Advertisement

மின்னல் – 8

              அனைத்தும் நடந்து முடிந்தது ரத்தினசாமி கண் முன்னாடியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று கற்பனையில் கூட நினைத்திறாதவருக்கு நிஜமாய் நடந்தே முடிந்துவிட்ட இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

துவாரகாவை உற்றுப்பார்த்தார். அவள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.

முகத்தில் பயத்தையும் தாண்டிய ஒருவித களை திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கே  உரிய பூரிப்பு சிறுபுள்ளிபோல் இழைந்துகொண்டிருக்கிறதோ என்னும் வகையில் லேசான வெட்கம் அவள் முகத்தை அழகாக கட்டியது.

பார்க்க பார்க்க நெஞ்சத்தில் நெருப்பள்ளி கொட்டியதை போல உணர்ந்தவர்,

‘சந்தோஷமாவா இருக்க? இன்னைக்கே உன்னை இங்கிருந்து ஓட ஓட விரட்டறேன். நீயா என் பையனை விட்டு அலறி அடிச்சு ஓட வைக்கல நான் ரத்தினசாமி இல்லை.’ என சூளுரைத்துகொண்டவர் ஓரமாக ஒதுங்கி அறைப்பக்கம் வந்து மொபைலை எடுத்தார்.

“ஹலோ, மாணிக்கம். நான்தான்யா பேசறேன். ஹ்ம்ம் ஆமா, இன்னைக்கே முடிச்சிடனும். இன்னும் ஒருமணி நேரத்துல எனக்கு அந்த தகவல் வரனும்…”  என பேசி வைத்துவிட்டு திரும்ப அங்கே பத்மினி பேயறைந்த முகத்தோடு நின்றிருந்தார்.

ஒருநிமிடம் அதிர்ந்தாலும் சுதாரித்துக்கொண்ட ரத்தினசாமி அலட்சியமாய் அவரை பார்க்க,

“தப்பு பன்றீங்க நீங்க. வேண்டாம்ங்க. செஞ்ச பாவம் எல்லாம் போதும். நம்ம பையனுக்காக பாருங்க. அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. அவன் சந்தோஷத்தை தாண்டி நமக்கு வேற என்ன வேணும்?…”

மன்றாடும் குரலில் பத்மனி பேச பேச காதுகொடுத்து கேட்காததை போல வேறெங்கோ பார்த்து நின்றார்.

“நீங்க துவாரகாவை ஏன் உங்க தங்கச்சி புருஷனோட பொண்ணா பார்க்கறீங்க? யாரோ ஒரு தெரியாத பொண்ணா நினைச்சுக்கோங்க…” என சொல்லிய னோடு ரத்தினசாமியின் கை பத்மினியின் குரல்வளையை நெரித்தது.

“ஏற்கனவே கொலகாண்டுல இருக்கேன். யார்க்கு யார் பொண்டாட்டி. அதிபன் கையாள தாலி வாங்கிட்டா அவ நம்ம வீட்டு மருமகளா ஆகிடுவாளா? அதுக்கு ஒரு தகுதி வேண்டாம்…” என்றவர்,

“அவ யாராவா இருந்தாலும் அகிலா பெத்த பொண்ணுதானே? அவ தகுதிக்கு என் தங்கச்சி புருஷனோட மகள்ன்னு உரிமையா சொல்ற? எவ்வளவு துணிச்சல் இருக்கனும் உனக்கு…” அவரின் கையிலிருந்து தன்னை போராடி காத்துக்கொண்ட பத்மினி,

“நீங்க என்ன சொன்னாலும் நடந்ததை மாத்த முடியாது. இப்ப அவ நம்ம வீட்டு மருமக. என் பிள்ளைக்கு மனைவி. இதை மாத்த முடியுமா?…”

“மாத்திக்காட்டறேன். இன்னைக்கே அவளே இந்த குடும்பம் வேண்டாம், அதிபன் வேண்டாம்னு கதறிட்டு போறாளா இல்லையான்னு பார்…” அவர் சவாலாய் சொல்ல அவரின் மொபைலும் இசைத்தது.

“சொல்லு மாணிக்கம், பார்த்தாச்சா?…” என கேட்க மறுமுனை,

“ஐயா, மன்னிக்கனும். நம்ம அதிபன் ஐயா அந்தம்மாவை வேற எங்கையோ மாத்திட்டாருபோல. நேத்தே இங்க இருந்து டிசார்ஜ் பண்ணிட்டாங்க…”

“அறிவுகெட்டவனே கதையா சொல்லிட்டு இருங்க. அங்க அவளுக்கு பண்ணையம் பார்த்தவங்களை இழுத்துப்போட்டு நாலு மிதி மிதி. தன்னால உண்மையை சொல்லுவாங்க…” ஆத்திரத்தில் கத்த,

“நீங்க ஒரு சோலி குடுத்து அத முழுசா விசாரிக்காம இருப்பேனாங்க ஐயா. எல்லாம் கேட்டாச்சுங்க. ஒன்னும் தேறலை…” என கைவிரிக்க ரத்தினசாமியின் கோபம் பன்மடங்காய் பெருகியது.

“ஐயா நம்ம அதிபன் ஐயா என்க அந்தம்மாவை மறைச்சு வச்சுருக்கார்னு கண்டிப்பா தேடி கண்டுபிடிச்சடறேன். நீங்க வெசனப்படாதீங்க…” ரத்தின சாமி கேட்காததற்கும் பதிலளித்து வைத்துவிட சுவற்றில் சாய்ந்து நின்று தலையில் கை வைத்துக்கொண்டார்.

அனைத்தும் பார்த்துக்கொண்டிருந்த பத்மினிக்கு ஆற்றாமையும் சந்தோஷமும் ஒருங்கே பொங்கியது.

அகிலாவை மகன் பாதுகாத்துவிட்டான் என்கிற சந்தோஷமும், மகனை இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாரே என்கிற ஆற்றாமையும் அவரை பந்தாட ரத்தினசாமியின் முகத்தை பார்த்து,

“ஒரே விஷயம் தான் இப்ப சொல்லனும் உங்கள்ட்ட…” என்றவர் ரத்தினசாமி நிமிர்ந்து என்னவென பார்த்ததும்,

“மினிஸ்டர் வீட்டு கல்யாணம், முதலமைச்சர், முக்கிய பிரமுகர்கள் வருகைன்னு இருக்கிற இத்தனை பெரிய திருமண ஏற்பாட்டில் யார் என்ன பேசுவாங்களோ, குடும்பத்துக்கு கெட்டபெயர் வந்துடுமேன்னு சமரசம் ஆகாம தான் நினைச்சதை பிசகில்லாம நடத்திக்க தெரிஞ்ச உங்க பையன் உங்களோட அடுத்த மூவ் என்னனு தெரியாமலா இருப்பான்…” என சொல்லி,

“யாரை எப்போ எப்படி ஹேண்டில் பண்ணனும்னு அவ நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கான். நடந்த கல்யாணத்தால உங்களோட மொத்த கோவமும் அகிலா பக்கம் தான் திரும்புனு நல்லாவே கெஸ் பண்ணி அவரை காப்பாத்திட்டான். நான் போய் பார்த்ததுக்கே அந்த பேச்சு பேசினீங்க. இப்போ என்ன பண்ண போறீங்க?…”

பத்மினியின் கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை சரியான பாதையில் யோசிக்க வைக்காமல் அவருக்குள் எரிந்துகொண்டிருந்த தீயை வளர்த்துக்கொண்டிருந்தது.

அவருக்கு தெரியவில்லை ராஜாங்கத்தின் வீடுகளில் ஒன்றில் தான் அகிலா பாதுகாப்பாக மருத்துவர்கள் கவனிப்பில் இருக்கிறார் என்பது. ஏனோ ரத்தினசாமிக்கு ராஜாங்கத்தின் மேல் எண்ணம் வரவே இல்லை.

தன் மகன் தான் வேறெங்கேனும் ஒளித்துவைத்திருக்க வேண்டும் என நினைத்து அப்படியே தேட நினைத்திருந்தார்.

“இப்போவாவது கோபத்தை விட்டுட்டு நடந்ததை ஏத்துக்க முயற்சி பண்ணுங்க. பெத்தவங்க பண்ணினதுக்கு அந்த பொண்ணு எந்த வகையிலையும் பாதிக்கப்படகூடாது. நம்ம வீட்லையும் இன்னொரு பொண்ணு இருக்கா. ஸ்வேதா…”

“பத்மினி…” என கத்த,

“உண்மையை சொன்னேங்க. இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு அந்த பொண்ணு இனியாவது நல்லா இருக்கனும். அவ சந்தோஷமா இருந்தா என் பிள்ளையும் சந்தோஷமா இருப்பான்…”

“எப்ப இருந்து மருமக பாசம். கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அஷ்மிதா தான் மருமகன்னு கொண்டாடிட்டு இருந்த. இப்ப என்ன புதுசா வந்தவ மேல?…” எள்ளலாய் கேட்க,

“இப்பவும் அஷ்மிதா மேல பாசம் குறையளைங்க. என் பையனை அவ நல்லா புரிஞ்சு வச்சிருக்கா, அவனுக்கும் அவளை பிடிக்கும்ன்னு தான் அவளை மருமகளா கொண்டுவரனும்னு நான் ஆசைப்பட்டேன்…”

“இன்னைக்கு தன் எதிர்காலத்தை பத்தி கவலை இல்லாம என் மகனோட மனசை புரிஞ்சு அவன் சந்தோஷத்துக்காம முகம் மாறாம முழுமனசா அவனோட காதலை ஏத்துக்கிட்டு அந்த பொண்ணோட அவனை சேர்த்து வச்சு பார்க்கறா. ஒரு ப்ரெண்டா அவ இவ்வளவு செய்யும் பொழுது என் பையன் அவன். என் மகன் அவனுக்காக நான் துவாரகாவை ஏத்துக்க மாட்டேனா?…”

பத்மினி பேச பேச அவரையே வெறித்தபடி நின்றிருந்தார் ரத்தினசாமி. மனைவியும் மகன் பக்கம் சேர்ந்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டவர்,

“எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கறேன்…” என்று கர்ஜனை குரலில் உறுமிவிட்டு சென்றுவிட பத்மினிக்கு அழுகை வரும் போல் ஆனது.

எங்கே துவாரகாவை துன்புறுத்தி அது அதிபனை பாதிக்குமோ என சஞ்சலம் கொள்ள ஆரம்பித்தார்.

மணமேடைக்கு வந்தவர் தன் மனக்குமுறல்களை வெளிக்காட்டிகொள்ளாமல் வந்தவர்களை வரவேற்று நல்லவிதமாக பேசிக்கொண்டிருந்தார்.

என்னதான் உதட்டில் ஒட்டவைக்கப்பட்ட புன்னகை இருந்தாலும் உள்ளுக்குள் அவரின் நயவஞ்சகம் விழித்தபடியே இருந்தது. ஒரு அரசியல் வாதியாய் புகைத்தலை காட்டாமல் புன்னகையை கொடுத்து நிற்க அவரின் அனுபவம் நன்றாகவே கைகொடுத்தது.

அது மற்றவர்களுக்கு புரியாவிட்டாலும் அதிபனுக்கும், பத்மினிக்கும் நன்றாகவே புரிந்தது. நேரம் செல்ல செல்ல கூட்டம் கலைந்து செல்ல கடைசி வரை ரத்தினசாமி மகனின் அருகில் கூட வந்து நிற்கவில்லை.

ஆசீர்வாதம் செய்வதை கூட நாசூக்காய் எவரும் உணராத வண்ணம் தவிர்த்து முக்கியஸ்தர்களை கவனிக்கிறேன் போர்வையில் தன்னை மறைத்துகொண்டார்.

துவாரகாவின் அருகில் அஷ்மிதாவும் சந்தியாவும் மட்டுமே இருந்தனர். சந்தியா கூட ஓரிரு வார்த்தைகள் துவாரகாவிடம் பேசினாள். அவளிடம் கூட பேசவே அத்தனை தயக்கம் காட்டினாள் துவாரகா.

சந்தியா ஏதாவது கேட்டால் அஷ்மிதாவின் முகம் பார்க்க, அதிரூபனின் முகம் பார்க்கவென பார்த்து அவர்கள் தலையசைத்ததும் பதில் சொல்வதுமாய் இருக்க இதை கண்டு சந்தியாவிற்கு கோபம் கூட வரவில்லை.

கவலையாய் போயிற்று. தன்னிடம் பேசவே இத்தனை யோசிக்கும் பெண்.

எப்படி தன் வீட்டில் அனைவரின் மத்தியில் இயல்பாய் வளையவருவாள்? என்ற எண்ணம் தலைதூக்க அதிரூபனை பார்த்தாள்.

அவனும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்னும் விதமாய் புன்னகைக்க ஒரு பெருமூச்சுடன் இன்னமும் துவாரகாவிடம் அதிகமாய் பேச்சுகொடுக்க ஆரம்பித்தாள் சந்தியா.

சந்தியாவின் கணவன் ஹர்ஷதிற்கு எதுவும் புரியவில்லை என்றாலும் மனைவியின் அனுசரணை துவாரகாவின் மேல் இருப்பதை கண்டு பொறுமையாக இருந்தான்.

மதிய நேரம் தாண்டவும் தான் ரத்தினசாமிக்கு தன் தங்கையும், மாப்பிள்ளையும் இங்கில்லை என்பது புரியதொடங்கியது. சங்கரனையும் காணவில்லை. போன் செய்தாலும் யாரும் எடுக்கவில்லை என்றதுமே பதறிப்போனார்.

வி ஐ பிகள் அனைவரும் வந்து சென்றுவிட்டதால் நெருங்கிய சொந்தங்கள் என குறைவானவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். பத்மினியை அழைத்து கேட்க அவருக்கும் எதுவும் தெரியவில்லை. அதில் வெகுண்டு போனவர்,

“என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க? என் தங்கச்சியை காணோம்னு கேட்டா தெரியாதுன்னா கையை விரிக்கிற? புது சொந்தம் வரவும் அந்தளவுக்கு இளக்காரமா போய்ட்டாளா என் தங்கச்சி?…” என ஏகவசனத்தில் பேச பதறிப்போனார் பத்மினி.

“சத்தியமாவே நான் அப்படி நினைக்கலைங்க. நான் வந்தவங்களை கவனிச்சுட்டு இருந்தேன். பூரணி இங்க தான் இருந்தா…” கண்ணீருடன் பத்மினி பேச கொஞ்சமும் இரங்கவில்லை ரத்தினசாமிக்கு.

“வந்தவங்களை கவனிக்க தான் நாங்க இருக்கோம்ல. ஊரே கூடி இருந்தாலும் உன் வெளிய என் தங்கச்சியை கவனிக்கிறது தானே? இங்க நடந்த கூத்துக்கு அவ மனசு எந்தளவுக்கு உடைஞ்சு போய்ருக்கும். அவளை பார்க்கிறதை விட்டுட்டு உனக்கு என்ன வேற வேலை?…”

உண்மையில் பத்மினியும் உடைந்துதான் போனார் அந்த நேரத்தில். இத்தனை வருடமாக அன்னபூரணியை தான் எவ்வாறு கவனித்தோம், அவருக்கு எப்படி முக்கியத்துவம் குடுத்தோம் என்பதை எல்லாம் சடுதியில் மறந்துவிட்டு இப்படி பேசுகிறாரே என வெதும்பியபடி கண்ணீரோடு கணவனை பார்த்தார்.

இவரை பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாமல் தங்கையை தேடி ரத்தினசாமி நகர்ந்துவிட பத்மினியுமே அவரின் பின்னால் ஓடினார் அன்னபூரணியை தேடி. அதற்குள் அர்னவ்விடம் இருந்து போன் வர,

“எங்கடா போய் தொலைஞ்சீங்க? எங்கலாம் தேட. உன் அத்தையை காணோம்டா…” என அவனிடம் பாய,

“பெரியப்பா, நீங்க கவலைபடாதீங்க. அத்தையும் மாமாவையும் கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்திருக்கோம். பதட்டபடற அளவுக்கு ஒண்ணுமில்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்களே வீட்டுக்கு கிளம்பிடுவோம்….” என்றதும்,

“ஓஹ் என்னிடம் சொல்லாம கிளம்பற அளவுக்கு எல்லாரும் பெரியாளாகிட்டீங்க இல்லையா? எந்த ஹாஸ்பிடல்?…”

“இல்லை பெரியப்பா, நாங்க பார்த்துக்கறோம். நீங்க அங்க வந்தவங்களை…”

“நிறுத்தறியா, எந்த ஹாஸ்பிட்டல்ன்னு கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லனும். நானும் சங்கரனும் புறப்பட்டு வரோம்…”

“அது வந்து பெரியப்பா, அப்பா இங்கதான் இருக்காங்க…” தயக்கமாய் சொல்ல,

“ஓஹ், இன்னைக்கு இந்த அண்ணன் வேண்டாமா போய்ட்டேனா எல்லாருக்கும். இருக்கட்டும்டா. நீங்க அப்படியே இருங்க. ஆனா என்னால அப்படி இருக்க முடியாது. எனக்கு நீங்க எல்லாரும் வேணும்டா. என்ன செய்ய?…”

கண்கலங்க ரத்தினசாமி பேச பேச பத்மினியும் அழுதுவிட்டார். அனைவரும் தன்னை ஒதுக்கிவிட்டதாக மருக தொடங்கிவிட்டார் ரத்தினசாமி.

போனை வைத்துவிட்டு மனைவியை பார்த்தவர்,

“பாரு பத்மி, ஒரு உறவு வருது. ஏத்துக்கங்கன்னு  நீ சொன்ன. ஆனா அதனாலையே இருந்த உறவும் பிரிய ஆரம்பிச்சுடுச்சுமா. என்கிட்டே சொல்லாம ஹாஸ்பிடல் போய்ருக்காங்க. அந்தளவுக்கா என் தங்கச்சிக்கு என் மேல கோவம்? ஆனா அப்படியே விட்டுட முடியுமா? அவ கோபபட்டா படட்டும். அந்த உரிமை அவளுக்கு இருக்கு…” என புலம்ப,

“நீங்க கவலைபடாதீங்க. வாங்க நாம ஹாஸ்பிடல் போவோம்…” என வெளியில் அழைத்துவர ரத்தினசாமி மேடையில் அனைவரிடமும் புன்னகை முகமாக பேசிக்கொண்டிருப்பதை விழி அகற்றாது ஒரு நொடி பார்த்தவர்,

‘அதிபா, என் மகன் அதிபன் முகத்தில் எத்தனை சந்தோஷம்?’ என மனதிற்குள்ளேயே சொல்லிகொண்டவர் பத்மினியிடம் திரும்பி,

“நான் போய்ட்டு வந்திடறேன் பத்மி. நீ இங்க இருமா…” என சொல்ல,

“இருக்கட்டுங்க. அதுதான் அஷ்மிதா அப்பா இருக்காரே. சந்தியாவும், மாப்பிள்ளையும் கூட இருக்காங்க. போய்ட்டு சீக்கிரம் வந்திடலாம். நான் சொல்லிட்டு வந்திடறேன்…”

“இல்ல பத்மி, என்னதா ராஜாங்கம் இருந்தாலும் பெத்தவங்க நாம இல்லைனா அவன் தனிச்சு போய்டுவான். நானும் என்னனு பார்த்துட்டு வந்திடறேன்…” என்றவரை ஆச்சர்யமாய் பார்க்க,

“இது என் பிள்ளைக்காக மட்டுமே. அவன் முகத்தில இருக்கிற சிரிப்பு எப்பவும் குறைய கூடாது. அவளை எப்ப எப்படி அவன்ட்ட இருந்து விலக்கி துரத்தி அடிக்கனும்னு எனக்கு தெரியும். எந்த சூழ்நிலையிலையும் அவளை ஒருக்காலும் ஏத்துக்க மாட்டேன். ஆனா இப்ப இந்த நேரத்துல நாம அவனுக்கு இருக்கனும்…”

“குடும்பத்துக்குள்ள வந்த உடனே என் தங்கச்சி வாழ்க்கையில பிரச்சனையை உண்டுபண்ணி அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பின இவளை நான் மன்னிக்கவே மாட்டேன்…” துவாரகாவை வஞ்சத்துடன் பார்த்துக்கொண்டே சென்றுவிட்டார்.

அவரின் பல்வேறு பரிமாணத்தில் பத்மினி தான் திகைத்து நின்றார். அன்னபூரணியின் மேல் அவர் கொண்ட அதிகப்படியான ப்ரியம் ஒன்றே இப்படியெல்லாம் அவரை ஆட்டிப்படைக்கிறது.

ஆனால் தங்கை பாசத்தையும் மிஞ்சும் அளவிற்கு மகன் மேல் உயிரையே வைத்திருப்பவர். அவனுக்காகவேணும் கண்டிப்பாக துவாரகாவை ஏற்றுகொள்வார் என நம்பினார் பத்மினி.

துவாரகா மட்டும் அகிலாவின் மகளாக இல்லாம இருந்தால் மகனிற்கு பிடித்த பெண் என்பதாலேயே இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட அவளை கொண்டாடியிருப்பார் ரத்தினசாமி.

அதற்குள் எத்தனை எத்தனை அக்னிகுண்டத்தில் துவாரகா மூழ்கி எழ வேண்டுமோ?

மேடைக்கு வந்தவர் அஷ்மிதாவிடம் வந்து நடந்ததை சொல்லிவிட்டு மணமக்களை சாப்பிட அழைத்துசெல்ல சொன்னவர் மற்றவர்களை பார்க்க சென்றார்.

அங்கே இடிந்துபோய் இருந்த விஷாலை சந்தோஷ் தான் தேற்றி வேலைகளில் ஈடுபடுத்தினான். அவர்களுக்கும் அன்னபூரணி ஹாஸ்பிடல் சென்ற விஷயம் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

———————————————————-

ஹாஸ்பிடலுக்கு நுழைந்தவர் அன்னபூரணி இருந்த அறைக்குள் நுழைய வேகமாய் அவரை வந்து கட்டிக்கொண்டாள் ஸ்வேதா. அவளை அரவணைத்துக்கொண்டவர்,

“அதான் மாமா வந்துட்டேன்ல. அழக்கூடாது பப்புக்குட்டி. பயப்படாதடா…” என அவளுக்கு சமாதானம் சொன்னாலும் பார்வை தன் தங்கையையே வட்டமிட்டது.

அங்கிருந்த சேரில் சோக சித்திரமென அமர்ந்திருந்தவர் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த வைத்தியநாதனையே பார்த்தபடி இருந்தார்.

அர்னவும் சங்கரனும் ஓரமாக நின்றுகொண்டிருந்தனர். ஸ்வேதாவை அர்னவிடம் ஒப்படைத்துவிட்டு தங்கையை நெருங்கி அவரின் தோளில் கைவைக்க அப்போதுதான் ரத்தினசாமியின் வரவை உணர்ந்து பார்த்தார்.

“அண்ணா, என்ன நீ இங்க எப்படி?…” என கேட்டு அண்ணனின் கலங்கிய கண்களை கண்டதும்,

“பயப்பட ஒன்னும் இல்லண்ணா. பிபி கூடிருச்சு. அதுதான் ஹாஸ்பிடல் வந்தோம். இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு போய்டலாம்னு சொல்லி இருக்காங்க. கல்யாண வேலைல உன்னை சங்கடப்படுத்த வேண்டாமேன்னு தான் நாங்க கிளம்பினோம்…”

“அப்ப எனக்கு முக்கியமா ஏதாவது வேலை இருக்குனா என்னைவிட்டுட்டு போய்டுவியாம்மா?…” சிறுபிள்ளை போல் கேட்டவரிடம் உடைந்துபோய் அழ ஆரம்பித்தார் அன்னபூரணி.

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? பூரணி நம்மை விட்டு எங்க போய்டும். அழாதீங்க அண்ணே…” சங்கரனும் வர,

“நீயும் தானடா என்கிட்டே சொல்லாம வந்துட்ட. அப்பா நான் வேண்டாம்னு தானே அர்த்தம்…” என கேட்க,

“ச்சே ச்சே என்ன பேச்சு இதெல்லாம். இன்னைக்கு நம்ம அதியோட கல்யாணம். ஏற்கனவே நீங்க வருத்தத்துல இருப்பீங்க. அதை வெளியாட்களிடம் காண்பிக்க முடியுமா? வந்தவங்களை கவனிச்சு தானே ஆகனும்…” என்ற பூரணி,

“அதுவும் இல்லாம ஏற்கனவே அதி கோபத்துல இருக்கான். இப்ப இவருக்கு முடியலைன்னு எல்லார்ட்டையும் சொல்லி அதை அவன் இவர் நடிக்கிறார்ன்னு நினைச்சு கோபபட்டுட்டா கஷ்டமாகிடும் அண்ணா. என்னால தாங்கமுடியாது…”

“நீ ஏன்மா அப்படியெல்லாம் நினைக்கிற. நம்ம அதிபன். அப்படி எல்லாம் பேசமாட்டான். உனக்கு தெரியாதா அவனை பத்தி? சின்ன பையன்…”

மகனுக்கு ஏந்துகொண்டு பேசும் தன் அண்ணனை ஆழ்ந்துபார்த்தவர் மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.

‘துவாரகாவை இவர் நிச்சயம் ஏற்றுகொள்வார். அந்த நம்பிக்கை வந்துவிட்டது.’ என நினைத்துக்கொண்டவர்,

“சரிங்கண்ணா நீங்க மண்டபத்துக்கு கிளம்புங்க. பிள்ளைங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வரனும்ல. நாங்க இங்க இருந்தே வீட்டுக்கு வந்திடறோம். அங்கயும் இங்கயும் இவரை அலைகழிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்…”

“உனக்கு என்ன தோணுதோ அப்படியே செய்மா. ஆனா எதுவா இருந்தாலும் என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுமா. நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்…” என்றவர் வைத்தியநாதனை பார்க்க அவர் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தார்.

“சரிமா, பார்த்துக்க. நான் கிளம்பறேன்…” என சொல்லி சங்கரனிடம் பார்த்துக்கொள்ள சொல்லி கிளம்ப,

“மாமா, அண்ணா அவளை கூட்டிட்டு அந்த வீட்டுக்கு தான் வரபோறாங்க. நாங்க, அம்மா…” என ஸ்வேதா சொல்லி அழ,

“யார் வந்தாலும் போனாலும் எந்தங்கச்சிக்கும் அவ குடும்பத்துக்கும் அப்பறம் தான் யாரா இருந்தாலும். எனக்கு நீங்க தான்டா முதல்ல முக்கியம். அந்த பொண்ணை என்ன பண்ணனும்னு நான் பார்த்துப்பேன். நீ கவலைபடாதடா பப்புக்குட்டி…”

அவளை சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதும் ஸ்வேதாவை  திட்டி தீர்த்துவிட்டார் அன்னபூரணி.

“முதல்ல மரியாதை கொடுக்க கத்துக்கோ. அந்த பொண்ணு உன்னை விட வயசுல பெரியவ. அதோட அதியோட மனைவி. நம்ம குடும்பத்து மூத்த மருமக. அதுக்கான மரியாதையும் மதிப்பும் நாம குடுத்துதான் ஆகனும்…” என கண்டிக்க,

“எனக்கு அவளை பிடிக்கலை. பிடிக்காது. அவளை அனுப்பிட்டு அண்ணாவுக்கு வேற பொண்ணை பார்ப்போம்…” திமிராய் பேச அறைந்துவிட்டார் அன்னபூரணி.

“என்ன காரியம் பண்ணிட்ட பூரணிம்மா. சின்ன குழந்தை அவளை போய். துவாரகா நம்ம குடும்பத்துக்கான பொண்ணு இல்லைன்றது ஸ்வேதாவுக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே தெரியும். இதை பப்புக்குட்டி வெளில சொல்லிருச்சு. நாங்க சொல்லலை. அவ்வளோ தான்…” சங்கரன் சொல்ல,

“அப்போ அவளை என்ன பண்ண போறீங்க அண்ணா?…”

“சத்தமில்லாம கிளம்பிட்டா எதாச்சும் செட்டில் பண்ணி அனுப்பிடலாம். இல்லைனா எத்தனை ஆக்ஸிடன்ட் நடக்குது…”

வெகு சாதாரணமாக சங்கரன் பேச அதிர்ந்து பார்த்த பூரணி அர்னவ் ஏதாவது சொல்வான், மறுப்பான் என பார்த்தால் அவனும் அமைதி காக்க கசப்பாய் முறுவலித்தவர்,

“ரொம்ப நல்லா பேசறீங்க அண்ணா. இதையே நம்ம பொண்ணு புகுந்த வீட்ல நம்ம சந்தியாவுக்கு பேசினாங்கனா என்ன செய்வீங்க அண்ணா?. நீயும் இப்படி அமைதியா தான் இருப்பியா அர்னவ்…”

“ம்மா, தெருவுல போற ஒருத்தியும், சந்தியாக்காவும் ஒண்ணா?…” என துடுக்காய் ஸ்வேதா கேட்டு மீண்டும் பளாரென ஒரு அறை வாங்கினாள் பூரணியிடம்.

“சொல்லுங்க அண்ணா, பதில் பேசுங்க…” என கேட்க பதில் பேச முடியாமல் அமைதியாய் நின்றார் சந்தியாவை பெற்ற சங்கரன்.

இதையே கேட்டது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாவு நிச்சயம். ஆனால் தங்கையாகிற்றே. அர்னவும் கலங்கிப்போனான்.

“நமக்குன்னு வரும் போது சுருக்குன்னு இருக்குல. உயிர்னா எல்லாமே உயிர் தான் அண்ணா. இதுல பேதம் எதுவும் இல்லை.அவளுக்கு கேட்க யாருமில்லைன்னா நினைச்சீங்க…”

“நான் கேட்பேன். என் பொண்ணு அவ. அவளுக்கு நான் இருக்கேன். இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, என் பொண்ணை அதி வாழ்க்கையை விட்டு விரட்டனும்னு யார் நினைச்சாலும் அடுத்த நிமிஷம் நானும் அங்க இருக்க மாட்டேன்…”

இப்படி ஒரு வார்த்தையை சங்கரன் மட்டுமில்லை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஹாஸ்பிடல் பில் கட்டியாகிற்று என சொல்ல வந்த ரத்தினசாமி கூட ஆடித்தான் போனார் தங்கையின் பேச்சில். சத்தமில்லாமல் வந்த சுவடு தெரியாமல் அங்கிரு சென்றுவிட அன்னபூரணி கணவரின் அருகில் அமர்ந்தார்.

“இவருக்கு ஏன் திடீர்ன்னு பிபி அதிகமாச்சு தெரியுமா?…” என கேட்டவர்,

“கல்யாண பொண்ணா துவா வந்ததனால இல்லை. அதியோட வார்த்தையால. அகிலாக்கா நல்லா இருந்தா நிச்சயம் இந்த கல்யாணத்தை நடத்த விட்டிருக்க மாட்டாங்க. அதயே நினைச்சிருந்தாலும் கூட அவங்களை மீறி நடத்தியிருக்க முடியாது…”

“அப்படி தடுக்க கூட வரமுடியாத அளவுக்கு அவங்களுக்கு அவங்க உடல்நிலைக்கு என்னவோன்னு நினைச்சு தான் இப்படி ஆனது. ஏற்கனவே குற்ற உணர்ச்சியால செத்துட்டு இருந்தவரை துவாரகா அப்பா உயிரோட இல்லைன்னு அதி சொல்லி அதை தாங்கிக்க முடியாமலும் தான் இப்படி ஆகிடுச்சு…”

“ஆனா துவா அதியோட மனைவியானதுல இவருக்கு எவ்வளவு சந்தோஷம்னு எனக்கு தெரியும். எனக்கு அதுதான் வேணும். கொடுமை படுத்தறேன், கொலை பன்றேன்னு யாராச்சும் கிளம்புனீங்க அன்னைக்கு வேற அன்னபூரணியை நீங்க எல்லாரும் பார்ப்பீங்க…”

“அவ மேல ஒரு தூசு பட்டாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். குடும்பத்துக்குள்ள வரப்போற என் மகளை வரவேற்க எல்லாரும் நல்லவிதமா தயாரா இருங்க. அவ வரனும். அந்த வீட்டுக்கு மருமகளா, எங்களுக்கு மகளா…” என சொல்லியவர் டாக்டரை பார்க்க செல்ல அனைவருமே ஸ்தம்பித்து தான் போயினர்.

 

————————————————-

அன்னபூரணி அனைவரையும் ஹாஸ்பிட்டலில் தன் பேச்சால் திகைக்க வைத்து, அவர்களின் அடாவடிகளை கட்டிவைத்து துவாரகாவிற்காய் வீட்டில் காத்துக்கொண்டிருக்க துவாரகாவோ அதிரூபனையும் மற்றவர்களையும் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள்.

“மாட்டேன், அந்த வீட்டுக்கு வரமாட்டேன். என்னை விடுங்க. அம்மாட்ட போறேன். உங்க வீட்டுக்கு வரமாட்டேன்…”

மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என பத்மினி சொல்லிய ஷணத்தில் இருந்து அஷ்மிதா இருந்த அறைக்குள் சென்றவள் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஹாஸ்பிட்டலில் இருந்து ரத்தினசாமி அவளையே பார்க்க பார்க்க ஏற்கனவே பயந்து போய் இருந்தவள் ரத்தினசாமியே வந்து வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என சொல்ல அதை கேட்டதில் இருந்து ஆரம்பித்து விட்டாள்.

எங்கே அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என பயத்தில் அவள் அழ அனைவரும் மிரண்டுதான் போயினர்.

“அங்க யாரும் உன்னை ஒன்னும் பேச மாட்டாங்க துவா. நாங்க எல்லாருமே உன் கூட தான் இருப்போம். நீ ஏன் பயப்படற?…” அஷ்மிதா கேட்க,

“இப்படி பேசித்தான் அன்னைக்கு அப்பாவை பார்க்க வைக்கிறேன்னு சொல்லி இவங்க கூட்டிட்டு போனாங்க என்னை. அதுக்கப்பறம் தான்…”

விஷாலை நிமிர்ந்தும் பாராமல் அவன் இருந்த திசையில் கை காண்பித்து சொல்லி அழ அனைவருக்குமே அது பேரதிர்வு தான். அதிரூபனின் கோபம் தம்பிகளின் மேல் பாய்ந்தது.

‘செத்தேன். இப்படி பொசுக்குன்னு போட்டுகுடுத்துட்டாங்களே?’ மெல்ல அதிபனை நிமிர்ந்து பார்த்தவன் அவனின் பார்வை தாங்காமல் நடுங்கியவன் தலைகுனிந்தபடி வெளியேறிவிட்டான்.

அவனறியாமல் மனதினுள் துவாரகாவை மரியாதையாய் மொழிந்தான். அவன் சென்ற பின்பு அவனின் பின்னாலேயே பத்மினி வந்துவிட்டார்.

அவனிடம் விசாரிக்கவென வர ரத்தினசாமி தான் கேட்டுக்கொள்வதாக கூறி பத்மினியை துவாரகாவிடம் அனுப்பிவைத்துவிட்டு விஷாலை தனியாய் அழைத்து சென்றார்.

அங்கே அறையில் பத்மினி, ராஜாங்கம், அஷ்மிதா, சந்தியா, ஹர்ஷத் என அத்தனை பேர் தாங்கியும் சொல்லியதையே திரும்ப திரும்ப சொல்லி அழுது ரத்தமென சிவந்து போனது துவாரகாவின் முகம்.

எத்தனை பேசியும் நம்பாமல் பிடிவாதமாய் இருப்பவளை தேற்ற முடியாமல் பரிதாபமாய் அதிரூபனை பார்த்தனர் அனைவரும்.

அதிரூபனே சமாளிக்க முடியாமல் வாயடைத்து நின்றான்.

“மவனே, அவ வீட்டுக்கு வரமாதிரி தெரியலை. இந்த ஜென்மத்துல நீ கட்ட பிரம்மச்சாரி தான்டா…”

அஷ்மிதா அந்த நேரத்திலும் அவனை கிண்டலாய் பேச அனைவருக்குமே கொஞ்சம் புன்னகைதான் முகத்தில்.

மின்னல் தெறிக்கும்…

Advertisement