Advertisement

ஆஹா கல்யாணம் – 6

“ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க,

“ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா ?? உன்னையும் என்னையும் எத்தனை பேர் பார்த்து வரல?? எல்லாமே சரியா இருந்தும் கூட அதெல்லாம் தட்டிபோகலையா??” என்று ஜெயக்கொடி ஆரம்பிக்க, காவேரி இரண்டு மகள்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு விழித்தார்.

“அக்கா நீ சொல்றது எல்லாம் சரி.. ஆனா எல்லாத்துக்கும் மேல அவங்க ரெண்டு பெருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு..” என,

“அவங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, நீ உன் வீட்டுக்காரு பக்கத்து சொந்தத்தை இங்க கொண்டு வரணும் நினைக்கிற அவ்வளோதான்..” என்று ஜெயக்கொடி அடித்துப் பேச,

“ம்மா இதுக்கு தான் வர சொன்னியா நீ??” என்று ஜெயராணி, அம்மாவிடம் பாய்ந்தாள்.

சுதர்சன் கிளம்பி ஊருக்கு போனதில் இருந்து அடிக்கடி இப்படித்தான்.. மகன் பேசுவதில்லை என்று மகள்களிடம் அம்மா புலம்ப, அம்மாவிற்கு சமாதானம் செய்யவென்று ஒருவர் மாற்றி ஒருவர் வந்து ஒவ்வொன்றையும் சொல்லி காவேரியை தெளியவே விடவில்லை.

‘இந்த பொண்ணுக்கு என்ன வந்துச்சு??’ என்று ஜெயராணியும்,

‘இப்போவே இப்படி ஆளாளுக்கு காவடி தூக்குறாங்க.. இதுல மருமகளா வந்துட்டா அவ்வளோதான்..’ என்று ஜெயக்கொடியும்

‘இப்போதைக்கு எதுவும் பேசவேணாம்.. முதல்ல சுதர்சன் கொஞ்சம் சமாதானம் ஆகட்டும்..’ என்று முருகவேலும் சொல்ல, எந்தவொரு முடிவிற்குமே யாராலும் வர முடியவில்லை.

காவேரிக்கோ மகன் தன்னோடு பேசவில்லை என்பதிலேயே மனது கனத்துப் போனது..

‘யாரோ ஒருத்திக்காக பெத்தவ என்னை ஒதுக்குறான்..’ என்று எண்ணினார்..

“ம்மா நீ பேசினதும் தப்புதானே..”

“நான் பேசினா.. அதுக்காக என்னோட பேசாம இருப்பானா ??” என்றவர் “நேத்து நீதானே சொன்ன, இன்னிக்கு தம்பி பேசுவான்னு.. நானும் காலையில இருந்து போனையே பார்த்துட்டு இருக்கேன்..” என்று காவேரி சொன்னதும் ஜெயராணிக்கு சங்கட்டமாய் போனது.

அம்மா சொல்வதும் நிஜம் தான்.. பேசாமல் இருப்பதால் ஒன்றும் ஆகிடப் போவதில்லை. ஆனால் அவன் உணர்வுகளை அவனுக்குத் தெரிந்த வகையில் இப்படி வெளிப்படுத்துகிறான்.

அது இவர்களுக்குப் புரியாது..

“இதான் சொல்றேன்.. பாத்தியா.. இப்போவே அம்மாவோட சண்டை போட்டு பேசாம இருக்கான்.. இதேது அந்த பொண்ணை முடிச்சா அப்புறோ நம்ம எல்லாரையும் ஒதுக்கி வச்சிடுவான்..” என்று ஜெயக்கொடி மீண்டும் முதலில் இருந்து வர,

“அக்கா போதும்.. இப்போ இந்த பிரச்னை வேணாம்.. முதல்ல தம்பி பேசட்டும்..” என்ற ஜெயராணி,

“ஆபிஸ் போயிருப்பான் ம்மா பேசுவான்..” என்றாள் ஆறுதலாய்.

ஆபிஸில் தான் இருந்தான் சுதர்சன்.. முதல்நாள் இரவு வெறும் பிஸ்கட் மட்டுமே உண்டது, வயிறு பசி வேறு.. தாமதமாக வந்தது வேறு, எல்லாம் சேர்த்து தலைவலி கொடுத்தது சுதர்சனுக்கு.

அன்றேனப் பார்த்து காலையில் இருந்து ஒரு மீட்டிங். வெளிநாட்டில் இருந்து ஆட்கள் வந்திருந்தனர். முடிவேணா என்று இழுத்துக்கொண்டே போனது. எழுந்து போகவும் முடியாது, அமர்ந்து கவனிக்கவும் முடியாது தவித்துக்கொண்டு இருந்தான் சுதர்சன்.

மதியம் இரண்டு மணிக்கு மேலே தான் ஒருவழியாய் அனைத்தும் முடிந்து, அனைவரும் உண்பதற்கு என்று ஸ்டார் ஹோட்டல் செல்ல, ‘கேண்டீன்ல பார்த்துக்கிறேன்..’ என்றுவிட்டான்.

பயணம் செய்து பின் உண்ணும் அளவுக்கு எல்லாம் அவனுக்கு அங்கே பொறுமை இல்லை.

“ஹேய்.. சுதர்சன் கம் வித் அஸ்…” என்று மற்றவர்கள் அழைக்க,

“இட்ஸ் ஓகே..” என்று மறுத்தவன், நேராய் கேண்டீன் தான் சென்றான்.

காதெல்லாம் அடைப்பது போலிருந்தது. விட்டால் மயங்கிடுவான் போலிருக்க, கேண்டீனில் என்ன இருக்கிறது என்று பார்க்க, வெறும் தயிர் சாதம் மட்டுமே அந்த நேரத்தில் இருக்க, என்னவோ ஒன்று என்று வாங்கி வைத்து இரண்டு வாய் வைத்தான், குமட்டிக்கொண்டு வந்தது.

உடலே என்னவோ செய்வது போலிருக்க, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.. உண்ணவேண்டும் என்று மூளை கட்டளையிட, ஆனால் அதனை செய்ய முடியவில்லை.

“உஷ்..!!!!” என்று பெருமூச்சு விட,

“சுதர்சன்.. காலையில இருந்து எத்தனை டைம் கால் பண்றது உனக்கு??” என்றபடி வந்தான், கணேஷ் என்ற ஒருவன்.

‘இவன் எதுக்கு கால் பண்ணனும்…’ என்று பார்க்க,

“என்னடா அப்படி பாக்குற..?” என்றான் கணேஷ்..

“ஒண்ணுமில்ல சொல்லு..” என்றவனுக்கு நாவு வரண்டுகொண்டு இருந்தது. இன்னும் சிறிது நேரம் போனால் என்னாகுமோ தெரியாது.

“ஒண்ணுமில்ல, இந்த வீக் எண்டு ஒரு பார்ட்டி இருக்கு.. நீயும் வர்றியான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்..” என்றவனுக்கு என்ன தோன்றியதோ “என்னாச்சு ஒரு மாதிரி இருக்க??” என்று கேட்க,

“ஒண்ணுமில்ல கணேஷ்..” என்றவன் அடுத்த வாய் வைக்கப் போக, மீண்டும் அதே குமட்டல்..

‘ம்ம்ஹும் ஒன்றும் முடியவில்லை..’

பேசாமல் வீட்டிற்கு போய்விடுவோமா என்று யோசித்தான். அவன் வகிக்கும் பதவிக்கு எளிதாய் ‘வொர்க் ப்ரம் ஹோம்..’ போட்டுவிட்டு சென்றுவிடலாம் தான். ஆனால் இப்போது எழுந்து கிளம்ப முடியுமா என்பது கூட அவனுக்குச் சந்தேகமாய் போனது.

அப்படியே அமர்ந்திருக்க “டேய்.. உன்னதான்.. என்ன எப்படியோ இருக்க??” என்று கணேஷ் அதட்ட,

“காலைல சாப்பிடலடா.. அதான் ஒருமாதிரி இருக்கு..” என்றவனை வித்தியாசமாய் பார்த்தான் அந்த கணேஷ்.

“என்னாச்சு எதுவும் பிராப்ளமா??” என்று கணேஷ் கேட்கும்போதே, தன்னைப்போல் சுதர்சன் அவனின் அலைபேசி எடுத்துப் பார்க்க, அப்போதுதான் அது சைலெண்டில் இருப்பது தெரிய, வந்திருக்கும் மிஸ்ட் கால் அழைப்புகள் கண்டு

‘ஐயோ..!!’ என்று தலையில் அடித்துக்கொண்டான்..

“என்னடா??!!”

“ஊர்ல இருந்து நிறைய கால்ஸ்…” என்றவன், அழைத்திருப்பது அம்மா அக்கா என்று அடுத்து பார்த்து வேலவன் பெயரும் இருக்க மனது ஐயோவில் இருந்து ஐயய்யோ என்று மாற, அலைபேசி திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

கணேஷிற்கு எதுவோ சரியில்லை என்று புரிய, வேகமாய் போய் ஒரு ஜூஸ் வாங்கிக்கொண்டு வந்தவன் “இந்த இதை முதல்ல குடி..” என்று நீட்ட, “தேங்க்ஸ்டா..” என்றவன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான். ஜூஸ் உள்ளே இறங்கிய பின்னே தான்,

‘ஹப்பாடி..’ என்ற உணர்வு தோன்றியது,

“ம்ம் இப்போ சொல்லுடா என்ன விஷயம்??” என்று கணேஷ் கேட்க, “அட நிஜமா ஒண்ணுமில்லடா..” என்றான் சுதர்சன்..

என்னவோ இன்னது என்று ஒரு முடிவு தெரியாது சண்முகப் பிரியா விஷயத்தினை அவன் யாரிடமும் பகிர விரும்பவில்லை. சில விஷயங்கள் வீட்டினரோடு நின்றுவிடுவது தான் நல்லது என்று பட்டது அவனுக்கு.. ஆக ஒன்றும் சொல்லாமல்,

“ஓகே டா.. தேங்க்ஸ் பார் யுவர் ஜூஸ்..” என்றுவிட்டு எழ, “ஹ்ம்ம் என்னவோ பண்ணு.. பட் உனக்கு முடியலைன்னு நினைக்கிறேன்.. சோ டேக் கேர்..” என்றுவிட்டு போனான் கணேஷ்..

அவன் சென்றதும் திரும்ப தன் அலைபேசியை எடுத்தவன், முதலில் வேலவனுக்கு அழைக்க, சத்தியமாய் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற யோசனையே இல்லை சுதர்சனுக்கு..

“சொல்லுங்க வேலவன்..” என, வேலவனுக்கும் என்ன கேட்க என்று அப்படியொரு தயக்கம்..

“சாரி நீங்க பிசியா இருந்தீங்களா??” என,

“இல்ல இல்ல.. ஒரு மீட்டிங்.. அதான் கால் எடுக்க முடியலை.. சொல்லுங்க என்ன விஷயம்..” என்றான், என்ன சொல்லப் போகிறானோ என்ற பயத்தில்.

“நான் சொல்ல என்ன இருக்கு?? நீங்க.. நீங்கதான் சொல்லணும்.. இங்க சண்முக்கு வீட்ல அல்லையன்ஸ் பாக்குறாங்க.. அதான்..” என்று இழுத்தான்.

மறந்தும் கூட என் தங்கை தான் பேசச் சொன்னாள் என்று சொல்லவில்லை.

“அது… அதுவந்து.. நான்.. இன்னும் வீட்ல பேசலை.. தப்பா நினைச்சுக்காதீங்க.. இங்க வீட்லையுமே கொஞ்சம் பிரச்னை அதான்..” என்று சுதர்சன் சொல்ல,

“ஓ!! சரிங்க.. பிரச்னைகளை பெருசு பண்ணாம இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது.. சண்மு சின்ன பொண்ணுதான்.. சிலது புரியாது.. எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பா.. நீங்க பாருங்க.. நான் அவளுக்கு சொல்லிக்கிறேன்..” என்றவன் சுதர்சன் பதிலுக்கு காத்திராது வைத்துவிட்டான்.

இதற்கு என்ன அர்த்தம்??

சுதர்சன் மீண்டும் அப்படியே கேண்டினில் அமர்ந்து போனான்..

வேலவன் சொன்னதற்கு என்ன அர்த்தம்?? இதுவே மனதில் ஓடியது..

‘பிரச்னை பெருசு பண்ணவேணாம்னா அப்போ இதெல்லாம் இதோட விட சொல்றானா??’ என்று யோசிக்க, சண்முகப் பிரியாவை விட முடியுமா?? முடியாது என்றே தோன்றியது..

‘சொன்னா புரிஞ்சுப்பான்னா?? என்ன சொல்லப் போறான் இவன்.. என்னை வேண்டாம்னு சொல்லுவானோ??’ என்று மனது போக, ம்ம்ஹும் எதுவுமே அடுத்து சிந்திக்க முடியவில்லை..

மீண்டும் அழைப்பு.. ஜெயராணியிடம் இருந்து.. இம்முறை எடுக்காமல் இருக்க முடியாது. நேற்றே அம்மாவிடம் பேசு என்று சொல்லியிருந்தாள்.

‘ஆண்டவா.. எனக்கொரு நல்லவழி காட்டு…’ என்று வேண்டியபடி “என்னக்கா??” என,

“ப்ரீயா இருக்கியா??” என்றாள் ஜெயராணி.

“ம்ம் சொல்லு..”

“அம்மாக்கிட்ட பேசு சுதர்சன்.. இங்கதான் இருக்கேன்.” என்றவள் அலைபேசியை அப்படியே காவேரியிடம் கொடுத்துவிட “டேய்…” என்ற காவேரிக்கு அழுகை முட்டியது.

“ம்மா..” என்றவனுக்கு அவரின் அழுகை ஒருபக்கம் சங்கடம் கொடுக்க, இன்னொரு பக்கம் அவனின் உடல் நிலை வேறு படுத்தியது.

காவேரியோ “ஏன்டா யாரோ ஒரு பொண்ணுக்காக என்னோட பேசாம இருப்பியா நீ??!!” என்று அழுகையை கூட்ட,

“ம்ம்ச் ம்மா.. இப்போ இதான் பேசணும்னா அப்படியே வச்சிடுறேன்..” என்றான் கடுப்பாய்.

“ஏன்டா இப்படியிருக்க நீ.. அப்போ நான் உனக்கு முக்கியமில்லையா?? இப்படி பேசுற நீ..” என,

“ம்மா போதும்… இப்படியே எல்லாம் பண்ணீங்கன்னா நான் ஒண்ணுமில்லாம தான் போவேன்..” என்றவன் போனை வைத்துவிட, மீண்டும் காவேரி அங்கே மகள்களிடம் புலம்பத் தொடங்கிவிட, இன்னொருபுறம் வேலவனுக்கு மனதும் மிகவும் சங்கடப் பட்டுக்கொண்டு இருந்தது.

அன்று இருவரையும் பேச விட்டு இருக்கக் கூடாது என்று தோன்றியது.  சுதர்சனிடம் எதையும் கட்டாயப் படுத்தவும் முடியாது.. அவனால் முடிந்தது எல்லாம் சண்முகப் பிரியாவிற்கு எடுத்துச் சொல்வது ஒன்று மட்டுமே. அவளின் மனது கஷ்டப்படும் என்று தெரியும்தான். இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்.

வீட்டிற்கு சென்று, மேகலாவிடமும் கலந்தாலோசித்துவிட்டு பேசலாம் என்று மாலை வீட்டிற்கு வந்து மேகலாவிடம் சொல்ல, அவளுக்கும் வருத்தமாய் தான் போனது.

“இப்போவும் நம்ம சண்முக்கிட்ட எடுத்துப் பேசலைன்ன எல்லாமே தப்பாகிடும்..” என,   

வேறு வழியின்றி சண்முகப் பிரியாவிற்கு அழைத்தவன் “என்ன பண்ற சண்மு..” என, “அண்ணா நீ.. நீ அவரோட பேசினியா??!!” என்றாள் ஆர்வமாய்.

அவளின் குரலே அவளின் மனதினை உணர்த்திட, வேலவனுக்கு இன்னமும் சங்கடமாய் போனது.

“அண்ணா..??!!!”

“ம்ம் சொல்லுடா…”

“பேசினியா??!!”

“ம்ம்..”

“என்ன சொன்னாங்க..??”

“ம்ம் அது சண்மு…” என்று இழுத்தவன், “நான் சொல்றதை கொஞ்சம் சரியா புரிஞ்சுக்கோ..” என,

“நீயும் பெரிம்மா போல எனக்கு ப்ரைன் வாஷ் பண்ண போறியாண்ணா??” என்றாள் பட்டென்று.

“சண்மு…?!!!”

“உண்மைதானே.. நானாவா தேடிப் போனேன்.. நீங்கதானே எல்லாம் பண்ணீங்க?? இப்போ மறந்திடு சொன்னா எப்படி??” என்றவள் அழவே தொடங்கிட,

“அச்சோ அதெல்லாம் இல்ல சண்மு…” என்றான் வேகமாய் வேலவன்.

“இல்ல அப்படித்தான்.. எல்லாரும் கடைசியில அப்படித்தான் சொல்லப் போறீங்க.. அப்போ எனக்கு பிடிச்சதுன்னு சொன்னா எதுவும் செய்ய மாட்டீங்க அப்படிதானே… விடுங்க என்னவோ பண்ணிட்டு போறேன்.. எப்படியோ போறேன்..” என்று படபடவென பேசியவள், அழுதுகொண்டே போனை வைத்துவிட்டாள்.

அண்ணன் பேசிவிட்டு நல்ல பதிலாய் சொல்லாவிட்டாலும், தனக்கு ஆதரவாகவாவது ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்திருக்க, அவனோ தான் நினைத்ததற்கு மாறாகப் பேச, சண்முகப் பிரியாவிற்கு ஒருமாதிரி படபடவென்று ஆகிப்போனது.

‘அப்போ எல்லாமே அவ்வளோதானா??!!!!’

இந்த கேள்வி அவளுள் வர வர, அழுகை கூடிக்கொண்டே தான் போனது. என்னவோ ஒரு ஏமாற்றாம் மனதினில் வந்து அமர்ந்துகொண்டது. அவனோடு பேசியது மிக மிக குறைவு. பழகியதோ இல்லவே இல்லை.. இருமுறை சந்திப்பு மட்டுமே. ஆனாலும் சண்முகப் பிரியா மனதினில் அவன் மட்டும்தான் வேண்டும் என்று பிடிவாதம் மட்டும் குறையவேயில்லை.

பிடிவாதம் என்பதனை விட பிடித்தம் அதிகமாய் இருக்க, ஒவ்வொரு தடையாய் வர வர சண்முகப் பிரியாவிற்கு இவன் மட்டும் தான் எனக்கு என்ற எண்ணம் அவள் மனதில் நிறைந்து கொண்டே இருந்தது..

அடுத்தது என்ன?? இருவருக்கும் தெரியவில்லை..

வீட்டினை மீறி எதுவும் செய்யும் எண்ணமும் இல்லை. ஆனால் வீட்டினர் எந்தவொரு முடிவிற்கும் வருமுன்னே இவர்கள் ஏதாவது செய்துத் தான் ஆகவேண்டும்..

சண்முகப்பிரியா யோசித்துப் பார்க்க, அவளுக்கு வீட்டினில் பெரியவர்களிடம் தன் முடிவினை சொல்வதைத் தவிர வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை. என்ன திட்டு விழும், அம்மாவிடம் இருந்து சில அடிகள் கூட இருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. தாங்கிக்கொள்ளலாம் என்றே தோன்றியது.

சுதர்சன் தனக்கில்லை என்பதை விட இந்த அடிகளும் திட்டுக்களும் பரவாயில்லை என்றே தோன்ற, கண்களைத் துடைத்தவள், எழுந்து கீழே வந்தாள்.

“பிரியா வந்து சாப்பிடேன்..” என்று மீனாட்சி அழைக்க,

“ம்ம்.. அப்பா பெரிப்பா எல்லாம் எங்கம்மா??!!” என்றபடி உண்ண அமர,

“இன்னும் யாரும் வீட்டுக்கு வரலை நீ சாப்பிடு..” என,

“பெரிம்மா எங்க??” என்றாள் அடுத்து.

“அக்கா கோவிலுக்கு விளக்கு போட போயிருக்காங்க…” என்ற மீனாட்சி “சாப்பிடுன்னு சொன்னேன் மதியமும் சரியா சாப்பிடலை..” என்று தட்டு வைக்க,

“ஏம்மா.. நான் ஒன்னு சொல்லட்டுமா.??” என்றாள்.

“எதுவா இருந்தாலும் சாப்பிட்டுட்டு சொல்லு..”

“இல்லம்மா இப்போவே சொல்லிடறேன்…” என்றவள் “ம்மா.. இப்போ எதுவும் வரன் பாக்கலை தானே…” என, அவளைப் பார்த்த மீனாட்சியோ “இப்போ எதுக்கு இந்த பேச்சு??” என்றார்..

“சொல்லும்மா…”

“இல்லை இப்போதைக்கு இல்லை..”

“ம்ம் இனி எப்பவுமே பாக்க வேணாம்மா…” என்றாள் தட்டில் இருக்கும் சாப்பாட்டை அளந்தபடி..

“என்னது?? என்ன சொன்ன??!!!” என்று மீனாட்சி கேட்க,

“இனி எப்பவும் வரன் பாக்கவேணாம்னு சொன்னேன்..” என்றவள், “என்னால வேற யாரையும் எல்லாம் கல்யாணம் பண்ண முடியும்னு தோணலை..” என,

“அடிப்பாவி…” என்று ஓங்கி அறைந்தேவிட்டார் மீனாட்சி..

அவள் எதிர்பார்த்தது தான். இருந்தாலும் வலிக்கத்தான் செய்தது..

‘அம்மா..!!’ என்று வலியில் சப்தம் கூட எழுப்பாது, கண்ணில் நீர் தேங்கிட அப்படியே ஒரு பார்வை பார்த்துவிட்டு உண்ணாமல் எழுந்து சென்றுவிட்டாள் சண்முகப் பிரியா..

அங்கே சுதர்சனோ வீட்டிற்கு வந்தவன், எதுவும் செய்யப் பிடிக்காது மீண்டும் உண்ணாது படுத்துக்கொள்ள, மறுநாள் அவனால் எழவே முடியவில்லை. உடல் கொதிப்பு ஒருப்பக்கம் இருந்தாலும், அவன் உடலில் வலுவே இல்லை என்பதுபோல் தொய்யலாய் இருந்தது.. மனதின் சுமை ஒருபக்கம் அழுத்திட எல்லாம் சேர்ந்து அவனை மிகவும் மோசமான உடல்நிலைக்குத் தள்ளியது.                           

         

 

         

      

           

                                              

 

Advertisement