Advertisement

மின்னல் – 6

    வந்ததிலிருந்து போகிறேன் போகிறேன் என்றே சொல்பவள் மீது கோபம் வந்தாலும் அதை காட்டிக்கொள்ள மனம் வரவில்லை.

அவளை இந்த பத்துநாட்களும் பாதுகாத்து சென்னை அழைத்துவந்து பின் இந்த மண்டபத்திற்கு யார் கண்ணிலும் படாமல் அழைத்துவந்து பாதுகாப்பாய் இருக்கவைப்பதற்குள் எத்தனை சிரமம் கொண்டான் என்பது அவனுக்கும், அஷ்மிதாவின் தந்தை ராஜாங்கத்திற்கும் மட்டுமே தெரியும்.

அஷ்மிதா அதற்கு உதவினதோடு மட்டுமல்லாது தன் நெருங்கிய தோழிகளுக்கும் தெரியாமல் தனது பாதுகாப்பு வட்டத்திற்குள் மிக கவனமாக வைத்துக்கொண்டாள்.

இத்தனை சிரமம் மேற்கொண்டு அவளுக்காக பாடுபடுகிறோம், இவள் என்னவென்றால் கிளம்புகிறேன் என சொல்கிறாளே என கவலையோடு அவளை பார்த்தான்.

அவனின் மௌனம் அவளை கொஞ்சம் கலங்கத்தான் செய்தது. எங்கே சரி என்று சொல்லிவிடுவானோ என்ற தவிப்போடு பார்க்க அவள் நிலை புரிந்தும் வாய்திறக்காமல் கல்லென நின்றான்.

“நான் போய்டட்டுமா மாமா?…” வார்த்தை கூட அத்தனை வேகமாக வரவில்லை.

“நான் சரின்னு சொன்னா போய்டுவியா துவா?…” அழுத்தமான குரலில் கேட்க முகம் திருப்பிக்கொண்டவள் வாயே திறக்கவில்லை.

அவனின் கேள்வி தன் காதுகளை எட்டிவிடாதவாறு மனதை திசைதிருப்பியவள் அவனை விட அழுத்தமாய் தன் இதழ்களை பூட்டிக்கொண்டாள்.

மீண்டும் இதை கேட்டால் என்ன செய்வது என யோசித்தவள் சடுதியில் படுக்கையில் சென்று படுத்து பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக்கொள்ள அதிரூபன் அஷ்மிதா இருவரின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை அரும்பியது.

துவாரகாவின் அருகே அமர்ந்தவன் அவளின் தலையை மென்மையாய் கோதியவாறு,

“காலைல வரும் போது தயாரா இருக்கனும். முக்கியமா தைரியமா இருக்கனும். உனக்கு நான் எப்பவும் இருப்பேன்னு நம்பனும். நாளைக்கு எது நடந்தாலும் என் கையை மட்டும் நீ விடாம பிடிச்சுக்கனும். அமைதியா இருக்கனும்…”

வரிசையாக  சொல்லிக்கொண்டே வந்தவன் கடைசியாக சொன்ன அமைதியில் அவள் அவனை தலை திருப்பி பார்க்க அந்த பார்வையில்,

‘நான் என்றைக்கு உன் குடும்பத்தினரிடம் அமைதியாய் இல்லாம போயிருக்கிறேன்?’ என்ற கேள்வி தொக்கி நிற்க அதில் அவனின் புன்னகை மேலும் விரிந்தது. அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,

“நான் சொன்ன அமைதி வேற. யார் என்ன பேசினாலும் பயப்படாம உன்னை நீயே குழப்பிக்காம உன் மனசை அமைதியா வச்சுக்கனும்னு அர்த்தம். புரியுதா மிசஸ் அதிரூபன்?…” என குழந்தைக்கு விளக்குவது போல விளக்கி சொல்ல மீண்டும் முகத்தை மூடிகொண்டாள்.

“நான் கிளம்பனும் துவா. நேரமாச்சு. நாளைக்கு முகூர்த்த நேரத்துக்குள்ள எல்லாமே சரியா இருக்கனும். சரிபண்ணனும். அதுக்கு எனக்கு கொஞ்சமாச்சும் ரெஸ்ட் வேணும். பை…”

தன் நிலையை சொல்லி எழுந்துகொள்ள மீண்டும் பெட்ஷீட்டிலிருந்து வெளியே வந்து அவனின் கையை பிடித்துகொண்டவள்,

“ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்…” என சொல்லி எழுந்து அமர அவளருகே மீண்டும் அமர்ந்தவன்,

“என்னடா. இன்னும் என்ன உனக்கு?…” வெகுநேரம் அஷ்மிதாவின் அறையில் இருப்பது சரியல்ல என எண்ணிக்கொண்டே கேட்க,

“அம்மா, அம்மாவ பார்க்கனும். கல்யாணம். இத, இத சொல்லனும். என்ன சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு. அம்மாக்கு பிடிக்காது…”

இத்திருமணத்தில் விருப்பமும், பயமுமாய் இருமனதோடு போராடிக்கொண்டிருப்பவளை உணர்ந்துகொண்டான்.

கோர்வை இல்லாமல் மூடியிருந்த கதவை பார்த்துக்கொண்டே திணறி திணறி சொல்ல அவளின் கை மீது ஆறுதலாய் தன் கரத்தை வைத்தவன்,

“இனிமே நீ என் பொறுப்பு. உன்னை பார்த்துக்கறதும் பாதுகாக்கறதும் என்னோட கடமை. வெறும் கடமைன்னு மட்டும் இதை ஒதுக்கிட முடியாது துவா. விளக்கமா சொல்லி உனக்கு புரியவைக்க எனக்குதான் நேரமில்லை…” என்றவன்,

“உனக்கு என்னை புரியுதா? என்னை எப்படி சொல்லி புரியவைக்க?…” என யோசித்தவன் அஷ்மிதாவை பார்த்ததும் அவளிடம் சென்றவன்,

“இவ என்னோட ப்ரெண்ட். எங்க வீட்ல இவள் தான் உனக்கு வரப்போற மனைவின்னு சொல்லி இவளை நிச்சயம் பண்ணிவச்சாங்க…”

“ஆனா எனக்கு அஷ்மிதாவை அந்த ஸ்தானத்துல பார்க்க முடியலை. அந்த நிமிஷம் எனக்கு நீ என் மனைவியா வரனும்னு தோணுச்சு. உன்னை இங்க வச்ச பின்னால கற்பனைன்னு கூட உன்னை தவிர யாரையும் நினைக்க முடியலை. முடியவும் முடியாது…”

துவாரகாவின் கண்களை ஊடுருவியபடி தன் இதயத்தை காட்டி அவன் சொல்ல சொல்ல அதிரூபனின் சொற்கள் ஒவ்வொன்று கல்வெட்டுகளாய் பதிந்தது துவாரகாவினுள்.

புரிந்ததை போல லேசாய் தலையசைத்து இமை தாழ்த்தியவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன்,

“எதையும் நினைச்சு குழப்பிக்காம தூங்கு. நாளை நமக்கான நாள். என் வாழ்க்கைக்குள்ள நீ வரப்போற அந்த நிமிஷதுக்காக, என்னோட ஆயுசுக்கும் ஒன்றா பிணைந்து வாழப்போற போற உனக்காக நான் காத்திட்டே இருப்பேன். குட்நைட்…”

அவளிடம் சொல்லி எழுந்தவன் கதவருகே செல்ல அங்கே தலையை சாய்த்து பாதி உறக்கத்தில் இருந்தாள் அஷ்மிதா.

“போதும் போதும். ஓவரா பண்ணாம வழியை விடு…” அவளிடம் வம்பு செய்ய,

“ஏன்டா சொல்லமாட்ட? ஒரு பச்சை மண்ணு இருக்கேன்னு கூட பார்க்காம ரொமான்ஸ் பண்ணிட்டு இப்ப வந்து நான் ஓவரா பன்றேன்னு மனசாட்சியே இல்லாம சொல்ற பாரு. ராட்சஷன்…”

“உன்னை யார் பார்க்க சொன்னா?. போய் தூங்கு. காலையில ரெடியாகிட்டு எனக்கு கால் பண்ணு. நானும் போய் தூங்கனும்…” என கிளம்ப,

“அப்ப நாளைக்கு சிறப்பான தரமான சம்பவம் ஒன்னு இருக்கு. ஓகே லெட்ஸ் ஸீ…”

அவனிடம் கண்ணடித்து கிண்டலாய் பேச அவள் தலையில் நறுக்கென கொட்டியவன்,

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சு…” என சொல்லி கதவை திறந்துகொண்டு தன்னறைக்கு சென்றான்.

அவன் கிளம்பியதும் கதவை அடைத்துவிட்டு வந்த அஷ்மிதா துவாரகாவின் அருகே படுத்துக்கொண்டாள். அவளின் இலகுத்தன்மையை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த துவாரகாவிடம்,

“என்ன பொண்ணே? தூக்கம் வரலையா? நாளைக்கு ஏகப்பட்ட ஸீன் பார்க்கவேண்டி இருக்கு. இப்ப முழிச்சிருந்து அந்நேரம் தூங்கிடாத. இதுதான் சாக்குன்னு என் கழுத்துல தாலிகட்ட வச்சிடாம. தூங்கு…”

அப்போதும் படுக்காமல் அவளை பார்த்தபடி துவாரமா அமர்ந்திருக்கவே சலிப்பாய்,

“தூங்கலையா?…” என கேட்க,

“தூக்கம் வரலை. பய…” என்ற வார்த்தைகளை முடிக்கவிடாமல்,

“பயமா இருக்குன்னு மட்டும் சொல்லிடாத. இந்த பத்துநாள்ல அந்த வார்த்தைகளை கேட்டு கேட்டு உன் பயத்துமேலையே எனக்கு பயம் வந்துட்டு. நான் செத்துட்டேன்…”

“நீங்க தான கேட்டீங்க…”

“தெரியாம கேட்டுட்டேன். பித்த உடம்புமா தூக்கிப்போட்டுடும். வேணும்னா நாளைக்கு வருவான் உன் ஆளு. அவன்ட்ட அஞ்சுலட்சம் தடவை சொன்னாலும் சலிக்காம கேட்பான். நான் செட் ஆகமாட்டேன் தாயே…”

“அவங்க ரொம்ப நல்லவங்க. ஏன் திட்டிட்டே இருக்கீங்க?…” துவாரகாவும் கேட்க,

“ஆமாமா ரொம்ப நல்லவன் தான். உனக்கு பாடம் எடுக்க எனக்கு நேரமில்லை. எனக்கு தூக்கம் வருதுமா…” தூங்கினா தான் நான் நாளைக்கு ப்ரெஷா இருக்க முடியும். ப்ரெஷா இருந்தா தான் உங்க அலப்பறைகளை சமாளிக்க முடியும்…”

பேசிக்கொண்டே துவாரகா அசந்த நேரம் அவளின் கையை பிடித்து இழுத்து படுக்க வைத்தவள் காலை போட்டு தன் கையை கொண்டு எழுந்துவிடாதவாறு வளைத்துக்கொள்ள,

“ஐயோ விடுங்க. நானே படுத்துக்கறேன். உங்க கையை கலை எடுங்க. எனக்கு தூக்கமே வராது…” கெஞ்சாத குறையாக கேட்க,

“ம்ஹூம் நீ சரிப்படமாட்ட. இப்பவே இவ்வளோ கேள்வி கேட்கற.  என்னை தூங்கவும் விடமாட்ட…”

“நிஜமாவே சொல்றேன். கையை, காலியா எடுங்க ப்ளீஸ். தள்ளிபடுங்க…”

அஷ்மிதாவிற்கு குதூகலமாய் போனது துவாரகாவின் பேச்சும் செயலும். கொஞ்சம் குறும்பு தலைதூக்க,

“இன்னைக்கு என்னை தள்ளி படுக்க சொல்ற, நாளைக்கு என்ன பண்ணுவியாம்? நானும் பார்க்கத்தான போறேன்…” நமுட்டு சிரிப்புடன் சொல்ல புரியாமல் பார்த்த துவாரகா,

“என்ன சொல்றீங்க…” என கேட்டுக்கொண்டே சுவற்றை ஒட்டி படுத்துக்கொள்ள,

“இன்னைக்கு இது போதும். மிச்சத்தை மிச்சமில்லாம நாளைக்கு அவன் சொல்லுவான்…” என கண்ணடித்து சொல்லிய விதமே துவாரகாவிற்கு ஏடாகூடமாய் இருக்க அதற்குமேல் வாயை திறக்காமல் உறங்க முற்பட்டாள்.

அதிரூபனும், துவாரகாவும் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்க அஷ்மிதாவோ நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.

துவாரகாவின் அம்மாவின் தேடல் அதிரூபனுக்கு உண்மையில் கலக்கத்தை கொடுத்தது.

நாளை அவர் வந்து அழைத்தால் இவள் சென்றுவிடுவாளா? என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.

செல்லத்தான் விட்டுவிடுவாயா? என துவாரகாவே கேட்பது போன்ற பிரம்மை தோன்ற இல்லை இல்லை தன்னால் அது இயலாது என ஸ்திரமான எண்ணம் வலுக்க அதற்குமேலும் விழித்திருக்க முடியாமல் தூக்கத்தை விடாமல் துரத்தி பிடித்து இழுத்து வந்து உறங்கினான்.

காலை பரபரப்பாய் விடிய அஷ்மிதாவின் அறை வேகமாய் தட்டப்பட சோம்பலாய் கண் திறந்தவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

நேற்றுவரை யாரும் இங்கு வராமல் சமாளித்தாகிற்று. இப்பொழுது அலங்காரம் செய்ய, சொந்தபந்தங்கள் பெண்ணை பார்க்க என மாறி மாறி யாராவது வந்துகொண்டே இருப்பார்களே?

வேகமாய் அருகில் திரும்பி பார்க்க அங்கே துவாரகா இல்லை. அதிர்ந்தேபோனாள்.

“பயந்தாங்கொள்ளி உலகமெல்லாம் பயம்னு சொல்லி பெட்டிபடுக்கையை கட்டிட்டாளோ? இப்படி மாட்டிவிட்டுட்டு போய்ட்டாளே?…” என வாய்விட்டு புலம்ப அவளுக்கு பின்னால் இருக்கும் உள் அறையிலிருந்து,

“டாக்டர், நான் இங்க இருக்கேன்…” மிக மெல்லியதாய் அவளின் குரல்.

“ஹப்பாடா தப்பிச்சேன்…” என நெஞ்சில் கை வைத்துக்கொண்டவள் அவளை கதவை பூட்டிக்கொள்ளுமாறு சொல்லி தன் கதவை திறக்க சென்றவள் துவாரகாவின் கதவு பூட்டப்படும் சத்தம் கேட்டபின் தான் கதவையே திறந்தாள்.

அங்கே சந்தியா, அன்னபூரணி, ஸ்வேதா மேலும் இரண்டு பெண்கள் நிற்க அவர்களை உள்ளே அழைக்கலாமா வேண்டாமா என யோசிக்க,

“இப்பதான் எழுந்தியாமா?…” என கேட்டுக்கொண்டே அன்னபூரணி உள்ளே வர அஷ்மிதா தான் பின்னே செல்லவேண்டியதானது.

“சரி, நீ குளிச்சுட்டு புடவை கட்டிட்டு வா. ப்யூட்டீஷியன்ஸ் வந்தாச்சு. உன்னை ரெடி பண்ணனுமே. நாங்க வெய்ட் பன்றோம்…” என்றதும் திருதிருத்தவள்,

“ஆன்ட்டி நான் குளிச்சுட்டு வந்ததும் கூப்பிடட்டுமா? எனக்கு கூச்சமா இருக்கும்…” என சொல்ல அதற்கு சந்தியா,

“அண்ணி…” என எதுவோ கிண்டலாய் சொல்லவர அவளின் வாயை பொத்தியவள்,

“தயவுபண்ணி வாயை திறக்காம கிண்டல் பேசாம இருங்க. கல்யாணம் முடியவும் எல்லா கிண்டல் பேச்சையும் வச்சுக்கலாம்…”

முன்னெச்சரிக்கையாய் சொல்ல அதை கண்டு சிரித்த அன்னபூரணி பியூட்டீஷியன் பெண்களை வெளியே அனுப்பிவிட்டு,

“நீ குளிச்சுட்டு புடவை கட்டிட்டு சொல்லு. ஆமா உன்னுடைய ட்ரெஸ் எல்லாம் வந்திருச்சா?…”

“ஓ, அதை நேத்து அதி குடுத்திட்டான் ஆன்ட்டி…” என்றது ஸ்வேதாவிற்கு கோபம் வந்துவிட்டது.

“இன்னும் என்க அண்ணாவுக்கு ரெஸ்பெக்ட் குடுக்காம பேசிட்டு இருக்கீங்க?…” என்று படபடக்க உண்மையில் எரிச்சலான அஷ்மிதா,

“இன்னைக்கு நேத்து புதுசா கூப்பிடலையே. திடீர்ன்னு மாறிடுமா? அவனுக்கு எப்ப ரெஸ்பெக்ட் குடுக்கனும்னு எனக்கு தெரியும் குட்டிப்பொண்ணே. போய் வந்தவங்களை கவனிங்க…”

கத்தரித்ததை போல பேச சந்தியாவிற்கும் அன்னபூரணிக்கும் முகமே வாடிவிட்டது. அஷ்மிதாவிற்கு தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல்,

“ஓகே ஆன்ட்டி. நான் குளிக்கனும். சேரி கட்டிட்டு வந்து கூப்பிடறேன் உங்களை…”

நீங்கள் கிளம்புங்கள் என சொல்லாமல் சொல்ல இவர்கள் கிளம்பும் நேரம் பத்மினி நகைபெட்டியுடன் உள்ளே வந்தார்.

“என்ன இன்னும் பேசிட்டே இருக்கீங்க?…” என கேட்டதும் ஸ்வேதா நடந்ததை சொல்ல அவள் தலையில் செல்லமாய் கொட்டியவர்,

“அஷ்மி இப்படி பேசறது உன் அண்ணனுக்கு பிடிக்கலைனா அவன் சொல்லபோறான். பிடிச்சா அப்படியே கூப்பிட்டுட்டு போகட்டும். இதெல்லாம் ஒரு விஷயமா?…” என சிரித்தவர்,

“அஷ்மி, உன் ஜ்வெல்ஸ் செட்ஸ் கூட இதையும் போட்டுக்க. மறந்திடாம…” என்று சொல்லி அவள் கையில் கொடுத்தவர் துவாரகா இருந்த அறையை கண்டுவிட்டு,

“உனக்கு வேண்டிய பொண்ணு வரதா சொன்னியே. வந்தாச்சா?…” என்று கேட்டதும் ஆமாமென தலையை ஆட்டியவள்,

“எர்லி மார்னிங் தான் வந்தா ஆன்ட்டி. தூங்கறா. டிஸ்டர்ப் செய்யவேண்டாம். நான் ரெடி ஆகிட்டு அவளை கூப்பிட்டுக்கறேன்…”

“ஓகேமா…” என்றவர் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேற வேகமாய் கதவை தாழிட்டவள் அதிரூபனுக்கு அழைத்தாள்.

“ராஸ்கல், இன்னும் தூங்கிட்டா இருக்க? இங்க நான் டென்ஷன்ல இருக்கேன். உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நேத்து கூட இவ்வளவு டென்ஷன் இல்லை. இப்ப மாத்தி மாத்தி எல்லாரும் வராங்க…” என கத்த,

“ஹேய்ய்ய் கூல், கூல் அஷ்மி. நீ குளிச்சாச்சா? துவா எழுந்தாச்சா?…”

“அவ எழுந்துட்டா…” என நடந்ததை சொல்ல,

“ஓகே நான் அந்த லேடியை அனுப்பிவைக்கிறேன். துவாவை ரெடிபண்ண. நீயும் ரெடி ஆகிட்டு எனக்கு கால் பண்ணு. வெய்ட் பன்றேன்…” என்று சொல்லி வைத்துவிட இன்னும் படபடப்பு குறையவேயில்லை அஷ்மிதாவிற்கு.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அதிரூபன் அனுப்பிய பெண்மணி வந்து சேர அஷ்மிதாவிற்கும் அவரை நன்றாக தெரியுமென்பதால் கேள்வியின்றி உள்ளே விட்டவள் மீண்டும் கதவை சாற்றிகொண்டாள்.

சிறிதுநேரத்தில் தானும் குளித்து புடவை கட்டிய பின்பே அன்னபூரணிக்கு அழைத்தவள் தன்னை அலங்கரிக்கும் பெண்களை அனுப்பிவைக்க கேட்க அவரும் சந்தியாவுடன் அவர்களை அனுப்பிவைத்தார்.

அதன் பின்னான நேரங்கள் மணப்பெண் அஷ்மிதா தான் என நினைத்து நெருங்கிய சொந்தங்களில் சிலர் வந்து, வந்து  பார்த்து சென்றனர். துவாரகாவை அலங்கரிக்க வந்த பெண் தன் வேலை முடிந்தது என அஷ்மிதாவிற்கு மெசேஜ் ஒன்றை உள்ளிருந்தே அனுப்ப அதிரூபனுக்கு அதை பார்வேர்ட் செய்துவிட்டு அவனுக்காய் காத்திருந்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் அறைக்குள் நுழைந்தவன் மற்றவர்களை வெளியே அனுப்ப,

“என்னடா இது மணமேடைக்கு போகாம இங்க வந்துட்ட?…” பத்மினி அவனின் பின்னாலே வந்து கேட்க,

“ம்மா, அப்பாவை வர சொல்லுங்க…” என்றதும் புரியாமல் பார்த்தவர்,

“இப்ப எதுக்குப்பா?…” என கேட்க,

“அண்ணி மேடைக்கு போறதுக்கு முன்னால அண்ணன்ட்ட, உங்கட்ட ஆசிர்வாதம் வாங்கறதுக்கா இருக்கும். இருங்க நான் போய் அனுப்பி வைக்கிறேன்…”

அவர் சொல்லி கிளம்ப அதற்குள் ஸ்வேதா வந்து சந்தியாவின் கணவன் வந்துவிட்டதாய் சொல்ல,

“இருப்பா உங்கப்பா வரதுக்குள்ள வந்திடறேன். மாப்பிள்ளையை வரவேற்க்கனும். வா சந்தியா…”

அவனிடம் சொல்லிவிட்டு சந்தியாவை அழைத்துக்கொண்டு பத்மினி செல்ல அங்கிருங்க சிலரையும் அஷ்மிதாவிடம் பேசவேண்டும் என சொல்லி வெளியே அனுப்ப அவர்களும் கிண்டலாய் சிரித்துக்கொண்டே கிளம்பினர்.

கதவை அடைத்துவிட்டு துவாரகா இருந்த அறைக்கதவை தட்ட யார் என கேட்ட பின் தான் கதவை திறந்தார் அந்த பெண்மணி.

“தேங்க் யு சோ மச் மேடம்…” அஷ்மிதா நன்றியாய் அவரிடம் கூற அதை ஆமோதிப்பதை போல அதிரூபனும் புன்னகைத்தான்.

“இது எனக்கு பெரிய ஆஃபர். நான் தான் தேங்க்ஸ் சொல்லனும்…”

“இருந்தாலும் இது ரிஸ்க் இல்லையா? அதுக்குதான் தேங்க்ஸ். உங்களுக்கான பேமெண்ட் அக்கவுண்ட்ல சேர்த்தாச்சு. நீங்க உடனே கிளம்ப முடியாது. ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். என்க்கு வேண்டப்பட்டவன்னு சொல்லிருங்க யார் கேட்டாலும்…” அஷ்மிதா அவரிடம் சொல்லியே அனுப்பி வைத்தாள்.

அவர் சென்றதும் உள்ளே வந்து தண்ணீரை எடுத்து மடக்மடக்கென குடித்தவள் அதிரூபனுக்கும் கொடுக்க அவனோ அங்கே கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த துவாரகாவையே பார்த்து நின்றான்.

அவனின் பார்வையில் கடுப்பான அஷ்மிதா அதிரூபனின் கையில் வலிக்க கிள்ளி வைத்து,

“இந்த ரணகளத்துளையும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதோ? கொன்னுடுவேன் மவனே. நீ ஊத்துற ஜொள்ளுல பேசவேண்டிய டயலாக்ஸ் எல்லாம் மூச்சுக்கு திணறிட்டு இருக்குதுடா. அடங்கு…”

அவனை பிடிபிடியென பிடிக்க அவள் கிள்ளிய கையை நன்றாய் தேய்த்தவன் மீண்டும் துவாரகாவை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்தாள்.

“இங்க வா…” அவனின் அழைப்பிற்கு மாட்டேன் என தலையை மட்டும் அசைத்தவள் சுவற்றின் ஓரத்தில் சென்று பல்லிபோல ஒட்டி நிற்க,

“சுத்தம். இவளை நின்ன இடத்துல இருந்து நகர்த்த முடியலை. இதுல என்க மணவறை வரைக்கும் கூட்டிட்டு போய் நீ தாலிகட்ட?…” அஷ்மிதா கிண்டலாய் சொல்ல,

“அவளை பத்தி தெரியாதா அஷ்மி?…” வக்காலத்தாய் இவன் பேச,

“தெரிஞ்ச வரைக்கும் போதும்டா சாமி. இதுக்கு மேல நீ தெரிஞ்சுக்க. எனக்கு வேண்டாம்…” என சொல்லி அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தவள்,

“போ, போய் பாடம் நடத்து. எனக்கு பொறுமையே இல்லை. அந்த மயில்சாமி வந்து தோகை விரிச்சு ஆடப்போறார். நீ எப்படி சமாளிக்க போறன்னு இங்க நான் டென்ஷன்ல இருக்கேன். உனக்கு ரசனை கேட்குது ரசனை…”

“ஹல்லோ அவர் மயில்சாமி இல்லை. ரத்தின சாமி…” அவளிடம் வாதாடிக்கொண்டே துவாரகாவின் கை பிடித்து அஷ்மிதாவின் அருகில் வந்து நிறுத்தினான்.

“உங்கப்பா என்ன சாமியா இருந்தா எனக்கென்ன? அது உன் பாடு. இப்ப இந்த மேடத்துக்கு சொல்லி வை. மயங்கி விழுந்து உங்க ஆட்டத்துல பிச்சு பிடுங்கி ஓடாம இருந்தா சரி…” நக்கலாய் சொன்னாலும் வேண்டுமென்றே தான் சொல்லிவைத்தாள் அஷ்மிதா.

துவாரகாவின் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்னும் எண்ணத்தை படித்தவளாகிற்றே.

இத்தனை பாடுபட்டு கடைசியில் ரத்தினசாமி மிரட்டி இவளை அனுப்பிவிட்டால் அவள் மீது காதலென கசிந்துருகி நிற்கும் அதிரூபனின் நிலை சொல்வதற்கும் இல்லை.

இப்பொழுது பதமாய் சொல்வதை விட பற்றிக்கொள்ளும் விதமாய் சொல்வதே துவாரகாவை உசுப்பேற்றும் என நினைத்துதான் அப்படி பேசினாள்.

அவள் நினைத்ததை போல அதிரூபனின் கையை தானே சென்று கோர்த்துக்கொண்டவள்,

“டாக்டர், எனக்கு பயம் தான் இவங்க வீட்டில இருக்கிறவங்களை பார்த்து. ஆனா கல்யாணம்னு முடிவு பண்ணின பின்னால இவங்க என் மேல எத்தனை பிரியம் வச்சிருக்காங்கன்னு தெரிஞ்ச பின்னால நான் போகமாட்டேன் டாக்டர். கண்டிப்பா போகமாட்டேன். இவங்க பார்த்துப்பாங்க…”

அவள் பேச பேச அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தவன் தன்னோடு சேர்த்தணைக்க அவனின் தோள் சாய்ந்துகொண்டு அஷ்மிதாவை பார்த்து புன்னகைத்தாள்.

அஷ்மிதாவிற்கும் இதில் சந்தோஷமே. ஆனாலும் துவாரகாவை சீண்டும் ஆவல் தோன்ற,

“எதாச்சும் பேசினியா துவா? காதுல விளைவே இல்லையே…” என்று வம்பு செய்ய பாவமாய் பார்த்தவள்,

“உங்களுக்கு கேட்டுச்சு தானே? சத்தமா தான சொன்னேன்?…” அவனின் கை வளைவில் இருந்துகொண்டே முகம் நிமிர்த்தி அவனிடம் கேட்க ஒரு நிமிடம் தடுமாறிதான் போனான் அதிரூபன்.

நேற்று வரை அவளிடம் அவனின் பார்வைகள்  மிக நேர்மையாகத்தான் இருந்தது. ஆனால் இந்த நொடி ஏனோ அப்படி பார்க்கமுடியவில்லை. மையிட்ட விழிகள், மணக்கோலம், அவளின் அருகாமை என அத்தனையும் பித்தம்கொள்ள செய்ய கிறங்கிப்போனான்.

புதிதாய் ஒரு பரிபாஷையை அவளுக்கு கற்றுகொடுக்கும் எண்ணம் பிறப்பெடுக்க அவனின் அணைப்பை வலிமையாக்க முயன்றான்.

அவனின் விழிகள் எதுவோ சொல்ல விழைவதை கண்டுகொண்டவள் புருவம் சுருக்கி பார்க்க அதில் மொத்தமாய் மூழ்கவிருந்த நேரம் கதவு தட்டும் ஓசை கேட்க அவனின் உணர்வலைகள் மொத்தமும் அறுந்து விழுந்தன.

அதுவரை அவனின் பார்வை வட்டத்திற்குள் அவளன்றி வேறேதும் இல்லாதிருக்க இப்பொழுது சூழ்நிலை புரிய தன்னைப்போல் இறுக்கம் கொண்டான்.

பார்வையிலும் உடல்மொழியில் எச்சரிக்கை உணர்வு பரவ எதற்கும் தயாரானவன் கைகள் துவாரகாவை அழுத்தமாய் பற்றியது.  

“அஷ்மி கதவை திற…” என அவளை அனுப்ப,

“துவா உன்னோட கான்பிட்டேன்ட்ல தான் அதியோட லைப்பே இருக்குடா. சொதப்பிடாத. அதியோட கையை விட்டுடுகூடாது. குட் கேர்ள் தான…” என சொல்லி அவளை அணைத்து விடுத்தவள் அதிரூபனின் தோளை தட்டிவிட்டு சென்றாள்.

அவள் கதவின் தாழை விடுவிக்க அதிரூபனின் முதுகின் பின் தன்னை மறைத்துக்கொண்டாள் துவாரகா.

அஷ்மிதாவிற்கு கதவை திறக்கும் அவகாசம் கொடுக்காமல் தாழ் நீங்கியதும் கதவை திறந்துகொண்டு அனைவரும் உள்ளே வந்தனர். கதவின் பின்னே அஷ்மிதா நின்றுகொள்ள ராஜாங்கமும் உள்ளே வந்தார்.

“அதிபா அப்பாவை வர சொன்னியாப்பா? கல்யாணம் முடிஞ்சதும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாமே?…” என கேட்டுக்கொண்டே ரத்தினசாமி வர உடன் பத்மினி, சங்கரன், அன்னபூரணி, ஸ்வேதா என குடும்பத்தில் பாதி வந்துவிட்டனர்.

பத்மினியுடன் ரத்தினசாமி இணைந்து நிற்க அவர்கள் மேலும் பேச நேரம் கொடுக்காமல் துவாரகாவை இழுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் காலின் விழுந்து எழுந்தான்.

“நூறு வருஷம் ரெண்டு பேரும் பேரோட புகழோட எல்லா செல்வங்களும் பெற்று நல்லா இருக்கனும்…” என மனமார வாழ்த்தியவர் அப்பொழுதுதான் துவாரகாவையே பார்த்தார்.

மழையில் நனைந்த கோழி குஞ்சென வியர்வை மழையில் வெடவெடத்தபடி பயத்தில் அதிரூபனை ஒட்டிக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் மனதிற்குள் கடவுள் நாமத்தை சொல்லிக்கொண்டு நின்றவளின் தோற்றம் ரத்தினசாமிக்கு அனைத்தையும் விளங்கவைத்தது.

மற்றவர்களுக்கோ இது பேரதிர்ச்சி. இப்படி ஒரு முடிவுக்கு அதிபன் வருவான் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

அதையும் மீறி துவாரகா குடும்பத்தினரை பற்றிய பேச்சை எடுத்தாலே கொலைவெறியில் துள்ளும் ரத்தினசாமி இப்பொழுது என்ன செய்வார் என்று பயந்தனர்.

“அதிபா…” என சத்தமிட்டவர் துவாரகாவின் கழுத்தில் கை வைக்க போனார். அப்படி ஒரு அரக்கத்தனம் கொட்டிக்கிடந்தது அவரின் முகத்தில். இதுவரை பார்த்திராத வெறித்தனம் கண்களில் ஒளிர்ந்தது.

அதிபனே மிரண்டுபோகும் அளவிற்கு இருந்தது ரத்தினசாமியின் தோரணை.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement