தூறல் – 13
வருண் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்த வாரம் வருவான் என்று இருக்க, அவனோ அடுத்த இரண்டே தினங்களில் வந்துவிட்டான். அதுவும் மூர்த்தியோடு, இங்கே கண்மணியின் வீட்டிற்கு வர, யாரும் அவனின் வருகையை எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது.
“சாரி சாரி அங்கிள்.. ஆன்ட்டி… லீவ் போட்டு வரலாம் நினைச்சேன்.. பட் ஒரு அர்ஜென்ட் வேலை இங்க.. சோ இன்னிக்கே உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்துட்டேன்.. மே பீ என்னால எங்கேஜ்மென்ட் அப்போ வர முடியுமா தெரியலை..” என்று அவனின் காரணத்தை சொல்ல,
சடகோபனுக்கும், சியாமளாவிற்கும் அதன் பின்னே தான் கொஞ்சம் சகஜமாய் பேசவே முடிந்தது.
கண்ணன் வேலைக்கு சென்றிருக்க, கண்மணியும் அப்பா அம்மா மட்டுமே வீட்டில் இருக்க, வருண் என்னவோ வந்ததில் இருந்து சகஜமாய் தான் பேசினான். ஆனால் இவர்களால் தான் அது முடியவில்லை..
சியமாளா “போ போய் வேற ட்ரெஸ் போட்டு கொஞ்சம் பளிச்சுன்னு வா…” என்று கண்மணியை நகட்ட,
அதனைப் பார்த்த வருணோ “ஆன்ட்டி பார்மாலிட்டீஸ் எல்லாம் வேணாம்..” என்று சிரித்தவன், கொஞ்ச நேரம் மற்ற விசயங்கள் பேச, கண்மணிக்கோ பேசாது இவனிடம் அனைத்தையும் சொல்லிவிடுவோமா என்று இருந்தது. சாட்சிக்காரனுக்கு, சண்டைக்காரன் மேலே..
மனதில் ஒரு யூகம், எப்படியும் வருண் தன்னோடு பேசவேண்டும் என்பான் என்று. பெண் பார்க்கும் அன்றே கேட்டானே.. இப்போதும் அதே எண்ணம்.. வருணோடு பேசவேண்டும் என்ற எண்ணம் விட, வருணிடம் தன் அண்ணன் விஷயம் பேசவேண்டும் என்ற எண்ணம் அதிகமாய் இருந்தது கண்மணிக்கு.
நேரம் காலம் தெரியாது அதிரூபன் சொன்னது வேறு நினைவில் வர, நொடியில் தயங்கிய தன் மனதை வேகமாய் சமன் செய்துகொண்டாள்.
‘இல்ல… முயற்சி செய்யாம எதுவும் செய்யக்கூடாது…’ என்று முடிவிற்கு வர,
அதே நேரம் சரியாய் வருண் “கண்மணி கூட பேசிட்டு கிளம்பிடரனே…” என்று சடகோபன் மற்றும் சியாமளாவின் முகம் பார்க்க, அவர்களோ கண்மணியைப் பார்க்க, கண்மணியோ சம்மதம் என்று வேகமாய் தலையை ஆட்டினாள்.
இருவரும் தனியே வந்ததுமே வருண் கேட்டது இதைதான் “ஏன் எல்லாரும் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க…” என்று.
இது போதாதா கண்மணிக்கு??
எப்போ எப்போ என்று காத்திருக்க, விஷயம் தானாய் வந்து மாட்டவும், வருண் என்ன நினைப்பானோ?? வீட்டில் என்ன சொல்வார்களோ?? அதெல்லாம் எதுவுமே நினையாது, கண்மணி அனைத்தையும் சொல்லிவிட, வருண் இதனைக் கேட்டவன் சில நொடிகள் அமைதியாகவே இருந்தான்.
கண்மணியோ அனைத்தையும் சொல்லிய ஒருவித நிம்மதியில், இனி எது வந்தாலும் சரி என்று வருண் முகம் பார்க்க, உள்ளே லேசாய் ஒரு பயமும் இருந்தது அவளுக்கு. இது இன்னமும் பிரச்னையை இழுத்திடுமோ என்று.
ஆனாலும் வருண் பதிலுக்காக காத்திருக்க, அவளின் முகம் பார்த்தவன் பின் “ஹா ஹா ஹா…” என்று சிரிக்கவே தொடங்கிவிட்டான்.
கண்மணியோ புரியாது பார்க்க “இதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? இதுக்கேன் இவ்வளோ டென்சன்… எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாமே..” என்று இன்னும் சிரிக்க,
கண்மணிக்கு ‘அப்பாடா…’ என்று அப்போது தான் மூச்சு விட முடிந்தது.
“ஷி கண்மணி.. ஒவ்வொருத்தர் வீட்ல ஒவ்வொரு மாதிரி பிரச்னைகள் இருக்கும்.. பிரச்னைகளை நம்ம இழுத்துட்டே போனா தான் கஷ்டம்.. சோ எங்க வீட்டு சைட் என்ன பேசணுமோ எப்படி பேசணுமோ அதை நான் பார்த்துக்கிறேன்.. இங்க நீங்க என்ன டிசைட் பண்ணிக்கனுமோ அதை பண்ணுங்க…” எனும்போதே அவனுக்கு அழைப்பு வந்திட,
“ஹா.. யா.. ஐ வில் பி தேர் வித் இன் ஹால்ப் ஹவர்…” என்று மொழிந்தவன்,
“ஓகே… நான் கிளம்பனும்.. நெக்ஸ்ட் டைம் வர்றபோ ப்ரீயா பேசலாம்..” என்றவன் சடகோபனிடம் வந்து,
“அங்கிள்.. எதுக்கும் டென்சன் வேணாம்.. எங்க வீட்ல நான் பார்த்துக்கிறேன்..” என்று அழகாய் ஒருவித தைரியம் சொல்லிவிட்டு செல்ல, முதலில் மூர்த்திக்கு விஷயம் தெரியாதில்லையா,
தெரிந்த பின்னோ “அட இதெல்லாம் ஒரு விசயமா??” என்று அவரும் கேட்டுவிட்டு செல்ல, அதன் பின்னே தான் அங்கே வீட்டினர் முகத்தில் ஒரு நிம்மதி.
கண்மணி கூட பயந்தாள், எங்கே இதற்கும் அம்மா அப்பா திட்டுவார்களோ என்று. ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லாது விட, கண்ணனுக்கு அழைத்து பேசலாம் என்றெண்ணியவள் வீட்டில் முதலில் அப்பா அம்மா ஒரு முடிவிற்கு வரட்டும் என்று, அண்ணனின் வருகைக்காக காத்திருக்க,
சடகோபனோ “இதுல என்ன பண்ணலாம் சியாமி…” என்று கிட்டத்தட்ட முதல் முறையாய் மனைவியிடம் கருத்து கேட்க, சிறிது நேரம் அவரால் அதை நம்பவும் முடியவில்லை.. அதே ஆச்சர்யத்துடனே “என்னங்க செய்ய முடியும்??” என்றார் சியாமளா.
வீட்டின் சூழலே மாறியிருந்தது. கண்மணி அறைக்குள்ளேயே இருக்க, கண்ணனோ வேலைக்கு போய் வருவது தவிர அமைதியாய் அவனும் ஒதுங்க, சடகோபன் ஒருவித யோசனையிலேயே இருக்க என்று சியாமளா தான் அந்த வீட்டில் இயல்பு சூழல் இல்லாது தவித்துப் போனார்.
இது அநேக வீட்டில் இருக்கும் அம்மாக்களின் நிலைதான்.. வீட்டில் ஒரு இயல்பு சூழல் இல்லையென்றால் அதன் பாதிப்பு அந்த வீட்டில் இருக்கும் அம்மாவிற்கே.. பிள்ளைகளா, இல்லை கணவரா யார் பக்கம் சார்ந்து பேசுவது என்று ஒருநிலைக்கு அவரால் எப்போதுமே வர முடியாது. இன்னமும் பிள்ளைகள் மீது சியமாளாவிற்கு கோபம் இருந்தாலும் கூட, அவரால் கண்ணனின் காதலை மறுக்க முடியவில்லை.
மகன் ஆசைப்பட்டான். அவன் விருப்பப்படி ஒரு வாழ்வு வாழட்டும். என்ன நெருங்கிய சொந்தங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். அதுக்கூட குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். ஆனால் சடகோபனையும் சரி, சியாமளாவையும் சரி பெரும் தயக்கத்திற்கு உள்ளாக்கிய விசயம் கண்மணிக்கு இப்போது வருணை பேசி வைத்திருப்பது தான்.
ஒருவேளை கண்ணனின் இந்த காதல் விஷயம் அவர்களுக்குப் போனால், அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?? இதனால் கண்மணி வருண் திருமண விசயத்தில் எதுவும் பிரச்சனைகள் வருமா என்பதே.. ஆனால் வருண் நான் பார்த்துகொள்கிறேன் என்றுவிட, மூர்த்தியும் தைரியம் சொல்லி செல்ல, கண்ணன் வீட்டிற்கு வரவுமே, சடகோபன் கேட்டது இதை தான்.
“நாங்க சம்மதிக்லைன்னா என்ன செய்வ??”
இதைக் கேட்டு கண்ணனுக்கு ஒரு அதிர்ச்சி என்றால், கண்மணிக்கு பேரதிர்ச்சி. கண்ணன் அமைதியாக இருக்க, “சொல்லு கண்ணா.. என்ன செய்றதுன்னு இருக்க..” என்று கேட்க,
“என்ன செய்றதுப்பா.. இத்தனை நாள் உங்கக்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை.. ஆனா கண்மணிக்கு கல்யாணம் அமையாம நான் உங்கக்கிட்ட சொல்றதுக்கு எனக்கு மனசு இடம் கொடுக்கலை. மனசுக்குள்ள நான் எப்படி ஒவ்வொரு நாளும் தவிப்பேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..
நம்ம வீட்ல சொல்லாம, என்னால தீபா வீட்லயும் போய் பேச முடியாத நிலைமை. எனக்காக, என்னோட மனநிலை புரிஞ்சிட்டு தீபாவும் முடிஞ்ச அளவு அவங்க வீட்ல சமாளிச்சிட்டு போயிட்டுத்தான் இருக்கா.. என்ன எங்களுக்கு இதுல ஒரே ஆறுதாலா ஆதரவா இருந்தது கண்மணி தான்..
எத்தனையோ நாள் சொல்லிருக்கா என்னை பத்தி யோசிக்காத.. நீ வீட்ல பேசுன்னு.. ஆனா இப்பவும் சொல்றேன், வருண் வீட்ல இருந்து இப்போ அந்த பொண்ணு விஷயம் பேசிருக்காட்டி, கண்மணி நிச்சயம் முடியாம நான் பேசிருக்கவே மாட்டேன்..
இப்போவும் அதான் ப்பா.. நீங்க சம்மதிக்கலைன்னாலும் நான் எதுவும் செய்ய போறதில்லை. உங்களை எதிர்க்கவோ, இல்லை வீட்டை விட்டு போகவோ.. இல்லை உங்களை மீறி கல்யாணமோ பண்ணிக்கப் போறதில்லை. ஆனா.. என் வாழ்க்கைல இதுக்குமேல எதுவுமில்லை..
ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்திட்டேன்.. அதை காப்பாத்த முடியலைன்னா, அடுத்தொரு வாழ்க்கை எல்லாம் நினைச்சுப் பார்க்க என்னால முடியாது…” என்று நீளமாகவும், தன் மனதில் இருப்பதை தெளிவாகவும் சொல்லிட,
சடகோபனுக்கு ஒரு தந்தையாய் நிஜமாகவே அந்த நொடி பெருமையாகத்தான் இருந்தது.
“ம்ம்ம்…..” என்று தன் மனைவியைப் பார்த்தவர், “அந்த பொண்ணு வீட்ல பேசு.. எப்போ பேச வரன்னு கேளு..” என்றுவிட்டு அவர்பாட்டுக்கு போய்விட, கண்ணனுக்கு என்ன சொல்கிறார் இவர் என்று புரியவே நேரம் பிடித்தது.
‘எ.. என்ன பேச??’ என்று அவன் திகைத்து முழிக்கும் போதே, “அண்ணா….” என்று அவனின் முதுகை கண்மணி தட்ட,
“எ…. என்ன சொல்றார்??” என்றான் திகைப்பாய்.
“அப்பா ஓகே சொல்லிட்டார்…” என்று கண்களை விரித்து, கண்மணி சந்தோசமாய் சொல்ல, கண்ணனுக்கு அப்போது தான் வார்த்தைகள் தந்தி அடித்தது.
‘போ அப்பா அம்மாக்கிட்ட பேசு…’ என்று கண்மணி ஊக்க,
அவர்களோ எங்கள் முடிவை சொல்லியாகிவிட்டது. இதற்குமேல் இதில் பெரிதும் ஈஷிக்கொள்ள ஒன்றுமில்லை என்ற நிலையில் தான் இருந்தனர். ‘எல்லாம் சரியாகும்…’ என்ற அதே நம்பிக்கையில் கண்ணன் தீபாவிடம் பேச, அவளின் வீட்டிலோ முடிவே சொல்லாத நிலை.. யார்தான் எடுத்ததுமே சரி என்பர்.
பையன் யார்?? என்ன?? என்ன வேலை?? என்ன குடும்பம் எல்லாம் அலசி ஆராய்ந்து. யப்பா வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லவே நாளானது தான். கண்ணனும், சடகோபனும் தான் சென்று முதலில் பேசினார். அப்போதெல்லாம் என்னவோ நல்லதாய் பேசியதுபோல தான் இருந்தது.
பெரிதாய் இரு வீட்டிலும் அப்படியொன்றும் மகிழ்வாய் எதையும் யாரும் எடுத்து செய்யவில்லை.. சம்மதம் சொன்னதே பெரியது என்ற ரீதியில் இருக்க,
“எல்லாமே போக போக சரியாகும்.. நீங்களும் அனுசரிச்சுத்தான் போகணும்…” என்று கண்மணிதான் அப்போதும் ஆறுதல் சொல்ல,
கண்ணனுக்கு பாதி கிணறு தாண்டிய நிலைதான் இன்னும்.. வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டனர் தான். அதுவும்கூட முழு மனதாய் இல்லை என்பது நன்கு புரிந்தது. புதன் கிழமைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்க, அவனுக்கு முழி பிதுங்கி தான் போனது. தீபா வீட்டில் அதற்குமேல்..
ஆனால் அதன் பின்னே தீபாவோடு பேசுகையில் “நீங்க போகவும் ஒரே திட்டு வீட்ல.. இத்தனை நாள் என்ன பண்ண?? அப்படின்னு..” என்று தீபா சொல்லவும்,
“ம்ம் நீ சொல்ற நான் சொல்லிக்கல.. அவ்வளோதான்..” என்றவனுக்கு மனதில் திடீரென்று ஒரு எண்ணம், சரியாய் அதே நேரம் சியாமளாவும் அங்கே வந்தமர, “ம்மா பேசு..” என்று அவனின் அலைபேசியை நீட்டிவிட்டான்.
‘என்ன யாரு??’ என்று சியாமளா பார்க்க, “தீபா பேசணுமாம்…” என்று சொல்ல, அந்த பக்கம் தீபாவோ ‘அச்சோ…’ என்று பயந்தே போனாள்.
“என்னவாம்….” என்று சியாமளா மகனை முறைக்க,
“ம்மா ம்மா ப்ளீஸ் பேசும்மா….” என்று கண்ணன் பார்வையாலே கெஞ்ச, போனால் போகிறது என்றே சியாமளா தீபாவிடம் பேச ஆரம்பித்தார்.
அனைத்திற்குமே முதல்படி பேச்சுத்தானே.. கண்ணன் என்ன நினைத்து இதை செய்தானோ ஆனால் மகனிடம் கோபம் காட்டினாலும், தீபாவிடம் நல்ல முறையிலேயே பேசினார்.
இதெல்லாம் பார்த்த இரண்டு ‘கண்ஸ்’க்கும் நிம்மதியோ நிம்மதி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அதன்பின்னே தான் அந்த வீட்டில் ஒரு மகிழ்வு சூழலே வந்தது எனலாம்.
அதிலும் கண்மணி வருணுக்கும் நிச்சய தேதி குறித்துவிட, வீட்டில் ஒன்றிற்கு இரண்டு விசேசம் என்கையில் கேட்கவா வேண்டும்.
“எங்கேஜ்மென்ட்க்கு உன் பிரண்ட்ஸ் யாருக்காது சொல்லணுமா??” என்று சியாமளா மகளிடம் கேட்க, அப்போது தான் கண்மணிக்கு அதிரூபனின் நினைவே வந்தது எனலாம்.
‘ச்சோ… இவரை மறந்தே போனோமே.. அன்னிக்கு அவ்வளோ சொன்னார்….’ என்று தனக்கு தானே நொந்துகொண்டவள்தான் அதிரூபனுக்கு அழைத்தது.
ஆனால் அவனுக்கோ கண்மணி பேசியது எல்லாம் கேட்டு, உள்ளே பற்றிக்கொண்டு எரிந்தது.. கண்மணி மீது கோபம் கோபமாக கூட வந்தது. வருணோடு பேசாதே என்று சொல்லி சொல்லி அனுப்பியும் கேட்காமல் பேசியிருக்கிறாள் என்றாள் என்ன அர்த்தம்??
அப்போ இவ்வளோதான் என் வார்த்தைக்கு மரியாதையா???
அப்போ நான் பேசியதெல்லாம் இவள் காதிலேயே வாங்கவில்லையா??
வருணோடு பேசியிருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்?? என்று ஆத்திரம் ஆத்திரமாக வர,
அங்கே அந்தப்பக்கம் கண்மணி “ஹலோ ஹலோ…” என்றுவிட்டு பதில் வராது போகவும் அழைப்பை துண்டித்ததுக் கூட அவன் கருத்தில் பதியவில்லை.
திரும்ப அவனின் அலைபேசி அலறியதில் தான் தன்னை மீட்டவன் யாரென்று பார்க்க, கண்மணி என்பது நன்கு தெரிந்தது. ஆனாலும் இப்போது இந்த நொடி எடுத்துப் பேச மனமில்லை..
அவளது அழைப்பு என்றதுமே அவனின் உள்ளம் எத்தனை ஆர்ப்பரித்ததுவோ, இப்போதும் அதே ஆர்ப்பரிப்பு தான். ஆனால் உணர்வு தான் வேறாய் போனது.. கண்மணியின் இரண்டாவது அழைப்பை ஏற்காமல் அப்படியே இருக்க, அதிரூபன் மனதிலோ என்னென்னவோ எண்ணங்கள்..
‘எடுத்து பேசினா தானே தெரியும்…’ என்றும் தோன்ற, அவன் எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட, சிறிதும் யோசிக்காது திரும்ப அழைத்தான். ஆனால் இம்முறை கண்மணி எடுத்தாள் இல்லை.
“ச்சே…” என்று எரிச்சலாய் வர, திரும்ப அழைத்தான்.. அப்போதும் அவள் எடுக்காமல் போக, மனது நிலைகொள்ளாமல் தவித்தது.
கடையில் அவனால் இருக்கவே முடியவில்லை. பேசாது நேராய் கண்மணியின் வீட்டிற்கே போய்விடலாமா என்றுதான் வந்தது.. இல்லை வீட்டில் சொல்லி, வீட்டிலிருந்து அம்மா மாமாவை அழைத்து சென்றுவிடுவோமா என்றும் இருந்தது.
கண்மணி அவளின் பெயரைத் தவிர இப்போதும் கூட அவளைப் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது அதெல்லாம் தெரியாது. ஆனால் அவளை அவனுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிந்தது.
அது அவனுக்கு மட்டுமே தெரிந்து என்னாகப் போகிறது??
அவளுக்குத் தெரியவேண்டுமே..
அல்சர் வந்தவனுக்குக் கூட, நெஞ்சில் அத்தனை எரிச்சல் இருக்குமா தெரியாது. ஆனால் இந்த காதல் வந்தவனுக்கு.. உடம்பில் அத்தனை பாகமும் எரியும் போல.. அதுவும் இந்த ஒருதலை காதலில் இருப்பவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லையோ என்னவோ??
ஆனால் இறைவனின் அருள் அதிரூபனுக்கும் ஒரு ஓரத்தில் உண்டு எனும்படி திரும்ப கண்மணியே அழைத்தாள்.
“சா.. சாரி.. வீட்ல கெஸ்ட்.. சோ…” என்று இழுக்கும் போதே, “நீ ஏன் அந்த வருண் கூட பேசின??” அப்படியொரு கத்தல் போட்டான்.
நல்லவேளை அந்த நேரத்தில் அவனோடு சுப்பிரமணி இல்லை.. கடையில் கடிகாரத் தளத்தில் எப்போதும் இருக்கும் ஆளும் அப்போதில்லை. அதிரூபனுக்கோ அனைத்தையும் விட்டு கண்மணியோடு பேசிடவேண்டும் யார் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அப்படியொரு நிலை.
அதிரூபனின் குரலில் இருந்த வித்தியாசம் கண்மணிக்கு உணர,
“எ.. என்னது??” என்றாள் கொஞ்சம் திகைத்து.
“ம்ம்ச் நான் அவ்வளோ சொல்லி அனுப்பியும்.. நீ ஏன் அந்த வருண்கிட்ட பேசின??” என்று அதிரூபன் கையை ஆட்டி பேசும் போதே,
அவனின் அடிபட்டு இருந்த, அந்த கை, லேசாய் டேபிளில் இடிக்க, “இஷ்…” என்று வலியை விழுங்க,
“ஹ… ஹலோ.. என்னாச்சு?? உங்களுக்கு கை எப்படி இருக்கு…??” என்றாள் எதிர்புறம் இருந்தவள்.
“இப்போ அது ரொம்ப முக்கியமா?? நான் என்ன சொல்றேன் நீ என்ன கேட்கிற கண்மணி??”
“எ… என்னது??”
“நான் உன்னை பார்க்கணும் கண்மணி….” என்ற அதிரூபன் குரலில், கொஞ்சம் ஆடித்தான் போனாள் கண்மணி..
“எ.. எதுக்கு??”
“ம்ம்ச் வர முடியுமா முடியாதா?? நான் வர ஒரு செக்கன்ட் ஆகாது.. ஆனா அது தேவையில்லாத பிரச்சனைகளை உண்டுபண்ணும்…”
“இல்ல.. அது…”
“முடியுமா?? முடியாதா??”
“ஆ….” என்றவளுக்கு சத்தமே வரவில்லை..
“கண்மணி.. சத்தமா பேசு.. நான் உன் முன்னாடி இல்ல.. நீ என்ன பேசினாலும் உன் லிப் மூவ்மென்ட் வச்சு கண்டுபிடிக்க…”
“எ.. என்ன விசயமா????” என்று கண்மணி கேட்கும்போதே அவளுக்கு நாவு வரண்டது..
“நேர்ல தான் சொல்ல முடியும். போன்ல பேசற விஷயமில்ல…”
“இல்ல அது.. இங்க.. இப்போ வர முடியாதே..” என்று திக்கி திணறி கண்மணி இழுக்க,
“சரி எப்போ சொல்லு??” என்றான் பட்டென்று.
“நீ.. நீங்க எதுன்னாலும் போன்ல..” எனும்போதே,
“ம்ம்ச் கண்மணி சத்தமா பேசேன்..” என்று இவன் கத்த, “இல்ல அது.. இப்போதைக்கு முடியாது..” என்றாள் எச்சில் விழுங்கி..
“ஏன்?? ஏன் முடியாது?? வரணும்…”
“இல்ல வர புதன் அண்ணாக்கு நிச்சயம்.. அப். அப்புறம்…”
“அப்புறம்?? அப்புறம் என்ன??”
“நெக்ஸ்ட் வீக் எ.. எனக்கு எங்கேஜ்மென்ட்.. அ… அது சொல்லத்தான் கூப்பிட்டேன்..” என, அத்தனை நேரம் ஆத்திரத்தில் கத்திக்கொண்டு இருந்தவன் அப்படியே அடங்கிப் போனான்.
அடுத்த நொடி அவனுக்கு என்ன சொல்வது என்றுகூட தெரியவில்லை.. அப்படியே இருக்கையில் அமர்ந்தவன் சிறிது நேரம் அமைதியாகவே இருக்க,
“ஹ.. ஹலோ இருக்கீங்களா??” என்று கண்மணியின் குரல் அவனின் செவிகளில் எட்டினாலும், மனதிற்கு எட்டவில்லை. மரத்துப் போன நிலை.
“ஓகே…” என்றுமட்டும் அவனின் இதழ்கள் முணுமுணுக்க, அங்கே அழைப்பு மீண்டும் நின்று போயிருந்தது.
அதெல்லாம் அவன் உணரவேயில்லை.. அலைபேசியை அமர்த்தி வைத்தவன், நேராய் வீட்டிற்கு போய்விட்டான்… போனவன் அப்படியே தன் அறையில் சென்று முடங்கிவிட, மஞ்சுளாவோ எப்போதடா நிவின் வருவான் என்று பார்த்துகொண்டு இருந்தார்.
நிவின் வந்ததுமே, “நிவின்… அவன் என்னதான்டா செய்யனும்னு இருக்கான்??” என்று மஞ்சுளா திரும்ப முருங்கை மரம் ஏறிவிட்டு இருந்தார்.
நிவின் பாவமாய் அண்ணனையும் அம்மாவையும் பார்க்க, அதிரூபனோ இருவரையும் விட பாவமாய் முகத்தை வைத்து இருந்தான். பின்னே வருணுக்கும், கண்மணிக்கும் நிச்சயத்திற்கு நாளே குறித்துவிட்டார்கள் என்றால் அவன் பாவமாய் தானே இருப்பான்..
“ம்மா கொஞ்சம் ப்ரீயா விடேன்…” என்று நிவின் சொல்ல,
“எது வரைக்கும்?? வீட்டுக்கு வந்தான்.. ரூமுக்குள்ள போய் ரெண்டு மணி நேரம் வெளியவே வரலை.. தூங்குறானோன்னு பார்த்தா கீழ அப்படியே படுத்து கிடக்கான்.. பாக்குறப்போ எனக்கு எப்படி இருக்கும்டா…” என்ற மஞ்சுளாவின் பேச்சிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது..
காதல் யாரையும் கிறுக்கு பிடிக்க வைத்துவிடும்.. செய்வோரையும் சரி.. உடன் இருப்போரையும் சரி.
“ம்மா ப்ளீஸ் ம்மா… நீ கொஞ்சம் அமைதியா இரு.. நான் பேசுறேன்..” என்று நிவின் அதிரூபனிடம் போக,
“நான் காட்டு கத்தலா கத்தி பார்த்துட்டேன் ஒரு பதிலும் இல்லை.” என்றார் மஞ்சுளா..
அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன் “அண்ணா.. என்னண்ணா???” என்று கேட்க, அதிரூபன் அப்போதும் ஒருபதிலும் சொல்லாது இருக்க,
“ம்ம்ச் அண்ணா நீ பேச போறியா இல்லையா??” என்று நிவின் அதட்ட, அவனை விழிகள் நிமிர்த்தி பார்த்தவன்,
“என்னடா??!!” என,
“இப்போ என்னாச்சுன்னு நீ இப்படி இருக்க??” என்று கேட்டவனைப் பார்த்து விரக்தியாய் புன்னகை செய்தான் அதிரூபன்.
“சொல்லுண்ணா…”
“ஒருத்தி மேல பாசம் வச்சிட்டேன்.. அதான் போதுமா??” என்று கேட்ட அண்ணனை இப்போது நிவின் அதிர்ந்து பார்க்க,
“யா?? யாரது??” என்று அவனையும் அறியாது கேட்டுவிட, “கண்மணி…” என்று அதிரூபன் தெள்ளத் தெளிவாய் பதிலுரைத்தான்..