Advertisement

காதல் சிந்தும் தூறல் – 1

“அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி…”

தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள் “டூ மினிட்ஸ்…” என்று பதில் சொல்லியபடி நடந்தாள்..

சென்னையின் ஜன சந்தடிகளுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதிருந்தது அடையாரின் அந்தத் தெரு. சிறிதும் பெரிதுமாய் காம்பவுண்ட் சுவருடன் கூடிய தனி தனி வீடுகளும், கண்மணி வேக வேகமாய் நடந்துவந்து கொண்டு இருந்தாள்..

இதோ இன்னும் இரண்டே இரண்டு நிமிடங்கள்தான்.. மெயின் ரோட்டினை தொட்டுவிட்டால், பின் அந்த ‘அலங்கார்….’ கடையினுள் நுழைந்துவிடலாம்..

அலங்கார்.. அந்த பெயரே அவளை கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.. இப்போதுதான் ஒரு வருடமாய் ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்தம் இரண்டு தளங்களை கொண்டிருந்தது அலங்கார்.. கீழ் தளமும் முழுதும் பெண்களுக்கானது… முதல் தளம் ஆண்களின் உடைகள்.. அதற்கும் மேல்  இரண்டாவது தளம்.. கை கடிகாரத்திற்கானது..

ஆம் கை கடிகாரமே தான்.. உடைகள் மட்டும் பிரத்யேகமாய் இருந்தால் போதுமா என்ன??? அதிலும் அவனுக்கு.. அதிரூபனுக்கு… எப்போதுமே ‘வாட்ச்…’ என்றால் தனி ப்ரியம் தான்.

ப்ரியம் என்பதனை விட, பைத்தியம் என்றுகூட சொல்லிடலாம்.. பல பல பிராண்டட் கடிகாரங்கள் ஆயிரம் இருந்தாலும், தானே தன் கையால், வாடிக்கையாளர்களுக்கு  செய்து தரவேண்டும் என்று அதற்கான வகுப்புகள் கூட சென்றான்..

இதோ அவன் நினைத்தும் நிறைவேறிவிட்டது.. ஆடைகள் அதனோடு அவனின் ப்ரியமான வேலையும்.. அலங்காருக்கு வந்தால் அதிரூபனின் வாசம் எப்போதுமே இரண்டாவது தளத்தில் மட்டும் தான் இருக்கும். இவனின் கண்காணிப்போடு  மற்ற இரண்டு தளத்திலும் அது அதற்கு ஆட்களை போட்டிருந்தான்.. ஆக அனைத்துமே சுமுகமாய் சென்றது..

‘வேலையை விட்டுவிட்டு தொழில் செய்ய போகிறாயா??’  இந்த கேள்வி அவன்முன் ஒரு வருடத்திற்கு முன் பூதாகரமாய் நின்றது.. ஆனால் பார்க்கும் வேலையில் மனம் நிம்மதியாய் இருந்தால் தானே.

அனைவரும் படித்த அதே என்ஜினியர் படிப்பு.. படிப்பு முடியும் போதே வேலை.. அதன்பின்னே டெபுடேசனில் வெளிநாடு. ‘காடாறு மாசம்.. நாடாறு மாசம்..’ என்பதுபோல அவ்வப்போது இந்தியா வர, திரும்ப வேலைக்கு வெளிநாடு போக, வெறுத்துப் போனான்..

வசதி என்றுபார்த்தால், அப்பர் மிடில் க்ளாஸ்தான்.. அப்பாவிற்கு தனியாரில் வேலை.. அம்மா வீட்டரசி.. தம்பி ஒருவன்.. கல்லூரி படிப்பில்.. அளவான அழகான குடும்பம்.. அவனின் அப்பா இருந்தவரைக்கும்..

ஆம் போன வருடத்தோடு ஒரு வருடம் ஆனது அவருக்கு முதல் திதி கொடுத்து.. அதன்பின்னே அவனும், அம்மா மஞ்சுளாவும், தம்பி நிவினும் தான் குடும்பம். அப்பாவின் இறப்பிற்கு பின்னே அதிரூபனுக்கு எங்கும் செல்ல இஷ்டமில்லை..

‘ம்மா.. இதுக்குமேல எல்லாம் நான் ஃபாரின் போகலை..’ என்று முடிவாய் சொல்லிவிட்டான்..

நிவினும் அப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்க, கையில் ரொக்கம் என்று கொஞ்சம் நிறையவே இருந்தது.. வீடு அப்பா இருக்கும்போதே அடையாரில் வாங்கியிருந்தனர். ஆக வசதி நல்லதாகவே இருக்க, எல்லாம் யோசித்தவன் வேலையை விட்டு அவனுக்கு பிடித்தமானதை செய்ய எண்ணினான்.

ஆனால் அம்மாவின் இந்த கேள்விக்கு என்ன சொல்ல??? எதையும் முயன்றால் தானே தெரியும்..

“ம்மா கண்டிப்பா நல்லபடியா செய்வேன்..” என்ற வாக்குறுதி மட்டுமே அவன் கொடுக்க முடிந்தது..

ஆனால் இப்போது அதை செயலிலும் காட்டியிருந்தான்.. நிஜமாகவே அவன் எதிர்பார்த்ததை விட நல்லபடியாகே அனைத்தும் நடந்தது.. அதிலும் கை கடிகார் வடிவமைப்பு.. மிக மிக நன்றாகவே நடந்தது..

தொழில் நல்லமுறையில் அமைந்துவிட்டது, அடுத்தது என்ன திருமணம் தானே.. இதோ அந்த பேச்சும் ஆரம்பித்துவிட்டது.

“இப்போவே ஏன் ம்மா…” என்றவனுக்கு “இப்போ இருந்து பார்த்தா தான் கொஞ்ச நாள் கழிச்சாவது நல்லதா அமையும் ரூபன்..” என்ற மஞ்சுளாவின் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்ல அவனிடம் காரணமில்லை..

திருமணத்திற்கான சரியான வயதும் கூட தானே.. ஆக, மறுப்பு சொன்னது கூட சும்மா ஒரு சாக்குதான்.. மகன் சம்மதம் சொன்னதுமே மஞ்சுளா உடனே அவரின் அண்ணனை வரசொல்லி, அவர்மூலமாய் தரகரை வரசொல்லி என்று பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டார்..

நிவினுக்கு தினமும் வீட்டினில் ஒரு வேலை, வேலை முடிந்து வந்ததும் அவனும் மஞ்சுளாவும் சேர்ந்து ஆன் லைனிலும் பெண் பார்ப்பது.. அதிரூபனை அழைத்தால், இருவரையும் முறைத்துவிட்டு செல்வான்.. என்னவோ அவனக்கு இதில் உடன்பாடு இல்லை..

அதனால் இது நிவினின் ஏற்பாடு.. “ம்மா நீ என்னம்மா ப்ரோக்கருக்கு இவ்வளோ கொடுக்குற…” என்றுசொல்லி, அம்மாவை கம்பியூட்டர் முன் அமரவைத்து விட்டான்.

“ரூபன்.. கொஞ்சம் இந்த ஷார்ட் லிஸ்ட் பாரேன்…” என்று மஞ்சுளா சொல்ல, “ஏன்ம்மா இப்படி.. நீங்களே என்னவோ செய்ங்க..” என்றவன் கொஞ்சம் எரிச்சல் மன நிலையோடே தான் அன்று கடைக்கு வந்திருந்தான்..

என்னவோ அவனுக்கு என்றும் இல்லாத திருநாளாய் மனது எரிச்சலாய் இருப்பது போல் இருந்தது.. தினமும் வீட்டினில் இதே பேச்சு.. இல்லையோ அவனின் மாமா வந்து, அதை இதை என்று சொல்லிச் செல்வார்.. ஆக பெண் அமையும்போது அமையட்டும் என்னை ஆளை விடுங்கள் என்றுவிட்டான்..

ஆனால் மஞ்சுளாவும் நிவினும் விடுவார்களா என்ன??

அவ்வப்போது இப்படி நேர்வதும் உண்டுதான்.. இன்றும் அப்படியே.. கடைக்கு வந்தவன் கீழ் தளங்களில் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, பின் இரண்டாவது தளம் சென்றிட, என்னவோ எதுவும் செய்ய பிடிக்காமல், சும்மா அவனின் முன்னிருந்த கணினியில் ஏற்கனவே செய்து வைத்திருந்த டிசைன்களை பார்த்துக்கொண்டு இருந்தான். 

ஒருவழியாய் கண்மணி அலங்கார் முன் வந்து நின்றுவிட்டாள்.. அவளின் பார்வை சுற்றி முற்றி பார்க்க, திரும்பவும் ‘அயிகிரி நந்தினி…’ இசைக்கத் தொடங்க,

“நான் வந்துட்டேன்… நீ ??” என்றாள் ஃபோனுக்கே அவள் பேசுவது கேட்குமா கேட்காதா என்ற குரலில்..

“ம்ம் ஓகே வா..” என்றவள் வெளியே சும்மா நிற்க பிடிக்காது, பெண்களுக்கான ஆடைகளை பார்க்கச் செல்ல, அடுத்த ஐந்தே நிமிடத்தில் தீபா வந்து சேர்ந்தாள்..

தீபா.. கண்மணியின் அண்ணன் கண்ணனின் காதலி… அதனை தொட்டு இவர்களின் நட்பு.. இவர்களின் இந்த மீட்டிங் கூட கண்ணனுக்காகத்தான்.. அவனுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள்.. அதற்கான பரிசு வாங்கத்தான் இருவரும் சந்திக்க பேசிக்கொண்டது.. அதற்கு மட்டும் என்றில்லை.. ஆனால் அதுவே முக்கிய காரணமாகவும் இருந்தது.

“ஹே கண்ஸ்… சாரி ஆட்டோகாரன் சொதப்பல்…” என்று வந்தவளுக்கு ஒரு புன்னகையே கண்மணியிடம் பதில்..

“எதுவும் பார்த்தியா??!!!” என்றவளும் கொஞ்சம் ஆடைகளை பார்க்க, “ம்ம்ஹும்…” என்று அடுத்த பதில் அவளிடம்..

‘ஷூ….!!!!!!! பெரிய கண்ஸ் ஒரு ரகம்னா.. சின்ன கண்ஸ் இன்னொரு ரகம்…’ என்று தீபா நொந்துகொள்ள, “தீப்ஸ்… போலாமா???” என்றாள் கண்மணி.. 

“ம்ம் இப்போவாது வாய் திறந்து பேசும்மா…” என்றபடி இருவரும் இரண்டாவது தளம் செல்ல, அந்த இரண்டு நொடிகளில் தீபா மட்டுமே பேசினாலே தவிர கண்மணி அதற்கெல்லாம் ஒரு புன்னகை மட்டுமே பதிலாய் கொடுத்துக்கொண்டு வந்தாள்.

அவளின் சுபாவமே அதுதான்.. சிரிக்க மட்டுமே தெரிந்த முகம் அவளுக்கு. வார்த்தைகள் அத்தனை சீக்கிரம் வருவதற்குள், அவளின் புன்னகையோ இல்லை கண்களோ மற்றவர்களின் பேச்சிற்கு பதில் சொல்லிவிடும்.. அதிர்ந்து பேசிடவே அவளுக்கு தெரியாதோ என்றுதான் பிறருக்கு தொன்று..

எத்தனை பெரிய காமடி என்றாலும் கூட, சத்தமாய் சிரிக்கமாட்டாள், லேசாய் பல் தெரிவது போல் ஒரு சிரிப்பு அவ்வளவே.. சாந்த சொரூபிணி என்றுதான் கண்மணியை சொல்லிட வேண்டும்..

அவளுக்கும் படிப்பு முடிந்து ஓராண்டுகள் ஆனது.. வேலைக்கு என்று அவள் வாய் திறக்கும் முன்னே, அவளின் அப்பா ‘கல்யாணம்…’ என்று சொல்லிவிட்டார்..

கண்மணியின் அப்பா சடகோபன், அவர் சொல்லே வீட்டினில் முடிவு எப்போதுமே.. அம்மா சியாமளா, கணவரின் சொல்லுக்கு அவருக்கு என்றுமே மறுப்பில்லை.. அடுத்து கண்ணன்… இவர்களுக்கு நடுவே சிக்கி சின்னாபின்னமாகும் ஜீவன் அவன் ஒருவனே..

அப்பாவின் வார்த்தைகளை மீறவும் முடியாது ஆனால் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாத நிலை.. அவனும் தீபாவும் எதிர் எதிர் துருவங்கள் அதனால் தானோ என்னவோ இருவருக்கும் காதல் வந்துவிட்டது.. இப்போது அவளிடமும் மாட்டிக்கொண்டு அவன் முழிக்கிறான்..

காரணம் தீபாவின் வீட்டினில் அவளுக்கும் திருமணத்திற்கு வரன் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.. அவளோ கண்ணனை நெருக்க, அவனோ வீட்டினில் இப்போது பேசிடவே முடியாத நிலை.. கண்மணிக்கு வரன் பார்க்கையில் தான் காதலிப்பது சொல்ல அவனுக்கு ஒரு தயக்கம்..

 காதல் என்றதுமே, வீட்டினில் கண்மணியிடம் சொல்லிவிட்டான்.. அண்ணன் வந்து இப்படி சொல்லவுமே கண்களை விரித்து “ஆ…!!!” என்ற பார்வை ..

அவளின் உச்சபட்ச அதிர்ச்சியை காட்ட, “ப்ளீஸ் கண்மணி.. நீதான் எந்த ஹெல்பும் செய்யணும்…” என்ற கண்ணனின் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்தவள், பின் புன்னகையோடு தலையசைக்க, அதன்பின்னே தீபா கண்மணி நட்பு வளர்ந்துகொண்டே போனது..

இதோ அண்ணனின் பிறந்தநாளுக்கு அவன் காதலிக்கும் பெண்ணோடு வந்து பரிசு வாங்கும் அளவு..

இரண்டாம் தளத்திற்கு செல்ல, அங்கேயோ அதிரூபன் கணினியில் மூழ்கியிருக்க, அங்கே வேலை செய்யும் ஆள், “சார்…” என்றழைக்கவும்தான் நிமிர்ந்தான்..

பொதுவாய் ஆட்கள் வந்தால், முதலில் அதிரூபனே அவர்களிடம் என்ன ஏதென்று பேசுவான்.. ஆக இவர்கள் வரவும் இருவரையும் பார்த்தவனுக்கு அப்போதெல்லாம் எதுவும் தோன்றவில்லை, பெண்களுக்கான கடிகாரம் வாங்க வந்திருப்பர் என்றெண்ணியபடி, கடை ஆளினை பார்க்க, அவனோ இவன் பார்வை புரிந்து வேகமாய் சில பல கேட்லாக்குகள் எடுத்து வைத்தான்.

அதிரூபன் எழுந்து நிற்கவுமே, தீபா தான் அவனிடம் “வாட்ச் பார்க்கணும்…” என்றுசொல்ல, என்னவோ தெரியவில்லை கண்மணிக்கு சிரிப்பு வந்துவிட்டது..

ஆனால் அதனை கடினப்பட்டே அடக்க, அது அவளின் முகமே காட்டி கொடுத்திட, தீபா அவளை முறைத்தவள் “என்ன கண்ஸ்…??” என்றாள் கடுப்பாய்..

பின்னே என்ன சிரிப்பு இப்போது அப்படித்தான் தோன்றியது அவளுக்கு..

“ம்ம்ஹும்…” என்று கண்மணி தலையை ஒன்றுமில்லை என்பதுபோல் ஆட்ட, அதிரூபனுமே அத்தனை நேரம் அவள் முகத்தினை தான் பார்த்துகொண்டு இருந்தான்.

நொடிப் பொழுதில் அதில் தான் எத்தனை மாற்றம்.. எத்தனை உணர்வுகள்.. சிரிப்பு வர.. அதனை அடக்க.. இப்போது ஒன்றுமில்லை என்று வேகமாய் முகத்தினை மாற்றி தலையை ஆட்ட, அட அட….. ஆனாலும் அவளின் முகத்தில் ஏதோவொரு மூலையில் அந்த புன்னகை ஓட்டிக்கொண்டு இருப்பது போலவே அவனுக்குப் பட, இன்னமும் அவனின் பார்வை கண்மணியின் முகத்தினில் தான்..

தீபா திரும்பவும் அவனைப் பார்த்து “வாட்ச் பார்க்கணும்…” என்றுசொல்ல,

“யா…” என்று வேகமாய் தன் பார்வையை திருப்பியவன் திரும்பவும் கடை ஆளை பார்க்க, அவனும் வேகமாய் அவன் கையில் இருந்த கேட்லாக்கினை நீட்டினான்..

“இல்ல இல்ல.. ஜென்ட்ஸ் வாட்ச்..” என்று அப்போதும் தீபாவே பேச, “ஒன் மினிட்..” என்றவன் அவனே வேறு கேட்லாக்குகள் எடுக்கப் போக,

“ஏன் டி சிரிச்ச??” என்றாள் தீபா கண்மணியிடம்..

இப்போதும் அதே சிரிப்போடு, “தீப்ஸ் நீ சொன்னது ஹோட்டலுக்கு போய் சாப்பிட வந்திருக்கோம்னு சொன்னது போல இருந்தது… அதான்..” என்று அன்றைய நாளின் தன் நீண்ட வாக்கியத்தை பேசினாள் கண்மணி..

அவளோ ‘நீயா பேசினது….’ என்று பார்க்க, அதிரூபனுக்கும் கண்மணி சொன்னது கேட்டது சின்னதாய் ஒரு புன்னகை..

‘ஆள் அமைதின்னு நினைச்சு ஒரு நிமிஷம் ஆகலை… அதுக்குள்ள….’ என்று எண்ணியபடி அவர்கள் முன் கேட்லாக் வைக்க, தீபா டிசைன்கள் பார்க்கத் தொடங்க, கால் மணி நேரத்திற்கும் மேலானது தான் மிச்சம்.. அவளுக்கு ஒன்றும் புரிவதாகவும் இல்லை பிடித்ததாகவும் தெரியவில்லை..

அதிரூபன் பொறுமையாகவே இருக்க, கண்மணியும் அப்படியேதான் இருந்தாள். தீபா மட்டுமே கேட்லாக்கின் பக்கங்களை புரட்ட, அவளாலும் எதையும் தேர்வு செய்ய முடியவில்லை.

சிறிது நேரத்தில் அதிரூபனே, “ஏஜ் சொல்லுங்க.. அதுக்கேத்தது போல வேற டிசைன்ஸ் கூட காட்டறேன்..” என்று அவனின் லேப் டாப்பை திறக்க,

“முப்பது….” என்றனர் கண்மணியும், தீபாவும்..

இருவரையும் ஒருமுறை பார்த்தவன், அவன் புதிதாய் வடிவமைத்திருந்த டிசைன்களை அவர்கள் முன் காட்ட, தீபாவிற்கு ஒன்று பிடித்திருந்தது.

“இது ஓகே வான்னு பாரு.. கண்ஸ்..” என்று அவள் காட்ட,

“நீதானே கிப்ட் பண்ண போற தீப்ஸ்.. சோ உனக்கு பிடிச்சதுபோல பாரு…” என்று சொன்னவளின் இதழ் மட்டுமே அசைவது போல் தெரிந்தது . வார்த்தைகள் எங்கிருந்து வருகிறது என்று நிச்சயம் பார்ப்பவர்கள் யாரும் யோசிக்கத்தான் வேண்டும்..

அதிலும் புதிதாய் பார்ப்பவர்கள் அவளின் முகத்தினை பார்த்துக்கொண்டே இருந்தால் மட்டுமே அவள் பேசுகிறாள் என்பதே புரியும். அதிரூபனுக்கும் அப்படியே தான் ஆனது. அவனது பார்வை எல்லாம் கண்மணி மீது தான்.. ஏன் என்றே தெரியாது அவளை பார்த்துகொண்டு இருந்தான்.

“ஹ்ம்ம் எனக்கு இது பிடிச்சிருக்கு கண்ஸ்…” என்று தீபா திரும்ப சொல்ல,

“அப்போ ஓகே…” என்றவள் பார்வையை வேறுபுறம் திருப்ப, இவனுக்குதான் அதை அத்தனை எளிதாய் செய்ய முடியவில்லை..

“இந்த டிசைன் ரெடியாகி வர எத்தனை நாளாகும்??” என்ற தீபாவின் கேள்விக்கு சட்டென்று அவனால் பதில் சொல்ல முடியாது,

“ஹா… அது…” என்று யோசிப்பது போல் நெற்றியை தடவியவன், “எப்படியும் ஒரு டென் டேஸ் ஆகும்…” என,

“டென் டேஸா….???” என்று தீபா இழுக்க, கண்மணியின் கண்களும் அதே கேள்வியை கேட்டது.

பின்னே இரு பெண்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டு, “ஒன் வீக்ல முடியாதா???” என்று கேட்க,

“அது…..” என்று யோசித்தவன் “கொஞ்சம் கஷ்டம்தான்…” என்றதும் இருவரின் முகமும் அப்படியே சுருங்கிப் போனது.

“வாட்ச் தான் வாங்கனுமா???!!!” என்று கண்மணி கேட்க, “ஆமா கண்ஸ்…” என்றாள் தீபா உறுதியாய்..

“ஒன் வீக்ல ரெடியாகற போல வேற டிசைன்ஸ் இருக்கா???” என்று தீபா கேட்க, அதிரூபன் அவளைக் கொஞ்சம் வித்தியாசமாகவே பார்த்தான்.. கண்மணிக்கும் அப்படித்தான் தோன்றியதோ என்னவோ, ஆனால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

அவள் ஆசைப்படுகிறாள்.. வாங்கட்டுமே.. செய்யட்டுமே என்பதுபோல் கண்மணி வேறு டிசைன்கள் பார்க்க, அந்த கண்ணாடி மேஜையின் மீது லேசாய் தன் கைகளை வைத்து நின்றிருந்த அதிரூபன் கரங்களில் இருந்த கடிகாரம் கண்மணியின் கண்ணில் பட்டு கருத்திலும் நின்றது..

சிறிது நேரம் அவனின் கடிகாரத்தையே பார்த்துகொண்டு இருந்தவள் “இது… இதே மாடல் செய்ய எத்தனை நாளாகும்???” என்று அவன் கையை பார்த்து தன் விரல் நீட்டி கேட்க,

‘என்ன கேட்கிறாள் இவள்…’ என்று பார்த்தவன், அவள் கையை தான் சுட்டுகிறாள் என்று தெரியவும், அவளையும் அவனின் கடிகாரத்தையும் ஒருமுறை பார்க்க, இப்போது தீபாவும் அவனின் கடிக்காரம் தான் பார்த்தாள்.

அது அவனுக்கென்று அவனே முதன் முதலில் செய்தது.. அவனின் நண்பர்களே நிறையபேர் அதனைப் பார்த்து “டேய் மச்சி எனக்கும் இதேபோல ஒண்ணு…” என்று கேட்க,

“நோ நோ.. இது ஸ்பெஷல்….” என்று மறுத்திருக்கிறான்.

ஆனால் இன்றோ கண்மணியும் அதையே கேட்க, தீபா பார்த்தவள் “எஸ்.. இது ரொம்ப சூப்பரா இருக்கு..” என்றுகொண்டே, “கண்ணன்க்கு இது பிடிக்கும்ல..??” என்று கண்மணியிடம் கேட்க, அவளும் வேகமாய் தலையை ஆம் என்று ஆட்டினாள்..

அதிரூபன் முடியாது என்று சொல்லும் முன்னே “இந்த டிசைன் ஒன் வீக்ல கிடைச்சிடும்ல…??” என்று தீபா ஆவலாய் கேட்க, அதே ஆவல் கண்மணியின் முகத்தினிலும்.

“இல்லங்க அது….” என்று அவன் சொல்கையிலேயே, “ப்ளீஸ் கண்டிப்பா வேணும்…” என்றாள் தீபா இப்போது கெஞ்சலோடு கூடிய பிடிவாதமாய்..

என்னவோ அவளுக்கும் அவனின் வாட்ச் ரொம்ப ரொம்ப பிடித்து போனது. முன்னே அவள் பார்த்ததை விட, இது ரொம்பவும் பிடித்துவிட, கண்மணியிடம் “கண்டிப்பா இது உன் அண்ணனுக்கு பிடிக்கும்…” என்று அவளே சொல்லிக்கொள்ள,

‘அவ அண்ணனுக்கு இவ எதுக்கு வாங்குறா??!!’ என்று பார்த்தது யாராய் இருக்க முடியும் எல்லாம் அதிரூபன் தான்.

அதே நேரம், “ஹே கண்ஸ்….!!!!!” என்று சத்தமான அழைப்பு கேட்டு அனைவருமே பார்க்க, அங்கே நிவின் இருந்தான்..

“நிவின்…..” என்று கண்மணியின் உதடுகளும் முணுமுணுக்க, “நீ எங்க இங்க???” என்று வந்த நிவின்,

“அண்ணா அம்மா கொடுத்து விட்டாங்க…” என்று ஒரு கவரை நீட்டியவன், “அண்ணா.. ஷி இஸ் மை கிளாஸ் மேட்…” என்று கண்மணியை அறிமுகம் செய்தவன் “ஹி இஸ் மை அண்ணா….” என்று அதிரூபனையும் சொல்ல, சிநேகமாய் ஒரு சிரிப்பு அவளின் முகத்தினில் அவ்வளவே.

அடுத்து நிவினையும் கண்மணி தீபாவிற்கு அறிமுகம் செய்துவைத்துவிட்டு,  “வாட்ச் வாங்க வந்தோம்…” என்றுசொல்ல,

“ஓ சூப்பர்.. செலெக்ட் பண்ணியாச்சா???” என்றான் இவனும் இருவரையும் பார்த்தபடி.

“இல்ல நிவின், எங்களுக்கில்ல…” என்று அவள் சொன்னதும், “பின்ன…??” என்றவனின் பார்வை தீபாவிடம் தன்னைப்போல் சென்றது.

“என் அண்ணனுக்கு..” என்று கண்மணியும், “இவ அண்ணனுக்கு..” என்று தீபாவும் சொல்ல,

“அப்போ அவரைத்தானே கூட்டிட்டு வந்திருக்கணும்…” என்றான் நிவினும்..

“இல்ல இது கிப்ட்…” என்று கண்மணி சொல்லவும், “ஓ..!! ஓகே பாருங்க..” என்றுவிட்டு அவனும் நின்றான்.  

 கிடைத்த கேப்பில் தீபா “சார் இந்த வாட்ச்…” என்று ஆரம்பித்தாள்.

“இந்த வாட்சா.. இது அண்ணா அவனுக்காக டிசைன் பண்ணது.. இதுபோல யாருக்கும் எப்பவுமே செய்ய மாட்டான்…” என்று நிவின் படபடவென்று சொல்லிட,

‘ஐயோ….’ என்று தீபாவும், ‘அப்படியா ???’ என்று கண்மணியும் அதிரூபன் முகம் பார்த்தனர்.                                     

                   

                               

   

 

    

 

 

 

 

Advertisement