Advertisement

தூறல் – 10

கண்மணியின் பதற்றம் அதிரூபனுக்கு சிறிதும் இல்லை. மாறாக தன்னருகே வந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே இருக்க, அவன் முகத்தினில் வலியை தாண்டிய ஒரு சந்தோசம் தென்பட,

“என்னாச்சு??” என்று திரும்பவும் கேட்டாள் கண்மணி.

கட்டுப்போட்டிருந்த அவனின் கையையும், வலி தெரிகிறதா என்று அவனின் முகத்தையும் கண்மணி மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, அவனோ அவளின் முகத்தினில் தெரியும் மாறுதல்களை எல்லாம் ரசித்துக்கொண்டு இருந்தான்.

‘எனக்கு வலிச்சா உனக்கும் வலிக்குமா???’ என்று அவனுள் ஒரு கேள்வி எழ, ஆனால் அதை அவனால் கேட்கவும் முடியாதே..

கேட்டால் ‘லூசா நீ…’ என்றுதான் கண்மணி நிச்சயம் பார்ப்பாள் என்று தெரியும்..

அக அதைவிட்டு “கண்ணாடி டேபிள் இடிச்சிடிச்சு…” என்றுமட்டும் சொன்னான்..

‘ஓ..!!!’ என்று இதழ் குவித்தவள், “டேபிள்… அதா வந்தா இடிக்குமா???” என்றாள் பார்வையை மட்டும் அவன் முகத்தை பார்த்து நிறுத்தி.

‘ஆகா….!!!!!!!!! கண்மணி அடுத்த மஞ்சுளா…..’ என்று எண்ணியது அவனின் மனம்.. ஆனால் தலையோ ‘இல்லையென்று…’ ஆட,

‘பின்ன??!!’ என்று கண்களை சுருக்கி, கேள்வியை மட்டும் கண்ணில் காட்டினாள்.

“அது… அது… நானே இடிச்சிட்டேன்…”

“ஏன் ஏன்??” என்று கண்மணி வேகமாகவே கேட்டாலும், சத்தம் என்னவோ அத்தனை எட்டவில்லை அவனுக்கு..

ஆனாலும் அவனின் பார்வை எல்லாம் அவளின் முகத்திலேயே இருக்க, அவளின் ஒவ்வொரு இதழ் அசைப்பும் அவனுக்கு அர்த்தம் சொல்ல,

“அது.. ஒரு சின்ன டென்சன்…” என்றான் மறைக்காது.

‘ஓ..!!!’ என்று அப்போதும் வாயசைத்தவள், “அடிபடவும், டென்சன் போயிடுச்சா???” என்றாள் அடுத்து.

‘டேய் இதுக்கு நீ கிளம்பியே இருக்கலாம்..’ என்று தோன்றிவிட்டது அதிரூபனுக்கு.. கண்மணி இத்தனை கேள்விகள் கேட்பாள் என்று அவன் நினைத்துகூட பார்த்திடவில்லை.

அடிபட்டது பார்த்து, ‘பார்த்து இருங்க…’ என்று சொல்வாள் என்றே எண்ணியிருந்தான். அவனோ மஞ்சுளாவின் அடுத்த ரூபமாய் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டுகொண்டே இருக்க, பேசாது ஆரம்பித்திலேயே உண்மையை சொல்லியிருக்கலாம், இல்லையோ அப்படியே கிளம்பியிருக்கலாம் என்று தோன்றியது..

அட.. முன்னே வைத்த காலை பின்னே வைப்பதா???  அதுவும் அதிரூபனா??? இல்லவே இல்லையே..

கண்மணி நீ எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, இன்று நீ என்னோடு பேசியாகவேண்டும்.. சிறிதாவது உன்னுள் என்னாலான மாற்றம் எதுவும் நிகழவேண்டும். அல்லது கொஞ்சமாவது உன் சிந்தையில் என் நினைவு உள் நுழைந்திட வேண்டும்.. இதுமட்டுமே அவனின் எண்ணமாக இருக்க, அவர்களின் பேச்சினை வளர்க்கவே விரும்பினான்.

“டென்சன் குறைஞ்சிருக்கு…” என்றுமட்டும் சொன்னான்..

“கேட்க மறந்துட்டேன் உங்களுக்கு பிக்ஸ் ஆகிடுச்சுன்னு நிவின் சொன்னான்…” என்று கண்மணி சொல்ல,

‘ரொம்ப முக்கியம்…’ என்றெண்ணியவன் “அதெல்லாம் இல்லை டிராப் ஆகிடுச்சு…” என்றான் அதிரூபன் வேகமாய்.

“அச்சோ.. ஏன்?? எப்படி?? என்னாச்சு?? அதான் டென்சனா…” என்றவள் திரும்பவும் அவனின் கரங்களைப் பார்க்க, அவளின் முகத்தினில் ஏதோ ஒரு ஓரத்தில் சின்னதாய் ஒரு நிம்மதி தெரிவது போல் இருந்தது அதிரூபனுக்கு..

அது அவனின் மனபிராந்தி அல்ல, காதல் பிராந்தி.. தனக்கு சாதகமாவே அனைத்தையும் பார்த்துக்கொள்ளும், பருகிக்கொள்ளும். அதுபோலவே கண்மணி பேசுவது எல்லாம் அவனின் காதல் மனதிற்கு அனைத்துமே சாதகமாய் இருந்தது..

தனக்கு சாதகமாய் எதுவும் கிடைக்கிறதா என்றும் ஒவ்வொன்றையும் வெகு நுண்ணியமாய் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு, தான் வருகையில் கண்மணி சோகமாய் அமர்ந்திருப்பது போல் இருந்தது நினைவு வந்தது.. 

‘ஒருவேள வந்த மாப்பிளை ஓட்டிட்டானோ…’ என்ற எண்ணமும் தோன்ற, “நீ ஏன் டல்லா இருக்க??” என்றான்.

இவன் தன்னை கவனித்தானோ என்ற ஆச்சர்யத்தில் கண்மணியின் கண்கள் தானாய் விரிய, “டல்லா உட்கார்ந்திருந்த…” என்றான் அதிரூபனும் திரும்ப.

“ம்ம்ம்… கொஞ்சம் டென்சன்…” என்று அவளும் மறைக்காது சொல்ல,

‘ஓ..!!!’ என்று அவளை போலவே செய்யவும், கண்மணிக்கு தெரியவில்லை தான் ஏன் இவனிடம் இப்படி நின்று பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று. பொதுவாய் வீட்டினரிடமே அத்தனை பேசாத கண்மணி, அதிரூபனிடம் நின்று பேசுவோம் என்றும் கூட அவள் எதிர்ப்பார்க்கவில்லை..

பேச வைக்கவேண்டும்என்று அதிரூபன் நினைத்தது ஒருபுறம் இருந்தாலும், இருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என்று விதி நினைத்ததுவோ என்னவோ.. நாம் என்ன திட்டங்கள் தீட்டினாலும் நடக்கவேண்டும் என்பதுதானே நடந்தேறும்..   

கண்மணிக்கோ மனதில் ஒருவித குழப்பம், காரணமின்றி ஒரு பயம், இதெல்லாம் சேர்த்து அவளுக்கு ஒரு நிம்மதியின்மையை கொடுக்க, சியாமளாவிடம் சொல்லிக்கொண்டு கோவிலுக்கு வந்திருந்தாள்.

வருண் வீட்டினர் வந்து பெண் பார்த்துவிட்டு போகவும், சடகோபன் அவர்களை எல்லாம் வீட்டிற்கு ஒருமுறை அழைக்க, வருணுக்கு விடுமுறை இல்லையென்பதால் அவன் டெல்லி சென்றுவிட்டான்.

கண்ணனுக்கு என்னவோ அனைத்தும் வேகமாய் நடப்பதாகவே பட, கண்மணியோ அவனிடம் “அப்பாக்கிட்ட பேசு பேசு…” என்றுவேறு சொல்லிக்கொண்டு இருந்தாள்.

போதாத குறைக்கு தீபா வேறு அவள் வீட்டில் நடப்பதை எல்லாம் சொல்ல, கண்மணியோ கண்ணனை போட்டு அர்ச்சித்துக்கொண்டு இருந்தாள்.

அந்த வார கடைசி போல், வருணின் பெற்றோர்கள், மூர்த்தி அவரது மனைவி பின்னே இன்னும் இருவர் என்று அவர்கள் உறவில் கண்மணி வீட்டிற்கு வந்திருக்க, சடகோபனும் சியாமளாவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தனை நாட்கள் பார்த்த வரன்களை விட, வருண் வீட்டினரையும் சரி, வருணையும் சரி அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னதான் மூர்த்தி சடகோபனுக்கு நண்பர் என்றாலும், அவரின் அண்ணன் குடும்பத்தினர் அத்தனை பழக்கம் இல்லைதான். ஆனால் இப்போதோ, மனதில் ஒரு நிறைவு வந்திருந்தது..

தங்கள் பெண்ணை நல்ல இடத்தில் தான் கொடுக்கப் போகிறோம் என்ற நிறைவு. ஆகையால் வந்திருந்தவர்களை எல்லாம் வரவேற்று பேசிக்கொண்டு இருக்க, கண்மணியோ மீண்டும் ஒரு சிறு ஒப்பனையுடன், சேலைக்  கட்டி பூச்சூடி என்று அலங்காரத்தில் இருந்தாள்.

‘சுடிதாரே போடுறேனேம்மா…’ என்று அவள் சொன்னதற்கு, சியாமளா கூட சரியென்று சொல்லிவிட்டார்,

ஆனால் சடகோபனோ “இதென்ன பழக்கம்.. பாந்தமா சேலை தான் கட்டனும்..” என்றுவிட்டார்..

கண்ணனுக்கு பல விசயங்களில் மனதினில் கடுப்பு ஏறிக்கொண்டே போனது. முதல் நாள் அப்பாவிடம் சொன்னான் தான்.

“ப்பா.. மூர்த்தி அங்கிள் சொல்றார்னு மட்டும் இல்லாம நாம ஒன்ஸ் வருண் பத்தி டெல்லில யாராவது தெரிஞ்சவங்கக்  கிட்ட விசாரிக்கணும்.. வருண் வேலை செய்ற இடத்துல விசாரிக்கணும்..” என்று.

கண்மணியோ ‘நான் எதை பேச சொன்னா நீ என்ன பேசிட்டு இருக்க..’ என்று முறைத்தாள்..

சடகோபனோ சிறிது நேர யோசனைக்கு பிறகு, “எனக்கு எதுவும் தப்பா தெரியலை.. தப்பு இருக்குமோன்னு சந்தேகமா பார்த்தா சரியா இருக்கிறது கூட நமக்கு தப்பா தான் தெரியும்… இது என் அனுபவத்துல நான் பார்த்தது.. இல்ல திருப்தியா இல்லை விசாரிச்சுதான் ஆகணும்னா.. தாராளமா பண்ணலாம்.. அது உன்னோட விருப்பம்..” என்றுவிட்டார்..

‘இவரென்ன செய் என்கிறாரா இல்லை வேண்டாம் என்கிறாரா??’ என்று கண்ணனுக்கு குழப்பமானது தான் மிச்சம்.

அவனோ சியாமளாவின் முகம் பார்க்க,  சியாமளாவோ ‘அப்புறம் பேசலாம்..’ என்று சைகை செய்துவிட்டு அமைதியாய் இருந்தார். சிறிது நேரத்தில் சடகோபனும் எழுந்து சென்றுவிட, “அம்மா…” என்று திரும்ப ஆரம்பித்தான் கண்ணன்.

கண்மணியோ அனைத்தையும் வேடிக்கையாய் பார்த்துகொண்டு இருந்தாள். அவளின் திருமண வாழவிற்காகத்தான் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு அப்போது இல்லை. என்னவோ அனைவரும் பேசுகிறார்கள் வழக்கம் போல் கேட்டுக்கொண்டு இருப்போம் என்ற பாவனையே அவளின் முகத்தினில்.

“அப்பா ஏற்கனவே எல்லாம் விசாரிச்சிட்டாருடா.. உன்னோட திருப்திக்கு வேணும்னா நீயும் யார்கிட்ட வேணுமோ விசாரிசிக்கோ..” என்று சியாமளா சொல்ல,

கண்ணனோ “ஏம்மா, இந்த வீட்ல தானே நாங்களும் இருக்கோம்.. விசாரிச்சதை எங்களுக்கு சொல்லனுமா வேணாமா?? இப்போ நான் சொல்றப்போ கூட பட்டும் படாமா பேசிட்டு போறார்…” என்று பொரிய ஆரம்பித்துவிட்டான்.

“டேய் டேய் ஏன்டா.. மெதுவா பேசு…” என்று மகனை சியாமளா அடக்க, “என்ன மெதுவா பேசு… மூர்த்தி அங்கிள் சொந்தம்னா நம்ம எதுவும் கேட்க கூடாதுன்னு இருக்கா..” என்றான் வேண்டுமென்றே கத்தி.

“கண்ணா….”

“சும்மா சும்மா என்னை சொல்லாதம்மா… என்னவோ எல்லாம் அவசர அவசரமா நடக்கிறது போல இருக்கு…” என்றவன் கோபமாய் வெளியே சென்றுவிட,

‘இவனுக்கு என்னதான் ஆச்சோ…’ என்று புலம்பியபடி சியமளா மகளின் முகத்தைப் பார்க்க, அவளோ எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல் வெறுமெனே அமர்ந்திருந்தாள்.

“கண்மணி அண்ணனுக்கு இருக்கிறதுபோல உனக்கு எதுவும் சந்தேகம் இருக்கா??” என்று சியாமளா நேரிடையாகவே மகளிடம் கேட்க,

“என்னமா??!!” என்றாள் புரியாது..

“ம்ம் எல்லாமே அவசரமா நடக்குதாம்.. அவனும் மாப்பிள்ளை பத்தி விசாரிக்க போறானாம்.. அதான் உனக்கு இப்பத் ஏதாவது இருக்குதான்னு கேட்டேன்…”

“ஆ.. இல்லம்மா…” என்று தலையை ஆட்டியவள் தான், அதன் பின் இந்த பேச்சுக்கே வரவில்லை..

கண்ணனோ வீடு வரவே இரவு ஆகிவிட, மறுநாள் வருண் வீட்டினர் வருகிறார்கள் என்ற தகவல் மட்டுமே அவனிடம் சொல்லப்பட்டது.. அப்போதும் அம்மாவைதான் முறைத்தான்.

“என்னை என்னடா செய்ய சொல்ற?? இப்போதான் சொன்னாங்க.. காலைல போய் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்திடு சரியா…” என்றார் அவர் வேலையாய்.

“அதானே ஸ்வீட் வாங்க, எடுபிடி வேலை செய்தான் வீட்ல இருக்க பசங்க வேணும்..” என்று முனங்கியவன், சடகோபன் வரவும் வாயை மூடிக்கொண்டான்.

ஆக இந்த கடுப்பெல்லாம் அவனுக்கு மறுநாளும் மனதினில் இருந்தது. வந்தவர்களிடம் பேசினாலும், உபசரித்தாலும் கண்ணன் என்னவோ ஒட்டாத பாவனையே காட்ட, சடகோபன் சியாமளாவை பார்த்தார்..

சியாமளாவோ “நீ போய் கண்மணி கூட இரேன்..” என்று மெதுவாய் சொல்ல, பல்லை கடித்தபடி அவனும் எழுந்து சென்றான்..

கண்ணன் வந்ததுமே “என்னண்ணா…” என்று கண்மணி கேட்க, “ம்ம்ச் கடுப்பா இருக்கு…” என்றபடி இவனும் அமர,

“உ… உனக்கு பிடிக்கலையா???” என்றாள் கண்மணி பாவமாய்..

“என்ன பிடிக்கலையா??”

“அ.. அதான் இந்த வரன்…”

“வரனா.. வருணா???”

“ரெண்டும்தான்…”

“உனக்கு பிடிச்சிருக்கா?? அதையே உனக்கு உருப்படியா சொல்ல தெரியலை.. என்னவோ செய்ங்க…” என்று கண்ணன் கடியும் போதே, சியாமளா வேகமாய் உள்ளே வந்தவர்,

“டேய் வாடா.. உன்னைத்தான் கூப்பிடுறாங்க…” என்றார் மகனிடம்.

“ஏம்மா என்னா?? போன்னு சொல்ற.. இப்போ வான்னு சொல்ற..”

“டேய் இது வேற விஷயம்டா வா.. எல்லாம் நல்லதுக்கு தான்…” என்று சியாமளா அழைக்க, அவர் முகத்தினில் இப்போது மேலும் ஒரு சந்தோசம் கூடியதாய் இருந்தது.

கண்மணி இருவரையும் மாறி மாறி பார்க்க, “என்ன விசயம்??” என்றான் கண்ணன்..

“நீ வா சொல்றேன்..”

“நீ சொல்லு நான் வர்றேன்…”

“இவன் ஒருத்தன்…” என்றவர் “மாப்பிள்ளையோட சித்திக்கு ஒரு பொண்ணு இருக்காம்.. அந்த பொண்ணோட அப்பா கூட வந்திருக்கார் இப்போ.. அதான் உனக்கு பேசலாமான்னு கேட்கிறாங்க..” என்று சியாமளா சொல்லவும்,

அண்ணன் தங்கைக்கு பக்கென்று இருந்தது.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, சியமளாவோ “வா கண்ணா.. உன்கிட்ட பேசணும் சொல்றாங்க..” என்றார்..

“ம்மா..!!!” என்று கண்ணன் அதிர்ந்து அழைக்க,

“முடிவெல்லாம் உன்னை கேட்காம அப்பா சொல்ல மாட்டார்.. சும்மா உன்கிட்ட பேச கேட்டா ரொம்ப பிகு பண்ணாம வா.. என்ன இருந்தாலும் நாளைக்கு நம்ம கண்மணி வாழ போற இடம்…” என்று மகனை அழைக்க, கண்மணிக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்பது அவளின் முகத்திலேயே தெரிந்தது..

“என்ன கண்மணி நீயாது சொல்லு…” என்று மகளைப் பார்க்க, அவளோ முகத்தினை சுருக்கி “ம்ம்ச் இதென்னம்மா..” என்றாள் எரிச்சலாய்..

“ஏன் டி…”

“எனக்கு புடிக்கலம்மா.. இது.. இதெல்லாம் சரி வராது..” என்று கண்மணி பட்டென்று சொல்லிட, கண்ணனுக்கு கூட ஆச்சர்யம் தான் இது..

எப்பவுமே அதிர்ந்து பேசாதவள், இப்போதென்ன பட்டென்று பேசுகிறாள் என்று பார்க்க, சியாமளாவோ “என்ன?? என்ன சொல்ற நீ?? எது சரி வராது??” என்றார் கொஞ்சம் டென்சனாகி..

“அதான்.. இது.. இப்படி அண்ணனுக்கு பேசணும் சொல்றது..”

“எதுன்னாலும் உடனே இல்ல..” என்ற சியாமளா “எழுந்து வாயேன் டா…” என்றார் மகனைப் பார்த்து.

கண்ணன், கண்மணியை பார்த்துக்கொண்டே வேறு வழியே இல்லாது கிளம்பி செல்ல, கண்மணிக்கோ இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது. எங்கே தன் கல்யாணத்தை காரணம் காட்டி கண்ணனுக்கு இந்த பெண்ணை பேசி முடிப்பார்களோ என்று அச்சம் எழ, தீபாவின் நினைவு வந்து அவளுக்கு மேலும் சிரமத்தை கொடுத்தது..

சியாமளா பட்டும்படாமல் சொல்லிச் சென்றாலும், தாங்கள் இதனை மறுத்து, அதுவேறு வருண் வீட்டினருக்கு ஒரு மன கசப்பு கொடுத்து, இதெல்லாம் ஏன் தேவையில்லாதது என்று தோன்ற, கண்ணன் திரும்பி வரும் வரைக்கும் பதற்றமாகவே அமர்ந்திருந்தாள்..

கால்மணி நேரம் கழித்தே கண்ணன் திரும்ப கண்மணியின் அறைக்கு வர, அவனின் முகத்தையே கேள்வியாய் பார்த்தாள்.. கண்ணனனோ பொத்தென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன், “ம்ம்ச்..” என்று சலித்துக்கொள்ள,

“என்னண்ணா??” என்றாள் இவள்..

“என்ன கண்ஸ்…”

“என்னாச்சு….??”

“ஹ்ம்ம்….. ஒண்ணுமில்ல என்னை கொஞ்சம் யோசிக்கவிடு…” என்று கண்ணன் சொல்ல, அவனின் முகமும் குரலுமே சொன்னது நடந்தது இவர்களுக்கு சாதகமான விசயமல்ல என்று. சிறிது நேரம் அங்கே அமைதி மட்டுமே நிலவ,

திரும்பவும் சியாமளா வந்தார் “அவங்க எல்லாம் கிளம்புறாங்.. வாங்க ரெண்டு பேரும்…” என்று என்று அழைத்தபடி,

இருவருக்குமே எழுந்து போக மனதில்லை, ஆனாலும் எப்போதடா கிளம்புவார்கள் என்று இருந்தது. இந்த ஒரு விசயத்திலேயே கண்மணிக்கு வருண் வீட்டினர் மீதிருந்த ஓர் பிடிப்பு விட்டுப் போனதாய் இருந்தது. வேண்டாம் சொல்வதற்கு காரணமில்லை ஆக சரி சொன்னேன் என்று இருந்தவளுக்கு, இப்போது இந்த ஒரு காரணமே போதுமாய் இருந்தது வேண்டாம் என்பதற்கு..

ஆம் கண்மணி இப்போது மனதளவில் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள், ஒருவேளை அந்த பெண்ணை தான் கண்ணனுக்கு முடிக்கவேண்டும் என்று பிடிவாதமோ இல்லை அழுத்தமோ கொடுத்தால், அவள் தயங்காது தனக்கு இந்த திருமணம் வேண்டாம் முடிவில் இருந்தாள்.

கண்ணன் மனதிலோ, எதிர்பாராது நடந்துபோன இந்த நிகழ்வை யாருக்கும் பாதிப்பில்லாது எப்படி கையாள்வது என்ற யோசனையே. கொஞ்சம் வார்த்தைகள் தவறானால் கூட, கண்மணிக்கு அமைந்திருக்கும் இந்த சம்பந்தம் கெட்டுப்போக வாய்ப்பிருக்கும்.. ஆக அதெல்லாம் இல்லாது எப்படி இதிலிருந்து வெளி வருவது என்ற யோசனையுடனே அண்ணன் தங்கை இருவரும் வீட்டிற்கு வந்தவர்களை வழியனுப்பிவிட்டு வர,

சடகோபனோ உள்ளே வந்ததும் “ரெண்டுபேரும் இப்படி உக்காருங்க கொஞ்சம் பேசணும்..” என்றார்..

அவர் என்ன பேசப் போகிறார் என்பது இருவருக்கும் தெரிந்தாலும், அமைதியாகவே இருக்க, “இதை நானுமே எதிர்பார்க்கலை..” என்றார் கொஞ்சம் தயக்கமாய்.

சடகோபனின் குரலில் இப்படியான தயக்கம் எட்டிப் பார்ப்பது எல்லாம் அரிது.. சொல்லப்போனால் எப்போதுமே தான் எடுப்பது தான் சரியான முடிவு என்று இருப்பவர் இன்று கொஞ்சம் யோசனையாய் இருக்க,

சியாமளாவோ, “கல்யாணம் எல்லாம் நேரம் வந்தா தன்னப்போல கூடிவரும்..” என்றார்..

கண்மணியோ கண்ணனை பார்க்க, அவனோ எதோ யோசனையில் இருப்பதாகவே பட்டது, கண்மணிக்கு அவன் இப்போது வாய் திறக்கமாட்டான் என்றே தோன்ற, அதுவும் தனக்காக யோசித்துக்கொண்டு இருப்பான் என்றும் தெரிய இனியும் தான் சும்மா இருப்பது சரியல்ல என்று

“ப்பா…” என்றாள் கொஞ்சம் தைரியம் வரவழைத்து.

ஆனால் அதன் பின் நடந்தது தான் அவர்கள் சற்று நினைக்காததாக அமைந்திட வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் நிம்மதியும் பறிபோனது..  

  

 

கண்மணிக்கு தெரியவில்லை தான் ஏன் இதெல்லாம் அதிரூபனிடம் பகிர்கிறோம் என்று. கல்லூரி தோழிகளிடம் இதெல்லாம் சொல்ல முடியாது. தீபாவோ பாவம்.. ஏற்கனவே இதெல்லாம் கேட்டு அரண்டு போய் இருக்கிறாள். கண்ணனோ மிக மிக குழப்பத்தில் இருக்கிறான்.

அப்பாவும் அம்மாவும் பிள்ளைகள் மீது பயங்கர கோபத்தில் இருக்க, கண்மணிக்கு யாரிடமாவது மனம் விட்டு பேசவேண்டும் போல் இருந்தது. ஆனால் யாரிடம் பேசுவது??

மனதில் ஒரு அமைதி தேவைபட, சியாமளாவிடம் கோவிலுக்கு போகிறேன் என்றுசொல்ல, அவரோ முறைத்தார்..

“கொஞ்சம் டென்சனா இருக்கும்மா…” என்றவளை பார்த்து என்ன நினைத்தாரோ “நல்லதே நடக்கனும்னு வேண்டிட்டு வா..” என்று அனுப்பிவிட்டார்..

இங்கே வந்தாலோ, என்னதான் இறைவனிடம் முறையிட்டாலும் மனதினில் எழும் குழப்ப அலைகள் அடங்குவதாய் இல்லை

அடுத்து என்ன நடக்கும்??

தான் என்ன செய்ய வேண்டும்??

இந்த இரு கேள்விகளே அவள் முன் நிற்க, இப்போதோ அதிரூபன் முன் நின்றிருந்தாள் அவள்.

அதிரூபனுக்கே ஆச்சர்யம் தான் கமலி இத்தனை பேசியது.. ஆனாலும் அதை சொன்னால் அதுவும் இப்போது சொன்னால் எங்கே இந்த வாய்ப்பு கூட கைவிட்டு விடும் என்றெண்ணியவன், “உன் அண்ணா என்ன சொல்றாங்க??” என்றான்..

“அவன் என்ன சொல்வான்.. எல்லாத்தையும் வீட்ல சொல்லிட்டான்.. என்மேலயும் அப்பா அம்மாக்கு கோபம்..”

“ஓ…!! அப்போ தீபா??”

“பாவம் தீபா.. அழற..” என்றவள் “என்னை வருண் கிட்ட பேச சொல்றா.. எல்லாத்தையும் சொல்லி இதெல்லாம் முடியாதுன்னு சொல்லு அப்படின்னு..” என,

“என்னது??!!!!” என்று லேசாய் அதிரூபன் அதிர்ந்து கேட்டுவிட்டான்..

 

 

 

 

 

 

 

Advertisement