Advertisement

மின்னல் – 4

     அதிரூபன் எத்தனை முயன்றும் துவாரகாவிடம் விஷயத்தை வாங்கவே முடியவில்லை.  அஷ்மிதாவிடம் பேசியதில் இருந்து என்னவென ஓரளவு யூகித்து இருந்தவன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டான்.

அவள் கண்விழித்து தன்னை பார்த்த நொடியில் அவள் முகத்தில்  தோன்றிய கலவையான உணர்வில் கட்டுண்டு இறுக்கமாக நின்றவன் அவள் முகம் திரும்பியதும் முகம் மென்மையானது.

‘இவளுக்கு பேச பிடிக்கலையாமா?’ மனதிற்குள் நொடித்துக்கொண்டு வெளியில் கண்டுகொள்ளாத பாவனையை முகத்தில் கொண்டுவந்தவன்,

“ஹவ் ஆர் யூ துவாரகா?…”   கரகரத்த குரலை செருமிக்கொண்டு கேட்க பதில் சொன்னாளில்லை.

இதை பார்த்துக்கொண்டிருந்த அஷ்மிதாவிற்கு ஐயோ என்றிருந்தது.

‘இதுங்க இம்சை தாங்கமுடியலையே. கண்ணால பார்த்தே கொல்றாங்களே?’  என நொந்துகொண்டவள்,

“ம்க்கும்…” என தொண்டையை கனைக்க அதிரூபன் திரும்பி பார்த்துவிட்டு ஞாபகம் வந்தவனாக,

“துவாரகா இது அஷ்மிதா. டாக்டர்…” என்றதும் அவளை நிமிர்ந்து பார்க்க அவளருகே வந்து புன்னகைத்தாள் அஷ்மிதா.

“ஹாய்…” என சொல்ல பதிலுக்கு தானும்,

“ஹாய்…” என்றவள்,

“நான் வீட்டுக்கு போகனும். அம்மாவ பார்க்கனும்…” அதிரூபனுக்கு கேட்டுவிடாத குரலில் கேட்க அதற்கு புன்னகையோடு தலையசைத்த அஷ்மிதா,

“ஏன் உன்னை காப்பாத்தினவன் பக்கத்துல தானே இருக்கான். கேட்டா மாட்டேனா சொல்வான்?…”

‘இவங்க கார்ல தான் ஏறிவந்தோமா? எனக்கு உதவியெல்லாம் செய்திருக்காங்களே?’ அவனின் முகத்தை திரும்பி பார்த்தவள் மீண்டும் தலையை திருப்பிக்கொள்ள,

“துவாரகா…” மீண்டும் அவனின் அழுத்தமான அழைப்பு காதில் விழுந்தாலும் திரும்பாமல் இருக்க அவளின் கன்னத்தில் விரல்பதித்து வலுக்கட்டாயமாய் திருப்பி தன்னை பார்க்க வைத்து,

“இவங்க டாக்டர் அஷ்மிதா. இன்னும் பத்துநாள்ல எங்களுக்கு மேரேஜ்…” சொல்லியேவிட்டான்.

நொடியில் அவனின் இறுகிய விரல்களுக்குள் அழுந்திக்கிடந்த கன்னங்கள் சூடாக விழிகள் ஷணத்தில் விரிந்து சுருண்டது.

தன் திருமண செய்தியை சொன்னதும் அவள் முகத்தில் சிறு மின்னலென வந்துபோன பாவங்களை வைத்து அறிந்துகொண்டான்.

அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு என்றபடி அஷ்மிதாவை பார்க்க அவளோ,

“வாய்ப்பே இல்லை மகனே…” என்று பார்த்து சைகையில் தன் கழுத்தில் தாலுகட்டுவதை போல காண்பித்துவிட்டு,

‘உனக்கு வேறு வழியே இல்லை மீறினால்’ கழுத்தை சீவுவதை போல காண்பித்து நாக்கை ஒருபக்கமாக துருத்தி தலையை சாய்த்து கண்களை சொருகுவதை போல ஆக்ஷன் காண்பிக்க அவளை முறைத்தான்.

அதை எல்லாம் கண்டுகொண்டால் அவள் அஷ்மிதாவாக இருக்கமுடியாதே.

“எஸ், இந்த முரட்டு சிங்கிள்க்கு ஏத்த மாஸ்டர் பீஸ் இந்த அஷ்மிதா தான்…” பெருமையாய் சொல்லியவள்,

“நீயும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும் துவாரகா…” என அஷ்மிதாவும் அழைக்க துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாக்களை போல,

“என்னை கூப்பிடாதீங்க. அங்க நான் வரமாட்டேன். நான் வரமாட்டேன். வரவேமாட்டேன். கூப்பிடாதீங்க…” அவனின் கையை தட்டிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க திகைத்துபோனாள் அஷ்மிதா.

அதிரூபனுக்கு தெரியும், துவாரகாவின் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்று. ஆனாலும் அமைதியாக இருந்தான்.

“ஓகே ஓகே கூல் துவா. கூல். நான் இன்வைட் பண்ணலை. போதுமா. ரிலாக்ஸ்…” அங்கிருந்த தண்ணீரை எடுத்துகொடுக்க அதை தட்டிவிட்டாள் துவாரகா.

“வேண்டாம், எனக்கு தண்ணி வேண்டாம்.  இவங்க இவங்க இருக்காங்க. இங்க இருக்கங்க. நான் தண்ணி குடிக்கமாட்டேன். திரும்ப அங்க தூக்கிட்டு போய்டுவாங்க. அடிப்பாங்க. வலிக்கும். என்னை விட்டுட சொல்லுங்க, நான் வீட்டுக்கு போய்டறேன். அம்மாட்ட போய்டறேன்…”

அஷ்மிதாவின் வயிற்றில் முகம் புதைத்து இடையோடு அணைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்துவிட இப்படி ஒரு கதறலை அவளிடமிருந்து அதிரூபனுமே எதிர்பார்க்கவில்லை.

சில நொடிகள் கூட அவளின் கண்ணீரை பார்க்கமுடியவில்லை. விஷாலையும், அவனை இப்படி வளர்த்த ரத்தினசாமியையும் நினைக்க நினைக்க ஆத்திரங்கள் அதிகரித்தது.

தான் இருக்கும் இடத்தில் ஒரு வாய் தண்ணீரை குடிக்க அஞ்சும் அளவிற்கு தன் குடும்பத்தினர் இவளை ஆக்கிவிட்டார்களே? என்ன மருகி என்ன பயன்? இவளின் இந்த எண்ணத்தை எப்படி மாற்ற என யோசிக்க கூட முடியவில்லை.

அவளின் அழுகை குரல் மூளையை மழுங்கடித்தது. யோசிக்க கூட முடியாத அளவிற்கு கண்ணிலும் கருத்திலும், நெஞ்சிலும் அவளின் கண்ணீர் முகமே.

அங்கிருக்க முடியாமல் எழுந்து அஷ்மிதாவின் அறைக்கு சென்றுவிட்டான். எத்தனை முயன்றும் சில விஷயங்களை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் தயாராக இல்லை.

இப்பொழுதே இதற்கு காரணமானவர்களை தண்டித்துவிடலாம். ஆனால் அது நிமிடத்தில் கடந்துவிடகூடிய ஒன்றாக போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருந்தான்.

ஏற்கனவே எடுத்திருந்த முடிவுதான். ஆனாலும் இப்பொழுது இன்னும் ஸ்திரம்பட்டது.

வெகுநேரம் எப்படி செயல்படுத்துவது என யோசித்து மனதிற்குள்ளேயே சில வரைபடங்கள் வரைந்து ஒத்திகையும் பார்த்துக்கொண்டிருக்க அஷ்மிதா வந்துவிட்டாள்.

“அதி, ஏன் இவ்வளோ ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கற? நான் பார்த்துக்கறேன்னு சொல்லிருக்கேன்ல. அதுக்குள்ளே என்ன உனக்கு பொறுமை இல்லாம…”

அவனை கடிந்துகொள்ள அதற்குள் நர்ஸ் வந்து ஹாஸ்பிடல் டீன் அவளை வரசொன்னதாக கூற அவளுடன் அதிரூபனும் சென்றான்.

அவனையும் அஷ்மிதாவுடன் கண்டதும் எழுந்து வந்து கை குலுக்கியவர் அவர்களை அமர சொல்லி தானும் அமர்ந்துகொண்டார்.

“ஹவ் ஆர் யூ மிஸ்டர் அதிரூபன்?…” மகிழ்வாய் கேட்டவர்,

“சப்ரைஸ் தான் இன்னைக்கு. ஈவ்னிங் தான் வருவீங்கன்னு அஷ்மிதா சொல்லியிருந்தாங்க. உங்களை நைட் டின்னருக்கு இன்வைட் பண்ணலாமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்….” டாக்டர் பிரேம் பேச,

“வரவேண்டிய அவசியம்  வந்தா வந்துதானே ஆகனும். அதான் வந்துட்டேன்…”

“ஓகே ஓகே, உங்க மேரேஜ் இன்னும் டென் டேய்ஸ்லன்னு ராஜாங்கம் ஸார் காலைல தான் சொன்னார். முதல்ல என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடறேன்…”

மீண்டும் வாழ்த்தை கூறி இருவருக்கும் கைகுலுக்கியவர் மேலும் பொதுவான விஷயங்களையும் அவர்களின் திருமண ஏற்பாடுகள் பற்றியும் கேட்டுகொண்டார். அதிரூபன் பேசிக்கொண்டே இருக்க இவன் எப்பொழுது சொல்ல என நினைத்த அஷ்மிதா,

“அங்கிள், உங்ககிட்ட ஒரு சின்ன ஹெல்ப்…” என ஆரம்பிக்க அதிரூபனும் அர்த்தமாய் அவரை பார்த்தான். அதிலேயே புரிந்துகொண்டவர்,

“கண்டிப்பா செய்யறேன்…” என வாக்களிக்க,

“இன்னைக்கு நான் லாஸ்டா அட்டன் பண்ணின பேஷன்ட் பற்றி யாருக்கும் எந்த விவரமும் தெரியகூடாது. அது யாரை சேர்ந்தவங்களா இருந்தாலும்…”

“இது ரொம்ப கான்பிடன்ஷியல்…” அதிரூபனும் சொல்ல யோசனையாய் பிரேம் பார்க்க மேலும் சில விவரங்களை சொல்லிய அஷ்மிதா அவரிடம் சம்மதம் வாங்கிக்கொண்டு  தான் விட்டாள்.

“ஓகே அஷ்மிதா, கண்டிப்பா உங்களுக்காக இதை செய்யறேன்.  என்னைக்கு சென்னை கிளம்பறீங்க?…”

“இன்னும் ரெண்டு நாள்ல. இன்விடேஷன் மெயில் பன்றேன் டாக்டர்…” அவரிடம் பேசிவிட்டு மீண்டும் அறைக்கு வர,

“காபி சொல்லு அஷ்மி, ரொம்ப ஹெடேக்கா இருக்கு…” தலையை பிடித்துக்கொண்டு அவன் அமர்ந்துவிட காபிக்கு சொல்லியவள் முகம் கழுவி வரவும் அதிரூபனும் ப்ரெஷ் ஆகி வந்தான்.

“அதி, நீ வேணும்னா என் ப்ளாட்க்கு போய் குளிச்சுட்டு வாயேன். நான் இங்க வெய்ட் பன்றேன். எவ்வளோ நேரம் இப்படி அழுக்கு ட்ரெஸ்ல சுத்துவ?…”

அவன் கண்டுகொள்ளாமல் இருக்க அஷ்மிதா விட்டுவிடுவாளா?

“இப்ப தெரியுதுடா, ஏன் அந்த பொண்ணு உன்னை பக்கத்துலையே விடலைன்னு…” கண்ணடித்து சொல்ல அவளை முறைத்தவன்,

“எனக்கு தெரியும். வெட்டியா மொக்கை போடாம காபி என்னாச்சுன்னு பாரு…”

காபி வரவும் இருவரும் குடித்துவிட்டு மீண்டும் துவாரகாவை பார்க்க செல்ல அவள் எழுந்து அமர்ந்திருந்தாள்.

முதலில் அஷ்மிதா மட்டும் வரவும் அவளை கண்டு அமைதியாய் பார்த்தவள் அதிரூபன் பின்னோடு வரவும் வேகமாய் இழுத்து போர்த்தி படுக்க முயன்றாள்.

அத்தனை நேரம் சமாதானம் செய்திருந்த மனதையும் மீறிய கோபம் அதைகண்டு உண்மையில் பொங்கிட அவளை இழுத்து நிறுத்தியவன்,

“உன்னை நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி நடந்துக்கற?…” அஷ்மிதாவை பாவமாய் பார்த்தவள்,

“எனக்கு தூக்கம் வருது. அதான்…” குரல் நடுங்க சொல்லியும் அவளை விட அவனுக்கு மனமில்லை. ஆனாலும் அவளின் உடல்நிலை கண்டு நிதானித்தவன்,

“சாப்பிட்டு தூங்கு…” என கட்டளையாய் மொழிந்து அஷ்மிதாவை பார்த்தான்.

‘இவளை கவனி’ என்ற  த்வனி அவனின் பார்வை பாஷையில் ஒளிந்திருக்க அதை கண்டுகொண்டவள் கடுப்பானாள்.

‘இவனுக்கு நிஜமாவே என்னை பார்த்தா எப்படி தெரியுது? ரூம்ல காபின்றான். இங்க டிபன்றான். இல்ல என்னதான் நினைச்சிட்டு இருக்கான்’ மனதிற்குள் பொரிந்தாலும் துவாரகாவிற்காக அவள் செய்தாள்.

சாப்பிடும் நேரம் வெளியே சென்று நின்றுகொண்டான் அதிரூபன். பின்னே மீண்டும் தண்ணீர் குடிக்கமாட்டேன் என பிடிவாதம் பிடித்ததை போல சாப்பிடவும் மாட்டேன் என பிடிவாதம் செய்தால் என்ன செய்வாள் என்று தான்.

உண்டு முடித்து வரவுமே அவன் கேட்ட முதல் கேள்வி.

“இப்போ சென்னைல நீங்க எங்க இருக்கீங்க? சென்னைல தான் இருக்கீங்களா? வீடு எங்க? எந்த ஏரியா? எந்த காலேஜ்? …”

அவள் பதில் சொல்ல கூட நேரம் தராமல் சரமாரியான கேள்விகனைகளால் அவளை துளைத்துக்கொண்டிருந்தான்.

அவளின் புறக்கணிப்பில் அவனின் முகம் கடுகடுவென இருக்க பார்க்கவே அத்தனை பயமாக இருந்தது துவாரகாவிற்கு. அதையும் விட அவனின் கேள்விகள் கொடுத்ததோ உயிர்பயம்.

‘இவங்க குடும்பம் எங்களை விடவே விடாதா?’ நொடிக்கு நொடி உணர்வுகளின் குவியலில் உயிர் பயமே.

இனியும் தாமதிக்க நேரமில்லை என்னும் அவசரம் அவனிடத்தில். அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிடும் அவசியத்தில் அவள். இருவரின் இருவரின் எண்ணங்களையும் கவனித்துக்கொண்டு இருந்தாள் அஷ்மிதா பார்வையாளராக.

அதற்குள் சந்தோஷிடமிருந்து கால் வர அஷ்மிதா திட்டிவிட அதிரூபன் பேசி வருவதற்குள் அஷ்மிதா துவாரகாவிடம் மொத்தமாய் கரைந்துபோயிருந்தாள்.

அதிலும் தன் தாய் இருக்குமிடம் சொல்லும் பொழுதில் அதிரூபன் மீண்டும் உள்ளே வந்ததும் துவாரகா பூச்சாண்டிக்கு பயம்கொள்ளும் குழந்தையென வாயை மூடிக்கொண்டு பயப்பார்வை பார்த்ததுமே ரத்தினசாமியின் மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையும் விண்டுபோனது.

அந்த கோபமனைத்தும் உருமாறி அதிரூபனிடம் பாயத்துடித்தது. துவாரகாவின் மனதினை மனதில் வைத்துக்கொண்டு பல்லைகடித்துக்கொண்டு அவளுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து உறங்க வைத்து திரும்பினாள்.

இன்னமும் தானும் அவனும் எதுவுமே உண்ணவில்லை என்பது உரைக்க வேகமாய் கேண்டீன் நோக்கி சென்றுவிட மருந்துகளின் உபயத்தில் உறங்கிக்கொண்டிருந்தவளின் முகத்தை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

மீண்டும் உணவுகளுடன் அஷ்மிதா வரும் நேரம் அதிரூபன் மொபைலில் யாருடன் பேசிக்கொண்டிருந்தான் மிக தீவிரமாக.

“ஐ சூர்.  பி.ஆர் ஹாஸ்பிடல் தான். தேடிப்பாருங்க…”

“…..”

“நோ, நோ. என்னால டைம் குடுக்க முடியாது. எனக்கு இப்பவே தெரிஞ்சுக்கனும். ஹாஸ்பிடல் பெற சொல்லியாச்சு. இதுல உங்களுக்கு என்ன சிரமம்? அவங்க போட்டோவும் பார்வேர்ட் பண்ணிருக்கேன்…” என்றவன்,

“க்விக்கா முடிக்கனும். இது ரொம்ப ரொம்ப ரகசியமா இருக்கட்டும். எக்காரணத்தை கொண்டும் வேற யாருக்கும் தெரிஞ்சிடகூடாது. என்னை தவிர…”

பேசிமுடித்துவிட்டு அமரவும் அஷ்மிதா அவனுக்கு முன்னால் டீப்பாயை இழுத்துபோட்டு வாங்கியவைகளை பிரித்து வைத்துவிட்டு தனக்கு தேவையானதை உண்ண தொடங்கினாள்.

“இப்ப எதுக்கு இத்தனை வாங்கிட்டு வந்திருக்க? இதுல சாப்பிடுன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம நீபாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்க?…”

“நீ என்ன சாப்பிடற மூட்ல இருக்கன்னு யாருக்கு தெரியும்? எனக்கும் உனக்கும் பிடிச்சதா வாங்கிட்டு வந்துட்டேன். என் வேலை முடிஞ்சது. நீ சாப்பிட்டா என்ன? இல்லைனா எனக்கென்ன? என்னால முடியாதுப்பா…”

அதற்குமேல் சாப்பிட மட்டுமே வாயை திறப்பேன் என்பதை போல உணவில் கவனமாய் இருக்க அவளின் தலையில் வலிக்கும் படி கொட்டியவன் தானும் சாப்பிட ஆரம்பித்தான் துவாரகாவிடம் பார்வையை பதித்தபடி.

“சாப்பாட்டுல கண்ணை வச்சு சாப்பிடு. எதாச்சும் விழுந்துகிடக்க போகுது. எந்த காக்காவும் அவளை தூக்கிட்டு போய்டாது…”

“அதுக்குதான் நீ இருக்கயே. என் ப்ளேட்டை கவனிச்சுக்கோ…” அவனும் சளைக்காமல் பதிலளிக்க,

“எனக்கு வேற வேலை இல்லை போடா…” அவள் வேறுபுறம் திரும்பி சாப்பிட சிறு புன்னகையோடு தானும் உண்டுமுடித்தான்.

“அஷ்மி, ஒரு ஹெல்ப் பண்ணுடா…”

“இவ்வளோ நேரம் அதத்தான பண்ணிட்டு இருக்கேன். இன்னும் என்ன?…” துவாரகாவிற்கு செலைனை மாற்றிக்கொண்டே அவனிடம்பேச,

“பார்த்துஅ சுமி, ஏற்கனவே வலி அவளுக்கு. நீ மாத்தும்போது மெதுவா…” அவனை முடிக்கவிடாமல் திரும்பி முறைத்தவள்,

“என் வேலை இது. நீ எனக்கு சொல்ல தேவையில்லை…” நேற்றிலிருந்து அவன் செய்துகொண்டிருக்கும் அலும்பிலும் துவாரகாவை படுத்தும் விதத்திலும் எரிச்சலில் இருந்தவள் இப்படி அவன் கேட்கவும் இன்னும் காண்டானாள்.

“ஓகே, ஓகே. நீ இன்னைக்கு இங்கயே ஸ்டே பண்ணு. நான் இப்ப கண்டிப்பா போயாகனும். மோஸ்ட்லி நைட் சீக்கிரமே வந்திடுவேன்…” அவனின் அவசரம் புரிந்தவள்,

“ம்ம், ம்ம். ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணு வந்திடறேன்…” வேகமாய் வெளியேறியவள் சென்ற வேகத்தில் மீண்டும் அறைக்கு வரும் போது குளித்து புதிதாய் வேறு உடை அணிந்திருந்தாள்.

“ஏற்கனவே இன்னைக்கு லீவ் தான் சொல்லியிருந்தேன். என் ட்யூட்டியை வேற டாக்டர்க்கு மாத்தியாச்சு. நேத்து ட்ரெஸ்ல என்னால இருக்க முடியாது. அதான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்தேன்…” என்றவள் தன் கைபையை திறந்து ஒரு சாவியை கொடுத்து,

“இது என் ப்ளாட் கீ. நீயும் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பு…” என சொல்லவும் அவளை அணைத்துக்கொண்டவன்,

“தேங்க்ஸ் டா அஷ்மி…” என்று சொல்லிய நிமிடம் விலகி துவாரகாவின் நெற்றியில் ஷணபொழுதில் இதழொற்றல் ஒன்றையும் நிகழ்த்துவிட்டு பறந்துவிட்டான்.

அதன் பின்னான பொழுதுகள் இறக்கையின்றி கடந்துசெல்ல அஷ்மிதாவிடம் அவ்வப்போது துவாரகாவை பற்றியும் கேட்டறிந்துகொண்டான்.

இரவு ஹாஸ்பிடலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பொழுதில் தான் ரத்தினசாமியிடமிருந்து அழைப்பு வர எடுத்தவன்,

“சொல்லுங்கப்பா…”

“அதிபா, அப்பா பேசறேன்ப்பா…” எப்பொழுது அழைத்தாலும் இதை சொல்லாமல் அவர் பேச ஆரம்பிக்கவே மாட்டார்.

வெளியிலும் அரசியலிலும் எப்படி இருந்தாலும் தன் குடும்பத்திற்கும் தனக்கும் அவர் எத்தனை நல்ல மனிதர் என்பதை இப்பொழுதும் உணர்ந்தவனுக்கு கசப்பான முறுவல் தோன்றியது.

“சொல்லுங்கப்பா…”

“அதிபா மினிஸ்டரை பார்த்துட்டு வந்துட்டோம்பா…”

“ஹ்ம்ம்…”

“கண்டிப்பா வரேன்னு வாக்கு குடுத்துட்டார். நாளைக்கே எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிடவேண்டியது தான். இன்னைக்கு சந்தோஷ்கிட்ட உனக்கும் மருமகளுக்கும் பத்திரிக்கை அனுப்பி வைக்கிறேன். காலைல வந்திடுவான். அங்க உன்னோட ப்ரெண்ட்ஸ்க்கு குடுத்திடு…”

“ஓகேப்பா…” என்றவன் மேலும் அனைவரின் நலம் விசாரித்துவிட்டு மொபைலை வைத்துவிட சந்தோஷ் அழைத்து தான் கிளம்பிவிட்டதாக சொல்ல அஷ்மிதாவின் ப்ளாட்டிற்கு நேராக வந்துவிடுமாறு சொல்லி வைத்து முடித்த பின் தான் கொஞ்சம் ஆசுவாசமானான்.

அவர்களிடம் பேசும்பொழுது ஏனோ தன்னையும் மீறி வார்த்தைகளை கொட்டிவிடுவோமோ என்ற எண்ணத்திலேயே பேச்சை சுருக்கிக்கொண்டான்.

காரின் வேகத்தை அதிகப்படுத்தியவன் ஹாஸ்பிட்டல் வந்து சேர இரவு பதினோரு மணியானது.

ஏனோ நெஞ்சம் படபடப்பாய் இருக்க காரை பார்க் செய்துவிட்டு வேகவேகமாய் நடையை எட்டிபோட்டவன் துவாரகாவின் அறைக்குள் வர அறையில் அஷ்மிதா இல்லாததை கவனித்தவன் துவாரகாவின் முகம் பார்த்து விலகிய விழிகள் அவளுக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் மீது சென்றது.

அதை பார்த்த கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு அதில் ஆத்திரம் கொப்பளிக்க,

“அஷ்மி…” என கத்தினான். அவனுக்கு பின்னாலேயே வந்துகொண்டிருந்தவள் அவனின் கத்தலில் வேகமாய் ஓடிவந்தாள்.

இரவு நேரம் ஆழ்ந்த அமைதி பரவிக்கிடந்த மருத்துவமனையில் இங்குமங்கும் இருந்த சில நர்ஸ்களும் டாக்டர்களும் ஓடிவர,

“என்னாச்சு அதி? ஏன் கத்தற?…” பதறிக்கொண்டு வந்தவளிடம் தன் கோபத்தை காட்டியவன்,

“இதுதான் நீ துவாவை கவனிச்சுக்கற லட்சணமா?…” என்று ட்ரிப்சை காண்பிக்க மொத்த செலைனும் காலியாகி அவளின் குருதி கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டிலினுள் மீண்டும் சென்றுகொண்டிருந்தது.

அதை பார்த்ததும் அதிர்ந்தவள் உடனடியாக அதை கவனிக்க அதற்குள் இன்னொரு நர்ஸ் பயத்துடன் உள்ளே நுழைந்தாள்.

“என்ன பவானி நீ? கொஞ்சம் பார்த்துக்கன்னு சொல்லிட்டு தானே போனேன். ஏன் இவ்வளோ கேர்லெஸ்?…” அஷ்மிதா கடிந்துகொண்டிருக்க,

“இல்ல டாக்டர் போன் பேச…” என்ற அப்பெண்ணை கொஞ்சமும் யோசிக்காமல் அறைந்தே விட்டான்.

யாருமே எதிர்பார்க்காத இந்த செயலில் அனைவருமே ஸ்தம்பித்து போக ஒரு நிமிடம் என்ன செய்வதென தெரியாமல் பார்க்க அனைவரையும் வெளியேற சொன்னவள்,

“கால்ம்டவுன் அதி. அவங்க மேல தப்புனா நிர்வாகம் ஆக்ஷன் எடுக்கும். எங்க ஹாஸ்பிடல் நர்ஸை அடிக்க உனக்கு யாரு ரைட்ஸ் குடுத்தா?…”

அஷ்மிதா கோபப்பட ஒரு நொடி தன்னை நினைத்தே வெட்கியவன் திரும்பி பார்க்க அரண்ட விழிகளோடு துவாரகா இவனையே பார்த்துக்கொண்டிருக்க, ‘என்ன செய்துவிட்டேன் இவள் முன்னால்?’ என நொந்துகொண்டவன்,

“டாக்டர்ஸ், நர்ஸ் இவங்களை நம்பிதானே பேஷன்ட தனியா விட்டுட்டு போறோம்.  அவங்க உயிர் மேல எத்தனை அலட்சியம் இவங்களுக்கு? இந்த பொண்ணை வேலையை விட்டு எடுக்கலை நான் சும்மா விடமாட்டேன். போன் பேசனும்னா வீட்லயே இருக்கவேண்டியதுதானே?…”

அப்பொழுதும் விடாமல் அவன் கத்திக்கொண்டிருக்க , ‘இவன் அடங்கமாட்டானே?’ என்ற பார்வையோடு அப்பெண்ணின் மீதும் கண்டனபார்வையை வீச,

“ஸாரி டாக்டர். பையனுக்கு உடம்புக்கு முடியலை. ஜுரம் ரொம்ப அதிகமா இருக்கறதால 4 ஹவர்ஸ் ஒன்ஸ் சிரப் குடுக்கனும்னு சொல்லியிருக்காங்க. ஹஸ்பன்ட் குடுத்துட்டாரான்னு கேட்க தான் கால் செய்ய போனேன்…”

“ரெண்டு வயசு பையன். என்னை கேட்டு அழறான். அதுதான் போன்ல சமாதானமா சொன்னேன். போகும் போது இவங்கட்ட சொல்லிட்டு தான் போனேன். செலைன் முடியபோகுது, ஸ்டாப் பண்ணிட்டு போறேன். வந்து போடறேன்னு…”

“இவங்கதான் மெதுவா ட்ராப்ஸ் விடுங்க. முடியறதுனா நானே பெல் அடிக்கறேன்னு. நானும் மெதுவா தான் ட்ராப்ஸ் வச்சிருந்தேன். ஆனா இவ்வளோ சீக்கிரம் எப்படி முடிஞ்சதுன்னு தெரியலை. இவங்க பெல்லும் அடிக்கலை. என்னை வேலையை விட்டு தூக்கிடாதீங்க ஸார். என் குடும்பம் கஷ்டபட்ட குடும்பம் ஸார். ப்ளீஸ்…”

அழுதுகொண்டே அப்பெண் எங்கே வேலை போய்விடுமோ என்ற பயத்தில் கெஞ்ச தவறு எங்கே நடந்திருக்கிறது என்று தெளிவாய் புரிந்தது. தான் செய்த தவறும் புரிய மௌனமாய் சென்று அமர்ந்துகொண்டான்.

“நீ லீவ் எடுத்துக்கோ பவானி. டாக்டர்ட்ட நான் சொல்லிடறேன்…” அஷ்மிதா சொல்ல,

“நிறைய லீவ் ஆகிடுச்சு டாக்டர். ஏற்கனவே லாஸ் ஆஃப் பே…”

“இட்ஸ் ஓகே. நீ குழந்தையை போய் கவனி. மனசெல்லாம் அங்க இருக்க. நீ இங்க எப்டி நிம்மதியா இருப்ப? உன்னோட ஜாப்க்கு முதல்ல மன அமைதி தேவை. அது இல்லைனா இப்படி தான் சில நேரம் ஆகும். நீ லீவ் எடுத்துக்கோ. இந்த ஒரு தடவை உனக்காக நான் பேசறேன். லாஸ் ஆஃப் பே ஆகாது. ஓகே. நீ கிளம்பு…”

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்…” அவளின் கையை பிடித்து நன்றி சொல்லியவள் அதிரூபனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட அவன் எழுந்து துவாரகாவிடம் வந்தான்.

“எதுக்காக இப்படி பண்ணின? பதில் சொல்லு…” உணர்வற்ற குரலில் கேட்க,

“நீங்க அம்மாட்ட என்னை போக விடலை. அம்மாவும்… அம்மாவும்… உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா கண்டிப்பா கொன்னே போட்டுடுவார். அதுதான் எனக்கு என்ன பண்ணனு தெரியலை…”

அவள் சொல்லிய நிமிடம் அவளை அறைந்திருந்தான்.

“உனக்கென்ன பைத்தியமா அதி? என்ன புதுசா கை நீட்டிட்டு இருக்க? அதுவும் அவள் இருக்கிற நிலையில்?…” அஷ்மிதா அவனை கட்டுக்குள் கொண்டுவர பார்க்க அவளை தள்ளிவிட்டவன் துவாரகாவின் அருகில் அமர்ந்து இழுத்து அணைத்துக்கொண்டான்.

முதலில் அவன் அறைந்ததில் பயத்தில் உடல் உதற பார்த்திருந்தவள் அவனின் அணைப்பிற்குள் அடங்கிய நொடி இன்னும் அதிகமாய் வெடவெடக்க ஆரம்பித்தாள்.

“என்னை விடுங்க. விடுங்க முதல்ல…” அவளின் விலகல் எதையும் கண்டுகொள்ளாமல் இன்னும் இறுக்க ஏற்கனவே துவண்டிருந்தவள் போராட தெம்பில்லாமல் தொய்ந்துபோனாள்.

“அவ்வளவு சீக்கிரம் என்னைவிட்டு போக உன்னை விட்டுடுவேனா?…”

அவனின் பேச்சுகள் காதில் விழுந்தாலும் பிடித்தமில்லாத அவனின் அணைப்பை தவிர்க்க லேசான எதிர்ப்பை அவளின் உடல் காட்டிக்கொண்டுதான் இருந்தது.

“சொல்லு, உன்னை விட்டுட்டு என்னை என்ன பண்ண சொல்ற?. மாட்டேன்…”

அவன் பேச பேச அவளின் இதழ்களோ விடுங்க என்று மட்டும் தான் தீனமான குரலில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

“என்னால முடியலை, வலிக்குது. ப்ளீஸ்…” மீண்டும் முனங்கலாய் சொல்ல,

“மாமான்னு சொல்லு விட்டுடறேன்…” மென்மையாய் அவன் கேட்ட நிமிடம் எங்கிருந்து அத்தனை பலம் வந்ததோ ஒட்டுமொத்த தைரியத்தையும் திரட்டியவள் ஒரே தள்ளாக தள்ளிவிட்டு கட்டிலின் பின்னே நகர்ந்து அமர்ந்துகொண்டாள்.

“சொல்லமாட்டேன். மாட்டேன். அம்மாவை கொன்னுடுவாங்க. சொல்லமாட்டேன். நீங்க போங்க இங்க இருந்து போங்க…”

அவளின் கதறல் அவ்வறை எங்கும் எதிரொலிக்க அதிர்ந்துபோய் பார்த்தான் அதிரூபன்.

“கொன்னுடுவேன்னு சொன்னாங்களா?….” புத்தி வேலைநிறுத்தம் செய்ய அச்சிறுபெண்ணின் ஒட்டுமொத்த வேதனையும் ஜீரணிக்கமுடியாமல் தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தான் அதிரூபன்.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement