ஆஹா கல்யாணம் – 12

“பிரியா… இந்த காப்பிய கொண்டு போய் உங்க மாமாக்கு கொடு..” என்று காவேரி சொல்ல,

“சரிங்கத்தை..” என்றவள், காப்பி டம்பிளரோடு முருகவேல் தேடிப் போக,

“ஏம்மா அப்பா என்கிட்டே தானே காப்பி கேட்டாரு.. நான் கொண்டு போய் கொடுக்கமாட்டேனா??” என்று கேட்டது யாராய் இருக்க முடியும்.?? ஜெயக்கொடி தான்.   

ஜெயராணி போச்சுடா என்று பார்க்க, காவேரி பெரிய மகளிடம் “அந்த பொண்ணு வீட்டுக்கு புதுசு.. நம்ம இப்படி ஒன்னு ரெண்டு சொல்லி பழக்குனா தான் ஆச்சு.. வீடும் பழகணும் ஆளுங்களும் பழகணும்..” என,

“அதென்ன பெரிய விசயமா??!!!” என்று அப்போதும் ஜெயக்கொடி சமாதானம் ஆகவில்லை.

அம்மா தன்னிடம் கொடுக்காது புதிதாய் வந்த மருமகளிடம் காப்பி கொடுத்துவிட, அதுவும் அப்பா தன்னிடம் கேட்டும், அம்மா தன்னிடம் கொடுக்கவில்லை என்ற சின்ன கோபம்.. அவளுக்கு அனைத்திலும் தான் தான் முதலாய் இருந்திட வேண்டும் என்ற எண்ணம்.

திருமணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு விசயத்திற்கும் இப்படித்தான் ஒன்றை சொல்லிக்கொண்டே இருந்தாள். ஜெயராணி பார்த்தவள், “ம்மா நீ அக்காவையே முன்ன நிறுத்து.. தேவையில்லாத பிரச்னை எதுவும் வந்திட கூடாது..” என்றுவிட்டாள்.

இப்போது திருமணம் முடிந்தும் கூட ஜெயக்கொடி அதையே சொல்ல, காவேரி கொஞ்சம் பொறுமை விட்டவராய் “பெரிய விஷயம் தான்.. ஒரு பொண்ணு கல்யாணம் ஆகிவந்து புருஷன் வீட்ல ஒட்டுறது பெரிய விஷயம் தான்.. ஏன் உனக்கு புரியாதா..” என்றவர்

“போ.. போய் காய் எடுத்து வை சமையலுக்கு..” என்றுவிட்டு நகர்ந்திட,

“பாத்தியா ராணி அம்மாவ.. மாமியார் ஆகவும் எப்படி பேசுதுன்னு..” என்று இப்போது தங்கையிடம் சொல்ல,

“ஹா ஹா அக்கா.. விடேன்.. அம்மாதானே..” என, அப்படியே அக்கா தங்கச்சி இருவருக்குள்ளும் பேச்சு நீண்டபடி வேலையும் முடிந்தது.       

சுதர்சன் – சண்முகப் பிரியா இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று நாட்கள்தான் ஆகியிருந்தது. இதோ இன்று மறுவீடு.. மறுவீடு சென்று வந்ததும், அப்படியே பெங்களூரு பயணம்.

சண்முகப் பிரியா வீட்டினில் அவர்களின் பெரிய பெண்ணுக்கு செய்தது போலவே தான் செய்தனர்.. வேலவன் தான் அண்ணன் என்ற முறைக்கு தனியே செய்தான்.. யாரும் எங்கேயும் இறங்கி நடந்திடவில்லை. சுதர்சனும் பிரியாவும் நினைத்தை விட, பெரியவர்கள் இந்த திருமணத்தை விமர்சையாகத் தான் செய்து முடித்தனர்.

அன்றைய தினம் காலையில் தான் சொன்னான்  “மறுவீடு முடிஞ்சு ரெண்டு நாள்ல ஊருக்கு போகணும்..” என்று சுதர்சன் வீட்டினில் சொல்லிவிட,

“என்னடா??? கோவிலுக்கு போகணும்.. சொந்தக் காரங்க வீடெல்லாம் விருந்து வைப்பாங்க.. இன்னும் எவ்வளோ இருக்கு..” என்றார் காவேரி.

“ம்மா எனக்கு சேர்ந்தாப்போல லீவ் எல்லாம் போடவே முடியாது.. சோ லீவ் வர்றப்போ எல்லாம் வர்றோம்…” என்று சுதர்சன் சொல்லிவிட,

“அப்போ… நாங்க எல்லாம் எப்படி விருந்து குடுக்க??” என்று ரமேஷ் கேட்க,

“ஏன் மாமா.. எப்படியும் லீவுக்கு ஒவ்வொரு நாளும் வர்றபோ நாங்க வந்துட்டு போறோம்..” என,

“அதில்ல மச்சான்… புது மாப்பிள்ளையா இருக்கப்போவே விருந்து அது இதுன்னு போனா தான் அது குஷியா இருக்கும்.. அதைவிட்டு நீ பழைய மாப்பிள்ளை ஆகிட்டா நாங்களே கூப்பிட மாட்டோம்..” என்று பாண்டியனும் கிண்டல் அடிதான்.

“அதுசரி இப்போ நீங்க ரெண்டுபேரும் கூட்டா..” என்று இரு அக்காளின் கணவர்களையும் பார்த்துக் கேட்டவன்,

“ஏன் தனி தனியா கொடுக்கணும்.. ரெண்டு பெரும் சேர்ந்து ஒரே நாள்ல சிறப்பா கொடுங்க.. மொத்தமா தோட்டத்துக்கு போயிடலாம்…” என்று சுதர்சன் இலகுவாய் ஒரு ஐடியா சொல்ல, இப்படி இவர்கள் பேசும் வேலையில், சண்முகப் பிரியா வீட்டினில் இருந்து வேலவன், மேகலா வந்துவிட்டனர் மறுவீட்டிற்கு அழைக்க என்று.

அவர்கள் வரவும் தான் சண்முகப் பிரியாவிற்கு கொஞ்சம் முகமே தெளிவு பெற, அப்பாடி என்று ஆசுவாசமாய் உணர்ந்தாள். என்னதான் இருந்தாலும், சுதர்சனை பிடித்துத் திருமணம் செய்தாலும், ஒரே ஊரே என்றாலும் கூட, காவேரி சொன்னது போல் அவளுக்கு இங்கே அனைத்துமே புதியது தானே. அண்ணன் அண்ணியை கண்டதும் அவளுக்கு தெம்பாய் இருக்க அமைதியாய் தான் இருந்தாள்.

சுதர்சன் தான் அப்போதும் பேசிக்கொண்டு இருந்தான்.. அவனுக்கு அப்படியொரு சந்தோசம்.. வேலவனை சண்முகப் பிரியாவின் அண்ணன் என்ற முறையையும் தாண்டி, ஒரு சக தோழனாய் அவன் பார்த்திட,

“வாங்க வாங்க மச்சான்….” என்று வேகமாய் கை பிடித்து அழைக்க,

ரமேஷோ “பாரு சகலை.. கவனிப்பு எப்படின்னு..” என்று பாண்டியனிடம் சொல்ல, பாண்டியன் வெறுமெனே தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

பதில் பேசினால், கண்டிப்பாய் பேச்சு நீளும் என்று தெரியும்.. ரமேஷை இங்கிருந்து கிளம்பிக்கொண்டு போக நினைத்த பாண்டியன் “அண்ணா.. நம்ம விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிடலாம்.. வீட்ல சமையல் வேணாம்.. கடைல சொல்லி டெலிவர் பண்ண சொல்லிடலாம்..” என,

“ஆமாமா.. அதைப் பார்க்கணும்..” என்று இருவரும் கிளம்பிச் செல்ல, சுதர்சன் நன்றியோடு பாண்டியனைப் பார்த்து வைத்தான்..

இவர்கள் எல்லாம் இப்படித்தான்.. எதுவும் மாறாது.. குடும்பம் என்றால் எல்லாமே இருக்கும்.. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்.. அப்படி இருந்தால் தான் அது குடும்பமும் ஆகும்.. அது சுதர்சனுக்கும் தெரியும். சண்முகப்பிரியாவிற்கும் புரியும்.

 

 

ஒரு மாதம் சென்று….

“ஏ… குருவி… அந்த ப்ளூ டி ஷர்ட் எங்க வச்ச??” என்று சுதர்சன் கத்திக்கொண்டு இருக்க,

“கப்போர்ட்ல தான் இருக்கு மாமா..” என்று சமையல் அறையில் இருந்து சண்முகப் பிரியா சத்தம் கொடுக்க, “காணோம்…” என்றான் இவனும் திரும்ப.

“அந்த ப்ளூ இல்லைன்னா வேற ப்ளூ போடுங்க மாமா…” என்று அப்போதும் அவள் வராது சத்தம் மட்டுமே வந்தது.

“நேரமாச்சு… நீ வா…” என்று சுதர்சன் அழைக்க, “என்ன மாமா சொன்னீங்க கேக்கல…” என்றபடி சண்முகப் பிரியா வர,      

“இவ ஒருத்தி, எப்போ பாரு கேக்குலையே இருப்பா..” என்று சுதர்சன் முணுமுணுக்க,

“என்னது??!!!” என்று இவள் கேட்டதும் “அ!! சட்டை.. சட்டை தேடினேன்..” என்றவனை முறைத்தபடி தான் அவளும் வந்து கப்போர்ட் பார்த்தாள்.

சுதர்சன் கேட்ட ப்ளூ டி ஷர்ட் அங்கே முன்னேயே இருக்க, “இதுக்கு பேரு என்ன மாமா??!!” என்று அதனை எடுத்துக் காட்ட,

“ஓ!!! இந்தா இருக்கா??? பாரேன் நீ வரவும் தான் எனக்கு டி ஷர்ட் கூட கண்ணுக்குத் தெரியுது..” என்று பிதற்ற,

“அய்யே…” என்று சுளித்தவள், “நேரமாச்சு மாமா…” என,

“ஹேய் ஹேய் சொல்ல மறந்துட்டேன்…” என்று அவள் கை பிடித்து நிறுத்தியவன் “அங்க வந்து இப்படி மாமான்னு எல்லாம் சொல்லிடாத குருவி..” என்றவனைப் புரியாது பார்த்தாள்.

திருமணமான புதிதில் இவள் ‘என்னங்க..’ என்று அழைக்க, இவன் தான் வம்பு செய்து ‘மாமான்னு சொல்லு..’ என்று சொல்ல வைத்தான்..

ஆரம்பத்தில் பிரியாவும் “ம்ம்ஹும் மாட்டேன்.. அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்..” என,

“சொல்லலை அவ்வளோதான்.. பார்லர் கூட்டிட்டு போய் உன் குருவி கூட்டை கலைச்சு முடி எல்லாத்தையும் நீட்டி விட்ருவேன்…” என்று மிரட்ட, அடப்பாவி என்றுதான் பார்த்தாள்.

இப்படி அவளை செல்லமாய் மிரட்டித்தான் மாமா என்று சுதர்சன் அழைக்க வைத்தது.. ஆனால் இப்போது அவனே அப்படி சொல்லாதே என,

“ஏன் மாமா??!!” என்றாள் விளங்காது..

“ஷ்..!!! வேணாம் சண்மு.. இன்னிக்கு பார்ட்டிக்கு வர்றவங்க எல்லாம் நீ இப்படி கூப்பிட்டா நம்மை கிண்டலா தான் பார்ப்பாங்க.. சோ வேணாம்..” என,

“ஏன்..??? என் புருஷனை நான் கூப்பிடுறேன்.. யாருக்கு என்ன??!” என்று பிகு செய்தாள்..

“நீ கூப்பிடு ஆனா அங்க வேணாம்.. நீ டோட்டலா அங்க எல்லாருக்கும் புதுசு.. வேணாம் சொன்னா கேளு..” என்று சுதர்சன் கொஞ்சம் புரிய வைக்க முயல, அவனை முறைத்தவள்,

“சரிடா சுதர்சா…” என்றுவிட்டு போக,

“ஏய் ஏய் நில்லு..” என்று திரும்ப அவளை நிறுத்தியவன், “என்னது டா வா??!!” என்று கோபமாய் கேட்பது போல் கேட்க,

“ஹா..!! நீங்க டி சொல்லலாம்.. நான் டா சொல்லக் கூடாதா.. போங்க டா போய் கிளம்புங்க டா…” என்று மாமா என்று சொல்லும் இடத்தில் எல்லாம் டா சொல்ல,

‘ஆண்டவா இன்னிக்கு பார்ட்டி முடியுற வரைக்கும் இவளை சமாளிக்க எனக்கு தைரியம் கொடு..’ என்று இறைவனை துணைக்கு அழைத்தான் சுதர்சன்..

ஆபிஸ் நண்பர்களோடு இன்று பார்ட்டி. அனைவரும் குடும்பம் சகிதமாய் வர, சண்முகப் பிரியாவிற்கு இதெல்லாம் புதியது என்பதால், அதிலும் அவள் பரமார்தமாய் அனைவரின் முன்னும் ஏதாவது பேசி வைக்க, யாரும் கிண்டலாகவோ இல்லை பட்டிக்காடு என்றோ நினைத்துவிட கூடாது என்றே மாமா என்று அழைக்காதே சொன்னது.

ஆனால் அவளோ அதற்கு பதிலாய் இப்படி இறங்கு, எப்படி சமாளிப்பது என்றுதான் திகைத்துப் போனான் சுதர்சன்.

சண்முகப் பிரியா தயாராகி வந்திட, இவன் அப்படியே இருப்பது பார்த்து “என்னடா நீங்க ரெடியாகலயா??!!” என,

‘என் நேரம்..’ என்று தலையில் அடித்துக்கொண்டவன், தயாராகி வர, மறுபடியும் பிரியா, “டேய் சுதர்சா…” என்று அழைக்க,

“சொல்றா சூ னா பா னா…” என்றான் அவனும் வேண்டும் என்றே..

“என்னது??!!!!” என்று அவள் பார்க்கவும் “யம்மா சொல்லும்மா..” என்று பவ்யமாய் பம்மிட,

“இப்போவே சொல்லிட்டேன் டா சுதர்சா… அங்க வந்துட்டு இப்படி நட, அப்படி பேசு.. அதுன்னு எல்லாம் சொல்லக் கூடாது டா சுதர்சா…” என்று அவள் தான் பெயர் வைத்ததுபோல் பேச, அவனுக்கு எரிச்சல் ஆகிப்போனது.

“ஏய் என்னடி…??? என்னவோ பேரு வச்சது போல கூப்பிடுற.. ஒரு இடத்துக்கு நிம்மதியா கிளம்ப விடுறியா??? நான் சொன்னா அதுக்கு ரீசன் இருக்கும்னு புரிஞ்சுக்கோ..” என்று வழக்கமான கணவன் உரிமை எடுத்துப் பேச,

இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்தவள் “சோ.. உங்களுக்கு என்னைப் பார்த்தா பட்டிக்காடு மாதிரி தெரியுது.. அப்படிதானே??!!” என்றாள்.

கேட்கும்போது சண்முகப் பிரியாவின் குரல் கொஞ்சம் இறங்கியது போலிருக்க,  “நான் எப்போ அப்படி சொன்னேன்..??” என்றான் சுதர்சன்..

“நீங்க சொல்றதை பார்த்தா அப்படிதான் இருக்கு… நான் அந்த பார்ட்டி பிளேஸ்க்கு செட் ஆகமாட்டேன்னு உங்களுக்கு ஒரு தாட்.. அதான் இப்படியெல்லாம் சொல்றீங்க…” என்றவள் முகத்தை தூக்கி அமர்ந்தே விட்டாள்.

இப்படியான சிறு சிறு சண்டைகள் இருவருக்கும் வருவது சகஜம் தான்.. அதிலும் இங்கே வந்ததில் இருந்து அவ்வப்போது நிறைய.. சண்முகப் பிரியாவிற்கு பெங்களூரு போன்ற பெரிய நகர வாழ்வில் பொருத்திப் போவது கொஞ்சம் சிரமமாய் இருந்தது..

அதற்காக சுதர்சன் ஏதாவது அறிவுரை சொல்வதுபோல் சொல்ல, அது அவளுக்கு சுத்தமாய் பிடிப்பதும் இல்லை.. நாள் ஆகும் தானே.. எல்லாம் அதுவாய் பழகிட வேண்டும் என்று நினைத்தாள்.

என்னதான் விரும்பி திருமணம் செய்தாலும், இருவருக்கும் புரிதல் அப்படியொன்றும் நிறையவெல்லாம் இல்லைதானே.. வாழ்வின் ஆரம்பநிலை. ஆக சண்டைகளும் சமாதானங்களும் இருக்கத்தான் செய்தது. சண்முகப் பிரியா அமர்ந்தவள்,

‘போச்சுடா…’ என்று அப்போதும் பார்த்தவன் “டேய் குட்டிம்ம்மா..” என்று இழுத்தபடி அவளின் அருகே அமர,

“ஒன்னும் வேணாம் போங்க…” என்றாள் பட்டென்று..

“நீ வராம நான் மட்டும் எப்படி போறது??!!”

“ஓ..!! அப்போ நான் வராம போவீங்களா டா??!!” என்று பிரியா ஆரம்பிக்கவும்,

“ஆஆ!!!” என்று அவனாக கத்தியவன் “தெரியாம சொல்லிட்டேன் டி… ப்ளீஸ்… நீ மாமான்னே கூப்பிடு.. ஓகே வா.. அங்க வந்து நான் உன்னை ஒன்னும் சொல்லமாட்டேன்..” என,

‘அப்படி வா வழிக்கு..’ என்று பார்த்தவள் “ம்ம் அது….” என்றபடி அவனின் கன்னம் தொட்டு “வெறி குட்றா மாமா நீ…” என்றிட,

“அடியேய்…” என்று பல்லைக் கடித்தான்..

அவனுக்குத் தெரியும்தான்.. இவள் இப்படிதான் என்று.. ஆனாலும் மனதில் ஒரு பயம்.. அங்கே யாரும் இவளை எதுவும் நினைத்திட கூடாதே என்று.. ஆனால் சுதர்சனே ஆச்சர்யப் படும் வகையில் சண்முகப் பிரியா பார்ட்டிக்கு வந்திருந்தவர்களோடு ஒன்றிவிட, பார்வை அவ்வப்போது அவளின் பக்கம் தான் சென்றுவந்தது..

திரும்பி வருகையில் “என்னை சொல்லிட்டு நீங்கதான் அங்க திருதிருன்னு முழிச்சிட்டு இருந்தீங்க மாமா…” என்று சண்முகப் பிரியா சொல்ல,

“அதுக்கு பேரு முழிச்சதா??!!” என்றான்..

“ஆமா முழிச்சு முழிச்சு பார்த்தீங்க மாமா…” என்றவள் “எப்புடி நம்ம பெர்பார்மன்ஸ்…” என்று தலையை ஆட்டி சிரிக்க,

“ஹ்ம்ம் குருவிக்கூடுங்கிறதை ப்ரூப் பண்ணிட்ட போ..” என, நறுக்கென்று அவனின் தொடையில் கிள்ளிவிட்டாள் சண்முகப் பிரியா.

“அடிப்பாவி….!! ஒன்னு ஹேர் பின் வச்சு குத்துற.. இல்ல இப்படி கிள்ளுற.. இரு எங்கம்மாக்கிட்ட சொல்றேன்…” என்றதும் அவளோ அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.

அவள் சிரிப்பதை பார்த்தவனோ “ஓய்!!! என்ன சிரிப்பு… எங்கப்பாக்கு வேற பொண்ணு பார்த்திடுவேன்னு எங்கம்மாவை மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிருக்கேன்.. புரியுதா??!!” என்று சுதர்சன் சொல்ல,

“ஹா ஹா ஹா..” என்று அதற்கும் சத்தமாய் சிரித்தவள்,

“நம்ம  கல்யாணம் முடியுறதுக்குள்ளவே உங்களுக்கு நாக்கு தள்ளிடுச்சு…” என்று அதை அபிநயம் வேறு பிடித்துக் காட்டியவள், “இதுல உங்கப்பாக்கு வேற.. ஹா ஹா..” என்று சிரிக்க,

“பிசாசு…” என்று முணுமுணுத்தவனுக்கும் சிரிப்பு..

“ம்ம்… இப்படித்தான் சிரிச்ச முகமா லச்சணமா இருக்கணும்..” என்று அவனின் மூக்கைப் பிடித்து ஆட்ட,

“சும்மா இரு டி.. தும்மல் வந்திட போகுது..” என்று அவளின் கையை எடுத்து, தன் கையோடு கோர்த்துக்கொண்டான்.

“ம்ம் இப்படி கை புடிச்சிக்கிட்ட கார் எப்படி ஓட்டுவீங்களாம்…” என்று கேட்டாலும், அவளின் தலை தன்னால் அவனின் தோள் சாய,

“உன்னை பிடிச்சு என் வாழ்கையை ஓட்டிட்டு இருக்கேன் இதெல்லாம் பெருசா… சொல்லப்போனா இதுக்கெல்லாம் நீ, நான் என்ன சொன்னாலும் கேட்கணும்..” என்றான் வேண்டுமென்றே அவளைக் கிண்டல் செய்யும் பொருட்டு..

அவன் சொன்னது கேட்டு “ஓ!!! அப்படி வேற ஒரு நினைப்பா??? நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்க முடியாது.. வேணும்னா சுதர்சன் என்ற புருஷன்னு வீடு முன்னாடி எல்லாம் நோட்டீஸ் ஒட்டவா..??” என,

“ஆத்தாடி ஆள விடு..” என்று சுதர்சன் சொல்ல இப்படியே பேச்சு நீண்டாலும், அவர்களின் சிரிப்பும், சீண்டலும் வாழ்வு முழுமைக்கும் தொடரும் என்று இருவருமே உணர்ந்திருந்தனர்.

                                    நன்றி!!