Advertisement

                                தூறல் – 23

“ஏன் ப்பா ஏன் இது ஒத்துவராது சொல்றீங்க??” என்று கண்ணன் மிக மிக தன்மையாகவேத்தான் கேட்டான் சடகோபனிடம். ஆனால் அவனின் பொறுமையும் எல்லை கடந்துகொண்டு இருப்பது அவனின் முகம் பார்த்தாலே சியாமளாவிற்கு தெரிந்தது.

கண்மணியோ எனக்கே தெரியாமல் இத்தனை நடந்திருக்கிறதா என்ற அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதிரூபனை அப்பா மறுப்பது கண்டு மனம் பெரும்வேதனை கண்டது.

‘இதென்ன தலையை சுத்தி மூக்கை தொடுறது..’ என்ற எண்ணமும் கூடவே தோன்ற, கண்ணனைப் பார்த்தாள் ‘நான் சொல்லிவிடுகிறேன்..’ என்பதுபோல்.

அவனோ ‘இப்போ வேணாம்..’ என்று அவளை அடக்க, கண்மணிக்கு பெரும் அவஸ்தைதான்.

இத்தனைக்கும் சியமளாவிற்கும் தெரியாது கண்மணி அதிரூபன் விசயம். ‘அம்மாக்கிட்ட மட்டுமாவது சொல்றேனே ண்ணா..’ என்றுதான் கண்மணியும் சொன்னாள்.

ஆனால் கண்ணனோ ‘ஷ்.. கொஞ்சம் பொறுமையா இரு கண்மணி.. அம்மாக்கிட்ட நேரம் பார்த்துதான் சொல்லணும்..’ என்று அதற்கும் தடுப்பணை போட்டான் உடன்பிறந்தவன்.

இவை அத்தனையுமே அலங்கார் சென்றுவந்த பிறகு நடந்தவை. அதிரூபன் கண்மணியை மேலே கடிகார பிரிவிற்கு அழைத்துவர, கண்மணி முகத்தில் இருந்த சந்தோசமே கண்ணனுக்கு போதுமானதாய் இருந்தது அதிரூபனை மனதார ஏற்றுகொள்ள.

வீண் அலம்பல் இல்லை. தேவையில்லாத அலட்டல் இல்லை. பார்த்ததுமே இயல்பாய் பேசும் ரகமாய் அதிரூபன் இருக்க, என்னவோ கண்ணனுக்கு இத்தனை நாள் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய், சட்டென்று அவனை பிடித்துப் போனது.

அதிரூபன் ஒருவார்த்தை கூட பெங்களூருவில் நடந்ததை பற்றி கேட்கவில்லை. ஆனால் கண்ணனே பேசிவிட்டான்.

“சாரி அதிரூபன்.. நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு பண்ணலை..” என்று தயங்கியே ஆரம்பிக்க,

“அட அதெல்லாம் விடுங்க.. எனக்கும் அந்த நேரம் கோபம் வந்தது.. பட் இப்போ இல்ல..” என்று சட்டையில் ஒட்டிய தூசியாய் அதிரூபன் இந்த விஷயத்தை தட்டிவிட, கண்மணியோ கண்களை இடுக்கி முறைத்தாள் அவனை.

யாரும் அறியாது அவளைப் பார்த்து டக்கென்று கண்கள் சிமிட்டியவன், செல்லமாய் ஒரு புன்னகையும் வீச ‘அடப்பாவிங்களா.. ரெண்டு பேரும் என்னை எவ்வளோ டென்சன் பண்ணிட்டு இப்போ கேசுவலா இருக்கீங்க…’ என்று அண்ணனையும் அதிரூபனையும் மாறி மாறி பார்த்து நின்றிருந்தாள்

தீபாவோ “என்ன பல்ப் லாஸ்ட்ல உனக்கா??” என்று இவளின் காதை கடிக்க,

“எல்லாம் என்னை டென்சன் பண்ணிட்டாங்க..” என்றாள் முனுமுனுப்பாய் கண்மணி.

“சரி சரி விடு கண்ஸ்..” என்று கண்ணன் சொல்ல,

“விடேன் கண்மணி…” என்று அதிரூபனும் கூறியபடி, அவளின் கரத்தினை பின்னே இறுகப் பிடிக்க,  ‘அச்சோ அண்ணா தீப்ஸ் எல்லாம் இருக்காங்க…’ என்று அவளின் இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது.     

இளையவர்கள் சட்டென்று ஒருவரோடு ஒருவர் ஒன்றிவிட, ஒருவழியாய் வாட்ச் டிசைன் பார்த்து ஆர்டர் முடித்து, அதிரூபனின் பெங்களூரு பயணம் எல்லாம் விசாரித்து, அதிரூபன் வீட்டினில் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேச, வந்தும் கூட வெகு நேரம் ஆகிவிட, சியாமளா இரண்டு முறை அழைத்துவிட்டார்.. கண்மணிக்கோ கிளம்பவே மனமில்லை.

கண்ணனோ “கிளம்பலாமா கண்ஸ்…” என்றுசொல்ல, “ம்ம்..” என்று சொன்னாளே தவறிய சிறிது கூட நகரவில்லை.

தீபாவோ “நம்ம கீழ போய் கொஞ்சம் ட்ரெஸ் பாக்கலாம்.. கண்ஸ் அடுத்து வரட்டும்..” என்றுசொல்லி கண்ணனை அழைத்துக்கொண்டே கீழே செல்ல,

“நேரமாச்சு தீப்ஸ்…” என்றபடியே கண்ணன் இறங்கிப் போக,

“செம குடும்பம் கண்மணி…” என்றான் அதிரூபன் கொஞ்சம் சத்தமாய் சிரித்து.

கண்மணி அதற்கும் பதில் சொல்லாது ஒருபார்வை மட்டுமே பார்க்க, “அட நம்ம பேசிக்கணும்னு தான் ம்மா விட்டுட்டு போயிருக்காங்க..” என்று இவன் சொல்ல,

“என்னை அவ்வளோ பேசிட்டு, இப்போ எங்க அண்ணனை பார்த்ததுமே இப்படி சிரிக்கிறீங்க??” என்றாள் படபடவென.

“ஹா ஹா அதுக்காக சட்டையை பிடிச்சு சண்டை போட முடியுமா என்ன?? அப்படி பண்ணா அது உன்னை ஹர்ட் பண்ண மாதிரி..” என்று கேட்கையிலேயே கண்மணியின் வழக்கமான புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள,

“இத இத இதை தான் எதிர்பார்த்தேன்..” என்று அதிரூபன் அவளின் இதழைக் சுட்டிக் காட்ட,

“ச்சூ..” என்று அவனின் கைகளை தட்டிவிட்டாள்..

“கை தட்டிவிட்ட.. என் கண்ணை என்ன செய்வ?? நீ பேசுறப்போ என் பார்வை எல்லாம் அங்கதான் இருக்கு அப்போ என்ன பண்ணுவ??” என்ற அதிரூபனின் குரலில் அப்படியொரு உல்லாசம்.

“ரொம்பத்தான்…” என்ற கண்மணியின் குரலோ சிணுங்களில் முடிய, வார்த்தைகள் அற்று தான் நின்றிருந்தாள்..

இது என்ன மாதிரி உணர்வு என்று அவளால் விளங்கிக்கொள்ளவும் முடியவில்லை. கீழே ஓடிவிட வேண்டும் போலவும் இருந்தது, அதே நேரம் இங்கேயே அதிரூபனோடேயே இருந்துவிட வேண்டும் போலவும் இருக்க, அவளுக்கே எதுவும் புரியவில்லை அவளின் நிலை..

அதிரூபனோ அவளின் மௌனம் கண்டு “கண்மணியே பேசு… மௌனம் என்ன கூறு.. கன்னங்கள் புது ரோசாப்பூ.. உன் கண்கள் இரு ஊதாப்பூ”  என்று அவளைப் பார்த்து மெதுவாய் பாட, அவளுக்கோ மௌனத்தோடு சேர்த்து வெக்கமும் கலந்துகொள்ள, நிஜமாகவே ரோஜாபூவின் நிறம் கொண்டது கண்மணியின் முகம்.

அதிரூபனோ “ஹோய் ஹோய்…” என்று உல்லாசமாய் சிரிக்க,

“அச்சோ.. போதும்.. நான் கிளம்புறேன்…” என்றவள் அவனின் தோளில் கை வைத்து தள்ளிவிட்டு செல்ல,

“ஹே கண்மணி…” என்று அவளின் கரத்தினை பிடித்து நிறுத்தியவன் மெதுவாய் அவளின் அருகே வர,

“எ.. என்ன??!!” என்றாள் ஒருவித பதற்றத்தில்..

இமைக்காது அவளின் முகத்தினையே பார்த்தவன், “ஒண்ணுமில்ல போ..” என்று சொல்ல,

“ஹா?? என்னது??!!” என்றாள் நம்பாது.

“ஒண்ணுமில்ல கண்மணி கிளம்புன்னு சொன்னேன்..” என்றவன் தன் பிடியை விட்டு தள்ளி நிற்க, புரியாத ஒரு பார்வை பார்த்தாள்.

“நேரமாச்சு இல்லையா… அடுத்து உன் அண்ணன் தேடி வர்றதுபோல வச்சிட கூடாது…” என்றவன் “வா கீழ போகலாம்..” என்றுசொல்லி அவனே அழைத்து கீழேயும் அழைத்து வந்துவிட்டான்.   

தீபாவோ ‘படா ஆளுதான்..’ என்று கண்மணியிடம் சொல்ல, அடுத்து அனைவரும் கிளம்ப,

கண்ணனோ “எங்க வீட்ல நேரம் வர்றபோ நானே பேசிட்டு சொல்றேன். அதுக்கப்புறம் உங்க வீட்ல இருந்து வந்து பேசினா நல்லாருக்கும்..” என,

“நான் பார்த்துக்கிறேன்..” என்று அதிரூபனும் சொல்லிவிட்டான்.  

கண்மணிக்கு இப்போது தான் நிம்மதியாய் இருந்தது. அப்பாடி என்ற உணர்வு, ஆனால் வீட்டிற்கு வரும்போதே கண்ணனிடம் சொன்னாள் “அம்மாக்கிட்ட மட்டும் சொல்றேனே ப்ளீஸ்..” என்று.

“இப்போதைக்கு வேணாம் கண்ஸ்..” என்று கண்ணன் சொல்லிட, அடுத்து இரண்டு நாட்களின் சியாமளாவே கேட்டார் கண்ணனிடம்.

‘நான் சொன்னது என்னாச்சு கண்ணா.. விசாரிச்சியா??.. உனக்கு ஓகே வா..’ என்று.

“ம்ம் எனக்கு ஓகே தான் ம்மா.. அப்பாக்கிட்ட தான் எடுத்து சொல்லணும்..” என்றவன் அடுத்து ஒரு நேரம் பார்த்து சடகோபனிடம் பேசுகிறேன் என்றும் சொன்னான்.

சரியாய் சடகோபன் சியாமளா திருமண நாளும் அடுத்து வர, ஏற்கனவே இவர்கள் ஆர்டர் கொடுத்திருந்த கடிகாரங்களையும் அதிரூபன் தயார் செய்து கொடுத்துவிட, “அப்பா.. அம்மா.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..” என்று வாழ்த்து கூறி கண்ணனும் கண்மணியும் தங்களின் பரிசினை கொடுக்க,

“ஹேய்.. அழகா இருக்கேடா..” என்றபடியே சந்தோசமாய் சியாமளா வாங்கிப் பார்த்தார்.

சடகோபனோ “நல்லாருக்கே டிசைன்.. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி.. விளம்பரம் எல்லாம் கூட போடுறானே.. இதுமாதிரி..” என்று அவரும் கையில் கட்டிப் பார்க்க,

“ப்பா.. இது உங்க ரெண்டு பேருக்காகவும் ஸ்பெசலா சொல்லி வச்சு பண்ணது..” என்றான் கண்ணன்..

கண்மணியோ அதிரூபன் செய்த கடிகாரம் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பிடித்துப்போனது எண்ணி அவளொரு பூரிப்பில் நிற்க, சியாமளாவிற்கு புரிந்துபோனது எங்கே இதனை சொல்லி செய்திருப்பார்கள் என்றும், யார் செய்திருப்பார்கள் என்றும்.

மகனை ஒருபார்வை பார்க்க, “ம்மா அன்னிக்கு நீ கூட சொன்னியே.. அவங்க கடைல போய் ஆர்டர் கொடுத்தோம்..” என்று கண்மணியைப் பார்த்தவன்,

“ரொம்ப நல்ல மாதிரி இருக்காங்கம்மா..” என்றான் அவனும் அம்மாவை ஒரு பார்வை.

ஏற்கனவே சியாமளா இரண்டொரு முறை சடகோபனிடம் ஜாடை மாடையாய் அதிரூபன் வீட்டினை பற்றி பேசியிருக்க, அவரோ அதனை பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது மகனும் அதையே சொல்ல,           

சடகோபனோ, , “என்ன சியாமி இதெல்லாம் உன் வேலையா??” என்று கேட்க,

“இ.. இல்லைங்க.. அது.. மனசுல தோணிச்சுன்னு கண்ணன் கிட்ட சொன்னேன்..” என்றார் தயக்கமாய்.

“நமக்கு ஆயிரம் தோணும்.. ஆனா எல்லாத்தையும் செய்ய முடியுமா?? இதென்ன கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்கற கதையா.. வாழ்க்கை… அதுவும்  பொண்ணு கொடுக்குறப்போ நிறைய நிறைய யோசிக்கணும்.. இதுக்கு முன்னாடி நமக்கு கிடைச்ச பாடமே இன்னும் மறையலை..” என்று சடகோபன் புத்திமதி சொல்ல,

“ப்பா… நான் கூட விசாரிச்சேன் ப்பா… நல்ல மனுசங்களா தான் இருக்காங்க..” என்றான் கண்ணன்..

கண்மணி மூவரையும் மாறி மாறி பார்த்துகொண்டு இருக்க, சடகோபன் மகளின் முகம் பார்த்தவர் “என் பொண்ணுக்கு என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்.. இப்போதைக்கு உன்னோட கல்யாணம் முடியட்டும் கண்ணன்.. அதுக்கப்புறம் எதுவும் பார்க்கலாம்..” என்றுவிட்டார் முடிவாய்.

கண்மணிக்கோ ஒருவித குழப்பமே சூழ்ந்தது. அம்மா சொன்னதை அண்ணன் ஏன் தன்னிடம் சொல்லவில்லை. இப்போதும் கூட தன்னிடம் எதுவும் சொல்லாமலே, கேட்காமலே எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள் என்று தோன்ற, அனைவரும் இருக்கும்போதே பட்டென்று எழுந்து அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

சியமளாவோ ‘என்னடா…’ என்று மகனைப் பார்க்க, கண்ணனுக்குப் புரிந்தது கண்மணி ஏன் எழுந்து போனாள் என்று. ஆனால் எதுவும் சொல்லாது அப்பாவினைப் பார்க்க,

“இப்போ இந்த பேச்சு தேவையா கண்ணா?? பாரு கண்மணி சங்கடப்பட்டு எழுந்து போறா..” என்று சடகோபனும் கடிய,

“ப்பா… கண்மணிக்கு நமக்கு பக்கத்துலையே இருக்கணும்னு தான் ப்பா ஆசை.. அவ பெரிய வசதி அது இதெல்லாம் எதிர்பார்க்கலை.. சிம்பிளானா லைப் தான் வேணும்னு நினைக்கிறா..” என்று மெதுவாய் கண்மணியின் விருப்பத்தினை சொன்னான் கண்ணன்.

சடகோபனின் முகமோ யோசனைக்குப் போக, சியாமளாவோ “நாங்க ஒன்னும் இப்போவே அவளுக்கு செய்யனும்னு சொல்லலை.. கண் முன்னாடி ஒரு இடம் சரியா படுத்து அதை கொஞ்சம் விசாரிக்கலாமேன்னு தானேங்க சொல்றோம்…” என்று என்று எடுத்து சொல்ல,

“ம்ம்ம் நீங்க சொல்றது எல்லாம் சரி.. ஆனா அதுக்கு எனக்கென்னவோ இந்த கடை வச்சிருக்கவங்க, பிசினஸ் பண்றவங்களுக்கு கொடுக்கணுமான்னு இருக்கு.. வேலைக்கு போயி மாசா மாசம் சம்பளம் வாங்குற ஆளுன்னா கண்மணி வாழ்க்கையும் நிம்மதியா போகும் பாருங்க…” என்று அவர் அவரின் நியாயத்தை சொல்ல, கண்ணனுக்கோ அப்படியொரு கடுப்பாய் வந்தது. 

ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை.. இப்போதைக்கு எதையாவது சொல்லி பின் சடகோபன் ஒரேதாய் இதனை மறுத்துவிட்டால் உள்ளதும் மோசம் போய்விடும் என்று,

“சரிப்பா.. எனக்கும் அம்மாக்கும் மனசுல தோணிச்சு.. அதான் சொன்னோம்..” என்று இந்த பேச்சினை முடிக்க,

“சொன்னது தப்பில்லடா அதை கண்மணி முன்னாடி சொன்னது தான் தப்பு.. பாரு எந்திரிச்சு போயிட்டா ..” என்றார் கொஞ்சம் வருந்தி..

“கண்ஸ் கிட்ட நான் பேசிக்கிறேன் ப்பா..” என்றவனிடம், “ம்ம்ம் எதுன்னாலும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யக்கூடாது கண்ணா..” என்றவர் “பத்திரிக்கை அடிச்சு நாளைக்கு வந்திடும்.. கோவில்ல வச்சு சாமி கும்பிட்டு எல்லாத்துக்கும் கொடுக்க ஆரம்பிக்கணும்.. அடுத்த வாரம் ஒரு நல்ல நாள் பார்த்து முஹூர்த்த சேலை எடுக்கணும்.. உனக்கு டேட் எது ப்ரீன்னு பாரு..” என்று அவர் கண்ணனின் திருமண வேலைகளை அடுக்க,

அங்கே கண்மணியோ தீபாவிற்கு அழைத்து பொரிந்து தள்ளிவிட்டாள். கண்மணிக்கு எங்கிருந்து தான் அப்படியொரு கோபம் வந்ததோ தெரியவில்லை. ஆனால் இம்முறை கண்ணன் செய்தது சரியில்லை என்று தோன்றவும், அப்பா அம்மாவின் முன்னே அண்ணனை ஒன்றும் சொல்லமுடியாது போக, தீபாவிற்கு அழைத்து பேசிவிட்டாள்.

“ஏன் தீப்ஸ் இப்படி செய்யணும்.. எனக்கு தெரியாம அம்மாவும் அண்ணனும் பேசிருக்காங்க.. சரி அம்மாக்குத்தான் தெரியாது.. ஆனா அண்ணனுக்கு தெரியுமே.. இப்போ நான் சொல்றேன் சொன்னதுக்கும் வேண்டாம்னு சொல்றான்..” என்றாள் மூச்சு வாங்க..

கண்மணியின் குரலிலேயே தீபாவிற்கு அங்கிருக்கும் சூழல் புரிந்துவிட, அவளால் ஓரளவு கண்ணன் ஏன் இப்படி செய்திருப்பான் என்பதும் கூட யூகிக்க முடிந்தது..

“ம்ம் சரி கண்ஸ்.. நீ டென்சன் ஆகாத.. நான் பேசுறேன்..” என்றவளிடம்,

“அதெல்லாம் வேணாம் தீப்ஸ்.. நான் ஜஸ்ட் ஷேர் பண்ணனும்னு தோணிச்சு பண்ணேன்.. அண்ணன்கிட்ட நா.. நானே பேசிக்கிறேன்.. நீ எதுவும் கேட்காத தீப்ஸ்..” என்றாள்.

“ம்ம்ம் சரி நீ எதுவும் வொர்ரி பண்ணிக்காத கண்ஸ்.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.. கொஞ்சம் பொறுமையாவே போகலாம்.. தப்பில்ல..” என்று தீபா அவளுக்குத் தெரிந்த ஆறுதல்களை சொல்லி முடித்து வைக்க, கண்ணன் வந்தான் தங்கையை தேடிக்கொண்டு..

கண்மணியோ அவனை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள, “கண்ஸ்.. எனக்குத் தெரியும்.. உன்னோட கோபம் எதுக்குனு…” என்றபடி அவளின் முன்னே அமர,

“ஏன் ண்ணா எல்லாரும் சேர்ந்து என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க?” என்றாள் ஆற்றாமையாய்.

நிஜமாகவே மனது கண்மணிக்கு நிறைய வலித்தது. கண்ணனின் காதல் விஷயம் கேள்வி பட்டதுமே சியாமளா சடகோபன் இருவரின் முகமும் சடுதியில் வெளிப்படுத்திய ஒரு வலி இன்னமும் அவளின் கண்களில் வந்துபோனது. அதிரூபன் மீதான காதல் என்பது அவளையும் மீறி நடந்த ஒன்றுதான். நம் மனது அறிந்த உண்மையை, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும்.

அப்படி அவள் ஏற்றுகொண்ட, உணர்ந்துகொண்ட உண்மையே அதிரூபன் மீதான நேசமென்பது. அவளைப் பொருத்தமட்டில் அதில் தவறென்பது எதுவுமேயில்லை. ஆனால் நிச்சயம் வீட்டில் இதை முன்னிட்டு சில மனஸ்தாபங்கள் வரும் என்பது அவள் அறிவாள். ஆனால் இப்படி இடியாப்ப சிக்கல்கள்  வருவதை அவள் துளியும் விரும்பவில்லை. அவளின் இந்த உணர்வுகளே ஆற்றாமையாய் வெளிப்பட,

“கண்ஸ்.. எனக்குமட்டும் இதெல்லாம் இப்படி செய்யனும்னு ஆசையா??” என்றான் கண்ணனும்..

“நான்தான் சொல்றேன் சொல்றேனே ண்ணா.. நீ ஏன் வேணாம் சொல்ற??”

“இப்போ சொன்னா கண்டிப்பா அப்பா அம்மா ரெண்டுபேருமே ஹர்ட் ஆகுவாங்க கண்மணி..” என்றான் உணர்ந்து.

அவன் சொல்வதும் நிஜமே.. ஆனால் இதற்கு பிறகு இனி எப்போது சொன்னாலும் கூட அவர்கள் மனது நோவது உறுதி தான். ஆனால் சொல்லித்தானே ஆகவேண்டும். வேறு வழியும் இல்லையே. அதை கண்மணியும் சொல்ல,

“அம்மா மனசுல இப்படியொரு எண்ணம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல கண்மணி.. அம்மா என்கிட்டே சொல்றபோ எனக்கே ஆச்சர்யம்தான்.. அம்மாக்கிட்ட சொன்னா கூட புரிஞ்சுப்பாங்க.. பட் அப்பாக்கிட்ட.. அதுவும் நீ லவ் பண்றன்னு சொன்னா கண்டிப்பா அதை தங்கிக்கமாட்டார். ஏற்கனவே ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தாச்சு.. அதுனாலதான் வேண்டாம் சொல்றேன்..”என, கண்மணியோ மனதிலும் உடலிலும் ஒருவித சோர்வை உணரத் தொடங்கிவிட்டாள்.

உடல்நல கேடுகள் மட்டும் உடலையும் மனதையும் களைப்படைய செய்வதில்லை. சூழ்நிலை மாற்றங்களும், மனதிற்கு பிடிக்காத சங்கதிகளும் கூட ஆளை அசத்திவிடுகிறது. அலுப்படைய செய்துவிடுகிறது. கண்மணியும் இப்போது அதையே உணர,

கண்ணனோ “சாரி கண்ஸ்… அப்பாக்காக மட்டும்தான் இப்போதைக்கு நான் இதை சொல்லவேணாம் சொல்றேன்…” என்றான் அவளின் நிலையை புரிந்து..

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவள்,

“உன்னோட கல்யாணம் முடியட்டும்ணா.. அதுவரைக்கும் எந்த பேச்சும் வேண்டாம்..” என்றாள் உறுதியாய்..

“ஹ்ம்ம்.. சரி கண்ஸ்.. நீ.. நீ எதுவும் நினைச்சுக்காத..” என்றான் இன்னமும் அவளை சமாதனம் செய்யும் பொருட்டு..

“ம்ம்ம்..” என்று இமைகளை மூடித் திறந்தவள், “நீ போ.. நான்.. நான் நல்லாத்தான் இருக்கேன்..” என்று அவனை அனுப்பியவளை பெரும் யோசனை சூழ்ந்தது.

மனதிலோ பலவேறு எண்ணங்கள்.. ஆனால் எதுவுமே ஒரு தெளிவில்லாது இருக்க, அதிலிருந்து மீளவும் அவளுக்கு மனதில்லை. இதெல்லாம் அதிரூபனிடம் சொல்லலாமா என்றுகூட அவளுக்கு விளங்கவில்லை. இதுநாள் வரைக்கும் அவன் அவள் சொன்னதை தவறாய் புரிந்ததில்லை.. சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் சீக்கிரமே சமாதானம் ஆகிவிடுவான். ஆனால் இப்படி வீட்டில் நடக்கும் குழப்பங்களை எல்லாம் சொல்லி அவனை இன்னமும் குழப்பம் செய்ய விரும்பவில்லை. 

ஆனால் மனது அவனிடம் மட்டும்தானே நிம்மதி அடைகிறது.. அவனோடு பேசினால் மட்டும்தானே மனம் ஆறுதல் அடைகிறது. அதிரூபனோடு பேசுவோமா என்ற யோசனையில் கண்மணி படுத்திருக்க, அவனுக்கு மூக்கு வேர்த்ததுவோ இல்லை இதயம் நினைத்ததுவோ அதிரூபனே கண்மணிக்கு அழைத்துவிட்டான்.

அழைப்பது அவன் என்றதுமே கண்மணிக்கு வழக்கான ஒரு திடுக்கிடல் எழுந்து பின்னேயே மெதுவாய் “ஹலோ..” என்றுசொல்ல,

அவளின் அந்த ஒற்றை சொல்லிலேயே அதிரூபன் “என்ன கண்மணி.. உடம்பு எதுவும் சரியில்லையா.. வாய்ஸ் டல்லா இருக்கு…” என்று கேட்டுவிட்டான்..

அவனின் இந்த விசாரிப்பே, கண்மணிக்கு ஒரு தெம்பை கொடுக்க “அதெல்லாம் இல்லை..” என்றாள் சலுகையான புன்முறுவலுடன்..

“ஹ்ம்ம் என்னவோ சொல்ற.. பட் உன் வாய்ஸ் சொல்லுது சம்திங் ராங்குன்னு..”

“நிஜமா இல்லை…”

“இல்லைன்னா சரிதான்…” என்றவன் “ஹ்ம்ம் சொல்லு பேபி.. என்ன சொன்னாங்க வாட்ச் பார்த்து..??” என்றான் ஆவலாய்..

“ம்ம் ம்ம்.. சூப்பாரா இருக்காம்.. அம்மா அப்பாக்கு ரொம்ப பிடிச்சது… நீங்க பண்ணது பிடிக்காம போகுமா??” என்றாள் இவளும்..

“ம்ம்.. நான் பண்ணது தெரியுமா???” என்றவனிடம் அவள் என்ன சொல்வாள். அதை சொன்னால் வீட்டில் நடந்த அதனையும் சொல்ல வேண்டும்தானே.. ஆனால் அவனிடம் பொய் சொல்லவும் மனதில்லை.. என்ன பதில் சொல்வது என்று அவள் யோசிக்க,

“கண்மணி நான் அப்புறம் பேசுறேன்.. கஸ்டமர்ஸ் வர்றாங்க..” என்று அதிரூபனே வைத்துவிட்டான்..

முதல்முறையாய் கண்மணிக்கு அதிரூபன் போனை வைத்த இந்த நிமிடம் அப்பாடி என்ற உணர்வு கொடுத்தது என்றாலும் அது அவளுக்குப் பிடிக்கவில்லை.

‘கடவுளே இது எல்லாம் சீக்கிரம் சரியாகிடனும்..’ என்றபடியே கண்மணியும் நாட்களை கடத்தத் தொடங்கினாள்.

மேலும் ஒருவாரம் கடந்திருக்க, கண்ணன் தீபா திருமண பத்திரிக்கை முதன்முதலில் கோவிலில் வைத்து வேண்டிவிட்டு, சொந்தபந்தங்களுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்திருந்தனர். ஒரு நல்ல நாள் பார்த்து இரு வீட்டினரும் சென்று திருமண புடவையும் கூட எடுத்து வந்திருந்தனர். கண்மணி ஒருவழியாய் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள். கண்ணனோ ‘இப்போதைக்கு அப்பாவிடம் எதுவும் பேசவேண்டாம்..’ என்று சியாமளாவிடம் சொல்ல, அவரும் சரி என்றுவிட்டார்.            

நாட்கள் வேக வேகமாய் நகர்வது போல் இருந்தாலும், செய்வதற்கு வேலைகள் நிறைய இருந்தாலும் கூட என்னவோ இந்த இரண்டொரு நாட்களாய் அதிரூபன் மனதில் என்னவென்றே தெரியாத ஓர் அமைதியின்மை வந்து பாடாய் படுத்தியது. இதற்கு நடுவே மஞ்சுளா வேறு “என்னடா என்னாச்சு??” என்று விசாரணையை தொடங்க,

“ம்மா கொஞ்சம் பொறுமையா போவோமே ம்மா…” என்றான் இவனும்..

இது போதாது என்று சுப்பிரமணியும் சாந்தியும் வீட்டிற்கு வந்தபோது மஞ்சுளா எல்லாம் சொல்லியிருப்பார் போல, சாந்தி கூட கேட்டார் அதிரூபனிடம் “நானும் மாமாவும் வேணும்னா நாங்களா போய் கேட்கிறதுபோல பேசி பார்க்கவா ரூபன்..” என்றார்..

“வேணாம் அத்தை.. அங்க கண்ணனுக்கு கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு.. இப்போதைக்கு நம்ம போய் பேசி தேவையில்லாம அங்க எல்லாருக்கும் ஒரு டென்சன் கொடுக்கவேணாமே..” என்று அவர்களின் வாயை மூடிவிட்டான்.

மஞ்சுளாவோ “ஹ்ம்ம் நல்ல மருமகன் டா நீ..” என்று கிண்டலாய் சொல்வது கடிய,

“ம்மா ப்ளீஸ் ம்மா…” என்றான் கெஞ்சலாய்.

“பொழச்சு போ டா.. எல்லாம் நீ சந்தோசமா இருக்கணும்னு தான்.. இவ்வளோவும்…” என்றவர் நிவினைப் பார்த்து,

“டேய் இங்கபாரு.. இதெல்லாம் பார்த்து நமக்கும் அம்மா ப்ரீயா விடுவாங்கன்னு நினைச்சிடாத என்ன…” என்று அவனுக்கும் ஒரு குட்டு வைத்துவிட்டே போனார்.

“ம்மா இதெல்லாம் நியாயமே இல்லை..” என்று நிவின் கத்த, அதிரூபனோ அடக்கமாட்டாது சிரித்தாலும் மனது ஒரு அபாய மணி அடித்துக்கொண்டே இருந்தது.  

இருந்தாலும் அவனுக்கு அவனே ‘எவ்வளவோ பார்த்துட்டோம்.. இனியும் பார்ப்போம்…’ என்றெண்ணியவன் கண்மணியிடம் மட்டும் சொன்னான் “என்னவோ மனசு சரியில்ல கண்மணி..” என்று.

“ஏன் என்னாச்சு???” என்று சட்டென்று பதற்றம் ஒன்று வந்து அவளிடம் ஒட்டிக்கொள்ள,

“இல்ல ஒண்ணுமில்ல.. என்னவோ.. மனசு ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு..” என்றவன் “ஹேய் நீ எதுவும் டென்சன் ஆகாத.. அதுவே சரியாகிடும்..” என்றான் அவளின் பதற்றம் உணர்ந்து.

“ம்ம் வேற எதுவுமில்லையே???”

“கண்டிப்பா இல்லை..” என்றவன் அடுத்து வேறு வேறு பேசி அவளை இதனை மறக்கச் செய்துவிட்டான்.

ஆனால் அப்போதைக்கு மறந்தாலும், கண்மணியின் மனதிலும் அதிரூபன் சொன்னது ஓடிக்கொண்டே இருக்க, இருவரின் எண்ணத்தையும் சரி ஆக்கும் விதமாய் யாரும் எதிர்பாராத நிகழ்வொன்று நடந்தது.    

தொலைக்காட்சியில் வரும் அத்தனை செய்திகளையும் நாம் நினைவில் வைத்துகொள்வது இல்லையே.. அதுபோலவே அதில் சொல்லப்படும் வழக்குகளையும், அதில் சம்பந்தப்பட்ட நபர்களையும் கூட நாம் அப்படியே மறந்துவிடுவதும் இயல்புதானே.. சில பிரச்சனைகள், சில வழக்குகளின் ஆரம்ப நிலை பற்றிய செய்திகளை மிக பரபரப்பாய் வெளியிடுவர் ஆனால் அதன் முடிவுகள் என்னவென்பது யாருக்கும் தெரியாது போகவும் வாய்ப்பு இருக்கின்றதே..

அப்படித்தான் ஆனது வருண் விஷயம்.. அவனின் கைது பற்றி அத்தனை ஒளிபரப்பிய செய்தி சானல்கள், அடுத்து அடுத்து என்ன நடந்தது என்பதை சொல்லாது விட, கண்மணி வீட்டிலும் கூட வருண் என்பவனை மறந்து போயினர்.

அவன் வந்து நேரில் நிற்கும் வரைக்கும்..

ஆம் வருண் வந்துவிட்டான்.. அவனின் மேல் விழுந்த அத்தனை வழக்குகளும் பொய் என்று நிரூபித்து வருண் குற்றமற்றவன் என்ற நீதிமன்ற தீர்ப்போடு வருண் வெளி வந்துவிட்டான்..

வந்தவன் முதல் வேலையாய் செய்தது, தன் பெற்றோர்களையும் மூர்த்தியையும் அழைத்துக்கொண்டு நேரே கண்மணி வீட்டிற்கும் வந்துவிட்டான்.        

சடகோபன், சியாமளா கண்மணி கண்ணன் என்று அனைவருமே ஒருவித அதிர்ச்சியில் நிற்க வருணோ “சாரி சாரி சாரி… எனக்கு எப்படி சொல்லி மன்னிப்பு கேட்கன்னு கூட தெரியலை.. ஆனா ஒன்னுமட்டும் உறுதியா சொல்ல முடியும்.. என்மேல எந்த தப்புமில்லை..” என்று கரம் குவித்து தான் பேச்சினை தொடங்கினான்.

வருணை கண்டதுமே கண்மணிக்கு மயக்கம் வராத குறைதான்.. எவன் ஒருவன் இனி தன் வாழ்வில் வரவே போவதில்லை, எவன் ஒருவனால் இனி எந்த இடையூறும் வராது என்று எண்ணியிருந்தாளோ அவன் குடும்பம் சகிதமாய் வந்து மன்னிப்புக் கேட்கையில் அவளால் காண்பதெல்லாம் நிஜமா என்றுகூட நம்பிட முடியவில்லை..

கண்ணன் அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தான் அலுவலகம் முடிந்து, வீட்டின் காலிங் பெல் அடிக்கவும், கண்மணி தான் போய் கதவு திறக்க வந்திருந்தவர்களை கண்டதுமே அப்படியொரு அதிர்ச்சி. இவர்களை எல்லாம் மறந்தே போனாளே அவள்.. அதே அதிர்ச்சி இப்போது வருண் பேசிய பின்னும் கூட இருந்தது.

அவளால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. சொல்லமுடியாத பயம் ஒன்று அவளிடம் வந்துவிட, சியாமளா அருகே நின்றிருந்தவரின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். மகளின் இந்த தொடுகை அவருக்கு என்ன உணர்த்தியதோ,

“ஷ்.. கண்மணி.. ஒண்ணுமில்ல நீ உள்ள போ.. நாங்க பேசிக்கிறோம்..” என்று அவர் மகளை உள்ளே அனுப்பப் போக,

“ஆன்ட்டி.. ப்ளீஸ்.. நான் கண்மணி கிட்டயும் தான் பேசணும்..” என்றான் வருண்..

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த கண்ணனோ “என்ன பேசணும்?? எங்களை பொறுத்த வரைக்கும் இனி பேச எதுவுமில்லை.. அப்பா சொல்லுங்கப்பா..” என்றான் வருணில் ஆரம்பித்து சடகோபனிடம் முடிவாய்..

சடகோபனுமே ஒருவித அதிர்ச்சியில் இருந்தவர், கண்ணனின் அழைப்பில் உணர்விற்கு வந்தவர் “என்ன மூர்த்தி இதெல்லாம்..” என்றார்..

மூர்த்தியோ ஒருவித சங்கட பாவனையில் “என்னை மன்னிச்சிடு சடகோபா.. இன்னிக்குதான் வருண் கேஸ் முடிஞ்சது.. அவன் ஆபிஸ்ல வேற ஒருத்தர் பண்ண தப்புக்கு கடைசில வருண் பலியாடு ஆகிட்டான்.. கோர்ட் தீர்ப்பு வந்து கேஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுமே அடுத்து இங்க போகணும்னு கிளம்பிட்டான்.. என்னாலையும் மறுக்க முடியலை..” என,

வருணின் அப்பாவோ “நாங்களே நேர்ல வந்திருக்கணும்.. ஆனா சூழ்நிலை அப்போ முடியலை.. எல்லாரும் எங்களை மன்னிக்கணும்..” என்று கரம் குவிக்க,

வருணின் அம்மாவோ “எங்களுக்கு இப்பவும் கண்மணியை எங்க வீட்டு மருமகளா கொண்டு போகணும்னு தான் ஆசை..” என்று சொல்ல, கண்மணி இதயத்திலோ பூகம்பம் வெடித்தது..               

Advertisement