Advertisement

  குருபூர்ணிமா – 15

“முழுசா அழிக்கலைன்னு இப்போ தெரியுதே சார்.. ஒருவேளை அந்த தினேஷ் இவங்க வீட்ல வொர்க் பண்ணிருந்தா கூட நாங்க வேற ஆங்கில்ல விசாரிக்கலாம்.. ஆனா அவன் லாஸ்ட்டா வேலை பார்த்தது உங்கக்கிட்ட.. இப்போ நீங்க சொன்னதை வச்சு பார்த்தா ஒருவேளை அவன் உங்களை பழிவாங்க கூட இப்படி பண்ணிருக்கலாம்…”

“எது எப்படியோ சார்.. இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்ணுக்கு கல்யாணம்.. இப்போ போய் கேஸ் அது இதுன்னு இப்படி அலைஞ்சிட்டு இருக்கிறது நல்லா இருக்குமா எங்களுக்கு.. கொஞ்சம் சீக்கிரம் அவனை பிடிக்கப் பாருங்க..” என்றுவிட்டு ராஜன், நிர்மலாவை அழைத்துக்கொண்டே வெளியே சென்றிட,

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த பாலகுரு “சார் எங்களை ஏன் வர சொன்னீங்க??” என்றான்..

“ஜஸ்ட் இந்த விசாரணை தான்.. நீங்க உங்க சைட் எல்லா எவிடென்சும் டெலிட் பண்ணிடீங்கன்னு சொல்றீங்க.. ஆனா வேற யார்கிட்டவும் அந்த வீடியோ இருக்க சான்ஸ் இருக்கா?? கொஞ்சம் யோசிங்க??”

“எனக்கு தெரிஞ்சு கண்டிப்பா இல்லை சார்.. பிகாஸ் போட்டோக்ராபர் நாங்கதான் அரேஜ் பண்ணோம்.. அங்க இருந்த அத்தனை கேமராவும் ரிமூவ் பண்ணிட்டோம்..” என,

“ஓ..!! சரி.. லெட்ஸ் சீ…” என்று மேலும் சிறிதுநேரம் பேசிவிட்டே பாலகுருவும் பூர்ணிமாவும் வெளியே வர, ராஜன் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருக்க. நிர்மலா சற்று தள்ளி நின்றிருந்தாள்..

அவளைப் பார்த்ததும் பூர்ணிக்கு என்ன தோன்றியதோ, அவளிடம் சென்றவள், “யாரையும் வேண்டாம்னு தூக்கி போடுறது ஈசி… இப்போவாது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. அன்னிக்கு சொன்னீங்களே, எல்லாமே உன்னால வந்ததுன்னு.. இப்போ புரிஞ்சதா யார்னாலன்னு…??” என்று சொன்னவளின் பார்வையில் தான் எத்தனை ஒரு ஏளனம் இருந்தது..

நிர்மலா அன்று பூர்ணிமாவை பார்த்த ஏளன பார்வையை காட்டிலும் பத்து மடங்கு இவள் காட்டினாள் ஒரு பாவனை..

பாலகுரு கூட ‘என்னடா இப்படி பாக்குறா…’ என்றுதான் நினைத்தான்..

நிர்மலா பதில் சொல்வதற்கு முன்னமே, திரும்பி நடந்தவள்,  பாலகுரு அவளை பார்த்த பார்வையில்,  “என்ன பாஸ்.. சிலதுக்கு எல்லாம் பதில் கொடுத்திடனும்…” என்றவள் காருக்கு போக, பாலகுரு அவளுக்கு கதவு திறந்துவிட்டவன் தானும் ஏறிக்கொண்டான்..

நிர்மலாவிற்கு அத்தனை மன அழுத்தமாய் இருந்தது… அவளுக்கு நிம்மதி எதில் என்பது எதுவுமே அவளுக்கு புரியவில்லை. பாலகுரு பூர்ணிமாவை அப்படி கவனித்துகொள்வது அவளால் இப்போதும் கூட சகிக்க முடியவில்லை..

‘ச்சே இவன் எப்படி என்னை பிடிச்சிருக்கு சொன்னான்…???’ என்ற கேள்வி குடைந்து எடுத்தது..

ஆனால் பாலகுருவும் சரி.. பூர்ணிமாவும் சரி இதெல்லாம் தாண்டி அவர்களின் வாழ்வில் பல தூரங்களை கடந்துவிட்டனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.. புரியும்..

நிர்மலாவோ கிடந்து தவித்தாள்… இதில் அவளின் வருங்கால கணவன் ரஞ்சித்  வேறு.. இந்த வீடியோ லீக் ஆனதில் இருந்து முகம் தூக்கிக்கொண்டு இருந்தான்.. சரியாய் பேசுவதுமில்லை.. ஒருவேளை அவன் பேசியிருந்தால் கூட இவளுக்கு இந்த தவிப்பு நேர்ந்திராதோ என்னவோ..

அதிலும் அந்த பூர்ணிமா.. அவளை நினைக்க நினைக்க அப்படியொரு எரிச்சல் இவளுக்கு மூண்டது.. கடைசியில் என்னமாய் ஒரு பார்வை பார்த்தாள் அவள்.. உறக்கமே வராது புரண்டாள்..

விரல்விட்டே எண்ணும் நாட்கள் தான்.. திருமணம் இருக்க,  ஆனால் அந்த பொலிவு சந்தோசம் எதுவுமே அவளின் முகத்தினில் இல்லை..

சுதா கூட “எல்லாத்தையும் விடு நிம்மி.. நீ ஹேப்பியா இரு..” என்றுசொல்ல,

“ம்ம்ச்..” என்று எரிச்சலாய் தான் பதில் சொல்ல முடிந்தது.

முன்பு அவள் இப்படி இல்லை என்று நன்கு தெரியும்.. ஆனாலும் ஏன் இப்போது இப்படி என்று அவளுக்கே தெரியவில்லை.. ரஞ்சித் அவளுக்கு பிடித்து தான் சரியென்று சொன்னாள்.. அவனும் நல்ல குணம்தான்.. ஆனால் என்னவோ அவனுக்கு இந்த கேஸ் அது இது எனவும் ஒரு மன குழப்பம்..

அது யாருக்கு என்றாலும் நடப்பதுதானே.. அதனை நிர்மலாவிடம் அப்படியே காண்பித்தான்..

என்ன செய்வது என்று யோசித்தவள் அவனை கெஞ்சி கூத்தாடி ரஞ்சித்திடம் சமாதானம் செய்து அவனோடு ஒரு ஸ்டார் ஹோட்டல் செல்ல, அங்கேயும் விதி விளையாடியது..

ரஞ்சித் இயல்பாகவே பேச “இவ்வளோ பேசுறீங்களே.. கொஞ்சம் எனக்கு ஆறுதலா இருந்திருக்கலாம்..” என்று நிர்மலா சொல்லிட,

“ம்ம்ச் இப்போ இந்த பேச்சு பேசத்தான் வந்தியா??” என்றான்..

“இல்லை.. இல்லை..” என்றவள் அமைதியாய் உண்ண,

“நிம்மி..!!!!” என்றான் ரஞ்சித்..

“ம்ம்…”

“சில விஷயங்கள் மேரேஜுக்கு முன்னாடியே எல்லாம் செட் ஆகிடாது.. நமக்குள்ள இன்னும் நிறைய புரிதல் வரணும்..”

“ம்ம்ம்…”

“சோ.. எனக்குமே டைம் எடுக்கும்..”

“ம்ம்ம்..”

“இப்படி ம்ம்ம் சொல்லத்தான் வந்தியா???” என்றான் அத்தனை நேரம் பொறுமையாகவே போகவேண்டும் என்று நினைத்தவன்..

“வேறென்ன சொல்ல.. நீங்க பேசுங்க…” என்றவளை கடுப்பாய்  பார்த்தவன்,

“கிளம்பலாம்…” என்றுசொல்லி வேகமாய் நடக்க, அவனின் இந்த திடீர் மாற்றம் கண்டு திடுக்கிட்டவள், என்ன செய்வதும் என்றும் தெரியாமல்,

“ரஞ்சித் ப்ளீஸ் ப்ளீஸ் நில்லுங்களேன்..” என்று அவன் பின்னோடே வர சரியாய் இவர்களுக்கு எதிரில் பூர்ணிமாவும் பாலகுருவும் எதுவோ சிரித்தபடி பேசியபடி வந்துகொண்டு இருந்தனர்..

அவர்களை கண்டதுமே ரஞ்சித் திரும்பி நிர்மலாவை தான் பார்த்தான். நிர்மலா என்ன செய்வது என்பது தெரியாது நிற்க, பூர்ணிமாவும் பாலகுருவும் இவர்களை கடந்து சென்றுவிட்டனர். அவர்கள், இவர்களை  கவனிக்கவும் இல்லை..

நிர்மலா அவர்கள் போவதையே பார்த்து நிற்க, ரஞ்சித் அவள் வருவாள் என்று அவளைப் பார்க்க, அவளோ அப்படியே தான் நின்றுவிட்டாள்.. அவளுக்கு மனதினில் அப்படியொரு கோபம் வந்தது பாலகுரு மீது..

“நிம்மி…..” என்று ரஞ்சித் அழைக்க, அவளுக்கோ இங்கே இருக்கவே அடுத்து பிடிக்காமல் போகவும்,

“கிளம்பலாமா??” என்றாள்..

“ம்ம்… கிளம்பலாம்..” என்றவன் கார் வரைக்கும் சென்று,

“நீ.. நிஜமாவே என்னை மேரேஜ் பண்ணிக்க ரெடியா??” என்றான்..

“என்… என்ன இப்படி???” என்று அவன் கேள்வி அவளுக்கு புரியுமுன்னே,

“உன் மனசுல நம்ம கல்யாணம் மட்டும் தான் இருக்கும்னா உன் கண்ணுல ஏன் அவ்வளோ கோபம் அவங்களை பார்த்து…??” என்று அடுத்த கேள்வி முன்னே வைக்க,

“அது… அது.. தெரியலை…” என்றாள் முனுமுனுப்பாய்..

“ரீசன் உன்கிட்ட தான் இருக்கு.. யோசி.. நம்ம மேரேஜ்க்கு இன்னும் டென் டேஸ் இருக்கு.. அதுக்குள்ளே நீ தெளிவாகிட்டா சரி…” என்றவன், கிளம்பிவிட, நிர்மலா கிளம்பவில்லை..

அவள் தனியே அவளின் காரில் தான் வந்திருந்தாள்.. ரஞ்சித் தானே வந்து அழைத்து போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தான்.. இவள்தான் ‘இல்லை நானே வர்றேன்…’ என்றிருந்தாள்..

இப்போதோ அவளுக்கு அங்கிருந்து கிளம்பவும் மனமில்லை.. ரஞ்சித் இப்படி விட்டு போனதும் ஒருமாதிரி இருக்க, அப்படியே கொஞ்ச நேரம் அந்த கார் பார்கிங் அருகே இருந்த பார்க்கில் அமர்ந்திருந்தாள்.. மனது ஒரு தெளிவில் இல்லை என்பதனை விட,

பாலகுரு பூர்ணிமா இருவரும் இப்படி சந்தோசமாக இருக்கிறார்களே, ஆனால் தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது .. அதுவே அவளுக்கு ஒரு கோபம்.. பொறாமை எரிச்சல் எல்லாம் கொடுக்க, எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ, சுதாவின் அழைப்பு வர,

“ம்மா.. கிளம்பிட்டேன்…” என்றவள் காருக்கு போகையில், திரும்பவும் பாலகுருவும் பூரணியும் வர, இன்று இவனை சும்மா விடக்கூடாது என்ற எண்ணம் வந்தது அவளுக்கு..

நேராய் அவர்களிடம் சென்றவள், “உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள் அவனை பார்த்து..

கணவன் மனைவி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, பின் பாலகுரு “நம்ம பேச எதுவுமில்லைன்னு நினைக்கிறேன்…” என்றபடி நகரப் போக,

“இல்லை எனக்கு இருக்கு…” என்றாள் நிர்மலா அழுத்தம் திருத்தமாய்..

அவளின் முகத்தைப் பார்த்த பூர்ணிமாவோ “பாஸ் நீ பேசிட்டு வா.. நான் அங்க பார்க்ல இருக்கேன்..” என்று சென்றுவிட, பாலகுருவோ ‘ம்ம் பேசு…’ என்று நின்றிருந்தான்..                       

நிர்மலாவிற்கு பூர்ணிமா முன்பு பாலகுருவோடு பேச பிடிக்கவில்லை.. அது என்னவோ, பெண்கள் சில நேரத்தில் ஆண்களிடம் எதுவும் பேசிவிடுகிறார்கள், அதே தங்கள் வயதையொத்த சக வயது பெண்களிடம் மட்டும் ஈகோ வந்து விடுகிறது போலும்.. அதுபோலவே இப்போது நிர்மலாவிற்கு..

அதுவும் இந்த பூர்ணிமா முன்பு எப்போதுமே அவளால் ஒரு இயல்பு நிலையில் இருந்திட முடியவில்லை.. அது ஏனோ என்னவோ.. தெரியவில்லை..

பாலகுருவை நேருக்கு நேர் பார்த்தவள்,  “நீங்க ஒருதடவ வந்திருக்கலாம்ல… அட்லீஸ்ட் என் இப்படி சொல்றன்னு கூட ஒருவார்த்தை நீங்க கேட்கலை??? இப்போ இப்போ நான் இவ்வளோ ஹர்ட் ஆகறேன்னா அதுக்கு காரணம் வேற யாருமில்ல நீங்க தான்..” என்று கண்ணீர் விட்டவளுக்கு மறந்தும் கூட முகத்தினில் வருத்தம் தெரியவில்லை..

மாறாய் உன்னால் தான் அனைத்தும் என்ற பழி பட்டுமே பிரதிபலித்தது..

பாலகுரு இதனை இம்மியளவும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் முகத்திலேயே தெரிய அப்படியே மௌனமாய் நின்றிருந்தான்..

“என்ன பாக்குறீங்க.. இப்போ வந்து இப்படி பேசறாளேன்னா… ஆமா உங்களை வேண்டாம்னு சொன்னேன்.. காரணம் நீங்க ஒன் டைமாவது என்னை தேடி வரணும்னு.. ஏன் அப்போ நம்ம தானே கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தது.. இதுகூட நான் அப்போ எதிர்பார்த்து இருக்க கூடாதா என்ன??” என்று அவள் கேட்டதற்கு அவன் என்ன பதில் சொல்ல என்று கூட தெரியாது தான் நின்றான்..

“பதில் சொல்லுங்க பாலா… இதோ இப்போ… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட என்னோட பியான்ஷி என்கிட்டே கோவிச்சிட்டு போனார்.. இனி வீட்டுக்கு போய் நான் போன் போட்டு அவரை சமாதானம் செய்யணும்…. இதே போலத்தான் என்  லைப் கடைசி வரைக்குமா அது தெரியாது..

ஆனா இந்த செக்கன்ட்… இப்போ நான் ஹர்ட் ஆகறேன்ல.. அது யார்னால..?? எல்லாம் நீங்கதான் காரணம்.. கல்யாணம் பண்ணிக்க போறவன்கிட்ட எல்லா பொண்ணுங்களும் எக்ஸ்பெக்ட் பண்றபோல தானே நானும் நினைச்சேன்..

ஆனா நீங்க..??? என்னவோ பெரிய ரோசம் வந்ததுபோல இருந்துட்டீங்க.. இப்பவும் உங்களுக்கு எதுவும் கேட்டுபோகலை.. இதோ உங்களை லவ் பண்ண ஒருத்தி.. அவளை கல்யாணம் பண்ணிட்டு நல்லா சந்தோசமா இருக்கீங்க.. ஆனா நான்??? என்னால இப்போ அப்படி இருக்க முடிஞ்சதா??? ” என்று பேசிக்கொண்டே போனவள்,

“எல்லாத்துக்குமே நீங்கதான் காரணம்…” என்று விரல் நீட்டி சொல்லிவிட்டு வேகமாய் நடந்துவிட்டாள்..

பூர்ணிமா, நிர்மலா போவதை பார்த்தவள், பாலகுரு வருவான் என்று காத்திருக்க, அவனோ நொடிகள் கடந்தும் வரவில்லை எனவும் அவளே தேடி வந்தாள்.. பாலகுருவோ அப்படியே அங்கேயே நின்றிருக்க,

“பாஸ் என்ன???” என்றபடி அவனை தொட,

“ஹா…” என்று திரும்பியவன் “நத்திங்.. போலாமா??” என,

“ம்ம் போலாம்..” என்று பூர்ணிமா காரில் ஏற, இவனும் காரை கிளம்பினான் ..

இருவருமே மௌனமாய் வர, பூர்ணிமா ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துகொண்டு வர, பாலகுரு அவளைப் பார்த்தவன்,

“என்னன்னு கேட்க மாட்டியா பூர்ணி..” என்றான்..

“ம்ம் என்ன பாஸ்??” என்று அவள் திரும்ப,

“நீ தான்.. நிர்மலா என்ன பேசினான்னு கேட்க மாட்டியா???” என்றான் அவளைப் பார்த்து..

“கேட்கணும் நினைச்சிருந்தா நான் அங்கேயே நின்னிருப்பேனே பாஸ்…” என்றவள் அதற்குமேலும் எதுவும் கேட்காமல் இருக்க,

“அவ சொன்னதை கேட்காம இருக்க வந்திட்ட.. ஆனா என்னை கேட்டிருக்கணும் தானே…” என்றான் இவனும் விடாது..

‘இப்போ உனக்கு என்ன பிரச்னை…’ என்றுதான் பார்த்தாள்..

“என்ன பூர்ணி…???”

“உனக்கு சொல்லனும்னு இருந்தா நான் கேட்காம நீயே சொல்லிருக்கணும்.. அதைவிட்டு என்னை ஏன் கேட்கலைன்னு சொல்ல கூடாது பாஸ்..” என்றவள் திரும்பவும் முகம் திருப்பிக்கொள்ள,

“உனக்கு கோவம்னு தெரியுது  பூர்ணி…” என்றவன் அவளின் கரங்களை பற்ற,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றவள் அப்போதும் அவன்புறம் திரும்பாமல் இருக்க,

“ம்ம்ச் பூர்ணி.. என்ன இது…” என்றான் கண்டிக்கும் குரலில்..

“என்ன இது… நீயா பேசின.. நான் எதுவுமே பண்ணலை…” அவளும் அதே ஒரு எரிச்சல் குரலில் சொல்ல, பாலகுரு கொஞ்ச நேரம் அமைதியாகவே காரை செலுத்தியவன், 

“அவ இப்படி சொன்னா…” என்று அனைத்தையும் சொல்ல, மௌனமாகவே இருந்தாலும் அனைத்தையும் கேட்டுவிட்டு,

“ம்ம்.. அவ சொன்னதும் சரிதான்..” என்றாள் பூர்ணிமா..

Advertisement