குருபூர்ணிமா – 11

“என்ன அப்படி பாக்குற பூர்ணி.. நிஜம்தான்… நான் கிளம்பி போறப்போ என்ன மைன்ட் செட்ல போனேனோ எனக்கு தெரியாது.. ஆனா வர்றபோ…” என்றவன் அவளது பார்வை கண்டு,

“சரி சரி நீதான் கூட்டிட்டு வந்த போதுமா.. பட் நீ வரலைன்னாலும் நானே கொஞ்ச நாள்ல வந்திருப்பேன்.. எனக்கே நான் வீட்டை விட்டு கிளம்பி வந்தது தப்போன்னு தோன ஆரம்பிச்சது..” என,

“எப்படி ஆறு மாசம் கழிச்சா???!!” என்றாள் இவள் கிண்டலாய்..

“ஹா ஹா.. உன்னைமாதிரி இல்லைம்மா நானு.. போதுமா..” என்றவன் இன்னமும் பேச யோசிப்பதாய் இருக்க, “இப்பவும் நீ ஏன் பாஸ் இப்படி யோசிக்கிற???” என்றாள் பூர்ணிமா..

“ம்ம் தெரியலை.. இதை உன்கிட்ட பேசலாமா கூட தெரியலை.. ஆனாலும் இதோ நடுக்கடல்ல நிறுத்தி வச்சி கேட்டா சொல்லத்தானே வேணும்…”

“ஹா ஹா ஆமா பாஸ் இல்லன்னா தள்ளி விட்டாலும் விட்ருவேன்…” என்று அவனை தள்ளுவது போல் பூர்ணி கைகளை சைகை செய்ய, அவனோ அதே கரங்களை இறுக பிடித்து,  

“விழுந்தாலும் உன்னையும் இழுத்துட்டு போய் விழறேன்..” என்றுசொல்ல,

“ஹா..!!!!!” என்று வாய் பிளந்தவள் “பாஸ்… நீயா இது…” என,

“ஹா ஹா நானேதான்… இனி எதுக்கும் உன்னை விடறதா இல்லை..” என்றான் அவளை இறுக பிடித்து..

“ம்ம்ம்… நீ என்ன பேச வந்த பாஸ்…” என்றவளுக்கு அவன் என்னவோ நிர்மலா பத்தித்தான் பேச எண்ணுகிறான் என்று புரிந்தே கேட்க, அவனும் அதை அமோதிப்பது போல் தலையை ஆட்டியவன்

“நிர்மலா இந்த கல்யாணம் வேணாம் சொன்னப்போ எனக்கு கோபம் கூட வரலை பூர்ணி.. ஆனா நீ என் கண்ணு முன்னாடியே வராதன்னு சொன்னப்போ அவ்வளோ கோபம் வந்தது.. அது ஏன்னு இப்போ வரைக்கும் தெரியலை.. இப்பவும் நீ கல்யாணம் வேணாம் சொன்னப்போவும் கோபம்தான் வந்தது.. பதிலுக்கு பதில் உன்னோட சண்டை போடணும்.. நீ எப்படி என்னை கண் முன்னாடி வராதன்னு சொல்லலாம்னு அவ்வளோ ஒரு கடுப்பு எனக்கு.. அப்போ இவளுக்கும் என்னை பிடிக்கலையான்னு ஒரு எரிச்சல்.. போதாத குறைக்கு அந்த போஸ் சொன்னது வேற.. எல்லாம் சேர்ந்து என்னை ஒரு வழி செஞ்சிடுச்சு.. இதுக்கு நடுவில நிர்மலா வேற…” என்று சொல்லி நிறுத்த,

“நி… நிர்மலவா??!!!” என்றாள் மனதில் தோன்றும் ஒரு அதிர்வை மறைத்து..

என்னவோ பூர்ணிமாவிற்கு இது அதிர்ச்சியாய் தான் இருந்தது… பாலகுருவோடு பேசவேண்டும், அவனோடு சிறிது தனிமையில் நேரம் செலவிட வேண்டும் என்றுதான் அவனை கடலுக்கு அழைத்துக்கொண்டு வந்தாள்.. அவனும் அதனை விரும்பியதாய் தான் தோன்றியது.. இல்லையேல் யாருமில்லாது அவனே போட் செலுத்திக்கொண்டு இதோ சுற்றிலும் ஆகாயமும், கடலும் மட்டுமே அவர்களின் கண்ணுக்கு காட்சியளிக்க, இப்படியொரு தனிமையை அவனும் கொடுத்திருக்க மாட்டான்..

இந்த பேச்சுக்களை தவிர்க்கவே பாலகுரு எண்ணினான்.. ஆனால் அவனாலும் அது முடியவில்லை.. அன்றும் இதையே தான் உணர்ந்தான் பூர்ணிமா முன்பு, அவளின் முகத்தினை பார்த்துகொண்டு அவனால் நிர்மலா பற்றி பேசிட முடியாது.. அது ஏன் என்றும் தெரியவில்லை..  ஒருவேளை அது அவளை சுனங்க வைக்கும் என்று எண்ணினானோ என்னவோ.. ஆனாலும் இப்போதும் இதை பேசாது விடுவது சரியென்று தோன்றாததால் பேசிவிட்டான்..

இருவருமே சிறிது நேரம் அமைதியாய் இருக்க, “பாஸ்….” என்றாள் மெதுவாய்..

“ம்ம் இது உன்னை கஷ்டப்படுத்தும்னு தான் சொல்லலை பூர்ணி..” என்றதும்,

“ம்ம்ச் இப்போ சொல்லு… நான் கஷ்டப்படமாட்டேன்.. ஏன்னா சொல்றது நீயாச்சே பாஸ்…” என்றாள் வழிய வரவழைத்த புன்னகையோடு..

அவளது புன்னகை அவனுக்கு ஒட்டியதோ இல்லை அவள் சொன்னது அவனுக்கு புன்னகை கொடுத்ததுவோ தெரியாது.. ஆனாலும் அவனுக்கும் ஒரு சிறு புன்னகை பூத்தது..

“உனக்கு ஏன் பூர்ணி இவ்வளோ லவ் என்மேல..??” என்றவன் பேச்சோடு என்ஜினை ஆன் செய்திட,

“இப்போ ஏன் பாஸ் ஆன் பண்ற?? இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே..” என்ற சிணுங்கலோடு “லவ் எல்லாம் காரணம் சொல்லிட்டு வராது..” என, அதற்கும் அவன் புன்னகைத்துக்கொள்ள,

“என்ன பாஸ் நீ சிரிச்சு சிரிச்ச கவுக்குற.. என்ன சொல்ல வந்தியோ சொல்லு..” என்றாள் திரும்பவும் அவனை பேச்சில் இழுத்து..

“ஹ்ம்ம்.. நீ இருக்கியே இதுக்குதான் உன்னை பார்த்து பேச முடியலை சொன்னேன்.. எல்லாத்தையும் மாத்திடுற…” என்றவன்,

“அது.. அன்னிக்கு எல்லாரும் போய் நிர்மலா வீட்ல பேசிட்டு வந்தாங்க இல்லையா.. எனக்கு வீட்ல யாரையும் பார்த்து எதுவும் பேச பிடிக்கலை.. ஹார்பர்  வந்துட்டேன்.. அப்போ நிர்மலா வந்தா இங்க என்னை பார்க்க…” என்றுவிட்டு அவளைப் பார்த்தான் பாலகுரு..

“ஹ்ம்ம்.. அப்புறம்..”

“ ‘உன்னைமாதிரி ஆளை யாருக்கும் பிடிக்காது.. அவ்வளோ ஏன் உன்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறவங்களுக்கு கூட உன்னை பிடிக்காது.. ஆனா நான் நினைச்சது வேற.. நான் வேண்டாம்னு சொன்னாளாவது உனக்கு நான் முக்கியமா படுவேனான்னு நினைச்சேன்.. ஆனா இப்போ கூட உனக்கு அந்த பூர்ணிமா தான் முக்கியமா போயிட்டாள்ல.. நீ வருவன்னு பார்த்தா உன் வீட்டு ஆளுங்களை அனுப்பி வைக்கிற..’ அப்படின்னு சொன்னா…” எனும்போது அவன் முகமே சரியில்லை..

“ம்ம் பாஸ்… அப்புறம் என்னாச்சு???” என்றதும் அவளை திரும்பிப் பார்த்தவன், “கிண்டல் பண்றியா??” என்று கேட்க,

“ச்சே ச்சே.. நான் ஏன் பாஸ் உன்னை கிண்டல் பண்ண போறேன்.. நீ சொல்லு..” என, பாலகுரு என்ஜின் வேகத்தினை கொஞ்சம் குறைத்திருந்தான்.. பொழுதும் நன்றாகே இருட்டிவிட்டது.. போட்டில் எப்போதும் இருக்கும்  மின் லாந்தர் விளக்கினை பாலகுரு எரிய விட என்னவோ அந்த சூழல் ஏகாந்தமாய் இருப்பது போல் இருந்தது பூர்ணிக்கு..

அவன் பேசும் விஷயங்கள் அதனோட காரணங்கள் எல்லாம் தாண்டி சுற்றி இருக்கும் சூழலும், அவனோடான இந்த தனிமையும் மட்டும் மனதில் நிற்க, “பாஸ்…” என்று அவளாகவே அவனை ஒட்டிக்கொண்டாள்.

“ஹேய் என்ன இது…” என்று லேசாய் ஆச்சர்யத்து கேட்டாலும், அவனுக்குமே அவளின் இந்த அருகாமையும், நெருக்கமும் என்ன உணர்த்தியதோ “போட் நிறுத்தட்டுமா??!!!” என்று கேட்க,

“நீ ஏன் ஸ்டார்ட் பண்ண???” என்றாள்..

“அதுசரி…” என்றபடி பாலகுரு திரும்ப என்ஜினை அணைத்திட பூர்ணிக்கு அத்தனை குஷியாய் போனது..

“ஹ்ம்ம்… பாஸ்.. இப்படியே இருக்கணும்…” என்று சொல்ல,

“கல்யாணம் ஆகட்டும் ஒரு போட் ஹவுஸ் ரெடி பண்ணலாம்…” என்று அவனும் சொல்ல,

“ம்ம்ம்.. நானே சொல்லணும் நினைச்சேன்…” என்றவளை இடையோடு அணைத்தவன் “ம்ம் வேறென்ன நினைச்ச..??” என்று மெதுவாய் அவளின் காதருகே கேட்க,

“இப்போ ஏன் இவ்வளோ கிட்ட வர நீ.. பேட் பாஸ் நீ..” என்று வேண்டுமென்றே நகர்ந்தவள், “சரி சரி நிர்மலா கதைக்கு வா..” எனவும் அவனுக்கு முறைப்பு வந்தது..

“போ டி…” என்று எதிரே இருந்த கட்டையின் மீது போய் அமர்ந்து கொண்டான்..

“இப்போ என்ன கோவம் உனக்கு.. அப்புறம் பேச விடலைன்னு என்ன சொல்வ…”

“ம்ம்ச் போ டி..”

“போக எல்லாம் முடியாது.. நீ முழுசா சொல்லி முடி பாஸ்..” என, என்னவோ அவனுள் ஒரு வேகம் கிளம்பியது..

“என்ன சொல்ல சொல்ற?? அவ ப்ளே பண்ணிருக்க.. நான் சொன்னேன் பூர்ணி ஒன்னும் யாரோ இல்லைன்னு.. பூர்ணி முன்னாடி எதுவுமே முக்கியமில்லைன்னு.. அதை உடைக்கணும் நினைச்சிருக்க.. வேண்டாம்னு சொல்றது போல சொல்லி நான் வந்து அவ முன்னாடி நிக்கணும் நினைச்சிருக்கா.. போதுமா???!!!” என்று ஏறக்குறைய கத்தினான்..

“பாஸ்….!!!!!” என்று பூர்ணி அதிர்ந்து விழிக்க,

“ஆமா  போ டி.. பாஸாம் பாஸ்.. லவ் பண்ணியே.. ஒன்னு என்னையும் பண்ண வச்சிருக்கணும்.. அதைவிட்டு நீ உன் விருப்பத்துக்கு இரு நான் என் இஷ்டத்துக்கு இருக்கேன்னு இருந்திட்டு இன்னிக்கு யார் யாரோ என் லைப்ல ப்ளே பண்றாங்க.. வந்துட்டா பாஸ் பாஸ்னு சொல்லிட்டு..” என்று அப்போதும் அவன் கத்த,

“பாஸ்…!!!!!” என்று மேலும் பூர்ணி திகைத்து விழித்தாள்..

“இங்க பாரு இப்பவும் சொல்றேன்.. என்னால யார் முன்னாடியும் எனக்கு வாழ்க்கை கொடுன்னு எல்லாம் போய் நிக்க முடியாது.. ஒழுங்கா நீ என்னை கல்யாணம் பண்ற.. அவ்வளோதான்.. லொட்டு லொசுக்கு சாக்கு எல்லாம் சொல்லிட்டு இருக்காத புரிஞ்சதா.. எனக்கும் பொறுமை எல்லாம் ஒரு அளவுதான் பூர்ணி..”

“அதுசரி.. இப்போ என்னை இவ்வளோ கத்துற.. அவக்கிட்ட இப்படி பேசிருக்கலாம்ல.. போ பாஸ் நீ..”   

“நீ ஏன் பேசமாட்ட.. என் இடத்துல இருந்தா மட்டும்தான் தெரியும்.. இப்பவும் நீ கேட்கலாம் அவ பேசினது உனக்கு இவ்வளோ ஹர்ட் ஆகுதுன்னா ஏன் என்னை கல்யாணம் பண்ண கேட்கிறன்னு.. ஒண்ணு சொல்லட்டுமா.. நமக்கு பிடிச்ச விசயங்கள்ல இருக்க பிடிப்பு எப்போ வேணா மாறும்.. ஆனா நம்மை புரிஞ்சது, நமக்கு புரிஞ்சதுல இருக்க பிடிப்பு எப்பவும் மாறாது..

உன்னை கல்யாணம் பண்ண நினைக்கிறது உன்னை பிடிச்சதுனால மட்டுமில்ல உன்னை புரிஞ்சதுனாலவும் தான்.. அதை நீ புரிஞ்சுக்கோ முதல்ல..அதைவிட்டு லவ் இல்லை.. அது இல்லை இது இல்லைன்னு சொன்ன பார்த்துக்கோ..” என்று பாலகுரு விரல் நீட்டி மிரட்ட, பூர்ணிமா வாயடைத்துதான் போனாள்..

இது என்ன மாதிரியான ஒரு புரிதல்?? அவளுக்கு புரியவேயில்லை.. அதெல்லாம் தாண்டி ‘பூர்ணி முன்னாடி எனக்கு எதுவுமே முக்கியமில்லை..’ என்று அவன் சொன்ன வார்த்தைகளை மனதில் நிற்க,

“உன்ன பாஸ்னு சொல்றதுல எவ்வளோ அர்த்தம் இருக்குனு இப்போ புரியுதா பாஸ் உனக்கு..” என்று சொல்ல,  

“புரிஞ்சது புரிஞ்சது..” என்றான் சலிப்பாய் சொல்வது போல்..

“அட பார்ரா… சலிப்பு.. ஹ்ம்ம்…” என்று எழுந்து அவனிடம் சென்றவள், “ஹ்ம்ம் அப்புறம்… என்னாச்சு..” என,

“வேணா என்னை எரிச்சல் பண்ணாத.. தள்ளி விட்ருவேன்” என்று மிரட்டவும், “நீ சொன்னதுதான் உனக்கும்.. உன்னையும் இழுத்துட்டு விழுவேன்..” என்று அவள் சொல்லவும் கடுப்பையும் மீறி ஒரு சிரிப்பு வர,

“அப்புறம் என்ன.. நீ ப்ளே பண்றதுக்கு எல்லாம் வேற ஆள் பாரு.. அதுக்கெல்லாம் இந்த பாலகுரு இல்லன்னு சொல்லிட்டேன்.. ஆனாலும் அவ என்னை மட்டுமில்ல மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்துற மாதிரி பண்ணிட்டா.. அதான் நீ கல்யாணம் வேண்டாம் சொன்னப்போ அவ்வளோ கோபம் வந்தது..” என்றவன்,

“லேட்டாச்சு பூர்ணி கிளம்பலாம்..” என்று போட்டை கிளப்ப,

“ம்ம் இதுக்கா பாஸ் நீ போன??” என்றாள் வருத்தமாய்..

“ச்சி ச்சி.. அவ எல்லாம் ஒரு ஆளு.. அவ பேசினான்னு போவேனா?? இங்க இருந்திருந்தா கண்டிப்பா இது பெரிய விஷயம் ஆகிருக்கும்.. அவ திரும்ப திரும்ப ஏதாவது பண்ணிட்டே இருந்திருப்பா.. இப்போ அவளுக்கும் எதோ வரன் முடிஞ்சதா அப்பா சொன்னார்..  வீட்லயும் ஒண்ணு உன்னை கல்யாணம் பண்ணு இல்லை வேற பொண்ணு பாக்குறோம்னு ஆரம்பிப்பாங்க.. அதெல்லாம் தாண்டி நீ..

அப்போகூட வந்து உன்னை எப்படி அவ வேணாம் சொன்னா வா நான் பேசுறேன்னு தான் சொன்ன.. அதுக்கு பதிலா அவ போனா என்ன நான் எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையான்னு சண்டை போட்டு இருக்கலாம் நீ.. அதைவிட்டு கண்ணுல முழிக்காதன்னு சொன்ன.. அதான் போயிட்டேன்…” என்றதுமே, வேகமாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் பூர்ணிமா..

கண்ணிமைக்கும் நேரம்தான்.. ஆனாலும் வைத்துவிட்டாள்.. “ஏய்…!!!” என்று பாலகுரு திரும்ப,

“ம்ம்ச் போ பாஸ்.. என்னவோ பார்ஸ்ட் டைம் கொடுக்கிறது போல ஷாக் ஆகுற.. இது செக்கன்ட் டைம்..” என்று அவள் சொல்ல,

“நீ சொல்லவும் தான் நியாபகம் வருது, அந்த போட்டோ எங்க…??” என்றான் இவன்..

‘ஐயோ மாட்டிக்கிட்டோமோ…’ என்று பூர்ணி முழிக்கும் போதே, போட் கரையை நெருங்கிட, “சொல்லு பூர்ணி..” என்று இவன் பிடியை இறுக்கி கேட்க,

“அ.. அ.. அது..” என்று முழித்தவள், “பாஸ் அங்க பாரு.. சின்ன மாமா நிக்கிறாங்க..” என்று கை கட்ட, “ஆமா சித்தப்பா ஏன் இங்க நிக்கிறார்…” என்று அவனாகவே கேட்டபடி பார்க்க, அதற்குள் பாண்டியா வந்துவிட்டான் அங்கே..

முதலில் பாலகுரு இறங்க, அடுத்து பூர்ணியை இறக்கிவிட, தனபால் நின்றவரோ “பாலா அப்படியே கிளம்புங்க நம்ம வீட்டுக்கு போலாம்..” என்று சொல்ல,

“ஏன் சித்தப்பா என்னாச்சு???” என்றான் பாலகுரு..

பூர்ணி அமைதியாய் நிற்க “இல்லடா பூர்ணி வீட்ல இருந்து எல்லாம் அங்கதான் வந்திருக்காங்க.. அண்ணி போன் பண்ணி உங்களை அங்க கூட்டிட்டு வர சொன்னாங்க..” என,

பாண்டியாவும் “அண்ணி ஸ்கூட்டி என்னை கொண்டு வந்து வீட்ல நிறுத்த சொல்லிட்டாங்க.. சாவி குடுக்கிறீங்களா??” என்று கேட்க,

‘என்னடா நடக்குது இங்க??!!’ என்றுதான் இருவரும் பார்த்தனர்..     

“கிளம்புங்க போகலாம்..” என்று சொல்லி தனபால் நடக்க, பாலகுருவும் வா என்று இதழ் அசைக்க, பூர்ணிமாவும் வேறு வழியில்லாது பாண்டியாவிடம் சாவி கொடுத்துவிட்டு காரை நோக்கி நடந்தாள்..               

அங்கே பாலகுருவின் வீட்டிற்கு போனாலோ, அனைவரும் ஹாலில் இருக்க, ‘சரி எதுவோ ஒன்று நடக்கப் போகிறது..’ என்றுதான் தோன்றியது இருவருக்கும்.. ஒன்றுமே பேசாது அமைதியாய் அனைவரையும் இருவரும் பார்க்க    

“என்ன பாக்குறீங்க.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஊர் சுத்தலாம்னு இருக்கிறதா ஐடியா???” என்று முத்துராணி கேட்க, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்.

பின்னே பெரியவர்களும் எத்தனை நாளைக்குத் தான் பொறுமையாய் போவர்.. அதிலும் முத்துராணி.. கேட்கவே வேண்டாம்.. இன்று அனைத்திற்கும் மேலாய் பாலாவும் பூர்ணியும் தனியாய் போட் எடுத்துக்கொண்டு சென்றிருப்பது தெரியவும் மனதில் ஒரு தீர்மானம் கொண்டே பூர்ணியின் பெற்றோர்களை வரவழைத்து விட்டார்.. ஆனால் சம்பந்த பட்ட இருவரும் அமைதியாகவே இறுகக், 

“என்ன பதில் பேச முடியாதா.. பாலா இதெல்லாம் சரியில்லைன்னு உனக்குமா தெரியலை.. இனி உங்க பேச்சுக்கெல்லாம் நாங்க பொறுமையா போக முடியாது.. நாளைக்கு ரெண்டு வீடும் கலந்து பேசி ஒரு நாள் குறிப்போம்.. ஒழுங்கா மாப்பிள்ளை பொண்ணா வந்து கல்யாணத்தை பண்ணிட்டு எதுவும் செய்யுங்க..” என்று முத்துராணி அனைவரின் முன்னும் தீர்மானமாய் சொல்லிட, அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

ராமலிங்கமும் பூர்ணியிடம் “உனக்கு அட்வைஸ் பண்ணவேண்டிய அவசியம் இல்லைன்னு தான் இப்போவரைக்கும் நானும் உன் அம்மாவும் இருக்கோம்.. ஆனா எதுக்குமே ஒரு அளவு இருக்கு பூர்ணி…” என்று அவரும் சொல்ல, அனைவருமே இவர்களின் முகம் பார்க்க,

பாலகுரு ‘என்ன சொல்ல…’ என்று ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவன் “சரி நாள் குறிங்க..” என்றுவிட்டான்.. அதற்குமேல் பூர்ணியும் ஒன்றும் சொல்லவில்லை.. பாலச்சந்திரன் தான் “பூர்ணிமா நீ என்னம்மா சொல்ற??” என்று கேட்க,

“அவ என்ன சொல்வா?? வேண்டாம் சொல்வாளா?? சொல்ல சொல்லுங்க பாப்போம்..” என்று முத்துராணி ஆரம்பிக்க, பாலகுரு சிரித்துவிட்டான்..

“நீ என்னடா சிரிக்கிற..???”

“இல்லம்மா அவ முடியாது சொன்ன என்ன பண்றதா இருக்க??” என்று கேட்க,

“நீ அப்படி சொல்லுவியா??” என்றார் அவளைப் பார்த்து..

“இல்ல பெரியத்தை அது…” என்று இழுக்க, “ம்ம்ச் ஆமாவா இல்லையா??? அதுமட்டும் சொல்லி பூர்ணி..” என்று அவரும் கேட்க, சந்தியாவோ “பூர்ணிமா..!!” என்று அதட்டவும்

“இல்லை பெரியத்தை மாட்டேன் சொல்லமாட்டேன்..” என்றாள் பவ்யமாய்..

அவ்வளோதான்.. நாட்கள் படுவேகமாய் நகர்ந்து, வாரங்கள் தாண்டி இரண்டு மாடங்கள் கடந்து இவர்களின் திருமணமும் நல்முறையில் நடந்தேறியது.. திருமணம் நிச்சயித்துக் கொண்டதில் இருந்து பாலகுருவும் பூர்ணிமாவும் தனியில் வெளியில் செல்லவும் சந்திக்கவும் முத்துராணியும் சரி சந்தியாவும் சரி அனுமதிக்கவேயில்லை..

“எதுன்னாலும் வீட்ல பார்த்து பேசிகோங்க… வெளிய வேண்டாம்…” என்று உறுதியாய் இருந்துவிட,

“கல்யாணத்துக்கு அப்புறமே பார்த்துக்குறோம்..” என்று இவர்களும் பிடிவாதமாகவே கூறிவிட, இதோ திருமணம் முடிந்து ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்வு அழகாய்த்தான் இருந்தது..

கோவில் செல்லவேண்டும் என்று முத்துராணி சொல்லவும், சேலை கட்டவென்று பூர்ணிமா அறைக்கு வர, அவள் சேலை கட்டும் நேரம் இவனும் குளியலறையில் இருந்து வெளி வர, வேகமாய் பூர்ணி திரும்பிக்கொள்ள,

“ரொம்ப பண்ணாத டி..” என்றவன் அப்படியே ஈரத்தோடு போய் அணைத்துக்கொள்ள,

“அச்சோ ஈரமாகுது…” என்று குதித்தாள்..

“ஆக்கிட்டு போகுது..” என்றவன் அப்படியே அவளின் இடையில் கை கொடுத்து மெதுவாய் நகர்த்திக்கொண்டு போக, பூர்ணியின் வயிற்றினில் இருந்த தழும்பில் அவன் விரல்கள் அழுந்த பதிந்து அப்படியே நின்றது..

“ம்ம் பாஸ்.. கோவிலுக்கு போகணுமாம்…”

“போகலாம்….” என்றவன் அவளை தன்பக்கம் திருப்பி அந்த தழும்பினை பார்த்து மெல்ல அங்கே இதழ் பதிக்க,

“பாஸ் என்ன பண்ற நீ…” என்று விலகப் போனவளை பிடித்தவன்,           “உண்மையை சொல்லு பூர்ணி நீதானே ஆள் செட் பண்ணி கத்தியால குத்த சொன்ன??” என்றான் வேண்டுமென்றே..

“எப்படி எப்படி நானா… அட போ பாஸ்.. உன்னை நானே என் கையால போட்டுத்தள்ள வாய்ப்பு கிடைச்சா.. அதுவும் அப்போ… கிடைச்சா நான் என் கையாளதான் பண்ணிருப்பேன்.. அதைவிட்டு ஆள் செட் பண்ணுவாங்களா..??” என்றவளை  ‘ஆத்தாடி கொலைகாரி…’ என்றுதான் பார்த்தான் பாலகுரு…

“ஹா ஷாக் ஆகாத பாஸ்…” என்று வெக்கபட்டவளாய் வேண்டுமென்றே அவனின் தோளில் சாய்வது போல் சாய்ந்து லேசாய் கடித்திட,

“அடிப்பாவி…” என்று தேய்த்தவன்  “எவ்வளோ கூலா சொல்ற…” என்றான் நம்பாமல்..

“பின்ன உன்னோட வாழத்தான் சான்ஸ் கிடைக்கல.. அட்லீஸ்ட் போட்டுத் தள்ளவாவது சான்ஸ் கிடைச்சதேன்னு சந்தோசமா செஞ்சிருப்பேன் தெரியுமா… ஆனாலும் பாரேன்.. நம்ம விதி இப்போ இவ்வளோ லவ் பண்ண வேண்டியாதா இருக்கு…” என்றவளுக்கு அப்படியொரு ஜொலிப்பு முகத்தினில்.

பேச்சோடு பேச்சாய் பூர்ணியின் கரங்கள் சேலை கட்டியிருக்க, அவனோ, அவளை கிளம்ப விடாது செய்து கொண்டு இருந்தான்..

“ம்ம்ச் என்னை எரிச்சல் பண்ணாத.. அப்புறம் பெரியத்தை மாமியாரா மாறி முறைக்க ஆரம்பிப்பாங்க..” என்றவளை பார்த்து சிரித்தவன்

“நீயும் பயந்த மாதிரிதான்..” என்றுவிட்டு “ஆமா நீ ஏன் அந்த போஸ் எப்போ பார் என்கிட்டே இருந்து காப்பாதிட்டே இருந்த…??” என்று கேட்க,

“அவனை நான் ஏன் காப்பாத்தனும்.. நீ ஏதாவது செய்ய போய் உனக்கு பிரச்னை ஆகக்கூடாதுன்னு தான் அப்படி பேசினேன்..” என்றவள் வேகமாய் நாக்கினை கடித்துகொண்டாள்..

“வா வா மாட்டினியா???” என்று சொல்லிக்கொண்டே அவள் சேலை முந்தியை பிடித்து இழுத்தவன்

“ஒழுங்கா இப்போ எனக்கு அந்த போட்டோ காட்டுற இல்லை யார் முறைச்சாலும் இந்த கதவை உடைச்சாலும் உன்னை வெளிய அனுப்ப மாட்டேன்…” என்று சொல்ல,

“அது நான் கோவில் போயிட்டு வந்து காட்டுறேன் பாஸ்…” என்றாள் சமத்தாய்..

“காட்டிட்டு கோவில் போ..” என்றவன் அவளை விடாது அணைத்துக்கொண்டு “ம்ம் காட்டு…” என,

“அது அது.. அந்த போட்டோ இங்கயில்ல பாஸ்..” என்றாள்..

“வேறெங்க இருக்கு..??”

…..

“சொல்லு பூர்ணி.. எங்க இருக்கு??”

“எங்கயுமே இல்லை பாஸ்..”

“ஏன்?? என்னாச்சு டெலிட் ஆகிடுச்சா???”

“ம்ஹும்..”

“பின்ன…??”

“அப்படியொரு போட்டோவே இல்ல பாஸ்…” என்றதும், “என்னது??!!!” என்று வேகமாய் அவளை விலக்கிப் பார்க்க, ஆமாம் என்பதுபோல் முகத்தினை பாவமாய் வைத்து மண்டையை ஆட்டினாள்..

“என்ன பூர்ணி சொல்ற???!!!!!”

“ஹி ஹி… அப்படியொரு போட்டோவே இல்ல பாஸ்.. அன்னிக்கு உன்னை கிஸ் பண்ணேன்தான்.. ஆனா போட்டோ எடுக்கலை.. சும்மா உன்னை மிரட்டினேன்..”

“ப்ளாக் மெயில் பண்ண…”

“என்னவோ ஒன்னு ஆனா உன்னோட நல்லதுக்கு பண்ணேன்..” என்றவளை பிடித்து மிக மிக இறுக்கமாய் அணைத்தவன், “அப்படி என்னடி பண்ணிட்டேன் நான் உனக்கு..” என்றான் உறுக்கமாய்..

“என்ன பண்ணலை நீ.. நான் லவ் சொன்னப்போ நீ ஓகே சொல்லலை அதுமட்டும் தான்.. மத்தபடி என்னை எப்பவுமே மதிச்சு நடந்திருக்க பாஸ் நீ.. ஒரு பொண்ணுக்கு முதல்ல தேவை எல்லாம் மதிப்புதான்.. அப்புறம் நீ கொஞ்சம் அன்பு காட்டினாலே அவ உன் பின்னாடிதான் வருவா..

இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் நீ எனக்கும் சரி என்னோட உணர்வுகளுக்கும் சரி அவ்வளோ மதிப்பு கொடுக்குற.. பூர்ணி எப்பவும் உன்னோட லவ்வ எதிர்பார்க்கலை.. ஆனா இப்போ அதுவும் போனஸா வர்றபோ நான் ஏன் உன்னை விட்டு போகணும்.. முதல்ல அப்படி நினைக்கலாமா நான்???”   என்று அவனது அணைப்பில் இருந்தபடி சொல்ல, அணைப்பையும் தாண்டி முத்தங்கள் தொடரத் தொடங்கியிருந்தது..

கைகூடவே கூடாது என்று எண்ணியிருந்தது… இப்போது இதோ அவனோடு.. அவனின் மனைவியாய்.. அவனி ஸ்பரிசம் உணர்ந்துகொண்டு ஹப்பாடி  என்ற ஒரு நிம்மதியில் அவளுக்கு தான் என்ன பேசுகிறோம் என்பது கூட கருத்தில் இல்லை..

ஒருநிலையில் பாலகுரு அவளை நிமிர்த்தியவன் “இப்போ போட்டோ எடு..” என்றபடி அவளை அணைத்து முத்தமிட,

“இப்….” எனும்போதே அவளது இதழ்கள் சிறைபட, திரும்ப நிமிர்ந்தவன் “எங்க போட்டோ காட்டு???” என,

“எப்படி எடுக்கிறதாம் என்று சிணுங்கினாள்…” 

“அப்போ எடுக்கலையா நீ???” என்று கேட்டவன்

“ஓகே இப்போ எடு..” என்றுசொல்லி திரும்பவும் முத்தமிட,

“ஐயோ பாஸ்…” என்று திமிறினாள்..

“அட என்ன டி நீ.. மிஸ் பண்ணிட்டே இருக்க..” என்றவன் “திரும்ப எடு..” என்று சொல்லி அவனும் திரும்ப திரும்ப முத்தமிட, நிழற்படம் எதற்கு, நிஜமிருக்கையில் என்று அழகாய் அவர்களின் காதல் பொழுதுகள் முத்தமிட்டுக் கொண்டன…