Advertisement

தூறல் – 20

கண்மணிக்கு, கண்ணன் என்றால், அதிரூபனுக்கு மஞ்சுளா. இருவருமே இருவரிடமும் நன்றாக மாட்டிக்கொண்டனர்.. அதிரூபன் கண்ணனை கவனிக்கவில்லை, நிவின் இழுக்காத குறையாய் இழுத்து சென்றமையால் அப்படியே சென்றுவிட, அவன் பார்க்கவில்லை. ஆனால் கண்ணன் பார்த்துவிட்டான்..

எப்போதுமே கண்ணன் ஊருக்குச் சென்றுவிட்டு வந்தால், “அண்ணா…” என்றபடி வேகமாய் அவனை நோக்கி வரும் கண்மணி இப்போதோ “அண்ணா..!!!” என்று அதிர்ந்து பார்க்க, என்னவோ அந்த நிமிடம் கண்ணனுக்கு மனதில் ஒரு வலி வந்தது நிஜமே..

கண்மணி அவனைவிட்டு வெகு தூரம் சென்றதாய் ஓர் உணர்வு..

“கண்ஸ்..!!!” என்று உதடுகள் மட்டுமே அசைய, கண்ணனின் பார்வை இன்னமுமே சாலையில் தான் இருந்தது. கண்மணியும் அண்ணன் என்ன சொல்வானோ என்று பார்த்து அப்படியே நிற்க,

“ஆரம்பிச்சுட்டீங்களா?? ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து பேச..” என்று சியாமளா வர, அதன் பின்னே தான் இருவரும் திரும்ப ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வீட்டினுள் திரும்ப, இருவருமே அடுத்து எதுவும் பேசவில்லை.

சியாமளா வந்தவரும்கூட “என்ன மாநாடு முடிஞ்சதா??” என்றபடி திரும்ப உள்ளே போக, கண்ணன் அவனின் அறைக்குள் நுழைய, கண்மணி அவளின் அறையில் நுழைந்துகொண்டாள்.   

சடகோபன் கூட பிள்ளைகள் பார்த்துவிட்டு “என்னாச்சு??” என்று சியாமளாவிடம் கேட்க, அவரும் புரியாது “என்னாச்சு??” என்றார் கணவரைப் பார்த்து.

“இல்ல ரெண்டும் அமைதியா போறாங்களே..”

“கண்மணி ட்ரெஸ் மாத்த போயிருப்பா.. இவனும் மாத்திட்டு வருவான்.” என்றவர்,  “என்னங்க.. இன்னிக்கு மழைக்கு நிவின் வீட்ல இருந்தோமே.. ரொம்ப நல்ல மனுசங்களா இருக்காங்க..” என்று சியாமளா பேச்சை ஆரம்பிக்க சரியாய் கண்ணனும் அங்கே வந்து அமர்ந்தான்.

“என்னடா திடீர்னு வந்திருக்க..” என்று சியாமளா மகனிடம் திரும்ப,

“வேற ஒருத்தரை எனக்கு பதிலா வர சொல்லிட்டு வந்திட்டேன் ம்மா..” என, “ஏன் கண்ணா என்னாச்சு??” என்றார் சடகோபனும்.

“ஒண்ணுமில்ல ப்பா.. எனக்கு அங்க கொஞ்சம் செட்டாகல..” என்று கண்ணன் சொல்லும்போதே கண்மணியும் வெளியே வந்திட, கண்ணனின் பார்வையோ அவளிடம் அமைதியாகவே சென்று மீள,

“கண்மணி, இவனுக்கு சாப்பாடு எடுத்து வை..” என்று சியாமளா சொல்லவும், அவனோ “இல்லம்மா சாப்பிட்டுத்தான் வந்தேன்..” என்றான் பார்வையை எங்கோ வைத்து.

“கிளம்பும்போது கூட சொல்லலியே டா??”

“கிளம்பிட்டேன் ப்பா.. சரி நேரா போய் நிப்போமேன்னு வந்துட்டேன்..” என்றவன் அப்போதும் கண்மணியைப் பார்க்க, அவளோ அமைதியாகவே அனைவரும் பேசுவதை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். பார்வையோ நிச்சயமாய் கண்ணன் பக்கம் இல்லை.

கண்மணியின் பார்வை மட்டுமல்ல சிந்தனையும் கூட இப்போது இங்கேயில்லை. அவளுக்கு நிச்சயமாய் தெரியும் கண்ணன் ஏன் இப்படி பாதியில் வந்திருக்கிறான் என்பது.. எது எப்படியாகினும் சரி கண்ணனை சமாதானம் செய்துவிடுவது என்பதில் கண்மணி உறுதியாய் இருந்தாள். எப்படியும் அண்ணன் தன்னை புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கை அவளுள் அசைக்க முடியாதிருக்க, கண்ணன் சரியென்று சொன்னதுமே, அதிரூபனிடம் சொல்லி இருவரையும் ஒருமுறை பார்த்து பேசிக்கொள்ள செய்யவேண்டும் என்றுகூட நினைத்துவிட்டாள்.

நினைப்பது எல்லாம் நடந்திட வேண்டுமே??

கண்ணன் இரண்டொரு முறை கண்மணியைப் பார்த்தான், பின்னே என்ன நினைத்தானோ “நீங்க ஏன் ப்பா தீபா வீட்ல நான் வரவும் தேதி குறிக்கலாம் சொன்னீங்க??” என்று கேட்க,

“ஏன் வேறென்ன சொல்லணும்??” என்றார் சடகோபன்..

“அதில்லப்பா…” என்று கண்ணன் ஆரம்பிக்கும் முன்னே

“இங்க பார் கண்ணா, இது லவ் மேரேஜ்.. நாங்க சம்மதிச்சு பண்ணி வைக்கிறோம்.. எது எப்போ செய்யனுமோ அதை செஞ்சிடனும்… காலத்தை கடத்துனா தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வரும்..” என்றவர்,

“நாளைக்கு ப்ரீயா இருந்தா சொல்லு, அவங்க வீட்லயும் வர சொல்லி தேதி குறிப்போம்..” என்று முடிவாய் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

சடகோபனின் முடிவுகளும், அவரின் பிடிவாதமும் தான் அங்கே அனைவருக்குமே தெரியுமே. முதலில் அவர் சம்மதம் சொல்லி நிச்சயம் செய்ததே பெரிது.. இதில் கண்ணன் இந்த பகுமானம் எல்லாம் செய்தால் அவருக்கு கோபம் வராதா என்ன. சியாமளா கூட கேட்டுவிட்டார்,

“ஏன் டா?? உனக்கு என்ன இதுல கஷ்டம்..” என்று.

“எனக்கென்ன கஷ்டம் ம்மா.. ஆனா இந்த வருண் பிரச்சனை எதுவும் இன்னும் முழுசா தெரியலை.. மூர்த்தி அங்கிள் பேசினதோட சரி.. அடுத்து அவங்க வீட்ல யாரும் எதுவும் சொல்லலை.. அடுத்து கண்மணிக்கு என்னன்னு முடிவு செய்யணும்..” என்று கண்ணன் சொல்லும்போதே,

‘இப்போ ஏன் இந்த பேச்சு…’ என்பதுபோல் தான் கண்மணி பார்த்தாள் அவனை.

சியாமளாவும் கூட அதையே செய்ய “என்னம்மா..??” என்றான் கண்ணன்..

“வருண் விஷயம் எப்பவோ முடிஞ்சது கண்ணா.. சொல்லப்போனா கண்மணி கூட அதுல இருந்து வந்திட்டா.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை கண்டிப்பா அமையும். நம்ம வீட்ல நம்ம பொண்ண பத்தி நினைக்கிறதுபோல தானே தீபா வீட்ல நினைப்பாங்க.. எங்க முடிவு இதுதான்.. இதுக்கு மேல உன் விருப்பம்..” என்றவர்,

“நீ எதுவும் நினைச்சுக்காத கண்மணி..” என்றுவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்.

அப்பாவும் அம்மாவும் எழுந்து சென்றுவிட, இப்போது அண்ணனும் தங்கையும் மட்டும்  அமர்ந்திருக்க, கண்மணி பார்த்தவளோ கேட்டே விட்டாள் “உனக்கு தீப்ஸ மேரேஜ் பண்றதுல என்ன கஷ்டம்??” என்று..

வந்தமைக்கு இப்போதுதான் கண்மணி பேசியிருக்க, கண்ணனோ “ம்ம்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்றவன், “உனக்கு என்னாச்சு கண்ஸ்?? போன்லையும் சரியா பேசலை..” என்று அக்கறை பட,

“எனக்கு ஒண்ணுமில்ல.. திரும்பவும் சொல்றேன் ண்ணா.. என்னை வச்சு நீ உன் லைப் டிசைட் பண்ணாத..” என்றாள் உறுதியாய்.

நிச்சயம் கண்மணி பேசுவது உள்ளே இருக்கும் அப்பா அம்மாவிற்கு கேட்காதுதான். ஆனாலும் கண்ணனின் பார்வை ஒருமுறை எச்சரிக்கையாய் சுற்றி வர,

“என்னப்பத்தி நீ வொர்ரி பண்ணிக்கவேண்டியது இல்லைண்ணா.. உனக்கே தெரியும். இப்போ என்ன போயிட்டு இருக்குன்னு” என்றவள் கொஞ்சம் தயங்கி அவனின் முகம் பார்க்க,  கண்ணனோ நீயே பேசு என்று பார்த்தான்.

“எனக்காக நீ மேரேஜ் தள்ளி வைக்காத. தீப்ஸ் பாவம்… என்னைப் போலதானே அவளும்.. அவங்க வீட்ல நினைக்கமாட்டாங்களா?? அப்படி இருக்கப்போ நீ ஏன் இதெல்லாம் நினைக்கிறண்ணா??” என்று தயங்கியே ஆரம்பித்தவள் ஒருவழியாய் சொல்லிவிட,

கண்ணனோ பட்டென்று “இல்ல கண்ஸ்.. உனக்கு அதிரூபனை விட பெஸ்ட்டா மாப்பிள்ளை அமையும்.. இது வேணாம்..” என்றான் ஒருவித உறுதியோடு..

“ண்ணா..!!!”

“இதுதான் என்னோட முடிவு கண்மணி.. நான் யோசிக்காம இங்க வரலை.. சோ இதெல்லாம் வேணாம்….”

“இல்லண்ணா…” என்றவளுக்கு, மனதினுள்ளே பெரும் அதிர்ச்சியாய் இருந்தது.. என்ன சொல்வது என்பது கூட தெரியாது போக, திகைத்துத்தான் பார்த்தாள் கண்ணனை..

“எஸ் கண்ஸ்.. இதுதான் என்னோட முடிவு.. இது வேணாம்.. வேற யோசிக்கலாம்..” என்றவன் “நீ போய் தூங்கு..” என்றுசொல்லி அவனும் எழுந்து சென்றுவிட, கண்மணி வெகுநேரமாய் அப்படியே தான் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

இங்கே இப்படியெனில் அங்கே அதிரூபன் வீட்டிலோ, நிவினும் அவனும் ஆடி அசைந்து பேசி நடந்து வீடு போய் சேர, மஞ்சுளாவோ முகத்தினை உம்மென்று வைத்தே அமர்ந்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் அதை கவனிக்காது வளவளவென்று பேசிக்கொண்டே இருக்க,

ஒருநிலையில் அதிரூபன் தான் “ம்மா.. என்னாச்சு??” என்று கேட்க, மகன் கேட்பதற்காகவே காத்துக்கொண்டு இருந்த மஞ்சுளவோ “அப்போ உனக்கு எல்லாமே தெரியும் அப்படிதானே..” என்றார் ஒருமாதிரி..

“ம்மா என்ன சொல்ற?” என்று நிவின் வர,

“நான் உன்கிட்ட பேசலைடா..” என்று விரல் நீட்டியவர், “ஏன் ரூபன் இன்னும் என்னென்ன என்கிட்டே மறைச்சிருக்க??” என்றவரின்  முகத்தில் அப்படியொரு வேதனை.

அம்மாவின் இந்த முக மாறுதல்களே அதிரூபனுக்கு என்னவோ செய்ய, “ம்மா ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாய்.

“ம்ம்ச் போடா.. உன்ன என்னவோன்னு நினைச்சேன்..” என்றவர் அப்படியே பேச்சில் பாதியை நிறுத்திவிட்டு உள்ளே போக,

“ம்மா ம்மா..” என்றபடி இவனும் பின்னேயே போனான்..

“இப்போ என்ன அம்மா அம்மான்னு.. என் பையன் இருந்திருந்து ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்றானே.. ஆனா பாவம் அவளுக்கு வேற மாப்பிள்ளை பேசிட்டாங்களேன்னு நான் எவ்வளோ வருத்தப்பட்டேன் எனக்குதான் டா தெரியும்.. கடைசியில எல்லாம் கூட்டு களவாணிங்க…” என்று நிவினையும் மஞ்சுளா சேர்த்தே முறைக்க,

“ம்மா எனக்கே நேத்துதான் ம்மா தெரியும்..” என்றான் நிவினும் வேகமாய்..

“என்னவோ ஒண்ணு தெரிஞ்சதுல.. ஏன் ரூபன்.. நீ சொன்னா நான் புரிஞ்சுக்க மாட்டேனா என்ன??” என்றவர், “உண்மைய சொல்லு இன்னிக்கு அவங்க வந்துட்டு போனதுகூட நீ போட்டு குடுத்த ப்ளான் தானா??” என்று மகனைப் பார்த்து கேட்க,

அவனோ “ம்மா..!!” என்றான் கொஞ்சம் சத்தமாய்..

“என்னடா நொம்மா…. ஒழுங்கா உண்மையை சொல்லு.. உனக்கு எல்லாம் தெரியும்தானே..” என, அதிரூபனுக்கு புரிந்துபோனது அம்மா அனைத்தையும் தானே புரிந்துகொண்டார் என்று..

“ம்ம் அதும்மா..” என்று அவன் இழுக்க,

“ஆமாவா இல்லையா??” என்றார் அழுத்தம் திருத்தமாய்..

“அதுதான் ம்மா சொல்ல வர்றேன்ல..” என்று அதிரூபன், கேள்வி கேட்கும் ஆசிரியை முன்னே பதில் சொல்ல திணறும் மாணவனாய் நிற்க, நிவினோ இஇ என்று இவர்களை பார்த்து நின்றுக்கொண்டு இருந்தான்.

“ம்ம் சொல்லு..”

“தெரியும்மா.. ஆனா… கண்மணிக்கு உனக்கு தெரியும்னு தெரியாது..”

“இதை நான் நம்பனுமா??” என்று மஞ்சுளா கண்ணை இடுக்க,

“நிஜமாம்மா.. அவளுக்குத் தெரியாது.. தெரிஞ்சிருந்தா இங்க வந்தே கூட இருக்கமாட்டா..” என்றான் சத்தியம் செய்வது போல் இரு கைகளையும் அடித்து.    

“ம்ம்.. சரி அப்புறம்???” என்றவர் இன்னமும் மகனை நிற்க வைத்தே கேள்வி கேட்க,

“அவ்வளோதான் ம்மா..” என்றான் தலையை தலையை உருட்டி..

“நிஜம்மா அவ்வளோதானா???” என்று மஞ்சுளா கேட்கையில், அதிரூபனுக்கு பவித்ராவின் விஷயம் முழுதாய் தான் சொல்லாமல் விட்டிருப்பது நினைவில் வேறு வந்து தொலைத்தது. ஆனால் அதை இப்போது சொன்னாலோ இன்னமும் அம்மா கோவிப்பார் என்று தெரியும்.

இதை விட்டு அதை பேசினால், தேவையில்லாது அது வெவ்வேறு பேச்சுக்கள் கிளப்பும் என்று எண்ணி,

“நிஜமாம்மா..” என்றான் திரும்ப.

“சரி இதையேன் என்கிட்டே சொல்லலை?? சொன்னா நான் புரிஞ்சுக்கமாட்டேனா?? நீ சொல்ல சொல்ல கேட்காம நான் போய் அங்க பேசுறேன்னு நிக்க போறேனா என்ன?? ஏன் டா ரூபன் நீ இப்படி ஆகிட்ட..” என்றார் நிஜமாகவே மகன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என்று..

“ம்மா ப்ளீஸ் ம்மா.. சத்தியமா நீ நினைக்கிறதுபோல எல்லாம் இல்லை.. நாங்க உருப்படியா பேச ஆரம்பிச்சே ஒரு வாரம் கூட ஆகலைம்மா.. சொல்லப்போனா இன்னும் நாங்க சகஜமா கூட பேசிக்கலை..”

“ஆமாமா.. பேசிட்டாலும்.. நானும் பார்த்தேனே.. பேசவே மாட்டேங்கிறா.. பேசினாலும் தொடர்ந்து நாலு வார்த்தை வரலை.. இதுல  சகஜமா வேற..” என்று மஞ்சுளா சட்டென்று கிண்டலாய் சொல்லிவிட,

நிவினோ “அப்படி சொல்லும்மா..” என்றான் சிரித்தபடி.

ஆனால் மஞ்சுளாவோ அதிரூபனைப் பார்த்து “என்ன ரூபன்??” என்று கேட்க,

“ம்மா உன்கிட்ட மறைக்கணும்னு எதுவும் நினைக்கல.. உன்கிட்ட சொல்லாம நான் என்ன செஞ்சிட போறேன்.. பட், கண்மணி வீட்ல இப்போதைக்கு சூழ்நிலை சரியில்லை..” என்று அதிரூபன் திரும்ப விளக்க,

“அப்படின்னு நீ சொல்ற.. அங்க அவங்க பையனுக்கு நாள் குறிக்கப் போறாங்க..” என்றார் மஞ்சுளவும்..

“ஓ…!!!!” என்று பார்த்தவன், “அதுனால என்னம்மா.. ப்ளீஸ்.. கொஞ்ச நாள் போகட்டுமே.. ஒரு மாசம் எனக்கு டைம் கொடு ம்மா..”

“ஏன் இந்த ஒரு மாசம் என்ன செய்ய போற???” என்று அம்மாவும் மகனும் பேச்சை ஆரம்பிக்க, நிவின் இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன்,

“ம்மா நீ ஸ்டார்ட் பண்ண வேகத்துக்கு ஏதாவது நடக்கும்னு பார்த்தா பேசுனதையே திரும்ப பேசுறீங்க ரெண்டுபேரும்..” என்று கடுப்படிக்க,

“டேய் எனக்கு கண்டிப்பா வருத்தம்தான்.. இல்லைன்னு இல்ல.. ஆனா இவன் ஒரு காரணம் சொல்றான்… என்னவோ பல வருசமா லவ் பண்ணி அதை மறைச்சு அது இதுன்னு எல்லாம் இல்லையே.. சரி விடு.. பாத்துக்கலாம்..” என்றவர் அப்படியே பெரிய மகனிடம் “முதல்ல அந்த பொண்ண கொஞ்சம் சத்தமா பேச சொல்லுடா.. கண்ணு மட்டும் தான் உடனே பதில் சொல்லுது..” என்றார் கொஞ்சம் சிரித்தபடி.

மஞ்சுளா இப்படி சொன்னதுமே அதிரூபன் முகத்தில் அத்தனை நேரமிருந்த டென்சன் குறைந்து “ம்மா அவ சுபாவமே அப்படித்தான் ம்மா..” என்றான் சலுகையாய்.

“என்ன சுபாவமோ.. எப்படியோ நல்லாருங்க போதும்.. காலாகாலத்துல பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. அவ்வளோதான் சொல்வேன்..” என்றபடியே இருவருக்கும் சாப்பிட எடுத்து வைக்க,

அதிரூபனோ “கண்மணி.. கண்ணால் ஒரு சேதி…” என்று வழக்கம்போல் சினிமா பாட்டினை தனக்கேற்ற வகையில் மாற்றிப் பாடியபடி உண்ண அமர,

நிவினோ “டேய் அது சுந்தரி கண்ணால் ஒரு சேதி..” என்றான் இன்னும் கடுப்பாய்..

“அதுக்கென்னடா தம்பி செய்றது.. கண்மணி பேரு சுந்தரியா இருந்திருந்தா அப்படி பாடிருக்கலாம்.. ஆனா… கண்மணின்னு வச்சிட்டாங்களே…” என்று இருமுறை தோள்களை ஏற்றி இறக்க,

“ஐயோ..!!!! கடவுளே அம்மா… முதல்ல இவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு என்னை தனிக்குடித்தனம் அனுப்பு.. தாங்க முடியலைம்மா..” என்று நிவின் கத்த,

“உனக்கு வயித்தெரிச்சல்டா..” என்றபடி மஞ்சுளாவும் மகன்களோடு அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்.

நிவினுக்கு அப்பாடி என்றிருந்தது. கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டிய நிலை. இனி கண்மணி வீட்டில் மட்டும் சரியென்றுவிட்டாள் போதும்.. ஆனால் அதை எப்படி அங்கே ஆரம்பிப்பது என்றுதான் ஒன்றும் விளங்கவில்லை. இப்போது கண்ணனின் கல்யாணம் வேறு தேதி குறிக்கப் போகிறார்கள் என்றதும் இந்த நேரத்தில் இதை போய், அதுவும் காதல் அது இதென்று பேசினால் என்னாகும் என்று தெரியாது??

ஆக, கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையாகவே போகவேண்டும் என்றுதான் முடிவு செய்தான்.. இதை கண்மணியிடமும் சொல்லிட வேண்டும் என்றே உண்டுவிட்டு வந்து அவளுக்கொரு மெசேஜ் தட்ட அவளிடம் எவ்வித பதிலும் இல்லை..

‘என்னடா தூங்கிட்டாளோ??!!’ என்று மணி பார்த்தான்.

இரவு பதினொன்று தான்.. காதலர்களுக்கு இதெல்லாம் அப்படியொன்றும் நேரமில்லையே.. விடிய விடிய கதை பேசாவிடினும் கூட, இத்தனை சீக்கிரம் உறங்குவதுமில்லையே.. இதெல்லாம் நினைத்தவன், திரும்பவும் ஒரு மெசேஜ் தட்ட, ம்ம்ஹும் அப்போதும் அவளிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.

கண்மணிதான் கண்ணன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவேயில்லையே.. பின்னே எப்படி வந்து இவனுக்கு பதில் கொடுப்பாள். பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், ‘ஹ்ம்ம்…’ என்று பெருமூச்சு விட்டு இன்றைய நாளின் இனிமைகளோடு உறங்கியும் போனான்.

ஆனால் கண்மணியோ அப்படியேத்தான் அமர்ந்திருந்தாள். அவளுக்கு மனது ஆறவேயில்லை. வீட்டில் யார் அவளின் காதலை மறுத்திருந்தாலும் கூட அவள் இப்படி உறைந்திருக்க மாட்டாள். ஆனால் கண்ணன்??

அவனைத்தானே மலைபோல் நம்பியிருந்தாள். ஆனால் அவனே இப்படி சொன்னால்?? அவனைத்தாண்டி வீட்டினில் அப்பா அம்மாவிடம் தான் கண்மணியால் பேசிட முடியுமா என்ன?? இதற்குமேல் கண்மணிக்கு மூளை மரத்துப்போனது என்றுதான் சொல்ல வேண்டும்..

எதையும் யோசிக்கவே முடியவில்லை..

அப்படியே இருக்க, கண்ணன் என்ன நினைத்தானோ, வெளியே வந்துப் பார்த்தவன், கண்மணி இன்னமும் அங்கேயே இருப்பது கண்டு “கண்ஸ்..” என்றழைத்தபடி, அவளின் அருகே வர,

அவனின் அழைப்பு கேட்டு, கண்மணிக்கு எங்கிருந்துதான் அத்துனை கோபம் வந்ததோ, அவனை ஒருமுறை முறைத்துவிட்டு எழுந்து உள்ளேப் போக முயல, “ம்ம்ச் கண்மணி..” என்றான் அவளை பிடித்து நிறுத்தி..

அவளோ அவனின் முகத்தினைக் கூட காணாது தன் பார்வையை திருப்ப,             “கண்ஸ்.. இப்படி எத்தனை நாளைக்கு என் முகத்தைப் பார்க்காம இருப்ப??” என்று என்றான் இவனும்.

“நான் எப்பவும் போலதான் இருக்கேன்..” என்றாள் அப்போதும் கூட அவனின் முகம் காணாது.

“கண்ஸ்…!!!”

“ம்ம்ச்.. என்ன அண்ணா?? என்ன வேணும் உனக்கு??” என்று கேட்கும்போதே அவளுக்கு தொண்டை அடைத்தது..

பின்னே நிச்சயம் கண்மணி அப்படியொரு வார்த்தைகளை கண்ணனிடம் எதிர்பார்கவில்லை.. ஒருவேளை இதனை சடகோபன் சொல்லியிருந்தால் கூட அப்பா இப்படித்தான் நினைப்பார், இப்படித்தான்  சொல்லுவார் என்று மனதை சமன் செய்யலாம்.. ஆனால் கண்ணன்??

அவனும் காதலிப்பவன் தானே.. அதன் உணர்வுகள் அவனுக்குப் புரியாதா என்ன?? அப்படியிருக்கையில் ‘உனக்கு அதிரூபனை விட பெஸ்ட்டா மாப்பிள்ளை கிடைக்கும்.. சோ இது வேணாம்..’ என்று அவன் சொல்கையில் கண்மணிக்கு எப்படி இருக்கும்..

“நீ இப்படி என்கிட்டே பீகேவ் செய்வன்னு நான் நினைக்கவே இல்லை கண்மணி..”

“நானும்தான் நினைக்கல.. நீ இப்படி சொல்வன்னு.. அப்பா அம்மாவை விட நீ என்னை புரிஞ்சுப்பன்னு நினைச்சேன்..” என்றவளுக்கு கண்ணில் இருந்து நீர் வழியத் தொடங்கியது.

“ஹேய் கண்ஸ்…” என்று அவளின் கைகளைப் பற்றியவன் “நீ வா..” என்று அவளின் அறைக்கு அழைத்துப் போக,

“விடு.. நீ.. நீ போ.. போய் தூங்கு..” என்றாள் விசும்பலோடு..

“ம்ம்ச் இங்க என்னை பாரு கண்ஸ்..” என்ற கண்ணின் குரலோ கிட்டத்தட்ட கெஞ்சியது.

“ம்ம்..” என்ற கண்மணி அப்போதும் அவனைப் பார்க்காது அப்படியே அமர, “சரி இப்போ என்ன உனக்கு அதிரூபனை பிடிச்சிருக்கு..” என,

“ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

“ம்ம்… இதை நீ முதல்ல சொன்னியா??” என்றான் கண்ணனும்  அதே அழுத்தத்தோடு..

கண்மணி ஒரு திகைப்பை மட்டுமே கண்களில் காட்ட, “என்ன பாக்குற.. முதல்லயும் அப்படித்தான். எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனா நீ வீட்ல தீபா பத்தி பேசுவல்லன்னு கேட்டு வருணுக்கு சரின்னு சொன்ன.. அப்போக்கூட நான் கேட்டேன் உனக்கு பிடிச்சிருக்கான்னு.. அப்போ நீ உறுதியா எதுவுமே சொல்லலை..

சரி இப்போவாது நீ ஏதாவது சொல்வன்னு பார்த்தா, இப்பவும் அதை சொல்லலை. உனக்கு ஒரு விஷயம் பிடிச்சதுன்னா நீதான் கண்ஸ் அதுல ஸ்டேபில்லா நிக்கணும்.. அது நானே அப்போஸ் பண்ணாலும் சரி.. அதை விட்டு இப்படி ஷாக் ஆகி உக்காந்து இருக்க…” என, கண்மணியோ இப்போது முறைத்தாள்..

“ஹலோ.. ம்மா.. உண்மை இதுதான்.. எனக்கு அதிரூபன் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா நீ சொல்ற.. சரி.. உனக்காக நானும் வீட்ல பேசுறேன்.. பட் அப்பாவை நீதான் கன்வின்ஸ் செய்யணும்.. அது உன் பொறுப்பு…” என, கண்மணியோ அண்ணன் மனம் இத்தனை இறங்கியே என்ற சந்தோஷத்தில் வேகமாய் தலையை ஆட்டினாள்.

“ம்ம் பட் எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. நானுமே என் சைட் எல்லாம் விசாரிச்சிட்டு தான் சொல்வேன்.. அவ்வளோ சீக்கிரம் எல்லாம் லவ்னு சொன்னதும் பொண்ணு கொடுத்திட முடியாது.. புரிஞ்சதா??” என்று கண்ணன் செல்லமாய் மிரட்ட,

லேசாய் சிரித்தபடி பார்த்தவள் “தீப்ஸ்க்கு ஒரு அண்ணன் இருந்திருக்கணும்..” என்றாள் பதிலுக்கு..

“ஹா.. ஹா.. யாருக்கு அண்ணன் இருந்தாலும் இல்லைன்னாலும்.. நான் இப்படிதான் இருப்பேன்.. நிம்மதியா தூங்கு..” என்றவன் அவளின் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு செல்ல, நிஜமாகவே கண்மணிக்கு அத்தனை நிம்மதியாய் இருந்தது.

அதிரூபன் எண்ணியதுபோல பாதி கிணறு தாண்டிய ஒரு நிம்மதி அவளுக்கும்.. மெத்தையில் விழுந்தவளுக்கு இப்போதுதான் நிம்மதியாய் அதிரூபன் வீட்டிற்கு சென்று வந்ததை எல்லாம் எண்ணி மகிழ முடிந்தது.

‘அச்சோ நாம்ம ஒண்ணுமே சொல்லலையே..’ என்றெண்ணி அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதிலோ அதிரூபன் அனுப்பிய அத்தனை செய்திகளுக்கும் பதில் அனுப்பியவள் அவனின் பதிலுக்காய் காத்திருக்க, மறுநாள் விடியலில் அதிரூபன் அழைப்பே விடுத்துவிட்டான்.

கண்மணி நல்ல உறக்கத்தில் இருந்தாள். நல்லவேளை அலைபேசியோ சைலன்ட் மோடில் இருக்க, வைப்ரேசன் மட்டும் ஆக, அதன் உணர்வில் லேசாய் உறக்கம் விடுத்தவள், அழைப்பு வருவது அதிரூபனிடம் என்று உணர்ந்து, கண்களை வேகமாய் திறந்து மணிப் பார்க்க, அதுவோ அதிகாலை ஐந்தரை மணி என்று காட்டியது.

‘இந்த டைம்லயா… என்னாச்சோ???’ என்ற பதற்றம் வேகமாய் வந்து அவளுள் அமர்ந்துகொள்ள, “ஹலோ..” என்றாள் அதனை விட வேகமாய்..

“ஹாய் கண்மணி.. குட் மார்னிங்..” என்று அவனின் குரலில் வழக்கத்தை விட உற்சாகமாய் ஒலிக்க,

‘அப்பாடி வேறெதுவும் பிரச்சனை இல்லை..’ என்று கொஞ்சம் நிம்மதியானவள், வேகமாய் எழுந்து அறைக்கதவை தாழிட்டு வந்து, “கு… குட்மார்னிங்..” என்றாள் ஒருவித ஆச்சர்யமாய்.

“எழுப்பிட்டேனா??”

“இல்..” என்று வேகமாய் சொல்லப் போனவள் “ம்ம் ஆமா..” என,   

“பரவாயில்ல.. நேத்து என்கிட்ட பேசாம தூங்கினல்ல சோ இது பனிஷ்மென்ட்…” என்று அதிரூபன் சொல்ல, கண்மணி சிரிப்பது அவனுக்குக் கேட்க,

“ஓய் ஒருத்தன் காலங்காத்தால எழுந்து போன் போட்டா சிரிப்பு கேட்குதா??” என்றான் அதட்டும் விதத்தில்.

கண்மணியோ மற்றதெல்லாம் மறந்து இப்போது இன்னும் சிரிக்க, “மறுபடியும் பார்ரா..” என்றவன், “சரி நான் எதுக்கு கால் பண்ணேன்னு கேட்கமாட்டியா??” என்றான்.

“ஏன் கேட்கணும்??”

“அது சரி..” என்றவன் “ஒரு குட் நியூஸ்..” என்றான் சந்தோசமாய்.

அவனின் சந்தோசம் அவளையும் ஒட்டிக்கொள்ள, நிமிடத்தில் மனதில் பலவேறு கற்பனைகள், “அப்படியா???” என்றவள் “என்னது??!!” என்று கேட்க, வழக்கத்தை விட கண்மணியின் குரல் கொஞ்சம் சத்தமாய் கேட்பதுபோல் இருந்தது அவனுக்கு..

‘ஹ்ம்ம் மேடமும் ஹேப்பியா இருக்காங்களோ..’ என்று நினைத்தபடி “பெங்களூருல டூ டேஸ்ல ஒரு கண்காட்சி நடக்குது.. ஒன்லி பார் கஷ்டமைஸ்ட் வாட்சஸ்.. இப்போதான் பர்ஸ்ட் டைம் ஆர்கனைஸ் பண்றாங்க கண்மணி.. என்னோட கஸ்டமர் எனக்காக ஒரு ஸ்டால் ரெடி பண்ணிருக்கார்.. சொல்லபோனா எனக்கே இது சர்ப்ரைஸ் தான்..” என,

“வாவ்.. சூப்பர்.. கங்க்ராட்ஸ்…” என்றாள் கண்மணியும் நிஜமானதொரு மகிழ்வில்.

“தேங்க்ஸ் கண்மணி.. அதான் இன்னிக்கு நைட் நான் பெங்களூரு கிளம்பனும்.. ஒன் வீக் ஆகும்.. இன்னும் எதுவுமே ரெடி பண்ணல.. ஆனா ஒரு பத்து மாடல்ஸ் வரைக்கும் கைல இருக்கு, டிசைன்ஸ் நிறைய செஞ்சும் வச்சிருக்கேன்.. டைம் கிடச்சா அங்க போய் கூட எதுவும் பண்ணலாம்..” என்று அவன் பேசிக்கொண்டே போக, கண்மணிக்கோ அவன் ஒருவாரம் ஊருக்கு செல்கிறான் என்றதும் இருந்த சந்தோசம் எல்லாம் காணாது போய், அப்படியே புஷ்ஷென்று ஆகிவிட,

“கண்மணி…!!” என்றான் அதிரூபனும்..

அவளோ பதிலே சொல்லாது அமைதியாய் இருக்க, அவனுக்கு அப்போதுதான் புரிந்தது.. தன்னுடைய சந்தோசத்தை பகிர எண்ணி, அவளின் மனநிலை என்னவென்பது கவனிக்காது போனதை.. திரும்பவும் “கண்மணி..” என்றழைக்க,

அவளோ ‘ஒரு வாரமா??!!!’ இப்போதே எண்ணத் தொடங்கிவிட்டாள்.                    

“ஹே கண்மணி ப்ளீஸ் அட்லீஸ்ட் ம்ம் ஆது சொல்லேன்..” என்றவனின் குரலில் ஒருவித கெஞ்சலும் எட்டிப்பார்க்க,

“ம்ம்..” என்றாள் பட்டென்று.

“இது எனக்கு கிடைச்சிருக்க பெரிய சான்ஸ்… இது எனக்கு நல்லபடியா அமைஞ்சா நிறைய ஆர்டர்ஸ் வரும் கண்மணி.. எனக்கு பிடிச்ச ஒரு விசயத்துல நான் விரும்பி செய்ற ஒரு தொழில்ல இப்போதான் அடுத்த லெவெலுக்கு போக எனக்கொரு வாய்ப்பு வந்திருக்கு.. அதனால தான் சொல்றேன்.. நீயே எனக்கு சப்போர்ட் பண்ணாட்டி எப்படி??”

“அச்சோ… அப்படியில்ல..”

“பின்ன??!! நீ உம்முன்னு இருக்க.. முகம் பார்க்கலைன்னாலும் என்னால கெஸ் பண்ண முடியும்..”

“ம்ம் இல்ல திடீர்னு ஒன் வீக் பெங்களூர் போறேன் சொன்னதும் கொஞ்சம்…” என்று கண்மணி இழுக்க,

“கொஞ்சம்??!!!!!!” என்றான் இவனோ கொஞ்சலாய்..

அவனின் பேச்சில் லேசாய் புன்னகை எட்டிப்பார்க்க, “சரி நல்லபடியா போயிட்டு வாங்க.. நல்லதே நடக்கும்..” என்று கண்மணி வாழ்த்த,

“நீ என்னவோ சொல்ல வந்தயே. அதை சொல்லி முடி..” என்றான் இவன் பிடிவாதமாய்.

“ம்ம்ஹும். நான் எதுவும் சொல்ல வரலை… நீங்க எல்லாம் எடுத்து வச்சிக்கோங்க.. சரியா..” என்று அதன்பின்னே இருவருக்கும் பொதுவான பேச்சுக்கள் ஆரம்பமாக,

அம்மாவிடம் பேசியது பற்றி கண்மணியிடம் சொல்லவேண்டும் என்று அவன் நினைத்தும் சொல்லவில்லை. கண்ணன் சொன்னதை அதிரூபனிடம் சொல்லவேண்டும் என்று கண்மணி எண்ணியதும் நடக்கவில்லை.. இந்த ஒருவார பிரிவு என்பது எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்??   

                   

 

Advertisement