Advertisement

“நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்.. நீதான் இப்படி உம்முன்னு இருக்க..”

“ம்ம்..”

“என் கண்மணில…” என்று அவன் கெஞ்ச,

“ஆமா நீங்க பேசினா பேசணும்.. இல்லையா நானும் அமைதியா இருந்துக்கனும்.. எல்லாருக்கும் அவங்கவங்க கோபமும் ரோசமும்தான் பெருசு…” என்று கண்மணி படபடக்க,

“சரி சரி நான் இனிமே ஒன்னும் சொல்லமாட்டேன் சரியா..”

“அப்.. அப்போ நானும் சொல்லக்கூடாதா??!!”

‘என்னடா இது எப்படி பேசினாலும் பதிலுக்கு சிக்ஸர் போடுறா…’ என்று யோசித்தவன், “இப்போ என்னாங்கிற.. ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன்.. வர்றதுக்கு முன்ன உன்கிட்ட ஒருவிசயம் பேசணும்னு போன் பண்ணா இப்படி பண்ற நீ..” என்று கண்டிப்புக்கு அதிரூபனின் குரல் மாற,   

 “எனக்கு சத்தமா அழனும் போல இருக்கு..” என்றாள் இவளோ அவன் சொன்னதையே கேட்காது..

“நீ?? சத்தமா??!!!! ம்ம் அப்புறம்…”

“ம்ம்ச் நான் பேசுறது உங்களுக்கு ஜோக்கா இருக்கா???”

“நான் சிரிக்கவேயில்லையே கண்மணி…”

“இப்படி பேசத்தான் போன் பண்ணீங்களா நீங்க?? நான் அழனும் போல இருக்குனு சொல்றேன்.. நீங்க கிண்டல் பணிட்டு இருக்கீங்க…” என்றவளுக்கு அப்படி கோபம் கோபமாய் வந்தது..

“ஹேய்.. என்ன கண்மணி நீ.. அழனும் சொல்ற.. ஏன்னு சொன்னாதானே தெரியும்.. நான் இங்க இருக்கேன்.. கிட்ட இருந்தாகூட என்ன எதுன்னு கேட்டு சமாதானம் செய்யலாம்..” என்றவனின் குரலில் நிஜமான சமாதான கொடி பறக்க ,

“என்னவோ தெரியலை மனசே அடிச்சுக்குது.. டென்சனா இருக்கு.. அழனும் போல இருக்கு…” என்று இவளும் சொல்ல,

“ம்ம்ம் எனக்கும்தான் அப்படி இருக்கு நான் என்ன செய்யட்டும்…” என்றான் அதிரூபனும்.

“ஏன் உங்களுக்கு என்னாச்சு??”

“எங்க வீட்ல இதுக்குமேல பொறுக்க முடியாதாம். சோ அம்மா வந்து உங்க வீட்ல பேசணும் சொல்றாங்க..” என்று சொல்லிவிட்டான். அதன்பின்னே ஒருநொடி அமைதி. கண்மணிக்கு தான் கேட்டதை நம்பவும் முடியவில்லை. மஞ்சுளாவிற்கு தெரியும் என்றுதான் இவளுக்குத் தெரியாதே.

அதிரூபன் தான் அந்த கதையை இவளிடம் சொல்லவில்லையே. அதைவிட்டு இதை சொல்லவும், அதிர்ச்சியில் அமைதியாகவிட, “கண்மணி…” என்று அழைத்தான்.

“எ… என்ன சொல்றீங்க???!!”

“நிஜமா…” என்றவன் “அ.. அது.. அம்மாவுக்குத் தெரியும்..” என்றான் சுருதி இறங்கி..

“எ.. எப்போ..??”

“ரொம்ப நாள் முன்னாடியே.. நம்ம பண்றது தெரியாது.. ஆனா நான் பண்றேன்னு தெரியும்.”

இதை கேட்டதுமே கண்மணிக்கு இன்னும் டென்சன் ஒட்டிக்கொள்ள “போச்சு போச்சு அப்போ அன்னிக்கு என்ன நினைச்சிருப்பாங்க.. போச்சு போச்சு..” என்று கண்மணி கைகளை உதற,

“ஷ்.. கண்மணி.. கொஞ்சம் சும்மா இருக்கியா??” என்றான் அதட்டலாய்.   

“ச்சே ஏன்தான் இப்படி இருக்கீங்களோ.. எல்லாரும்.. நான்.. நான் எவ்வளோ பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்..” என்று கண்மணி நிஜமாகவே டென்சனாக  பேச,

“சரி சரி கண்மணி.. கூல் டவுன்… நீதான் தேவையில்லாத டென்சன் ஆகுற.. ஜஸ்ட் எங்கம்மாவும் மாமாவும் மட்டும் தான் வருவாங்க..” என்றான் அதிரூபனும் அவனுள் இருந்த பதற்றத்தை மறைத்து. அதிரூபனுக்குள்ளும் பதற்றமே.. இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்ட முடியாது அல்லவா..

அவனின் வீட்டில் இப்போது பிரச்னையில்லை. கண்மணி வீட்டில் கண்ணனுக்குத் தெரியும், அவனும் இதுவரைக்கும் மறுப்பென்று எதுவும் சொல்லவில்லை, ஆக ஓரளவு சமாளித்துப் போகலாம்தான். ஆனால் அவனின் பெரிய கேள்வியே சடகோபன் மட்டுமே..

அவர் என்ன சொல்வாரோ என்பது மட்டுமே.. என்னவோ அவரைப் பற்றி யோசிக்கையில் நிச்சயம் உடனே சரி என்றிட மாட்டார் என்பது அதிரூபனின் மனதில் ஆணித்தரமாய் ஒலித்தது.  அவன் இதை நினைத்துக்கொண்டு இருக்க,

கண்மணியோ “அதுக்கு முன்ன நீங்க ஒன்ஸ் எங்க அண்ணன் கிட்ட பேசிட்டா இங்க எதுன்னாலும் அவன் பார்த்துப்பான்..” என்றாள் அவள் ஒன்றை நினைத்து.

ஆனால் அதிரூபனுக்கோ ‘நான் பார்த்துக்கிறேன்..’ என்று சொல்வதை விடுத்தது இதென்ன ‘என் அண்ணன் பார்த்துகொள்வான்..’ என்கிறாள் என்ற சிந்தனை ஓட, “ஏன்.. நீ பார்த்துக்க மாட்டியா?? எதுன்னாலும் நீ நிக்கமாட்டியா போல்ட்டா…” என்ற அதிரூபனுக்கு அவனையும் மீறி வார்த்தையில் வேகம்.

“நா… நான் அப்படி சொல்லலை..” என்று கண்மணியின் குரல் இறங்கி ஒலிக்க,

“பின்ன எதுன்னாலும் எங்க அண்ணன் பாத்துப்பான் பாத்துப்பான்னு சொன்னா.. நான் உங்க அண்ணனைய லவ் பண்ணேன்.. உன்னைத்தானே..” என்றான் அவனும் விடாது.

இப்படி பேசவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் பேசும்படி ஆகிப்போனது. கண்மணியோ இவனின் பேச்சில் திகைத்து நிற்க, ‘ச்சே இதுக்கு நான் ஊருக்கு வந்தே பேசிருக்கலாம்..’ என்று அதிரூபன் முனங்குவது நன்றாய் கேட்க,

‘நான் சொல்ல வர்றதை என்னன்னு கூட கேட்காம இப்படி பேசுறாங்களே..’ என்று நினைத்தவள்,

“ஆமா எல்லா தப்பும் என்மேல தான் விடுங்க..” என்று கலங்கிய குரலில் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

அவளுக்கு அதற்குமேல் பேசவும் வரவில்லை, சண்டையிடவும் மனமில்லை. அதிரூபனுக்கோ இவளே இப்படி புரிந்துகொள்ளாது பேசினால் நான் மட்டுமே என்ன செய்ய முடியும் என்ற நினைப்பு. கண்ணனை சந்திப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. கண்ணன் நல்ல முறையில் பேசினால் கண்டிப்பாய் அவனும் நல்லபடியே தான் பேசுவான்.    

ஆனால் கண்மணி??

அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்பது அவனுக்கு துளியும் விளங்கவில்லை. கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்தவன், தானும் அவசரப் பட்டமோ என்று தோன்ற, ‘சரி ஊருக்குப் போய் முதல்ல அம்மா மைன்ட் செட் பார்த்துட்டு தென் கண்மணிக்கிட்ட என்ன சொல்லணுமோ சொல்லிக்கலாம்..’ என்ற முடிவுடனே பெங்களூருவில் இருந்து சென்னை கிளம்பினான்..

இதோ அவன் வந்தும் முழுதாய் ஒரு நாள் முடிந்துபோனது. வீட்டிற்கு போனதுமே மஞ்சுளா ஒரு பார்வை பார்த்தார்.. அவ்வளவே.. “ம்மா என்னம்மா…” என்று போய் இவன் கட்டிக்கொள்ள,

“ச்சி விடு டா.. தடி மாடு.. வந்துட்டான்.. பண்றதெல்லாம் அயோக்கியத்தனம் இப்போ மட்டும் அம்மா நொம்மான்னு..” எனும்போதே அவரின் கோபம் பாதி காணாது போயிருந்தது..

“ஹப்பாடி இப்படி உன்கிட்ட திட்டு வாங்கினாதான் ம்மா எனக்கு நிம்மதியாவே இருக்கு..” என்று அவனின் நெஞ்சில் கை வைத்து சொல்ல, “ஏன்டா இப்படி பேசி பேசியே தான் பொழப்பு நடத்துறியா..” என்று கேள்வி கேட்டு மஞ்சுளா அவனை நொடியில் டேமேஜ் செய்துவிட, அங்கே வீட்டின் சூழல் அப்படியே மாறிப்போனது.

‘ஹப்பாடி இனி கண்மணிக்கு காவடி எடுக்கணும்..’ என்ற எண்ணத்தோடு அதிரூபன் மறுநாள் அலங்காருக்கு வந்திட,

அங்கே கண்ணனோ “கண்ஸ்.. அப்பா அம்மாக்கு வெட்டிங் டே வருதுல.. ரெண்டு பேருக்கும் வாட்ச் பிரெசென்ட் பண்ணலாமா?? அதான் உன் ஆளு அதோள் எக்ஸ்பெர்ட் ஆச்சே..” என,

‘ஐ..!!!!’ என்று அவளின் மனம் துள்ள, “சூப்பர் ஐடியா ண்ணா..” என்றாள்..

“அப்போ ரெடியாகு.. போலாம்.. நம்ம வர்றோம்னு சொல்லிடு..” என்றவன் “தீபாக்கும் சொல்லிடுறேன்..” என்று ஜாலியாய் கிளம்பப்போக,

“என்னது சொல்லணுமா??!!!” என்ற கேள்வி அவளுள்.. ‘நானா பேசமாட்டேன்..’ என்ற ஒரு ரோசம்..

‘ஊருக்கு வந்திட்டு ஒண்ணுமே பேசலை.. இப்போ நானா பேசணுமா??’ என்ற கோபமும் கூட, ஆனால் கண்ணனிடம் இதெல்லாம் சொல்ல முடியுமா, அவன் அழைக்கவும், கிளம்பும் நிலை.. கடை வாசல் வரைக்கும் வந்துவிட்டு,             “அண்ணா… நான் அவர்கிட்ட வர்றோம்னு சொல்லவேயில்லை…” என்று கண்மணி தயங்கி சொல்ல,

“என்ன கண்ஸ் சொல்ற… இங்க வந்து சொல்ற இதை.. ஏன்.. ஏன் சொல்லல நீ??” என்று கண்ணன் கேட்க,

“இல்ல.. அது.. அதுவந்து…” என்று கண்மணி இழுக்கும் போதே, தீபாவும் அங்கே வந்துவிட்டாள்.

“ஹேய்.. என்ன வந்து நேரமாச்சா?? உள்ள போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டுபேரும்..”

“ஹ்ம்ம் நம்ம வர்றோம்னு இவ சொல்லவேயில்லையாம்..” என்று கண்ணன் கண்மணியை கை காட்ட,

“ஏன்?? ஏன் கண்ஸ்??” என்றாள் தீபாவும்..

“இல்லை தீப்ஸ் அது…”

“என்ன சண்டையா??!!” என்றாள் தீபா சரியாய்..

“என்னது சண்டையா??!!” என்று கண்ணன் அதையே சற்று வேறொரு மாடுலேசனில் கேட்க,  “ம்ம்ச் எதுக்கு இவ்வளோ ரியாக்சன்.. நம்ம சண்டையே போட்டதில்லையா??” என்றாள் தீபா அவனை கண்டிக்கும் பார்வை பார்த்து..

கண்மணி அமைதியாய் நிற்க, தீபாவோ “சரி இப்போ என்ன பண்றது?? நீ சண்டைனா இரு கண்ஸ்.. நாங்க ரெண்டு பேரும் போய் ப்ரோவ மீட் பண்றோம்..” என்று கிண்டலாய் சொல்ல,

கண்ணனோ “அதெல்லாம் வேணாம்..” என்றான் பட்டென்று..

“ஏன் என்ன வேணாம்?? சண்டை வர்றது சகஜம்தானே.. அது அவங்க பாடு.. இனிக்கு சண்டை போடுவாங்க.. நாளைக்கு சேர்ந்துப்பாங்க..” என்று தீபா சொல்ல,

“ம்ம்… ம்ம்… நீங்க மாடிக்கு போங்க.. நான் கீழவே இருந்துப்பேன்..” என்றாள் கண்மணியும்..

“ஓ..!!!! கதை அப்படி போகுதா…” என்று தீபா இழுக்க, “ம்ம்ச் தீப்ஸ்..” என்றான் கண்ணன் கண்டிக்கும் விதத்தில்..

“நான் போக போறேன் வர்றீங்களா இல்லையா??” என்று தீபா கேட்டபடி முன்னே போக, கண்ணனோ “நீ கண்டிப்பா வரலையா கண்ஸ்..” என்றான்..

“ம்ம்ஹும்.. நான் கீழ இருந்துப்பேன்..” என்றபடி அவளும் அலங்கார் உள்ளே நுழைய,

“அதெல்லாம் கூப்பிடுறவங்க கூப்பிட்ட தன்னால வருவா..” என்று தீபா சொல்லவும், கண்மணி மனதினில் ஒரு ஆவல், ‘அவன் வந்து அழைப்பானோ..’ என்று..

“சரி நீங்க போங்க..” என்று அவர்களை மாடிக்கு அனுப்பியவள், கீழே பெண்களின் ஆடைகளை பார்க்கும் சாக்கில் இருந்துகொண்டாள். கண்ணன் வீட்டிலேயே சொல்லிவிட்டான் “நான் பார்த்து பேசிப்பேன் நீ அதை நினைச்சு எதுவும் டென்சன் ஆகவேணாம்..” என்று.

ஆனால் கண்மணிக்கோ மனதெல்லாம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. இவர்களை பார்த்ததும் அதிரூபன் எப்படி நடந்துகொள்வான் என்று. ஆனால் இவள் நினைப்பதற்கு மாறாய் அதிரூபனோ முகமெல்லாம் மலர்ச்சியாய் “அட வாங்க வாங்க..” என்று சந்தோசமாய் வரவேற்க,

தீபாவோ “வர்றோம் வர்றோம்..” என்றபடியே அவனைப் பார்த்து புன்னகைத்தவள், கண்ணனைப் பார்க்க, கண்ணனும் ஒரு சிநேக பாவம் காட்டிக்கொண்டான் முகத்தினில்.

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வெட்டிங் டே வருது.. அதான் ஒரு வாட்ச்..” என்று கண்ணன் சொல்ல,

“அட ப்ரோ.. வாட்ச் வாங்கணும்.. அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு தான்..” என்று பட்டென்று உடைத்தாள் தீபா,

கண்ணன் அவளை முறைக்க, அதிரூபனோ “அதுனால என்ன..” என்றவனின் பார்வையில் ‘கண்மணி வரவில்லையா??’ என்ற கேள்வி இருக்க,

கண்ணனோ “க.. கண்ஸ் கீழ இருக்கா..” என்றான் வேகமாய்..

“கீழயா..??!!!”

“ம்ம் அது என்னவோ.. எங்களுக்குத் தெரியாது.. நீங்க கூப்பிட்டாதான் வருவாளாம்..” என்று தீபா சொல்ல,

“அ.. அது தப்பா எடுதுக்கவேணாம்.. நான்தான் திடீர்னு கிளம்ப சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன்..” என்றான் கண்ணன்..

‘இங்க வரைக்கும் வந்திட்டு மேடம்க்கு அப்படியொரு கோபமா..’ என்று அதிரூபன் நினைக்க, “ஒரு டூ மினிட்ஸ் நான் கூப்பிட்டு வந்திடுரேனே…” என்றான் ஒருவித பரபரப்பில்..

கண்ணனுக்கு புரியாதா என்ன?? “ம்ம் சரி..” என்றுமட்டும் சொல்ல, தீபாவோ “இதெல்லாம் எங்களுக்குத் தெரியுமே..” என்று கிண்டலில் ஆரம்பிக்க, அதிரூபனோ கீழேயே வந்துவிட்டான்..

கண்மணியின் பார்வை நொடிக்கொரு தரம், மேல் தளம் செல்லும் படிகளில் இருக்க, வெறுமெனே அங்கே மாட்டியிருந்த புது மாடல் குர்திக்களை பார்த்துக்கொண்டு இருக்க, “மேடம் ஜி நீங்க தேடி வந்தது இங்க இல்லை..” என்ற குரல் அவளுக்கு ஒருமுறை திடுக்கிடலையும், பின் ஒரு மெல்லிய இனிய நடுக்கத்தையும் கொடுக்க,

‘அப்படியா ???’ என்ற ஒரு பார்வை மட்டுமே பார்த்தாள் அதிரூபனை.

‘ஆரம்பிச்சிட்டா கண்ல பேச..’ என்று எண்ணியவன் “மாடிக்கு வா…” என்றுமட்டும் சொல்ல,

“ம்ம்ச்..” என்று இதழ்களை சுளித்தவள், பார்வையை திருப்பிக்கொள்ள, “ஓய்…” என்று மெதுவாய் சொன்னபடி அவளின் பார்வை போன பக்கம் வந்து நின்றான். நின்றவனின் கரமோ கண்மணியின் கையை இறுக பற்றிட,

அவளோ ‘என்னதிது…’ என்று கண்களை விரித்தாள்.

“வாய்ல சொன்னா கேட்கமாட்ட, அதான் குணமா கை பிடிச்சி கூட்டிட்டு போறேன்..” என்றவன் “வா..” என்றொரு பார்வை பார்க்க,

அவளோ ‘போனா போகுதுன்னு வர்றேன்…’ என்பதுபோல் அவனோடு செல்ல, இரண்டாம் தளத்தை தாண்டி மேலே அவனின் இடம் போகும்போது, படியேறுகையில்

“என் கண்மணிக்கு இவ்வளோ கோவம் வருமா??” என்றபடி அவளின் தோளோடு கைபோட்டு இறுக்கிக்கொள்ள,

‘அச்சோ யாரும் பாக்க போறாங்க..??’ என்ற பதற்றம் அவளின் முகத்தினில் தெரிய,

“ஹா ஹா யாரும் வரமாட்டாங்க..” என்றான் இன்னமும் அவளை தன்னோடு நெருக்கி.. வாடிக்கையாளர்கள் பொதுவாய் லிப்ட்டில் தான் வருவர் என்பதால் படிகளில் அப்படியொன்றும் யாரும் வருவதில்லை. அதனாலேயே அதிரூபன் கண்மணியை படிகள் வழியே அழைத்து வந்தானோ என்னவோ.

“ம்ம் சொல்லு.. இப்பவும் கோபமா??” என்று அவளின் முகத்தின் அருகே முகம் வைத்துகேட்க, கண்மணிக்கோ அது எங்கோ எப்போதோ காணாது போன உணர்வு.       

Advertisement