Advertisement

தூறல் – 22

கண்மணியின் குரல் கேட்டு கண்ணன் பதற்றமாக “என்னாச்சு கண்ஸ்??” என,

“என்னாகனும்?? நீ ஏன் இப்படி பண்ற??” என்றாள் கண்ணை கசக்கி..

நிஜமாகவே கண்மணிக்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. அதிரூபனைப் பற்றி விசாரிப்பேன் எனக்கு திருப்தி ஆகவேண்டும் என்றெல்லாம் கண்ணன் சொல்லும்போது அமைதியாகத்தான் இருந்தாள். இது நடப்பது சகஜமும்தானே என்பதும் அவளின் எண்ணம்.. ஆனால் இப்படி பின்னோடு ஆள் அனுப்பி, அதுவும் அவனின் தன்மானம் பாதிப்பது போல் செய்வது எல்லாம் அவளாலும் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதிலும் இருவருக்கும் இடையில் ஒன்றும் சரிவராது, முட்டிக்கொள்ளுமோ என்ற எண்ணமே அவளின் நிம்மதியைக் கொன்றது. அதிரூபனோ கண்ணனோ இருவருமே அவளுக்கு முக்கியமானவர்கள் தானே. யாருக்காக யாரை சார்ந்து பேச முடியும்??

‘லவ் பண்ணது ஒரு குத்தமாடா…’ என்ற நிலை கண்மணிக்கு..

அதிரூபன் பேசாது இருந்துகொள்ள, அவளின் மன குமுறலை அண்ணனிடம் தானே சொல்ல முடியும். அதுவும் காரணமே அவன் எனும்போது.

“என்… என்ன கண்ஸ்??? என்னாச்சு ??” என்றான் இன்னமும் பதற்றமாய்.

“உனக்கு அவர் பத்தி விசாரிக்கனும்னா அதுக்கு ஆள் அனுப்பித்தான் செய்வியாண்ணா?” என்று கேட்டவளின் குரலில் இருந்த வருத்தம் புரிய,

‘இப்படியா டா சொதப்பி வைப்ப..’ என்று மானசீகமாய் தன் நண்பனை திட்டியும் கொண்டான்.

“அண்ணா..”

“அ.. அது.. கண்ஸ்… நீ இரு நான் ரூம் வர்றேன்..”

“ஒன்னும் வேணாம் போ…” என்றவள் மேற்கொண்டு எதுவும் சொல்லாது போனை வைத்துவிட்டாள். அதற்குமேல் கண்மணிக்கு என்ன கேட்பது என்பதுகூட தெரியவில்லை.

வருத்தம் இருக்கிறது அதை காட்டிவிட்டாள் ஆனால் அதற்குமேல் கண்ணனிடம் என்னவென்று கேட்க, தெரியவில்லை.. ஆனால் கண்ணன் அடுத்த நொடி வந்து இவளின் அறை கதவைத் தட்ட, முதலில் கண்மணி முகத்தை உம்மென்று வைத்தே உள்ளே இருந்தாள். திறக்கவில்லை.. ‘போ தட்டிட்டே கொஞ்ச நேரம் நில்லு..’ என்ற எண்ணம்.

கண்ணனோ, அப்பா அம்மா யாராவது இந்நேரம் எழுந்து வெளியே வரமாட்டார்கள் என்றாலும் கூட, வந்துவிட்டால், வந்து என்னவென்று கேட்டுவிட்டால் என்ன சொல்வது.

“கண்ஸ்.. கதவை திற..” என்றான் மெதுவாக என்றாலும் கொஞ்சம் அழுத்தமாய்.

“மாட்டேன் போ..” என்று உள்ளிருந்தே பதில் வர, கண்ணனுக்கு ஒருப்பக்கம் சிரிப்பு கூட வந்துவிட்டது.

சிறு வயதில் இருந்தே கண்மணி இப்படித்தான். அவளுக்குப் பிடிக்காததை கண்ணன் செய்துவிட்டால் போதும், சண்டை எல்லாம் போடமாட்டாள். சத்தம் போடமாட்டாள். இப்படி அறைக்குள்ளே வந்து அமைதியாய் அமர்ந்துகொள்வாள். அவளின் மறுப்பினை காட்டும் விதம் இது. நடுவில் இதெல்லாம் இல்லாது இருக்க, இதோ இப்போது மீண்டும் கண்மணி அதுபோலவே செய்ய, அவள் எப்படி முகத்தை தூக்கி அமர்ந்திருப்பாள் என்பதுகூட கண்ணனுக்கு மனக்கண்ணில் வந்து போனது.

“கண்ஸ்.. சொன்னா கேளு.. அப்பா அம்மா யாராவது வந்தா அப்புறம் டென்சன் தான்..” என,  இது கொஞ்சம் வேலை செய்தது..

எழுந்து வந்தவள் கதவை மட்டும் திறந்து “நீ ஒன்னும் பேசவேணாம் போ..” என்றாள்.

“ஹா ஹா.. நினைச்சேன் நீ இப்படிதான் மூஞ்சி வச்சிருப்பன்னு..” என்றவன் கதவோடு அவளையும் நகட்டிக்கொண்டே உள்ளே வர, “உன்ன போக சொன்னேன்..” என்றாள் நெற்றியை சுறுக்கி.

“அப்பா..!!!! கண்ஸ்க்கு பயங்கர கோபம் போலவே…” என்றவன் “சரி சொல்லு என்ன வேணும்??” என, கண்மணியோ அவனை நேருக்கு நேரே முறைத்தாள்.

“சரி சரி… நான் பண்ணது தப்புன்னு நீயும் நினைக்கிறியா??”

“ஆனா தப்பா பண்ணிருக்க…”

“பாத்தியா…” என்று கண்ணன் ஒரு பார்வை பார்க்க, “ஏண்ணா இப்படி??” என்றாள் திரும்ப.

“எனக்கு நிஜமா என்ன செய்யன்னு தெரியலை கண்ஸ்.. அதிரூபன் எப்படின்னு எனக்கு தெரியாது. ஏற்கனவே வருண் விசயத்துல நல்ல பாடம்.. பட் என் பிரன்ட் இப்படி சொதப்புவான்னு தெரியலை. ஆனா கண்டிப்பா நான் தப்பான எண்ணத்துல இதை பண்ணல.. இதுக்குமேல நான் சாரி கேட்கனும்னு நினைக்கிறியா?? சொல்லு வேணும்னா உனக்காக அதிரூபன் கிட்ட சாரி கேட்கிறேன்..” என்று கண்ணன் சொன்னதும்,

அவ்வளோதான் கண்மணிக்கு அத்தனை நேரமிருந்த உணர்வுகள் எல்லாம் அப்படியே மாறி, மறைந்து, “அச்சோ.. என்ன நீ.. அ.. அதெல்லாம் வேணாம்..” என்றாள் வேகமாய்.

கண்ணனோ கண்மணியின் முகத்தினையே பார்த்து நிற்க “எ.. என்ன??” என்றாள் பார்வையால்.

“நீ இன்னும் மாறவேயில்ல கண்ஸ்… அப்படியே இருக்க..” என்றவன் அவளின் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்ட, “ம்ம்ம் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில நான் மாட்டிட்டு முழிக்கிறேன்..” என்றாள் கண்மணி முனுமுனுப்பாய்.

“சரி சரி.. நான் நேர்ல பாக்கும்போது பேசிக்கிறேன் கண்ஸ்.. என் தங்கச்சிக்கு எதுவுமே பெஸ்ட்டா அமையணும்னு ஒரு ஆசை அதான்..” என்றான் இவனும் சமாளிப்பாய்.

“அப்.. அப்போ.. உனக்கு தீபாவ விட யாரும் பெஸ்ட்டா வந்தா நீ தீப்ஸ விட்டுடுவியா??” என்ற கேள்வி கண்மணியிடம் இருந்து பட்டென்று வர,

“கண்ஸ்..!!!!” என்று அதிர்ந்து தான் பார்த்தான் கண்ணன்.

‘பதில் சொல்லு..’ என்று கண்மணி பார்க்க, அவளின் பார்வையிலேயே கண்மணியின் அதிரூபன் மீதான காதலின் திடம் கண்ணனுக்குப் புரிய,

“நான் இனி எதுவும் சொல்லமாட்டேன் போதுமா???” என்றான் சரண்டர் ஆகுவதுபோல்.

அப்போதும் கண்மணி பேசாது நிற்க, கண்ணனுக்கு அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல்,  “நிம்மதியா தூங்கு…” என்றுவிட்டு வெளியில் வர,

சரியாய் சியாமளாவும்  அவரின் அறையில் இருந்து வெளியே வந்துகொண்டு இருந்தார். கண்ணனும் கண்மணியும் அவரைப் பார்த்து திடுக்கிட்டு திகைத்து நிற்க,  சியாமளா முதலில் இவர்களை கவனிக்காது சமையல் அறைப்பக்கம் திரும்பியவர், பின் அப்படியே திரும்ப, அண்ணனும் தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றுகொண்டு இருந்தனர்.   

“என்ன?? ரெண்டு பேரும் தூங்காம இங்க என்ன பணிட்டு இருக்கீங்க..” என்று சியாமளா அவர்களை நோக்கி வர,

“அ.. அது.. அதும்மா தண்ணி…” என்றான் கண்ணன் திக்கி திணறி.

“தண்ணி சமையல் ரூம்ல இருக்கும் அதுக்கேன் ரெண்டும் திருதிருன்னு முழிச்சிட்டு நிக்கிறீங்க?? டேய் இன்னும் என்னடா ரகசியம் வச்சு இருக்கீங்க.. நானும் அன்னிக்கு இருந்து பார்த்துட்டு இருக்கேன்.. சரியேயில்லை.. சொல்லுங்க இன்னும் எதையும் மறைச்சு வைக்கிறீங்களா??” என்று கேட்கவும், கண்மணிக்கு நிஜமாகவே மனதில் சுருக்கென்றது.

‘என்ன இருந்தாலும் தப்புதானே…’ என்ற எண்ணம் வர, கண்மணிக்கு சீக்கிரம் வீட்டினில் சொல்லிட வேண்டும் என்ற நினைப்பும் அந்த நேரத்தில் வந்துவிட,

கண்ணனோ “இ.. இல்லம்மா.. கண்ஸ் ரூம்ல லைட் எரிஞ்சது அதான்.. அப்படியே என்னன்னு கேட்டிட்டு..” என்றான் சமாளிப்பாய்.

சியாமளா இப்போதும் நம்பாது இருவரையும் பார்க்க, கண்மணியோ ஒருவித சங்கடத்தோடு அம்மாவைப் பார்த்தாள்.

“என்ன கண்மணி தூங்கலையா நீ??”

“இல்லம்மா.. தூ.. தூங்கனும்..” என்றவளுக்கு சியாமளாவை நேருக்கு நேரே பார்க்கவும் முடியவில்லை..

சியாமளா இரண்டொரு நொடி அவளைப் பார்த்தவர், “சரி நீ போ..” என்று கண்மணியை போக சொன்னவர், “நீயும் போடா வர்றேன்.. கொஞ்சம் பேசணும்..” என்றுவிட்டு தண்ணீர் எடுக்கப் போனார்.

திரும்பவும் அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “கல்யாண விஷயமா எதுவும் பேசணுமா இருக்கும்…” என்று கண்ணன்  கண்மணியிடம் சொல்லிவிட்டு, அவனின் அறைக்கு செல்ல, கண்மணிக்கோ அடுத்து உறக்கம் என்பதே வரவில்லை.

அண்ணனும் அம்மாவும் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதிலேயே மனது உலண்டது. கண்ணன் தீபா திருமண விஷயம் என்றால், அதையேன் தன்னை விட்டு அதுவும் அப்பாவும் இல்லாது பேசவேண்டும். இது கண்டிப்பாய் வேறு எதோ ஒன்று என்று அவள் மனம் சொல்லிக்கொண்டே இருக்க, அங்கே சியமளாவோ கண்ணனிடம்,

“டேய் கண்ணா.. எனக்கு மனசுல ஒண்ணு படுதுடா…” என்று மெதுவாய் ஆரம்பித்தார்..

‘அம்மா எதுவும் கெஸ் பண்ணிட்டு நூல் விட்டு பாக்குறாங்களோ…’ என்று கண்ணன் அமைதியாகவே இருக்க “அன்னிக்கு மழைன்னு நிவின் வீட்ல இருந்தோமே டா..” எனவும் பக்கென்று ஆனது கண்ணனுக்கு..

“ஆ,.. ஆமா….”

“அவங்க ரொம்ப நல்ல மனுசங்களா இருக்காங்க கண்ணா.. அம்மா பசங்கக்குள்ள அவ்வளோ ஒரு அன்னியோன்யம்…”

“ம்ம்ம் சரி…”

“எனக்கு அங்க போயிட்டு வந்ததுல இருந்து மனசுக்கு ஒரு எண்ணம்.. அவங்க மூத்த பையனுக்கு கூட பொண்ணு தேடிட்டு இருக்காங்கலாம்..” என்றதுமே கண்ணனுக்கு கண்கள் இரண்டும் வட்டமாய் விரிந்து,

“ம்மா..!!!” என,

“மெதுவாடா.. அப்பாக்கிட்ட அன்னிக்கே சொன்னேன்.. அவர் பெருசா நினைக்கலை.. ஆனா எனக்கென்னவோ கண்மணிக்கு இந்த இடம் பொருத்தி இருக்கும்னு தோணுது.. பக்கத்துலையே இருப்பா.. நினைச்ச நேரத்துக்கு வந்து போயிக்கலாம்.. மனுசங்களும் நல்லா இருக்காங்க..” என்று சியாமளா சொல்கையில்,

‘கண்ஸ்… பழம் நழுவி உனக்கு பால்ல விழுதே..’ என்று எண்ணிக்கொண்டான் கண்ணன்.

ஆனாலும் அப்பா இதை பெரிதாக எடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியாது “அப்.. அப்பா என்ன சொன்னாங்க?” என்று கேட்க,

“அவருக்கு அந்த வருணை விட பெரிய இடமா பாக்கணுமாம்.. லேட்டானாலும் பரவாயில்ல.. நல்ல இடமா பார்த்து கொடுத்துடணும் அப்படிங்கறார்..” என்றார்  சியாமளா கொஞ்சம் வருத்தமாய்.

‘ஆகா இப்படி போகுதா…’ என்றேண்ணியவன் “ம்மா டக்குனு நம்ம எதுவும் பேசவும் முடியாது இப்போ.. சோ கொஞ்சம் பொறுமையவே போவோம்.. அப்பாக்கிட்ட நேரம் வர்றபோ நான் பேசுறேன்.. அதுக்குமுன்னே ஒன்ஸ் நானும் போய் பார்த்துக்கறேன்..” என்று கண்ணன் மெதுவாய் விஷயத்தை நகர்த்த,

“ம்ம் அதுவும் சரிதான்டா. எனக்கு கண்மணி நிம்மதியா சந்தோசமா வாழ்ந்தா போதும்.. வசதிங்கிறது நம்மலா நினைச்சுக்கிறது தான்.. கார் பங்களான்னு இருந்து நிம்மதியில்லைன்னா என்னா பண்றது..”

“ம்ம்ம் ஆமா ம்மா…”

“உன்கிட்ட சொல்லனும்னு தோணிட்டே இருந்தது. ஆனா அடுத்தடுத்து வேலை.. நீ கண்மணிக்கிட்ட இப்போவே எதுவும் சொல்லிக்காத…” என்றவர் உறங்கப் போக,  கண்ணனும் மனதினில் எண்ணிக்கொண்டான் கண்டிப்பாய் இப்போதைக்கு இதை கண்மணியிடம் கூறக் கூடாது என்று.

மறுநாள் கண்மணி கேட்டாள் தான் ஆனால் கண்ணன் வேறு சொல்லி மலுப்பி விட, அவளும் அதிரூபன் அடுத்து சரியாய் பேசவில்லை என்பதிலேயே இதனை விட்டுவிட்டாள். அதிரூபனுக்கு வேலைகள் நிறைய இருக்க, அதுவும் கடைசி இரண்டு நாட்கள் கண்காட்சி என்று கூட்டம் அப்படி வந்தது.. அவனே நினைத்தாலும் கூட கண்மணியோடு சாதரணமாய் உரையாட முடியவில்லை.

அறைக்கு வந்தாலோ, எப்போதடா கண்கள் மூடி உறங்குவோம் என்பதுபோல அப்படியொரு அலுப்பு அவனுக்கு.. நிச்சயமாய் இத்தனை பெரிய வாய்ப்பை அவன் எதிர்பார்க்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே.

‘ஐம் சோ டயர்ட்…’ என்ற மெசேஜ் வருகையில் கண்மணிக்கு அத்தனை சோர்வாய் இருந்தது. வருத்தமாகவும் இருந்தது.  

‘இவ்வளோ ஸ்ட்ரைன் பண்ணனுமா??’ என்றுகூட கேட்டாள்.

“சான்ஸ் வர்றபோ யூஸ் பண்ணிக்கணும் கண்மணி.. இந்த வயசுல ஓடாட்டி எப்போ ஓடுறது…” என்று அவனும் பதில் சொல்வான்.

அதிரூபனும் அதற்குமேல் கண்ணன் பற்றியோ இல்லை அவன் செய்தது பற்றியோ எதுவும் பேசவில்லை. அந்த நேரத்து கோபம், அதை கண்மணியிடம் காட்டிவிட்டான். அவ்வளவே.. அது இது என்று வேறு எதுவும் பேசவில்லை, பேச நேரமுமில்லை. இரண்டு நாட்கள் இப்படியே ஓடிவிட, அந்த கண்காட்சியும் நல்லபடியாகவே முடிய, மறுநாள் ஊருக்கு கிளம்பவேண்டும்.

‘அப்பாடி….’ என்ற ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு படுத்திருந்தான்.  உறக்கம் இழுத்துக்கொண்டு இருக்க, நிவினிடம் இருந்து அழைப்பு வந்தது.       

மஞ்சுளா அடுத்து அதிரூபனுக்கு அழைக்கவேயில்லை. ‘போடா நீ என்ன அவளோ பெரிய ஆளா..’ என்று இருந்துகொண்டார். இருந்தாலும் நிவினிடம் புலம்புவதை நிறுத்தவில்லை. இரண்டு நாள் பார்த்தவன், இதோ அவனே அழைத்தும் விட்டான். அதிரூபனுக்கோ உறக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.

“என்னடா டேய்…” என்றான் ஒருவித சோர்வில்..

“உனக்கென்னடா ஆச்சு.. நீ ஏன் இப்படி ஆகிட்ட.. அன்னிக்கு அம்மாக்கிட்டயும் அப்படி பேசிருக்க.. இப்போ நான் கூப்பிட்டாலும் இவ்வளோ சலிப்பா பேசுற..”  என்று நிவின் கடிய, அதிரூபனால் அனைத்தையும் சொல்லவும் முடியாது இல்லையா.

நிவினிடம் சொல்லி அதை அவன் கண்டிப்பாய் அம்மாவிடம் உளறுவான். மஞ்சுளாவோ ‘என் பையனை ஆள் வச்சு விசாரிக்கிறாங்களா..??’ என்று அவ்வளோதான் உண்டு இல்லை என்று ஆக்கிடுவார். இதெல்லாம் தேவையா??

ஆக, அவன் எதுவுமே சொல்லவில்லை. ‘வேற ஒரு டென்சன் டா…’ என்றுமட்டும் சொல்ல,

“என்ன டென்சனாலும் அம்மாக்கிட்ட அப்படிதான் பேசுவியா??!!” என்றான் நிவின் அதே பிடியில் நின்று.

“சரி.. தப்புதான்.. இப்போ என்ன வந்து காலுக்கு விழுந்து மன்னிப்பு கேட்கட்டுமா…” என்றான் கண்களை சுறுக்கித் திறந்து.

“ஆ!!!!”

“சொல்லுடா விழட்டுமா…” என்றவன் “நீ அம்மாட்ட போன் கொடு..” என, “எல்லாம் ஸ்பீக்கர்ல போட்டுதான் பேசிட்டு இருக்கோம்..” என்றான் நிவின்.

‘அதானே பார்த்தேன்…’ என்று அதிரூபன் எண்ணவும், மஞ்சுளாவோ அங்கே நிவினிடம் “யாரும் என்கிட்டே பேசவேண்டியது இல்லைன்னு சொல்லு நிவின்..” என்பது நன்கு கேட்டது.

“ம்மா அதை என்கிட்டவே சொல்லு…” என்று அதிரூபன் சொல்ல, மஞ்சுளா அமைதியாய் இருக்க, நிவினுக்கு திரும்ப இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டோமோ என்று முழித்தான்..

“ம்மா.. சாரிம்மா.. ப்ளீஸ்.. வேற ஒரு டென்சன்.. அதான்…” என்று அதிரூபன் நிஜமாகவே வருந்த,

மஞ்சுளா அப்போதும் அவனிடம் பேசாது “டேய்.. இவன் ஊருக்கு வரவும் போய் அந்த பொண்ணு வீட்ல பேசணும்.. அவ்வளோதான்.. சும்மா நாள் கடத்திட்டு எல்லாம் இருக்க முடியாது.. சொல்லிடு..” என்றுசொல்ல,

“அவனுக்குமே கேட்டிருக்கும்மா..” என்றான் நிவினோ அடுத்த வேடிக்கை நடக்க போகும் குஷியில்.

“என்னவோ சொல்லிடு..” என்றவர் அத்தோடு பேச்சை முடித்துக்கொள்ள, அங்கே அதிரூபனுக்கோ உடலில் இருந்த அலுப்பெல்லாம் அடித்து பிடித்து ஓடிவிட்டது.

‘என்னாது…. போய் பேசணுமா???’ என்றெண்ணியவன் அப்படியே எழுந்து அமர்ந்துவிட,

“டேய் அண்ணா!!!” என்றான் நிவின்.

இவனோ “கேட்டுச்சு கேட்டுச்சு…” என்றுசொல்ல, “எல்லாத்துக்கும் தயாரா வா.. இப்போ ரெஸ்ட் எடு.. வாய்ஸ் எப்படியோ இருக்கு.. நாளைக்கு வந்திட்டு சொல்லு பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றுவிட்டு நிவின் வைக்க இனி எங்கே இவன் எடுப்பது ரெஸ்ட்..

கன்னத்தில் கை வைத்து அப்படியே அமர்ந்துபோனான். கண்டிப்பாய் இதெல்லாம் அடுத்து நடக்கும் என்று தெரியும் தான். நடக்கவேண்டிய ஒன்றும்தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் காதலித்துகொள்ள ஆசை.. இன்னும் கொஞ்சம் கண்மணியைப் பற்றி தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள ஆசை..

அதற்குள் வீட்டில் பேசி, கல்யாணம் அது இது என்று போனால் ?? கொஞ்சம் யோசனையாய் இருந்தது. அதுவும் கண்மணி வீட்டில் இப்போது கண்ணனின் திருமண வேலைகள் நடந்துகொண்டு இருக்கையில், புதிதாய் போய் இப்படியான குழப்பம் ஏற்படுத்த வேண்டுமா என்ற யோசனையும் கூட.

சரி எதுவாக இருந்தாலும் ஊரில் போய் பார்த்துகொள்வோம், அதற்குமுன்னே கண்மணியை கொஞ்சம் தயார் செய்துவிட வேண்டும் என்று எண்ணியவன், நேரம் பார்க்க, கண்மணி உறங்கியிருப்பாள் என்று தெரியும். சரி நாளைக்கு கிளம்பும்  முன்னே பேசிவிட்டு கிளம்புவோம் என்று நினைத்தவன்,

‘மார்னிங் எட்டு மணிக்கு கால் பண்ணுவேன். எடுத்து பேசணும்…’ என்று கொஞ்சம் கட்டளை குரலிலேயே மெசேஜ் செய்துவிட்டு உறங்க, கண்மணியும் அதை இரவின் நடுவில் முழிப்பு வந்தபோது எடுத்து பார்த்தாள் தான்.

ஆனால் பதில் சொல்லவில்லை. ‘இத்தனை நாள் சரியா பேசாம இருந்துட்டு இப்போ என்ன ஆர்டர்…’ என்று எண்ணிக்கொண்டாள்.

அவளுக்கும் தெரியும் அவனின் வேலை அப்படி என்று. ஆனாலும் கூட மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள் சிலநேரம் நம்மை தூண்டி விடும்தானே. பேசுவானா பேசுவானா என்று காத்திருக்கும் போது கோபமாய் பேசி அடுத்து மௌனித்துகொள்வதும், இப்போது நான் பேசவேண்டும் என்று சொல்வதும் இதெல்லாம் காதலில் சகஜம் தான் என்றாலும் கூட, கண்மணிக்கு எல்லாமே போட்டு அவளை, அவளின் மன உணர்வுகளை படுத்தும் காரணிகளே..

அவளை ஒருநிலையில் இருக்கவிடாமல் செய்யும் இந்த அழகிய இம்சை, அவளை சில நேரம் அழவும் செய்தது.

அதிரூபன் சொன்னதுபோலவே காலையில் அழைத்துவிட, கண்மணியோ “ம்ம்…” என்பதை தாண்டி ஒன்றுமே சொல்லவில்லை..

‘ஆகா நேத்து என்னடான்னா அம்மாக்கிட்ட கால்ல விழணுமான்னு கேட்டுட்டோம் இப்போ இவளும் கோவமா இருக்கா போலவே… என்னடா அதிரூபா உனக்கு வந்த சோதனை..’ என்று நினைத்தவன்,

“கண்மணி…. எனக்குதான் உன்மேல எந்த கோபமும் இல்லையே…” என்று அப்படியே தட்டை திருப்பினான்.

“ம்ம்…”

Advertisement