Advertisement

தூறல் – 14

கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற அந்த குரல்,

“ஓகே…” சொன்ன அந்த குரல் அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க, முதலில் அதிரூபன் கோபத்தில் கத்தியது எல்லாம் மறந்தே போனது எனலாம்.

‘என்னாச்சு இவருக்கு..’ என்றெண்ணியவள், திரும்ப திரும்ப அவனுக்கு அழைத்துப் பார்க்க, அவன்தான் அலைபேசியை அமர்த்தியல்லவா வந்திருந்தான்.

பின் எப்படி அழைப்பு விடுக்க முடியும்?? அழைத்து பேச முடியும்??

ஆனாலும் கண்மணியோ, முகத்தினில் ஒரு கலக்கத்துடன், கையில் இருந்த அலைபேசியை ஒருவழி செய்துகொண்டு இருந்தாள்

அதேநேரம் கண்ணன் அவளைத் தேடி “கண்ஸ்…” என்றபடி வர, அண்ணன் வந்ததோ தன்னை அழைத்ததோ எதுவுமே அவளுக்கு கவனத்தில் வரவில்லை..

“கண்ஸ்…” என்று திரும்ப அவன் அழைக்க, அவளோ அதிரூபனுக்கு அழைத்துப் பார்ப்பதே வேலையாய் நிற்க,

கண்மணியைப் பார்த்த கண்ணனோ ‘என்னாச்சு இவளுக்கு.. இவ்வளோ டென்சனா யாருக்கு கால் பண்றா??’ என்றெண்ணியபடி “கண்ஸ்…” என்று அவளின் தோளில் தட்ட,

“ஹா…” என்று உலுக்கித் திரும்பினாள் கண்மணி..

“ஹே.. என்னாச்சு?? எதுக்கு இவ்வளோ டென்சன்.. முகமெல்லாம் வேர்த்து இருக்கு…” என்று கண்ணன் கேட்கும் போதே கண்மணி வேகமாய் முகத்தைத் துடைத்தவள்,

“இல்லையே..” என்று மறுக்க, கண்ணனின் பார்வையோ அப்படியே தங்கையின் முகத்தில் தங்கிவிட,

“அ.. அது..” என்று இழுத்தவள் “சொல்லுண்ணா.. எ.. என்ன வேணும்…” என்று திக்கித் திணற, கண்ணனோ இப்போது வெளிப்படையாகவே முறைத்தான்.

அண்ணன் தன்னை கண்டுகொண்டான் என்று அவளுக்கும் புரிந்திட, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள,

“என்னாச்சு கண்மணி… எதுக்கு எப்படியோ இருக்க??” என்றான் நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் எனும்விதமாய்.

“எ.. என்னாச்சு…??”

“அதைதான் நான் கேட்கிறேன் என்னாச்சு???”

“இ.. இல்ல…” என்று கண்மணி ஆரம்பிக்கும்போதே “கண்மணி…” என்று முறைத்தான் கண்ணன்.

“யாருக்கு இவ்வளோ டென்சனா கால் பண்ணிட்டு இருக்க??”

….

“எதுவும் ப்ராப்ளமா???”

….

“கண்மணி… பதில் சொல்றியா இல்லையா நீ??” என்று கண்ணன் கத்த,

“மெதுவாண்ணா…” என்று குரலில் அழுத்தம் காட்டியவள், “அ.. அது.. அவ.. அவர்.. அதிரூபனுக்கு கால் பண்ணேன்…” என்றுவிட்டாள் ஒருவழியாய்.

சொல்லிவிட்டாள் தான். ஆனால் உள்ளே இருந்த பயம் கூடிக்கொண்டே போனது.. அதிரூபனுக்கு என்னானதோ என்று ஒருபுறம் இருக்க.. இப்போது அண்ணன் என்ன சொல்வானோ என்றும் இருக்க, கண்மணிக்கு திரும்ப வியர்க்கத் தொடங்க,

கண்ணனோ “அதிரூபனா??!!!!” என்றான் குழப்பமாய்..

“ம்ம்… அ.. நிவினோட அண்ணா.. அன்னிக்கு ஷாப்ல பார்த்தோமே.. அலங்கார்ல…”

“ஓ…!! அவனுக்கு எதுக்கு நீ கால் பண்ணனும்??”

“வந்து.. அதுண்ணா…” என்றவள், பின் என்ன நினைத்தாளோ, மனதில் ஒரு முடிவோடு, அதிரூபனை கோவிலில் பார்த்தது, அவனுக்கு அடிபட்டிருந்தது, அவனுக்கு பெண் பார்த்து பின் நின்றது, பின் இவளுக்கு தைரியம் சொல்லும்விதமாய் பேசி அவனின் எண் கொடுத்தது என்று எல்லாம் சொல்லிட,

கண்ணனின் பார்வை, அவளின் ஒவ்வொரு செய்திகளுக்கும் மாறிக்கொண்டே போனது. ஆனால் கண்மணி இப்போது அதிரூபன் பேசும்போது அவன் கோவப்பட்டதையும், அவளைப் பார்க்கவேண்டும் என்றதையும் சொல்லாமல் விட்டுவிட,

“சரி அதுக்கேன் இப்போ இவ்வளோ  டென்சனா அவனுக்கு கால் பண்ணனும்??” என்றான் கண்ணன் ஒருமாதிரி குரலில்..

“பேசிட்டு இருக்கும்போது கால் கட்டாகிடுச்சு.. அதான்…”

“அவனோட ஏன் நீ பேசணும்…”

“இ.. இல்ல.. அது.. ஜஸ்ட் ப்ராப்ளம் சால்வ்ட்னு சொல்ல…”

“ம்ம்ம்.. அதுக்கேன் இப்படி ரியாக்ட் பண்ற கண்ஸ்.??” என்ற கண்ணனின் கேள்விக்கு அவளிடம் பதிலே இல்லை..

கண்மணி பதில் சொல்லத் தெரியாது அப்படியே முழித்து நிற்க, கண்ணனும்  சொல்லும் மட்டும் நானும் இப்படியே நிற்பேன் என்று நிற்க, நேரம்  தான் கடந்ததே தவிர பதிலொன்றும் அவளிடம் இருந்து வரவில்லை. வரவில்லை என்ன வரவில்லை அவளுக்கு என்ன சொல்வது என்பது தெரிந்தால் தானே எதையாவது சொல்லுவாள்.

அவளே கண்ணனின் கேள்வியில் தன்னை கேள்விக் கேட்டுக் கொண்டு இருக்க, கண்ணனுக்கோ, இந்த ஒரு விசயத்தில் அதுவும் இத்துனூண்டு நேரத்தில் கண்மணியிடம் இத்தனை மாற்றங்களா என்று ஆச்சர்யமாய் இருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

எந்த தைரியத்தில் வீட்டில் நடப்பவைகளை எல்லாம் அந்த அதிரூபனிடம் சொல்லியிருக்கிறாள்?? விபரம் அறியாதவள் அல்ல.. யாரிடமும் அத்தனை எளிதில் நெருங்குபவளும் அல்ல, அப்படியிருக்க இதெப்படி சாத்தியம் என்ற எண்ணம் அவனைப் போட்டு படுத்த, அன்று அலங்கார் சென்றிருக்கும் பொது மனதில் தோன்றிய அதே எண்ணம் தான் இப்போதும்.

இதைப் பற்றி கண்மணியிடம் பேசியே தீரவேண்டும் என்றும் தோன்ற, சரியாய் அதே நேரம் சடகோபனின் “கண்ணா…” என்றழைப்பு  இருவருக்குமே கேட்டது.

அதற்குள்ளே சியாமளா உள்ளே வந்து “என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?? இன்னும் ரூம்ல உக்காந்துட்டு கூடி கூடி அப்படி என்ன ரகசியம்?? ஊர்ல இருந்து உங்க அத்தை மாமா எல்லாம் வந்தாச்சு.. போ.. போய் பேசுங்க..” என்று விரட்ட,

“ம்ம்..” என்று கண்மணி கிளம்ப,

“ம்மா நீ போ நாங்க வர்றோம்..” என்ற கண்ணன், சியாமளா முறைத்தபடியே செல்லவும்,               

“கண்மணி… நீ இதெல்லாம் எதுவும் யோசிக்காத.. வீட்ல கெஸ்ட் இருக்கப்போ உன் பேஸ்ல எதுவும் காட்டாத.. அப்படியே தெரியுது.. ரிலாக்ஸ்.. விசேசம் எல்லாம் முடியட்டும்.. என்னனு பேசிக்கோ..” என்றவன், “தேவைன்னா பேசு..” என்றும் அழுத்தி சொல்ல,  

“ம்ம் சரிண்ணா…” என்றாள் வேகமாய் தலையை ஆட்டி.

“நீ கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வா..” என்றவன் சென்றுவிட, கண்மணிக்கோ இன்னமும் மனது சமன் ஆகவில்லை.

கண்ணன் சொன்னது எல்லாம் சரிதான். ஆனாலும் மீண்டும் ஒருமுறை முயற்சிப்போமா என்று திரும்ப அழைத்துப் பார்க்க, எப்பயனும் இல்லை.

“ச்சே…” என்றவளுக்கு அவனோடு பேசினால் மட்டுமே தெளிவு வரும்போல் இருந்தது. அவனின் அந்த தொய்ந்து போன குரலே திரும்ப அவளுள் ஒலிக்கத் தொடங்க,

‘அய்யோ…’ என்று தன் மனதிற்கு பயந்தே, கண்மணி வேகமாய் ஹாலுக்கு சென்றுவிட்டாள்.

அங்கே நிவினோ ‘கண்மணி…’ என்ற பெயரை கேட்டு ஆடிப் போயிருந்தான்.. அதிரூபன் ஒருத்தியை காதலிக்கிறேன் என்றதைக் காட்டிலும் அது கண்மணி என்று சொன்னது தான் அவனுக்கு மிக மிக அதிர்ச்சியாய் இருந்தது.

‘கண்ஸா…. இதெப்படி முடியும்??’ என்ற பார்வையே அவனின் அண்ணன் மீதிருக்க,

அதிரூபனோ “நிவின்..” என்றான் மெதுவாய்..

அவனோ, எதிரே இருப்பவனின் அழைப்பிற்கு பதில் சொல்லாது “கண்ஸா???!!!” என்று நம்பாது கேட்க,

“ம்ம்ச்…” என்ற சலிப்பு மட்டுமே அதிரூபனிடம்..

“என்னண்ணா???!!!”

“அவளுக்கு கண்மணி சொன்னாதான் பிடிக்கும்…” என,

நிவினுக்கோ கண்கள் அப்படி விரிய, அதிரூபனோ வாயை குவித்து ஒரு ஆழ்ந்த பெரு மூச்சை வெளியிட, நிவினுக்கோ என்ன சொல்வது என்ன கேட்பது என்று ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால் அதிரூபன் கடைசியாய் சொன்னதை வைத்து “அவளுமா??!!!!” என்று அவனையும் அறியாது கேட்டுவிட,

“என்ன அவளுமா??!!” என்றான் அதிரூபன்..

“அ.. அது கண்.. அவளுமா லவ் பண்றா??”

“நிவின்… முதல்ல அவ இவன்னு சொல்றதை விடு..” என்ற அதிரூபனை இப்போது நிவினோ ‘முத்திடுச்சு….’ என்றுதான் பார்த்தான்..

தம்பியின் பார்வை புரிந்தவனோ, அந்த நேரத்திலும் லேசாய் சிரித்துவிட, “அண்ணா…!!!!” என்று அதட்டினான் நிவின்..

“என்னடா??!!!”

“நீ நீ என்ன பண்ணிட்டு இருக்க?? அவ.. ம்ம்ச் கண்மணிக்கு வேற ஒருத்தர் கூட பிக்ஸ் ஆகிடுச்சு.. ஆ.. ஆனா…”

“ஆனா??!!!” என்று திரும்ப கேட்ட அதிரூபனின் முகம் மீண்டும் வலியில் சுருங்க,

“கண்மணி, கடைக்கு வந்தே இருக்க கூடாதுடா.. என்கிட்ட பேசியே இருக்க கூடாதுடா…” என்றவன், அதெல்லாம் திரும்ப மனதினுள் ஓட்டிப் பார்ப்பது போல் கண்களை மூடிக்கொள்ள,  நிவினுக்கோ தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.

‘ரொம்ப டார்ச்சர் பண்றானே…’ என்று பார்த்தவன், “ம்மா…” என்று சத்தமாய் மஞ்சுளாவை அழைக்க,

“டேய் ஏன் டா???” என்றான் அதிரூபன் லேசாய் கடிந்து..

“நீ நான் பேசினா எல்லாம் வழிக்கு வரமாட்ட.. உன் வலிக்கு மஞ்சுளா தான் லாயக்கு..” என்றவன்,

திரும்ப “ம்மா… இங்க வாயேன்…” என்று இன்னும் சத்தமாய் அழைக்க,

மஞ்சுளாவும் “என்னடா?? என்னாச்சு??” என்று கொஞ்சம் பதறியே வர, அதிரூபனுக்கு அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது. தான் நிஜமாகவே எல்லோரையும் படுத்துவதாய் பட,     

மஞ்சுளா அருகே வந்ததுமே “ம்மா…” என்று அவரின் கரங்களைப் பற்றியவன் “சாரிம்மா…” என்று சொல்லிக்கொண்டே அவரை தன்னருகே அமர வைத்துவிட்டான்.

நிவினோ இதெல்லாம் என்ன கொடுமை என்று பார்க்க, மஞ்சுளாவோ “என்னங்கடா ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாச்சா??” என,

“முடிவா??? வந்த மாதிரிதான்.. நீயே பேசிக்கோ இவன்கிட்ட…” என்று நிவின் கடுப்பாய் சொல்லவும் மஞ்சுளா திரும்ப மூத்த மகனின் முகம் பார்க்க,

“நிவின் நீ போ நான் பேசிக்கிறேன்..” என்றான் அதிரூபனும் முடிவாய்.

“நான் ஏன் போகணும்… நானும் இருப்பேன்…”

“டேய்.. நீ போடா.. அதான் அவன் பேசுறேன் சொல்றான்ல…”

“தோடா… அப்போ மட்டும் நான் வேணும்.. இப்போ வேணாமா???” என்று நிவின் பேச பேச, அதிரூபனுக்கு கொஞ்சம் யோசிக்க முடிவதாய் இருந்தது.

ஆனாலும் இப்போது கண்மணி மீது எக்கோபமும் இல்லை. தன் மீதே ஒரு கோபம்.. காதல் என்று அறிந்த நொடி, அதை தெரிவிக்க வேண்டும்தானே.. அதைவிட்டு நேரம் வர காத்திருந்தால் என்ன பயன்?? இதோ இப்படி அமர்ந்திருக்க வேண்டியது தான்..      

‘காலம் இன்னும் கடக்கவில்லை அதிரூபா…’ என்று அவனின் மனது சொல்ல, அதிரூபனோ, மஞ்சுளாவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான்..

அவருக்குத் தான் மகன் மீது ஏற்கனவே சின்னதாய் ஒரு சந்தேகம் இருந்ததுவே. இன்று அவன் வாயாலே அது உண்மையாகிவிட, மஞ்சுளா அப்படியே அமர்ந்திருந்தார்..

அதிரூபனின் மன உணர்வுகள்.. குழப்பங்கள்.. தயக்கங்கள் எல்லாம் அவருக்குப் புரிந்தது தான். ஆனால் கண்மணிக்கு நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டார்கள் என்றதும் இனி இதில் என்ன செய்ய முடியும் என்று அவருக்கு தெரியவில்லை..

அங்கே சென்று இல்லை இல்ல என் மகன் உங்கள் பெண்ணை விரும்புகிறான், நிச்சய தேதி தானே பேசி இருக்கிறீர்கள்.. செய்துவிடவில்லையே.. ஆகையால் என்று சம்பந்தம் பேச முடியுமா என்ன??

விரட்டிட மாட்டார்களா என்ன??

‘எப்போ வந்து சொல்றான்.. எத்தனை தடவ கேட்டிருப்பேன்…’ என்றெண்ணியவர்,

“ஏன் இதை அந்த பொண்ணு கல்யாணத்தப்போ சொல்றது..” என்றார் நக்கலாய்..

அம்மா செமத்தியாய் அதிரூபனை திட்டுவார் என்று நிவின் பார்த்திருக்க, அவரோ ‘நீ முன்னாடியே சொல்லிருந்தா பேசிருக்கலாம்..’ என்பது போல் பேச,

“ம்மா என்னம்மா நீ…” என்றான் வேகமாய்..

“என்னடா…”

“அவன் என்ன சொல்லிட்டு இருக்கான்.. நீ என்ன இப்படி பேசுற..?? அந்த பொண்ண பிடிச்சு திட்டிருக்கான்..” என,

“பிடிச்சதுனால தானேடா திட்டிருக்கான்..” என்றார் அவரும் வேகமாய்..

“யம்மா..!!!!!”

“சரி.. இப்போ அதுக்கென்ன செய்ய.. வர்றியா போய் இவன் பேசினதுக்கு நம்ம மன்னிப்பு கேட்டு வருவோம்..” என்று மஞ்சுளா அடுத்த அடி கொடுக்க.

‘ஆஹா…!!!!’ என்று நிவின் முழிக்கத் தான் முடிந்தது..

“இவன்தான் நேரம் காலம் இல்லாம சொதப்பிட்டு உலர்றானா?? நீயுமாடா… முன்னாடி சொல்லிருந்தா கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்.. ஆனா இப்போ இதெல்லாம் நினைக்கக் கூட முடியாது.. அந்த பொண்ணுக்கு பிடிச்சு பொய்தானே அந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கா.. அப்படியிருக்கப்போ இவன் தான் மனசை மாத்திக்கணும்..” என்றவர்,

“நீ கிளம்பி வெளிய வா… ரூபன் நீ இன்னும் கூட தூங்கு.. எதையும் யோசிக்காத.. இனிமே யோசிக்க எல்லாம் எதுவுமில்லை..” என்று போகிற போக்கில் சொன்னவர், நிவினை இழுத்துக்கொண்டே வெளியில் சென்றுவிட்டார்..

அதிரூபனோ இன்னமும் அப்படித்தான் அமர்ந்திருந்தான்.. எதுவுமே தோன்றவில்லை. அப்போ அவள் பார்த்தது பேசியது எல்லாம்??

‘என்னை பார்க்கிறப்போ அவ பேஸ்ல டக்குனு ஒரு ரியாக்சன் வந்து போகுமே.. அதெல்லாம் ஒன்னுமில்லையா???’ என்று அவனின் நொந்து போன காதல் மனம் பிடில் வாசிக்கத் தொடங்கியது.

மஞ்சுளாவோ வெளியே வந்தவர் நிவினிடம் “என்னடா இப்படி சொதப்பி வச்சிருக்கான்???” என்று கேட்க,

“யம்மா..!!!” என்று வாயில் கை வைத்துவிட்டான் நிவின்..

“என்னடா???”

“இப்போ நீ என்ன ரோல் பண்ற?? அவனுக்கு சப்போர்ட் பண்றியா இல்லை திட்றியா??”

“ஹ்ம்ம்.. பண்ணது எதுவும் உருப்படியில்லை.. இதுல என்ன சப்போர்ட் பண்ண?? பாவமாதான் இருக்கு.. அவனா எல்லாத்தையும் உள்ள போட்டுக்கிட்டான் போலடா.. முன்னாடி இருந்தே இப்படிதானே…” என,

“ஹ்ம்ம் இப்போ சொன்னது கூட அவனையும் மீறி தான் ம்மா.. இல்லைன்னா இதையும் சொல்லிருக்க மாட்டான்..” என்று நிவினும் வருந்த,

அங்கே கண்மணி வீட்டிலோ, உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராய் வந்துகொண்டு இருக்க, கண்ணன் தீபா நிச்சய ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாய் சந்தோசமாய் நடக்கத் தொடங்கியது.

கண்மணிக்கு ஆரம்பத்தில் மனதினில் தடுமாற்றங்கள் நிறைய இருந்தாலும், வேலைகள் அவளை சூழ்ந்துகொள்ள, அதுவும் அவளுக்கும் அடுத்த வாரம் நிச்சயம் இருக்கையில், வந்திருந்தவர்கள் எல்லாம்,

‘என்ன கல்யாண பொண்ணே..’ என்று சொல்லி, எதையாவது பேச, அவளுக்கு நேரம் செல்ல செல்ல, கொஞ்சம் இயல்பாய் இருக்க முடிந்தது.

கண்ணன் சிறிது நேரம் கண்மணியை அவ்வப்போது பார்த்துகொண்டு இருக்க, அவள் இயல்பாய் இருக்கத் தொடங்கவும் தான் மற்றதைப் பார்த்தான்.

அன்றைய இரவில் தீபா கூட கண்ணனோடு பேசுகையில் “சின்ன கண்ஸ்க்கு என்னாச்சு?? என்கிட்ட பேசவேயில்லை அவ..” என்று கேட்க, கண்ணனால் இதை சொல்ல முடியுமா என்ன??

தீபாவிடம் சொன்னால், ஒன்று அதை நேரடியாய் கண்மணியிடமே கேட்பாள்  என்று தெரியும், இல்லையோ தேவையில்லாது அவளை ரொம்பவும் பேசி குழப்பிடுவாள் என்றும் தெரியும்.

ஆக அதெல்லாம் சொல்லாது “வீட்ல நிறைய கெஸ்ட்.. ஒன் வீக் எல்லாம் இங்கதான். சோ கண்ஸ் கொஞ்சம் பிசி..” என,

“ஓ.. சரி சரி.. ஆமா அடுத்த வாரம் அவளுக்கு நிச்சயம்ல..” என்றவள்,

“ஹேய்.. நானும் வரலாம்ல..” என்றாள்.

“லூசு உங்க வீட்ல வந்து இன்வைட் பண்ணுவாங்க..”

“ம்ம்… பேசாம ரெண்டு எங்கேஜ்மென்ட்டையும் சேர்த்தே பண்ணிருக்கலாம்..” என்று தீபா சொல்ல, கண்ணனுக்கோ இன்னமும் வருணை இந்த வீட்டின் மாப்பிள்ளையாக, கண்மணியின் வருங்கால கணவனாக ஏற்றுகொள்ள முடியவில்லை.

அவனிடம் என்னவோ ஒரு விஷயம் முரணாய் இருப்பதாகவே பட,

‘கடவுளே இதென்ன நான் கண்மணிய விட குழம்புறேன்..’ என்று தன்னை தானே உலுக்கியவன், தீபாவோடு வேறு பேச ஆரம்பித்தான்.

கண்மணி வீடோ விசேஷ களிப்பில் இருக்க, அதிரூபன் வீடோ மௌன மொழியில் இருக்க, யார் எப்படி இருந்தாலும் நான் என் பணியை செய்வேன் என்று காலம் செல்ல, கண்ணன் தீபா நிச்சயதார்த்தம் பெரியவர்கள் குறித்த தேதியில், அழகாய் நடந்தேறியது.

முதலில் எளிமையாய் வீட்டினில் செய்யலாம் என்றவர்கள், பின் வீடு பக்கத்திலேயே ஒரு மண்டபம் பார்த்துவிட, நினைத்ததை விட, அமர்க்களமாய் நடந்து முடிந்திருந்தது நிச்சயத்தார்தம்..

“நீ இல்லைன்னா இது நடந்திருக்காது கண்ஸ்…” என்றுசொல்லி தீபா கண்மணியை அணைக்க,

“இது நடக்கனும்னு இருந்திருக்கு.. அதான்..” என்றவளும் தன் மகிழ்வை பகிர்ந்துகொள்ள,

சடகோபனும், சியாமளாவும் தங்கள் பிள்ளைகள் மீது கோபத்தை காட்டியிருந்தாலும், அதில் கொஞ்சம் கூட தீபா முன்னே எதுவும் காட்டவில்லை.

என்ன சொந்த பந்தங்கள் கேட்ட கேள்விகளை சமாளிக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. ஆனாலும் கூட காலங்கள் மாற மாற, மக்கள் மனதில் இருக்கும் கருத்துக்களும் மாறும்தானே..

சிலர் “பரவால சடகோபா.. பசங்க சந்தோசம் தான் முக்கியம்..”என,

ஒருசிலரோ “என்ன இருந்தாலும் நீ எப்படி சம்மதிச்ச??” என்றும் கேட்க, அனைத்தையுமே ஒரு புன்னகையோடு கடந்துவிட்டார் சடகோபன்..

வாழ்வில் அவருக்கு ஒருசில கோட்பாடுகள் இருக்கிறது தான். ஆனால் எது எப்படி என்றாலும் அது அவரின் குடும்பத்திற்கு அடுத்து தான். இத்தனை வருடங்கள் தன் பேச்சிற்கு மறு வார்த்தை பேசியிருக்காத கண்ணன், இன்று அவனுக்கு அவன் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொடுக்கவில்லை எனில் பின் என்ன நான் அப்பா??

இந்த எண்ணம் மட்டுமே சடகோபனுக்கு..

ஆனால் கண்மணி வருண் திரும்ப சம்பந்தத்தில் நடுவில் பெண் கொடுத்து எடுப்பது என்ற பேச்சு வந்து தான் கொஞ்சம் தயங்கும் நிலை.. இப்போது அதுவும் இல்லை எனவும், மகன் நிச்சய விழாவை சிறப்பாகவே செய்துவிட்டார்..

அதே சந்தோசம் அனைவருக்கும் இருக்க, சியாமளவோ “டயர்டா இருப்பீங்க தூங்குங்க..” என்று சொல்ல,

“கொஞ்சம் நியூஸ் பார்த்துட்டு தூங்குறேன்..” என்றவர், செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருக்க,

என்னானதோ “சி… சியா.. சியாமி….” என்று அருகே கிட்டத்தட்ட முக்கால்வாசி உறக்கத்தில் இருந்த சியாமளாவை வேகமாய் தட்டினார் சடகோபன்..

அவரின் முகம் அப்படி வேர்த்திருக்க, அவரைப் பார்த்தாலே அவரின் உடலுக்கு என்னவோ என்று புரிந்தது. சியாமளா பார்த்தவரோ, பதறிப்போய்,

“என்னாச்சுங்க..” என்று கேட்க,

“அ…” என்று டிவி பக்கம் சடகோபன் கை காட்ட, அதில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த முக்கிய செய்தியைப் பார்த்து சியாமளாவும் திகைத்துப் போனார்..

                           

                                

          

 

       

  

   

 

Advertisement