Advertisement

மின்னல் – 5

                மண்டபத்திற்கு கிளம்புவதற்கான ஆயத்த வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுகொண்டிருந்தது.  அனைத்தும் சரியாக இருக்கிறதா என மேர்பார்வையிட்டுகொண்டிருந்தார் சங்கரன்.

அவரின் கையில் இன்னும் ஒரு வயது நிரம்பாத குழந்தை விஜேஷ். மகள் சந்தியாவின் குழந்தை. தாத்தாவின் தோளில் சமத்தாய் தூங்கிப்போயிருந்தது.

“அப்பா, அவனை குடுங்க, தூங்கிட்டான். நீங்க வேலையை கவனிங்க…” சந்தியா கேட்க,

“அட போம்மா. அஞ்சுமாசம் நிரம்பிருச்சுன்னு உன் மாமியார் வீட்டுக்கு போய்ட்ட. இவனை பார்க்காம தூக்கமே வரலை எனக்கு. இப்பவும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியாவது வந்திருக்கனும். நீ என்னனா நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு நேத்து நைட் தான் வந்த…”

“அப்பா அவர் பிஸ்னஸ்…” என சந்தியா இழுக்க,

“நீ போய் மாப்பிள்ளை எப்ப வருவாருன்னு கேளு. இங்க இருந்து கிளம்பற வரை என் பேரன் என் கூடதான் இருப்பான். போம்மா…” என அனுப்பிவைத்தவர் சோபாவில் அமர்ந்து குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு போனில் அனைத்தையும் கேட்டு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

“என்ன பண்ணிட்டிருக்கண்ணே?…” என்றபடி அன்னபூரணி வர எதுவும் புரியாமல் பதட்டமாய் பார்த்தார்.

“பூரணி என்னம்மா?…” பதறி கேட்க,

“குழந்தையை கையிலயும், மடியிலையுமா வச்சிருக்க கூடாதுண்ணே. நீ வேலையை பார்க்காம இப்படி குழந்தையோடவே இருந்தா மத்ததை யாரு கவனிக்க?. மண்டபத்துக்கு வேற கிளம்பனும்…” தங்கையின் அதட்டலில் சிரித்தவர்,

“இப்ப என்ன குட்டிபயலை நீயே பார்த்துக்க. நான் மத்ததை கவனிச்சுக்கறேன்…” என்று  அவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எழுந்து சென்றவர் மீண்டும் வந்து அழுத்தமான முத்தமொன்றை குழந்தையின் நெற்றியில் பதித்துவிட்டு,

“என்னை மாதிரியே இருக்கான்ல ராஜா பய…” என சொல்லிக்கொண்டே அவர் நகர்ந்து சென்றதும் சிரித்துக்கொண்டே அன்னபூரணி சந்தியாவின் அறைக்குள் வந்தார்.

அவளோ மொபைலில் யாருக்கோ அழைப்பதும் பின் மெசேஜ் செய்வதுமாக எரிச்சல் முகத்தோடு இருக்க அதை பார்த்து வந்தவர்,

“என்னமா மாப்பிள்ளைக்கா கூப்பிட்டுட்டு இருக்க?…” என கேட்க,

“ஆமா அத்தை. அவர் பிக்கப் பண்ணவே மாட்டேன்றார். மெசேஜ்க்கும் ரிப்ளே இல்லை…” சலிப்பாய் சொல்லியவளின் கன்னம் கிள்ளியவர்,

“அவருக்கு வேலை அதிகமா இருக்கும் போலடா. அதுதான் உன் போன் கூட எடுக்க முடியாம இருக்குமாயிருக்கும். வேலையை முடிச்சா தானே இங்க வந்து ரெண்டு நாளாவது நிம்மதியா இருக்கமுடியும். கண்டிப்பா நைட் வந்துருவார்.  நீ ஒன்னும் டென்ஷன் ஆகாதே…”

அவளை சமாதானம் செய்தவர் குழந்தையை அங்கிருந்த தொட்டிலில் கிடைத்த அதை பார்த்து புன்னகைத்த சந்தியா,

“அப்பாவும், பெரியப்பாவும் உங்க பேச்சுக்கு மட்டும் தான் கட்டுபடறாங்க. நான் குட்டிபயலை கேட்டதுக்கு அப்படி குதிச்சார் உங்க அண்ணன். இப்ப நிமிஷத்துல நீங்க வாங்கிட்டு வந்துட்டீங்க…”

“போதும், போதும். போய் நகையெல்லாம் எடுத்துவை. இன்னைக்கு போடவேண்டியது தனியா, நாளைக்கு போடவேண்டியது, அப்பறம் அஷ்மிக்கு சீரா குடுக்க வேண்டியது எல்லாம் மேல என் ரூம்ல இருக்கு. தனிதனியா எல்லாம் வேற வேற பாக்ஸ்ல எடுத்து வை. ஸ்வேதா அங்க தான் இருக்கா…”

“நீங்களே எடுத்து வைக்கலாமே அத்தை…” என,

“தனியா நான் எத்தனையை பார்க்க? உனக்கும் புது நகை வந்திருக்குடா. நீ என்னையே செலெக்ட் பண்ண சொல்லிட்ட. அதை பார்த்து எடுத்து வை. போ…”

“சரிங்க அத்தை…” என்றவள் குழந்தையை பார்க்க,

“நான் பார்த்துக்கறேன்…” எனும் பொழுதே குழந்தை சிணுங்க,

“ஹ்ம்ம், அவனுக்கு பசி வந்துடுச்சு போல. சரி நான் போய் எடுத்து வைக்கிறேன். நீ பசி ஆத்திட்டு வா…” என சொல்லி போக,

“நானும் வரேன் அத்தை. தூக்கிட்டு போய்டலாம் இவனை…” என்று குழந்தையையும் எடுத்துக்கொண்டு இருவரும் மேலே சென்றனர்.

“பத்மிம்மா எங்க அத்தை?…”

“அண்ணா ஏதோ டென்ஷனா இருக்காங்க. அண்ணியும் தான். பேசிட்டு இருக்காங்க. அவங்க பேசிட்டு வரட்டும். நாம வேலையை கவனிக்கலாம். இன்னும் ரெண்டு மணிநேரத்துல மண்டபத்துக்கு போய்டனும்…”

பேசிக்கொண்டே அறைக்கு சென்றவர்கள் துணிமணிகள் தனியாக, நகைகள் தனியாக என அனைத்தையும் பிரித்து பத்திரமாக அடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அங்கே ரத்தினசாமி அறையில் நடுங்கிப்போய் அழுதுகொண்டே அமர்ந்திருந்தார் பத்மினி. கணவனை காணவே அத்தனை பயங்கரமாக தெரிந்தது அந்த நிமிடம்.

தன் மீது உயிரையே வைத்திருப்பவர் தான். ஆனாலும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் ராட்சஷனாக உருவெடுத்துவிடுவார். இந்த நேரம் இதை பற்றி பேசியிருக்க கூடாதோ என காலம் கடந்த ஞானோதயமாக நினைத்தார்.

எதையும் மறைத்து பழக்கமில்லையே அவருக்கு.

“உனக்கு அவ்வளவு தைரியமா போச்சுல. அப்போ இந்த வீட்ல நான் குடும்ப தலைவன்னு எதுக்கு இருக்கேன்? இந்த தன்னமிஞ்சுனதனம் உனக்கு எங்கிருந்து வந்தது? யார் குடுத்த துணிச்சல்?…”

வெளியில் யாருக்கும் கேட்டுவிட கூடாதென கவனமாக குரல் தாழ்த்தி பேசினாலும் அக்குரலில் இருந்த அனல் வெகுவாய் பத்மினியை சுட்டு பொசுக்கியது.

“நான் வேணும்னு பார்க்க போகலை. ப்ரெண்ட்க்கு மேஜர் ஆபரேஷன் நடந்திருக்கு. அவசரமா பண உதவி தேவைப்பட்டதுன்னு தெரிஞ்சதும் மனசு கேட்காம ஹெல்ப் பண்ணத்தான் போனேன்…”

“போனா போன வேலையை மட்டும் பார்த்திட்டு வரவேண்டியது தானே?…” என கத்தினார்.

என்றைக்குமே ரத்தினசாமி பத்மினிக்கு எந்த எல்லையும் விதிக்கவில்லை. பத்மினி தனக்குத்தானே சில கட்டுபாடுகள் விதித்துகொண்டாலும் உதவி என்று வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லும் பழக்கமே இல்லை. அதற்கு ரத்தினசாமியும் தடை விதித்ததில்லை.

“நீ ஏன் அவளை பார்க்க போன?. அந்த குடும்பத்தோட மூச்சுக்காத்து கூட நம்மை சேர்ந்தவங்க மேல படக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?…”

“இல்லைங்க, அதுக்கில்லை. அவங்க தனியா யாருமில்லாம கஷ்டப்படறாங்க போல. கூட ஹாஸ்பிடல்ல துணைக்கு கூட யாருமில்லாம…”

“அவன் இருப்பான்ல. ஏன் அந்த புள்ளபூச்சி எங்க போய் தொலைஞ்சாளாம்?. அப்படியே தனியா கிடந்தா ரொம்ப நல்லது தான். செத்து ஒழியட்டும். எனக்கு அப்பத்தான் முழு நிம்மதி…”

வார்த்தைகளை தீக்கங்குகளாய் கொட்ட துடித்துபோனார் பத்மினி. மனது கிடந்து அடித்துக்கொண்டிருந்தது.

‘அவர்கள் ஒன்றும் உங்களிடம் பிச்சை ஏந்தி நிற்கவோ? உங்களிடம் பணம் பறிக்கவோ முயலவில்லை. யார் தயவுமின்றி தன்மானத்தோடு வாழ்கின்றனர்’ என கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது பத்மினிக்கு.

தான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளின் எதிரொலி அங்கே பிரதிபலிக்கும் என்பதால் பல்லை கடித்துக்கொண்டு அமைதிகாத்தார்.

தவறே செய்யாமல் எத்தனை இன்னல்களை தாங்கி வாழ்கின்றனர் என்று நன்றாகவே அறிந்தவர்.

அதிலும் பதினாறு வயது சிறுமியாய் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற அவளை என்றுமே மறக்கமுடியாது அவரால். எத்தனை வருடம் கழித்து பார்த்தார். கண்களுக்குள் ஒட்டிக்கொண்ட அவளின் முகம் அவரை உயிரோடு வதைத்தது.

‘ஹைய்யோ கடவுளே, எப்படியாவது அவங்களை காப்பாத்திவிட்டுடு. துவாரகாவையும் அவங்களோட சேர்த்துவச்சிடு. வயசு பொண்ணை இத்தனை நாளா காணலையே? எங்க போய் என்ன சிரமம் அனுபவிக்கிறளோ?’

அவர் மனதில் நினைக்கும் பொழுதே இதயத்தில் சுருக்கென தைத்தது.

‘இவர் எதுவும் செய்திருப்பாரோ?’ என ரத்தினசாமியை ஆழ்ந்து பார்க்க அதை கண்டுகொண்டவரோ,

“நீ என்ன நினைச்சிருப்பன்னு நல்லாவே தெரியும். மொத்தமா முடிக்கனும்னா என்னைக்கோ முடிச்சிருப்பேன். போனா போகுதுன்னு தான் விட்டுவச்சிருக்கேன். அதுவும் உனக்காக தான்…” மிக சாதாரணமாக சொல்லியவர்,

“திரும்பவும் போன இடத்துல பார்த்தேன், வர வழியில பார்த்தேன்னு என் காதுல விழுந்துச்சு அன்னைக்குதான் அவங்களுக்கு கடைசி நாள்…”

கொலைவெறி தாண்டவமாட மிருகத்தின் மொத்த உருவமே அவதாரம் எடுத்ததை போல பத்மினியின் முன்பு அவர் சொல்ல உயிர் அடங்க அசைவற்று அமர்ந்திருந்தார்.

அவரின் அதிர்ச்சியை பொருட்படுத்தாது பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவர் பத்மினியையும் எழுப்பி உள்ளே அனுப்பிவைத்தார். அவரும் வெளியே வர ஒரு டவலை எடுத்து கொடுத்து,

“நாளைக்கு பையனுக்கு கல்யாணம். நீ கனவுகண்ட கல்யாணம். இப்ப போய் ஏன் பத்மி இப்படி பன்ற? இந்த நிமிஷம் நாம சந்தோஷமா இருக்கவேண்டிய நேரம். என்னோட அதிபனுக்கு, நம்மோட ஒரே பிள்ளைக்கு கல்யாணம். அது மட்டும் தான் இப்ப நம்ம மனசு முழுக்க இருக்கனும். புரியுதா?…”

சிறிது நேரம் முன்பு எத்தனை ஆக்ரோஷமாய் சீறினாரோ இப்பொழுது அவை அத்தனைக்கும் நேர்மாறாய் அன்பை பொழிந்தார் ரத்தினசாமி.

அவரின் கண்களில் அத்தனைகாதலும் பாசமும் தான் கனிந்து கிடந்தது. பார்க்க பார்க்க பத்மினியின் கண்கள் பனித்தது.

‘இவர் எப்பொழுதுமே இப்படியே இருக்க கூடாதா?’ என உள்ளம் ஏங்கியது.

“கட்சி ஆபீஸ் வேற போகனும் பத்மிமா. இப்போ கிளம்புனா தான் போய் திரும்ப முடியும். தலைவர் வேற அடுத்த மாதம் நடக்க போற பொதுக்குழு மீட்டிங் பத்தி முக்கியமா பேசனும்னு சொன்னார். கல்யாண வேலைல அதை விட முடியாது. முக்கியமானது…”

அவர் பேசிக்கொண்டே இருக்க அப்பொழுதும் அவர் முகம் பார்த்தபடியே இருந்தார் பத்மினி.

“என்ன பத்மி அப்டி பார்க்க? கிளம்புமா. நேரமாகுதுல. முகத்தை துடைச்சுட்டு வேற புடவையை மாத்திக்க. பிள்ளைங்க கவனிச்சா என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க. விஷாலுக்கு தெரிஞ்சா அந்த ஹாஸ்பிடலுக்கு போய் ரகளையே பண்ணிடுவான். அப்பறம் ட்ரீட்மென்ட் நடுத்தெருவுல தான்…”

நக்கல் குரலில் மறைமுக மிரட்டலுடன் சொல்லியவர் வாட்ரோபை திறந்து அழகிய பட்டுப்புடவையை தேர்வு செய்தவர்,

“இன்னைக்கு இதை கட்டிட்டு வா பத்மி. நான் கிளம்பறேன். மண்டபத்துக்கு புறப்படும் போது வந்துடுவேன். சேர்ந்தே போகலாம்…” என சொல்லி கன்னம் தட்டியவர் கிளம்பி செல்ல ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தார் பத்மினி.

மனசாட்சியின்றி பேசியவரை ஒன்றும் கேட்கமுடியாமல் மௌனியாக இருந்தவர் ஒரு பெருமூச்சுடன் கிளம்ப ஆரம்பித்தார்.

‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ அந்த நொடி அவரின் மனதிற்கு தோன்றியது இது மட்டும் தான்.

துவாரகாவிடம் சென்ற மனதை இழுத்துபிடித்து நிறுத்தியவர் ஆகவேண்டிய வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

மாடிக்கு சென்று அனைத்தும் ரெடியாகிவிட்டதா என பார்க்க போக அங்கே அஷ்மிதாவுடன் அனைவரும் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தனர். மொபைலில் வருங்கால மருமகளின் முகம் கண்டதும் மலர்ந்துதான் போனார் பத்மினி.

அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு மண்டபத்திற்கு கிளம்ப கீழே வந்து அமர்ந்துகொண்டனர்.

அதற்குள் மிக நெருங்கிய உறவினர்களும் வீட்டிற்கே வந்துவிட அடுத்த ஒருமணிநேரம் அவர்களை கவனிக்கவென்றே சரியாக சென்றது.

சொன்னதுபோல் ரத்தினசாமி வந்துவிட சாமி கும்பிட்டு கிளம்பலாம் என்ற நேரத்தில் சரியாக அதிரூபனும் வந்துவிட்டான்.

அதிரூபன் நான்கு நாட்கள் முன்பே சென்னை வந்துவிட்டானே தவிர வீட்டிற்கு வந்தவுடனே கிளம்பி கெஸ்ட்ஹவுஸ் சென்று தாங்கிக்கொண்டான்.

சம்பிரதாயம் அது இதுவென எந்த கட்டுக்குள்ளும் அவனை நிறுத்திவைக்கமுடியவில்லை. நடந்ததை எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க பெரும் சிரமப்படவேண்டியதாக இருக்குமே என்றுதான் இந்த முடிவு.

மொத்த குடும்பம் சொல்லியும் கேளாதவனை ரத்தினசாமியின் முன்பு நிறுத்த அவரோ வழக்கம் போல,

“அதிபா உன் விருப்பம்பா. தாராளமா அங்க தங்கிக்க. உனக்கு துணைக்கு சந்தோஷை அனுப்பி வைக்கிறேன். கல்யாண மாப்பிள்ளை. ஒத்தையா இருக்ககூடாது பாரு…” என மகனிடம் பாசம் வளர்த்தவர்,

“கொஞ்சமாவது எதாச்சும் இருக்கா உனக்கு. தோளுக்கு மீறி வளர்ந்த புள்ளைய சின்னபுள்ளை மாதிரியா நடத்தறது? ஆயிரம் சோலி கழுதை இருக்கும் ஆம்பளைக்கு. ஒன்னோண்ணுத்துக்கும் உங்களுக்கு விளக்கம் குடுத்திட்டிருப்பானா? போங்க போய் ஆகவேண்டியது பாருங்க…”

என்று பத்மினிக்கு அத்தனை வசவுபாடுகள் கிடைத்தது தான் மிச்சம். மகன் என்றால் அப்படி இறங்கி வருவார் ரத்தினசாமி.

அதிரூபனை கண்டதும் சூரியனை கண்ட தாமரையை போல ரத்தினசாமியின் முகம் மலர்ந்துவிட்டது. அவனை அணைத்து விடுத்தவர்,

“அதிபா போய் குளிச்சுட்டு புது துணி மாத்திட்டு வந்துருப்பா. சாமி கும்பிட்டுட்டு நல்ல நேரத்துல கிளம்பனும்…” என சொல்லவும் அவரிடம் தலையசைத்துவிட்டு வந்திருக்கும் உறவினர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மேலே சென்றான்.

சிலநிமிஷங்களில் தயாராகி கீழே வந்தவனை ஆசை பொங்க பார்த்த ரத்தினசாமியை கண்டு அத்தனை வியப்பாக தான் போனது பத்மினிக்கு.

‘இந்த மனுஷன் மகனைகண்டுட்டா மட்டும் பச்சப்பிள்ளையா மாறிடறார். இவர் தான் கொஞ்சம் முன்ன என்னிடம் அத்தனை கோவம் காட்டியவரா?’

‘இது நிஜமா? இல்லை கொலைவெறி பிடித்த அந்த அரக்கத்தனம் நிஜமா? எப்படி ஒரு மனிதருக்குள் இருவேறு முகங்கள்?’ என குழப்பமாய் பார்த்தார்.

“சாமி கும்பிடலாம் அண்ணா…” பூரணி அழைக்க சரி என்றவர் அனைவரையும் கூட்டிக்கொண்டு பூஜையறையில் நிற்க அனைவரும் கை கூப்பி வணங்கி நிற்க அதிபன் மட்டும் சலனமின்றி ரத்தினசாமியை பார்த்தான்.

அவனுக்கு தெரியும், அவர் தன் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு. ஆனாலும் ஏனோ அதை நினைத்து பெருமிதம் கொள்ளமுடியவில்லை.

சில நொடிகள் அமைதியாக பார்த்திருந்தவன் அவர் கண்திறக்கும் நேரம் முகம் திருப்பி கை கூப்பி கடவுளை வணங்க ஆரம்பித்தான். எதையும் கேட்கும் மனநிலை இல்லை அவனுக்கு.

தனக்கு தேவையானதை தானே நிச்சயம் செய்துகொள்ளும் வல்லமை கொண்டிருந்தான். ஆனாலும் அதற்கும் கடவுளின் ஆசிர்வாதம், அனுகிரகம் வேண்டுமே! அதற்கு நின்றான்.

தனக்கு துணை நின்றால் மட்டும் போதுமானது. அனைத்தையும் நடத்திக்கொள்வேன் இப்படித்தான் வேண்டிக்கொண்டிருந்தான். ஆனால் ஒன்றை மறந்துவிட்டிருந்தான்.

நினைக்க வைப்பதும் அவனே. நிகழ்த்துவதும் அவனே. வேண்டாமென்றால் நிராகரித்துவிடுவதும் அவனே. அவனன்றி உலகில் அணுவும் அசையாது என்பது.

நடந்தவை அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. அவனுக்கென விதிக்கப்பட்டவை.

ரத்தினசாமியின் வாரிசாக ஜனித்ததும் அவனின் செயல். துவாரகாவை நினைக்கவைத்ததும், அவளை இக்கட்டான தருணத்தில் காப்பாற்ற வைத்ததும் அவனின் செயல்.

இனி நடக்கவிருப்பதும் கூட ஏற்கனவே அவனால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.

பூஜை முடிந்து அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு வந்து சேர அங்கே ஏற்கனவே இன்னும் சில உறவினர்கள் கூடியிருந்தனர். அதிரூபன் இறங்கியதும் அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.

விஷாலுக்கும் அர்னவுக்கும் நிற்கவும் நேரமில்லை. சந்தோஷிற்கு மட்டும் அதிரூபனோடே இருக்கவேண்டிய உத்தரவு. அவனுக்கு தேவையானதை கவனிக்க.

ப்ரனேஷ் தன் தம்பியோடு அப்பொழுதே வந்துவிட்டான். அவனோடு இன்னும் சில ப்ரெண்ட்ஸ் கூட.

அனைவரையும் வரவேற்று கவனிக்கும் பொறுப்பும் சந்தோஷை சேர்ந்தது. மாலை மயங்கும் நேரம் மணப்பெண் அலங்காரத்தில் அஷ்மிதா வந்து சேர ரிசப்ஷன் ஆரம்பித்தது.

நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிந்துவிட்டதால் முதல்நாள் எந்த சம்பிரதாயமும் இல்லை அவர்களுக்கு. எனவே இளைஞர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமின்றி அவ்விடமே அல்லோலபட்டது.

அமைச்சர் வீட்டு திருமணம் என்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகம் இருந்தது.

கட்சி பிரமுகர்கள் தொழில்துறை நண்பர்கள் என அனைவரின் வருகை மண்டபத்தையே திக்குமுக்காட செய்தது. அனைத்தையும் அசராமல் சமாளித்தார் ரத்தினசாமி. உடன் அவரின் தம்பி சங்கரனும்.

பத்மினியும், அன்னபூரணியும் தான் கொஞ்சம் மலைத்துபோயினர். ரிசப்ஷன்கே இவ்வளவு கூட்டம். நாளை திருமணத்திற்கு இன்னும் அதிகமாக தான் இருக்கும்.

அதிலும் முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், பிரபலங்கள் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சி.

RAS க்ரூப்ஸ் இல்ல திருமணம் என்றால் சாதாரணம் இல்லையே.

மகள் சந்தியாவின் திருமணமும் பிரமாண்டம் தான். குறையில்லை. ஆனாலும் அதிரூபன் திருமணம் இன்னும் பிரமாண்டமாக இருந்தது.

அஷ்மிதாவிற்கு தான் வயிற்றில் புளியை கரைத்தது. அதிரூபன் தான் அவளை சமாதானம் செய்தான்.

அவளின் பயமெல்லாம் வேறு. ரத்தினசாமியை கண்டு துளியும் பயமில்லை. முன்பு போல் இயல்பாய் அவரிடம் பேசிடவும் இல்லை. அவரும் திருமண களைப்பில் மருமகள் இருக்கிறாள் என்று விட்டுவிட்டார்.

இத்தனை வேலைகளுக்கும் நடுவில் அந்த ஹாஸ்பிடலுக்கு ஆள் அனுப்பி சூழ்நிலையை அறிந்துகொண்டார். எதிலும் கண்காணிப்போடு இருக்கவேண்டும் என்பதால் மட்டுமே இந்த விசாரணையும்.

அவரின் கண்ணை மறைத்து எதுவும் நடந்துவிடகூடாதே என்பதால் உண்டான முன்னெச்சரிக்கை.

ஹாஸ்பிடலில் இருந்து வந்த தகவலோ அவரின் மனதில் அத்தனை உவகையை தந்தது. இனி வெகுநாட்கள் தாங்கபோவது இல்லை. போய் தொலையட்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.

அதனாலேயே அவரின் முகம் இன்னமும் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. வந்தவர்களை இன்முகமாக வரவேற்று நன்றாக கவனித்து அனுப்பினார்.

ஒருவழியாக ரிசப்ஷன் முடிந்து மண்டபமே காலியாக அதிரூபன் உட்பட அனைவரும் உறங்க சென்றனர்.

மறுநாள் விரைவாக எழுந்து தயாராக வேண்டும் என்பதால் அனைவரும் உறங்க சென்றுவிட அதன் பின் மெதுவாய் அஷ்மிதாவின் அறைக்கு சென்றான் அதிரூபன்.

ஏற்கனவே அவளுக்கு போன் செய்து சொல்லிவிட்டதால் அவளும் அவனுக்காய் காத்திருந்தாள். லேசாக கதவை தட்டவும் உடனே திறந்தவள் அவன் வந்ததும் பூட்டிக்கொண்டாள்.

அங்கே கட்டிலில் பயத்துடன் அமர்ந்திருந்தவளை கண்டதும் தான் நிம்மதியானது அவனுக்கு.

“மாமா…” என்ற அழைப்புடன் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தவளை அணைத்துகொண்டவன் ஆறுதலாய் வருடினான்.

“துவா, பயந்துட்டியாடா?…” மென்மையாய் கேட்க,

“ஹ்ம்ம்…” என தலையை மட்டும் அசைத்தவள் அவனிடமிருந்து விலகி,

“இப்பவும் வேண்டாம் மாமா. பயமாயிருக்கு. நான் அம்மாட்ட போய்டறேன். யாரும் பார்த்துடாம என்னை கொண்டுபோய் விட்டுடுங்க மாமா. நான் தான் உங்களை மாமான்னு கூப்ட்டுட்டேனே?…”

அந்த ஏசியின் குளுமையிலும் பயத்தில் வியர்த்து உடையெல்லாம் நனைந்திருக்க அவளின் மனநிலை உணர்ந்தான். இந்த சிறிதுநேர இடைவெளியில் யாரும் பார்த்துவிடுவார்களோ என எத்தனை பயந்திருப்பாள் என்பதை உணர்ந்துகொண்டவன் அவனிடம் டீல் பேசியவளை இமைக்காமல் பார்த்தான்.

“அப்போ நான் வேண்டாமா?. என்னை பிடிக்காதா?..” என கேட்கவும் திடுக்கிட்டவள் வேகமாய்,

“இல்லை, இல்லை, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா இது லவ்… லவ்.. எல்லாம் இல்லை…” விழி தாழ்த்தி தயக்கமாய் சொல்லியவளை கண்டு புன்னகைத்தவன்,

“அப்போ என்ன?…” என கேட்க,

“தெரியலை. உங்களை பிடிக்கும். ஆனாலும் எனக்கு உங்க மேலையும் கொஞ்சம் பயம்தான்…” உண்மையை சொல்லிவிட சத்தியமாய் அவன் முகம் மாறுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

இருவரையும் கண்ட அஷ்மிதாவிற்கு தான் பாவமாக போனது. எப்படி இது சாத்தியப்படும் என பார்த்திருந்தாள்.

எதற்கும் அஞ்சாத அவன்…

அச்சமே உருவான அவள் …

மின்னல் தெறிக்கும்…

Advertisement