Advertisement

ஆஹா கல்யாணம் – 7

சண்முகப் பிரியா சொன்னதை மீனாட்சி வீட்டினரிடம் சொல்ல, அனைவருக்குமே மனது ஒருவித சங்கடம் உணரத்தான் செய்தது. இவள் இத்தனை தூரம் பேசுவாள் என்று யாரும் எண்ணவில்லை. என்னவோ சிறுபிள்ளை தனமான ஒரு பிடிவாதம், எடுத்து சொல்லி புரியவைத்தால் சரியாகிவிடுவாள் என்றே எண்ண,

அவளோ வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என்ற நிலையில் இருக்க, இது எடுத்து சொல்லி புரிய வைக்கும் நிலையை எல்லாம் தாண்டி விட்டாள் என்றே தோன்றியது.

அவளிடம் பொறுமை காட்டுவதை தவிர வீட்டினருக்கு வேறு வழியே இருக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில் சுதர்சனுக்கு வேறு பெண் பார்ப்பதாகவே தகவல் வர, இறங்கிப் போய் ‘எங்கள் பெண்ணை காட்டுங்கள்..’ என்று சொல்லவும் முடியாது.

சொல்லவும் மாட்டார்கள் என்பது தான் நிஜம்..

இது போதாது என்று, ஜெயக்கொடியின் மாமியார் சொன்ன விஷயம் காற்று வாக்கில் இவர்கள் காதிற்கு வந்திருந்தது.

‘மூத்த மருமகன் வெறும்  B.E, நம்ம பையன் M.E…  பத்து என்ன இருவது பவுனே சேர்த்து போடலாம்..’ என்று அந்தம்மாள் ஊர் முழுக்க சொல்லியிருப்பார் போல.. அது அப்படியே இவர்களின் காதிற்கு வர,

சரி கொஞ்ச நாள் போகட்டும் பேசி பார்ப்போம் என்று எண்ணத்தில் இருந்தவர்கள் கூட இப்போது இறுகிக்கொண்டனர்.

“அதென்ன உசத்தி பாக்குறது.. இப்போவே இப்படி பேசினா நாளைக்கு கல்யாணத்துக்கு பின்ன ரெண்டு மாப்பிள்ளைக்கு நடுவில மனஸ்தாபம் வராதா??!!” என்று சரவணன் சொல்ல,

“இந்த பேச்சு நம்மளோடவே இருக்கட்டும்.. கஸ்தூரிக்கு எல்லாம் தெரியவே வேணாம்..” என்றார் சண்முகம்.

கண்டிப்பாய் மூத்தவள் மனம் இதைக் கேட்டு வருந்தும்.. எக்காரணம் கொண்டும் வீட்டில் யார் மனதிலும் ஏற்றத் தாழ்வுகள் வந்திடவே கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர்.

இப்பேச்சுக்கள் எல்லாம் சண்முகப் பிரியாவிற்கும் தெரியவர, மனதளவில் நொந்துபோனால். மற்ற விஷயங்கள் என்றால் எப்படியேனும் சமாளிக்கலாம். இப்படியான நுண்ணிய விஷயங்களினால் தான் மனித மனம் சட்டேன்று காயம் பட்டுப் போகிறது.

அவளுக்குமே இப்பேச்சு கேட்டு ஒருமாதிரி இருக்க, அமைதியாகவே இருந்தாள்.

குடும்பம் என்றிருந்தால் வீக்க தூக்கம் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இருக்காது.. சண்முகப் பிரியாவின் நிலை எண்ணி கொஞ்சம் மனது இறங்கியவர்களுக்கு கூட இந்த பேச்சு கசந்து விட

 “ஏங்க பேசாம கொஞ்ச நாள் மதுரைக்கு அனுப்பி வைப்போமா.. போயி அவங்க அண்ணன் அண்ணி கூட இருந்துட்டு வரட்டும்.. இங்கன இருந்ததான எதையாவது யோசிச்சிட்டு இருப்பா.. அங்கனா வெளிய போயிட்டு வருவாங்க..” என்று பூமா சொல்ல,

“எனக்கென்னவோ இவ நம்ம சொல்றதை கேட்பான்னு தோணவேயில்லை க்கா..” என்றார் மீனாட்சி.

சரவணனும் சண்முகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “என்னங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??!!” என்று மீனாட்சி கேட்க,

“என்ன சொல்றதுன்னு தெரியலை.. நம்ம பக்கத்துல எந்த தப்பும் இல்லை. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது தான். இருந்தாலும் இது வாழ்க்கை விஷயம்.. கல்யாணம் பண்ற வரைக்கும் ஒரு பேச்சு அப்புறம் ஒரு பேச்சுன்னு ஆகிட கூடாது.. இங்கயே இருக்கிறதுனால இதையே யோசிக்கிறா போல…

அவங்க வீட்லயும் வேற பொண்ணு பாக்குறதா கேள்விப்பட்டேன். இதுக்குமேல போய் எங்க பொண்ண கட்டிக்கோங்கன்னு வழிய போய் கேட்டா அது இவளுக்கும் தான் மதிப்பு குறைவு..” என்று சரவணன் சொல்ல,

“ஹ்ம்ம் எனக்கென்னவோ அண்ணி சொன்னதுபோல மதுரைக்கு அனுப்பி வைப்போம்னு தோணுது.. கொஞ்சம் மாறுதலா இருக்கும்.. மேல ஏதாவது கோர்ஸ் படிக்கிறதுன்னா கூட படிக்கட்டும்.. ரெண்டு மூணு மாசம் போகட்டும்..” என்று சண்முகம் சொல்ல, மீனாட்சி மகளை வெளியே அனுப்ப துளியும் இஷ்டம் இல்லை.

ஆனால் வீட்டினர் அனைவரும் சொல்ல, அப்படி அண்ணன் வீட்டில் சென்று தங்கினாலாவது அவளுக்கு மனதினில் ஒரு மாற்றம் வராதா என்று தான் எண்ணினார்..

அதையே மகளிடமும் கேட்க, “நான் போறேன் ஆனா, கண்டிப்பா நீங்க வேற ஏற்பாடு செய்யக் கூடாது..” என்று நியாயம் பேசினால் அவள்..

சட்டென்று மீனாட்சிக்கு கோவம் வந்துவிட்டது.

“ஏன்டி உனக்கு ரோசமாவே இல்லையா??!!! அந்த வீட்ல அவ்வளோ பேசிருக்காங்க.. கஸ்தூரி வீட்டுக்காரர் மட்டும்னு.. அப்படி இருந்தும் நீ இப்படி பேசிட்டு கிடக்க..” என,

“இப்போ நான் என்ன சொன்னேன்… அங்க போய் பேசுங்கன்னு சொன்னேனா??!! இல்லையே…” என்று இவளும் பதிலுக்கு பேச,

“அடி தான் வாங்கப் போற நீ பிரியா…” என்றார் மீனாட்சியும்.

“ம்மா எதுவா இருந்தாலும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. இது ஒன்னும் ட்ரெஸ் எடுக்கிற விஷயம் இல்லை.. இந்த கடை இல்லைன்னா அந்த கடைன்னு போக..” என்றவளுக்கு கண்களில் நீர் முட்டியது..

“ம்ம்ச் எதுன்னாலும் அழுதே பிடிவாதம் பிடி.. சின்ன பொண்ணாச்சேன்னு பார்த்தா இப்படி நடந்துக்கிற நீ.. நாளைக்கு பின்ன உன்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க பிரியா??!! அப்படி என்ன அந்த மாப்பிள்ளை உசத்தி உனக்கு..”

“உசத்திங்கற போயித்தானே நீங்க கொண்டு வந்தீங்க..” என்றவள், “ம்மா ப்ளீஸ்… ப்ளீஸ்.. நீங்க சொன்னதுபோல நான் அண்ணா வீட்ல கொஞ்ச நாள் இருக்கேன்.. ஏதாவது கோர்ஸ் கூட பண்றேன்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கன்னு தான் கேட்கிறேன்..” என்றாள் குரலை தழைத்து.

என்ன இருந்தாலும் பெற்ற பாசம்.. கோபமாகவே இருந்திட வைக்குமா என்ன??

மகளின் தலை முடியை மெதுவாய் வருடியவர், “ம்ம் உனக்கு நல்லது நடக்கனும்னு தான் இத்தனையும் சொல்றோம்.. அங்க போய் நல்லபடியா இருக்கணும்.. இங்க பேசினது போல எல்லாம் பேசக்கூடாது..” என்று மேலும் அறிவுரைகளை சொல்லி, அன்றைய தினமே சண்முகப் பிரியா மதுரைக்கு பயணப்பட,

அங்கே பெங்களூரில் சுதர்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தான்.

கணேஷிற்கு என்னவோ அவனைப் பார்த்ததில் இருந்தே ஒன்றும் சரியில்லை என்றுபட, அவனின் இருப்பிடமும் கூட சுதர்சன் வீட்டிற்கு பக்கத்தில் தான் என்பதால் அன்று மாலை அங்கே போக, சுதர்சனோ கதவே திறக்கவில்லை.

கணேஷ் தான் நினைத்து வந்தது சரிதான் என்று இருந்தது. அவனுக்கு திரும்ப திரும்ப அழைத்துப் பார்க்க, சுதர்சனின் “ஹலோ..” விலேயே தெரிந்துபோனது அவனின் நிலை.

பின் எப்படியோ அருகில் இருப்பவர்களை துணைக்கழைத்து, வீட்டைத் திறக்க, அவனோ பாதி மயங்கிய நிலையில் இருந்தான். ஒருவழியாய் சுதர்சனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவனின் வீட்டினருக்கும் அழைத்து சொல்லிவிட்டான் கணேஷ்.

முருகவேலோ மகன் மருத்துவமனையில் இருப்பது கேட்டதும் ஆடித்தான் போனார்..

“நா.. நாங்க.. உடனே கிளம்பி வர்றோம்ப்பா..” என்றவர் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல, காவேரி சத்தம் போட்டே அழத் தொடங்கிவிட்டார்.

“என் புள்ளைக்கு இப்படியா அகனும்.. கல்யாண பேச்செடுத்தாலே கண்டதெல்லாம் நடக்குதே…. போன வருஷம் இப்படிதான் பேசினோம், வண்டில விழுந்து வச்சான்.. இப்போ இப்படி..” என,

“காவேரி.. கிளம்பனும் இப்போ.. கிடைச்ச பஸ்ல ஏறி மாறி மாறி போகணும்.. நானும் கேசவனும் போய் என்னனு பார்த்துக்கிறோம்..” என்று முருகவேல் சொல்ல,

“அப்போ.. நானு.. நான் வர வேணாமா?? என் பையனைப் பார்க்க..” என்று காவேரியும் பிடிவாதமாய் கிளம்பினார்.

முருகவேலுக்கு நன்கு தெரியும், காவேரி அங்கே வந்தால் கண்டிப்பாய் சுதர்சனிடம் அது இது என்று எதையாவது பேசி, அவனின் மனநிலையை இன்னமும் கெடுப்பார் என்று.

இதை சொன்னால் மேலும் வீட்டில் கழகம் தான் வரும். ஆக தன்மையாய் சொல்லித்தான் பார்த்தார்.  

“வேணாம் காவேரி… நாங்க போய் பார்த்து அவனை ஊருக்கு கூட்டிட்டு வரணும்னா கூட கூட்டிட்டு வர்றோம்..” என, காவேரி பதிலே பேசவில்லை, பிடிவாதமாய் துணிகளை எல்லாம் பையில் எடுத்து நிறப்ப, முருகவேலுக்கு புரிந்துபோனது தன் பேச்சு எடுபடாது என்று..

கிளம்பியவர் தான் அப்படியே கிளம்பியிருந்தால் கூட பரவாயில்லை, தன் இரு மகள்களுக்கும் கூட அழைத்து சொல்லிவிட, அடுத்த அரைமணி நேரத்தில் இருவருமே தங்கள் துணையோடு வீட்டினில் ஆஜர்..

பின்னே என்ன, முருகவேலும் ஆதிகேசவனும் மட்டும் கிளம்புவதாய் இருந்தது இப்போது மொத்த குடும்பமும் கிளம்பி நின்றது..

“என்னாகப் போகிறதோ..” என்றுதான் நினைத்தார் முருகவேல்.

அனைவரும் ஒரு கார் பிடித்து பெங்களூரு செல்ல, விடியற்காலை ஆகிப்போனது.. நேராய் மருத்துவமனைக்குத் தான் சென்றார்கள்.. சுதர்சனோ ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு நல்ல உறக்கத்தில் இருக்க, கணேஷ் தான் இவர்களை வரவேற்றான்.

காவேரிக்கோ மகன் இப்படி படுத்துக் கிடப்பது கண்டு அழுகை முட்ட, “ம்மா.. இங்க இப்படி எல்லாம் அழக் கூடாது..” என்று ஜெயராணி அவரை சமாதானம் செய்ய,

“இவனை பாரே எப்படி கிடக்கான்னு.. சாப்பிட்டே இருக்கமாட்டான் போல..” என்றார் விசும்பியபடி.

முருகவேலுக்கு மனது மிக மிக சங்கட்டமாய் போனது. வீட்டில் தேவையில்லாது பிரச்னைகள் வரும் என்று தான் இத்தனை நாள் பேசாது இருந்தது தவறோ என்று எண்ணினார். ஆனால் இங்கே வைத்து எதுவும் பேசவும் முடியாது. இப்போதைக்கு முதலில் சுதர்சனின் உடல்நிலை தான் முக்கியம்.

அவன் தேறி வரட்டும் பின் பார்த்துக்கொள்வோம் என்று இருந்தார்.

எது எப்படி இருந்தாலும், யார் என்ன சொன்னாலும், இந்த சம்பந்தத்தை முடித்து விடுவது என்ற முடிவிற்கு வந்துவிட்டார் முருகவேல்.. அவருக்கு அனைத்தையும் விட மகன் முக்கியம் அது தான்.

ஆளாளுக்கு பேசியபடி இருக்க, கணேஷ் “அப்பா.. இங்க இத்தனை பேர் இருக்கக் கூடாது. ரெண்டு பேர் தான் இருக்கலாம்.. டாக்டர் வந்தா திட்டுவாங்க..” என,

யாரும் சுதர்சன் கண் விழிக்காமல் நகரமாட்டோம் என்றுதான் இருந்தனர்.

சுதர்சன் கண் விழிக்கையில் மொத்த குடும்பத்தையும் பார்த்தால், கண்டிப்பாக கொஞ்சம் டென்சன் ஆகுவான் என்று தெரியும். மற்றவர்கள் புரிந்தாலும் கண்டிப்பாய் காவேரியும், ஜெயக்கொடியும், ரமேஷும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரியும்.

முருகவேல் “சரிப்பா… நாங்க கிளம்பிடுவோம்.. சுதர்சன் வீட்டு சாவி..” என்று இழுக்க,

“என்கிட்டதான் இருக்குப்பா.. என்கூட வந்தீங்கன்னா அங்க டிராப் பண்ணிட்டு அப்படியே நானும் வீட்டுக்கு போவேன்..” என்று கணேஷ் சொல்ல,

“காவேரி.. நீ ஜெயா, மாப்பிள்ளை எல்லாம் இங்க இருங்க.. நாங்க வீட்டுக்கு போய்ட்டு வர்றோம்..” என, யாரும் எதுவும் சொல்லவுமில்லை. ஜெயராணியும் பாண்டியனும் புரிந்துகொண்டு கிளம்பிவிட்டனர்.

மருத்துவர் வந்து மீண்டும் பரிசோதனை செய்து, கண் விழிக்க நேரம் பிடிக்கும் என்று சொல்லிட, சுதர்சன் கண் விழிக்கும் வரைக்கும் காவேரி அனைத்துத் தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்துக்கொண்டு இருந்தார்..

அந்தா இந்தாவென்று சுதர்சன் மாலையில் கண் விழித்திட, நல்லவேளை இப்போது வீட்டிற்கு சென்றவர்கள் இங்கிருக்க, இங்கிருந்தவர்கள் வீடு சென்றிருந்தனர்.. இதை மனதில் வைத்துத்தான் முருகவேல் முன்னே கிளம்பியும் போனது.

கண் விழித்தவனுக்கு முதலில் என்னானது?? எங்கே இருக்கிறோம் என்றெல்லாம் புரியாது போக,  சுய உணர்வு வரவே கொஞ்சம் நேரம் பிடித்தது.

பின் தானாக என்ன நடந்திருக்கும் என்று புரிய “எப்.. எப்போ வந்தீங்க??” என்று அனைவரையும் பார்த்துக் கேட்க,

“காலைல வந்துட்டோம்டா.. என்னாச்சு உனக்கு ?? இப்போ எப்டி இருக்கு??” என்றார் முருகவேல்.

“ம்ம் பரவாயில்லப்பா..” என்றவன் “சாப்பிடீங்களா மாமா??!!” என்றான் பாண்டியனைப் பார்த்து..

“டேய் மச்சான்.. நான் சாப்பிட்டது எல்லாம் இருக்கட்டும்.. உன்னைப் பார்த்தா தான் சாப்பிட்டது போலவே தோணலை.. என்ன இப்படி வந்து படுத்து கிடக்க..” என்று கேலி போலவே பேச,

“சரியான வேலை மாமா.. சாப்பிடத்தான் நினைச்சேன்.. ஆனா எனக்கே தெரியலை.. ஏன் இப்படி..” எனும்போதே, மாலை நேர செக்கப்பிற்கு டாக்டர் வந்துவிட,

அவனைப் பரிசோதை செய்தவர், “ஹெல்த் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு.. டூ டேஸ்ல சரியாகிடுவார்.. பட் மைன்ட் டிப்ரஷன் நிறைய இருக்கும் போல.. ஐடி பீப்பில்ஸ்க்கு இப்படி இருக்கும்தான்.. பட் டேக் கேர்..” என்று விட்டுப் போக,

அவனின் அந்த டிப்ரஷன், எதனால் என்று வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாதா என்ன??

“என்ன தம்பி நீ.. என்கிட்டே பேசுறப்போவாது மனசுல உள்ளதை சொல்லிருக்கலாம்ல..” என்று ஜெயராணி சொல்ல,

“ம்ம் என்னத்தை சொல்ல.. விடுக்கா..” என்று சலிப்பாய் சொன்னவன், அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.

முகம் அப்படி சோர்ந்து இருந்தது.. இரண்டு நாட்களில் மெலிவு வந்திருக்குமா?? பார்க்க மெலிவாய் தான் இருந்தான்.

அங்கே காவேரிகூட ஜெயக்கொடியிடம் அதைதான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

“பார்க்கவே எப்படியோ இருக்கான் டி.. சங்கடமா இருக்கு.. ஆஸ்பத்திரியில இருந்து வரவும் நல்லா சமச்சி போட்டு உடம்ப தேத்தி விடனும்.. என்னவோ இவனுக்கு கல்யாண பேச்சு எடுத்தாலே ஒன்னு கிடக்க ஒன்னு வருது..” என,

ஜெயக்கொடியோ “ம்ம் யார் வாய்ல விழுந்து எந்திருச்சானோ…” என்றாள் சலிப்பாய்.

தம்பிக்கு இப்படி என்ற வருத்தம் இருந்தாலும், அவளின் இயல்பே இப்படிதான் என்பதால் பேச்சு அப்படியே வந்தது. தானாய் நடக்கும் ஒன்றிருக்கு கூட அடுத்தவர் மீது தான் தூக்கிப் போடுவாள்.

ரமேஷ் அதற்குமேலே..

“உடம்ப தேத்துனா மட்டும் போதாதுக்கா.. அவன் மனசும் சரியில்லைன்னு நினைக்கிறேன்.. அதனால அவன் சரியாகுற வரைக்கும் நீங்களும் மாமாவும் இங்கயே இருந்து கவனிங்க..” என, காவேரிக்கு அதுவே சரியெனப்பட்டது.

மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இரவு உணவு செய்துகொண்டு, இவர்கள் கிளம்ப, திரும்பவும் அப்போது தான் சுதர்சன் கண் விழித்திருந்தான். இன்னமும் அவனிடம் யாரும் சொல்லவுமில்லை, அனைவரும் வந்திருக்கிறார்கள் என்று.

இவர்கள் எல்லாம் அறைக்குள் நுழைய, பார்த்ததும் அவனுக்கு ஒரு திக் உணர்வுதான்..

சுதர்சன் எழுந்து அமர்ந்து இருப்பது கண்டதுமே, காவேரி “டேய்.. கண்ணா.. சுதர்சா.. என்னடா நீ இப்படி வந்து படுத்துட்ட..” என்றபடி அவனின் கைகளைப் பற்ற,

“ம்ம்.. ஒண்ணுமில்லம்மா..” என்றான் சோம்பலாய்..

“எனக்கு மனசு பதறினது எனக்குதானே தெரியும்.. நீ ஒண்ணுமில்லன்னு சொல்ற.. நான் வேற உன்னோட நிறைய சண்டை போட்டுட்டேன்.. ” என,

ரமேஷ் “அக்கா.. நம்ம யாரும் எதுவும் தேவையில்லாம பேசலை.. எல்லாம் இவன் நல்லதுக்குத்தான்.” என,

முருகவேல் “ இங்க வச்சு யாரும் எதுவும் பேசிக்கவேணாம்.. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ். நானும் கேசவனும் இருந்துக்கிறோம்.. நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க..” என்றுவிட்டார்.

ஜெயக்கொடி கூட அதிசயமாய் “என்னங்க.. நம்ம இங்கன இருந்தா நல்லதுக்கு சொன்னா கூட அது தப்பா முடியும்.. அதுனால வீட்டுகே போயிக்கலாம்…” என்றுவிட்டாள்.

ஜெயராணி இப்போது அம்மாவை முறைக்க, “அவ அப்படித்தான்னு தெரியும்ல..” என்று காதை கடித்தார்.

சுதர்சன் அதற்குமேல் யாரிடமும் எதுவுமே பேசவில்லை.. அப்படியொரு சோர்வு. அவனுக்கே ஆச்சர்யம், சரியாய் உண்ணவில்லை எனில் இப்படியாகுமா என்று? ஆனால் சோர்வு என்பது உடலில் மட்டுமல்லவே. மனதிலும் கூடத்தானே..

கண்களை மூடி ஒருவித சிந்தனையில் இருந்தான்.. இறுதியாய் வேலவனோடு பேசியது நினைவில் வந்தது..

‘சண்மு சின்ன பொண்ணு எடுத்து சொல்லி புரிய வச்சிக்கிறோம்..’

இந்த வாக்கியமே திரும்ப திரும்ப மனதினில் ஓட, ‘என்ன சொல்லப் போகிறான்??’

‘அவ என்ன நினைப்பா??’

‘பெரிய இவனாட்டம் அன்னிக்கு அப்படி பேசிட்டு.. இப்போ ஆளே அமைதியாகிட்டா.. ச்சே ச்சே..’ என்று தன்னை நினைத்தே அவனுக்கு அவமானமாய் போனது.

அவனின் முகச் சுளிப்பை பார்த்தே முருகவேல் “சுதர்சன்.. நிம்மதியா தூங்கு.. எதையும் நினைக்காத..” என்றார் ஆறுதலாய்.

“ம்ம்..” என்றுமட்டும் சொன்னவனுக்கு நிச்சயமாய் மனது ஒருநிலையில் இல்லை..

‘சண்முகப் பிரியா…’

இந்தப் பெயரையே திரும்ப திரும்ப அவன் மனது உறுப்போட்டுக்கொண்டு இருந்தது.

ஒருவேளை வீட்டினர் சொல்வது கேட்டு அவளும் தன் மனதை மாற்றிக்கொண்டு விடுவாளோ??

‘நோ…!!!!’ என்று அவனின் உள்ளம் அலறியது.

அவளோடு பேசவேண்டும் என்று அவனின் மனது ஆணி அடித்ததுபோல் சொல்ல, ஒருமுறை அவளின் முகத்தினைப் பார்க்கவேண்டும் போலவும் இருந்தது.

ஆனால் அதெல்லாம் எப்படி??!!!

ஒன்றும் விளங்கவில்லை..

வலிகள் இல்லா வாழ்வு இல்லை.. வலி கண்டு அஞ்சினால் கண் முன்னே இருக்கும் வழிகள் கூடத் தெரியாது..

சண்முகப்பிரியா, சுதர்சனுக்கு இந்த வலி நீங்கி வழி எப்போது பிறக்கும்?? இருவரின் மனதும் வெறும் காகிதம் போலிருந்தது.      

                         

           

   

       

 

    

             

             

Advertisement