Advertisement

தூறல் – 21

“ஹே கண்மணி… நான் இங்க இருக்கேன்.. நீ அங்க இருக்க.. ரொம்ப தூரத்துல இருக்கோம் ஒருத்தருக்கொருத்தர்… ” என்று அதிரூபன் பீடிகை போட,

“ஆமா..” என்றாள் இவளும்.

“பேசுறது கூட எப்பவோதான்…”

“ம்ம் ஆமா…”

“ஊருக்கு வந்தாலும் நினைச்சதுபோல டக்குனு மீட் பண்ணவும் முடியறதில்ல..”

“ம்ம்ம் ஆமா…”

“எல்லாரும் இப்படியா லவ் பண்றாங்க கண்மணி???” என்று அதிரூபன் குரலில் ஏக்கம் வழிந்தோட,

கண்மணியோ “தெரியலையே…” என்ற ஒற்றை பதிலில் அவனின் ஏக்கத்திற்கு அணை கட்டினாள்.

“சரிவிடு அடுத்தவன் எப்படி லவ் பண்ணா என்ன?? நமக்கு நம்ம லவ் முக்கியம்..”

“கண்டிப்பா…”

“சோ.. நான் பாவமில்லையா??”

“ஏன் என்னாச்சு???” என்று கண்மணி கேட்க, அதிரூபனோ நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“ஹ… ஹலலோ….”

“ம்ம் இருக்கேன் இருக்கேன்..” என்றவனின் குரலில் தெரிந்த மாற்றம் கண்டு,

“ஏன் எப்படியோ பேசுறீங்க??” என்றாள் சலுகையாய்..

‘நான் பேசுறது இவளுக்கு புரியுதா புரியலையா?? புரியாம போக இவ ஒன்னும் குட்டி பாப்பா கிடையாது..’ என்று அதிரூபன் நினைக்கும் அதே நேரம், கண்மணி ஒரு நமட்டு சிரிப்போடு மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டு இருந்தாள்.

‘மழை வர்ற மாதிரி இருக்கு கண்மணி.. துணி எல்லாம் எடுத்திட்டு வா..’ என்று சியாமளா சொல்லவும், கண்மணியோ அலைபேசியை தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டாமாய் மாடிக்கு ஓடிவந்துவிட்டாள்.

அதிரூபனோடு சரியாய் பேசி மூன்று நாட்கள் ஆனது. அவன் பெங்களுரு கிளம்புகையில் ஓரிரு வார்த்தை அவசர அவசரமாய் பேசினான். பின்னே அங்கே போகவும், அவனுக்கு அவனின் வேலைகள் சரியாக இருந்தது.  அதிரூபனுக்கு இதெல்லாம் புதிது. ஓரளவு தன்னை தயார்ப்படுத்தியே சென்றிருந்தாலும் கூட, அங்கே சென்று கடைசி நேர வேலைக்கு செய்வதும் சிலது இருந்தது.

அவன் எதிர்பார்த்து சென்றதையும் விட, அந்த கண்காட்சி பிரம்மாண்டமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, முதலில் உள்ளே கொஞ்சம் அதிரூபன் மனதிற்குள்ளே கொஞ்சம் திகைத்தாலும், நடப்பவைகளை கவனித்து அதற்கேற்ப தன்னை திடப்படுத்திக்கொண்டான்..

புதிய மனிதர்கள், புதிய சூழல், புதிய வாய்ப்புகள், என்று இருக்க அதிரூபனுக்கு ஒரே உற்சாகமாகிப் போனது. நேரம் கிடைக்கையில் கண்மணியோடு பேச என்று அழைத்தால், அவளோ “அம்மா வார்றாங்க…” என்று வேகமாய் சொல்லி வைத்துவிடுவாள்.

அவளுக்கும் அவனோடு பேச ஆசை தான். ஆனால் கண்ணன் வீட்டில் இருந்தாலோ பார்வை எல்லாம் இவள் என்ன செய்கிறாள் என்பதிலேயே இருந்தது. மற்ற நேரத்தில் தனியாய் வந்து அறையில் அமர்ந்தாலோ சியாமளா பின்னோடேயே வந்துவிடுகிறார் என்ன செய்கிறாய் என்று.. சடகோபனோ எதுவும் கேட்காவிட்டாலும் மகளை கவனிக்கிறார் என்பது அவரின் பார்வையிலேயே தெரிந்தது.

இல்லை ஒருவேளை கண்மணிக்குதான் இப்படி அனைவரும் தன்னையே பார்ப்பதுபோல் இருந்ததுவோ என்னவோ. ஆனால் அதிரூபன் “போ என்கூட நீ பேசவே மாட்டேங்கிற …” என்று குறைபட, இதோ கிடைத்த நேரத்தில் அவனோடு பேச ஓடிவந்துவிட்டாள்.

இவளின் அழைப்பு வரவுமே “ஹே.. கண்மணி… மழை தான் வரும் போ… அதிசயம் நீயே கால் பண்ணிருக்க…” என்று அதிரூபன் சந்தோசமாய் கேட்க,

“ம்ம்.. மழைதான் வரப்போது.. துணி எடுக்க வந்தேன்..” என்று இவளும் பேச்சை ஆரம்பிக்க, கண்மணியோ அதிரூபன் சொல்வது புரிந்தும் புரியாதாது போல் வேண்டுமென்றே பேச,  அவனோ ‘இவளுக்குப் நிஜமாவே புரியலையோ..’ என்றுதான் எண்ணினான்.  

கண்மணியோ “இருக்கீங்களா??” என்று கேட்க, “இருக்கேன் இருக்கேன்…” என்றான் கொஞ்சம் சலிப்பாய்..

“ம்ம்… என்னாச்சு??”

“ஒன்னும் ஆகலை…” என்று பல்லைக் கடிக்க, “ஏன் எப்படியோ பேசுறீங்க??” என்று கேட்டு வேண்டுமென்றே அவனை இன்னமும் வெறுப்பேற்ற,

“ஓய்.. என்ன என்னை கடுப்பேத்துறியா??” என்றான் இவனும்.

“ஹா ஹா.. புரிஞ்சிடுச்சா??” என்றவள் சிரிக்க,  “ஹேய் கண்மணி..!!!” என்றான் திரும்ப மெதுவாய்..

“ம்ம்..”

“நான் சொல்றதுக்கு நோ சொல்ல கூடாது…”

இதைக்கேட்டு கண்மணிக்கு கற்பனைகள் பாய்ந்தோட, “எ… என்னது??!!!” என்றாள் பதற்றமும் ஆவலும் சரியாய் கலந்து..

என்ன கேட்பான் என்ற யூகம் இருந்தது, ஆனாலும் கேட்டுவிடுவானோ என்ற பயமும் இருக்க, கவனமெல்லாம் அதிரூபன் சொல்லப் போகும் சொல்லில் இருக்க, கண்மணியின் கண்களோ இங்கும் அங்கும் அலைபாய்ந்தது.   

“ஒரே ஒரு தடவ…”

“ம்ம்..”

“மெதுவா…”

“ம்ம்ஹும்..”

“ம்ம்ச்… ஒரே ஒரு தடவ என் பேர் சொல்லேன்…” என்று அதிரூபன் கொஞ்சலும் கெஞ்சலுமாய் கேட்க,

“ஹா… என்னது??!!!!” என்றாள் கண்மணியோ அதிர்ந்து..

அவள் எண்ணியதே வேறு.. இவனோ பேரை சொல் என்று சொல்ல, கண்மணியின் முகம் போன போக்கு அவளுக்கு மட்டும்தான் தெரியும். நிஜமாகவே பேரை சொல் என்றுதான் சொன்னானா என்று திரும்ப கேட்க

அவனோ “எஸ்.. என் பேர் சொல்லு.. நீ இதுவரைக்கும் சொன்னதேயில்ல..” என்று சொல்ல,

“இதுக்கு தான் இவ்வளோவா…” என்றாள் லேசாய் முளைத்த சிரிப்பை அடக்கி..

“ஏன் நீ என்ன நினைச்ச??” என்று அதிரூபன் கேட்கும்போது அவனும் சிரிப்பதுபோல் இருக்க,

ஒருவேளை தன்னோடு விளையாடி பார்க்கிறானோ என்று நினைத்தவள் “நான் எதுவும் நினைக்கலையே…” என்றவள் வேகமாய் “ஓகே நான் கீழ போகணும்.. பை…” என்றுசொல்லி கீழேயும் வந்துவிட்டாள்.

ஆனால் அன்றைய தினமும் அதற்கு மறு தினமும் கூட அதிரூபன் ‘என்ன நினைச்ச?? என்ன நினைச்ச??’ என்று கேட்டு கேட்டே கண்மணியை ஒரு வழி செய்துவிட, கண்மணிக்கோ அவளும் அறியாது முகத்தில் ஒரு செம்மை வந்து அழகாய் அமர்ந்துகொண்டது .. கூடவே மெதுவாய் ஒரு பாடலும் அடிக்கடி முணுமுணுக்கப் பட, சியாமளா கூட மகளை ஓரிரு முறை திரும்பிப் பார்த்தார்.

கண்மணியோ தன்னை சுற்றி நடக்கும் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.. ஒவ்வொரு நிமிடமும் அதிரூபன் அவளிடம் பேசியதும், சீண்டியதும் கொஞ்சியதும்,

பின் “கண்மணி…” என்று மெதுவாய் அழைத்து “இப்போதைக்கு இது மட்டும்..” என்றுசொல்லி, அவனின் முத்த சத்தத்தை மட்டும் அவளுக்கு அனுப்ப, கண்மணியோ அதிரூபனின் காதலில் வேறெந்த நினைவும் வராது திளைத்துக்கொண்டு இருந்தாள்.

ஆனால் வீட்டினில் மராமத்து வேலைகள் தொடங்கியிருந்தார்கள்.  கண்ணன் தீபா திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டு இருக்க, அதுவும் திருமணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே எனும் நிலையில் இருவர் வீட்டிலுமே சட்டென்று ஒரு கல்யாண சந்தோசமும், பரபரப்பும் வந்து தொற்றிக்கொண்டது. அதிலும் தீபாவோ சொல்லவே வேண்டாம்.

“கண்ஸ் நீ மட்டும் இல்லைன்னா கண்டிப்பா இதெல்லாம் நடந்திருக்காது..” என்று நூறு முறையாவது சொல்லியிருப்பாள்.

கண்ணனுக்கு கூட சந்தோசம் தான் ஆனால் என்னவோ ஒரே யோசனையில் இருப்பதுபோலவே இருந்தான்.. முதலில் இது கண்மணியின் கவனித்தில் வரவேயில்லை. சியமளாதான் மகனிடம் “என்னடா நீ ஏன் இப்படி இருக்க??” என்று கேட்க,

பின் கண்மணியும் “ஏன் இப்படி இருக்க??” என்றாள் அண்ணனிடம்.

“ம்ம்ம்..” என்று யோசித்தவன் “நான் அதிரூபனை பாக்கணும்.. டக்குனு போயி பார்த்துடலாம். பட் அது நல்லாருக்காது.. சோ சொல்லிடு மீட் பண்ணனும்னு..” என்றான் யோசனையோடே.

கண்மணிக்கு மனதில் ஒருநொடி திடுக்கென்றாலும், அண்ணன் இதை சொல்வான் என்று ஏற்கனவே எண்ணியிருந்தாளோ என்னவோ ஆக வேறெதுவும் சொல்லாது, ஏன் எதற்கு என்றும் கேளாது,   “அ.. அவர் பெங்களூரு போயிருக்கார்ணா..” என்றாள்.

‘பெங்களூரா??’ என்று யோசித்தவனுக்கு மனதினில் வேறு சில எண்ணங்கள்,  “என்னவாம்??!!” என்று கேட்டு விஷயத்தை அறிந்துகொண்டான்.

கண்மணியும், கண்ணனிடம் சந்தோசமாகவே அதிரூபன் சென்றிருக்கும் விபரங்கள் எல்லாம் சொல்ல, அவளின் முகத்தினில் இருக்கும் சந்தோசம் பார்த்து கண்ணனும் சந்தோசமாகவே,   

“சரி.. ஊருக்கு வரவும் சொல்லு கண்ஸ்..” என,

“கண்டிப்பாண்ணா…” என்றவள், “தேங்க்ஸ்ண்ணா..” என்றாள் உணர்ந்து..

“ச்சி லூசு…” என்று அவளின் மண்டையில் கண்ணன் கொட்ட,

“இல்லண்ணா.. நா.. நான் நிஜமாவே ரொம்ப டென்சன் ஆகிட்டேன்.. உ.. உனக்கு அவரை பிடிக்கலையோன்னு..” என்றவள் கண்ணன் அமைதியாய் இருக்கவும் அவனின் முகம் பார்க்க,

“ஹ்ம்ம் இப்பவும் என்னால முழு மனசா சரின்னு சொல்ல முடியலை கண்ஸ்.. ஒருவேளை வருண் விசயத்துல நமக்கு கிடைச்ச பாடமா இருக்கலாம்.. ஆனா உனக்கு பிடிச்சிருக்கு அப்ப்டிங்கிறப்போ யோசிக்கத்தானே செய்யணும்..” என்றான் கண்ணனும் அவனின் உள்ளத்தை மறைக்காது..

“ம்ம்…” என்ற கண்மணிக்கோ சட்டென்று முகம் வாடிப்போக,

“ஹேய்..!!! ப்ரீயா விடு.. எல்லாம் நான் பாத்துக்கிறேன்.. ஒன்ஸ் நேர்ல பார்த்து பேசினா எல்லாம் கிளியர் ஆகிடும்.. அடுத்து நானே வீட்ல பேசுறேன் சரியா..” என,

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவள், “எது எப்படி இருந்தாலும்.. இனி அவர் மட்டும்தான் ண்ணா..” என்றாள் கண்மணியோ முடிவாய்..

அதாவது நேரில் பார்த்து உனக்கு பிடித்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி, என் முடிவில் எவ்வித மாற்றமும் இருக்கபோவதில்லை என்று சொல்லும்விதமாய் கண்மணி சொல்ல, அது கண்ணனுக்கு புரிந்தாலும்,

“நீ போ கண்ஸ்.. ரிலாக்ஸா இரு..” என்று அனுப்பிவைத்தான்..         

கண்மணி செல்லவும் அவனின் பெங்களூரு நண்பனுக்கு அழைத்து “மச்சி.. நான் ஒருத்தர் டீடைல்ஸ் சொல்றேன்.. கொஞ்சம் க்ளோஸா வாட்ச் பண்ணி சொல்லு.. பெர்சனல் விஷயம்.. சோ வெளிய யாருக்கும் தெரியவேணாம்..” என்று சொல்லி அதிரூபனைப் பற்றிய தகவல்களை தன் நண்பனிடம் சொல்ல,

கண்ணனின் நண்பனும் “அப்படியா எனக்கு ரொம்ப பக்கத்து ஏரியா தான் டா.. நோ பிராப்ளம்…” என்றுசொல்லி கண்ணனுக்கு உறுதி அளித்தான்..

கண்ணனை பொருத்தவரைக்கும் ஒரு அண்ணனாய் அவன் செய்வது, யோசிப்பது எல்லாம் சரி. ஆனால் அது அதிரூபனின் பார்வையில் எப்படி இருக்கும் என்று அவனைக் கேட்டால் தானே தெரியும்..

மறுநாள் வாரவிடுமுறை தினம் என்பதால், பிரத்தியேக கை கடிகார வடிவமைப்பாளர் கண்காட்சியில் கூட்டம் நிறையவே இருந்தது. அதிரூபனின் ஸ்டாலில் பத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்க, ஒருசிலர் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு அதிரூபன் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க, கண்ணனின் நண்பனும், அவனோடு வந்திருந்த மற்றும் ஒருவனும் அந்த ஆட்களோடு ஆட்களாய் நின்றிருந்தனர்.

அதிரூபனிடம் தமிழிலேயே அவர்கள் பேசவும், இவனும் கூட கொஞ்சம் சந்தோசமாகவே பதில் சொல்லிக்கொண்டு இருந்தான். ஆனால் நேரம் செல்ல செல்ல, இவ்விருவரின் கேள்விகள் சம்பந்தமேயில்லாது இருக்க,

“சார்.. மத்த கஸ்டமர்ஸ்க்கும் நான் பதில் சொல்லணும்..” என்று தன்மையாகவே அதிரூபன் சொல்ல,

“அப்போ நாங்க முக்கியமில்லையா??” என்றான் வேண்டுமென்றே ஒருவன்.

அதாவது பொது இடத்தில் அதிரூபன் எப்படி நடந்துகொள்கிறான் என்று சோதனை செய்கிறார்களாம். ‘போங்கடா நீங்களும் உங்க மூஞ்சியும்…’ என்று அதிரூபன் மனதில் எண்ணினாலும்,

“உங்களுக்கு தேவையான எல்லா பதிலும் நான் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்..” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்து..

“நோ நோ… அதெப்படி நீங்க சொல்ல முடியும்.. இப்போ நீங்க எக்ஸ்ப்ளெயின் பண்ண இதே டிசைன் காஸ்ட் இன்னொரு ஸ்டால்ல பதினைஞ்சு ஆயிரம் சொன்னாங்க.. நீங்க பதினெட்டு சொல்றீங்க.. அதெப்படி..” என்று அடுத்த சோதனைக்கு போக,

அதிரூபனோ “அப்படியா வாங்க.. சேர்ந்தே போய் கேட்போம்.. என்னோட எஸ்டிமேட் படி பதினெட்டாயிரம் சரி.. பட் இன்னொரு ஸ்டால்ல கம்மியா சொல்றங்கன்னா போய் கேட்போமே. நானும் தெரிஞ்சிக்கிறேன்.. வாங்க எந்த ஸ்டால் அது…” என்றுசொல்லி அதிரூபன் முன்னே இறங்கிட,

மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு “அய்யோ.. சார்.. நீ.. நீங்க உங்க வேலையைப் பாருங்க.. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ரேட் சொல்வாங்க.. கஸ்டமர்ஸ்க்கு ஓகேன்னா தானே வாங்குவாங்க..” என்றனர் சமாளிப்பாய்.

அதிரூபனோ ‘ஹா… அது…’ என்று ஒருபார்வை பார்த்துவிட்டு, மீண்டும் அவனின் ஸ்டால் உள் போக, அங்கே பில் கவுண்டரில் இருந்த  கல்லூரி மாணவர்கள் சிலர், “சார் கன்பர்ம் திஸ் டிசைன்….” என்று சொல்லி மேற்கொண்டு பேச, அதிரூபனுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது.

இந்த கண்காட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு சில ஆர்டர்களே கிடைத்திருக்க, இப்போது கிடைத்திருப்பதோ அவனுக்கு கிட்டத்தட்ட மொத்தமாய் ஒன்று போலவே இருக்கும் நாற்பது கை கடிகாரத்திற்கான ஆர்டர். எத்தனையோ தனிப்பட்ட மாணவர்களுக்கு செய்து கொடுத்திருக்கிறான் தான். ஆனால் இது என்னவோ அவனுக்கு ஒரு சந்தோசத்தை கொடுக்க, அனைவரிடமும் அதே முக மலர்ச்சியோடு பேசிக்கொண்டு இருந்தவன் கண்களில், அவன் நின்ற இடத்திற்கு சற்றே தள்ளி ஒரு பர்ஸ் கீழே கிடக்க,

“கைஸ்.. ஹூஸ் பர்ஸ் இஸ் திஸ்??” என்றான் அவனின் முன்னிருந்த மாணவர்களை நோக்கி.

அனைவரும் இல்லை என்று தலையை ஆட்ட, அப்போதுதான் கவனித்தான், அவனை கடுப்பேற்றிய இருவர் அங்கில்லை என்று,.

‘மிஸ் பண்ணிட்டு போயிட்டாங்களோ..’ என்றேண்ணியவன் ஸ்டால் வெளியே எட்டிப்பார்க்க, அவர்கள் இருவரும் சற்று தள்ளி நிற்பது தெரிய,

“ஒன் மினிட்..” என்று ஸ்டாலில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, அவர்களை நோக்கிப் போக, அதில் ஒருவனோ இவன் வருவது அறியாமல் “டேய் கண்ணா.. நல்ல டைப்தான்டா பார்த்த வரைக்கும்.. டீசன்ட்டா இருக்கார்.. இருந்தாலும் செக் பண்றதுக்கு பர்ஸ் விட்டு வந்திருக்கேன்… பாப்போம்…” என்று சொல்லிக்கொண்டே திரும்ப,  அதிரூபனோ முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் இருவரையும்.

இதேது அவனின் கடையாய் இருந்திருந்தால் இந்நேரம் நடப்பதே வேறு.. ஆனால் இது புதிய இடம். வந்திருக்கும் வேலையும் வேறு.. எதையும் வெளிக்காட்டவும் முடியாத நிலை.. அதிரூபனுக்குத் தெரியும் தான் பார்த்த பார்வையிலேயே இவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று.

எதிரே நிற்பவர்களிடம் பர்சை விட்டு எரியாத குறையாய் கொடுத்துவிட்டு, வேகமாய் திரும்ப ஸ்டால் வந்துவிட்டான். மனதினுள்ளே அப்படியொரு கோபம்.. அங்கே இருந்தவன் கண்ணா என்று அழைத்து பேசியது வேறு மனதை போட்டு அந்த பாடு படுத்தியது..

‘என்னை பாலோ பண்ண ஆல் அனுப்பி.. ச்சே… நான் என்ன அவ்வளோ மோசமா??’ என்று அதிரூபனின் மனது கறுவியது.

என்ன முயன்றும் அவனின் மனம் சமாதானமே ஆகாது போக, கண்மணிக்கு அழைத்து பேசலாம் என்று பார்த்தால், அடுத்து அடுத்து ஆட்கள் வந்தபடியே இருக்க,  யார் யாருக்கு எப்படி பதில் சொன்னானோ,  என்ன பேசினானோ, அனைத்தும் முடித்து அவனுக்கான அறைக்கு வந்தவன் கண்மணிக்கு பேச என்று அலைபேசியை எடுக்க, சரியாய் மஞ்சுளா அழைத்தார்..

கண்களை இறுக மூடியவன் “ம்ம் சொல்லும்மா..” என,

“என்னடா சாப்பிட்டியா??” என்றார் அம்மாவாய்..

“இதைக் கேட்கத்தான் போன் பண்ணியா??”

எதையும் காட்டக் கூடாது என்று அதிரூபன் எண்ணினாலும், அவனையும் மீறி வார்த்தைகள் வர,

“டேய் ரூபன்?? ஏன் டா இப்படி பேசுறா??” என்றார் மஞ்சுளா வழக்கம் போலவே,                                

“ம்ம்ச் ம்மா.. இப்போ என்னத்துக்கு போன் பண்ண??”

“ஏன்டா நான் பண்ண கூடாதா?? இதென்னடா கொடுமை.. நான் உன்னை பெத்தவடா…”

“ம்மா இங்க பாரு.. நான் ஏற்கனவே வேற டென்சன்ல இருக்கேன்.. நீ வேற கடுப்பெத்தாத..” என்று அதிரூபன் வார்த்தைளை கடித்துத் துப்ப,

“என்னடா பெரிய டென்சன் பொடலங்கா டென்சன்.. ஊருக்கு போயிருக்கானே நேரத்துக்கு சாப்பிட்டானா என்னனு கூடவா கேட்க கூடாது.. அது சரி.. இப்போ நான் கேட்டா எல்லாம் பிடிக்குமா என்ன?? சத்தமே இல்லாம கண்மணி சாப்டீங்களான்னு கேட்டா தானே புடிக்கும்.. என்னவோ போடா.. பெத்த மனசு…” என்று மஞ்சுளா பேசிக்கொண்டே போக,

“ம்மா.. போதும்… சும்மா தேவையில்லாதது பேசாத..” என்று அப்போதும் கடிந்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.  

அடுத்த நொடி  “இப்போ எதுக்குடா.. அவன் பெரிய இவனாட்டம் இப்படி பேசுறான்..” என்று மஞ்சுளா நிவினிடம் கேட்க,

“எனக்கு என்னம்மா தெரியும்??” என்றான் இளையவன் பாவமாய்.

“பெரிய பையன் தான். அதுக்காக இவன் செய்றதுக்கு எல்லாம் நான் ஆளாடா..”

நிவின் பதில் சொல்லாது, தலையை இல்லை என்று ஆட்ட, “ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறதுகுள்ளயே என் உயிர் போகுது.. இதுல நீ ஒருத்தன் வேற.. வர வர பொண்ணுங்களுக்கு ஈசியா கல்யாணம் பண்ணிடலாம் போல, பசங்களை பெத்து அவனுக்கு ஒருத்தியை பிடிச்சு கட்டி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது…” என்று மஞ்சுளா பாட்டில் பொரிய,

“டேய் அண்ணா இதெல்லாம் உனக்கே நல்லாருக்காடா??” என்று நிவின் அப்போது எண்ணிக்கொள்ள மட்டுமே முடிந்தது.

“இவனுக்கு இருக்க டென்சன் இவனுக்குன்னா எனக்கு இருக்க டென்சன் எனக்கு இருக்கும்தானே.. அதெல்லாம் காட்டுனா எங்க போவீங்க ரெண்டுபேரும்.. வந்துட்டானுங்க.. தடிமாடு மாதிரி வளர்ந்து நிக்கிறது எப்படின்னு யோசிக்கனும்.. டென்சனான் டென்சன்… வரட்டும் அவன்.. நாளைக்கு அந்த பொண்ணு வீட்ல பேச நொம்மா நொம்மானு..” என்று புலம்பியபடி மஞ்சுளா எழுந்துபோக,

நிவின் அழைத்துப் பார்த்தான் அடுத்து அண்ணனுக்கு.. ஆனால் அவனின் கால் வெயிடிங்கில் செல்ல, ‘ஹ்ம்ம் அதுக்குள்ள கடல வறுக்கப் போயிட்டானா..’ என்றெண்ணியவனும் எழுந்து செல்ல, அங்கே அதிரூபனோ கண்மணியிடம் காட்டு கத்தலாய் கத்திக்கொண்டு இருந்தான்.   

அதிரூபனுக்கு அப்படியொரு கோபம்.. இதுநாள் வரைக்கும் அவனுக்கு இந்த கோபம் எங்கிருந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் இப்போதோ அழவே இல்லாத கோபம். தான் இருக்கும் இடம் உணர்ந்து, வந்த வேலை உணர்ந்து அனைத்தையும் கட்டுப்படுத்தியவன்,  என்னவோ அதை கண்மணியிடம் பேசும்போது வெளிக்காட்டாது இருக்க முடியவில்லை.

அதிரூபன் விடாது அழைக்க, கண்மணியோ ‘இப்போ பேச முடியாது..’ என்று மெசேஜ் மட்டும் பதிலாய் அனுப்ப,

“பேசித்தான் ஆகணும் ஒழுங்கா போன் எடு..” என்று கொஞ்சம் மிரட்டலாகவே பதில் வந்தது அவனிடம் இருந்து..

ஆனால் கண்மணியோ வேறெதுவும் கேட்காது அழைப்பை ஏற்றதும் “சாப்பிடீங்களா??” என்று கேட்க,

“என்ன நினைச்சிட்டு இருக்கான் உன் அண்ணன்.. என்னைப் பத்தி தெரியணும்னா என்கிட்ட நேரா பேசணும்.. அதைவிட்டு இதென்ன பழக்கம் ஆள் விட்டு வேவு பாக்குறது ..” என்று கத்த,

‘ஐயோ…!!!’ என்று அதிர்ந்தவள் “எ… என்னாச்சு???” என்றாள் ஒன்றும் விளக்காது..

“என்னாச்சா??? நீ சொன்னியா நான் பெங்களூரு வந்திருக்கேன்னு…”

“ம்ம்..”

“ஆள் வச்சு.. நான் என்ன செய்றேன்.. எப்படி பீகேவ் பண்றேன், பணத்தாசை பிடிச்சவனா?? என்ன ஏதுன்னு வேவு பாக்க சொல்லிருக்கான் உன் உடன்பிறப்பு..” என்று அதிரூபன் கோபத்தில் பேச, கண்மணியோ பேச்சற்று போனாள்.

“கண்மணி… என்ன பேச்சு வரலியா?? போ போய் சொல்லு.. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் வந்து நிக்கனும்னு.. அதைவிட்டு இப்படி…” என்று என்ன வார்த்தை சொல்ல வந்தானோ

“ச்சேய்..” என்று அவனே கடிந்து “இப்படி பின்னாடி ஆள் அனுப்ப கூடாதுன்னு சொல்லி வை..” என்று சொல்ல,

“ப்ளீஸ்.. அ.. அண்ணன் பண்ணதுக்கு நா.. நான் சாரி கேட்டுக்கிறேன்.. நீ.. நீங்க மனசுல வச்சுக்கவேணாம்..” என்றாள் கண்மணியோ பாவமாய்..

அவளுக்குமே இது கேட்டதும் பிடிக்கவில்லை தான். தன்னிடம் நேரில் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, இதென்ன இப்படி ஆள் அனுப்பி பார்ப்பது அதுவும் அண்ணன்.. இப்படி செய்வானா?? என்று இருக்க, அவளுக்கு என்னவோ அதிரூபனுக்கும் கண்ணனுக்கும் இடையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயமாகிக்கூட போனது..

“என் மனசு சுத்தம்மா தான் ம்மா இருக்கு.. ஆனா உன் அண்ணனுக்குதான் எதை எப்படி செய்யணும்.. யார் யார் எப்படின்னு தெரியலை..”

“ப்ளீஸ்.. வேணாமே.. நா.. நான் கேட்கிறேன் அண்ணன் கிட்ட..” என்று கண்மணி கெஞ்ச,

“ம்ம்ச் இப்போ எதுக்கு நீ இப்படி கெஞ்சுற??” என்று காய்ந்து விழுந்தான் அதிரூபன்..

“இ.. இல்ல… அ.. அது..”

“எனக்கு கோபம் உங்க அண்ணன் மேலதான்.. உன்மேல இல்லை.. புரிஞ்சதா..” அப்போதும் கோபம் குறையாத குரலில் அதிரூபன் கேட்க,

“ம்ம்…” என்றாள் மெதுவாய்..

மேற்கொண்டு அதிரூபன் பேசுவான் என்று பார்க்க, அவனோ பேசாது “சரி நீ தூங்கு..” என்றுசொல்லி பேச்சை முடித்துவிட்டான்.. அடுத்து மெசேஜாவது எதுவும் செய்வான் என்று பார்க்க, கண்மணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிரூபனிடம் இருந்து அடுத்து எதுவுமே வராது போக, அவனின் கோபத்தில், கண்ணனின் செயலில், இப்பது அதிரூபன் பேசாது இருப்பதில் என்று எல்லாம் சேர்த்து கண்மணிக்கு அழுகை வேறு வர,

அவளின் அறையில் இருந்துகொண்டே கண்ணனுக்கு அழைத்து “ஏன் ண்ணா இப்படி பண்ற நீ??” என்றாள் அழுகுரலில்..    

         

Advertisement