காதல் – 10
காதல் ஆகியது… கல்யாணமும் ஆகியிருந்தது.. ஆக வைத்திருந்தான் ஷ்யாம்.. அதுவும் ஒரே மாதத்தில்.. ஆனால் பல்லவியும் சரி ஷ்யாமும் சரி ஒருவித பிடிவாதத்தில் தான் சுற்றிக்கொண்டு இருந்தனர்… திருமணம் முடிந்தபிறகும் கூட..
‘உனக்கென்ன அப்படியொரு பிடிவாதம்…’ என்று அவளும்..
‘நான் அத்தனை சொல்லியும் நீ போனாயே..’ என்று அவனும் கல்யாணம் முடிந்தும்கூட முகத்தைத் தூக்கி தான் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
அடுத்தவாரம் வருகிறேன் என்று ஷ்யாம் சொல்லியிருந்தது போல் அவனும் அவன் பெற்றோரும் வந்தனர். பல்லவி பெரும் பதற்றத்தில் இருந்தாலும் மனதினுள்ளே ஒருவித இனிய பரபரப்பு இருந்தது.. பல நாட்கள் கழித்து அவனை நேரில் காண போகிறாள்.
அதுவும் ஒரு நல்ல சங்கதிக்கான அச்சாரமாய் இந்த சந்திப்பு நிகழப்போகிறது என்கையில் பல்லவியின் மன மகிழ்வுக்கு அளவேயில்லை.. ஷ்யாம் மீதிருந்த கோபங்கள் வருத்தங்கள் எல்லாம் கடந்து என்ன நடந்திருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் இருக்க,
வந்தவனோ பல்லவியை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவே.. மற்றபடி அவளின் அம்மாவிடமும் அப்பாவிடமும் நல்லவிதமாய் பேச, அனைவரும் சகஜமாய் தான் பேசிக்கொண்டு இருந்தனர். முதல் முறை சந்திக்கிறார்கள் அதுவும் இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகு என்று பல்லவி தான் உள்ளே கொஞ்சம் டென்சனாய் இருந்தாள்..
ஷ்யாமும் அப்படித்தான் ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இத்தனை தூரம் வந்தாகிவிட்டது இனியும் எதுவும் தவறாய் நடந்திட கூடாது என்பதில் ஷ்யாம் மிக மிக கவனமாய் இருந்தான்..
பல்லவியோ அவன் தன்னை கவனிக்கவேயில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்க, அவன் கவனிக்காமல் எல்லாம் இல்லை.. என்னதான் அவள் மீது ஒரு கோபம் இருந்தாலும் அவளது நிலை ஷியாமிற்கு புரியாமல் இல்லை… அவளும் தான் எத்தனையோ பொறுத்துப் போனாள் என்று தன்னைத்தானே சில நேரம் சமன் செய்துகொண்டாலும்,
மனதின் ஓரத்தில் ஒரு சிறு பிடிவாதம்.. பிகு.. ஆண் என்ற ஈகோ என்றுகூட சொல்லலாம்..
“நான் சொல்ல சொல்ல போன.. இப்போ பார் சொன்னதுபோல நான் நடத்திக்காட்டிட்டேன்..” என்று ஒரு கர்வம் கூட..
பெரியவர்களோ வேறு எதுவும் பழைய விஷயங்கள் யாரும் பேசவில்லை.. என்னாச்சு என்று இவர்களும் கேட்கவில்லை.. அவர்களும் அதைப் பற்றி பேசிடவில்லை.. வந்த விஷயம் என்னவோ அதுமட்டுமே பேசினர்..
கல்யாணம் பற்றி..
எப்போது எங்கே எப்படி என்று…
“இன்னிக்கே நாள் குறிச்சிடலாமா??” என்று சிவபாலன் கேட்க,
“அதுக்கென்ன தாராளமா குறிக்கலாம்..” என்று ரவிச்சந்திரனும் சொல்ல, அடுத்த ஒரு மாதத்தில் வரும் சுப முஹூர்த்த தினத்தில் திருமண தேதியும் குறிக்கப்பட்டது..
மஞ்சுளா மட்டும் முதலில் பட்டும் படாமல் தான் இருந்தார்..அன்று பல்லவியின் தோற்றம் அவரின் மனதில் பதியவில்லை.. ஆனால் இப்போது பார்த்தார். பேரழகி இல்லைதான் ஆனால் லட்சணமாய் அழகாய் இருந்தாள். அவளின் பார்வை ஒரு வித எதிர்பார்ப்போடு ஷ்யாம் பக்கம் சென்று சென்று வருவதைப் பார்த்தார். மெல்ல ஷ்யாமையும் பார்த்தார்.. அவனோ கண்டுகொண்டானில்லை..
‘ஹ்ம்ம் இந்த பொண்ணுகிட்டவும் இப்படிதானா..’ என்று எண்ணிக்கொண்டவர் அடுத்து சாதாரணமாய் தான் இருந்துகொண்டார்.. அவளிடம் கூட ஓரிரு வார்த்தைகள் பேசினார்..
அதுபோலவே சோபனாவும்,, ஷ்யாமை நேரில் பார்த்ததுமே பிடித்துப் போனது.. அவன் பேசியவிதம் அதையும் தாண்டி பிடித்தது… எதிலும் குறை என்று சொல்ல முடியவில்லை.. ஆக அனைத்துமே அடுத்து சுபமாய் நடந்தது..
“இங்கயே சாப்பிட்டு போகலாம்..” என்று ரவிச்சந்திரன் சொல்ல,
“இல்ல சாயங்காலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகணும்..” என்று மஞ்சுளா சொல்ல,
“சாப்பிட்டு இங்க ரெஸ்ட் எடுக்கலாமே.. சாயங்காலம் எல்லாம் சேர்ந்து கூட போகலாம்..” என்று சோபனா சொல்ல,
மஞ்சுளா சிவபாலனைப் பார்க்க அவரோ “சரி..” என்று மட்டும் சொன்னார்..
ஷ்யாம் அவன் பாட்டில் இருந்தான். மற்றவர்களும் அப்படியே பேச்சு ஒருப்பக்கம் வேலை ஒருப்பக்கம் என்று இருக்க, பல்லவி தான் தவித்துப் போனாள்.. வந்ததும் பார்த்தான்.. அவ்வளவே.. பேசவேண்டும் என்ற எண்ணமே இல்லாதவன் போல இருந்தான்..
சோபனாவும் பல்லவியும் தான் சமைக்க, மஞ்சுளா அவர்களோடு பேச்சில் மட்டும் பங்குகொண்டார்..
“இந்தா போய் ஜூஸ் குடுத்துட்டு வா..” என்று சோபனா சொல்ல,
“ம்மா நீயே போய் குடு..” என்றாள் பல்லவி..
“ஏய் என்னடி புதுசா பண்ற.. போ.. போ..” என்று அவளை விரட்ட, “ம்ம்..” வேண்டா வெறுப்பாய் தான் ஜூஸ் கொண்டுபோக, சிவபாலன் கூட இவளைப் பார்த்து லேசாய் புன்னகைத்தார்..
ஆனால் அவனோ ம்ம்ஹும்…
“என்ன திமிர் இவனுக்கு.. நியாயமா கோபமா நான்தான் இருக்கணும் இவன் பேசினதுக்கு எல்லாம் ஆனா இவன் முகத்தை திருப்புறான்.. போடா டேய்..” என்று அவளும் இருந்துகொண்டாள்.
அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டித்தான் பறந்தது.. மாலை அனைவரும் கோவில் சென்றுவர, வரும் வழியிலேயே ஹோட்டலில் உணவருந்தியவர்கள், ஷ்யாம் குடும்பம் அப்படியே ரூம் செல்ல கிளம்ப,
“நம்ம வீட்லயே தங்கிக்கலாமே..” என்று ரவிச்சந்திரன் அழைக்க,
“இல்ல.. காலை சீக்கிரமே எழுந்து தஞ்சாவூர் போகணும்.. அதான்..” என்றார் சிவபாலனும்..
‘தஞ்சாவூர் எதுக்கு…’ என்று பல்லவி யோசிக்க,
“ரிலேட்டீவ்ஸ் இருக்காங்க.. இப்படி வர்றபோவே அவங்களையும் பார்த்துக்கிட்டா தானே ஆச்சு..” என்று மஞ்சுளா சொல்ல,
பல்லவிக்கு புரிந்துபோனது யாரைப் பார்க்க போகிறார்கள் என்று.. என்னவோ திடீரென்று ஒருவித தயக்கம் வந்து சூழ்ந்துகொள்ள, மஞ்சுளா அவளைப் பார்த்தவர்,
“சுமதிக்கு வரன் அமைஞ்சிருக்காம்.. கண்டிப்பா போய் பார்க்கணும் தானே..” என்று சொல்ல,
“ம்ம் சரிங்கத்தை…” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள்..
மனதில் இது இன்னமும் ஒரு நிம்மதி.. அந்த பெண்.. அவளால் மட்டும் தான் அன்று அந்த பிரச்னைகள் எல்லாம் அந்தளவில் முடிந்தது.. இல்லை அவளும் சேர்ந்து புரியாமல் ஏதாவது பேசி அழுது களேபரம் செய்திருந்தால் அவ்வளவுதான்.. இன்று இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்திருக்குமா தெரியாது.
அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பிட, காரில் ஏறுகையில் ஷ்யாம் ஒரு பார்வைப் பார்த்தான் அவ்வளவே.. வந்தபோது ஒன்று போனபோது ஒன்று… இதுபோதும் என்பதுபோல் இருந்துகொண்டான்.
சரி கிளம்புகையிலாவது பேசுவான் என்று பல்லவி பார்க்க அதுவுமில்லாது போக,
“உனக்கு அவ்வளோன்னா நான் மட்டும் என்ன லேசா….” என்று அவளும் கழுத்தைத் திருப்பிக்கொண்டாள்..
சோபனா கூட வீட்டிற்கு வந்தவர் “என்னடி அந்த பையன் ஒருவார்த்தை பேசலை..” என,
“அவன் அப்படித்தான் ம்மா..” என்று சொல்லி கழண்டு கொண்டாள்..
அதேபோல்தான் மஞ்சுளாவும் கேட்டார் மகனிடம்.. “ஏன் ஷ்யாம் வந்தவன் ஒருவார்த்தை பேசலை அந்த பொண்ணுகிட்ட” என,
“நீ இதைதான் கவனிச்சியாம்மா நாங்க பேசுறோமா இல்லையான்னு..” என்றான் அதற்கு பதில் சொல்லாமல்..
“அதில்லடா.. ஒருவார்த்தை எப்படி இருக்கன்னு கேட்கலை…” என.
“ஏன் பல்லவி நல்லாதானே இருந்தா.. நீதான் பார்த்தியே மார்க் போட போறதுபோல..” என்று ஷ்யாம் சிரிக்க,
“அடப்பாவி… இதெல்லாம் கவனிச்சியா.. இருந்தாலும் நீ பேசிருக்கணும்.. அந்த பொண்ணு பார்த்துட்டே இருந்தா…” என்று சொல்ல,
“பேசாம எங்க போகப் போறோம்..” என்றுசொல்லி பேச்சை முடித்துவிட்டான்..
சிவபாலனோ “கல்யாணம் பண்ணி வைக்கிறது எங்க பொறுப்பு.. அடுத்து பிரச்சனை ஆகாம எல்லாம் நீங்கதான் பார்த்துக்கணும்..” என்றிட, “ம்ம்..” என்று மட்டும் சொன்னான்.
மறுநாள் தஞ்சாவூர் கிளம்பி சென்றனர்.. ஷ்யாமிற்கு போகவே இஷ்டமில்லை தான்.. வேண்டாம் என்றுதான் சொன்னான்.. ஆனால் சிவபாலனும், மஞ்சுளாவும் இல்லை நீயும் கண்டிப்பாய் வரவேண்டும் என்றுவிட்டனர்..
சொல்லப் போனால் அவர்கள் வைத்த முதல் கண்டிசன் இதுதான்.. அன்று மீண்டும் பழைய வேலையில் சேர்வது பற்றி சிவபாலனிடம் ஷ்யாம் பேச, மஞ்சுளாவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தார்..
சிவபாலனுக்கும் சரி, மஞ்சுலாவிற்கும் சரி, ஷ்யாம் முன்னமே காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தால் கண்டிப்பாய் வேண்டாம் என்று சொல்லியிருக்கவே மாட்டார்கள். ஆனால் அவன் சொல்லிய சூழல் தான் தவறாய் போனது..
அதன் பின் நடந்த அனைத்தும் அவர்களுக்கு மனதில் கசப்பையும், வலியையும் கொடுக்க அத்தனை எளிதில் அதனை மறந்து மற்றதை நினைக்க முடியவில்லை. ஆனால் ஷ்யாம் வேலையை விட்டு வந்தது அதனை தொட்டு பல்லவியும் வேலையை விட்டது அவர்கள் எதிர்பாராத ஒன்று..
இந்த விசயமே அவர்களுக்கு ஷ்யாம் பல்லவி காதலின் ஆழம் விளக்கியதோ என்னவோ.. சிவபாலன் மற்றதெல்லாம் விட்டு மகனது வாழ்வு பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். இருந்தாலும் மஞ்சுளா ஒருவித பிடிவாதத்தில் தான் இருந்தார்..
ஆனால் ஷ்யாமின் தோற்றமே அவருக்கு கஷ்டமாய் இருக்க, அவனோ பெயருக்கு வீட்டுக்கு வந்து போய்கொண்டு இருக்க, அவனில்லாத நேரம் சிவபாலனிடம் மஞ்சுளா பேச,
“என்னை என்ன பண்ண சொல்ற.. நீயும் சரியா அவன்கிட்ட பேசலை.. அந்த பொண்ணும் போயிட்டா.. அவன் என்ன செய்வான்..” என,
“அப்போ.. அப்போ நீங்க ஓகே சொல்லலாம் சொல்றீங்களா??” என்றவரின் பேச்சிலேயே அத்தனை ஒன்றும் எதிர்ப்பு தெரியவில்லை..
“வேற என்ன செய்ய சொல்ற.. எப்படி இருந்தான் இப்போ எப்படி இருக்கான் பாக்குறோம் தானே..” என்றவர், “நடந்த எதுவும் சரின்னு சொல்லலை ஆனா இனியாவது நல்லது நடக்கனும்னு தான் சொல்றேன்..” என்றார் முடிவாய்.
“என்னவோ.. எனக்கு எதுவும் முடிவு பண்ண முடியலை..” என்று மஞ்சுளா தயங்க..
“அப்போ அவ்வளோ பிரச்சனை நடந்தப்போவும் ஷ்யாம் நம்மளை விட்டுக்கொடுக்கல.. இப்போ அந்த பொண்ணும் கூட அவனோட நிலைமை புரிஞ்சுதான் தான் கிளம்பிப் போயிருக்கா.. இதுக்குமேல நம்மளும் கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கணும் இல்லையா..” என்றார் தன்மையாக மஞ்சுளாவிற்கு எடுத்து சொல்லும் எண்ணத்தில்..
“என்ன சொல்றீங்க. அவன் என்ன விட்டுக்கொடுக்கல..??” என்று மஞ்சுளா புரியாமல் பேச.
சிவபாலன் பிறகுதான் சொன்னார், “நிச்சயத்துக்கு முன்னாடியே ஷ்யாம் நம்மகிட்ட சொல்லிட்டான்.. ஆனா எல்லார் முன்னாடியும் அப்பா அம்மாக்கு தெரியாதுன்னு தான் சொன்னான்.. நீ கவனிச்சியோ தெரியலை.. நான் பேச வந்தவனையும் அப்போ தடுத்துட்டான்..” என,
“என்னங்க சொல்றீங்க.. நி… நிஜமாவா ???” என்றார் மஞ்சுளா..
நிஜமாய் மஞ்சுளா இதெல்லாம் கவனிக்கவேயில்லை.. ஆளாளுக்கு ஒன்று பேசுகையில், எதுவும் பிரச்சனை பெரிதாய் ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே இருந்தவருக்கு வேறு கவனிக்க மனதில்லை.. இப்போது சிவபாலன் சொன்னதும் மகனை நினைத்து ஒரு பெருமை அவருள்.
‘என் மகன்..’ என்ற பெருமை அது..
அந்த பெருமை மற்றதை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.. இந்த ஒரு காரணத்தை வைத்து தான் சிவபாலன் ஷ்யாம் பல்லவி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் மஞ்சுளாவை..
ஆனாலும் ஷ்யாமிடம் இருவருமே வைத்த கண்டிசன் ஒன்றுதான்.. நாங்கள் வந்து பல்லவியின் வீட்டில் பேசுகிறோம் ஆனால் நீ எங்களோடு தஞ்சாவூர் வரவேண்டும் என்பது..
“ப்பா.. என்ன சொல்றீங்க நீங்க.. பல்லவி வீட்ல பேசுறதுக்கும் தஞ்சாவூர் போறதுக்கும் என்ன இருக்கு???” என,
“இல்ல.. ஷ்யாம் நம்ம வீட்ல வச்சு விரும்பத் தகாத ஒரு நிகழ்வு நடந்திருச்சு.. சோ நம்மதான் போகணும்..” என்றார் சிவபாலன்..
“இல்லப்பா.. என்னால முடியாது.. அவங்க பண்ணது பேசினது எல்லாம் அவ்வளோ சீக்கிரம் மறந்திட முடியாது..” என,
“தப்பு நம்ம பேர்ல இருக்கு ஷ்யாம்..” என்றதும் கொஞ்சம் அமைதியானான்.. ஆனால் அவனுள்ளம் அமைதியடைவில்லை..
“நீங்க வேணா போயிட்டு வாங்க.. நான் வரலை…” என்றான்..
“இங்க பாரு ஷ்யாம்.. உனக்கு வேணும்னா அவங்க எல்லாம் தேவையில்லாம இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு அப்படியில்லை.. எல்லாரும் தான் வேணும்.. அவங்க எல்லாரையும் ஒதுக்கி வச்சிட்டு உனக்கு ஒரு நல்லது பண்ண முடியாது நாங்க..” என்று மஞ்சுளா சொல்ல,
“சோ.. நான் வந்தாதான் நீங்க பல்லவி வீட்ல பேசுவீங்க அப்படித்தானே..??” என்று சந்தேகமாய் கேட்டவனை, மஞ்சுளா பார்த்தவர்,
“நீ எப்படினாலும் நினைச்சுக்கோ.. ஆனா உன் கல்யாணம் நம்ம சொந்தபந்தம் எல்லார் முன்னாடியும் நடக்கணும்.. அதுதான் எங்க விருப்பம்..” என்றிட,
சிவபாலனோ “நாங்க சொல்றதையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ ஷ்யாம்.. எல்லா நேரமும் நம்ம இப்படியே இருந்திட முடியாது..” என,
“ம்ம்.. என்னவோ பண்ணுங்க.. வருவேன்.. ஆனா அங்க வந்து மன்னிப்பு கேளு அது இதுன்னு எல்லாம் சொல்ல கூடாது..” என்றான் உறுதியாய்..
“ஒன்னும் சொல்லமாட்டோம்.. சுமதிக்கு வரன் அமைஞ்சிருக்குன்னு சொன்னாங்க போய் ஒருபார்வை பார்த்துட்டு வரலாம் அவ்வளோதான்..” என்றார் மஞ்சுளாவும் இறங்கிவந்து…
“ஹ்ம்ம் ஓகே..” என்றவன் “எப்போ போகணும்…” என,
“நீ பர்ஸ்ட் வேலைல ஜாயின் பண்ணு.. தென் பார்த்துப்போம்..” என்று சிவபாலன் சொல்ல,
“சரிப்பா..” என்றுமட்டும் சொல்லிக்கொண்டான் ஷ்யாம்..
இப்போதுமே கூட அவனுக்கு தஞ்சாவூர் செல்கையில் மனதிற்கு அத்தனை இஷ்டமில்லை. தேவையில்லாத பேச்சுக்கள் வந்தால் என்ன செய்ய.. இப்போது போவது அவசியம் தானா என்று மனதில் பலவேறு சிந்தனைகள் ஆனாலும் பெரியவர்களுக்காக சரியென்றான்.. போகும்போது ஆயிரம் கண்டிசன் வேறு..
“அரைமணி நேரம் தான் இருக்கணும்..”
“அது இதுன்னு வேற எதுவும் பேசக்கூடாது..”
“எங்க கல்யாணம் பத்தி எல்லாம் அங்க பேச்சே எடுக்கவேணாம்..” என்று அடுக்கிக்கொண்டே இருந்தான்..
பொறுத்து பொறுத்து மஞ்சுளா கடைசியில் “இதுக்கு இவனை கூட்டிட்டே வந்திருக்காம இருந்திருக்கலாம்.. நிஜமா சொல்றேன்டா… பாவம் அந்த பல்லவி பொண்ணு.. உன்னை கட்டி எப்படி சமாளிக்கப் போறாளோ..” என்று சொல்லிட,
“அட என்னம்மா??? இப்படி உடனே பல்லவி பக்கம் சாய்ஞ்சுட்ட???” என்று சிரிப்பை அடக்கி, வாயைப் பொத்தி ஷ்யாம் கேட்க, அவன் கேட்ட பாவனையில் மஞ்சுளாவுமே சிரித்துவிட்டார்.
எத்தனை நாட்கள் ஆனது இப்படி சிரித்து என்றுகூட இருந்தது அவனுக்கு.. அவனுக்கு மட்டுமல்ல அவனைப் பெற்றவர்களுக்கும்.. ஒருவித மகிழ்ச்சி அனைவருள்ளும்.. இத்தனை நாள் அலைக்கழித்த பிரச்சனைகள் எல்லாம் இன்று சரியாய் போனதுபோல் இருக்க, தஞ்சாவூர் சென்றுவருவதும் நல்லபடியாய் முடிந்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
ஆனால் அவர்கள் நினைத்ததுபோல் சிறப்பாய் இல்லை என்றாலும், ஓரளவு சுமுகமாகவே இருந்தது.. அந்த தாத்தா.. பரிமளா.. எல்லாம் பட்டும் படாமல் பேச, சுமதி நன்றாகவே பேசினாள்..
மற்ற உறவுகள் எப்போதும் போல் பேசிட, ஷ்யாம் அனைவரிடமும் எட்டவே நின்றுகொண்டான்.. நேரம் செல்ல செல்ல போதும் போதும் என்று கிளம்பி, மற்றவர்களையும் கிளப்பிக்கொண்டு வந்துவிட்டான்..
அதன்பிறகு நாட்கள் விரைவாய் செல்ல, மதுரையில் பல்லவி ஷ்யாம் திருமணமும், ஹைத்ராபாத்தில் ரிசப்ஷனும் அழகாய் நடந்தேறியது.. திருமண சடங்குகள் எல்லாம் ஒவ்வொன்றையும் இருவருமே ரசித்துத்தான் செய்தனர்..
ரிஷப்ஷனுக்கு ஷ்யாம் பல்லவியின் அலுவலக ஆட்கள் அனைவரும் வந்திருந்தனர்..
தினேஷ் ஷ்யாமை வாழ்த்தியவன், பல்லவியிடம் “உங்களோட பொறுமைக்கு கிடைச்ச பரிசு தான் இது…” என்று வாழ்த்த, பல்லவியோ ஷ்யாமை ‘பார்த்தியா…’ என்று பார்த்தாள்.
ஆனால் இருவர் மனதிலும்
‘இவ்வளோ நடக்குது ஒருவார்த்தை பேச முடியாதோ…’ என்ற எண்ணம்..
அவர்களுக்குக் கிடைத்த தனிமை பொழுதில் கூட, இதேதான்..
‘நீ ரொம்ப ஓவரா பண்ற..’ என்று அவளும்..
‘உன்னை விடவா..’ என்று அவனும் பார்த்து பார்த்து முறைத்து முறைத்து தான் பொழுது நகர்ந்தது…
பேச அத்தனை இருந்தது.. மனதில் ஆசை இருந்தது.. ஆனால் அனைத்தையும் கடந்து இப்போது யார் முதலில் பேசுவது என்பது தான் பெரும் பிரச்சனையாய் இருந்தது..
‘நான் ஊருக்கு போய் எத்தனை கால் பண்ணிருப்பேன்.. பேசினானா…’ என்று அவள் நினைக்க,
‘வீட்டுக்கு போனேனே வான்னு சொன்னாளா… ஏன் நான் பேசலைன்னா அவ பேசக்கூடாதா..’ என்று அவனும் நினைக்க, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காரணம் கண்டுபிடித்துக்கொண்டு இருந்தனர் இருவரும் பேசாமல் இருப்பதற்கு..