Advertisement

தூறல் – 18

“அதென்ன அவ்வளோ அவசரம்?? நான் ஊருக்கு வர்றதுக்குள்ள போயி பேச என்ன இருக்கு?? அதெல்லாம் இப்போ வேணாம்.. நான் வந்ததுக்கு அப்புறம் போயி பேச சொல்லு..” என்று கண்ணன், தீபாவிடம் கத்த,

“நீ சொல்றது எனக்கு புரியுது.. பட் எங்க வீட்ல சொல்றதும் நான் கேட்கணுமே.. அப்பா அம்மா கிளம்பி நிக்கிறாங்க.. அங்கிளை பார்த்துட்டு, அப்படியே என்னன்னு பேசிட்டு வர்றோம்னு.. கண்ஸ் கிட்டயும் சொல்லிட்டேன் ரெடியா நம்ம வெளிய போலாம்னு.. ” என்று தீபாவும் அடக்கப்பட்ட கோபத்தோடு சொல்ல,

“அதெல்லாம் எங்கயும் கூட்டிட்டு போகவேணாம் அவளை…” என்றான் பட்டென்று கண்ணன்..

“ஏன்?? இதுக்கு முன்ன நாங்க எங்கயும் போகலையா என்ன??”

“இதுக்கு முன்ன வேற.. இப்போ வேற.. நீ ஆபிஸ் கிளம்பு..”

“நான் லீவ் சொல்லிருக்கேன்..”

“ம்ம்ச் ஏன் தீப்ஸ் நீ புரிஞ்சுக்கமாட்டேங்கிற.. கண்ஸ் ஆல்ரடி குழப்பமா இருக்கா..” என்று கண்ணன் சொல்ல,

“அவ ரொம்ப தெளிவா இருக்கா.. நீ குழப்பாம இருந்தா சரி.. எல்லாத்தையும் தாண்டி அதிரூபன் தான் கண்மணிக்கு சரி..” என்றாள் தீபா உறுதியாக.

இப்படியாக இவர்களின் பேச்சு நீல, ஒருபுறம் தீபாவின் அப்பா அம்மா கிளம்பி நிற்க, கண்ணனோ இறுதியில் ‘என்னவோ செய்ங்க.. ஆனா கண்ஸ நீ எதுவும் ட்விஸ்ட் பண்ணக் கூடாது..’ என்றுவிட்டு வைத்துவிட்டான்.

தீபாவின் அப்பா சடகோபனுக்கு அழைத்து தாங்கள் வருவதாய் சொல்ல, ஒருநொடி நெற்றியை சுருக்கியவர் பின் “சரி வாங்க..” என்றுவிட்டு வைத்தார்..

அப்படியே சியமளாவிடமும் சொல்ல, “ஓ. அப்படியா..” என்று அடுத்து அவர்கள் வருங்கால சம்பந்திகளை வரவேற்கத் தயாராக, கண்மணியே அலங்கார் சொல்லும் சந்தோஷத்தில் தன்னை அலங்கரித்துக்கொண்டு இருந்தாள்.       

கொஞ்சம் உள்ளூர படபடப்பாய் இருந்தது, காதல் என்ற ஒன்றை உணர்ந்த பின்னே, அதனை நேரடியாக சொல்லாது ஒருவிதத்தில் வெளிப்படுத்திய பின்னே, அதிரூபனும் இவளுக்கும் இடையில் இருந்த என் இடைவெளி என்பது அலைபேசி பேச்சுக்கள் மூலம் குறைந்திருக்க, முதல் முறையாய் அலங்கார் செல்லப் போகிறாள். அதுவே அவளுக்கு ஒருவித அமைதியின்மை கொடுக்க, எப்போதடா தீபாவின் பெற்றோர் வருவர் என்று காத்திருந்தாள்.

‘அவர்ட்டவர்றேன்னு சொல்லுவோமா??!!!’ என்ற யோசனை வேறு அவள் மனதில்.

‘வேணாம் சர்ப்ரைஸா போவோம்..’ என்று தனக்கு தானே மாறி மாறி சொல்லிக்கொண்டவள், மனதில் ஒருவித பரவசமும் கூட…

தீபாவோ திரும்ப அழைத்து “நான் ஆபிஸ் போறேன்.. பெரிய கண்ஸ் ரொம்ப திட்டறான்..” என்று சொல்ல,

‘அச்சோ..!!!’ என்று நினைத்தவள் “என்னாச்சு??!!” என்றாள் காற்று போன பலூனாய்.

“நான் உன்னை ட்விஸ்ட் பண்றேனாம்..”

“ஏன்??”

“ஏன்னா.. போ போய் அவன்கிட்டே கேளு… எப்படினாலும் தெரு முனைல நின்னுட்டு கூப்பிடுவேன்.. அதுக்கு இன்னொரு நாள் போயிக்கலாம்…” என,

தீபா எதோ விளையாடுகிறாள் என்று நினைத்தவள் பின் “நிஜமாவே வரலையா??” என்றாள் ஒருவித ஏமாற்றத்தில்.. கண்மணியின் குரலே சொல்லியது அவளின் மனதை.   

“அப்பா அம்மா வர்றாங்க பட் நான் வரலை. லீவ் கேன்சல் பண்ணிட்டு ஆபிஸ் போறேன்..” என்று தீபாவும் உர்ரென்றே பேச,

“ம்ம் சரி தீப்ஸ்..” என்று கண்மணி போனை வைத்தவள், சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

எத்தனை உற்சாகமாய் மனது இருந்ததோ இப்போது அப்படியே வாடிப்போனது. தீபா  வெளியே செல்வோம் என்றதுமே அவள் மனதில் பல பல ஆசைகள் வந்துபோனது.  ஆனால் அதெல்லாம் இப்போது வடிந்து இருந்த இடம் தெரியாது காணாது போக,

“ம்ம்ம்ம்…” அவளுள் ஒரு சோக ராகம் பாட, சரியாய் அவளுக்கான அதிரூபனின் குறுஞ்செய்தி சமிக்கையிட்டு தன் வரவை காட்ட,

‘ம்ம்ம்..’ பாடிய மனது ‘ஐ..’ என்று பளீரிட்டு வேகமாய் அலைபேசியை கரங்கள் எடுத்துக்கொள்ள, “என் கண்மணிக்கு காதல் அர்ப்பணம்..” என்று  ஒரு பாடல்வரியை அதிரூபன் தனக்கு ஏற்றவகையில் மாற்றி அனுப்பியிருக்க,   அவளுள் ஒரு புது ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியது.

சட்டென்று முகத்தில் வந்து ஒரு ஜொலிப்பும் இதழில் ஒரு சிரிப்பும் ஒட்டிக்கொள்ள,  வெகு நேரம் வரைக்கும் அலைபேசியின் திரையையே பார்த்துகொண்டு இருந்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்பதுகூட மறந்துவிட, அதற்கு அடுத்தநொடி அவளின் திரையில் வந்து குதித்த அதிரூபனின் புகைப்படம் கண்டு கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்.

சரியாய் அதே நேரம் சியாமளா வந்து “எழுந்திட்டியா??? தீபா அப்பா அம்மா வர்றாங்களாம்..” என, வேகமாய் கையில் இருந்த அலைபேசியை கட்டில் மீது கவிழ்த்து வைத்தவள்,

“தீபா சொன்னாம்மா..” என்றாள் வேகமாய்.

சியாமளா அவளையே வித்தியாசமாய் பார்ப்பதுபோல் இருந்தது கண்மணிக்கு. ஆனால் அவர் சாதாரணமாய்தான் பார்த்தார். காதல் வந்த நெஞ்சமல்லவா கற்சிலை கூட தனை கண்கொண்டு பார்ப்பது போல் தானே தெரியும்.. இதில் அம்மா எல்லாம் சும்மா ஏவுகணை தாக்குதல் நடத்த தயாராய் இருப்பதுபோல் தோற்றமளிப்பது இயற்கையே..

“ம்மா.. என்னம்மா??!!!” என்று கண்மணி திக்கித் திணற,

“என்னாச்சு?? இப்போவே குளிச்சு எங்கயும் வெளிய போறியா??” என்றார் புரியாது..

“இ.. இல்லையே..” என்று தலை ஆடி மறுக்க,

“ஹ்ம்ம்.. சரி ரூம்குள்ளயே சும்மா இருக்காத…” என்றவர், திரும்பப் போக ‘அப்பாடி….!!!’ என்று கண்மணி நிம்மதி மூச்சு விட்டு முடிக்கவில்லை, திரும்பி “கண்ணன் வரவும் வேணும்னா ஷாப்பிங் போல போயிட்டு வரலாம்..” என்றார் மகளின் மனதை ரிலாக்ஸ் செய்ய எண்ணி..

“ம்ம்…” என்று அதற்கும் கண்மணி தலையை ஆட்ட,

‘என்ன பொண்ணோ.. எல்லாத்துக்கும் தலையை ஆட்டு..’ என்றவர் “வந்து சட்னி போடு கண்மணி..” என்றபடி போக,

இப்போது நிஜமாகவே ‘அப்பாடி…’ என்ற நிம்மதி பெருமூச்சு அவளிடம்..

திரும்ப போனை எடுத்துப்பார்க்க, அதிரூபனோ அடுத்தடுத்து இரண்டு மேசேஜ்கள் அனுப்பியிருந்தான் “கண்மணி ஆர் யு தேர்..??” என்று..

அறையின் வாசலில் கண்களைப் பாதித்தவள் பின் “அம்மா வந்துட்டாங்க…” என்றுமட்டும் பதில் அனுப்ப,

“ஓ..!!!” என்றுசொல்லி இரண்டு சிரிக்கும் பொம்மைகள் அவனிடம் இருந்து வர, அதிரூபனுக்கோ ‘போட்டோ பார்த்தாளா இல்லையா?? ஒண்ணுமே சொல்லலை..’ என்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

கண்மணிக்கோ திரும்ப சியாமளா வருவதற்கு முன்னே இவனிடம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு செல்லவேண்டும் என்று எண்ணம் இருக்க, அவனோ அங்கே கடையில் இப்போது உம்மென்று முகத்தை வைத்திருந்தான்.               

தானா இப்படி என்று இருந்தாலும் “டேய் நீ என்ன இப்படி பண்ணிட்டு இருக்க??” என்று புத்தி கேட்டாலும்..

“போடா போடா லவ்டா லவ்டா..” என்று அவனே அவனுக்கு சொல்லிக்கொள்ள, ஆர்வமாய் கண்மணியின் பதிலுக்கு கண்களைப் பத்திதான் அவனின் அலைபேசியில்.

அந்தோ பரிதாபம், “மெசேஜ் யூ லேட்டர்..” என்ற பதில் மட்டுமே வர, ஒரு சோக பொம்மையை மட்டும் பதிலாய் அனுப்ப, அடுத்து கடைக்கும் ஆட்கள் வந்திட, அவனின் வேலையும் தொடங்கியது.   

கொஞ்ச நேரத்திலயே தீபாவின் அப்பா அம்மா வந்திட, அவர்களோடு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவள், திரும்ப அறைக்குள் வந்து அதிரூபன் அனுப்பியவைகளை பார்க்க, அவன் சோக பொம்மை கண்டு மனதில் ஒரு அற்ப திருப்தி ஏற்பட்டது  நிஜம்தான்.

“சாரி.. வீட்ல கெஸ்ட்..” என்றுமட்டும் இவள் பதில் அனுப்ப, அங்கே அவனோ அவனின் கஷ்டமர்களோடு பிசியாய் இருந்தான்..

காதலில் கண்ணாமூச்சி ஆட்டம் போய் இப்போது நேரமும் அவர்களுக்கிடையில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, கடிகாரத்தில் சின்ன முள்ளும் புரியமுள்ளும் ஓட்டப் பந்தயம் நடத்தியதுதான் மிச்சம்.

வெளியே தீபாவின் அப்பாவோ “இங்க நடந்தது எல்லாருக்குமே வருத்தம்தான்.. ஆனா நாங்களும் எங்க சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லணுமே..” என்று தன்மையாகவே பேச,

சடகோபனோ “அது நிஜம்தான்.. கண்ணன் வந்திடட்டும் பேசி கல்யாண நாள் குறிச்சுடலாம்..” என்றார் உறுதியாய்..

சியமாளாவிற்கு இது ஆச்சர்யமே. ஏனெனில் இவர்கள் வருகிறார்கள் என்றதும் சடகோபன் முகம் அத்தனை செழிப்பினை காட்டவில்லை. தீபா தான் இந்த வீட்டு மருமகள் என்று ஏற்றுகொண்டாலும், இங்க நடப்பவைகள் எல்லாம் அதனை சந்தோசமாய் ஏற்றுகொள்ளும் சூழலை கொடுக்கவில்லை. ஆக எப்படியும் இரண்டுமாதமாவது போகட்டும் என்று சடகோபன் சொல்லுவார் என்றே சியாமளா நினைக்க,

அவரோ கண்ணன் வரவும் தேதி குறிப்போம் என்று ஆச்சர்யமாகவும் இருந்தது, அதே நேரம் இது எத்தனை தூரம் சரி என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் வீட்டினில் ஆட்கள் இருக்கையில் இதை மறுத்தோ இல்லை வேறெதுவுமோ பேசமுடியாதே, வந்தவர்களுக்கு சடகோபனின் பதில் சந்தோசத்தைக் கொடுக்க,

“ரொம்ப சந்தோசம்ங்க சம்பந்தி..” என்றுவிட்டு மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டே சென்றனர்.

அவர்கள் போனதுமே சியாமளாவோ “என்னங்க டக்குனு சொல்லிட்டீங்க??” என,

“வேற என்ன செய்ய சொல்ற சியாமி..” என்றார்..

“இல்லை அது.. கண்ணனை ஒருவார்த்தை..”

“அவன் வரவும் தானே தேதி குறிக்கப்போறோம்..” என்றவர் நொடி நேர அமைதிக்குப் பின்னே “நம்ம பொண்ணு நிச்சயம் நின்னுபோச்சுன்னு, நிச்சயம் பண்ண பொண்ண காக்க வைக்கிறது தப்பு..” என்றவரை சியமாளா கொஞ்சம் பெருமையாகத்தான் பார்த்து வைத்தார்..

“என்ன பாக்குற??!!” என்று கேட்டவருக்கு அப்போதுதான் மெதுவாய் ஒரு சிரிப்பு வந்தது..

“இல்ல நீங்க சொன்ன வார்த்தை எத்தனை நிஜம்னு நினைச்சேன்.. வீட்ல அடுத்து ஒரு நல்லது நடந்தா தான் நடந்ததை எல்லாம் மறக்கவும் முடியும்.. இதுமூலமா நம்ம கண்மணிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நல்லது..” என,

இதெல்லாம் கண்மணியின் காதில் விழுந்துகொண்டு தான் இருந்தது. கண்ணன் ஊரில் இருந்து வரவுமே முதலில் அவனிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

ஆனால் அதற்கு கண்ணன் எவ்வித வாய்ப்பும் அளிக்கவில்லை.. அவன் காதலிக்கும்போதும் சரி, கண்மணி காதல் என்பதை உணர்ந்த பின்னும் சரி அவனின் அந்த ‘அண்ணன்..’ என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கவேயில்லை.

தீபாவின் பெற்றோர்கள் கிளம்பவும் அங்கே வீட்டில் எப்போதும் போல் நேரம் செல்ல, அதிரூபனின் பதிலுக்குக் காத்திருந்தவளோ ‘பிசியாகிருப்பாங்க..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு அம்மாவோடு வேலைகளை செய்ய, மதியத்திற்கு மேல் கண்ணனே அழைத்துவிட்டான் கண்மணியை..

வீட்டில் அப்பா அம்மா என்று விசாரித்தவன், அடுத்து தீபாவின் பெற்றோர் வந்துபோனதையும் கேட்க, கண்மணி பொறுமையாவே பதில் சொன்னாள்..

“ஹ்ம்ம்.. ஓகே கண்ஸ்.. இதுல உனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே..??”

“எ… புரியலை…”

“இல்ல.. உன்னோட கல்யாணம் நடந்தபிறகு தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சேன்.. பட் இப்போ எல்லாமே மாறி நடக்குது அதான்…”

“இதுல என்னண்ணா இருக்கு.. என்ன நடக்கணுமோ அதானே நடக்கும்..” என்றவளுக்கு தீபா சொன்னது நினைவில் வந்து,

“நீ இதெல்லாம் மனசுல வச்சிட்டு தீப்ஸ் கூட சண்டை போடாத ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சும் குரலில்..

சாதாரண நாட்களிலேயே கண்மணியின் குரலில் அத்தனை மென்மை இருக்கும் இப்போது அவளோ கெஞ்சும் குரலில் பேச அது கண்ணனுக்கு ரொம்பவும் சங்கடமாய் போய்விட்டது..

“ஹேய் அதெல்லாம் இல்லை…” என்று வேகமாய் மறுக்க,

“தீப்ஸ் ஒன்னும் என்னை ட்விஸ்ட் பண்ணலை..” என்றாள் இவளும் அதே வேகத்தில்..

கண்ணனுக்கு பேச்சு போகும் பாதை புரியவும் “சரி இது இப்போ பேசவேணாம்.. அம்மாக்கிட்ட கொடு கண்ஸ்..” என்றுசொல்ல, கண்மணி அமைதியாகவே இருந்தாள்.

“கண்ஸ்…”

“ம்ம்..”

“கோவமா??!!”

“ம்ம்ஹும்..”

“இங்கபாரு கண்மணி.. உனக்கு இனியும் எதுவும் தப்பா நடந்திட கூடாதுன்னு தான் நான் இவ்வளோ சொல்றேன்..”

“ம்ம்..”

“ம்ம்ச் கண்ஸ்…”

“நீ ஊருக்கு வந்தப்புறம் பேசிக்கலாம்..” என்றவளுக்கு என்னவோ உள்ளூர கோபம் வேறு வந்தது. வேறொன்றும் சொல்லாது போனை வைத்துவிட்டாள்.

கண்ணன் வந்து காதலிக்கின்றேன் என்று சொல்லும்போது கண்மணி எப்படி அப்படியே ஏற்றுகொண்டாளோ, அதுபோலவே தன் காதலையும் அண்ணன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கண்மணியின் மனது எதிர்பார்க்க, கண்ணனின் இப்படியான பேச்சுக்கள் எல்லாம் அவளுக்கு ஏமாற்றம் கொடுக்க, அந்த ஏமாற்றமே அவளுக்கு கோபத்தையும் கொடுத்தது.

என்றுமில்லா திருநாளாய் கண்மணி இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே போனை வைக்க, கண்ணனுக்கோ ‘என்னடா இது ச்சே..’ என்றாக, திரும்ப அழைத்தான்..

“என்ன கண்மணி நீ புரிஞ்சுக்கமாட்டேங்கிற…” என்றவன் குரலிலும் ஒரு சலிப்புத் தெரிய,

“நான் தான் நீ வரவும் பேசலாம் சொல்லிட்டேனே..” என்று அவளும் சொல்ல,

“அதுக்கு நீ கோவப்படுவியா??” என்றான் கண்ணன்..

கண்மணிக்கு இப்போது நிஜமாய் தெரியவில்லை, அதிரூபனைப் பற்றி இவனிடம் என்ன சொல்லி புரியவைப்பது. அவளுக்கு காதல் வந்தது அவளுக்கே அதிசயமான ஒன்று அப்படி இருக்கையில் அண்ணனுக்கு எவ்வகையில் புரியவைக்க என்று அவள் யோசிக்க,

“கண்ஸ்…” என்றான் என் பொறுமையை சோதிக்காதே எனும்விததில்,

அவளோ அப்போதும் வார்த்தைகளை தேடியவள் பின் நிதானமாய் “ண்ணா.. நீ.. நீ அவர தப்பா நினைக்கிறியா??” என்று கேட்க, கண்ணனுக்கு சுத்தமாய் அவளின் கேள்வி புரியவில்லை.

“என்ன சொல்ற?? யாரை??”

“அதான்.. அது.. அவங்க.. அதிரூபன்..” என, இப்போது கண்ணனுக்கு பேச்சற்று போனது.

“அ… அண்ணா…”

“ம்ம்ம் சொல்லு கண்ஸ்..” என்றான் எவ்வித உணர்வையும் காட்டாது.

“நீதான் சொல்லணும் ண்ணா..”

“எனக்கு என்ன சொல்ல தெரியலை..” என்றவன் “நான் வந்ததும் பேசிக்கலாம்..” என,

“ம்ம் சரி..” என்று இவளும் வைத்துவிட்டாள்.  

என்னவோ கண்ணனிடம் தான் பேசியது சரியா என்ற எண்ணம் போய், என் அண்ணன் என்னை புரிந்துகொள்ளவில்லையே என்ற எண்ணமே பிரதானமாய் இருக்க, அவனோடு கோவமாய் சண்டை போடவும் வரவில்லை, அதே நேரம் கண்ணன் எங்கே இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிடுவானோ என்ற பயமும் இருந்தது.

கண்ணனைத் தாண்டி வீட்டில் அப்பா அம்மாவிடம் பேசினால் என்னாகும்?? முதலில் முடியுமா அவளால்?? அதிரூபன் வந்து பேசிடுவான் தான். ஆனால் கண்ணனை ஒதுக்கியது போல் ஆகிடாதா?? இதெல்லாம் மனதில் தோன்ற அப்படியே சோர்வாகிப் போனாள் கண்மணி.  

“எப்போ பார் ரூம்லயே என்னதான் செய்ற கண்மணி??” என்று கேட்டபடி சியாமளா வர,

“அண்ணன் பேசினான் ம்மா..” என,

“அப்படியா?? என்னை கூப்பிட்டு இருக்கவேண்டியது தானே..” என்றவர் “அவனுக்கு கால் பண்ணு..” என்றபடி அங்கேயே அமர்ந்துவிட்டார்.

இதற்குமேல் கண்மணியால் மறுக்க முடியாதே. வேறு வழியில்லாது கண்ணனுக்கு அழைத்துவிட்டு அப்படியே அம்மாவிடம் அலைபேசியை கொடுக்க, கண்ணனோ கண்மணிதான் திரும்ப பேச அழைக்கிறாள் என்றெண்ணி “கண்ஸ் நான் தான் சொல்றேன்ல.. இப்போ எதுவும் முடிவு பண்ண வேணாம்..” என்று சொல்ல,

“டேய் என்னடா??!!” என்றார் சியாமளா..

அம்மாவின் குரலில் கொஞ்சம் திகைத்தவன் “ம்மா நீயா??” என,

“நான் இல்லாம… ஆமா இப்போ ஏன் இவ்வளோ டென்சனா பேசின??” என்றதுமே கண்மணி திகைக்க,

கண்ணனோ “இல்லம்மா அது..” என்று யோசித்தவன் “தீபா பேரெண்ட்ஸ் வந்தாங்கள்ள அதான்..” என்று இழுத்தான்..

“வந்தாங்க.. பேசியாச்சு.. நீ வரவும் தேதி குறிக்கலாம்னு அப்பா சொல்லிட்டார்..”

“இல்லம்மா அது…”

“அது இது எதெல்லாம் இல்லை.. சும்மா சும்மா எதுவும் சொல்லாத கண்ணா.. நம்ம வீட்ல ஒரு நல்லது நடக்கட்டும் தன்னப்போல கண்மணிக்கும் நல்லது நடக்கும்..” என்று கண்ணனின் வாயை அடைத்தவர், மேற்கொண்டு பேசிவிட்டு வைக்க, கண்மணியோ அம்மாவின் முகத்தினைப் பார்த்தாள்.

“என்ன பாக்குற.. வர வர சரியில்ல.. இப்படிதான் வந்து அடைஞ்சுக்கிறதா.. அப்பா பீல் பண்றார் கண்மணி..”

“இ.. இல்லம்மா சும்மாதான்..” என்றவள் எழுந்துவிட,

“போ.. போய் அப்பாக்கூட கொஞ்சம் இரு.. சாயங்காலாம் நாலாவது தெருவில இருக்க சாந்தி வீட்டுக்கு போலாம்.. கூட்டுப் பிரார்த்தனை பூஜைன்னு வந்து சொல்லிட்டுப் போனாங்க..” என்றபடி சியாமளா வெளியே செல்ல,

அப்படியே கண்மணியின் புத்தியில் ஒரு மின்னல் வெட்டு, ‘நிவின் அந்த சைட் தானே அவங்க வீடு இருக்கு சொன்னான்..’ என்று.

அவ்வளவு தான் கண்மணி எப்போதடா மாலை வேளை வரும் என்று காத்திருக்க, கிளம்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிப்போனது. என்ன உடுத்துவது என்று ஆரம்பித்து, ஏகப்பட்ட குழப்பம்.. இதற்கிடையில் அதிரூபனிடம் சொல்லியும்விட்டாள் அந்த பக்கம் வருவதாய்.

அவனோ ‘என்ன டைம்??’

“யார் யார் வர்றீங்க..??”

“மீட் பண்ண முடியுமா??” என்றெல்லாம் கேட்க,

இவளோ “அச்சோ.. நோ நோ.. ஜஸ்ட் பார்த்துக்க மட்டும் வேணா முடியும்..” என்றாள் வேகமாய்..

“ஜஸ்ட் பார்த்து???!!!!!”

“பார்த்து???!!!!!” என்று கண்மணியும் இழுக்க, “ஈவினிங் மீட் பண்றோம்.. பேசறோம்..” என்றவனுக்கு மழை வில்லனை மாறிப்போனது.

“நல்ல மழை.. இப்படி பெய்யும்னு யார் கண்டா..” என்றபடி சியாமளா அந்த வீட்டின் முன் கொஞ்சம் ஒதுங்கி நிற்க, கமலியும் அவரருகே நிற்க, மழை ஓய்ந்த பாடில்லை. மாறாக வேகம் எடுத்துக்கொண்டே இருந்தது.

எதிரே ஆள் வருவது கூட காணாத பெருமழையாக இருக்க, “இப்படி வந்து சிக்கிட்டோமே.. கண்ணன் இருந்தாலும் போன் பண்ணி சொல்லலாம்.. அப்பா எப்படி வருவார்..?” என்று மகளிடம் கேட்க,

அதே நேரம் வேலையில் இருந்து கொஞ்ச நேரத்திற்கு முன்னேதான் வீடு வந்திருந்த நிவினோ “மழை இப்படி அடிக்குது கதவை திறந்து வச்சிருக்க..” என்று மஞ்சுளா சத்தம் போட்டதில், வாசல் கதவு சாத்த செல்ல, அங்கே மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த கண்மணியும் சியாமளாவும் கண்ணில் பட,

‘அட கண்ஸ்..’ என்றவன்..

வேறெதுவும் யோசிக்காது, ஒரு குடையை உள்ளே வந்து எடுத்துக்கொண்டே வேகமாய் அவர்களை நோக்கிப் போனான்..  இவர்கள் வீட்டின் வெளி கேட்டின் அருகே மேற்கூரையாய் இருந்த அஸ்பெஸ்டாஸ் கீழே இருவரும் நிற்க,

நிவினோ “கண்… கண்மணி..” என்றழைத்தபடி போக, ‘யாரடா அது..’ என்று இருவருமே திரும்பிப் பார்க்க, நிவின் இருப்பது கண்டு வேகமாய் கண்மணியின் கண்கள் அந்த வீட்டினை தொட்டு மீண்டது..

அதிரூபன் இருப்பானோ என்ற ஆவல் சொடுக்கிடும் நேரத்தில் அவள் கண்களில் தெரிய, நிவினோ “ஹாய் ஆன்ட்டி..” என்றான் சியாமளாவைப் பார்த்து.

அவரோ ஒரு புன்னகை சிந்தியவர் கண்மணியிடம் ‘யார்??’ என்று பார்வையால் கேட்க, அதற்கு நிவினே பதிலும் சொல்லிவிட,

“ஓ.. சாரிப்பா.. அன்னிக்கு கோவில்ல பார்த்தோம்ல..” என்றவர் நாக்கினை கடித்து மகளைப் பார்த்தார்.

வருண் பெண் பார்க்க வந்த அன்றுதான் நிவினும் போய் பேசியது. அதனை எண்ணிப் பார்க்க, கண்மணியோ நிவினைத் தாண்டி வீட்டினை ஆராய்ந்துகொண்டு இருந்தாள்.

‘அவர் பைக் இல்லையே..’ என்று கண்கள் தேட, நிவின் கண்டுகொண்டவன் “உள்ள வாங்க.. மழைல ஏன் வெளிய நிக்கணும்..” என்று அவர்களுக்கு ஒரு குடையை நீட்ட,

சியாமளா கொஞ்சம் தயக்கமாய் பார்க்க, “அம்மா இருக்காங்க ஆன்ட்டி ப்ளீஸ் வாங்க..” என்றவன் “கண்ஸ் சொல்லு..”என,

அவளோ “ம்மா போவோமா??!!” என்றாள் கடினப்பட்டே தன் ஆவலை அடக்கி..

எத்தனை நேரம் இந்த மழையில் ஒதுங்கி நிற்பது என்றெண்ணிய சியாமளாவும் சரி என்று உள்ளே நடக்க, கண்மணிக்கோ இதயம் தடதடக்க ஆரம்பித்தது.

ஆங்கே அதிரூபனுக்கும் அப்படித்தான் இருந்தது. கடையில் இறுப்புகொள்ளவில்லை. நேரம் வேறு நகர நகர, எப்போதடா மழைவிடும் என்று பார்த்துக்கொண்டு இருந்தான். பொதுவாய் மழை நாட்களில் கடையில் இருக்கும் ஆட்களை சமயம் பார்த்து அனுப்பிவிட்டு எல்லாம் எடுத்துவைத்து விட்டு அதிரூபன் தான் கடைசியில் வீடு வருவான்.

இன்றோ கொஞ்சம் சீக்கிரமே கிளம்பியவன் அங்கேயே இருப்பவரிடம் “கொஞ்சம் பார்த்துக்கோங்க..” என்றுசொல்லி கீழ வர, சரியாய் மழை பிடித்துகொண்டது.

இதில் எப்படி செல்வது?? லேசான மழை என்றால் கூட நனைந்துகொண்டே போகலாம்.. ஆனால் இது பெரும்மழை… அப்படியே மழையைப் பார்த்தே அதிரூபன் நின்றிருக்க, அங்கே கண்மணியோ அவனின் வீட்டில் அவனில்லாதது கண்டு கொஞ்சம் ஏமாற்றத்தோடு அமர்ந்திருந்தாள்.

  

          

     

 

 

Advertisement