Advertisement

மின்னல் – 3

                  ரத்தினசாமியின் முகத்தில் இருந்த குழப்பம் கண்டு அவரருகே வந்த பத்மினி,

“இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  ஏன் உங்க முகம் இவ்வளவு குழப்பமா இருக்கு?…” என கேட்க,

“ப்ச், சம்பந்தி கால் பண்ணியிருந்தார் பத்மினி. வீட்டுக்கு வந்து ஏதோ பேசனும்னு சொன்னார்…”

“அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?…”

“இல்லை. நேர சி.எம் பார்க்க போறதா தான் ப்ளான். அவரை இன்வைட் செய்யறதா. இவரும் நேரா அங்க தான் வரதா இருந்தார். முதல் பத்திரிக்கையை அவருக்கு வைச்சிட்டு சொந்தகாரங்களுக்கு, கட்சி ஆளுங்களுக்கு வைக்கனும்னு ரெண்டு பேரும் சேர்ந்துதான் முடிவு பண்ணினோம்…”

“அதுக்குன்ன? இப்ப அங்க தானே கிளம்பி இருந்தீங்க. ஒருவேளை அவர் இங்க வந்து உங்களோட சேர்ந்தே போகலாம்னு டிஸைட் பண்ணிருப்பாரோ என்னவோ?…” பத்மினி யூகித்தவராக சொல்ல,

“இல்லைமா, அவர் அப்படி சொல்லலை. கல்யாணத்தை பத்தி ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டும். அதைபத்தி பேசத்தான் வரேன். சி.எம் மீட்டிங் ஈவ்னிங் கொஞ்சம் தள்ளிவைக்க சொல்லி அவர் பி.ஏ.ட்ட பேசிட்டாராம். அதுதான் ஏன்னு தெரியலை…”

பத்மினிக்கும் இந்த தகவல் புதிது. கண்டிப்பாக சில நிமிடங்களுக்கு முன்பு தான் வந்திருக்கவேண்டும் இந்த தகவல் என நினைத்தவர்,

“பசங்க வந்துட்டாங்க. ட்ரிப் கேன்சல் ஆகிடுச்சு போல…”

“அப்படியா? நான் பார்க்கலையே?…” என சொல்லியபடி அறையை விட்டு வெளியே வர,

“எல்லாம் ப்ரெஷ் ஆக போய்ருக்கானுங்க. நீங்க வந்து சாப்பிடுங்க. ஸ்வேதா வெய்ட் பண்ணிட்டு இருக்கா…”

பத்மினியோடு பேசிக்கொண்டே டைனிங் ஹால் வந்து அமர லிப்டில் இருந்து வைத்தியநாதனும் அன்னபூரணியும் வந்தனர். வேகமாய் எழுந்தவர்,

“பூரணிம்மா அண்ணனை கூப்பிட்டிருக்க வேண்டியதுதானேமா…” என தன் தங்கையை நோக்கி வேகமாய் வந்தவர் வீல்சேர்ரை தன் கைகளுக்குள் கொண்டுவந்து வைத்தியநாதனை அழைத்துவந்தார்.

ஆம், வைத்தியநாதனின் கால்கள் செயலிழந்து போனது சில மாதங்களுக்கு முன்பு தான்.

“பத்மினி, பூரணிக்கு தட்டை எடுத்து வச்சு பரிமாறு. மாப்பிள்ளைக்கும் வைம்மா…” என்று பூரணியின் அருகில் அமர்ந்துகொள்ள புன்னகை மாறாமல் அவர் சொல்லியதை செய்தவர்,

“உங்களுக்கு பாப்பு ஊத்தப்பம் செய்திட்டிருக்கா. உங்களை வெய்ட் பண்ண சொன்னா…” என சொல்லி தனக்கும் தட்டுவைத்துக்கொண்டு அமர்ந்துவிட,

“மாமா…” என்ற கூவலுடன் ஹாட்பாக்ஸை எடுத்துக்கொண்டு ஓடிவர,

“இவளுக்கு நடக்கவே தெரியாது போல. எப்ப பார்த்தாலும் பறந்துட்டு வரது…” என்று  சொல்லிக்கொண்டே விஷால் வந்து சேர அவனுடன் சந்தோஷும், அர்னவும் வந்தனர்.

“நீ மட்டும் எப்ப பார்த்தாலும் வானரபடையோட சுத்துற. நான் கேட்டேனா?…” ஸ்வேதா அவனிடம் எகிற,

“பாப்புக்குட்டி ஏன் டென்ஷன் ஆகற? அவனுங்க கிடக்காங்க விடுடா…” அர்னவ் அவளை சமாதானம் செய்ய கேலி புன்னகையோடு மற்றவர்கள் பார்த்தனர்.

“மாமா ஆனியன் ஊத்தப்பம் நானே உங்களுக்கு செஞ்சேன்…” ரத்தினசாமியின் தட்டில் வைக்க தங்கை மகளின் அன்பில் அவளுக்கு ஓர் வாய் ஊட்டியவர்,

“நீயும் உட்கார்ந்து சாப்பிட்டு குட்டிமா…” என சொல்லி தன் தங்கையை கவனிக்க ஆரம்பித்தார்.

வழக்கமாக நடக்கும் நிகழ்வு என்றாலும் இன்றைக்கும் ரத்தினசாமி அன்னபூரணி அன்பில் பத்மினி வியந்துதான் நிற்பார். இத்தனை வயதாகியும் இவர்களின் பாசம் மாறாததை கண்டு பெருமையாகவும் இருக்கும்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து ஹாலிற்கு வர விஷால் வந்து ரத்தினசாமியின் முன் நிற்க,

“என்னப்பா ஏதாவது பேசனுமா?…”என்றார்.

“ஆமாம் பெரியப்பா.நீங்க இன்னைக்கு இன்விடேஷன் குடுக்க கிளம்பறதா இருந்ததே. நீங்க குடுத்திட்டு வந்துட்டா நாங்களும் எங்க ப்ரெண்ட்ஸ் சர்கிள்ல குடுக்க ஆரம்பிப்போம். பத்மினி அம்மாவும் இங்க உள்ளூர் ரிலேஷன்ஸ் வீட்டுக்கு அழைக்க என்னை வர சொல்லியிருக்காங்க…”

தகவலாய் ஒவ்வொன்றாய் பேசியவனை பார்த்து புன்னைத்தவர்,

“இதுக்கு எப்போ கிளம்பறேங்கன்னே கேட்டிருக்கலாம் நீ…” என்று சிரிக்க,

“உங்க பிள்ளைங்க உங்கட்ட கேள்வின்னு கேட்டிருவாங்களா என்ன?…” என சொல்லியபடி பத்மினியும் வந்து சேர பெருமையாய் தன் பிள்ளைகளை பார்த்தார் அவர்.

“போகனும்பா. சம்பந்தி இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டு சேர்ந்து போவோம்னு சொல்லிட்டார். அதுக்குதான் வெய்ட் பண்ணிட்டுருக்கேன்…” என்று சொல்லி,

“நீங்க ஏன் ட்ரிப் கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கீங்க? என்னாச்சு?…” என்றதும் மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க அன்னபூரணி சந்தோஷை பார்க்க அவனோ யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லை.

விஷாலுக்கு நடந்ததை தன் பெரியப்பாவிடம் பகிர்ந்துகொள்ளும் ஆவல் கிளர்ந்தாலும் அனைவரின் முன்பும் சொல்ல தயக்கமாக இருந்தது.

அதுவும் அவளை கோட்டைவிட்டு விட்டு இப்படி வந்திருக்கிறாயே என கேட்டால் என்ன பதில் சொல்வது என்றும் யோசனையாக இருந்தது.

“என்னடா பதில் சொல்லுங்க. ஏன் இப்டி நிக்கறீங்க?…” அன்னபூரணி அதட்ட,

“மாமா, போன இடத்தில ப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் கைகலப்பாகிடுச்சு. மூட் அப்செட் அதான். விஷால் கிளம்பலாம்னு சொல்லிட்டான்…” சந்தோஷ் சட்டென சொல்லிவிட விஷால் அவனை முறைக்க,

“என்ன உங்கமேல கை வச்சானுங்களா? எவ்வளவு தைரியம் இருக்கனும் அவனுங்களுக்கு. சும்மாவாடா விட்டீங்க? யார் மேல யார் கை வைக்கிறது?…”

அமைதியாய் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த ரத்தினசாமி அடிதடி என அறிந்ததும் வேங்கையாய் எழுந்துநின்று வேஷ்டியை மடித்துக்கட்ட பத்மினி தான் சமாதானம் செய்யவேண்டியதாகிற்று.

“அவங்க பசங்களுக்குள்ள சண்டை. இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாளைக்கே சேர்ந்துப்பானுங்க. இதை எல்லாம்  பெருசுபடுத்துவீங்களா?…”

ரத்தினசாமியிடம் சொல்லி விஷாலுக்கு கண்ணை காட்ட அவனும் புரிந்துகொண்டதற்கு ஏற்ப,

“ஆமா பெரியப்பா. சின்ன சண்டை தான். நாங்க பார்த்துக்கறோம்…”

“என்னடா சின்ன சண்டை? ஒரு தராதரம் வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நமக்குன்னு இருக்கிற மரியாதையை எந்த இடத்திலையும் விட்டுகுடுக்க கூடாது. தரமில்லாம தொட்டவன தரையோடு மண்ணாக்காம இப்படி வந்து நிப்பீங்களா?…”

அவரின் கர்ஜனையில் அனைவருமே அமைதியாய் நிற்க சில வினாடிகள் கோபம் மட்டுபடாமல் தன் தொடையில் வேகமாய் அடித்துக்கொள்ள ஸ்வேதா தான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவர் தண்ணீரை கொடுக்கும் பொழுதே அவளின் கை நடுங்கியதை கண்டு ஒரு பெருமூச்சுடன் வாங்கி குடித்துவிட்டு அவளை தன்னுடன் அமர்த்தி தோளில் சாய்த்துக்கொண்டார்.

“ஏன்டா பாப்புக்குட்டி பயமா இருக்கா மாமாவை பார்த்து?…” என ஆறுதலாய் அவளை வருட பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவைக்க தன்னை நினைத்து எரிச்சல்கொண்டார் ரத்தினசாமி.

எங்கிருந்துதான் தனக்கு இத்தனை கோபம் வருகிறதோ? என நினைத்தவர் பத்மினியை பார்த்து,

“பசங்களுக்கு காயம் எதுவும் இருக்கான்னு பாருமா. நம்ம டாக்டரை வர சொல்லி கால் பண்ணிடு…” என்று சொல்லி,

“நீயும் போடா பாப்புக்குட்டி…” அவளையும் அனுப்பிவிட்டு தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டார்.

வீட்டிலிருந்து வெளியில் வந்த விஷால் கார்டனில் நின்றுகொண்டிருந்த சந்தோஷின் முதுகில் படாரென போட்டான்.

“ப்ச், எதுக்குடா அடிக்கிற? ராஸ்கல்…” அவன் கத்த,

“பெரியப்பாக்கிட்ட சொல்லவிடாம நீ எதுக்கு முந்திரிகொட்டையாட்டம் கதை சொன்ன? நாம சொல்லியிருந்தா அவரு எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரு? கெடுத்திட்டியே…” விஷால் சொல்ல,

“அங்க உன் பெரியப்பா மட்டுமா இருந்தாங்க? பத்மி அம்மாவும் தானே இருந்தாங்க. நாம பண்ணிட்டு வந்த காரியம் தெரிஞ்சா அவங்க சந்தோஷப்பட்டிருப்பாங்களா?…”  என்றதும் அவன் அமைதியாக,

“நம்ம வீட்லயும் வயசுப்பொண்ணு இருக்கு விஷால்…” சந்தோஷ் பொறுமையாய் சொல்ல,

“யாரை யாரோட இணைக்கூட்டுற? கொன்னுடுவேன்டா. நம்ம பாப்புக்குட்டியும் அவளும் ஒண்ணா? நினைக்கவே கேவலமா இருக்கு…”

“யாரோ செஞ்ச வினைக்கு அந்த பொண்ணு ஏன் பொருப்பாகனும்?. பாவம்டா. மனசாட்சியோட பேசுடா…”

“எனக்கு என் குடும்பத்தோட கௌரவம் தான் முக்கியம். அதை காப்பாத்த என்ன வேணும்னாலும் செய்வேன். பாவம் புண்ணியத்துக்கு இங்க இடமில்லை…” இரக்கமே இல்லாத ராட்சசனாய் விஷால் பேச,

“கௌரவம்ன்றது நாம பார்க்கற பார்வைல தான் இருக்கு. எந்தளவுக்கு கௌரவத்தை பெருசா நினைக்கிறயோ அந்த கௌரவத்தோட வாழற வாழ்க்கைல யாரோட பாவத்தோட சாபமும் இருக்ககூடாதுன்னு நான் நினைக்கிறேன். நமக்கு பின்னால நம்மோட சந்ததிகளோட சாம்ராஜ்யத்துக்கும் எந்த தீங்கும் நடந்திட கூடாது…”

சந்தோஷ் பேச பேச காதிருந்தும் செவிடனாய் விஷால் நிற்க இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்பதை போல சலிப்பாய் திரும்ப,

“நீ என்ன சொன்னாலும் நான் இப்படித்தான்டா. என்னோட ரோல் மாடலே என் பெரியப்பா தான். அப்படி இருக்கும் போது அவரோட ஆசையை நிறைவேத்திவைக்கத்தானே நான் நினைப்பேன்…”

“நான் பேசும் போது நீ செவிடாட்டம் இருந்தியே. இதைப்பத்தி நீ பேசறப்பவும் நான் செவிடுதான். போடா…” சந்தோஷ் முறுக்கிக்கொள்ள,

“மறந்தே போய்ட்டேன்…” விஷால் தலையில் அடிக்க,

“என்னடா? என்னாச்சு?…” பதறினான் சந்தோஷ்.

“பெரியப்பா இன்னும் இன்விடேஷன் வைக்க போகலை. அண்ணா வேற இன்னைக்கு அவங்க ப்ரெண்ட்ஸ இன்வைட் பண்ண போகனும்னு சொல்லியிருந்தாங்களே. அண்ணாட்ட இதை சொல்லனுமே…”

வேகமாய் தன்னுடைய் மொபைலை எடுத்து அதிரூபனுக்கு அழைப்பு விட அதை பிடுங்கிய சந்தோஷ் அழைப்பை துண்டித்துவிட்டு,

“தூ, நீயெல்லாம் வெளில பேசாத. உன் பெரியப்பாதான் உனக்கு ரோல்மாடல் அப்டி இப்டின்னு வெட்டி பேச்சுதான். ஏன்டா வீட்ல என்ன நடக்குதுன்னு எங்க இருந்தாலும் உன் அண்ணாக்கு தெரியாம இருக்கபோறதில்லை. இதுல நீங்க கால் பண்ணி தகவல் சொல்ற அளவுக்கா இருக்காரு?…”

“ஆமால…” அசடு வழிய,

“போடா, போடா. இந்நேரம் மீட்டிங் தள்ளிவச்சிருக்கிறதும் தெரிஞ்சிருக்கும். அவர் மாமனார் இங்க வரத்தும் தெரிஞ்சிருக்கும். சி.எம்க்கு இன்விடேஷன் வச்சதும் தானாவே அவருக்கு தகவல் போகபோகுது. ஓவரா சீன போட்டுட்டு இருக்க…”

விஷாலின் தலையில் அடித்து விளையாட இருவரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு கார்டனை சுற்றி வந்தனர்.

கேட் திறக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்க அஷ்மிதாவின் அப்பா வந்து இறங்கினார்.

“வாங்க அங்கிள்…” என்றபடி விஷால் வந்து அவருக்கு கைகுலுக்க சந்தோஷும் அவரை வரவேற்றான்.

ராஜாங்கம். பெயருக்கேற்றார் போல தொழில் வட்டாரத்திலும் ராஜாவே தான். அதனால் தான் தன்னைப்போலவே  தொழில் துறையில் ராஜாங்கம் செய்யும் அதிரூபனை அவருக்கு பிடித்துப்போனது.

குடும்ப நண்பர்களாய் இருந்து வந்தவர்கள் இன்று ஒன்றுக்குள் ஒன்றாக போகின்றனர்.

வீட்டில் அனைவரிடமும் பேசிவிட்டு ரத்தினசாமியுடன் அலுவலக அறைக்குள் நுழைந்தவர் அரைமணி நேரம் கடந்தபின் தான் வெளியில் வந்தார்.

“அப்போ நான் புறப்படறேன் சம்பந்தி. வீட்ல பேசிட்டு சொல்லுங்க. நாம தலைவரை பார்க்க போகலாம்…” என சொல்லி அவர்களிடம் விடைபெற மற்றவர்களும் வழியனுப்பிவைத்தனர்.

ரத்தினசாமியின் முகம் தெளிவில்லாமல் இருக்க பத்மினி பிள்ளைகளை பார்க்க அனைவரும் அங்கிருந்து களைந்து சென்றனர்.

“இப்போ சொல்லுங்க, என்ன விஷயம்?…”பத்மினி அவr அருகில் வந்து நிற்க,

“ஏதாவது பிரச்சனையா?…” அவரின் அமைதி கண்டு மீண்டும் தானே கேட்க இல்லையென தலையசைத்தவர்,

“கல்யாணத்தை இன்னும் பத்துநாள்ல வச்சுக்க முடியுமான்னு கேட்கிறார். என்ன சொல்லன்னு தெரியலை…”

“பத்துநாள்ல எப்படி? என்னவாம் திடீர்ன்னு?…”

“எனக்கும் தெரியலை பத்மினி. ஏதோ ஜாதகம், நேரம் காலம்னு சொல்றார்…”

“நல்ல முகூர்த்த நேரமா தானே குறிச்சிருக்கோம். பத்திரிக்கை அடிச்சு குலசாமிக்கிட்ட எல்லாம் வச்சு பொங்கல் வச்சு சாமி கும்பிட்டாச்சு. இப்போ வந்து மாத்தினா?…” என்ற பத்மினி,

“புள்ளைக்கு பேசலாம். அவன் தெளிவா சொல்லுவான்…”

“அதிபன்கிட்ட பேசியாச்சுமா. அவனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையாம். நமக்கு சம்மதம்னா அவனுக்கும் ஓகே தானாம்…”

ஆம், ரத்தினசாமிக்கு மட்டும் அவரின் மகன் அதிபன். அனைத்திற்கும் அதிபதி அவர் மகன் என்ற பெருமை என்றும் உண்டு அவருக்கு. அதிபன் என்றே வாய்நிறைய அழைத்து அழைத்து பூரிப்பார்.

“நமக்கு பத்துநாள்ல கல்யாணத்தை நடத்துறது பெரியவிஷயமில்லைங்க…”

“ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க நம்மை கண்ட்ரோல் பண்ணகூடாது இல்லையா? அவங்க ப்ராப்ளம் அவங்களுக்கு. நமக்கும் நேரம் வேண்டாமா? எதையும் புரிஞ்சுக்காம இப்படி வந்து மாத்தி மாத்தி பேசினா என்ன அர்த்தம்?…”

பத்மினி பேசுவதை அமைதியாய் கேட்டவர் பதில்சொல்லாமல் மௌனம் காக்க,

“நான் இப்போவே குறைச்சு சொல்றேன்னு நினைக்காதீங்க. எங்கேஜ்மென்ட் தனியா வேண்டாம்னு சொன்னதுக்கு அவங்க கேட்கலை. வச்சுட்டாங்க…”

“நிச்சயத்துல இருந்து இருபது நாள்ல ஒரு முகூர்த்தம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு அது சரிப்பட்டு வராதுன்னு சொல்லி அவங்க ஜோசியர்ட்ட பேசி மூணு மாசம் கழிச்சு வர இந்த முகூர்த்தத்தை முடிவு பண்ணினதும் அவங்கதான்…”

“இப்போ அதுவும் வேண்டாம்னு அடிச்ச பத்திரிக்கையை தூக்கிபோட்டுட்டு பத்துநாள்ல கல்யாணம் செய்யலாம்னு சொன்னா என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க? அந்த பொண்ணுக்காக நான் அமைதியா இருக்கேன். அவ்வளோ தான்…”

பத்மினி பொருமிவிட ரத்தினசாமியின் மொபைல் அடிக்க எடுத்து பார்த்தவர் பத்மினி. ராஜாங்கத்திடமிருந்து தான் அழைப்பு.

“நீங்களே பேசுங்க…” சலித்த குரலில் சொல்ல ஒருவித அழுத்தத்துடன் மனைவியை பார்த்துக்கொண்டே மொபைலை காதில் பொருத்தினார்.

“சம்பந்தி இன்விடேஷன் அடிக்க குடுத்தாச்சு. டிஸைன் உங்க வாட்ஸ் ஆப்க்கு அனுப்பிருக்கேன். ஈவ்னிங் வீட்டுக்கே வந்திரும். சி.எம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன். நைட் டின்னருக்கு வீட்டுக்கே வர சொல்லிட்டார். ரெடியா இருங்க…”

தகவல் சொல்வதை போல சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வைத்துவிட ரத்தினசாமிக்கு தான் முட்டிகொள்ளலாம் போல வந்தது.

வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து பார்க்க அதில் இன்விடேஷனின் டிஸைனை ராஜாங்கம் அனுப்பியிருக்க அதை கண்டு பத்மினி பொங்கிவிட்டார்.

“பார்த்தீங்களா? இதுக்கு என்ன சொல்றீங்க?…” என கேட்க,

“என்ன சொல்லனும்? இல்ல என்ன சொல்லனும்னு கேட்கறேன். அவர் தான் அப்படி பன்றார்னா நாமளும் எடுத்தோம் கவுத்தோம்னா செய்யமுடியும்?…”

எரிச்சலில் ரத்தினசாமியின் குரலில் கோபத்தின் சூடு ஏறியிருக்க பத்மினி தான் தழைந்துபோகவேண்டியதாகிற்று.

அமைதியாய் அவரின் அருகில் அமர, “இது நம்ம புள்ளையோட கல்யாணம் பத்மினி. எனக்கும் ஏகப்பட்ட கனவும், விருப்பமும் இருக்கு. அவன் கல்யாணத்தை திருவிழா மாதிரி கொண்டாடனும். அதில் எந்த குழறுபடியும் ஏற்படகூடாதுன்னு ரொம்பவே கவனமா இருக்கேன். அதுக்காக சில விஷயங்களை விட்டுகொடுத்து போகலாம்…”

இந்த விட்டுகொடுக்கும் தன்மை அவரிடம் மட்டும் ஏன் தோன்றுவதில்லை இவருக்கு என்ற எண்ணம் சட்டென தலைதூக்கி வாய்வரை வந்துவிட்டது வார்த்தையாக.

ஆனால் அதன்பின் நடக்கும் அபாயங்களை தவிர்பதற்காக வெளிவர தத்தளிக்கும் வார்த்தைகளுக்கு விலங்கிட்டு விடியலை காணவிடாமல் இருளான மனதிற்குள்ளேயே பூட்டிகொண்டார் பத்மினி.

“பொறுமையா போகலாம் பத்மினி. ஒரே பொண்ணோட கல்யாணம். அவரோட மொத்த ஆசைகளையும் இந்த கல்யாணத்துல தான் நிறைவேத்திக்க பார்ப்பாரு. ஒண்ணொன்னையும் செஞ்சு அழகுபார்க்க ஆசைப்படுவார். போட்டும் விடு…”

“நம்ம பையனோட கல்யாணம் சீக்கிரமே நடந்தா அதுவும் நீ ஆசைப்பட்ட மாதிரி சீக்கிரமே நடந்தா சந்தோசம் தானே?. நாள் கம்மினாலும் சிறப்பா செஞ்சிடலாம்…”

“ஹ்ம்ம்…” மனமே இல்லாமல் அமர்ந்திருக்க,

“இன்னும் நம்ம வீட்ல எத்தனை கல்யாணம் நடக்க இருக்கு. நம்ம பசங்க வரிசையா இருக்காங்க. அவங்க எல்லோரோட கல்யாணமும் உன்னோட ஆசைப்படி ஆணைப்படி தான் நடக்கும். சரியா?…”

பத்மினியை மலையிறக்க பேசியவருக்குமே மனத்தாங்கல் இருந்தாலும் காட்டிகொள்ளாமல் பேச பத்மினியும் சம்மதித்தார்.

அடுத்து குடும்பத்தினர் அனைவரையும் வரவைத்து திருமணதேதி மாற்றம் விபரத்தை சொல்லி அனைவரையும் பரபரப்பாக்கினார்.

வரிசையாக போன்கள் செய்து இருந்த இடத்திலேயே வேலைகளை துரிதபடுத்தினார். ஏற்கனவே புக் செய்திருந்த மண்டபமும் அந்த தேதியில் கிடைத்துவிட அதன் பின்னான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தது.

——————————————————————–

துவாரகாவின் முன் கை கட்டி அழுத்தமான பார்வையோடு அதிரூபன் அமர்ந்திருக்க அவனின் பார்வையை சந்திக்கவே கூடாதெனும் பிடிவாதத்தில் துவாரகா முகம் திருப்பி இருந்தாள்.

அவளின் மயக்கம் தெளிந்ததிலிருந்து அவனின் புறம் திரும்பவே மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை போல் அவளிருக்க குழந்தைகளை மிரட்டும் பூச்சாண்டி என விரைப்புடன் அவளருகில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அவன் அமர்ந்திருந்தான்.

இருவரையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தவளுக்கு தான் பிபி எக்கச்சக்கத்திற்கும் எகிறியது.

“டேய் என்னடா இது? நீ போ நான் கேட்டு சொல்றேன். அவளும் பிடிவாதமா இருக்கா. நீ அதைவிட அடமென்ட். படுத்தாதீங்கடா…”

அஷ்மிதாவின் புலம்பல் அங்கே அடுபடவே இல்லை. இருவரும் அசைவேனா பார் என்பதை போல சிலையாய் சமைந்துதான் இருந்தனர்.

“எனக்கு பசிக்குது. நீங்க என்னமோ பண்ணி தொலைங்க. சரியான ஜாடிக்கேத்த மூடி. ஆளப்பாரு…” என்று அறையை விட்டு வெளியேற அவளின் மொபைலும் அடித்தது.

எடுத்து பார்த்தவளுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது. மொபைலையே வெறித்தபடி நிற்க மீண்டும் மீண்டும் அந்த அழைப்பு வர அட்டன் செய்தவள்,

“என்ன?…” என்று மொட்டையாக கேட்க சந்தோஷ்க்கே வியப்பாய் இருந்தது.

எப்பொழுது அழைப்பை ஏற்றதும் பச்சைக்கிளி என ஆர்பாட்டமாய் அழைப்பவள் இன்று கடுப்பாய் பேச,

“என்ன மேடம் மூட் அப்செட்ல இருக்கீங்க போல? கல்யாண பொண்ணுக்கு எதுக்கு இவ்வளோ டென்ஷன்?…” என கிண்டலாய் பேச,

“வேண்டாம் பச்சைக்கிளி. என்கிட்டே வாங்கிகட்டாத. செம காண்டுல இருக்கேன். உன்ன பால்டப்பின்னு நினைச்சேன்டா. ஆனா நீ இருக்க பாரு…”

“என்னாச்சு?. நான் என்ன பண்ணினேன்?…” என கேட்க ஒரு நொடி துணுக்குற்றவள் பின் சுதாரித்து,

“என்ன என்னாச்சு? ஒண்ணுமே பண்ணலை தான் போ. இப்போ எதுக்கு கால் பண்ணின? கரடி கரடி…” மீண்டும் சண்டையிட,

“ஓஹ் உங்க ஆளு இருக்காரா? அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு கோவமா? ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லலாம்னு கால் பண்ணினேன். உங்களவர் சொன்னாரான்னு தெரியலையே…”

“விஷயத்தை சொல்லு வழவழன்னு பேசாம…” என,

“உங்க மேரேஜ் டேட்…”

“ஆமா தெரியும். இப்போ என்ன அதுக்கு?…” அவளின் சிடுசிடுப்பு ஏனென தெரியாமல்,

“இன்னைக்கு நேரமே சரியில்லை. நான் வைக்கிறேன். மேடம் எப்ப ரிலாக்ஸ் ஆவீங்களோ அப்போ பேசுங்க. இப்போ அத்தான்ட்ட குடுங்க…” என்று சொல்ல அஷ்மிதவிற்குதான் மிகுந்த கஷ்டமாகிற்று.

அவன் மீது எத்தனை மரியாதையும் அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படி செய்துவிட்டானே என்ற ஆற்றாமையில் பொசுங்கிகொண்டிருந்தாள் அஷ்மிதா.

விடுவிடுவென அறைக்குள் நுழைய இன்னமும் அப்படியே இருந்த அதிரூபனிடம் போனை நீட்ட யார் என்பதை போல பார்க்க பதில் சொல்லாமல் மொபைலை அவனின் கைகளில் திணித்தவள் துவராகவிற்கு ஏறிகொண்டிருக்கும் ட்ரிப்சை சரி செய்வதை போல் திரும்பிகொண்டாள்.

லைனில் சந்தோஷ் இருப்பதை கண்டுகொண்ட அதிரூபன் வேறு வழியின்றி எழுந்து வெளியே செல்ல அதற்காய் காத்திருந்ததை போல துவாரகாவின் அருகே வந்தாள் அஷ்மிதா.

“துவா, இங்க என்னை பாரும்மா…” மென்மையாய் அழைத்ததும் விழி உயர்த்தி நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.

“அம்மாட்ட போகனும். என்னை அனுப்பிடுங்க டாக்டர். இவங்களுக்கு தெரியாம அனுப்பிடுங்க ப்ளீஸ்…”

அதிரூபன் அமர்ந்திருந்த சேரை காட்டி தன்னிடம் யாசகம் கேட்பவளை போல கைக்கூப்பி பார்த்தவளை துயரம் தாளாமல் மார்போடு அணைத்துகொண்டாள் அஷ்மிதா.

“கண்டிப்பா அம்மாவை பார்க்கலாம். அம்மா எங்கன்னு சொல்லி. நான் உன்னை கூட்டிட்டு போறேன்…” சமாதானமாக பேசி அவளிடம் வார்த்தை வாங்க பார்க்க,

“பி.ஆர் ஹாஸ்…” சொல்லிகொண்டிருக்கும் பொழுதே அதிரூபன் வரும் அரவம் தெரிய வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டாள் துவாரகா. அவளின் விழிகளில் அப்படி ஒரு உயிர் பயம்.

அவளின் செய்கைகளை செய்வதறியாது பார்த்திருந்த அஷ்மிதாவிற்கு ரத்தினசாமியிடம் நன்றாய் நான்கு கேள்விகள் கேட்டுவிடமாட்டோமா என்று பற்றிக்கொண்டு வந்தது.

அதிரூபன் உள்ளே வந்ததும் துவாரகாவின் நிலையை பார்த்து அவனின் உயிர் ஒருகணம் நின்று துடித்தது. அமைதியாய் வந்து அவள் அருகில் மிக அருகில் அமர்ந்தவன்,

“சொல்லு உன் அம்மா எங்கன்னு சொல்லு…” மொத்த ஆக்ரோஷத்தையும் முகத்தில் தேக்கி அடக்கப்பட்ட  குரலில் கேட்க இல்லை என்பதை போல தலையசைத்தவளின் கண்கள் விடாமல் கங்கையை பொழிய அவனோ அங்கிருந்து நகர்வேனா என்று அமர்ந்திருந்தான்.

இதை கண்ட அஷ்மிதாவிற்கு துவாரகாவை காண காண பாவமாக இருந்தது. அதிரூபனை கன்னம்கன்னமாக அறைந்து தள்ளவேண்டும் என்ற வேகம் எழுந்தாலும் வழக்கம் போல,

“ம்ஹூம். இந்த ஜென்மத்துல நீ காதல் மன்னனாகவே முடியாது. தத்தி, தத்தி…” என்றவள்,

“பேஷன்ட் டயர்டாகிட்டாங்க. கொஞ்ச நேரம் தூங்கட்டும். நீ படுத்துக்கமா…” என சொல்லி அவனை எழுந்துகொள்ள சொல்ல அசையாமல் அவனிருக்க அவளை காப்பாற்றிவிடும் வேகத்தில்,

“பெட் பெருசுதான். நீ இந்தபக்கமா நகர்ந்து படுத்துக்க. கண்ணை மூடி தூங்கு. அவன் தனியா பேசிட்டிருக்கட்டும்…”

அவனின் காதுபட சொல்லியவள் அங்கிருந்து சென்றுவிட மீண்டும் துவாரகாவின் முகத்தையே பார்க்க ஆரம்பித்தான் அதிரூபன்.

மின்னல் தெறிக்கும்…

Advertisement