நிலவு – 1

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

முழுமுதற்கடவுள் விநாயகனின் துதி கேட்டபடி வெண்மதி விளக்கேற்ற பூஜையை ஆரம்பித்தார் கலைவாணி. நடேசனின்மனமோபெரும் உவகையில் ஆழ்ந்தபடி பக்தியில் திளைத்திருந்தது.

பலநாள் கனவு இன்று நனவாகப்போகும் மகிழ்வு அவரின் முகத்தில் அப்பட்டமாய் ஜொலித்தது. எத்தனை போராட்டம் இதற்காக.

“அப்பா கற்பூர ஆரத்தி எடுத்துக்கோங்க…” என தன் முன் நின்ற வெண்மதியை கண்டு புன்னகையோடுகண்களில் ஒத்திக்கொண்டார்.

“நீபோய் தயாராகு மதி. இப்போஅவங்க வந்துருவாங்க…”என்றதும் தாயை மிக அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறு தலையசைப்போடு உள்ளே சென்று மறைந்தாள்.

“இது சரியா வருமாங்க? எனக்கு கொஞ்சம்யோசனையாவே இருக்கு…”

“பேசாத.நீ முதல்ல இப்படி பேசறதை நிறுத்து. எல்லாம் சரியா வரும். நடக்கும்…”

“என்னவோ சொல்றீங்க?…” என பெருமூச்சொன்றை வெளியேற்றி நகர்ந்தார்.

நடேசனுக்குமேகொஞ்சம் உதறல் தான். ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. உள்ளுக்குள் ஒளித்துவைத்தாலும் அவ்வப்போது முகம் காட்டிக்கொடுக்கத்தானே செய்கிறது.

நல்லமனைவியாக கலைவாணி அதை கண்டுகொள்ளஅந்த பதற்றமானதுஅவருக்கும்தொற்றிக்கொண்டது.

வெண்மதி அமைதியாக தன்னை தயார்ப்படுத்தி கொள்வதை கண்டு இன்னமும் வயிற்றில் புளியைகரைத்தது.

நேரம் நெருங்க நெருங்க வீதிக்கும்வாசலுக்குமாய் அவரின் கால்கள் அலைபாய கண்களோ எதிர்பார்ப்பில் விரிவதும் சுருங்குவதுமாய் இருந்தது.

“என்னங்க, ஒருவேளை சாயங்காலம் வரலாம்னு முடிவு செய்துட்டாங்களோ?…” என நடேசனின் காதை கடிக்கும் பொழுதே வெண்மதி அறையை விட்டு வெளியே வந்தாள்.

“அம்மா,இன்னும்எவ்வளோ நேரம் நான் இப்படி பட்டு புடவையிலேயே நிக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு என்னால முடியலை…” முகம் சுருக்கி இயம்பியவள் சமையலறைக்கு சென்று ப்ரிட்ஜிலிருந்த குளிர்ந்த நீரை பருகி,

“இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்?…” என,

“நீ ரூம்ல இரும்மா. நாங்க சொல்றோம்…” நடேசன் சொல்லவும் அவரை தாண்டி தன்னறைக்குள் சென்று மறைந்தாள்.

கலைவாணிக்கோ நடப்பது கனவா நிஜமா என்று நம்பமுடியாத பிரம்மையில் வியந்துதான் நின்றார்.

“என்னங்க இது அதிசயமா இருக்கு? இவ சம்மதிச்சதும் இல்லாம இவ்வளோ பொறுமையா வேற இருக்காளே?…” அதிசயித்துதான் சொன்னார்.

அவரும் காலையிலிருந்து வெண்மதியை கண்டும் காணாமல் பார்வையிட்டுக்கொண்டு தானே இருக்கிறார். இந்த நிமிஷம்வரை முகத்தில் ஒரு எரிச்சலோ, கோபமோ எதுவும் இல்லைஅவள் முகத்தில்.

ஒருவிதத்தில் அது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு புறம் பயம் மனதை கவ்வியது. இன்னும்வராதமாப்பிள்ளை வீட்டினரைஎண்ணிபடபடத்தார்.

“என்னவோ ஞானோதயம் வந்தது மாதிரி இவ ஒத்துக்கிட்ட நேரம் இப்படி செய்றாங்களே?, கொஞ்சமாச்சும் பொறுப்புன்னு இருக்கா? நேரமானா தகவல் சொல்லனும்ன்ற மரியாதை கூட தெரியாதவங்களா இருக்காங்களே?…”

“இப்பவே இவ்வளவு அலட்சியமா இருக்கறவங்க,இவங்க வீட்ல என் பொண்ணுஎப்படித்தான் காலம் தள்ள போறாளோ?…” என்னவோ திருமணமே நடந்து முடிந்துவிட்டதாக எண்ணி அவர்களை தாளித்துக்கொண்டிருந்தார்.

மனதில் நினைத்தது வாய் வரை வார்த்தைகளாக வந்துவிடுமோ? அது வெண்மதியின் காதுகளை எட்டிவிடுமோ என அஞ்சி வாய்க்கொரு பெரிய பூட்டை போட்டுக்கொண்டு கவனமாக மனத்திற்குள்ளேயே குமைந்தபடி மற்ற வேலைகளை கவனிப்பது போல பாசாங்கு செய்தார்.

அதுவும் வெண்மதியை கணக்கில் வைத்தே.

எங்கேவெண்ணைய் திரண்டு வரும் நேரம் தாழியை உடைந்த கதையாகிவிட கூடாதே என்பது அவரின் கவலை.மீண்டும்நடேசனின் அருகில் வந்து நிற்க,

“நான் இன்னொரு முறை அவங்களுக்கு போன் செஞ்சு பார்க்கறேன். இந்த தரகர் வேற போன் அட்டன் செய்யமாட்டேன்றான்…”

மெல்லிய முணுமுணுப்பும் சலிப்பும் தவறாமல் அவர் சொல்ல இவருக்கோ படபடவென அடித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரம் தாண்டியும் யாரும்வருவதை போல தெரியாததால் சோர்ந்து அமர்ந்திருக்க,

“அம்மா…” என வந்து நின்ற வெண்மதியை கண்டு திக்கென்று ஆனது இருவருக்கும்.

எதுவும் கோபமாக பேசி இதற்கு தான் சம்மதிக்கமாட்டேன்னு சொன்னேன். இனி இது போல எந்த ஏற்பாடும் செய்யக்கூடாது என சொல்லிவிடுவாளோ?என பயந்து பார்த்தனர்.

“எ..என்ன? என்ன மதி?…” என்றபடிகலை எழுந்தேவிட்டார்.பதட்டம்தெரியாதவாறுகேட்க முயன்றாலும் கண்களில் சுழன்ற கலவரப்பந்து அவருக்கு துரோகம் இழைத்து மகளிடம் காட்டிக்கொடுத்துவிட்டது.

அதை கண்டும் காணாமல் உள்வாங்கிக்கொண்ட வெண்மதியின் மனமோ ஒருவித நிம்மதியில் ஆழ்ந்தாலும் சுருக்கென்ற வலியும் தோன்றாமலில்லை.

“என்ன மதி? குடிக்க ஏதாவது வேணுமா?…” கலைவாணி கேட்க,

“ம்ம், என்ன? இல்லைம்மா. நான் கோவிலுக்கு போய்ட்டுவரலாம்னு இருக்கேன். பக்கத்துல தானே.அவங்க வந்தா எனக்கொரு போன் செய்ங்க. உடனே வந்திடறேன்…”

வெண்மதி சொல்லியதும் யோசனையாக நடேசனும், கலைவாணியும் பார்த்துக்கொண்டனர். கலைவாணி மறுப்பதற்குள்,

“நீ போய்ட்டுவாம்மா. நாங்க போன் செய்யறோம்…” என நடேசன் சொல்லியதும்தாயிடம் தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டாள் வெண்மதி.

நடேசன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார். காலையில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து ஒருவித இயலாமை மனநிலையில் குமைந்துகொண்டிருந்தார்.

கையில் இருந்த மொபைலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவரை கண்டு,

“நீங்க எதுக்காக அனுப்பிவச்சீங்க? திடீர்னு வந்துட்டாங்கன்னா என்ன பன்றது? ஏற்கனவே அரும்பாடுபட்டு அவளை சம்மதிக்க வச்சிருக்கோம். இடம் எப்பேர்ப்பட்ட இடம் தெரியுமா?…” கோபத்தில் கலைவாணி பொரிய,

“கொஞ்சம் வாயை மூடுறியா? உன் பேச்சை கேட்டுத்தான் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு. நானும் புத்தியில்லாம நடந்ததால எத்தனை கஷ்டங்கள்.அதுக்கான குற்ற உணர்வு என்னை சாகடிச்சுட்டு இருக்குது…”

நடேசனின்ஆக்ரோஷத்தில் முகம் வெளிற ஒதுங்கி நின்றாலும் கலைவாணிக்கும்கண்ணீர் கரைபுரண்டது.

“இப்படியெல்லாம் ஆகும்னுநான்நினைக்கலைங்க. எல்லோருக்கும் நல்லது எதுவோ அதை தான் நான் நினைச்சேன். நான் செஞ்சது எந்த இடத்துல தவறா போச்சுன்னு எனக்கு தெரியலையே…” என அவர் அழ ஆரம்பிக்க,

“ப்ச்உடனே அழுது சமாளிக்கிறதை நீ நிறுத்து கலை. என்னால இதையெல்லாம் கண்கொண்டு பார்க்கமுடியலை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என் பொண்ணு இப்படிஇருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு…”

“நீ நினைச்சதுக்கான தண்டனை இதுதாண்டான்னு ஒவ்வொரு நாளும் அவ என்னை சொல்லி சொல்லி காயப்படுத்துறது மாதிரியே இருக்கு. அவ என்னை பார்த்து உணர்ச்சியே இல்லாம சிரிக்கிறப்போ எல்லாம் என் நெஞ்சை கூறுபோட்டு அறுக்குது…”

இதயத்தை நீவிவிட்டுக்கொண்டே நடேசன் பேச பேச அவரருகே வந்து நின்ற கலைவாணி,

“வேண்டாங்க. இப்படி உங்க மனசுக்குள்ளயே போட்டு அழுத்தாதீங்க. அவதான் இப்ப கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளே? நீங்க கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்…” என நம்பிக்கையூட்ட,

“இல்லை கலை.மாப்பிள்ளை வீட்ல வரலை. அவங்களுக்கு விருப்பமில்லையாம். இப்பதான் தரகர் மெசேஜ் அனுப்பினான். அவனுக்கு அவசரமா வேற வேலை வந்துடுச்சாம். அதான் போன் எடுக்கலையாம். அதனாலதான் மதி கிளம்பறப்போ நான் தடுக்கலை…” என சொல்லி முடிக்க,

“என்ன சொல்றீங்க? ஐயோ கடவுளே? இது என்ன சோதனை? என் பொண்ணுக்கு எப்பதான் விடிவுகாலம் வரும்?…” எனசரிந்தமர்ந்து தலையிலடித்துக்கொண்டு அழ அவரின் தலையை ஆதரவாக கோதியபடி இருந்தார் நடேசன்.

—————————————————————–

“செம கூட்டம். இன்னைக்குஎன்ன விசேஷம் கோவில்ல?…” என கேட்டபடி சுட சுட பொங்கலும், புளியோதரையும் இரு கையிலும் ஏந்தியபடி வந்தமர்ந்த வெண்மதியை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி.

“இப்ப எதுக்கு முறைக்கிற?…” என சொல்லியபடி வாயில் புளியோதரையை திணிக்க,

“ஏன்னு உனக்கு தெரியாதாமா? நானும் எவ்வளோ நேரமா உன்னட்ட கேட்டுட்டே இருப்பேனாம்?…” ஒவ்வொரு வார்த்தையிலும் மிளகாய் நெடி தெறித்தது.

அவளின் கோபத்தை கண்டுகொள்ளாத வெண்மதி,“ஹப்பா என்ன காரம்? என்ன டேஸ்ட்?…” சில்லாகித்து சாப்பிட,

“மதி அக்கா, இந்தா பானகம். அம்மா குடுத்துட்டு வர சொல்லுச்சு…” இரண்டுதம்ளர்கள் நிறைய பானகத்தை வைக்க,

“தேங்க்ஸ்டாசின்னு…” என அவனின் கன்னம் கிள்ளி கொஞ்சி,

“பிரசாதம் வாங்கறப்போ இதை குடுக்கவே இல்லையே?…” அதிமுக்கிய சந்தேகமென கேட்க,

“அது தீந்து போய் ரொம்ப நேரமாவுது.அம்மா தான் பூசாரி சாமியாண்ட நீ வருவன்னு சொல்லி எடுத்தாந்துச்சு…” என்ற அந்த பத்து வயது சிறுவன்,

“அம்மா மார்க்கெட்டுக்கு கிளம்புது பூ எடுக்க. நான் கடைய பார்த்துக்கனும். அப்பால வரேன்க்கா…” சின்னு என்னும் சின்னச்சாமி கிளம்பிவிட அந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டாள் வெண்மதி.

“நீயும் எடுத்து குடியேண்டி. குருக்கள் பொண்ணு நீ. உனக்கு தோணுச்சா எனக்கு எடுத்து வைக்கனும்னு…”

“கடுப்பை கிளப்பாதே மதி. மாப்பிள்ளைவந்திருந்தாரே?ஓகே ஆகிடுச்சா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க?வந்தவங்க கிளம்பிட்டாங்களா? நீ ஏன் அதுக்குள்ளே கோவிலுக்கு வந்த?அதை எதையும் சொல்லாம நீபாட்டுக்கு பொங்கலும் புளியோதரையுமா மொக்கிட்டு இருக்க…” ஈஸ்வரிகொஞ்சமும் பொறுமையில்லாமல் கடுகென வெடிக்க,

“மாப்பிள்ளை வந்தாதான போறதுக்கு…” அசால்ட்டாய் சொல்லியபடி மிச்சம் மீதியையும் உண்டு முடித்தவள் எழுந்து சென்று கை கழுவி வரும் வரை அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் ஈஸ்வரி.

அவள் தலையில் இரண்டு குட்டு வைத்து மீண்டும் வந்தமர தலையை தடவியவண்ணம்,

“மதி, என்ன சொல்ற? கலவாணி சும்மாவா விட்டுச்சு உன்னை…”வெண்மதியின் முறைப்பில் நாக்கை கடித்தவள்,

“ஸாரி ஸாரி மதி. எனக்கு ஏன்தான் இப்படி வருதுன்னே தெரியலை. உங்கம்மாவை சட்டுன்னு இப்படிகூப்பிட்டுடறேன்…” முகத்தை பாவமாக வைத்து கெஞ்சும் தோழியை மேலும் முறைக்கமுடியாமல் சிரித்தவள்,

“இத மட்டும் அம்மா கேட்ருக்கனும். உன்னை தெருக்குள்ள அங்குட்டுமிங்குட்டும் நடக்க விட்ருக்காது. உன் காது ஜவ்வு கிழிஞ்சு போற அளவுக்கு துவைச்சு காயவச்சிடும். பார்த்துக்கோ…” என எச்சரிக்க ஈஸ்வரியின் முகம் பேயறைந்ததை போல ஆனது.

உண்மை தான். வெண்மதியும்ஈஸ்வரியும்பள்ளி கல்லூரி தோழிகள் மற்றுமல்லாது ஒரே மென்பொருள் நிறுவனத்தில்பணியாற்றுபவர்களும் கூட.

வெண்மதியின் இரண்டாம் வயதில் ஈஸ்வரி குடும்பம் குடியிருக்கும்அந்த வீதிக்கு குடிவந்தனர்.அவர்கள்வீட்டிற்குஇரு வீடுகள் தள்ளி ஈஸ்வரியின் வீடு.

அருகருகே வசிப்பதால் பரஸ்பரம்பழக்கமாகிநல்லகுடும்ப நண்பர்களாக இருந்தனர்.சிறுவயது முதலே ஈஸ்வரி கலைவாணியின் பெயரை கலவாணி என்றே இயம்ப முதலில் கண்டுகொள்ளாதகலைவாணி அதன்பின் பெரிதாய்அதட்ட தொடங்கினார்.

அதன் பின் எங்கு கண்டாலும் முறைக்கவும் ஈஸ்வரியோ பயத்தில்ஐயோ கலவாணி கலவாணி என கதறிக்கொண்டு அவளின் தாயிடம் தஞ்சம் புக இரு குடும்பங்களுக்குமிடையே சிறு சிறு பூசல்கள் சங்கடங்கள் என தொடங்கிஒருகட்டத்தில் ஈஸ்வரி வேண்டுமென்றே கலவாணி என அழைத்துவிட பெரும் சண்டையாகிவிட்டது.

ஆனாலும் நடேசனுக்கும் ஈஸ்வரியின் தந்தை சுப்ரமணியத்துக்கும் இடையில் எந்தவித வருத்தமும் இல்லாத நட்பு இருந்தது.

பெண்களின் சண்டை அவர்களுக்குள். அது தங்களை பாதிக்காத வண்ணம் தங்களின் நட்பை தொடர்ந்தனர்.அது வெண்மதி ஈஸ்வரியின் தோழமையை வலுப்படுத்தியது.

அதுதான் இன்றளவும் தொடர்கிறது.கலைவாணிக்கும்ஈஸ்வரியின் தாய் சம்பூரணத்திற்கும்ஈஸ்வரியை முன்னிட்டே சுத்தமாய் ஆகாமல் போனது. ஆனாலும் அவர்களின் கணவன்மார்களுக்காக பார்க்கும் இடத்தில் தலையசைத்துக்கொள்வர்.

ஏனோ மருமகள் மீது மாமியார்கொண்ட பகை போல ஈஸ்வரியை கண்டாலே ஆகாதெனும் கலைவாணியிடம் சுப்ரமணியத்திற்கு அடங்கி அமைதியாக சென்றுவிடுவார் சம்பூரணம்.

ஆனால் கலைவாணியோ ஈஸ்வரியை கண்ணால் காணவிடமாட்டார்.சின்னஞ்சிறுபெண்ணைவெறுப்பாய் பார்த்து கரித்துக்கொட்டும்அவரை நடேசன் எத்தனை சொல்லியும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்ன ப்ளாஷ்பேக்கா?…” என்ற வெண்மதியை முறைத்துப்பார்த்த ஈஸ்வரி,

“உனக்குஎன் நிலைமை கிண்டலாபோச்சுல?உன் அம்மாவை ஒருதடவையாச்சும் எதிர்த்து பேசறேனா இல்லையான்னு பாரு…” வழக்கம் போல சூளுரைத்துக்கொண்ட தோழியை வாஞ்சையுடன் கன்னம் தட்டினாள் வெண்மதி.

“அடடா, பேச்சு ட்ராக் மாறி எங்கையோ போகுது.சொல்லு. ஏன் அவங்க வரலை?…”

ஈஸ்வரியின் கேள்விக்குமர்மமாய் புன்னகை புரிந்த வெண்மதியை கண்டு அடிவயிறு கலங்கித்தான் போனது ஈஸ்வரிக்கு.

அப்புன்னகையில் எதையோ சாதித்துவிட்ட வெற்றி மட்டுமில்லாமல் அதையும் தாண்டிய ஒரு உணர்வு அவளின் கண்களில் அக்னிஎன கொழுந்துவிட்டு எரிந்தது.அது சொல்லிய செய்தி இன்னும் எதுவேண்டுமானாலும் செய்வேன் எனதை போல.

“இது சரியில்லை மதி. நீ பன்றது ரொம்ப தப்பு. இப்போ உனக்கு சரியா இருக்கிறது, நாள் ஆக ஆக தவறா போய்டும்.கோவில்ல வச்சு அச்சானியமா பேசக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனாலும் சொல்றேன். உன் அப்பாம்மா காலத்துக்கு பின்னால உனக்குன்னு ஒரு உறவு வேணும்.குடும்பம் வேணும்…”

“கடைசிவரை யாராலும் தனியா வாழ முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில நமக்கே நமக்குன்னு அன்பா பாசமா பார்த்துக்கறதுக்கு, நமக்குஆறுதல் சொல்றதுக்குன்னு யாராச்சும் வேணும். நம்மோட கஷ்டகாலத்துல தோள் சாஞ்சு இளைப்பாற ஒரு இணை கண்டிப்பா வேணும்…”

“யாரை பழிவாங்க உன்னையே நீ அழிச்சுக்கற?இல்லை யாருக்காக நீ இப்படி செய்யற? நீ நினைக்கலாம் அவங்களுக்கு நீ குடுக்கறதண்டனைன்னு. ஆனா உண்மை என்னன்னா உன் வாழ்க்கைக்கு நீயே வச்சுக்கற நெருப்பு இது…”

தாளமாட்டாமல் வழக்கம் போல வெண்மதிக்கு அறிவுரையை அள்ளிவிட அதையெல்லாம் ஒரு பெருட்டாக எடுத்தாள் இல்லை. வெண்மதியின் காதில் பேச்சுக்கள் மொத்தமும் விழுந்தது அவ்வளவே.

“நான் பேசிட்டே இருக்கேன், நீ என்னன்னா கல்லுமாதிரி உட்கார்ந்திட்டிருக்க?…” ஈஸ்வரியின் பேச்சு தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதை போல வெகுசாதாரணமாக பார்த்தாள் வெண்மதி.

“மதி நீ இன்னும் அவரை நினைச்சிட்டு இருக்கியோ?…” தயங்கித்தான் கேட்டாள் ஈஸ்வரி. ஆனாலும் வெண்மதியிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.

பல மாதங்களாக மனதினுள் குடைந்துகொண்டிருந்த கேள்வி தான். ஆனால் கேட்க அஞ்சியே வாயை திறக்காமல் இருந்தாள்.

இன்றோ தன் தோழி செய்துவைத்திருக்கும் காரியத்தை பார்க்க பார்க்க தாங்கமாட்டாமல்மேலும் உள்ளுக்குள்அடக்கமுடியாமல் என்னவாகினும் பரவாயில்லை என்னும் முடிவில்தான் கேட்டது.

ஆனால் வெண்மதியின் முகமதுதுடைத்துவைத்த கண்ணாடியை போன்று எந்தவித சலனமும் இன்றி பளிச்சென இருந்தது. ஈஸ்வரிக்கோ எதையோ தேடி தோற்ற உணர்வு மட்டுமே மிஞ்சியது.

“நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா? சில்க் சேரி, இந்த ஜ்வேல்ஸ்எல்லாம்ரொம்ப இரிட்டேட்டா இருக்கு. கொஞ்சம் ப்ரீயா இருக்கனும் எனக்கு…”

வெண்மதி எழுந்துகொள்ள தோழியை கண்டு இயலாமையோடு தானும் எழுந்தவள் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

“அப்பாட்ட சொல்லிட்டு போவோம் மதி…” என சொல்லி அம்மனின் சந்நிதிக்குள் நுழைய அவர் தீபாராதனையை முடித்து வெளியே வந்தார்.

“என்னம்மா கிளம்பிட்டீங்களா?…”

“ஆமாம்ப்பா.மதி வீட்டுக்கு போகனும்னு சொல்றா. நீங்க எப்போ வருவீங்க?…”

“நீ ஆத்துக்கு போ. நான் செத்த நாழி கழிச்சு நடை சாத்திட்டு வரேன்…” சுப்பிரமணி சொல்லிவிட,

“வரேன் மாமா…” வெண்மதியும் அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

“உனக்கு சுட்டுப்போட்டாலும் உங்க பாஷை ஏண்டி வரலை?…” என கேட்டவாறே நடக்க,

“உனக்கென்ன அதுல குறை வந்துச்சாம்?…” இன்னமும் ஈஸ்வரியால் கோபத்தை காட்டாமல் பேச இயலவில்லை.

“கொஞ்சமும் தப்புசெஞ்சிட்டோமேன்ற பீலிங் இல்லாம எப்படி பேசறா இவ? என உள்ளுக்குள் தாளித்தாள்.

வாசலில் இருந்த பூக்கடையில் சின்னு அமர்ந்திருக்க தன் செருப்பை மாட்டியபடி,

“போய்ட்டு வரேன்டா. அம்மாட்ட சொல்லிடு…” என்னும் பொழுதே அவளின் மொபைல் சிணுங்கியது.

எடுத்து பார்த்தவளின் முகம் யோசனையில் சுருங்க ஈஸ்வரி புரியாமல் பார்த்து பின்,

“ஏன் போனையே உத்து உத்து பார்த்திட்டிருக்க? எடுத்து பேசு…” எனவும்,

“ஹ்ம்…” என்றபடி அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ வெண்மதி, நான்ஹரிஹரன்…”

“…..”

“வெண்மதி லைன்ல இருக்கீங்களா?…”

“ஹ்ம் சொல்லுங்க இருக்கேன்…” என குரலை தழைத்துக்கொண்டு பேச பேசுவது யாரென தெரிந்துகொள்ள ஈஸ்வரிக்கு குறுகுறுப்புவந்தது. யாராக இருக்கும்? என யோசனையில் மூழ்க,

“ஓகே நாளைக்கு மீட் பண்ணலாம். சேம் காபி ஷாப் தான். பை…” என மொபைலை வைத்துவிட்டு திரும்ப ஈஸ்வரி வானத்தை பார்த்தபடி சிந்தனையில் இருந்தாள்.

“ஈஸு? என்னாச்சு உனக்கு? போலாமா வீட்டுக்கு…” என்றதும் தலையைஆட்டி ஈஸ்வரி அவளோடு நடக்க அவளின் வீடு வரும் வரை ஏதேதோ பேசிய வெண்மதி ஈஸ்வரியின் வீட்டின்முன் நின்றவள்,

“இன்னும் எத்தனை நாள் லீவ் ல இருக்க?…”

“ஈவ்னிங்அவர் வரார்.நாளைக்குஎன்னை அழைச்சிட்டு போக. அடுத்து சாட்டர்டே, சண்டே.அதனாலமண்டே வருவேன்…”

“ஓகே உடம்பை பார்த்துக்கோ. நாளைக்கு உன் ஹஸ்பன்ட் வந்திருக்கறப்போ என்னால வரமுடியாது. உன் கலவாணி அனுப்பவே மாட்டாங்க.நீயும் அவரோட வால் பிடிச்சாப்ல கிளம்பிடுவ. மண்டேஆபீஸ்ல தான் பார்க்கமுடியும்…”

வெண்மதி சொல்லசொல்ல அவளையே பார்த்திருந்த ஈஸ்வரியின் மனதில் அமிழ்ந்த கோபம் சுறுசுறுவெனபொங்கியது.

“இவளும் வாழாம, வாழ வைக்க நினைக்கிறவங்களையும் கஷ்டபடுத்தி என்னத்தைத்தான்சாதிக்க போறாளோ?…”

“பிடிவாதக்காரி, இந்த வறட்டு பிடிவாதம் மட்டும் இல்லைனா இந்நேரம் இவளும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா இருந்திருப்பா….” நினைக்கையில் கண்கள் கலங்கியது.

ஈஸ்வரியின் எண்ணம் புரிந்ததை போல அவள் தோள் அணைத்து கன்னம் பிடித்தவள்,

“இப்பவும் நான் ரொம்ப சந்தோஷமா தான்இருக்கேன். அதை இன்னும் டபுள் ஆக்கறதை போல இப்போஉன் வயித்துல குட்டி ஈஸ்ஒன்னு வந்திருக்கிறதை தெரிஞ்சு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதை விட என்ன வேணும் என் மக்கு ஈஸ்க்கு?…”அவளின்கண்களை தாண்டியகண்ணீரை துடைத்த வெண்மதி,

“இன்னைக்கு மாமிக்கிட்ட எனக்கு பெரிய மண்டகப்படி வாங்கிக்குடுக்கனும்னு ப்ளான் போல? உதை வாங்குவ பார்த்துக்கோ. போய் முதல்ல முகத்தை கழுவிட்டு ப்ரெஷ்ஜூஸ் குடி…” எனஉண்மையாகவேமிரட்டி,

“அப்பத்தான் ஈவ்னிங் உன் ஹஸ்பன்ட் வரப்ப ப்ரெஷா இருப்ப. இப்படி அழுது வடிஞ்ச முகமா இருந்தா அங்க ரொமான்ஸ்க்கு வேலை இருக்காதும்மா…”

கண்ணடித்து வெண்மதி சொல்லியதும் கன்னங்கள் சிவக்க அவளின் தோளில் அடித்தவள்,

“உன் வாய் இருக்கே? வாய்லையே வாய்க்கால வெட்டிடுவ. போடி…” என்றதும்,

“ஈஸ்வரி, ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம உள்ளே வா…” சம்பூரணம் உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

“ஆஹ், ம்மா. இதோ…”என்றுவிட்டுவெண்மதியிடம் திரும்பி,

“நாளைக்கு நீயும் லீவ் போட்டேன். நான் வேணும்னா அவரை நாளைக்கு வர சொல்றேன். நாம எங்கயாச்சும் வெளில போகலாம்…”

“வேற வேலை இல்லை. போவியா. ஏற்கனவேநம்மஹெட் ஈட்டிங் மை ஹெட்.ஆளை விடும்மா…” என சிரித்தபடி தன் வீடுநோக்கி சென்ற வெண்மதியின் விழிகள் ஈஸ்வரியின் பாசத்தில் கசிந்திருந்தது.

நீ இன்னும் அவரை நினைச்சிட்டு இருக்கியா?என்ற ஈஸ்வரியின் கேள்வி வீடு நுழையும் வரை அவளின் காதுகளில் எதிரொலிக்க இதயம் அதிர உள்ளே நுழைந்தாள்.

வெண்மதியிடம் என்ன பதில் சொல்வது என தயங்கி அடுக்களைக்குள் நின்றுகொண்டார் கலைவாணி. ஆனாலும் அவரின் பார்வை வட்டத்திற்குள் வெண்மதி.

வரவேற்பறையை தாண்டிக்கொண்டு தன்னறைக்குள் நுழையவிருக்க,

“வெண்ணிலா ஸாரி வெண்மதி…”

உயிர்வரை பற்றி எரியும் குரல். குரல்வளையை பிடித்து நெரிக்கும் குரல்.நெஞ்சை கசக்கி பிழியும்குரல். தூக்கத்தை காவு கேட்கும் குரல்.பிரிவின் துயர் தொண்டையடைக்க ஓவென கதறச்சொல்லி தூண்டும் குரல்.

ஆம். இப்படியாக தான் அவனின் குரலை தரம் பிரித்து வைத்திருக்கிறாள் வெண்மதி.

இதே குரல் தான் அவளின் வாழ்நாளை இனிக்க வைக்கிறது.இதே குரல் தான் அவளை நித்தமும்உண்டு உறங்க வைக்கிறது. உறக்கத்தில் தாலாட்டுகிறது.இதயத்தை மயிலிறகென வருடவும் செய்கிறது.

அவனின்குரல்வழியே தன் பெயரை கேட்ட பொழுதுகளின் ஞாபகத்தில் தான் ஒவ்வொரு நாளையும் இயல்பாக கடக்கமுடிகிறது.

இவளின் அன்றாட உணர்வு போராட்டங்கள் அவனுக்கும் இருக்குமா?

 

வளரும்…