Advertisement

ஆஹா..!! கல்யாணம் – 4

வேலவனுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது சுதர்சன் இப்படி கிளம்பி பின்னேயே வந்தது. பேசவேண்டும் என்றுது சொன்னவன் இப்படி வருவான் என்று நினைக்கவேயில்லை. இதுமட்டும் வீட்டில் தெரிந்தால்..?? அவ்வளோதான்..

அது அவனின் பார்வையிலேயே தெரிய, சுதர்சனோ “உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. பட்.. உங்களோட பேசுறதுக்கு முன்ன உங்க தங்கச்சியோட பேசுறது ரொம்ப முக்கியம்..” என,

“இது.. இதெல்லாம் தேவையில்லாத பிரச்னை தான் ஆகும்..” என்றான் வேலவன்.

பெண்கள் யாரும் கார் விட்டு இறங்கவில்லை. சுதர்சன் பின்னேயே வருவது கண்ட வேலவன் தான் காரை ஓரம் கட்டி நிறுத்தி, என்னவென்று பேசினான். அங்கே உள்ளே சண்முகப் பிரியாவிற்கு ஒருபுறம் திக் திக் என்று இருந்தாலும் எதோ ஒரு வகையில் ஒருவித சந்தோசமாகவும் இருந்தது.

காரில் எரிய சிறிது நேரத்தில் வேலவன், மேகலாவிடமும் இவளிடமும் சொன்னான் தான் இப்படி சுதர்சன் அழைத்து பேசவேண்டும் என்று சொன்னதை. அதைக் கேட்டதில் இருந்து பிரியாவிற்கு அப்படியொரு ஆவல்.

‘என்ன சொல்வான்??’ என்று தெரிந்துகொள்ள மனம் பரபரத்தது.

அதன்பொருட்டே அவள் அவனைக் கண்ட நொடி சிரித்தது.

“பிரச்சனைக்கு பயந்து எதுவுமே செய்யாம இருந்தா காலம் முழுக்க கஷ்டப்படப் போறது நானும் பிரியாவும் தான்..”

சுதர்சன் இப்படி ஒரு திடமாய் இதை சொல்வான் என்று சுதர்சனே நினைக்கவில்லை. ஒரு பெண்ணைப் பார்த்தோம். மனதில் சலனம் தோன்றியது.. அதே பெண்ணை பெண் பார்த்தும் போனோம் பிடித்திருந்தது. அதற்குமேல் எதுவும் ஒத்துவரவில்லை என்பதுதான் நிஜம். ஆனால் விட்டுவிடு என்று மனது சொல்ல வேண்டுமே??

சுதர்சனின் மனமோ ‘விடாதே.. அவளை விட்டுவிடாதே..’ என்றுதானே சொல்கிறது.

வேலவனுக்கோ “என்ன நீங்க இப்படி பேசுறீங்க??” என,

“வேற எப்படி சொல்ல தெரியலை.. பட் இதுதான் நிஜம்.. ஒருவேளை பிரியாக்கு பிடிக்கலன்னா…” என்று சொல்லி சுதர்சன் பேச்சை நிறுத்த,  

“பிடிக்கலைன்னா…??!!” என்று வேலவனும் கேட்க,

“வேற வழியில்லை.. பிடிக்க வைக்கணும்.. எனக்கு அதுக்குமேல் என்ன செய்யத் தெரியலை.. உங்கக்கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்கன்னு தெரியலை..” என,  அவ்வளோதான் வேலவன் வாய் பிளக்காத குறை..

ஒரு ஆணின் மனது ஆணுகுத்தானே தெரியும்..!!!

தன தங்கையே என்றாலும் அவளைப் பிடித்து இப்படி பிடிவாதமாய் பின்னே வந்து, அவளோடு பேசவேண்டும் என்று அண்ணனிடமே சொல்லும் ஒருவனை என்ன செய்ய முடியும். சில நேரங்களில் சிலரின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அது நமக்கு பிடித்தமாய் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி..

வேலவன் அப்படியே நிற்க, சுதர்சனும் கூட அப்படியே தான் நின்றான்.  இது தான் என் முடிவு என்பதுபோல்..

மேகலா “நீ இரு..” என்று சண்முகப் பிரியாவிடம் சொல்லிவிட்டு காரை விட்டு இறங்க,

குமரனோ “இதுமட்டும் வீட்டுக்கு தெரிஞ்சது..” என்று அக்காவை வேண்டுமென்றே மிரட்ட ஆரம்பித்தான்.

“டேய் சும்மாயிரு.. நீ மட்டும் உளறின அவ்வளோதான்..” என்று பிரியாவும் மிரட்டியபடி இருக்க, மேகலா “என்னங்க??!!!” என்றாள் வேலவனைப் பார்த்து.

“சண்முவோட பேசணுமாம்…” என்று சொல்ல,

“என்னது??!!!” என்று கண்களை விரித்தாள்.

“பிரியாக்கிட்ட கேளுங்க..” என்று சுதர்சன் சொன்ன, “என்னங்க இது??” என்றாள் மேகலா கணவனைப் பார்த்து.

“கேளு.. வேறென்ன செய்ய??”

“வீட்ல தெரிஞ்சா ரொம்ப பிரச்னை ஆகும்.. வேண்டாம்.. நம்ம திரும்பிப் போயிடலாம்.. இதெல்லாம் சின்ன விஷயம் இல்லை.. கல்யாண காரியம்.. பொம்பள புள்ள விஷயம்..” என்று மேகலா தயங்க,

சுதர்சனோ “ம்மா தங்கச்சி.. நான் பிரியாவை தனியா கூட்டிட்டு போய் பேச கேட்கலை.. உங்க கண் முன்னாடித் தான் பேசணும்னு கேட்கிறேன்.. இல்லன்னா நேரா கிளம்பி உங்க வீட்டுக்குத் தான் வரணும்.. எதுன்னாலும் எனக்கு ஓகே தான்..” என, வேலவனும் மேகலாவும் கொஞ்சம் அரண்டு தான் போய்விட்டனர்.

பெண் பார்க்க வந்தபோது இருந்த சுதர்சன் இவனில்லை என்று இருவருக்குமே தோன்றியது. உண்மையும் அதுதானே..

சுதர்சன் தங்கச்சி என்றதால், மேகலாவும் “இல்லண்ணா.. அது.. யாரும் பார்த்தா அது வந்து..” என்று இழுத்தாள்.

சுதர்சன் வேலவனைப் பார்க்க, அவன் முகம் இன்னும் ஒரு தெளிவில்லாமல் இருப்பது போல் தான் இருந்தது.

“ஓகே.. இதே ரோட்ல நேரா போய் லெப்ட் கட் பண்ணா ஒரு பேக்கரி வரும்.. அங்க வெய்ட் பண்றேன்.. முடிவு பண்ணிட்டு வாங்க..” என்றவன் பைக்கைக் கிளப்பிக்கொண்டு செல்ல, சண்முகப் பிரியா ஜன்னல் வழியாய் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். 

வெளியே இருந்த இருவரும் காரினில் ஏற, “என்னண்ணா??” என்று பிரியா கேட்க, “உன்னோட பேசணுமாம் சண்மு…” என்றாள் மேகலா.. 

“ஒ..!!!” என்றவள் அதற்குமேல் பேசாது இருக்க, “நீ என்ன சொல்ற ??” என்று வேலவன் கேட்க,

“பேசணும் சொன்னவங்க போயிட்டாங்க..” என்று பிரியாவும் சொல்ல,

“போகலை.. அங்க பேக்கரில வெய்ட் பண்றாங்களாம்..” என்று வேலவன் சொன்னதும், பிரியாவின் முகத்தினில் சின்னதாய் ஒரு புன்னகைத் தோன்றி மறைந்தது.

சிறிது நேரம் அனைவருமே அமைதியாய் இருக்க, எதுவாக இருந்தாலும் சண்முகப் பிரியாவே சொல்லட்டும் என்று வேலவன் நினைக்க, மேகலாவோ வீட்டில் பெரியவர்கள் காதிற்கு இவ்விசயம் சென்றால் என்னாவது என்றுதான் பயமாய் போனது. மற்றபடி அவளுக்குமே சுதர்சன் தான் இவளுக்கு சரியான ஜோடி என்ற ஒரு எண்ணம் இருந்தது. குமரன் அனைவரையும் பார்த்துக்கொண்டு வர, சண்முகப் பிரியா சில நொடிகள் அமைதியாய் இருந்தவள்,

“அந்த பேக்கரில ஹனி கேக் செமையா இருக்கும்லண்ணா..” என, மூவரும் இவளை திகைத்துத்தான் பார்த்தனர்..

‘அடிப்பாவி..’ என்று மேகலா சொன்னது தெளிவாகவே கேட்க, “என்ன அண்ணி.. உங்களுக்கு அங்க இருந்து தானே அண்ணன் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வருவான்..” என, வேலவன் சட்டென்று சிரித்துவிட்டான்.

“பேசணும்னா அதை சொல்றதுக்கு என்ன??” என, பேக்கரியும் வந்திருந்தது.

“பேசணும்னு என்கிட்ட யாரும் கேட்கலையே..” என்றவளும் இறங்கி நேராய் உள்ளே போனவள்,

பேக்கரி ஆளிடம் “நாலு ஹனி கேக்.. தனி தனி ப்ளேட்ல வச்சு கொடுங்க…” என்றுவிட்டு போய் ஒரு ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

பொதுவாக வைகை டேம் செல்லும் ஆட்கள் தான் இங்கே அதிகம் வருவர் என்பதால், ஊர் ஆட்கள் யாரும் அப்படியொன்றும் அங்கே இல்லை. அது தெரிந்து தான் சுதர்சன் அங்கே இருக்கிறேன் என்று சொன்னது. ஆனால் இவளோ வந்ததும் போய் ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திட,

‘என்னதிது…’ என்றுதான் பார்த்தான் வேலவனை சுதர்சன்.

“ரெண்டுபேரும் சரியான ஜாடிக்கு ஏத்த மூடிதான்..” என்று மேகலா முனுமுனுக்க, “நீங்க அவக்கிட்ட கேட்கலைன்னு கோபமாம்..” என்றான் வேலவன்..

“ஒ..!!” என்று சுதர்சன் சொன்னவன், “உன்கிட்ட பேசணும்…” என்றபடி அவளின் முன்னே போய் அமர,

“பேசணும்னு சொல்றீங்களா?? இல்லை பேசலாமான்னு கேட்கிறீங்களா??” என்று பிரியா பார்வையை மட்டும் நிமிர்த்தி கேட்க, அடுத்த நொடி தன் பார்வையை தழைத்துக்கொண்டாள்  ‘ஆகா..!! குருவிக்கூடு ரொம்ப வில்லங்கம் போலவே..’ என்றுதான் நினைத்தான் சுதர்சன்.

குமரன், வேலவன் மேகலா மூவரும் இவர்களுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த இருக்கையில் அமர்ந்துவிட, சண்முகப் பிரியா ஆர்டர் செய்த கேக்கும் வந்துவிட்டது.  அவளோ இவர்கள் நான்கு பேருக்கு மட்டும் செய்திட, வேலவனோ சுதர்சனிடம் “நீங்க.. உங்களுக்கு ஆர்டர்..” என்று இழுக்க,

“இதோ இருக்கே..” என்று, பிரியாவின் முன்னிருந்த ஹனி கேக்கை காட்டியவன் “எனக்கும் ஹனி கேக் பிடிக்கும்..” என்று அதை தன்புறம் நகர்த்திக்கொண்டான்.

சண்முகப் பிரியாவின் கண்கள் உடனே சட்டென்று விரிந்திட, மற்றவர்களுக்கோ சிரிப்புத் தாங்க முடியவில்லை..

“என்னங்க.. கல்யாணம் பண்ணா இந்த பொண்ணத்தான்னு முடிவு ஆகிடுச்சு.. அப்புறோம் கேக் மட்டும் தனியா ஆர்டர் செய்வாங்களா??” என்று சுதர்சன் சொல்ல,

“நான் சொன்னேனா அப்படி??” என்றாள் கொஞ்சம் கோபமாய் பிரியா..

பிரியா இப்படி பேசியதுமே சரி நீங்கள் பேசிக்கொள்ளுங்கள் என்று மற்றவர்கள் திரும்பிட, சுதர்சனோ “உன்கிட்ட உன்னோட முடிவு என்னனு கேட்கத்தான் பேசணும் சொன்னேன்..” என,

“ம்ம்ம்..” என்றுமட்டும் சொல்லிக்கொண்டவள் இதுவரைக்கும் அவனை நேராய் பார்க்கவில்லை.   

“இங்க என்னைப் பார்த்து பதில் சொல்லு..” என,

“என்ன சொல்லணும்??” என்றவள் அப்போதும் பார்க்காமல் இருக்க,

“ரொம்ப நேரம் இப்படி இருக்கவும் முடியாது.. அது தப்பும் கூட.. உங்க அண்ணன் பேச விட்டதே பெருசு…” என,

“நான் இங்க வரணும் சொன்னதால அண்ணன் விட்டாங்க..” என்றாள் வேகமாய்..

அவ்வளோதான் அடுத்த நொடி சுதர்சனுக்கு இருந்த டென்சன் எல்லாம் காணாது போயிட, “அப்.. அப்போ.. நீயாதான் இங்க வர்றேன் சொன்னியா??” என,

“இந்த பேக்கரியும் ஓடிடாது.. இங்க இருக்க ஹனி கேக்கும் ஓடிடாது..” என்றாள் சண்முகப் பிரியாவும்..

“ம்ம்ம்..” என்று இப்போது அவன் சொல்ல, “அவ்வளோதானே முடிஞ்சதுல..” என்றாள்,

இந்த லட்சணத்தில் யாரும் தங்களின் விருப்பங்களை பரிமாறியிருக்க மாட்டார்கள் என்று சுதர்சன் நினைக்க, ‘இனிமே எல்லாம் இப்படிதான்…’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்..

“என்ன அமைதியா இருக்கீங்க??? பேசி முடிச்சாச்சுல.. இனி ஆகவேண்டியது என்னன்னு பார்க்கலாம்.. எங்க வீட்ல நான் பார்த்துப்பேன்..” என்றவள்,

“அண்ணா.. பேசியாச்சு..” என, அவர்கள் அனைவரும் சுதர்சன் முகம் பார்க்க, “ம்ம் பேசிட்டோம்.. கூட்டிட்டு போங்க.. தேங்க்ஸ்..” என்றான் பல்லைக் கடித்து..

சண்முகப் பிரியாவிற்கு உள்ளே அப்படியொரு சிரிப்பு.. ஆனாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை. தனக்காக வந்திருக்கிறான் என்ற சந்தோசம் வேறு.. இருந்தாலும் இரண்டாவது முறை, அதாவது அவளைப் பொறுத்தமட்டில் இரண்டாவது முறை காணும் ஒருவனிடம், அது தனக்கு பிடித்தவனாகவே இருந்தாலும் கூட அத்தனை ஒன்றும் ஈஷிக்கொண்டு எல்லாம் பேச முடியாது.

வரவும் வராது..

அனைவரும் எழுந்து கிளம்பிட, “நான் உங்களுக்கு ஈவினிங் போல கால் பண்றேன் வீட்ல பேசிட்டு..” என்று சுதர்சன் வேலவனிடம் சொல்ல,

“ஓகே.. கொஞ்சம் விட்டுத்தான் போகணும்.. ரொம்பவும் நம்ம பெரியவங்களை கம்ப்பல் பண்ண கூடாது..” என்று அவனும் சொல்லிவிட்டு நகர, கடைசியில் வந்த பிரியாவோ

சுதர்சனை கடக்கையில் அவன் என்னவோ பாவமாய் ஒரு பார்வை பார்த்து வைக்க “ரொம்ப எல்லாம் என்கிட்டே எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க.. டயலாக்ஸ் எல்லாம் எனக்கு பேச வராது..” என்றுவிட்டு போக,

‘குண்டு வீசினதுல சிக்கினவன் கூட தப்பிச்சிருப்பான்.. ஆனா நீ இப்படி குருவிக்கூடுல சிக்கிட்டியே..’ என்று சுதர்சனின் மனது அவனையே கேலி செய்தது.

அவர்கள் காரில் ஏறி கிளம்பும் வரைக்கும் அப்படியேத்தான் சுதர்சன் நின்றிருந்தான்.. அனைவரும் சொல்லிவிட்டுச் செல்ல, சண்முகப் பிரியாவோ எதுவுமே சொல்லவில்லை. ஏறி அமர்ந்துகொண்டவள், ஜன்னலை மட்டும் இறக்கிவிட்டு பார்வையை நேராய் வைத்துக்கொண்டாள்.

‘என்ன இவ?? இப்படிதான் எப்பவுமா ?? இல்லை இப்பத்தான் இப்படியா…’ என்று சுதர்சன் நினைத்து முடிக்கவில்லை, கார் கிளம்பிய அடுத்த நொடி, ஜன்னல் பக்கம் எட்டிப்பார்த்தவள், கை அசைத்து டாட்டா காட்டிவிட்டு செல்ல, அவளின் முகத்தினில் இருந்த சிரிப்பு ஒன்றே சொல்லியது அவள் பேசிடாத விசயங்களை.

‘டயலாக் பேச வராதா.. பாரு பாரு லவ் டார்ச்சர் பண்ணி உன்ன பக்கம் பக்கமா பேச வைக்கல நான் சுதர்சன் இல்லை..’ என்று எண்ணிக்கொண்டான்.

சுதர்சனுக்கு எப்பாடு பட்டலாவது சண்முகப் பிரியாவை திருமணம் செய்திட வேண்டும் என்று நினைக்க, யாரும் பார்க்கவில்லை என்று அவன் நினைத்திருக்க, வினையாய் ரமேஷ் இவர்களைப் பார்த்திருந்தான்.

சுதர்சனை வழியில் பார்க்க, அவனை அழைத்துப் பார்த்தவன், இவனோ கண்டுகொள்ளாது போக, “என்ன அப்படி வேகமா போறான்..” என்று அவன் பின்னே போகையில் தான் இவர்களை கண்டது..

‘அடப்பாவி..’ என்று நினைத்தவன், அதை அப்படியே ஜெயக்கொடிக்கு அழைத்து சொல்ல, இது ஒன்று போதாதா??

“என்னங்க சொல்றீங்க?? என் தம்பி அப்படியெல்லாம் செய்ய மாட்டான்.. அவ்வளோ பெரிய சிட்டில அவ்வளோ பெரிய வேலைப் பாக்குறான்.. அவன் ஒரு பொண்ணு பின்னாடி போறதா??” என,

“நான் அப்போ பொய் சொல்றேனா ?? வேணும்னா உங்கம்மாக்கிட்ட கேளு சுதர்சன் வீட்ல இருக்கானா என்னன்னு..” என்றும் சொல்ல, ஜெயக்கொடி அடுத்து அப்படியே காவேரிக்கு அழைத்து,

“ம்மா தம்பி எங்க??” என,

“அவன் மதியம் சாப்பிட்டு வெளிய போனவன் இன்னமும் காணோம்..” என்றார் காவேரி.

அடுத்தது என்ன?? ஜெயக்கொடி தன் கணவன் தன்னிடம் சொன்னதை ஒன்றுவிடாது அம்மாவிடம் சொல்லி “ஏம்மா இவன் இப்படி இறங்கிப் போனா நம்ம குடும்ப கௌரவம் என்னாகுறது ?? இவனுக்கு என்ன இல்லைன்னு இப்படி பின்னாடி போயிருக்கான்.. அவர் சொல்றப்போ அசிங்கமா இருக்கு எனக்கு.. ” என,

“என்ன ஜெயா சொல்ற ???!!” என்று அதிர்ந்து தான் போனார் காவேரி..

எந்த அம்மாவிற்குத் தான் தன் மகன் ஒரு பெண்ணின் பின்னே போவது பிடிக்கும்.. அது தாங்கள் பார்த்த பெண்ணாகவே இருந்தாலும் கூட..

“ஆமாம்மா.. இப்போவே இப்படி.. இனி இந்த சம்பந்தம் எல்லாம் முடிச்சா இவன் நமக்கில்லை.. என்னவோ என் மாமியார் சொன்னது ரொம்ப சரி.. இது நமக்குத் தோது படாது..” என்று நன்றாய் அம்மாவினை ஏற்றிவிட,

இத்தனை நாள் சுதர்சனின் அம்மாவாக யோசித்த காவேரி, இப்போது வராத மருமகளின் மாமியாராகிப் போனார்.

“சரி நான் பேசுறேன் அவன் வரட்டும்..” என்று வைத்தவர், மகன் வரவுமே கேட்டார் “எங்கடா போன ??” என்று..

அவனோ “பழைய பிரண்டும்மா ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன்..” என்று சொல்ல,

“ஏன் டா இப்படி பண்ற.. உனக்கு கல்யாணம் பேசுற நேரத்துல போய் இப்படியெல்லாம் பண்றியே ஊருக்குள்ள யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..??” என்று கண்ணீர் விட ஆரம்பிக்க,

“ம்மா என்னம்மா நான் என்ன பண்ணேன்..” என்றான் ஒன்றும் விளங்காது..

“என்ன பண்ணல நீ.. அந்த பொண்ண போய் பார்த்து பேசிட்டு வந்திருக்க.. இதெல்லாம் என்னடா.. அப்படி என்ன அவ உலக அழகியா போயிட்டா..” என,

‘தெரிஞ்சிடுச்சா..’ என்று பார்த்தவன் அமைதியாகவே இருந்தான்.

“பெரிய மாப்பிள்ள பார்த்துட்டு ஜெயாக்கு போன் போட்டு அப்படி திட்டிருக்கார்.. அவ எனக்கு போன் போட்டு கேக்குறா..” என்று காவேரி மேலும் ஆரம்பிக்க,

“என்னைப் பார்த்தாருல.. அப்போவே நேராவே கேட்டிருக்க வேண்டியது தானே.. இதென்னம்மா இப்படி வீட்ல லேடிஸ் கிட்ட சொல்லி பேச விடுறது..” என்று சுதர்சன் கடிய,

“இது நல்லதில்ல சுதர்சன்.. நீ முதல்ல ஊருக்குக் கிளம்பு.. எதுன்னாலும் பெரியவங்க நாங்க இருக்கோம்.. பார்த்துக்கிறோம்..” என,

“ம்மா.. என்னமா.. இது என்னோட லைப்…” என்றான் அவனும் பிடிவாதமாய்..

“என்னடா?? என்ன பெரிய லைப் .. ஹா.. நானும் உங்கப்பாவும் வளக்காமயா நீ இவ்வளோ பெரிய மனுஷன் ஆகிட்ட.. அப்போ எங்களுக்கு என்னடா மரியாதை.. நல்லா கேட்டுக்கோ நாங்க எந்த பொண்ண பாக்குறோமோ அந்த பொண்ணுதான் இந்த வீட்டு மருமக. புரிஞ்சதா..”

“இந்த பொண்ணும் நீங்க பார்த்த பொண்ணுதான்..”

“பார்த்தோம் ஆனா முடிவு பண்ணலைல..” என்ற காவேரிக்கும் சுதர்சனுக்கும் அப்படியொரு சண்டை.

இதுவரை அவனும் அம்மாவிடம் அப்படி பேசியதில்லை.. அவரும் மகனிடம் இப்படி நடந்ததில்லை. ஆனால் அவனுக்குத் தெரியவில்லை, தான் பிரியாவிற்கு சார்ந்து பேச பேச, அம்மாவின் பிடிவாதம் அதிகரித்து மறுப்பும் திடமாய் வரும் என்று.

     

                      

 

                            

     

 

    

 

Advertisement