மணியோ “நல்லாருக்கார்ம்மா…” என்றுமட்டும் சொல்ல, ‘இதென்ன பதில்…’ என்று தான் தோன்றியது மற்ற இருவருக்கும்.

“என்னடி நீ… பிடிச்சிருக்குன்னா சொல்லு இல்லையா இல்லன்னு சொல்லு.. அதைவிட்டு நல்லாருக்கார்ன்னு சொன்னா என்ன அர்த்தம்??” என்று சியாமளா வேகமாய் பேச, ‘அதானே…’ என்று பார்த்து வைத்தான் கண்ணன்..

“ம்மா…” என்று சொல்லாமல் அதனை பார்வையால் பார்த்தவளிடம் “என்ன கண்மணி பாக்குற…” என்றார் சியாமளாவும்..

“பின்ன என்னம்மா செய்ய???!!!”

“உன் பதில் சொல்லு கண்மணி.. யோசிக்க டைம் வேணும்னா சொல்லு..”  என்று சியமளா சொன்னதும், கண்மணி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள்..

“அம்மா என்ன சொல்றாங்க நீ என்ன சிரிக்கிற..”

“இல்லண்ணா.. போட்டோ காட்டி பிடிச்சிருக்கா கேட்டா நான் என்ன சொல்ல??!!” என்றாள் பாவமாய்..

‘ஹா..!!!!’ என்று மற்ற இருவரும் அதிர்ந்து பார்க்க, “போட்டோல பார்க்க நல்லாருக்கார்.. அவ்வளோதான் சொல்ல முடியும் ..” என்று இருவரையும் பார்த்து கண்மணி சொல்ல, இவளுக்கு இப்படியும் பேசத் தெரியுமா என்றுதான் தோன்றியது இருவருக்கும்.

“கண்மணி..!!!!” என்று சியாமளா வியந்து பார்க்க,

“நான் சொன்னது சரிதானே ம்மா.. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் சரிதான்..” என்று அவள் சொன்னதும், கண்ணனுக்கு தான் படக்கென்று இதயம் நின்று பின் துடித்தது போலிருந்தது..

ஆனால் மகளின் பதிலில் சியாமளாவிற்கு மனம் குளிர்ந்துவிட “நிஜமாதான் சொல்றியா???” என்றார் திரும்ப கேட்கும் ஆவலில்..

“ம்மா.. இப்பவும் சொல்றேன் உங்க எல்லாருக்கும் சரின்னா எனக்கும் சரி..” என்று அவள் சொல்லும் போதே “ரொம்ப சந்தோசம் டி.. நான் போய் அப்பாக்கிட்ட சொல்றேன்…” என்று அவர் சென்றுவிட, கண்ணன் அங்கேயே நின்றான்.

“என்னண்ணா??!!!”

“உனக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா கண்ஸ்…”

“ம்ம்ச்…”

“சொல்லும்மா.. நிஜமாவே பிடிச்சிருக்கா.. இல்லை நாங்க எல்லாம் கேட்டோம்னு சொல்றியா???” என்றவனை இப்போது நன்கு முறைத்தே பார்த்தாள்..

“சொல்லு கண்மணி..”

“போட்டோ பார்த்து ஒருத்தரை பிடிச்சிருக்கான்னு எப்படி சொல்ல முடியும்???” என்று கேட்டவளுக்கு அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

உண்மையும் அதுதானே.. யாரோ ஒருவன்.. இதுநாள் வரைக்கும் தெரியாது. எதோ மூர்த்தி அங்கிளின் சொந்தம் என்பதுமட்டுமே இப்போது வரைக்கும்.. அப்படியிருக்கையில் ஒருவரின் போட்டோ பார்த்து பிடித்திருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?? அதே நிலைதான் கண்மணிக்கு..

அவள் சொல்வது கண்ணனுக்கு புரிந்தாலும், “ஹ்ம்ம் நல்லா யோசிச்சு சொல்லிருக்கலாம்ல… ஒருவேளை நேர்ல பார்த்து பிடிக்கலைன்னு ஆச்சுன்னா??” என்றான் யோசனையாய்.

“ஒருதடவ நேர்ல பார்த்தா மட்டும் எப்படி ஒருத்தரை பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்ல முடியும் ண்ணா…” என்றதுமே கண்ணனின் பார்வையை பார்க்க வேண்டுமே…

கண்மணியின் பதிலில் திகைத்துபோய் பார்த்தவன் “நீ என்னவோ ஒரு முடிவுல தான் இருக்க போ…” என்றுசொல்ல,  “அப்படில்லாம் இல்லண்ணா..” என்றாள் அவளும்..

“ம்ம்ச் கொஞ்சம் யோசிச்சு சொன்னா என்ன கண்ஸ்??”

“இப்போ எதுக்குண்ணா இவ்வளோ கேள்வி கேட்கிற..??” என்றாள் முகத்தினில் ஒருவித சலிப்பை காட்டி.

எப்போதுமே சிரிக்கும் முகத்தினில் சலிப்பு வந்தால் அது அவனுக்குப் புரியாதா என்ன, “இல்ல கண்ஸ்.. ஒருவேளை உனக்கு…” என்று அவன் சொல்லும் போதே,

“நான் யாரையும் லவ் பண்றேன்னு நினைக்கிறியா???” என்று இவள் முடித்திருந்தாள்..

“இல்ல அப்படி இல்ல..” என்றவனின் முகத்தை பார்த்ததும் அவளுக்கு சலிப்பு நீங்கி மீண்டும் சிரிப்பு வர,

“லவ் எல்லாம் நம்ம நினைச்சதும் வருமாண்ணா??!!” என,

“வராது தான்.. ஆனா சில நேரம் சிலது எல்லாம் நம்ம யோசிச்சு பார்த்தா தான் புரியும்…” என்று கண்ணன் சொன்ன, 

அதே நேரம் திரும்ப வந்த சியாமளா “அடுத்த புதன்கிழமை அவங்களை வர சொல்லலாமான்னு அப்பா கேட்கிறார்..” என்றார்..

“ம்ம் சரிம்மா…” என்றாள் இவளும்..

ஆனால் கண்ணனோ “ம்மா என்ன அவசரம்.. நம்மளும் விசாரிக்க வேண்டாமா?? உடனே வர சொன்னா என்ன அர்த்தம்??” என்று கேட்க,

“அப்பா ஏற்கனவே விசாரிச்சுட்டு தான் வந்திருக்கார்டா… மூர்த்தி அண்ணா சொல்றதுக்கு முனநாடியே இந்த வரன், ப்ரோக்கர் மூலமா வந்திருச்சு…” என்று சியாமளா சொல்ல,

‘ஓஹோ..!!!!’ என்று அண்ணன் தங்கை இருவருமே கோரஸ் பாட,  அடுத்தது என்ன அங்கே அடுத்தவாரம் பெண் பார்க்கும் படலத்திற்கு இப்போது இருந்தே தயாராகத் தொடங்கினர்.

அங்கே அதிரூபனுக்கோ, வேலைகள் சரியாய் இருக்க, அந்த நாள் அவனுக்கு அப்படியே நகர்ந்துவிட்டது. மறுநாளும் கூட வழக்கம் போலவே செல்ல, அன்றைய இரவு உணவு நேரத்தில் தான் மஞ்சுளா திரும்பவும் ஆரம்பித்தார்.

“ரூபன்.. என்ன முடிவு பண்ணிருக்க???” என்று அவர் கேட்ட பின்னர்தான், அவனுக்கு நினைவே வந்தது..

ஆனாலும் முகத்தினில் எதுவும் காட்டாது “ம்ம்ம் சொல்றேன்ம்மா..” என்றவன் உண்ணத் தொடங்க, நிவின் மெதுவாய் அவனருகே குனிந்து “நீ யோசிக்கவேயில்லாம என்ன சொல்ல போற??” என்றான்..

மக்கள் இருவரும் பேசிக்கொள்வதை பார்த்த மஞ்சுளா “ரெண்டுபேருக்கும் என்ன பேச்சு.. தட்ல இருக்கிறதை பார்த்து சாப்பிடுங்க..” என்று ஒரு அரட்டல் விட, அப்போதே அவரின் மனநிலை என்னவென்று அதிரூபனுக்கு புரிந்து போனது..

தான் ஏதாவது மாறுபாடாய் பேசினால், நிச்சயம் அம்மா இன்று வீட்டினில் ஒரு கலவரம் செய்வார் என்று அவனுக்கு புரிந்துபோக, அவரைப் பார்க்கவும் அவனுக்கு பாவமாய் தான் இருந்தது.

என்னதான் இத்தனை பெரிய பிள்ளைகள் இருந்தாலும், வீட்டினில் நல்லது கெட்டது ஒன்று என்றால் அவரின் அண்ணன் சுப்பிரமணியின் தயவை பார்க்கும் நிலை இப்போது.. மஞ்சுளா அடிக்கடி சொல்வதும் இதை தான்..

“எத்தனை நாளுக்குத்தான்டா நான் எல்லாத்துக்கும் என் அண்ணனையே கூப்பிடுறது.. உனக்கு ஒரு நல்லது பண்ணிட்டா பின்ன புருஷன் பொண்டாட்டியா நீங்க பாக்க மாட்டீங்களா..??” என்று.

கையில் வைத்திருந்த தோசையோடு, பார்வை எல்லாம் மஞ்சுளாவின் மீது அதிரூபன் பதித்திருக்க, “என்னடா..??!!” என்றார் அவரும் கரிசனையாய்..

அப்பா இறந்தபின்பு அம்மாவிடம் கொஞ்சம் நிமிர்வு தளர்ந்து விட்டதாகவே தோன்றியது அதிரூபனுக்கு. சில நேரங்களில் அவரினுள் இருக்கும் ஆதங்கத்தை எல்லாம் கோபமாய் காட்டுகிறாரோ என்றும் கூட தோன்றியது. நிஜமாகவே அதிரூபனுக்கு அம்மா காட்டிய இரண்டு புகைப்படங்களையும் பார்த்து எந்த எண்ணமும் மனதினில் எழவில்லை..

‘பார்த்ததுமே ஒரு ஸ்பார்க் வரணும்..’ என்று நிவின் அடிக்கடி சொல்வான்.. அந்த ஸ்பார்க் ஒரு புள்ளி அளவு கூட இவனின் மனதில் எங்குமே வரவில்லை.. அப்படியிருக்க என்ன சொல்ல என்று தான் இப்போது யோசித்துக்கொண்டு இருந்தான். ஆனால் அம்மாவை பார்க்கவும் பாவமாய் இருக்க,

“ம்மா…” என்றான் மெதுவாய்.

“சொல்லு ரூபன்…” என்று மஞ்சுளா சொல்ல, அவரின் மற்றொரு கரத்தினை பிடித்தவன் “உனக்கு அந்த ரெண்டு பொண்ணுல எந்த பொண்ணு பிடிச்சிருக்கோ அவங்க வீட்ல பேசு..” என,

நிவினிக்கு ‘என்னடா இது சண்டை சீன் வரும்னு பார்த்தா சென்டிமெண்ட் சீன் போகுது…’ என்றுதான் தோன்றியது..

“எனக்கு அந்த ரெண்டு பேருமே…” என்று மஞ்சுளா சொல்ல வரும் முன்னமே,

“ம்மா ப்ளீஸ்.. எனக்கு நிஜமா இதுல முடிவு பண்ண தெரியலை.. நீ எனக்கு நல்லது மட்டும் தான் செய்வ.. சோ இதுல உன்னோட முடிவுதான்.. நீ பார்த்து இந்த பொண்ணுதான்னு சொல்லு.. நான் சரின்னு சொல்றேன்.. அதைவிட்டு என்கிட்டே முடிவு கேட்டா சத்தியமா எனக்கு சொல்ல தெரியலை..” என்று அதிரூபன் உறுதியாய் சொல்லவும்,

“ம்ம் சரிடா…” என்ற மஞ்சுளாவின் முகத்தினில் ஒரு பெருமித சாயல்..

நிவினோ “என்ன ப்ரோ இப்படி பண்ணிட்ட…” என்று உதட்டினை பிதுக்கி சைகை செய்ய,

“டேய் சாப்பிடு டா..” என்ற அதிரூபனும் அடுத்து உண்ணத் தொடங்க, அடுத்து வந்த நேரம் அங்கே அமைதியாகவே கழிந்தது… 

       

 

              

           

 

     

                  

                       

    

              

Advertisement