Advertisement

 

தூறல் – 17

“என்னடா இவனை இன்னும் காணோம்..” என்று மஞ்சுளா நிவினிடம் கேட்க,

“ம்ம் நீதான தொரத்தி விட்ட..” என்ற நிவினுக்கும் கவலை தான்.

அதிரூபன் எப்போதும் இரவு பத்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவான். கடையில் இருக்கும் ஆட்கள் இரவு ஒன்பது போல் கிளம்பிட, இவன் அன்றைய தினத்தின் கணக்கு வழக்குகள் எல்லாம் பார்த்து, அங்கேயே கடையில் தங்குபவரோடு சேர்ந்து அனைத்துப் பொருட்களையும் எடுத்துவைத்து விட்டு வீடு வர பத்தாகிவிடும்.

இன்றோ பதினொன்று மணியாகியும் அவன் வராது போக, என்னவோ மஞ்சுளாவிற்கு கஷ்டமாய் போய்விட்டது. போன் செய்தாலோ அது சுவிட்ச் ஆப் என்று வர, சின்ன மகனிடம் புலம்பிக்கொண்டு இருந்தார்.

“கடைக்கு போன் பண்ணி பார்த்தியாம்மா..”

“அப்போ பண்ணேன்டா.. வெளிய போயிருக்கான்னு சொன்னாங்க.. சும்மா சும்மா பண்ணி கேட்டாலும் என்ன நினைப்பாங்க..” என்றவர் “என்னடா ரொம்ப பீல் பண்றானோ??” என்றார் நிஜமாகவே வருந்தி..

“ம்ம்… நீ எதுவும் நினைக்காதம்மா.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்..” என்ற நிவின் கிளம்பி அலங்கார் செல்ல, பாதி வழியில் அதிரூபன் வந்துகொண்டு இருப்பது தெரிந்தது.

‘இந்தா வர்றான்ல..’ என்று நிவின் சற்று ஓரமாய் வண்டியை நிறுத்தி அதிரூபனைப் பார்க்க, அவனோ இப்படியொருவன் அதுவும் அவனின் தம்பி அவனுக்காக நிற்பதை கண்டே கொள்ளாது, ஸ்டைலாய் தன் கேசத்தை கோதியபடி, இரவு நேர மென் காற்றில், லேசாய் அவனின் சட்டைப் பறக்க, அதனோடு சேர்த்து கோதிவிட்ட அவனின் கேசமும் பறக்க, முகத்தில் படிந்திருந்த மோன சிரிப்போடு பைக்கை விரட்டிக்கொண்டு போனான்.

 “டேய் அண்ணா…” என்று நவின் கத்தியது எல்லாம் அவனுக்குக் கேட்கவேயில்லை போல, அடுத்த நொடி நிவினும் அண்ணனை விரட்டிக்கொண்டு செல்ல, அதிரூபனோ அவர்கள் வீடு இருக்கும் சந்துபக்கம் செல்லாது வேறு வழியில் போய்க்கொண்டு இருந்தான்.

‘என்ன வழி மாறிப் போறான்..’ என்று நிவின் குழப்பியே, பைக்கை இன்னும் விரட்டி ஒருவழியாய் அதிரூபனை நெருங்கி, “டேய் அண்ணா..” என்று ஒருவழியாய் கத்தி கத்தி அவனைப் பிடித்துவிட, இருவருமே பைக்கை நிறுத்தியிருந்தனர்.

‘இவனா..’ என்றுதான் பார்த்தான் அண்ணன்காரன்..

“வீடு அந்த சைட் இருக்கு…”

“தெரியும்.. நீ போ நான் வர்றேன்..” என்றவன் முகத்தை உம்மென்று வைக்க,

“டேய் டேய் நடிக்காத.. இவ்வளோ நேரம் இளிச்சுட்டு தானே வந்த.. இப்போ என்ன..” என்று நிவினும் கடுப்புடனே கேட்க,

“இப்போ என்னடா உனக்கு.. அதான் வர்றேன் சொல்லிட்டேன்ல.. கொஞ்சம் வேலையிருக்கு..” என்ற அதிரூபனைப் பார்த்தவன் “கண்ஸ் வீட்டுப்பக்கம் உனக்கு என்ன வேலை..” என்றான் இடக்காய்.

‘ஆகா கண்டு பிடிச்சிட்டானே…’ என்று பார்த்தவன் “ம்ம்ச் எனக்கு வேலை இருக்குன்னா இப்போ ஏன் கண்மணி பத்தி பேசுற.. நீ போ நிவின் நான் வந்திடுறேன்..” என்று பொறுமையாகவே மொழிந்துவிட்டு வண்டியைக் கிளப்ப,

“நானும் வருவேன்..” என்று நிவினும் அவனோடு வர,  

“டேய் ஏன்டா இப்படி பண்ற…” என்று அதிரூபன் சலித்தாலும், நீ வந்தால் வா என்ற எண்ணமே அவனுக்கு..

அவனைப் பொறுத்தமட்டில் சும்மா அந்த பக்கம் சென்றுவருவோம் என்று.. கண்மணியைப் பார்க்கவேண்டும் போலிருந்தாலும், அதுவும் இந்த நேரத்தில் எப்படி முடியும். ஆக சும்மாவாது அந்த பக்கம் போய்விட்டு அப்படியே வீட்டிற்கு செல்வோம் என்று தான் வந்தான்.                         

கண்மணிக்கோ மனதில் ஒரு புதுவித பரவசம்.. ஏன் இப்படியொரு புன்னகை வருகிறது அதுவும் எதை நினைத்து வருகிறது இதெல்லாம் காரணமே தெரியவில்லை.. வீட்டின் நிலை, அண்ணன் சொல்லிச் சென்றது இதெல்லாம் மனதில் இருந்தாலும் அதெல்லாம் தாண்டி என்னவோ இந்த பரவசம் அவளை தன்வசப் படுத்த, விரும்பியே தன்னை தொலைக்கத் தொடங்கினாள்.

அதிரூபனின் வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்ததும் ஒருவித படபடப்பு இருந்தாலும், பின்னேயோ “ஹாய்..” என்றுமட்டும் அனுப்ப,

அதற்காகவே காத்துக்கொண்டு இருந்த அவனின் மனதோ கண்மணியின் குரலிலேயே அதனைப் படிக்க ‘டேய் அதிரூபா.. இவ்வளோ தூரம் போயாச்சா..’ என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டான்.. அதிலும் கண்மணியிடம் இப்போது நேரில் பேசினால், அவளின் முகத்தில் எப்படியான பாவனைகள் இருக்கும், இதே ‘ஹாய்..’ அவள் மெதுவாய் தயங்கி, கொஞ்சம் படபடப்போடு எப்படி சொல்லியிருப்பாள் என்றெல்லாம் கற்பனை வேறு தாறுமாறாய் அவனுள் கிளம்பியது.  

கண்மணி முதலில் கொஞ்சம் தயக்கமாகவே பதில் சொல்லத் தொடங்கியவளுக்கு, தயக்கம் தீர்ந்தாலும் அந்த இலகு இன்னும் வரவில்லை.. அதற்குள் அவனின் போனும் சார்ஜ் இல்லாது போய்விட, சிறிது நேரம் காத்திருந்தாள். அதன் பின் நேரம் போனதுதானே தவிர எதுவும் அவனிடம் இருந்து வரவில்லை..

சியாமளா வந்தவரோ “கண்மணி.. சரியா தூங்குறது இல்லையா?? சீக்கிரம் தூங்கு..” என்ருசொல்லிவிட்டுப் போக, அவளுக்கோ உறக்கமே வரவில்லை..

உருண்டு புரண்டு படுத்தும் எழுந்து எழுந்து அமர்ந்து உறங்கினாலும் ம்ம்ஹும் ஒன்றும் வேலைக்கு ஆகாது போக, அதிரூபனுக்கோ அனுப்பிய மெசேஜ்கள் எல்லாம் படிக்காது விடப்பட்டிருக்க,

‘வீட்டுக்கு வந்திருப்பாங்களோ..’ என்ற எண்ணத்தோடே கொஞ்ச நேரம் எழுந்து வந்து அவளின் அறை பால்கனியில் நின்று இரவின் அமைதியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. இது அவளுக்குப் பிடித்தமான ஒன்றும் கூட.. அவர்களின் ஏரியா இரவு ஒன்பதுமணிக்கு எல்லாம் ஒரு அமைதியாய் தத்தெடுத்துக்கொள்ளும். அதைவிட அமைதி இப்போதிருக்க, இரவு நேர பூச்சிகளின் ரீங்காரம் ஒருபுறமும், வானில் நிலவின் ஒளி ஒருபுறமும், மெதுவாய் வீசிய குளிர்ந்த காற்று ஒருபுறம் என்று எல்லாம் சேர்ந்து அவளை கண்களை மூடி சில பொழுது ரசித்து நிற்க வைக்க, திடீரென்று கேட்ட பைக்கின் சத்தம் அவளை சற்று உலுக்கிவிட்டது.

உள்ளே போய்விடுவோம் என்று திரும்பபோனவளுக்கு என்ன எண்ணமோ, போகாது  பைக் வரும் சத்தம் பார்த்து தற்செயலாய் பார்வையை சாலையில் செலுத்த, அதிரூபனோ, இவள் நிற்பாள் என்று தெரியாது இருந்தாலும் சும்மா தான் வந்தான், ஆனால் அப்படி வந்தவனுக்கோ கண்மணியின் காட்சி கிடைக்க, பைக் அவனின் கையில் படாத பாடுபட்டது..

கண்மணி நிற்பாள் என்று அவனுக்கும் தெரியாது, அதிரூபன் வருவான் என்று இவளுக்கும் தெரியாது ஆனாலும் இப்படியொரு ஏகாந்த பொழுதில் இவர்களின் சந்திப்பு நிகழ, ‘என்னடா நடக்குது இங்க…??’ என்று அதிர்ந்துபோய் பார்த்தது நிவின் மட்டுமே.

அண்ணனுக்கு பின்னேயே வந்தவனோ முதலில் கண்மணியைப் பார்க்கவில்லை.. நிவின் வந்ததையும் கண்மணி அறியவில்லை.அதிரூபனைப் பார்த்ததுமே பார்வையிலும் மனதிலும் ஒரு திடுக்கிடல், பின் ஒரு புன்னகை.. அது அப்படியே அவளின் முகத்தில் ஓட்டிக்கொண்டு, லேசாய் ஒரு பயம் கலந்த ஆவலோடு அவனைப் பார்த்து நிற்க,

அதிரூபனின் மனதோ ‘அதிரூபா உன் லவ்வுக்கு அந்த நிலா சாட்சி டா’ என்று எதையோ கிறுக்கத் தொடங்க,

‘நிலா சாட்சி இல்லைடா மடையா. உன் தம்பி நிவின் தான் இப்போதைக்கு சாட்சி..’ என்றுவந்து அவனின் மனசாட்சி சொல்லவும்,

“அய்யயோ இவன் வேற வந்தானே..”என்று திரும்பிப் பார்க்க, நிவினோ பைக்கை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு ‘என்னடா  நடக்குது இங்க…’ என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்தான்..

அண்ணன் வந்ததுகூட சரிதான் என்று ஒருவகையில் மனது ஏற்றுக்கொண்டாலும், கண்மணி நின்றிருந்ததும், இப்போதும் நின்றிருப்பதும் கூட அவனுக்கு பெருத்த ஆதிர்ச்சியே..

‘ஒருவேள கண்ஸ்…’ என்று யோசிக்கும்போதே ‘ச்சே ச்சே அவளுக்குத்தான் பிக்ஸ் ஆச்சே…’ என்று அவனுக்குள்ளே கேள்வி பதில் முட்டி மோதியது..

தெரு விளக்கின் ஒளியிலும், பைக் வெளிச்சத்திலும் அதிரூபனின் பார்வையை தொடர்ந்தவள், அங்கே நிவின் இருவரையும் ஒரு கேள்வியோடு பார்த்து நிற்பது கண்டு

‘அச்சோ..நி.. நிவின்..!!!’ என்று முழித்தாள்..

அடுத்த நொடி அங்கே அவளால் நிற்கவும் முடியவில்லை.. சட்டென்று உள்ளே போகவும் முடியவில்லை.. மாட்டிக்கொண்ட முழியோடு அதிரூபனைப் பார்க்க, அதற்குள் அறைக்குள் இருந்து சியாமளாவின் குரல்  “கண்மணி..” என்று…  

அவ்வளவு தான் கண்மணி வேகமாய், பால்கனி ஸ்க்ரீனை இழுத்துவிட்டு அறைக்குள் வர, சியமளாவோ கேள்வியாய் பார்த்துகொண்டு இருந்தார்..

“ம்மா..!!!!”

“தூங்கலையா நீ…??”

“இல்லம்மா.. அது..”

“ஹ்ம்ம் இங்க வா…” என்று மகளை அழைத்தவர், அவரும் கட்டிலில் அமர்ந்துகொள்ள, கண்மணியோ ‘என்னம்மா இது..’ என்று குழப்பமாய் பார்த்தாள்..

“இங்க வா கண்மணி…” என்று சியாமளா திரும்ப அழைக்கவும், அவரின் அருகே செல்ல,

“மனசுல எதுவும் போட்டு வருத்தப்படுறியா..??” என்றார் ஆதுரமாய்..

அம்மா என்ன கேட்கிறார் என்பது புரிந்தாலும், ஏன் கேட்கிறார் என்று புரியாமல் அதே புரியாத பார்வை பார்த்து, “இல்லையே…” என்று வேகமாய் தலையை ஆட்ட,

“ம்ம் உன் முகம் பார்த்தாலே தெரியுதே.. எதோ போட்டு உன்னை நீ டென்சன் பண்ணிட்டு இருக்க… இங்க நடந்தது எல்லாம் நீ எதுவும் நினைக்காத கண்மணி.. கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்…” என்று கண்மணி ஒருவேளை தனக்கு பேசி முடித்த திருமணம் நின்றுபோனது எண்ணி வருந்துகிறாளோ என்று சியாமளா பேச,

அவளோ, அதிரூபன் மீதிருக்கும் பிடிப்பை எண்ணி தனக்குள்ளே ஒருவித போராட்டத்தில் அல்லவா இருக்கிறாள். அவனைப் பிடித்திருக்கிறது என்று தெள்ளத் தெளிவாய் தெரிந்தாலும், இதற்கு பிறகு என்ன?? என்ற கேள்வி அவளுக்குள்ளே பெரும் யோசனையை கொடுத்திருந்தது..

அதிலும் இப்போது சியாமளா வந்து மகளிடம் பேசவும், ஒருவித குற்றவுணர்வு வேறு, அனைவரையும் ஏமாற்றுகிறோமோ என்று.. காதல் என்று உணர்ந்து சரியாய் ஒருநாள் கூட ஆகவில்லை, அதற்குள் தான் எத்தனை எத்தனை சிந்தனைகள்..

பதிலே சொல்லாது கண்மணி, சியாமளாவின் மடியில் படுத்துக்கொள்ள, “என்னடா..??” என்று கேட்டபடி சியாமளாவும் மகளின் முதுகில் லேசாய் தட்ட, கண்மணிக்கோ கண்ணை கரித்தது..

பேசாமல் அம்மாவிடம் தன் மனதில் இருப்பதை சொல்லிவிடலாமா?? என்றுகூட தோன்ற, அடுத்தநொடி அப்படியே தன்னை அடக்கிக்கொண்டாள். இப்போது சொன்னால் அது தேவையில்லாது குழப்பத்தையும் மன வேதனையையும் கொடுக்கும் என்று அமைதியாய் அப்படியே படுத்திருந்தவளுக்கு அதிரூபன் கிளம்பியிருப்பானோ என்று மனது போனது..

‘பைக் சத்தம் கேட்கலையே.. ஒருவேள வெய்ட் பண்றாங்களோ…’ என்று தோன்றினாலும், அதுவும் செய்ய முடியாது அப்படியே சியாமளாவின் மடியில் படுத்திருந்தாள்..

காதலிக்கிறேன் என்று காதலிப்பவர்களிடம் சொல்வதற்கு  பெறும் அவஸ்தையும் ஆர்ப்பாட்டமும் ஏற்படும் என்றால், அதைவிட பெரிய போராட்டம் நிகழும் பெற்றவர்களிடம் சொல்வதற்கு..

கண்ணனுக்கு அந்த நிலை இருந்தது இப்போ கண்மணிக்கு..

அங்கே வெளியே அதிரூபனோ நிவின் நிற்பதால் தான் கண்மணி உள்ளே சென்றுவிட்டாள் என்று எண்ணிக்கொண்டு தம்பியை முறைக்க,

“என்ன அதான் உள்ள போயிட்டா.. சாரி சாரி கண்மணி அவங்க உள்ள போயிட்டாங்கல்ல.. பின்ன என்ன கிளம்பு வா..” என்று நிவின் அழைக்க,

“உன்னைப் பார்த்துத்தான்டா உள்ள போயிட்டா..” என்றான் கடுப்பாய்..

“ஆ!!!!” என்று நிவின் பார்த்தவன் “எத்தனை நாளா இது நடக்குது??” என்று கேட்டுக்கொண்டே வண்டியைக் கிளப்ப, “இன்னிக்குதான்…” என்றபடி அதிரூபனும் சொல்லிக்கொண்டே அவனின் பைக்கை கிளப்பினான்..

‘இன்னிக்கிருந்தா.. இன்ஸ்டன்ட் லவ்வா இது…… திடீர்னு எப்படி..’ என்று யோசனையோடு நிவின் பார்க்க,

“ரோட்ட பாத்து ஓட்டுடா.. அப்புறம் என்னை பாரு..” என்ற அதிரூபனுக்கோ ‘எப்போடா வீட்டுக்கு போவோம் கண்மணிக்கு மெசேஜ் செய்வோம் ..’ என்று இருந்தது..

நிவினுக்கு கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும், வீட்டிற்கு போய் கேட்க்போம் என்று பொறுமையாகவே வந்தான்.. வீட்டிற்கு போனாலோ மஞ்சுளா கவலையாய் ஹாலில் ஆமர்ந்திருக்க, உள்ளே நுழையும்போதே

“அம்மாக்கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்லாதடா..” என்றுவிட்டான் அதிரூபன்.

நிவின் பதிலே சொல்லாது உள்ளே வர, பார்வையை திருப்பிய மஞ்சுளாவோ அதிரூபனைக் கண்டதும் “என்னடா இவ்வளோ நேரம் பண்ணிட்ட..??” என்றார் பாவமாய்..

ஒருவேளை மகன் வருந்துகிறானோ என்று எண்ணியே மஞ்சுளாவினுள் ஒரு வருத்தம் ஏற்பட்டுவிட, அது அவரின் முகத்திலும் தெரிய, அதிரூபனுக்குத் தான் இப்போது அம்மாவைப் பார்க்க சங்கடமாய் போனது.

“என்னம்மா…” என்று அவரின் அருகே அமர,

“ஏன்டா இப்படி எப்பவும் போல வீட்டுக்கு வந்தா என்ன??” என்றார் மஞ்சுளாவும்.

நிவினோ ‘பாரு பாரு..’ என்று குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, “இல்லம்மா அது…” என்று அதிரூபன் பதில் சொல்லுமுன்னே,

“நீ ஒன்னும் சொல்லவேணாம்.. முதல்ல சாப்பிடு.. எல்லாம் சரியாகிடும்..” என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொண்டே அவனுக்கு உண்ண எடுத்துவர,

அதிரூபனோ ‘சீக்கிரம் எல்லாம் சரியாகிடனும்..’ என்று தானும் நினைத்துக்கொண்டான்.

நிவினோ முகத்தை உர்ரென்று வைத்து அமர்ந்திருக்க “நீ ஏன்டா இப்படி எதையோ சாப்பிட்ட குரங்கு போல போல உக்காந்திருக்க… தூங்குறதுன்னா தூங்கு போ…” என்று மஞ்சுளா சொல்லவும், அதிரூபன் பக்கென்று சிரித்து விட,

“தின்னுட்டு வா… உனக்கு இருக்கு..” என்று சொல்லிக்கொண்டே நிவின் செல்ல,

“அவனை விடு நீ சாப்பிடு..” என்று மஞ்சுளாவும் சொல்ல, அதிரூபன் உண்டு முடித்தவனோ “ம்மா நீ எதுவும் நினைக்காத.. நான் நல்லாத்தான் இருக்கேன்..” என்றான் சிரித்தபடி..

மஞ்சுளா நம்பாமல் பார்க்க “ம்மா நிஜமா சொல்றேன்.. நான் எதுவும் நினைக்கல.. அதுனால நீயும் எதுவும் நினைக்காத.. சரியா..” என்று அவரின் தலையை பிடித்து ஆட்ட

“ஏய் படவா.. அதுக்குன்னு என் தலையில கை வைப்பியா.. நீ சந்தோசமா இருந்தா சரிதான்.. ஆனா நம்ம சந்தோசத்துக்கு காரணம் நியாமா இருக்கணும்..” என,

“சரி சரி போ நிம்மதியா தூங்கும்மா…” என்று அவரின் தோளில் கைவைத்து தள்ளியபடி சென்று அவரின் அறையில் விட்டு தன்னறைக்கு வர, அங்கேயோ நிவின் ‘வா வா..’ என்று அமர்ந்திருந்தான்..

“டேய்.. என்னடா உனக்கு பிரச்சனை??”

“எனக்கென்ன பிரச்சனை.. நீ எந்த பிரச்சனைலையும் சிக்காம இருந்தா சரிதான்..”

“ஏன் ஏன்…?? நான் என்ன பண்ணேன்..” என்று கேட்டுவிட்டு, அதிரூபன், உடை மாற்றி வர,

“ஏன்னு உனக்குத் தெரியாதோ.. டேய் கண்ஸ்க்கு ஏற்கனவே பிக்ஸ் ஆகிடுச்சுடா அண்ணா..” என்றான் கடுப்பாய்..

“பிக்ஸ் ஆச்சு.. ஆனா இப்போ ஆகலை…” என்று அதிரூபன் சொல்ல,

“என்னது??!!” என்றான் புரியாது..

“ஆமாடா.. கொஞ்சம் ப்ராப்ளம் ஆகிடுச்சு..” என்று அதிரூபன் நடந்த அனைத்தையும் சொல்ல, நிவினோ ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு..’ என்று எண்ணிக்கொண்டே,

“அப்போ.. கண்ஸ் தான் எனக்கு அண்ணியா…??” என்றான் பாவமாய்..

“கண்டிப்பாக.. நிச்சயமாக உறுதியாக…” என்று அதிரூபன் பாவனைக் காட்டி சொல்ல,

“போதும் போதும் சகிக்கல.. நீ பேசியே கொல்லுவ.. கண்ஸ் பேசாம கொல்லுவா.. ஹ்ம்ம் ரெண்டும் சேர்ந்து…. அட ஆண்டவா…” என்று மேலே நோக்கி கை எடுத்து கும்பிட்டவனை, தலையணை வைத்து ஒரு மொத்து மொத்தி,

“போ போ.. போய் தூங்குற வழிய பாரு..” என்று விரட்டினான் அதிரூபன்..

“தூங்காம.. உன்னை மாதிரி பினாத்துவேன்னு நினைச்சியா…” என்று எழுந்தவன் “அம்மாக்கிட்ட ஏன் சொல்லவேணாம் சொன்ன??” என்றான்..

“கண்மணி வீட்ல இன்னும் எதுவும் சரியாகலை டா.. இப்போ அம்மாக்கிட்ட சொன்னா, கண்டிப்பா உடனே மாமாவ வரசொல்லி அங்கே போய் பேசறோம் சொல்வாங்க.. நமக்கு சரிதான்.. ஆனா அங்க நிலைமை கொஞ்சம் சரியாகணுமே….” என்று அதிரூபன் சொல்வதும் சரியாகவே நிவினுக்குப் பட்டது.

மஞ்சுளா அப்படித்தான் செய்வார். உடனே பேசி முடிப்போம் என்பார்.. கல்யாணம் என்பார்.. இதெல்லாம் புரிந்தாலும் வேண்டுமென்றே,

“ஹ்ம்ம் இப்போவே மாமனார் வீட்டுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பிச்சிட்ட..” என்று கிண்டலடித்தபடி, அதிரூபனிடம் மேலும் இரண்டு அடிகளை வாங்கிவிட்டு தான் சென்றான்..

நிவின் போனதும், விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்த அதிரூபனுக்கோ கண்மணியோடு பேசவேண்டும் போலிருக்க, கடையிலேயே சார்ஜ் போட்டுவிட்டு வேலை முடித்து வந்ததுகூட நல்லது என்றுதான் தோன்றியது.. இதெல்லாம் சின்ன சின்ன விஷயம் தான் ஆனாலும் இப்போதோ அனைத்துமே எதுவோ பெரும் சாதனை போலிருந்தது..

போனை ஆன் செய்துப் பார்த்தவனுக்கு கண்மணியின் மெசேஜ்கள் எல்லாம் வந்து வரிசையாய் நிற்க,

‘பார்ற இத்தனை அனுப்பியிருக்காளா…’ என்றபடியே அவளுக்கு பதில் அனுப்ப, கண்மணியோ அங்கே சியாமளாவின் மடிமீதே உறங்கிப் போனாள்..

இப்போது உறக்கம் துறப்பது அதிரூபனின் முறையாக, திரும்ப ஒருமுறை அன்று நடந்த அனைத்தையும் மனதினில் ஓட்டிப் பார்க்க, கண்ணன் ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. யாரையும் சட்டென்று நம்பும் நிலையில் அவர்கள் யாரும் இல்லை என்பது அவனுக்கு நன்கு உணர முடிந்தது.

கண்மணி மனதில் ஆரம்பத்தில் இருந்தே வருண் மீது எவ்வித அபிப்ராயமும் இல்லை என்றதாலும், தன் மீது எதோ ஒரு இடத்தில் அவளின் மனதில் மெல்லியதாய் ஒரு சலனம் இருந்ததாலும் மட்டுமே இப்போது இதெல்லாம் நடந்திருக்கிறதும் தோன்ற, அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி அப்படியே உறங்கியும் போனான் அதிரூபன்..

கண்மணி காலையில் எழ வெகுநேரம் ஆகிவிட, சியமாளாவும் எழுப்பவில்லை.. ஆனால் தீபாவின் போன் கால் எழுப்பிவிட்டது.. தூக்க கலக்கத்திலேயே “தீப்ஸ்…” என்றுசொல்ல,

“நான் உன்மேல ரொம்ப கோபமா இருக்கேன் கண்ஸ்…” என்ற அவளின் குரலில், முகம் சுருக்கியவள்,

“என்னாச்சு??”என்றாள், ‘என்னை தூங்க விடு…’ என்ற தொனியில்..

“என்னாகனும்.. இவ்வளோ நடந்திருக்கு.. என்கிட்டே சொன்னியா.. இந்த பெரிய கண்ஸ் கூட ஒன்னுமே சொல்லல.. நானா வார்த்தை கொடுத்து கொடுத்து பேச்சு வாங்கின அப்புறம் சொல்றான்.. எல்லாத்தையும்…” என்று தீபா கத்த,

“என்ன தீப்ஸ்…” என்றாள் நிஜமாகவே கண்மணி புரியாது..

“என்ன டி புரியாத மாதிரி பேசுற.. எல்லாம் உன் லவ்ஸ் மேட்டர் தான்…” என, கண்மணியோ அடித்துபிடித்து எழுந்து அமர்ந்தாள்,

“என்னது???!!” என்று கேட்டு..

“என்ன ஷாக்கா இருக்கா?? உனக்கு என்கிட்டே சொல்லணும் தோனிச்சா??”

…..

“இப்போ மட்டும் பேச்சு வராதே… பெரிய கண்ஸ் கூட வெளிப்படையா சொல்லல.. பின் அவன் பேசினது வச்சு நானே புரிஞ்சுக்கிட்டேன்..”

“ஓ…!!!”

“என்ன ஓ…?? உனக்காக சப்போர்ட் எல்லாம் பண்ணிருக்கேன்.. எதுனாலும் பார்த்து செய் எனக்கு..” என்று தீபா சொன்ன விதத்தில் கண்மணிக்கு சிரிப்பு வந்திட,

“என்ன டி சிரிக்கிற.. அப்பாவும் அம்மாவும் உங்க வீட்டு வர்றாங்க.. அடுத்து என்னன்னு பேச.. நீயும் ரெடியா இரு.. நான் வந்து வெளிய கூட்டிட்டு போறேன்…” என்றதும் வேகமாய் கண்மணி

“எங்க??” என்று கேட்க,

தீபாவோ “கண்டிப்பா அலங்காருக்கு இல்ல..” என்று சொல்லி சிரித்தாள்..         

    

    

                                  

Advertisement