Advertisement

குருபூர்ணிமா – 21

“பின்ன… இப்படிதான் எப்பவும் இருப்பியா பாஸ் நீ..” என்றவளுக்கு கண்களில் நீர் வந்திட,

“ஏய் என்னாச்சு உனக்கு…” என்றான் பதற்றமாய்..

“ஒண்ணுமில்ல விடு…”

“சொல்லு பூர்ணி…” என்றவன் அவளின் முகத்தினை அழுந்த பிடிக்க,

“இதோ.. இப்படி நீ என்கிட்ட வந்து கூட நாள் ஆச்சு.. எனக்கு என்னை ஹேண்டில் பண்ண தெரியாதா??.. என்னவோ எப்போ பார்த்தாலும் பார்த்து பார்த்துன்னு சொல்லி சொல்லி எல்லாம் என்னை ஒதுக்குறீங்க…” என்றவளுக்கு இன்னமும் அழுகை வந்தது.

பூர்ணிக்கு காலையில் இருந்தே இப்படிதான் இருந்தது.. என்னவோ அவளுக்கு சூதானம் பார்த்தே எல்லாரும் அவளிடம் இருந்து தள்ளி நிற்பதாய் தோன்றியது.. அவளையும் தள்ளி நிறுத்துவதாய் தோன்றியது.. பாலகுருவில் இருந்து எல்லாரும்.. அவன் அவளிடம் நெருங்கிப் படுத்து கூட நாட்கள் பல ஆனதாய் தோன்ற,

எப்போதுமே மைதிலியும் முத்துராணியும், அனைத்திலும் எப்போதுமே ‘பார்த்து பூர்ணி…’ என்று சொல்ல, அவளுக்கு என்னவோ ஒருவித அழுத்தம் கொடுப்பதாகவே இருந்தது எல்லாம்..

பூர்ணிமா எப்போதுமே சுதந்திரமாய் இருந்தவள்., திருமணத்திற்கு பின்னும் கூட அவள் வாழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை தான்.. முன் எப்படியோ இப்போதும் அப்படியே.. ஆனால் அவளுக்கும் தெரியும்தானே எப்படி இருந்துகொள்ள வேண்டும் என்று..

அதெல்லாம் சேர்த்து இப்போது அழுகையாய் வெடிக்க, “ஐயோ பூர்ணி…” என்றவன் அவளை வேகமாய் அணைத்துக்கொள்ள,

“இதும் வேணாம்… இப்போதான் உனக்கு என்னை ஹக் பண்ண தோனிச்சா… இத்தனை நாள் கண்ணுக்கு தெரியலையா… போடா பாஸ்…” என்றவள் அவனின் நெஞ்சில் குத்த,

“அடடா சரி சரி.. இனிமே நான் தள்ளி நிக்கலை போதுமா…” என்றவன் “அதே போல உன்னை யாரும் ஒதுக்கலை..” என்றான் அழுத்தமாய்..

“பின்ன எங்கயும் விடறது இல்லை.. எதுவும் செய்யவும் விடறது இல்லை.. நீ.. நீ என்னவோ கோட்டுக்கு அந்த பக்கம் நிக்கிறது போல தள்ளியே நிக்கிற…” என்றவளுக்கு சொல்ல தெரியவில்லை,

‘நீ என்னிடம் முன் போல இரு…’ என்று.. மாறாக கோபமும் அழுகையுமே வந்தது..

“அடடா சரி.. உன்னை தேவையில்லாம டிஸ்டர்ப் செய்ய கூடாதுன்னு தான்…” என்றான் அவளை சமாதானம் செய்திடும் நோக்கில்..

“என்ன டிஸ்டர்ப்.. பொல்லாத டிஸ்டர்ப்..”

“சரி சரி.. இனிமே ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன்..” என்றவன் அவளை இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டு படுக்க,

“இதெல்லாம் ஒரு டிஸ்டர்ப்பா…” என்றாள் எரிச்சலாய்…

“நீ என்னை ஏத்தி விடுறன்னு தெரியுது… பேசாம தூங்கிடு இல்லை வெளிய கூட்டிட்டு போகமாட்டேன்..” என்று அவன் மிரட்ட,

“இதெல்லாம் ஒரு மிரட்டலா??” என்றாள் அப்போதும்..

“ஏய்.. உனக்கு என்னதான் டி வேணும்.. சும்மா அது இதுன்னு சொல்ற…” என,

“ஹா.. இதான் இதான் இதான் வேணும்.. இப்படிதான் இருக்கணும்.. அதைவிட்டு இப்போ நீ தயிர் சாதமா மாறினா எப்படி…” என்று அவள் சொன்னதும்,

‘என்னது…’ என்று அவளைப் பார்த்தவன் “நான்.. நான் தயிர் சாதமா???” என்று கேட்க,

“அப்படித்தான் ஆகிப்போச்சு இப்போ…” என்று நொடித்தவளை, அவன் பாணியில் கொஞ்சிட, கொஞ்ச நேரத்தில் “பாஸ் பாஸ்.. விடு…” என்று அவளே சொல்லும் படியானது..

“இப்போ சொல்லு டி பாப்போம்…” என்று பாலகுரு வீராப்பாய் பேச, “எதும் சொல்ல முடியாது…” என்றவள் அவனோடு ஒன்றித் தூங்க,

“ஏன் ஏன் சொல்ல முடியாது.. இவ்வளோ நேரம் பேசின..??”  என்றவன் இன்னமும் அவளை கொஞ்ச,

“ஆமா பேசினேன்.. இன்னமும் பேசுவேன்.. போ..” என்றவள் “நீ என்னவோ பண்ணிக்கோ…” என்று அப்போதும் தூங்க,  அவனுக்கு தூக்கமில்லை..

தூக்கம் வரவுமில்லை.. அவனுக்கு என்ன பூர்ணி பத்தி தெரியாதா.. அப்படியொன்றும் அஜாக்கிரதை எல்லாம் அவளிடம் எப்போதுமே இருக்காது.. கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு,   ச்சே இவளை அழ வைத்துவிட்டோமே என்று இருந்தது..

மறுநாள் காலையே  முத்துராணி மைதிலி முன் பூர்ணியிடம் “ஈவ்னிங் ரெடியா இரு பூர்ணி.. கொஞ்சம் ஷாப்பிங் போகலாம்..” என்று சொல்ல,

முத்துராணி என்னவோ சொல்ல வர “ம்மா என் கூட தானேம்மா நான் பார்த்துப்பேன்..” என்றவன் கிளம்பிவிட்டான்.. அதற்குமேல் அவர் எதுவும் சொல்லவில்லை..

ஆனால் மாலையில் கிளம்புகையில் ரொம்பவே பத்திரம் சொல்லி அனுப்ப “யப்பா உன் லவ்வருக்கு உன் மேல எவ்வளோ அக்கறை…” என்று இருவரையும் கிண்டல் செய்தே பூர்ணியை  வெளியே கூட்டிச் சென்றான்..

இதுவே அடிக்கடி தொடர, பூர்ணி திரும்ப ரிலாக்ஸாக ஆரம்பிக்க, அவனுக்கு இப்போது தான் நிம்மதியே ஆனது..

வீட்டில் கூட சொல்லிவிட்டான் ‘அவளை கேசுவலா விடுங்க..’ என்று.

திரும்பவும் நாட்கள் அதன்போக்கில் செல்ல, புதிய கப்பல்களும் ஹார்பர் வந்திட, அதனோடு சேர்ந்து ஒரு படகு வீடும் நிற்க, பார்த்த அனைவர்க்கும் ஆச்சர்யமே ‘அட….’ என்று..

“இதென்னடா இது…” என்று தனபால் கேட்க, “பூர்ணிக்காக வாங்கினேன் சித்தப்பா…” என்றான்..

“நல்லாருக்கே..” என்றவர், “இங்க எப்படி டா…” என்று கேட்க, “இது கேட்கிறவங்களுக்கு மட்டும் சித்தப்பா..” என்று சொல்ல,

“ம்ம் நல்லாருக்கு..” என்று தனபால் சொல்லவும், பாலச்சந்திரனும் மகனை “பரவாயில்லயே…” என்றுதான் பார்த்தார்..

அன்று கப்பல்களுக்கு பூஜை என்று அனைவரும் ஹார்பர் வந்திருக்க,  பூர்ணிமா வீட்டினரும் வந்திருக்க, அவளுக்கோ சந்தோசம் தாங்கவில்லை…

‘எனக்காகவா…’ என்று அவளும் கேட்கவில்லை, ‘உனக்கு ஒண்ணுமே செய்யலை… அதான்…’ என்று அவனும் சொல்லவில்லை.. பார்த்ததுமே அவளுக்குப் புரிந்தது அது தனக்காக என்று..

 ‘எப்புடி…’ என்று பாலகுரு பார்வையால் கேட்க,

“ம்ம் தூள்…” என்று அவளும் சைகையில் சொல்ல,

“யக்கா…” என்று வந்தான் பாண்டியா..

அவனைப் பார்த்தும் சிரித்தவள் பின் எப்போதும் சொல்வதுபோல் “பாரு பாஸ் இவனை…” என்று புகார் வாசிக்க,

“உங்களுக்கு நடுவில நான் வரமாட்டேன் ப்பா…” என்று ஒதுங்கிக்கொண்டான் பாலகுரு..

இப்படியாக பூஜைகள் முடிந்து, அனைவருமே ஒருமுறை அந்த படகு வீட்டில் சவாரி செய்து, என்று வீட்டிற்கு வர நேரம் போனதே யாருக்கும் தெரியவில்லை… வீட்டிற்கு வந்ததுமே முத்துராணி பாலகுருவிற்கு சுத்தி போட,

“அடேங்கப்பா!!!!” என்றனர் தனபாலும், பாலச்சந்திரனும்..

“பின்ன என் புள்ளைக்கு உங்க கண்ணே பட்டிருக்கும்…” என,

“நம்ம என்ன கப்பல் கண்டோம்.. போட் ஹவுஸ் கண்டோம்…” என்று மைதிலி சொல்ல,

பூர்ணியோ “ஹா ஹா…” என்று சத்தமாய் சிரிக்க, பாலகுருவும் அவளோடு சிரிக்க

“டேய் நீ ஸ்கோர் பண்றதுக்கு.. எங்களை ஏன்டா டேமேஜ் பண்ற..” என்று தனபால் சொல்ல, இன்னமும் அங்கே சிரிப்பு பரவியது..   

“சரி சரி சிரிச்சது போதும்… நாளைக்கு செக்கப் போகணும்… போய் தூங்குங்க..” என்று மைதிலி சொல்லவும் தான் அனைவரும் உறங்கப் போக,

மறுநாள் பாலகுருவோடு தான் பூர்ணிமா மருத்துவமனை செல்ல, அங்கே தினேஷின் மனைவி, வனிதா வேலையில் இருக்க, அவளைப் பார்த்ததுமே பாலகுருவே பூர்ணியிடம் அவளை யார் என்று சொல்ல,

“ஓ.. சரி சரி பாஸ்…” என்றவளுக்கு என்னவோ அந்த நொடி நிறைய நிறைய மனம் அமைதியை உணர்ந்தது..

எப்படியும் தினேஷ் வெளியே வர ரொம்ப நாள் ஆகும்.. இன்னமும் இந்த வழக்கு அப்படியே தான் இருந்தது.. அந்த தினா இன்னும் அகப்படவில்லை.. காலம் தான் முடிவு செய்யும் என்று இது முடியும் என்று.

பாலகுரு தினேஷின் குடும்பத்திற்கு உதவ, வனிதாவோ ஒருநிலைக்கு மேல் வேண்டாம் என்றுவிட்டாள்..

“என்ன இருந்தாலும் அவரு செஞ்சது தப்புதான்..” என்பது அவளின் எண்ணம்..

“அவளுக்கு ஒரு வேலைக்கு சொல்லுங்க போதும்…” என்று தினேஷின் அம்மாவும் சொல்லிட, இதோ இதே மருத்துவமனையில் வேலைக்கு சொல்லி அவளும் சேர்ந்துவிட்டாள்..

ஒருவருக்கு உதவுவது சிறந்தது தான்.. அதைவிட சிறந்தது, அவர்களின் காலில் அவர்களை நிற்க வைப்பது..

காரில் வருகையில் பாலகுரு இதையே சொல்ல “ச்சே பின்ற பாஸ்… எப்படி இப்படி எல்லாம்…” என்றவளைப் பார்த்தவன்,

 “பணம் தான்… எனக்கு ஒரு எண்ணம் இருந்தது.. நம்மக்கிட்ட நிறைய நிறைய பணம் இருக்கு.. அது வச்சு ஆள் பலமிருக்கு அப்படின்னு. அந்த தைரியத்துல தான் போஸ் அவனை கன் வச்சு கூட மிரட்டியிருக்கேன்..

அதே தைரியத்துல தான் நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அவனை தூக்கினேன்.. அப்புறம் அந்த கேஸ்.. அது எதுவுமே வெளிய வரக்கூடாதுன்னு எல்லாம் பண்ணேன்.. எஸ் உனக்காகத்தான் பண்ணேன்.. உன்னை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு தான் பண்ணேன்..

ஆனா அது உனக்காக பண்ணிருந்தாலும், நான் பண்ணது தப்புன்னு இப்போதான் புரிஞ்சது பூர்ணி…” என, அவனை சற்றே வியந்து தான் பார்த்தாள் பூர்ணிமா.

“என்ன பாக்குற.. அந்த பணம் அவன்கிட்ட இல்லை.. அவனோட அடிப்படை தேவைக்கு கூட இல்லைன்னதும் தான் அவன் இப்படி பண்ணான்.. அது சரின்னு சொல்லலை. அப்போ பணம் இருந்தா என்னவும் செய்யலாம்.. இல்லாதவன் அப்படியே போகட்டும்னு இருக்கிறது தப்புதானே..

நம்மக்கிட்ட இருக்கு அதுனால எல்லாம் பண்ணிக்கிட்டோம் அப்படிங்கறதுல எந்த பெருமையும் இல்லையே.. ” என்று பாலகுரு அசால்ட்டாய் சொல்லிவிட்டு தோள்களை குலுக்க, அவனை பார்த்திட பூர்ணிமாவிற்கு பெருமையாக கூட இருந்தது..  

அவன் எப்படி இருந்தாலும் அவளுக்கு அவனை பிடிக்கும்.. முரடனோ.. முரண்பாடு உடையவனோ.. எப்படி இருந்தாலும் சரி.. பூர்ணிமாவிற்கு அவனை பிடிக்கும்..

ஆனால் அவனுக்கு??? அவனின் நல்லதற்கு என்று யோசிக்கையில் அவனிடம் ஒருசில மாற்றங்கள் அவள் எதிர்பார்த்தது நிஜம் தான்.. அதற்கான சந்தர்ப்பம் அதுவாகவே வந்தது தான் அவள் எதிர் பாராதது..

‘நான் உன்னை மாற்றுவதை விட, நீயாகவே நீ மாறிடவேண்டும்..!!!’ இது தான் அவள் நினைத்தது..

உண்மைதானே நாமே நம்மை மாற்றிக்கொள்வதில் அத்தனை பெரிய சிரமம் இல்லையே.

சிலரின் தவறுக்கு தண்டனை கிடைக்கிறது.. சிலருக்கு பிராயசித்தம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.. தண்டனையோ, பிராயசித்தமா எதுவாகினும் சரி நாம் மனத்தால் அதை உணர்ந்தால் அதைவிட சிறப்பு வேறெதுவும் இல்லை..

சில நாட்களுக்கு பிறகு…  

“பாஸ்…  உன் பேரென்ன???”

“ஏன் டி அர்த்த ஜாமத்துல உனக்கு இப்படியொரு கேள்வி…??”

“சும்மா சொல்லு பாஸ்…” என்று அவன் தோள்களை இடிக்க,

“பாலகுரு…” என்றான் முகத்தினை சுருக்கி..

“பாதி மட்டும் சொல்லு..”

“அடடா… டி பூர்ணிமா….” என்று பல்லைக் கடித்து பாலகுரு கத்த,

“ஷ்… சொல்லு… இல்லைன்னா நான் போய் பெரியத்தைக்கிட்ட உன்னை சொல்றேன்..” என்று அவள் எழப் போக,

“அய்யோ வேணாம்…” என்று அவளை வேகமாய் எழாமல் பிடித்தான்..

பின்னே அன்றைய மாலையில் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சு எடுத்திருந்தார் முத்துராணி.. இதுநாள் வரைக்கும் அவன் அப்படியெல்லாம் பேச்சே வாங்கியிருக்கவில்லை.

வேறொன்றுமில்லை, பாலகுரு வேறு வேலையாய் வீட்டிற்கு வர, முத்துராணி அவனுக்கு உண்ண எடுத்து வைக்க,  இவன் வந்ததுமே பூர்ணிமா அறையினில் இருந்து வெளிய வர, அவளின் நடையில் இருந்த மெதுவும், அவளின் பூசிய தோற்றமும் அவனுக்கு அத்தனை மனதிற்கு குளுமை தந்தாலும், வழக்கம் போல அவளை கிண்டல் தான் செய்தான்..

எப்போதுமே இல்லை.. ஆனால் அடிக்கடி உண்டு.. கணவன் மனைவி என்ற உறவிற்குள் நகைச்சுவையும் இருக்கவேண்டும் தானே..  

வந்து தன்னருகே அமர்ந்து உண்பவளிடம்  “பூர்ணி நீ மறுபடி தர்பூஸ் ஆகிட்ட…” என்று சும்மா கிண்டல் செய்ய, அது அவனின் அம்மா காதில் விழ

“நீ எல்லாம் என்ன மனுஷன் டா” என்று ஏகத்தும் திட்டு.

“புள்ளதாச்சி பொண்ணு சாப்பிடுறா அதை பார்த்து கண்ணு போடுற..” என்றவரை பாவமாய் தான் பார்த்தான்..

இது இப்போது மட்டுமல்லா அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. ஆக ‘உன் பாடு உன் அம்மா பாடு..’ என்று பூர்ணிமா சும்மா இருக்க,

“ஏதாவது சொல்லு..” என்று பார்த்தான்..

“அவளை என்ன பாக்குற.. இப்படியா சொல்றது  நீ.. முதல்ல உன் கால் மண் எடுத்து தான் சுத்தி போடணும்.. இன்னொரு தடவை சொல்லு தர்பூஸ் அது இதுன்னு..” என்றவர்,

மைதிலியிடம் “இனிமே இவன் முன்னாடி இவளுக்கு சாப்பாடு போட கூடாது…” என்றும் சொல்லிட,

பூர்ணிமா மிக மிக சிரம பட்டே உண்ண வேண்டியதாய் இருக்க, ஒருநிலையில் புரை வேறு போக,

“பாரு பாரு எல்லாம் இவனால…” என்று அதற்கும் அவனை திட்டினார்..

“போ ம்மா.. எனக்கு சாப்பாடே வேணாம்..” என்று பாலகுரு எழுந்துவிட,

“ரொம்ப பண்ணாத..” என்று அதற்கும் ஒரு திட்டு, “அப்பா ஆகப்போற பொறுப்பா  இருக்கணும்…” என்றும் வேறு..

அவனுக்கு மூச்சே முட்டிப் போனது.. ‘யப்பாடி…!!!!’ என்று..

இப்போது பூர்ணி போய் அவரிடம் சொல்வேன் என்றதும் ‘போதும்டா சாமி…’ என்றிருந்தது அவனுக்கு..

“ஆனாலும் எங்கம்மாக்கு உன் மேல ரொம்ப லவ்ஸ்..” என,

“பின்ன அவங்க பையன சந்தோசமா வச்சிருக்கேன்ல அதான்..” என்றாள் கெத்தாய்..

“என் நேரம் டி…”

“சரி சரி நான் கேட்டது சொல்லு…”

“ம்ம்ச் பாதி பேரு.. என்ன பாலாவா.. இல்லை குருவா…”

“குரு…”

“ம்ம் ம்ம்…” என்றவன் அசட்டையாய் பார்க்க,

“என் நேம் சொல்லு…” என்றாள்..

“கடவுளே…!!!!!!” என்றவன் போர்வையை இழுத்து போர்த்த, “சொல்லு பாஸ்..!!!!” என்று அவள் போர்வையை இழுக்க,

“பூர்ணிமா….” என்றான் சத்தமாய்…

“அப்போ இவங்க….” என்று அவளின் பெரிய வயிற்றினை தொட்டுக் காட்ட,

“இவங்க என் ஜூனியர்ஸ்…” என்றான் வேகமாய் பாலகுரு அவளின் வயிற்றினில் கை வைத்து..

அவளோ அவனை முறைத்து “நோ நோ குருபூர்ணிமா…” என்றுசொல்ல,

“ஹா ஹா…” என்று சிரித்தவன் அவளின் வயிற்றினில் அழுந்த முத்தமிட, உள்ளிருந்த அவனின் இரண்டு பிள்ளைகளும் தங்களின் அசைவால் அவர்களின் பதிலை சொல்ல, பூர்ணிக்கு சிலிர்ப்பாய் இருந்தது..

ஆம்!! இரட்டை குழந்தைகள்.. அதனாலேயே வீட்டினில் அப்படியொரு காவந்து அவளுக்கு.. அத்தனை சூதானம்.. ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து என்று எல்லாமே..

குழந்தை என்றதுமே குரு பூர்ணிமா இருவருக்கும் சந்தோசம்.. அதிலும் இரட்டை என்றதும் கேட்கவே வேண்டாம்…

“பாஸுக்கு எல்லாம் பாஸ்.. பெரிய பாஸ்…” என்று அவனே சொல்லிக்கொண்டான்..

ஆணோ.. பெண்ணோ.. குரு போன்றோ.. இல்லை பூர்ணிமா போன்றோ.. இல்லை இருவருமேவோ… எதுவாகினும் சரி, இந்த புதிய தளிர்களின் வரவால் குருபூர்ணிமா இருவரின் வாழ்வும் இன்றுபோல் என்றுமே வளர்பிறை நிலவுதான்..

 

நிறைவுற்றது…

Advertisement