Advertisement

தூறல் – 19

“அந்த வருண் வில்லனா வருவான்னு பார்த்தா இப்படி வருண பகவான் வில்லனா வந்து விழறாரே..” என்று பொழிந்துகொண்டு இருக்கும் மழையை வெறித்துக்கொண்டு இருந்தான் அதிரூபன்.

கடையில் இருப்பவர்கள் எல்லாம் அவனை வித்தியாசமாய் பார்க்க, அதிலும் ஒருவரோ “சார்.. ஏன் இப்படி வந்து நிக்கிறீங்க..” என்று கேட்டேவிட்டார்.

“சும்மாதான் மழை வந்தே ரொம்ப நாள் ஆச்சுல்ல…” என்றவன், பல்லைக் கடித்துக்கொண்டு அவனின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் கண்மணியிடம் இருந்து எதுவும் வந்திருக்கிறதா என்று.

ம்ம்ஹும் ஒன்றுமேயில்லை. அதுவேறு கடுப்பாய் இருந்தது. கிளம்பினாளா?? இல்லை அந்த பூஜை வீட்டில் தான் இருக்கின்றாளா?? இதெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. கண்மணி வீட்டில் இருந்து கிளம்புகையில் சொல்லிவிட்டுதான் சென்றாள். இந்த இரண்டொரு நாளில் இதெல்லாம் தன்னைப்போல் வந்தது. அவனுமே கூட கடைக்கு கிளம்பினாளோ இல்லை வீட்டிற்கு வந்துவிட்டாளோ சொல்லுவான். வந்துவிட்டேன் கிளம்பிவிட்டேன் என்று.

அவன் சொல்வதை வைத்து கண்மணியும்  அதை தொடர,  இப்போதோ அதன் பின் எந்த தகவலும் வராது போக, போன் செய்து கேட்கலாம் என்றால் உடன் சியாமளாவும் இருப்பார் என்று கொஞ்சம் தயங்கினான்.

தேவையில்லாத தர்ம சங்கடங்களை அவன் கண்மணிக்கு கொடுக்க விரும்பவில்லை. மஞ்சுளாவிடம் பேசி, அவர்கள் வீட்டில் பேச செல்லும் வரைக்கும் அவன் எவ்வித விரும்பத் தகாத நிகழ்வுகள் நடப்பதையும் அதிரூபன் விரும்பவில்லை.

இருந்தாலும் கண்மணியை காண கிடைக்கும் இந்த வாய்ப்பையும் அவன் வீணடிப்பதா? என்ன செய்வது என்பது தெரியாமல் மழையை திட்டிக்கொண்டு இருக்க,  நிவினோ இவனுக்கு அழைத்து “அண்ணா…!!!!” என்றான் உற்சாகமாய்..

“என்னடா??!!!”

“நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்க தெரியுமா??!!”

“யாரு அத்தை மாமாவா??” என்றான் ஒருவித யோசனையில்..

“ம்ம்ஹும்.. கண்டுபிடி…”

“டேய்.. இருக்குற கடுப்புல கண்டுபிடி நண்டுபிடின்னு.. சொல்லித்தொலை இல்லை போனை வை..” என்று அதிரூபன் கடுப்படிக்க,

“தோடா.. என் வருங்கால அண்ணியும்.. உன் வருங்கால மாமியாரும் வந்திருக்காங்கன்னு சொல்ல போன் பண்ணா ரொம்ப பண்ற நீ போடா டேய்.. மழை நிக்கவே கூடாது..” என்று தன் பங்கிற்கு நிவினும் எரிச்சலை கூட்டி விட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவன் சொன்னது புரிந்து அதிரூபனோ “டேய் டேய்..” என்று சொல்லிக்கொண்டே திரும்ப நிவினுக்கு அழைக்க, அவனோ எடுக்கவேயில்லை. அவன் நிஜம் சொல்கிறானா இல்லை விளையாடுகிறானா என்றெல்லாம் விளங்காது, உடனே கிளம்பியும் போக முடியாது, அதிரூபன் திண்டாடிக்கொண்டு நிற்க,   அங்கே கண்மணியோ திணறிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.  

நிவினுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும். சியாமளாவிற்கோ எதுவும் தெரியாது. மஞ்சுளாவிற்கோ அதிரூபன் கண்மணியை விரும்புவது மட்டுமே தெரியும். கண்மணிக்கோ மஞ்சுளாவிற்கு தெரியும் என்பது தெரியாது. ஆக மொத்தம் எல்லாம் கலந்துகட்டி அடிக்க,  நிவினிக்க்கு கண்கொள்ளா காட்சியாய் அமைந்தது.

மஞ்சுளாவின் பார்வை கண்மணியை எடைபோட பேச்சோ இயல்பாய் சியமளாவிடம் இருந்தது. கண்மணியோ ஒருபுறம் அதிரூபன் வருவானா?? என்று யாரும் அறியாது வாசல் பார்க்க, அவளுக்கு என்னவோ மஞ்சுளாவை நேருக்கு நேர் பார்த்து இயல்பாய் பேசுவது கடினமாய் இருந்தது.

சியமாளா பேச்சினூடே “அப்பாக்கு போன் பண்ணி சொல்லிடு கண்மணி..” என, அவளோ ‘ம்ம்..’ என்றவள், சடகோபனுக்கு அழைத்து பேச,

மஞ்சுளாவோ “பேசவே மாட்டேங்கிறா.. பேசினா சத்தமே வரல.. இவளை எப்படி அவனுக்கு பிடிச்சது??” என்ற யோசனையில் இறங்கிவிட்டார்.

இன்னமும் இரு தாய்மார்களும் தங்களின் பிள்ளைகளின் திருமண விசயமாய் பேச்சை ஆரம்பிக்கவில்லை.. இப்போதுதான் ஒருவரின் ஒருவர் குடும்ப கதை பேச, கண்மணி சடகோபனுக்கு பேசிவிட்டு வைக்கவும்,

மஞ்சுளா “உங்க பையனுக்கு எப்போ கல்யாணம்??” என்று கேட்க, “ஊருக்கு போயிருக்கான் வரவும் தான் தேதி குறிக்கனும்..” என்றவர், “உங்களுக்கு தெரிஞ்ச தரகர் இருந்தா சொல்லுங்க” என்று சியாமளா சொல்லவும்,

“எதுக்குங்க??” என்றார் மஞ்சுளா யோசனையாய்.

“கண்மணிக்கு வரன் பார்க்க..”

“என்னது??!!” என்று மஞ்சுளா உள்ளே அதிர,  “அப். அப்போ..” என்று வார்த்தைகளை முடிக்கவில்லை அவர்.

“மாப்பிள்ளை எல்லாம் பார்த்தோம் தான் ஆனா..” என்ற சியாமளாவும் அனைத்தையும் சொல்ல,

“அட கடவுளே..” என்ற மஞ்சுளாவின் பார்வை இன்னும் தீவிரமாய் கண்மணியை ஆராய்ந்தது.

முன்னே சாதரணமாய் ஒரு ஆராய்ச்சி இப்போதோ, தன் வீட்டின் மருமகளாய், மகனின் மனைவியாய் வரும் பெண்ணா இவள் என்ற ஆராய்ச்சி. கண்மணி லட்சணமான பெண்தான். யாருக்குமே ஒருமுறை பார்த்தாலே பிடிக்கும். ஆனாலும் கூட மஞ்சுளாவிற்கு இன்னுமும் எதுவோ தேவைப்பட்டது.

‘நல்ல பெண்…’ என்று மனதிற்கு தோன்றினாலும், அதையும் தாண்டி ‘இவள் தான் என் மகனுக்கு..’ என்று மனம் உறுதியாய் ஏற்றுகொள்ள வேறெதுவோ ஒன்று தேவைப்பட, மஞ்சுளாவின் பேச்சு கொஞ்சம் குறைந்தது.

‘ஆகா அம்மா யோசிக்க ஆரம்பிச்சாச்சு போலவே..’ என்று நிவின் யோசித்தவன், திரும்ப அவனின் அறைக்குள் சென்று அண்ணனுக்கு அழைத்தான்.

அதிரூபனோ சின்ன இடைவெளி கிடைத்தாலும்  கிளம்பிடும் எண்ணத்தில் இருக்க, நல்லவேளையாய் மழை கொஞ்சம் குறைந்து பொழியத் தொடங்க இதற்குமேல்  காத்திருக்க முடியாது என்று கிளம்பிவிட்டான். எத்தனை வேகத்தில் வந்தானோ, ஆனால் நனைந்தபடி மழையில் அத்துணை வேகமாய் வர, நிவினின் அழைப்பு எடுக்கப்படமாலே போனது.

வீட்டினில் வந்து பைக்கை நிறுத்தி, வேகமாய் வாசல் வரைக்கும் வந்தவன் உள்ளே நுழையும்போது மட்டும் சாதாரணமாய் வருவது போல், மூச்சை இழுத்து பிடித்து வர, அவனின் வண்டி சத்தம் கேட்டே

மஞ்சுளா “என் பெரிய பையன் வந்துட்டான்..” என,

கண்மணியின் கண்கள் ஸ்விட்ச் போட்டது போல் பளீச்சிட, அதிரூபன் உள்ளே வந்தவனோ இவர்களை எதிர்பார்க்காதது  போல ஒரு பாவனை செய்து, பின் வரவேற்ப்பாய் புன்னகைப்பது சிரிக்க, நிவின் இவனின் வண்டி சத்தத்தில் வெளியே வந்த நிவின் அண்ணனின் செய்கை கண்டு ‘டேய் உலக நடிப்பு டா..’ என்று எண்ணிக்கொண்டான்.

கண்மணிக்கு அவளின் இதயம் துடிப்பது செவிப்பறையில் எதிரொலிக்க, அதிரூபனைப் பார்த்தபடி தான் நின்றிருந்தாள். இது ஒரு புது அனுபவம் இல்லையா?? ஒருபுறம் நம்பவும் முடியவில்லை இன்னொரு புறம் இது பெரும் அவஸ்தையாய் இருந்தது.

‘என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும்..’ என்ற பாடல் வரி எல்லாம் உணர்ந்து எழுதியிருப்பார்கள் போல.. கண்மணிக்கு அதிரூபனின் வீடு அத்தனை பிடித்தது. ஒருவேளை அதிரூபனை பிடித்ததினால் கூட இருக்கலாம்..

மனது ஒவ்வொரு இடத்தையும் அவளின் எதிர்கால வாழ்வோடு தொடர்புப்படுத்தி கற்பனை செய்யத் தொடங்கியிருந்தது. அவனுக்கும் சரி அவளுக்கும் சரி காதலை மறைக்காது வெளிப்படுத்தியவர்களுக்கு, இதோ நேருக்கு நேர் நின்றும் கூட எளிதாய் ஒரு பார்வை பரிமாற்றல் கூட செய்ய இயலவில்லை.

மஞ்சுளாவோ மகன் உள்ளே வந்ததுமே “நிவின் கிளாஸ் மேட்.. பூஜைக்கு வந்திருப்பாங்க போல.. மழையில மாட்டிக்கிட்டாங்க..” என, அதிரூபனோ மறுபடியும் ஒரு வர்வேற்புப் புன்னகை சிந்த,

“ட்ரெஸ் மாதிட்டு வா ரூபன்..” என்ற மஞ்சுளாவின் பேச்சில், வேகமாய் கண்மணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனின் அறைக்குள் நுழைந்துவிட்டான்.

அவனுக்குமே ஒருவித பரவசம். நின்று என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. ஆனால் அங்கே போய் கண்மணியோடு சும்மாவாது அமர்ந்துகொள்ள வேண்டும்போல் இருந்தது. நேரத்தை கடத்தாது அதிரூபனோ வேகமாய் தயாராகிக்கொண்டு இருந்தான்.

 

‘இதான் இவங்க ரூம்மா??’ என்று கண்மணி இரு அம்மாக்களும் கவனிக்காத வகையில் பார்த்துகொண்டு இருக்க, சியமளாவோ “நல்ல மழை.. இன்னும் நிக்காம அடிக்குது..” என்றார் கொஞ்சம் வருத்தமாய்.

மஞ்சுளாவோ “கொஞ்ச நேரத்துல நின்னுடும்.. நான் பாருங்க எதுவுமே கொடுக்கலை.. டீ போடுறேன்..” என்று எழ, “ஐயோ பரவால்லங்க..” என்று சியாமளா மறுக்க,

அங்கே அறையிலோ “டேய் அண்ணா என் புது ஷர்ட் டா??” என்று நிவின் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தான்.

“அதுனால என்னடா??” என்று அசால்ட்டாய் சொல்லியபடி அதிரூபன் சட்டையை மாட்ட, “டேய்.. இதெல்லாம் ஓவரா இல்லையா???” என்றான் நிவினும் பதிலுக்கு.

“ம்ம்ச் தள்ளி நில்லு..” என்று கண்ணாடி முன்னே நின்று, ஈரமாய் இருந்த கேசத்தை இப்படி அப்படி கலைத்து மீண்டும் லேசாய் சீவ, அவனை மறைத்து நின்ற நிவினோ “இங்க பாரு ஒழுங்கா சட்டையை கழட்டு..” என,

“அப்புறம் கழட்டி தர்றேன்.. நீ ஏன் என் அலமாரில வச்ச..” என்றபடி அவனை நகட்ட,

“நான் வைக்கல அம்மா மாத்தி வச்சிருக்கு..” என்றவன், “டேய் அண்ணா கடுப்பேத்தாத” என்றான் பிடிவாதமாய்.

அதிரூபனோ அதெல்லாம் கண்டுகொள்ளாது, லேசாய் விசில் அடித்தபடி,       “இப்போ ஓகே வா..” என்று தம்பியைப் பார்த்து கேட்க,

“உன்னை என்ன இப்போ மாப்பிள்ளையா பார்த்து வந்திருக்காங்க??” என்றான் கடுப்பாய்.

“ஹா ஹா கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்..” என்றவன்,  “நாளைக்கு கடைல வந்து புதுசு வாங்கிக்கோ..” என்றபடி அதிரூபன் வெளியே போக,

“எனக்கு இந்த ஷர்ட் தான் வேணும்…” என்றான் நிவின் பிடிவாதமாய்..

அவன் சொன்னது எல்லாம் அதிரூபனுக்கு காதிலே விழவில்லை என்பது நிவினுக்கும் தெரியும்.. அண்ணனோடு ஓட்டிக்கொண்டு பின்னேயே போக, கண்மணிக்கோ அதிரூபனை திரும்ப காணவும் மீண்டும் தடக் தடக் ஓசை இதயத்தில்.

அத்தனை நேரம் தம்பியோடு வாயடித்தவன், வெளியே வந்து மீண்டும் ஒரு சிநேக புன்னகை இருவரையும் பார்த்து சிந்தியவன், அமைதியாய் கொஞ்சம் தள்ளிப் போய் அமர்ந்துகொள்ள, மஞ்சுளாவோ “ரூபன்..” என்று அழைக்கவும் தான் எழுந்துவந்தான்.  

“ம்மா இவன்தான் ஆக்டிங்னா நீயுமா..” என்று நினைத்தது நிவினாக மட்டும் தானே இருக்க முடியும்.  

சியாமளா சகஜமாகவே பேச, மஞ்சுளாவின் பார்வை அவ்வப்போது மகனையும் கண்மணியையும் நோட்டம் விட, அதிரூபனின் பார்வையோ அவ்வப்போது கண்மணி மீது தொட்டு தொட்டு மீள,

‘டேய் இப்படியா எல்லாரையும் பார்க்க வச்சிட்டு, பாக்குறது.. என்னடா அதிரூபா..’ என்று அவனுக்குள்ளே சலித்துகொண்டான்.

கண்மணியோ அதிரூபன் வந்த பின்னே இன்னும் திணறலாய் உணர்ந்தாள். மஞ்சுளாவின் பார்வை தன்மீது படிவதை உணர்ந்தவள், அதிரூபனைப் பார்க்க, அவனோ “ம்மா.. எதுவும் செஞ்சு கொடுத்தியா??” என்றான் மஞ்சுளாவை கிளப்பும் முயற்சியில்.

“டீ போடுறேன் சொன்னேன்..” என்று மகனை ஒரு பார்வை பார்க்க, “ண்ணா நீ தான் சூப்பரா டீ போடுவியே.. போடேன்…” என்றான் நிவின்.

கண்மணிக்கு நிவின் சொன்னதில் சிரிப்பு வந்திட, மஞ்சுளாவும் கூட லேசாய் சிரித்துவிட்டார். அதிரூபனோ உடன் பிறந்தவனை உஷ்ணமாய் பார்க்க,

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்..” என்று நிவின் எல்லாரையும் பார்க்க, “நல்லா பேசுற போ..” என்றார் சியாமளா. 

‘நானாவது பேச மட்டும் தான் செய்றேன்..’ என்றவன் கண்மணியை பார்த்து ‘இவ பேசாமையே எல்லாம் செய்றா..’ என்று எண்ண,  அதிரூபன் யாரும் அறியாது தம்பியின் தோளை இறுகப் பிடித்தவன் “போ போய் டீ போடு..” என்று முணுமுணுக்க,

மஞ்சுளாவோ “ரெண்டும் என் மானத்தை வாங்குறானுங்க..” என்றே எண்ணினார்.

மழை தன் வேகத்தை வெகுவாய் குறைத்திருந்தது. சியாமளா கிளம்பும் எண்ணத்திற்கு வந்துவிட, “சரிங்க மழை நல்லா நின்னுடுச்சு.. நாங்க கிளம்புறோம்.. ரொம்ப சந்தோசம்..” என்று எழ,

வேகமாய் கண்மணியும் அவரோடு எழ, அதிரூபனுக்கு அவளை அனுப்பவே மனமில்லை. இதுநாள் வரைக்கும் தனியே என்று அவளோடு மனம் விட்டு எல்லாம் பேசியதில்லை. ஆனால் அவள் தன் வீட்டிற்கு வந்திருந்தது அத்தனை ஒரு சந்தோசம் கொடுத்தது.

இப்போது கிளம்புகிறேன் என்றதுமே, அவனுக்கு தவிப்பாய் போக, ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தான். நிவினோ இந்த கொடுமை எல்லாம் கண்கொண்டு பார்க்க இயலாது என்றெண்ணி ‘ஆபிஸ் கால்’ என்று அறைக்குள் சென்றுவிட்டான்.

மஞ்சுளாவோ “ஆட்டோ வேணா வர சொல்லவா??” என்று கேட்க,

“இல்லங்க பரவாயில்லை.. நடந்தே போயிக்கிறோம்.. ஆட்டோவும் இப்போ கிடைக்காது….” என, அவர்களை அப்படியே அனுப்ப மனமில்லாது

“இல்ல தனியா போகவேணாம். காலம் கெட்டு கிடக்கு. மழை இப்போதான் நின்னிருக்கு ரோட்ல லைட் வேற இருக்காது..” என்றவர் “என் பசங்க கூட வந்து விட்டு வரட்டும்..” என்றவர் “நிவின்…” என்றழைத்தார்.

அதிரூபனோ அம்மாவின் பேச்சில் சற்று முகம் மலர, அடுத்து அவர் நிவினை அழைக்கவும் “ம்மா அவன் போன் பேசிட்டு இருக்கான்..” என்றபடி முன்னே வர,

சியாமளாவோ “இருக்கட்டுங்க.. திரும்பி இவங்க நடந்துதானே வரணும்..” என்றார் கொஞ்சம் சங்கடமாய்.

“இல்லங்க.. பகல் நேரம்னா பரவாயில்ல.. ரோட்ல லைட்  வேற இருக்காது இந்த மழைல..” என்றவர் “போய் விட்டுட்டு வா ரூபன்..” என்றுசொல்ல,      

நிவினோ “ம்மா..” என்றபடி வெளியே வர ‘டேய் அப்படியே உள்ள போயிடு..’ என்றுதான் பார்த்தான் அதிரூபன்.

சியாமளாவோ கொஞ்சம் தயங்க, மஞ்சுளாவோ “வயசு பொண்ண கூட்டிட்டு…” என்றவர், “ரெண்டு பேருமே வந்து விட்டுட்டு வரட்டும்.. பசங்களுக்கு என்ன பேசிட்டே நடந்து வந்திடுவாங்க….” என, சியாமளாவிற்கோ அவரை மிகவும் பிடித்து போனது.

“நீங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும்..” என,

மஞ்சுளாவும் “அதுக்கென்ன வந்துட்டா போச்சு..” என்றவர், “ஒரு நிமிஷம்..” என்றுவிட்டு உள்ளே போய் குங்குமச் சிமிழ் கொண்டு வர, சியாமளாவோ “நீங்களே வச்சு விடுங்க..” என்றார்.

மஞ்சுளா தயங்க, “வாழ்த்துறதுக்கு நல்ல மனசு இருந்தா போதும்..” என்றவர் “என் பொண்ணுக்கு சீக்கிரமே நல்ல வரன் அமையனும்னு வாழ்த்துங்க..” என,

“சந்தோசமா உன் மனசு போல இரும்மா..” என்றவர் கண்மணியின் நெற்றியில் குங்குமம் வைக்க, கண்மணியோ பொசுக்கென்று அவரின் காலைத் தொட்டுவிட்டாள்..

அவளைப் பொருத்தமட்டில் பெரியவர்கள் யார் வாழ்த்தினாலும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்திடுவாள்.  அதன்படியே கண்மணி மஞ்சுளாவின் காலில் விழுந்திட, இது மஞ்சுளாவிற்கும் சரி அவரின் புதல்வர்களும் சரி ‘அட..!!!’ என்ற ஆச்சர்த்தையே கொடுத்தது. சியாமளாவிற்கு  இது புதிது அல்ல என்பதால் வெறுமெனே சிரித்தபடிதான் நின்றிருந்தார்.

அதிரூபன் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. மஞ்சுளாவின் பார்வையில் ஒரு மெச்சுதல் தெரிய “நல்லாரும்மா..” என்றவர், வேகமாய் அவளை தூக்கி விட, கண்மணிக்கு என்னவோ அந்த தருணம் மனதில் வெகு நெருக்குமாய் அமைந்துபோனது.

அதிரூபனோ ‘ஸ்கோர் பண்ணிட்டா…’ என்று பார்க்க,

நிவினோ ‘இவனுங்களுக்குன்னே எல்லாம் அமையுதே..’ என்று எண்ண,  

“பார்த்துடா உன் வாய் வழியா புகை வரப்போகுது..” என்றான் அதிரூபன் தம்பிக்கு மட்டும் கேட்கும் விதத்தில்.

மஞ்சுளா வந்து சியாமளாவிடம் இரண்டு  குடைகள்  கொடுக்க, “ஒண்ணு போதுங்க..” என்றவர் ஒன்றை திருப்பிக்கொடுத்துவிட்டு, கண்மணியைப் பார்க்க,

“போயிட்டு வர்றோம் ஆன்ட்டி..” என்றாள் எப்போதும் அவளின் மென் புன்னகையோடு சொல்ல, “நல்லதும்மா..” என்றவரும் வெளி வாசல் வரை வர, முன்னே சியாமளாவும் கண்மணியும் ஒரு குடையில் நடக்க, பின்னே அதிரூபனும் நிவினும் இன்னொரு குடையில் அவர்களுத் துணையாய் நடந்து சென்றனர்.

மழை நன்கு குறைந்திருந்தது. ஆனால் முற்றிலும் நின்றிருக்கவில்லை. ஜில்லென்றிருந்தது சூழல்.. சூழல் மட்டுமில்லை காதல் கொண்ட இரு மனங்களும்தான்.. சில நேரங்களில் வார்த்தைகள் கொண்டு பேசி அது தராத ஓர் உணர்வை ஒரு சில பார்வை பரிமாற்றங்கள் செய்துவிடும்.

அதிரூபனுக்கும் கண்மணிக்கும் அதுவே ஆக, கண்மணியோ எத்தனை மெதுவாய் நடக்கவேண்டுமோ அத்தனை மெதுவாய் நடக்க, சியாமளா கூட சொல்லிவிட்டார் “கொஞ்சம் வேகமா வாயேன் கண்மணி..” என்று சிறிது சத்தமாக.

அவர் சொன்னதில் அதிரூபன் கொஞ்சம் கிண்டலாய் சிரிக்க, அவன் முகம் பார்க்க முடியவில்லை என்றாலும் அவன் சிரிப்பை உணர்ந்தவள், அம்மா அறியாத வண்ணம் பின்னே திரும்பி லேசாய் முறைத்து வைத்தாள்.

அதிரூபனோ ‘பார்ரா..’ என்று கண்களை விரிக்க, நிவினோ “டேய் சத்தியமா முடியல டா.. நீயே கூட கூட்டிட்டு போயி விட்டுட்டு வா.. நான் இப்படியே கூட போறேன்..” என்று திரும்பப் போக,

“ஒழுங்கா வா..” என்று நேராய் பார்த்து சிரித்தவன், நிவினின் கரங்களை முறுக்கியபடி இழுத்துச் சென்றான்.

‘கால கொடுமைடா ஈஸ்வரா…’ என்று நிவின் நொந்தபடி வர, அதிரூபனோ கண்மணியின் நடையை ரசித்தபடி வர, கண்மணியோ அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு வந்தாள்.

கண்மணிக்கோ இப்படியான ஒரு லேசான மழையும் ஜில்லென்ற சூழலில் அதிரூபனோடு கைகள் கோர்த்து, ஒரே குடையில் அவனும் அவளும் நடந்து சென்றாள் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்ற, அக்காட்சியோ மனதில் வலம் வர,

அதிரூபனுக்கோ கண்மணியை இதுபோன்ற ஒரு நேரத்தில் தன்னோடு பைக்கில் அழைத்துப் போனால் எப்படி இருக்கும் என்ற ஆசை எழ, அவனுக்கும் அக்காட்சிகள் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

அவரவர் தங்களின் கற்பனையில் நடந்துவர, ஒருவழியாய் வீடும் வந்துவிட, சியாமளாவோ “உள்ள வாங்கப்பா..” என்றார் இருவரையும்.

கண்மணியும் கூட “வாங்க.. ” என்று இருவரையும் பொதுப்படையாய் பார்த்து அழைக்க,  

அதிரூபனுக்கு ஆசை தான், ஆனால் என்ன நினைத்தானோ “இருக்கட்டும் ஆன்ட்டி.. நாங்க இப்படியே கிளம்புறோம்..” என, நிவினோ அண்ணனை நம்பாது ஒரு பார்வை பார்த்தான்.

“அட.. இவ்வளோ தூரம் வந்திட்டு உள்ள வராம போனா எப்படி.. வாங்க..” என்று சியாமளா அழைக்க,

“இல்ல ஆன்ட்டி இருக்கட்டும்.. தப்பா நினைக்கவேணாம்..” என்ற அதிரூபன் கொஞ்சம் திடமாவே மறுக்க,  கண்மணியோ அப்படியே முகத்தைத் தூக்கிக்கொள்ள,

சியாமளாவோ “ஒருநாள் அம்மாவை கூட்டிட்டு கண்டிப்பா வரணும்..” என, “கண்டிப்பா ஆன்ட்டி..” என்ற அதிரூபன், நிவினிடம் “போலாமா டா..” என்றான்.

நிவினும் “நாங்க வர்றோம் ஆன்ட்டி..” என்று திரும்ப, கண்மணியோ இப்போது கொஞ்சம் ஏக்கமாய் அதிரூபனைப் பார்த்தாள்.

சியாமளாவோ “கேட் பூட்டிட்டு வா கண்மணி..” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட, கண்மணியோ அதிரூபனையே பார்த்தபடி கேட்டை பூட்டப் போக, இரண்டு எட்டு வைத்திருந்த அதிரூபனோ சியாமளா உள்ளே போனதைப் பார்த்தவன் வேகமாய் திரும்பி வந்து கண்மணி முன்னே நிற்க, நொடியில் திடுக்கிட்டுத்தான் போனாள் அவள்.

நிவின் என்ற ஒருவன் அங்கே இருப்பது எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை.

“கூடிய சீக்கிரம் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வருவேன்..” என்றவன் கேட்டில் இருந்த அவளின் கைகளை பிடித்து லேசாய் ஒரு அழுத்து அழுத்த, கண்மணியோ அவனின் தொடுகையில் மேலும் திகைத்துத் தான் போனாள்.

எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் பிடித்திருந்தது.. திடுக்கிட்டாலும் மனம் ரசிக்க, அந்த குளிர் நேரத்திலும் அவளுக்கு திடுமென உடலில் ஒரு இதமும் ஒரு நடுக்கமும் சேர்ந்தே பரவியது. அவளின் மாற்றம் கண்டு அதிரூபன் ஒரு புன்னகையோடு கண் சிமிட்டி அவளையே பார்த்தபடி பின் வாக்கிலேயே நடந்து செல்ல, நிவினோ “டேய் விழ போற நீ..” என்றபடி அண்ணனை பிடித்துத் திருப்பி அழைத்து செல்ல,

வீட்டின் உள்ளே இருந்து கண்ணன் வந்தான் “கண்ஸ்.. இன்னும் என்ன பண்ற??” என்றபடி.

அண்ணனின் குரலில் அடித்துப் பிடித்து கண்மணி திரும்பிப் பார்க்க, கண்ணனின் பார்வையோ வாசல் தாண்டி  தெருவில் சென்றுகொண்டு இருந்த அதிரூபன் நிவின் மீது படிந்தது.

                     

                

          

                  

  

    

 

 

 

 

 

 

 

     

Advertisement