Advertisement

தூறல் – 12

அதிரூபன் கண்மணியோடு பேசிக்கொண்டே நிற்க, எதேர்ச்சையாய் திரும்பியவன் சுப்பிரமணி நிற்பது கண்டு உள்ளே அதிர்ந்தாலும், “மா.. மாமா.. வாங்க…” என்றான் வேகமாய்..

கண்மணியும் அவரைப் பார்க்க, இருவரின் முகத்திலும் இருந்த இயல்பு கண்டு சுப்பிரமணிக்கு வித்தியாசமாய் எதுவும் தெரியவில்லை.

“உன்னை கூட்டிட்டு போலாம்னு வந்தேன்…” என்றவர், கண்மணியை கேள்வியாய் பார்க்க,

“நிவின் கிளாஸ் மேட்.. கண்மணி.. கடைக்கும் வருவாங்க..” என்று அறிமுகம் செய்ய, என்னவோ கண்மணியின் முகம் நொடிப் பொழுதில் வாடியதுபோல் தோன்றினாலும் அடுத்தநொடி அவளின் அக்மார்க் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. 

“ஓ.. சரி சரி..” என்றவரும் கண்மணியை பார்த்து புன்னகைக்க, இரு கரம் குவித்தவள் “வணக்கம்…” என,

“பரவால்லையே.. இப்போல்லாம் யாரும்மா வணக்கம் சொல்றா?? வெள்ளைக்காரன் பழக்கமா வேகமா முன்னாடி கை நீட்டிடுறாங்க..” என்றார் அவரும் வணக்கம் சொல்லி..

கண்மணியின் புன்னகை மேலும் விரிய, ‘என்ன இந்த பொண்ணு பேசாதா??’ என்று அதிரூபனைப் பார்த்தார்.

“கொஞ்சம் சைலென்ட் டைப்…” என்று அதிரூபன் சொல்ல,

“ஓஹோ… ரொம்ப தெரிஞ்சிருக்க…” என்றவரை அதிரூபன் கூர்ந்து பார்த்தானோ இல்லையோ கண்மணி கூர்ந்து பார்த்தாள்.

‘என்ன சொல்றார்..??’ என்று கண்களை இடுக்கி கண்மணி பார்க்க, சுப்பிரமணி என்னவோ இதனை சாதாரணமாய் சொன்னதுபோலத்தான் இருந்தது.

‘என்ன தெரிஞ்சிருக்கும் என்னை??’ என்ற கேள்வி கண்மணியினுள் எழ, அதிரூபனோ மேற்கொண்டு அங்கே இருந்தால், தேவையில்லாத கேள்விகள் வரும் என்றெண்ணி, “கிளம்புவோமா மாமா??” என,

அவரும் “சரிம்மா நாங்க கிளம்புறோம்..” என்றவர் “நீ எந்த ஏரியா??” என்று விசாரிப்பை தொடங்கினார்.

“அடையார்ல…” என்றவள் மேலும் விபரம் சொல்ல,

“அட ரூபன் உங்க வீட்ல இருந்து ஒரு பத்து நிமிச நடைதான் இல்லையா??” என்றார் என்னவோ கண்டுபிடித்துவிட்ட மகிழ்வில்..

“ம்ம் ம்ம் ஆமா மாமா…” என்றவன் கண்மணியிடம் கிளம்பு என்று ஜாடை காட்ட, அவன் ஏன் சொல்கிறான் என்று கண்மணிக்கும் புரிய, இயல்பில் இருந்த புன்னகை ஒரு நமட்டு சிரிப்பாய் மாறி,

“நான் வந்து நேரமாச்சு.. கிளம்பட்டுங்களா??” என்று அவரிடமே கேட்பது போல் சொல்லி கிளம்ப,

“சரிம்மா சரிம்மா…” என்றார் அவரும் வேகமாய்..

கண்மணி அதிரூபனிடம் ஒரு தலையசைப்போடு கிளம்ப, ‘எப்பவும் இப்படிதான் செய்றா…’ என்றெண்ணியே அவள் போவதை பார்த்துக்கொண்டு இருந்தான் இவன்.

“பரவால்ல நல்ல பொண்ணா இருக்கு..” என, ‘ஸ்கோர் பண்ற கண்மணி…’ என்றும் நினைத்துக்கொண்டான்.

சில நேரங்களில் நமக்கு உணராத ஒன்றை, யாராவது ஒருவர் சிறு செயல் மூலம் நமக்கு உணர்த்திவிடுவர்.. அதன்பின்னே தான் நமக்கே கூட ‘அட ஆமால்ல…’ என்று தோன்றும்.

இன்று கண்மணிக்கு அப்படித்தான் ஆனது. மன தெளிவுக்காக மன நிம்மதிக்காக கோவிலுக்கு என்று வந்தவளுக்கு, இப்போது புதிதாய் ஒரு விஷயம் மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதுவும் அதிரூபனைப் பற்றி.

‘ரொம்ப தெரிஞ்சிருக்க??’ என்ற இந்த இரு வார்த்தைகள் அவளுக்கு பல அர்த்தம் சொல்வதாய் இருந்தது.

தன்னைப் பார்த்ததுமே ‘ஏன் டல்லாருந்த??’ என்று அதிரூபன் கேட்டது, பின் சுப்பிரமணியிடம், ‘கொஞ்சம் சைலென்ட் டைப்..’ என்று அவளைப் பற்றி சொன்னது, இவ்விரு விசயங்களும் அதிரூபன் தன்னை ஆழ்ந்து கவனிப்பதாய் தோன்றியது கண்மணிக்கு..

‘நிஜமா???’

‘அப்படியும் இருக்குமா??’

‘ஆனா ஏன்??’

என்று அடுக்கடுக்காய் அவள் மனதில் கேள்விகள் எழ, கண்ணன் தீபா விசயத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று கோவில் வந்தவளுக்கு அதிரூபனை பற்றிய கேள்விகள் தோன்றி, பதில் தேடத் தொடங்கியது.

தேடல் சுகம்தான்.. காதலும் சுகம்தான்.. காதலில் தேடல்?? சுகமா?? சுமையா?? அதுவும் கண்மணிக்கு இது ஒரு விசித்திர உணர்வு.. கண்ணிமைக்கும் நொடிதான் அதிரூபன் ஜாடைக் காட்டியது கிளம்பு என்று. அதுவே அவளுக்குப் புரிந்துபோனதே..

இதே கோவிலில் தான் போன வாரம் அவளுக்கு ஒருவனை பேசி முடித்தார்கள். ஆனால் இன்றோ வேறொருவனை பற்றிய எண்ணங்கள் அவள் மனதில். சொல்லப்போனால் வருணைப் பற்றிய சிந்தனையே அதிரூபனைக் கண்ட பிறகு காணாது போயிருந்தது.

‘நிவினின் அண்ணன்.. ஓரிரு முறை பார்த்த ஆள். அவ்வளவே.. அவரிடம் போய் இத்தனை நேரம் அதுவும் வீட்டு விசயமெல்லாம் பேசி, ச்சே நானுமே அப்படி நின்னு பேசிருக்க கூடாதோ..?? இதுல போன் நம்பர் வேற.. கண்மணி உனக்கு என்னவோ ஆகிடுச்சு…’ என்று தன்னை தானே கடிந்தவள் வீடு வர, அங்கேயோ மூர்த்தி அமர்ந்திருந்தார்.

சடகோபனும் அங்கே இருக்க, ‘போச்சு…’ என்ற பாவத்துடனே உள்ளே வந்தவள் “வாங்க மாமா…” என, சடகோபன் அவளை முறைப்பதை நன்கு உணர முடிந்தது.

“என்னம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தியா??”

“ஆ.. ஆமா மாமா…” என்றவளின் பார்வை தன் அப்பாவை தொட்டு மீள,

“ரொம்ப சந்தோசம்மா.. மேற்கொண்டு என்னன்னு பேசிட்டு போகலாம்னு வந்தேன்..” என்றவர்

“என்ன சடகோபா கண்ணன் என்ன சொல்றான்??” என்ற கேள்விக்கு போக,

அவரோ சியாமளாவை பார்த்தார் என்ன சொல்வது என்று. சியாமளாவும் ஒரு அவஸ்தையில் அமர்ந்திருக்க, கண்மணியோ என்ன பேசுவது என்று தெரியாது நிற்க, சடகோபன் மகளை நீ உள்ளே போ என்று பார்த்தார்..

‘எல்லாரும் என்னை கிளப்புறாங்க.. அவர் என்னன்னா கிளம்புன்னு பாக்குறார்.. அப்பா என்னன்னா உள்ளப்போன்னு பாக்குறார்…’ என்று அவள் மனது முணுமுணுக்க, திரும்ப திரும்ப அவளின் மனம் அதிரூபனிடம் சென்று நிற்பது அவளுக்கே பிடிக்கவில்லை.

அறைக்கு வந்தவளுக்கோ வெளிய என்ன நடக்கிறது என்று தெரியவேண்டியதாய் இருக்க, அறையினில் இருந்த இருக்கையை சற்றே தள்ளிப்போட்டு வெளியே பேசுவது கேட்பதுபோல் அமர்ந்துகொண்டாள்.

‘கடவுளே… அப்பா இதுக்கு சம்மதிக்க கூடாது…’ என்று வேண்டுதலோடு இருக்க,

சடகோபனோ, “முதல்ல கண்மணி கல்யாணம் முடியட்டுமே மூர்த்தி.. பின்ன மத்தது பார்த்துப்போமே..” என்றார்.

கண்மணிக்கு இதை கேட்ட பிறகுதான் மூச்சே விட முடிந்தது. எங்கே ஒரு பிடிவாதத்தில் அப்பா கண்ணனுக்கு அந்த பெண்ணை பேசிடுவாரோ என்ற பயம் அவளுள் இருந்தது நிஜமே. ஆனால் அவரோ நேரடியாய் மறுத்து பேசாது இப்படி சொல்ல, கொஞ்சம் அவளுள் நிம்மதி.

“ஏன் சடகோபா?? இந்த பேச்சு பிடிக்கலையா என்ன?? அன்னிக்கு தங்கச்சி கூட சந்தோசமா இருந்ததுபோல இருந்துச்சே..” என்று மூர்த்தி சியாமளாவைப் பார்க்க,

அவரோ “அதுண்ணா.. கண்ணனுக்கு…” என்று சொல்லவந்தவர், “அவனுக்கு கண்மணி கல்யாணம் முடியட்டும்னு ஒரு எண்ணம்…” என,

“ம்ம்ம் சரிம்மா… ஆனா அந்த பொண்ணு நல்ல பொண்ணு.. அதான் சொல்றேன்.. பேசி வச்சிக்கிட்டா நல்லதுன்னு தான் அன்னிக்கே இந்த பேச்சு எடுத்தது..” என்று விடாது மூர்த்தி தூண்டில் போட்டார்.

சியாமளாவும், சடகோபனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மூர்த்தி இவர்களைப் பார்த்தவர் “என்ன சடகோபா?? எதுன்னாலும் வெளிப்படையா சொல்லுங்க??” என்றார்..

“இல்ல மூர்த்தி.. கேட்டது ரொம்ப சந்தோசம்.. ஆனா இப்போதைக்கு கண்மணி கல்யாணம் பத்தி மட்டும் பாப்போமே…” என்றார் இம்முறை உறுதியாய்.

“ம்ம்ம் சரிப்பா… நான் சொல்லிக்கிறேன்.. அடுத்து என்னன்னு கேட்போம்னு தான் வந்தேன்.. போன்ல பேசுற விசயமா இது?? அடுத்த வாரம் வருண் வருவான் போல.. எங்க அண்ணிக்கு கிரேன்ட்டா நிச்சயம் வைக்கிற எண்ணம் இருக்கும்னு நினைக்கிறேன்..” என்ற மூர்த்திக்கு முன்னிருந்த சுரத்து இப்போதில்லை என்பதுபோல் இருந்தது.

“அதுக்கென்ன மூர்த்தி.. நல்லா பண்ணிடலாம்.. நாள் பார்த்து சொல்லுங்க.. நாங்களும் பேசிட்டு சொல்லிடுவோம்..”

“சரி சடகோபா… நான் கிளம்புறேன்..” என்றவர் கிளம்பிவிட,

“பார்த்தியா… எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியதா இருக்குன்னு..” என்று கடிந்தார் சடகோபன்.

சியாமளா அமைதியாகவே இருக்க, “நீயும் நானும் வீட்ல தண்டத்துக்கு இருக்கோம்.. என்ன நடக்குதுன்னு கூட தெரியாம.. இப்போ என்ன செய்றது?? மூர்த்தியே பட்டும் படாம பேசிட்டு போறான்…” என்று வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார்.

“அதுக்கென்னங்க செய்ய.. மாப்பிள்ளை பொண்ணுன்னா ஆயிரம் நடக்கும்.. அவங்க ஒண்ணு சொன்னாங்க நமக்கு ஒத்துவந்தா தானே செய்ய முடியும்..”

“நிஜம்தான்.. ஆனா வீட்ல இருக்க ரெண்டும் ஒருவார்த்தை முன்னாடி சொல்லிருந்தா இந்த பேச்சு வந்திருக்கப்போவே நம்ம நாசூக்கா சொல்லிருப்போமே. இப்போ பாரு.. அடுத்து அவங்க பதிலுக்கு நம்ம காத்திருக்கவேண்டிய நிலைமை.. இந்த சம்பந்தம் மட்டும் ஏதாவது நின்னுச்சு.. நான் அவனை சும்மா விடமாட்டேன்..” என்று கண்ணனையும் சாடிவிட்டு எழுந்து வெளியே சென்றார் சடகோபன்.

அப்பா வீட்டிலிருந்து கிளம்பியது கண்மணி அறையை விட்டு வெளியே வர,  “பேசினது எல்லாம் கேட்டுட்டு தானே இருந்த.. இப்போ நாங்க என்ன செய்றது சொல்லு?? உனக்கு பாக்குறதா இல்லை அவனுக்கு பாக்குறதா?? லவ் பண்ண தெரியுது அதை வீட்ல சொல்ல முடியாதாமா?

கடைசியில ஒரு பிரச்னைன்னு வர்றப்போ மட்டும் அப்பா அம்மா வேணும்.. ஏன் இந்த கண்றாவிய முன்னாடியே சொல்லிருந்தா என்ன??” என்று அவரும் தன் ஆதங்கத்தை வெளிக்கொட்ட, கண்மணியோ கப் சிப்..

அன்றைய நாள் முழுதுமே சியாமளா புலம்பியபடியே இருக்க, அவரின் பேச்சில் நியாயம் இருப்பதால் கண்மணி எதுவுமே சொல்லவில்லை. கண்ணன் வந்தவனும் அமைதியாகவே இருக்க, சடகோபன் வந்த பின்னே மீண்டும் இதே பேச்சு.. குமுறல்.. புலம்பல்.. திட்டு என்று எல்லாம் தொடர்ந்தது.

அங்கே அதிரூபனின் நிலையோ வேறுவிதமாய் இருந்தது. சுப்பிரமணி அவனை கோவிலில் அழைக்க வந்தவர், “வீட்டுக்கு போலாமா??” என்று கேட்க,

“இல்ல மாமா கடைக்கு போலாம்.. நாளாச்சு.. இனியும் சும்மா இருக்க முடியாது..” என்று அலங்காருக்கு வந்தான்.

வந்தவனுக்கோ தான் பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருப்பது நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அதுவும் கடிகார வடிவமைப்புகளுக்கான ஆர்டர்களில் செய்ய வேண்டிய திருத்தங்கள், ஏற்பாடுகள் எல்லாம் பார்க்க, அவனால் முன் போல் கையை இயக்க முடியவில்லை.

“கொஞ்சம் சரியாகட்டுமே ரூபன்..” என்று சுப்பிரமணி சொல்ல,

“இல்ல மாமா.. லேட்டாகிடும்..” என்றவன் கொஞ்சம் வலித்தாலும், அவன் கைக்கு அசைவுகள் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அதனையே பார்த்தவர் “ஹ்ம்ம் ஆத்திர அவசரத்துல ஏதாவது செஞ்சிடுறது.. அதோட விளைவு நமக்கு பிடிச்ச வேலையை கூட நம்மனால சரியா செய்ய முடியுறதில்ல..” என்று சொல்ல,  பார்வையை மட்டும் அவரில் வைத்தவன், பதில் சொல்லவில்லை.

பதில் சொல்லமுடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நிஜம் அதுதானே… அன்றைய தின வேகத்தில் கையை உடைதுக்கொண்டான். ஆனால் இன்று அதனால் எத்தனை அசௌகர்யங்கள். என்ன ஒரே ஒரு நன்மை இதைவைத்து கண்மணி அவனோடு நின்று பேசியது தான். இது தொன்றவுமே அவனுக்கு வலி மறந்திட,

“என்னவோ நீ சரியில்ல ரூபன்.. நீ பிறந்ததுல இருந்து உன்னைப் பாக்குறேன்.. திடீர்னு என்னதான் ஆச்சோ உனக்கு..??” என்றார் அவனின் மாமா..

“ஒண்ணுமில்ல மாமா.. போக போக சரியாகிடும்..” என்றவன் தன் வேலையைப் பார்க்க,

“எது எப்படியோ ரூபன், மஞ்சுளாவ ரொம்ப கலங்க விடாத.. அவளுக்கு நீயும் நிவினும் தான் எல்லாம்..” என, அம்மாவை எண்ணி மனதில் வருத்தம் இருந்தாலும், அதனைக் காட்டாது,

“நான் பார்த்துக்கிறேன் மாமா…” என்றான் உணர்ந்து சொல்வதுபோல்..

ஆம் பார்த்துதான் ஆகவேண்டும்.. இனி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டும்.. யாருக்கும் எவ்வித பாதிப்பும் வரக்கூடாது. அது மஞ்சுளாவாக இருந்தாலும் சரி இல்லை கண்மணியாக இருந்தாலும் சரி.. அவனுக்கு அவனின் காதல் முக்கியம் தான்.

ஆனால் அதனைவிட முக்கியம் இந்த இரு பெண்கள் மனது காயப்பட்டுவிட கூடாது என்பது.

அம்மாவோடு எப்படியேனும் பேசிவிட வேண்டும் என்று தோன்ற, அதே நேரம் கண்மணி தனக்கு அழைப்பாளா??  என்ற கேள்வியும் பிறந்தது. அவளின் சுபாவத்திற்கு அழைக்க மாட்டாள் தான், தெரிந்தே இருந்தாலும் மனது எதிர்பார்க்கத் தொடங்கியது. அங்கே என்ன நடக்கிறதோ??

கண்ணன் ஒருவேளை தங்கைக்காக தன் காதலை தூக்கிப் போட்டால், இவன் காதலும் அல்லவா காணாது போகும்..

என்ன நடக்குமோ ?? என்ற யோசனை ஓடிக்கொண்டே இருந்தாலும், வேலையில் கவனமாய் இருக்க, கொஞ்ச நேரத்திலேயே மஞ்சுளா சுப்பிரமணிக்கு அழைத்து வீட்டிற்கு அதிரூபனை வர சொன்னார்..

“கிளம்பு ரூபன்.. மஞ்சுளா கூப்பிடுறா…” என,

“இல்ல மாமா.. ஆட்டோல போயிக்கிறேன்.. நீங்க அலைய வேணாம்..” என்றவனும் கிளம்பிவிட்டான்..

மஞ்சுளாவோடு பேசவேண்டும் என்று வீட்டிற்கு போக, இவன் வந்ததுமே மஞ்சுளா பழையபடி முகத்தை திருப்பிக்கொண்டார்..

“ம்மா ம்மா.. என்னம்மா…” என்று அவரின் பின்னேயே போனான்..

சாந்தியும் “எத்தனை நாளைக்கு நீ இப்படி இருக்க முடியும்??” என்று கேட்க, மஞ்சுளாவோ லேசாய் மகனைப் பார்த்தவர்,

“சின்ன பையன்னா அடிச்சு திருத்தலாம்.. இவளோ பெரியவனை என்ன செய்ய முடியும் அண்ணி..” என்றார் ஆற்றாமையாய்.

“ம்மா அடிக்கவேணா செய்ம்மா.. ஆனா பேசாம இருக்காத ப்ளீஸ்…” என்று அதிரூபன் மஞ்சுளாவின் கையை பிடித்து கெஞ்ச,

“என்னடா புதுசா?? கெஞ்சல் எல்லாம்..” என்றார் அதட்டி..

“நீ அடிச்சுக்கோ ஆனா பேசாம இருக்காத.. எனக்கு.. அப்போ எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலைம்மா…”

“ம்ம்ம்…”

“நிஜமாம்மா..”

“அப்போ நீ எதையும் என்கிட்டே மறைக்கல அப்படிதானே…” என்று மஞ்சுளா கேட்டதும் இவனுக்கு திடுக்கென்று தான் இருந்தது.

எதை கேட்கிறார் அம்மா என்று.. பவித்ரா விசயமா?? இல்லை கண்மணி வசயமா?? இரண்டையுமே தானே மறைத்திருக்கிறான். இரண்டில் எது தெரிந்தாலும் நிச்சயம் இப்போது மஞ்சுளாவின் மனம் வருந்தும். ஆக வாயே திறக்கக் கூடாது என்று அம்மாவைப் பார்க்க,

“என்னடா யோசிக்கிற? நீ யோசிக்கிறதைப் பார்த்தா நிறைய இருக்கும் போல” என்றார்.

“ம்மா…!!!!”

“ஹ்ம்ம்.. என்னவோ போ.. கை சரியாகணும் முதல்ல.. இனியாவது எது செஞ்சாலும் யோசிச்சு செய்.. வேற நான் என்ன சொல்லன்னு எனக்கு நிஜமா தெரியலை. இப்போ இந்த வீட்ல நீதான் பெரியவன்.. நானே உன் நிழல்ல தான் இருக்கேன்…” எனும்போதே மஞ்சுளாவிற்கு குரல் உடைந்துவிட,

“ம்மா ப்ளீஸ் ம்மா அழாத ப்ளீஸ்…” என்றவன் லேசாய் மஞ்சுளாவை அணைத்துக்கொள்ள,

“உனக்கு பிடிக்காத லைப் நான் அமைச்சுக் கொடுப்பேனாடா?? போட்டோ பார்த்தே வேணாம் சொல்லிருந்தா நான் என்ன சொல்லப் போறேன்.. அதுக்காக இப்படி..” என்று அவனின் அடிபட்ட கையை வருடியவர்,

“ம்ம்ச் போடா…” என்றும் சொல்ல,

“அப்போ நான் போகவா ம்மா??” என்றான் செல்லம் கொஞ்சி..

மனதில் மஞ்சுளா பேசிவிட்டது ஒரு நிம்மதி கொடுத்தாலும், அவரின் வருத்தம் நிஜமாகவே அவனுக்கு கஷ்டமாய் இருந்தது. இனியொரு முறை இப்படி எதுவும் நடந்துவிட கூடாது என்று எண்ணிக்கொண்டான்..

சில நேரங்களில் பெண்களின் நிலையை விட ஆண்களின் நிலைதான் அந்தோ பரிதாபம். எப்பக்கமும் சாய முடியாது. பெற்றவருக்கும் சார்ந்து பேச முடியாது, பிடித்தவளுக்கும் சார்ந்து பேச முடியாது. இரண்டிற்கும் இடையே நசுங்கி நின்று அதுவும் வலிக்காத மாதிரியே நடிக்கவும் வேண்டும்..

‘சரியோ தப்போ உன் புருஷன் சொல்றதை கேட்டு நட.. அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது..’ என்று ஒரு பெண்ணுக்கு அறிவுரை சொல்லும் சமூகம்,

‘எதுவா இருந்தாலும் உன் பொண்டாட்டிய புரிஞ்சு நடந்துக்கோ.. அதுதான் உன்னோட வாழ்க்கைக்கு நல்லது..’ என்று அத்தனை எளிதாய் சொல்லுவதில்லை.

‘பொண்டாட்டி தாசனா போயிடாதடா…’ என்றுதான் இன்னமும் கூட சொல்லுகிறார்கள்..

அதிரூபனுக்கு இதெல்லாம் நினைத்தால் இப்போவே அள்ளு கழண்டு விடும் போலிருக்க, அவனுக்கு கண்ணனின் நிலையை எண்ணி பாவமாய் இருந்தது.

‘டேய் டேய் உன் வருங்கால மச்சானுக்காக பீல் பண்றியா??’ என்று அவன் மனசாட்சி கேட்க,

‘மாமனோ மச்சானோ.. பாவம் அவனும் லவ் பண்ற ஒரு ஜீவன்.. அதான்..’ என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்..

அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு முறை அழைப்பு வரும்போதும், ஒருவேளை அது கண்மணியாய் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிரூபனுள் கூடிக்கொண்டே போக,

‘ஹ்ம்ம் அவ நம்பரையும் வாங்கிருக்கணும்.. அட்லீஸ்ட் என்னாச்சுன்னு கேட்டாவது இருக்கலாம்..’ என்றுசொல்லி, அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கையில் கண்மணியே அழைத்தாள்.

“ஹ… ஹலோ நான்.. கண்மணி பேசுறேன்..” எனும்போதே அவள் குரலில் அப்படியொரு சந்தோசம்..

‘க.. கண்மணி….’ என்று அவன் மனது சத்தமாய் கத்தினாலும், அவனின் இதழ்களோ “ஹா… கண்மணி.. சொல்லு.. எல்லாம் ஓகே தானே..??” என்றான் ஆவலோடு..

“ம்ம்.. எஸ்.. எல்லாமே ஓகே தான்.. அதான் போன் பண்ணேன்…” என, இவனுக்கோ குழப்பமாய் போனது..

“என்னாச்சு?? புரியல…”

“அண்ணாக்கும் தீபாக்கும் வர்ற புதன் நிச்சயம்..” என,

“வாவ்.. சூப்பர்… அப்.. அப்போ அந்த பொண்ணு விஷயம்??” என்றான் ‘கடவுளே அங்க என்ன ஆப்பு இருக்கோ??’ என்ற பயத்தில்..

“அது ஒண்ணுமில்ல.. இதுதான் விஷயம் அப்படின்னு சொல்லவும் அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க..”

“ஓ!!! யா.. யார் சொன்னா??”

“நான்தான்….”

“யார்…. யார்கிட்ட??”    

“வருண்கிட்ட…”

அவ்வளவுதான்.. வடகொரியா செய்யும் அணு ஆயுத சோதனைகள் எல்லாம் அதிரூபனின் மனதில் வெடித்தது.        

     

      

   

       

                  

Advertisement