Advertisement

குருபூர்ணிமா – 6

சிலு சிலுவென்று காற்று வீசிக்கொண்டு இருக்க, மாலை வேளை இது என்று சொல்வதாய் மேகங்கள் கருமை பூசிக்கொள்ள தொடங்கியிருந்தது.. ஆங்காங்கே ஜோடிகளாகவும், இல்லையோ குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாகவும் அமர்ந்திருந்தனர் அந்த கடற்கரையோர ரூப் கார்டன் ஹோட்டலில்..

பாலகுருவும், நிர்மலாவும், நேரெதிரே அமர்ந்திருக்க, இருவருக்குமே எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியவில்லை.. பாலகுருவுக்கு நிர்மலாவே அழைத்து, பேசவேண்டும் என்று சொன்னது ஆச்சர்யம் தான்..

மறுக்கவேண்டும் என்று நினைத்தவனை அவளின் ‘கண்டிப்பா பேசணும்.. வருவீங்கதானே..???’ என்ற அவளின் மென்மையான குரல் சரியென்று சொல்ல வைத்தது..

இதோ வந்தும் ஆகிவிட்டது.. பேசவேண்டும் என்று சொன்னவளும் அமைதியாய் இருக்க நேரம் கரைந்துகொண்டே இருந்தது..

‘கிளம்பிடலமா???!!!’ என்று பாலகுரு யோசிக்கும் போதே, “பூர்ணிமா எப்படி இருக்காங்க???” என்ற நிர்மலாவின் கேள்வி அவனை அவளை பார்க்க வைக்க,

“ம்ம் நல்லாருக்கா…” என்ற பதிலும் சொல்ல வைத்தது..

“குட்… எப்போ டிஸ்சார்ஜ்..??”

“தெரியலை.. மே பீ… இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்..”

“ஓ…!!!!!” என்றவள் “அப்புறம்…??” என்று சொல்லி அவன் முகத்தினை பார்க்க,

“அப்புறம்…. அப்புறம் ஒண்ணுமில்லை…” என்றான் வேகமாய்..

“ஹ்ம்ம்.. அன் எக்ஸ்பக்டடா எல்லாம் நடந்திடுச்சு.. நீங்களும் ரொம்ப டென்சனா இருக்கீங்கன்னு அப்பா சொன்னார்…” எனும்போதே,

‘ஓஹோ… இதெல்லாம் அவர் வேலையா..’ என்று நினைத்தவன்,  “இப்படியொரு சூழ்நிலைல டென்சன் இல்லாம இருந்தா அவன் மனுசனே இல்லை…” என்றுவிட்டான் பட்டென்று.. 

நிர்மலாவிற்கு இப்படி பேசியும் பழக்கமில்லை, அவளிடம் யாரும் இப்படி பேசியதுமில்லை… ஆனால் பாலகுருவின் இயல்பே இதானே.. அப்படியிருக்க, அவன் இப்படி பேசியதும் நிர்மலாவிற்கு முகம் வாடித்தான் போனது..

“நான்.. நான் தப்பா எதுவும் சொல்லலை…” என்று அவள் பதற்றமாய் கேட்கும்பொழுதே,

“என்னை எதுக்கு வர சொன்னன்னு தெரிஞ்சுக்கலாமா???” என்றான் என்னவோ அங்கே அவனால் இருக்கவே முடியவில்லை என்பதாய்..

“ஹ்ம்ம் அது.. அதான்.. நீங்க டென்சனா இருக்கிறதா அப்பா சொன்னார்.. சரி கொஞ்சம் நான் பேசினா உங்களுக்கு ரிலாக்ஸா…” என்று சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்தாள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்காது..

“ரிலாக்ஸ்… ஹா ஹா எனக்கா???!! ஹ்ம்ம் இதுக்குதான் வர சொன்னன்னா.. இப்போவே ரெண்டுபேரும் கிளம்பலாம்….”

“இல்ல இல்ல.. அது.. கொஞ்ச நேரம் பேசலாமே…”

நிர்மலா நேரத்தை இழுக்க இழுக்க, பாலகுருவிற்கு எரிச்சலாய் இருந்தது.. என்ன இது.. என்ன மாதிரியான சூழலில் அழைத்து வைத்துகொண்டு இப்படி நேரத்தை வீணடிக்கிறாள் என்று இருந்தது.. ஒருப்பக்கம் என்னவென்றால் பூர்ணிம்மா என்னை என்ன செய்ய போகிறாய் என்று கேட்கிறாள்.. இன்னொரு புறம் என்னவென்றால் இவளோ பேசலாமே என்கிறாள்..

‘என்ன நினைச்சிட்டு இருக்கீங்க இந்த குருவை…’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது..

“சாரி.. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்.. இருந்தாலும்.. எங்கேஜ்மென்ட் ஆகிடுச்சு.. அப்பப்போ இப்படி மீட் பண்ணிக்கிறது நல்லதுதானே…” என

“யாருக்கு..??” என்றான் அதே வேகத்தில்..

“ஐயோ.. ஏன் இவ்வாளோ கோவமா பேசுறீங்க???” என்றாள் லேசாய் பயந்து..

‘இதென்னடா கொடுமை..!!!!’ என்று பார்த்தவன், “என் நேச்சர் இதான்.. இப்படிதான் பேச எனக்குத் தெரியும்…”

“ஓ…!!” என்றவள் மீண்டும் அமைதியாய் இருக்க, ‘இவளுக்கு என்னதான் பிரச்சனை…’ என்றுதான் நினைத்தான் பாலகுரு..   

“அப்பாக்கிட்ட இப்போதைக்கு எதுவும் பேசவேணாம் சொன்னீங்கலாம்.. அது.. அவர் கொஞ்சம் அப்சட் ஆகிட்டார்…” என்று நிர்மலா அடுத்த விஷயம் பேச,

‘ஓஹோ… இது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கதையோ…’ என்று அவனுக்கு புரியத் தொடங்கியது..

அப்பாவால் பேசி ஒன்றும் ஆகவில்லை என்றதும் மகளை அனுப்பி.. ச்சேய் என்றுதான் தோன்றியது பாலகுருவிற்கு.. என்னமாதிரியான மனிதர்கள் என்றுதான் தோன்றியது.. ஒருவேளை வந்தவன் இவனையே குத்தியிருந்தால்?? அப்போது.. அப்போது என்ன செய்திருப்பார்கள் என்று தோன்ற

“எனக்கு இப்படி ஆகிருந்ததுன்னா என்ன பண்ணிருப்பீங்க???!!” என்றான் கோபத்தை அடக்கி..

அவன் கேள்வியில் திகைத்தவள், “என்ன.. என்ன இப்படி சொல்றீங்க???”என,

“வேறெப்படி சொல்ல.. பூர்ணி ஒன்னும் வேணும்னு கத்திகுத்து வாங்கி படுக்கலை.. எனக்கு நடந்திருக்க வேண்டியது இது.. இப்போ போயிட்டு எதையும் இழுத்துப் போட்டுக்காதீங்கன்னு சொன்னா எப்படி??” என்றவனுக்கு என்ன முயன்றும் அவனி கோபத்தை அடக்க முடியவில்லை..

நிர்மலா திகைத்துப் போய் பார்க்க, “என்னோட நிலைல இருந்தா மட்டும் தான் இதை புரிஞ்சுக்க முடியும்.. பூர்ணி சரியாகிட்டாதான் ஆனா இதுக்கு பின்னாடி எத்தனை பிரச்னைகள் இருக்குன்னு எங்களுத்தான் தெரியும்.. எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்… போய் உங்கப்பாக்கிட்ட சொல்லு.. இதைவிட என்ன பிரச்சனை வந்தாலும் எல்லாத்தையும் இழுத்து போட்டுக்குவேன்..

ஏன்னா பூர்ணி யாரோ இல்லை.. என்னால கை கட்டி நின்னு வேடிக்கைப் பார்க்க முடியாது… அப்படி அவருக்கு பிரச்சினையே இல்லாத மாப்பிள்ளை வேணும்னா அதுக்கு நான் ஆள் இல்லை.. இதையும் சொல்லிடு..” என்றவன் கிளம்பி சென்றுவிட்டான்..

நிர்மலா அப்படியேதான் அமர்ந்திருந்தாள்.. பாலகுரு எழுந்து சென்ற திசையை நோக்கியே அவளின் பார்வை இருக்க, ஒருமுறை அவளின் கண்கள் சுருங்கி விரிய, அவளின் அப்பாவிற்கு அழைத்தவள் “ப்பா… எனக்கு இவன் வேணாம்ப்பா…”  என்றிருந்தாள்….

ஆறு மாதங்கள்……

நாட்கள் மாதங்களாகி கடகடவென ஓடியிருந்தது.. பாலகுரு எந்த நாட்டில் இருக்கிறான் என்றே தெரியவில்லை.. மனம் போன போக்கில் போகவேண்டும் என்று கப்பலில் ஏறியவன்.. கிட்டத்தட்ட இந்த ஆறுமாதங்களில் எங்கே இருக்கிறான் என்றே தெரியாமல் போனது…

பூர்ணிமா வீட்டை விட்டு வெளியவே வருவது இல்லை.. உடல் மெலிந்து இருந்தாள்.. முகத்தினில் முன்னிருந்த துள்ளளோ உற்சாகமோ இல்லவேயில்லை. காரணம் அவளின் ‘பாஸ்…’ இங்கேயில்லை..

அதுவும் அவன் அப்படி கிளம்பி போனதற்கு காரணம் தான் என்று அறியவும் மிகவும் நொந்துபோனாள்..

இரண்டு குடும்பத்தில் யாருக்குமே துளி கூட மகிழ்ச்சியே இல்லை… முத்துராணி பூர்ணிமா மீது கொஞ்சம் உறுக்கமாய் இருந்தவர், பாலகுரு கிளம்பி சென்றதில் மறுபடி இறுகிக்கொண்டார்… பாலசந்திரன், மைதிலி இருவருமே என்ன சொல்லியும் முத்துராணி ஒரே குறியாய் இருந்தார் ‘என் மகன் வரணும்…’ என்று..

பூர்ணிமாவோ அவள் என்ன நினைக்கிறாள் என்பது யாராலும் உணர முடியவில்லை.. யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.. உண்கிறாள் வீட்டினரின் கட்டாயத்தில்…. உறங்குகிறாள் அதுவும் மாத்திரையின் உதவிகொண்டு…  பாலகுரு கிளம்பிச் சென்றது அவளுக்கு பேரிடி…

நிர்மலாவிடம் பேசிய பின், பாலகுரு திரும்ப மருத்துவமனைக்கு வர, அவனிடம் பூர்ணி வேறெதுவும் பேசவில்லை.. அவள் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,

‘அந்த போஸ் என்னானான்??’ என்று..

“அவன் இருக்கான்…”

“இருக்கான்னா..?? உயிரோட இருக்கானா???”

“ஹ்ம்ம் ஹ்ம்ம் உயிர் மட்டும் இருக்கு…” என்று பாலகுரு சொல்ல, அவனைப் பார்த்தவள், “அவன விட்டுட்டு பாஸ்.. எப்படியும் உயிர் போற அளவுக்குத்தான் அடிச்சிருப்ப. போதும்.. நான்தான் நல்லாகிட்டேனே..” என்றவள், “அப்படியே குத்தினானே அவனையும் விட்டுடு பாஸ்..” என்றாள் ஸ்திரமாய் அவனைப் பார்த்து..

அவனும் அதுபோலவே பார்த்தவன், “இல்லைன்னா…” என,

“நானே போலீஸ் கம்பளைன்ட் கொடுப்பேன்.. எப்படியும் இப்போவே எல்லாருக்கும் விஷயம் தெரியும்.. ஆனாலும் நம்ம மூடி மறைச்சாச்சு.. நீ போஸை விடலைன்னா.. நியூஸ் பேப்பர்.. கோர்ட்… கேஸ்..

அவ்வளோ ஏன் நியுஸ் சேனல் எல்லாம் விவாதம் கூட செய்யும்.. எல்லா இடத்துலயும் என்னோட பேர் வரும்.. இதெல்லாம் தான் நீ விரும்புறன்னா நீ அவனை என்னவோ செய்..” என்றவளை என்ன செய்தால் தகும் என்றே பார்த்தான் பாலகுரு..

‘எனக்காக ப்ளீஸ்…’ என்று பூர்ணி தலை சரித்து, பாவமாய் ஒரு பார்வை பார்த்து சொல்லவும், சந்தியா அத்தனை நேரம் சும்மா இருந்தவர்,

“ஆமா பாலா.. விட்டுடு அவனுங்களை.. வேண்டாம் இதோட எல்லாம் முடியட்டும்.. இனிமே நடக்கிறதாவது நல்லதா நடக்கட்டும்.. வீட்ல நல்ல சங்கதி வச்சிட்டு இனிமே எந்த பிரச்சனையும் வேண்டாம்..” என்று சொல்ல,

“இல்லத்தை.. அவன் பண்ண வேலைக்கு….” எனும்போதே,

“எங்களுக்காக விட்டுடு பாலா அவனை.. இனி அவன் பிரச்சனை பண்ணா பார்த்துக்கலாம்…” என்று சந்தியா கெஞ்சலாய் பார்க்க, அவனால் மறுக்கவே முடியவில்லை..

இப்படிதான் ஒவ்வொன்றும் நடந்தது.. அந்த போஸ், உடலில் உயிர் மட்டும் இருந்தபடி திரும்ப அவனின் வீட்டிற்கு சென்றான், கத்தியால் குத்துவாங்கி, பூர்ணிமாவை குத்தியவனோ சில பல மிரட்டல்களுக்கு பின்னே, அவனும் வீடு செல்ல, பூர்ணிமாவும் அவளின் வீடு வந்து சேர்ந்தாள்..

இரண்டே நாட்கள் தான்…. எல்லாமே சுமுகமாய் போவதுபோல் இருந்தது.. பூர்ணிமா நிர்மலா பற்றியோ.. இல்லை அவர்களின் திருமணம் பற்றியோ எதுவுமே கேட்கவில்லை.. பாலகுரு வந்தால் எப்போதும் போல் பேசுவாள்.. அதிலும் முத்துராணி பாசமாய் பேசிட, அவளுக்கு மனம் அதிலேயே மகிழ்வாய் போனது..

அவ்வப்போது சீண்டியும் கொண்டாள் “அத்தை, என்ன வேணுமோ கேளு சொன்னீங்க??” என்று பாலகுருவை பார்த்துக்கொண்டே கேட்பாள்..

அவனுக்கோ ‘என்ன கேட்கபோகிறாளோ…’ என்றிருக்கும்..

முதுராணியும் “என்ன வேணுமோ கேளு.. உனக்கில்லாததா??” என்பார்..

“ம்ம்.. ம்ம்…” என்று தலையை ஆட்டுபவள், பாலகுருவை பார்த்து கேட்கட்டுமா என்று சைகை செய்வாள்..

ஆனால் எதுவுமே கேட்கமாட்டாள்.. சாருலதா கூட இதனை கவனித்து பூர்ணிமாவை திட்ட, “ம்ம்ச் போடி.. இப்படி கொஞ்ச நாள் பேசுவேனா?? பின்ன பாஸ்க்கு கல்யாணம் ஆகிட்டா இப்படி பேச முடியுமா???” என்று சலித்துக்கொள்ள,

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது…” என்றுதான் தோழிகளிடம் பேச்சு வாங்கினாள்..

அத்தனை ஏன் மைதிலி கூட “எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது..??” என்று பார்க்கும் போதெல்லாம் கேட்டுவிட்டார்..

அனைவருக்கும் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாய் கொடுத்த பூர்ணிமா, பாலகுரு நிர்மலாவின் திருமணம் நடக்கவில்லை, நின்றுவிட்டது என்று தெரியவுமே, அதிர்ந்து தான் போனாள்..

இரண்டு நாட்கள் கழித்து நிர்மலாவின் அப்பா பாலச்சந்திரனுக்கு அழைத்து “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் சொல்றா.. அன்னிக்கு மாப்பிள்ளை கூட பேசிருப்பா போல.. அப்போ இருந்து ஒரே பிடிவாதம் வேண்டாம் சொல்றா.. எங்கனால எங்க பொண்ண போர்ஸ் பண்ண முடியாது..” என்றுசொல்ல,  பாலகுரு குடும்பத்தினர் அதிர்ந்து தான்  போயினர்..

பாலகுரு உட்பட..

“ஏன்?? ஏன்?? ஏன் வேண்டாம் சொல்றாங்க???” என்று முத்துராணி பதறி கேட்க, பாலச்சந்திரனோ பதிலே சொல்லவில்லை.. அவருக்கு என்ன சொல்வது என்பதும் தெரியவில்லை..

பாலகுரு அப்படியே மௌனமாகிவிட்டான்.. இதை அவன் எதிர்பார்த்தானா?? தெரியாது.. வருத்தம் எழுகிறதா?? தெரியாது..  தன்னை ஒருத்தி நிராகரிக்கிறாள் என்ற கோபம் எழுகிறதா அதுவும் தெரியவில்லை.. மரத்து போன நிலை அவனுக்கு..

தனபாலும், மைதிலியும் “நாங்க போய் பேசி பார்க்கிறோம்…” என்றதும், அனைவரும் பாலகுரு முகம் பார்க்க, அவனோ எதுவுமே சொல்லவில்லை..

பாலசந்திரன் “நானும் வர்றேன்…” என, முத்துராணியும் “நானும் வருவேன்…” என்று கிளம்பினார்..

பாலகுரு தவற அனைவரும் நிர்மலா வீடு செல்ல, அங்கே அவளின் அப்பாவும் சரி அம்மாவும் சரி, எதுவுமே பேசவில்லை “வாங்க..” என்பதை தவிர.. நிர்மலாவோ அதுகூட இல்லை.. வேண்டாம் என்றபிறகு ஏன் வந்தீர்கள் என்பதுபோல் ஒரு பாவனை..

மைதிலிதான் “ஏன் ம்மா.. ஏன் இப்படி வேண்டாம் சொல்ற.. ஊர் கூடி நிச்சயம் பண்ண அப்புறம் அப்படி எல்லாம் சொல்லலாமா??” என்று கேட்க,

அவளோ “என்னை வேணாம்னு சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்லிட்டேன்… இதுல என் தப்பு எதுவுமில்லை.. எதுன்னாலும் உங்க மகன்கிட்ட பேசிக்கோங்க…” என்றிட,

‘இதென்னடா இப்படி சொல்கிறாள்..’ என்று அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, பாலகுரு அவனின் சித்தப்பாவிற்கு அழைத்தான்..

“எங்க மகனுக்கு வாழ்க்கை கொடுன்னு யாருக்கிட்டயும் நீங்க யாரும் கேட்க வேண்டியதில்லை சித்தப்பா எல்லாம் கிளம்பி வர்றீங்க இப்போ… இல்லை நான் என்ன செய்வேன் தெரியாது..” என்றுசொல்ல, தனபாலோ தன் குடும்பத்தினர் முகம் பார்க்க,

நிர்மலாதான் “இப்போ உங்க எல்லாருக்கும் புரிஞ்சதா??? நான் அமைதியான பொண்ணுதான் ஆனா முட்டாள் கிடையாது.. என்னை கல்யாணம் பண்றவர்க்கு நான்தான் முதலும் முக்கியமுமா இருக்கணும்னு நினைக்கிறதுல எந்த தப்பும் இல்லையே.. ஆனா இவருக்கு யாருமே முக்கியமில்லை.. பூர்ணிமா தவிர..

அப்படியிருக்கப்போ நான் எப்படி இவரோட வாழ முடியும்.. நாளைக்கே அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா இவர் யாரையும் கொலை செய்ய கூட தயங்க மாட்டார்.. எனக்கு வேண்டவே வேண்டாம்.. வாழ்நாள் முழுக்க என்னால போராட முடியாது…” என்று சொல்லிவிட்டு அவன் அணிவித்த அந்த மோதிரத்தையும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளின் அறைக்கு சென்றுவிட,

இவர்கள் நால்வருக்கும் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதே இல்லையே…

அந்த போஸை என்ன பாடுபடுத்தினான் என்று அனைவரும் தான் பார்த்தனரே.. போலீஸ் கேஸ் ஆகக்கூடாது என்று, எத்தனை கோடி செலவு செய்தான் என்றும் பார்த்தார்களே..

‘அவளுக்கு ஒண்ணுன்னா இவர் யாரையும் கொலை கூட செய்வார்…’ இந்த வார்த்தைகளே அனைவரின் மனதிலும்.. அதிலும் முத்துராணி மனதில் இன்னும் அழுத்தமாய் ஆழமாய்..

‘நினைச்சது போலவே ஆகிடுச்சே..’ என்று எண்ணத் தொடங்கிவிட்டார்..

நிர்மலாவின் மறுப்பிற்கு காரணம் ஒன்றுமட்டுமே.. எப்போது அவன் வாயில் இருந்து பூர்ணிமா யாரோ இல்லை என்ற சொல் வந்ததோ அப்போதே அவளுக்கு பாலகுருவை பிடிக்காமல் போய்விட்டது..

பிடித்திருக்கிறது என்று சொல்லி ஊர் அறிய நிச்சயம் செய்த ஒருத்தியிடம் வந்து, வேறொரு பெண்ணை, சரி அவள் அவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தாள் என்றாலும் அவளிடமே வந்து, அவள் எனக்கு யாரோ அல்ல என்று சொன்னால் யாருக்குத்தான் மனம் வலிக்காது..

இப்போதே இத்தனை உறுதி என்றால், இன்னும் நாள் செல்ல செல்ல, போதும் போதும் ஒவ்வொரு விசயத்திற்கும் இவனோடு போராட என்னால் முடியாது என்ற எண்ணமே அவளுக்கு வந்துவிட்டது.. வீட்டினர் எத்தனை சொல்லியும் கூட அவள் திடமாய் மறுத்துவிட்டாள்..

“ம்மா கண்டிப்பா என்னையே ஒருநாள் தூக்கி போட்டாலும் போடற உறவு எனக்கு வேணாம்.. அதுக்குமுன்ன நானே விலகிடுறேன்…” என்றுவிட்டாள்..

நடந்த அனைத்தும் சாருலதா பூர்ணியிடம் சொல்ல ‘ஐயோ..!!!!!’ என்றுதான் நினைத்தாள் அவள்..

நொடியில், பாலகுருவின் முகமே அவள் கண் முன்னே வர, அடுத்து அவனுக்கு அழைக்க, அவனோ எடுக்கவேயில்லை..

“அப்பா என்னை இப்போவே அங்கே கூட்டிட்டு போங்க…” என்று அவளின் அப்பாவிடம் விஷயம் சொல்லி பிடிவாதம் பிடிக்க,

“பூர்ணி பெரியவங்க பேசிப்போம்.. நீ என்ன இதெல்லாம் பண்ணிட்டு..” என்று சந்தியா மறுக்க,

“நீங்க கூட்டிட்டு போகலைன்னா நான் இப்படியே போவேன்..” என்று இவளும் பிடிவாதம் பிடித்து கிளம்பிட, வேறுவழியே இல்லாது காரில் அழைத்துச் சென்றனர் ராமலிங்கமும் சந்தியாவும்..

அங்கே பாலகுருவின் வீட்டிற்கு சென்றாளோ, யார் முகத்திலும் பெயருக்கு கூட எவ்வித உணர்வும் இல்லை.. பூர்ணிமா உள்ளே வந்ததுமே அவன் இருக்கிறானா என்று பார்த்தாள் இல்லை என்றதும் அவளாகவே அவன் அறைக்குள் செல்ல, அவனோ ஹார்பர் கணக்கு வழக்குகள் எல்லாம் பார்த்துகொண்டு இருந்தான்..

“பாஸ்…!!!!” என்று வந்தவளைப் பார்த்து அதிர்ந்தவன்,

“ஏய் நீ எங்க இங்க???” என்றபடி “பார்த்து பார்த்து மெல்ல..” என்று அவளின் கரங்களை பிடிக்க,

“நீ வா… போய் பேசலாம்.. நிர்மலா கிட்ட நான் பேசறேன்.. அவ என்ன லூசா.. உன்னை போய் வேணாம் சொல்றா???” என்று அவனை பிடித்து வெளியே அழைத்து செல்ல இழுத்தாள்..

ஆனாலும் பாலகுரு, அவளை பிடிவாதமாய் அமர வைத்தவன், “யாரும் யார்கிட்டயும் கேட்கவேணாம்… அவளுக்கு வேணாம்னா போகட்டும்.. நீ ஏன் இவ்வளோ டென்சன் ஆகணும்…” என்று பாலகுரு அமைதியாய் கேட்க,

அவனைப் பார்த்தவளோ, “உ.. உனக்கு கஷ்டமா இல்லையா???!!” என,

“எனக்கென்ன கஷ்டம்.. நத்திங்… அவளுக்கு வேணாம் தோணிருக்கு சொல்லிட்டா.. நான் போய் கெஞ்ச முடியுமா???” என்று தோள்களை குலுக்க பூர்ணிமாவிற்கு அப்படியே முகம் மாறிவிட்டது..

“உனக்கு பொண்ணுங்கன்னா இவ்வளோ மட்டமா????!!!!” என்று அவனின் சட்டையைப் பிடித்தவள்,

“பிடிச்சிருக்குன்னு சொல்றவளையும் மதிக்க மாட்ட… சரின்னு உனக்கு பிடிச்சு நிச்சயம் பண்ண ஒருத்தியையும் மதிக்க மாட்டன்னு சொன்னா என்ன மனுஷன் நீ பாஸ்…” என்று கத்த, வெளியே இருந்த அனைவர்க்கும் இவர்கள் பேசுவது ஸ்பஸ்டமாய் கேட்க, பெரியவர்கள் அனைவருமே இதென்ன புதிதாய் என்றுதான் பார்த்தனர்..

“ஸ்.. பூர்ணி… என்ன பேச்சு இதெல்லாம்.. அவ வேணாம் சொன்னா.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..”

“ஏன் உனக்கும் தானே அவளை பிடிச்சது.. ஒன் டைம் நீ அவளை கன்வின்ஸ் பண்ண முடியாதோ???”

“முடியாதுன்னு இல்லை.. ஆனா எனக்கு தேவையில்லை.. என்னை தூக்கி போட்டவ கிட்ட நான் ஏன் பேசணும்…”

“ஓ… இதான்… இதேதான்… நீயும் என்னை வேணாம் சொல்லிருந்தப்போவே நானும் உன்னை தூக்கிப் போட்டிருக்கணும்.. பாஸ் பாஸ்னு உங்கிட்ட வந்து பேசினேன்ல.. அதான் உனக்கு பொண்ணுங்கன்னா அவ்வாளோ லேசா போயிட்டாங்க..” என்று பூர்ணிமா கத்த,

“ஏய்.. எதுக்கு எதை முடிச்சு போட்டு பேசற…??? நான் இப்பவும் சொல்றேன் என்னால யார்கிட்டையும் போய் எனக்கு வாழ்க்கை கொடு.. என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு எல்லாம் கேட்க முடியாது…” என்றவனை எரித்து விடுவதுபோல் தான் பார்த்தாள்..

“உன்னை நான் லவ் பண்ணேன்.. உன்னோட சேர்ந்து வாழணும்னு நினைச்சேன்.. ஆனா அதுக்காக உனக்கொரு லைப் அமையுறப்போ அதை கெடுக்கனும்னு நான்  நினைக்கலை..  பட் எல்லாத்தையும் சேர்த்து நீ கெடுத்துட்ட.. இப்போ பழி என்மேல.. என்னால தான் இதெல்லாம்னு.. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்…” என்றவள்,

“இனிமேல என் முன்னாடி எங்கயும் வந்திடாத..” என்றுவிட்டு சென்றுவிட,

அதற்கு மறுநாள் “கொஞ்ச நாள் வெளிய இருந்துட்டு வர்றேன்…” என்று கப்பல் ஏறியவன் தான் இன்றுவரைக்கும் வீடு வரவில்லை..                               

           

                            

   

     

 

Advertisement