Advertisement

மின்னல் – 15

         ஹாஸ்பிட்டலில் அழைப்பு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள் துவாரகா. முகமே ரத்தமின்றி வெளிறி கிடந்தது. அவளின் மனம் ஏனோ சமன் படவே இல்லை.

அதிபனின் முகம் காணக்கூட பயந்தவளாய் அவனை பார்வை வட்டத்தில் இருந்து விலக்கி நிறுத்தினாள்.

“அம்மா வேண்டாம்மா? இனிமே அவங்களை பார்த்தா பேசவே மாட்டேன். மாமா சொல்லவே மாட்டேன். சத்தியம், சத்தியம். நம்புங்கம்மா. இப்படி பண்ணிக்காதீங்க. ப்ளீஸ் அம்மா. அம்மா…”

என்கிற கதறலும் அதை சற்றும் பொருட்படுத்தாது தன் காலில் தனக்கு தானே சூடுவைத்து அந்த வலியை கொஞ்சமும் பிரதிபலிக்காத அகிலாவின் முகமுமே அவளின் ரத்தத்தை உறைய வைத்தது.

தாய் அறியாதா சூலா? அது போலத்தான் துவாரகாவிற்கு அதிரூபனின் மீதான ஈர்ப்பை வெகு எளிதாக கண்டுகொண்டார்.

மனதில் இருப்பதை மறைத்து பழக்கமில்லாத துவாரகாவின் மலர்ந்த முகத்தை வெகு எளிதாய் படம்பிடித்துக்கொண்டவர் அதிரூபன் அவளிடம் பழகுவதையும் கண்டுகொண்டார்.

அனைத்தையும் தாண்டி வந்தவர். காதல் மட்டுமல்லாமல் காதலையும் கடந்து அத்தனை துன்பத்தையும் விஷமென விழுங்கி உயிர்வாழ்பவர்.

இன்னொரு அகிலாவா? இல்லவே இல்லை. அதிலும் அந்த குடும்பத்தில். ஏற்கனவே மரத்துவிட்ட உணர்வுகள் தான் ஆனாலும் மகளுக்காய் துடிதுடித்தது. அந்த நேரத்திலும் அவர் தன்னை தண்டித்து மகளுக்கு புரியவைக்க நினைத்தார்.

எவரிடமும் காணாத உணர்வும், அதிரூபனின் பார்வையும், அவன் காட்டிய உரிமையும் எத்தனை எத்தனை உணர்வுகளை கொடுத்தது என துவாரகா மட்டுமே அறிந்த ஒன்று.

முதல் ஈர்ப்பு. முதல் ஆசை. முதல் காதல். அத்தனையையும் கொடுத்து நேசம் தாங்கி ஒருவன் வந்து நின்று பெண்ணவளின் மனதை சத்தமில்லாமல் கொள்ளைகொண்டுவிட்டான்.

வரும் முன் காப்பதை தாண்டி வந்துவிட்ட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் அகிலா.

காதலில் விழுந்து வாழ்க்கை அவருக்கு புகட்டிய பாடம் மகளுக்கு வேண்டாம் என நினைக்க தாய்க்காகவே அதிரூபனை விட்டு விலக நினைத்தாலும் விதி அவளை அவனோடு இணைத்தது.

காதலென வந்துவிட்ட பிறகு தான் நினைத்தோமா தன் பெற்றோரை. தன் மகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது புரியாமல் போனது அகிலாவிற்கு.

சொல்லுவதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை. அப்படித்தான் வளர்ந்தாள். அகிலா சொல்வதை அப்படியே பின்பற்றும் கிளிப்பிள்ளை. பேசு என்றால் பேசுவாள். நிறுத்து என்றால் அங்கிருந்து நகர்ந்தேவிடுவாள்.

இப்படி அனைத்திலும் தன் கைக்குள் வைத்து தான் சொல்லியதற்கு அவளை பழக்கப்படுத்திய அகிலா பாதுகாக்கிறேன் என்ற பொருட்டு துவாரகாவிடம் தோழமை பாராட்ட தவறிவிட்டார்.

உடன் படிக்கும் தோழிகள் கூட அத்தனை நெருக்கமாய் பழகியதில்லை. அகிலாவின் வளர்ப்பு அப்படி. யாரிடமும் அண்டவிடாமல் தன் கைக்குள்ளேயே அவளை வளர்த்தார்.

துவராகவிற்கு அதிபனை பிடித்தது. முதன் முதலில் தன்னிடம் எந்த எல்லையுமின்றி அளந்து பேசாமல் உரிமையுடன் தன்னை நோக்கிவந்த அதிபனின் சொந்தம் பிடித்தது. அவன் உணர்த்திய உணர்வை பிடித்தது.

அதையும் அவனிடமோ, அகிலாவிடமோ சொல்லாமல் தனக்குள் ஒளித்துக்கொண்டாள். காதலென்று உணராதவளுக்குள் காதல் புகுந்த தடத்தின் வெளிப்பாடே கள்ளம் புகுந்தது.

அதிலும் அகிலா தான் அதிபனிடம் பேசிய அன்று செய்ததில் மொத்தமாய் மனதை பாதாளத்தில் பூட்டி உள்ளுக்குள் மட்டுமே பூஜிக்க ஆரம்பித்தாள்.

அது அவளின் மௌனமான காதலின் சக்தியா? இல்லை அவளால் தான் அகிலாவின் போராட்டங்களுக்கான விடிவை தேடிக்கொடுக்க கடவுளின் திருவிளையாடலா?

எதுவோ ஒன்று விலகிப்போன அகிலாவும், விரட்டியடித்த ரத்தினசாமியும் இனி விலகமுடியா பிணைப்பை ஏற்படுத்திவிட்ட இறுமாப்பில் அந்த இறைவன் இருக்க அகிலா அதை எற்றுகொள்வாரா?

கண்களிலேயே பட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் அகிலாவின் மருவுருவே அவரின் குடும்பத்தில் அழுத்தமாய் கால் ஊன்றிவிட இன்னும் எத்தனை எத்தனை பார்க்க இருக்கிறாரோ ரத்தினசாமி?

“துவா, ப்ளீஸ் இப்படி இருக்காத. இங்க பாரு. அதான் அத்தை நல்லா இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னேன்ல. இங்க பாரு…”

கார் ஓட்டிக்கொண்டே அவளின் கவனத்தை தன் புறம் திருப்ப எத்தனையோ முயன்றான் அதிரூபன். அவனின் கெஞ்சல், கொஞ்சல் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.

“உனக்கு பயத்தை விட பிடிவாதமும் அழுத்தமும் தான் அதிகமா இருக்கு துவா. நாம வீட்ல இருந்து கிளம்பி அரைமணி நேரம் ஆகுது. ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வர வரை நல்லா தானே இருந்த. அதுக்குள்ளே என்ன ஆகிடுச்சு?…”

“உன் அம்மா இப்ப கம்ப்ளீட் க்யூர். ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க. நல்லா பேசறாங்கலாம். இனி பயப்பட எதுவுமே இல்லைன்னு டாக்டர் சொல்லியாச்சு. அஷ்மி கூட அங்க போய்ட்டா. சந்தோஷப்பட வேண்டிய விஷயத்துக்கு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டா என்ன பண்ண?…”

திரும்புவேனா என்பதை போல சாலையிலேயே கவனமாய் இருக்க அதிரூபனின் பேச்சுக்கள் எதையும் காதிலேயே ஏற்றிக்கொள்ளவில்லை அவள்.

துவாரகா குற்றவுணர்வில் தவித்துக்கொண்டு இருந்தாள். அதிரூபனின் மீதான அன்பை அதை காதல் என்று கூட வரையறுக்க முடியாது. ஆம் அன்பு. அவன் மீதான ஒருவித உணர்வு. அவன் அவளிடம் தோற்றுவித்த உரிமையுணர்வு. அதை கூட அகிலாவின் மீதான பயத்திலும், பாசத்திலும் விட்டுவிட்டாள்.

ஆனால் எந்த வகையிலும் தன் தாயிற்கு தான் உண்மையாக இல்லை என்கிற உணர்வு அவளை ஆட்டிப்படைத்தது.

அத்தனை முறை அகிலா சொல்லிய எதுவும் அவள் அடிமனதில் ஏற்றிக்கொள்ளாமல் இருந்ததால் தானே இற்று திருமணம் அதிரூபனுடன் என்றதும் அனைத்தையும் மறந்து சம்மதிக்க முடிந்தது.

அதிலும் அகிலா இருந்த நிலையிலும் அதிரூபனுடன் தன்னுடைய வாழ்வினை தொடங்கிவிட்டதை எண்ணி அத்தனை கீழாக தன்னையே நினைக்கவைத்தாள்.

‘இதற்காகவே காத்திருந்ததை போல உன் காதலை நிறைவேற்றி கொண்டாயே? நீ என்ன பெண்?’ என அவளின் மனசாட்சி காறி உமிழ நினைவு சுழல்கள் மொத்தமாய் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

ஒருவேளை இதைத்தான் என் உள்மனம் விரும்பியதோ? அகிலாவின் கஷ்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு கிடைத்த வாய்ப்பில் தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட தன் காதல் கருமம் பிடித்த காதல் அந்தளவுக்கு என்ன உயர்ந்துவிட்டது?

இதுவரை தான் வாழ்ந்தது என்ன? அப்படியென்ன அவனிடம் பேசிவிட்டாய்? பழகிவிட்டாய்?. வார்த்தைகளில் கூட இந்த நிமிடம் வரை மனதை பரிமாறிக்கொள்ளவில்லை.

ஒருவேளை அகிலா தன்னை சுற்றத்தாருடன் பழக விட்டிருந்தால் எதையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளுமளவிற்கு தனக்கும் புத்தி இருந்திருக்குமோ?

இப்படி தனக்குள்ளேயே வாதி பிரதிவாதியாக வாதாடிக்கொண்டாலும் எதுவுமே தனக்கு சாதகமாக தோன்றவில்லை. அனைத்தும் சொல்லியது நீ கெட்ட பெண். உன் அம்மாவிற்கு உண்மையாக, நேர்மையாக இல்லை என.

இருந்திருந்தால் அதிரூபன் தன்னிடம் பேசும் பொழுதே அவனை முகத்திழட்டித்தார்போன்று பேசி விலக்கிவிட்டிருக்க முடியும்.

தைரியம்? இன்று அதிரூபனின் குடும்பத்தினர் முன் அவனுடன் கை கோர்த்து நிற்க முடிந்த தன்னால் அன்று ஏன் நிற்க முடியவில்லை.

என்னை ஏன் கோழை போல வளர்த்தார்கள்? இல்லை எதையும் தைரியமாக எதிர்கொள்ளமுடியாமல் எனக்கு நானே போட்டுக்கொண்ட முகம் இந்த கோழைத்தனமா?

நினைக்க நினைக்க தலை வலிக்க ஆரம்பித்தது. எத்தனை பெரிய சுயநலவாதி?. அழுகை பொங்கியது.

ஆனாலும் அழவில்லை. தானே இத்தனை யோசிக்கும் பொழுது தன் அன்னை எத்தனை யோசிப்பார்? ஒரு வேளை ஒருவேளை அதிபனை விட்டு தன்னுடன் வந்துவிடு என சொல்லிவிட்டால்?

அப்படி சொல்லி அழைத்துக்கொண்டால் அகிலாவிடம் முழுமனதாய் தன்னால் சென்றுவிட்ட முடியுமா? அப்போ அதிரூபன்?

ரத்தஓட்டம் மொத்தமும் சட்டென இதயத்திற்குள் பாய்ந்து அவளின் துடிப்பிற்கு தடைசெய்வது போல தோன்ற நெஞ்சை இறுக்கமாய் பற்றிக்கொண்டாள். அவளின் முகத்தில் தெரிந்த பாவனைகளில் குழம்பியபடியே காரை செலுத்தினான் அதிரூபன்.

‘என்னதான் யோசிக்கிறா இவ?’ என நினைத்தவனுக்கு அன்றுவரை அகிலா எழுந்தால் எப்படி எதிர்கொள்வது என இருந்த தவிப்பு இன்று சுத்தமாய் இல்லை.

“அம்மா…” என வாய்விட்டு சொல்ல அவள் குரலில் இருந்த சஞ்சலத்தில் காரை நிறுத்தியேவிட்டான்.

“இப்ப என்னை நிம்மதியா ட்ரைவ் பண்ண விடறியா இல்லையா? நானும் கிளம்பினதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். பேசமாட்டேன்ற. என்னை பார்க்க மாட்டேன்ற. டென்ஷன் பன்ற…”

அத்தனை கடுப்பையும் மொத்தமாய் முகத்தில் காட்டி அவளிடம் கோபப்பட மெதுவாய் அவன் புறம் திரும்பி பார்த்தாள்.

இதுவரை பார்த்திராத ஏதோ ஒரு உணர்வு அவள் முகத்தில் உணர்வு என்று கூட வரையறைக்குள் வந்துவிடாது. ஆனால் அது அதிரூபனுக்குள் ஒருவித கிலியை லேசாய் தோற்றுவித்தது.

“துவா?…” என மெதுவாய் கூப்பிட சில நொடிகள் மட்டுமே அவனை அப்படி பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

‘என்ன நினைச்சான்னே தெரியலையே? இவ அம்மாவை கூட சமாளிச்சிடலாம். இவக்கிட்ட நாம தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கோ? பயந்த சுபாவம்னு மட்டும் தானே நினைச்சோம். அதிபா’ என புலம்பியபடி மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான்.

துவாரகா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். இதுவரை தான் அகிலாவிற்கு உண்மையாக இருக்கவில்லை. இனி அவரின் விருப்பப்படி தான் தன் வாழ்க்கை.

போதும், இத்தனை நாள் அதிபனோடு வாழ்ந்த வாழ்க்கை. இனி காலம் முழுவதும் அவன் நினைவுகளுடன் நகர்த்தி இறுதியில் அதற்குள்ளேயே தொலைந்துவிடுவேன். அது போதும். போதும்.

இந்த பத்துநாட்கள் என்னால் மறக்கமுடியாதவை. ஜென்மத்திற்கும் இது போதும்.

முடிவெடுத்த பின் எந்த சஞ்சலமும் இல்லை துவாரகாவிற்கு. இனி அதிரூபனை கூட சமாளித்துவிடலாம் என்கிற தைரியம் பிறக்க அவனை திரும்பி பார்க்க நினைத்தாள்.

தனக்குள் இருக்கும் தைரியத்தை, துணிச்சலை வெளிக்கொண்டுவந்தவன்.

இன்று அது அவனுக்கே பாதமகாம போகிறது. திரும்பி பார்க்க விரும்பியும் வேண்டாம் என முடிவெடுத்து தனது ஆசைகளுக்கு இன்றிலிருந்தே சமாதி எழுப்ப ஆரம்பித்தாள். போதும் அனைத்தும்.

இனி என்னை பார்த்து பார்த்து அவனின் குடும்பத்தை இழக்கவேண்டாம். எனக்காக போராடிவிட்டான். பேசிவிட்டான். மொத்தமாய் அனைவரையும் விட்டு வந்துவிட்டான்.

என் ஒருத்திக்காக. போதும். இனியும் இந்த பாழாய்ப்போன காதலுக்காக அவன் எதையும் செய்யவேண்டாம். யாரையும் இழக்க வேண்டாம். நான் குடும்பமே இல்லாது வளர்ந்தவள். இனியும் அப்படி இருப்பது கடினமல்ல.

ஆனால் அவன் பெரிய கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன், இன்றில்லை என்றாலும் என்றேனும் தேடுவான். இழந்ததை நினைத்து வருந்துவான். வாக்குவாதம் பிறக்கும். அந்த நேரம் காதல் கசக்கும்.

எதுவுமே வேண்டாம். இனி என்னுடைய பழைய வாழ்க்கை. நான் என் அம்மா. மீண்டும் எங்களுக்கான ஓட்டம் ஆரம்பிக்கிறது. ஊர் ஊராய் சென்று வாழும் நாடோடி வாழ்க்கை காத்திருக்கிறது. பழகிய ஒன்றல்லவா.

கசப்பாய் நினைத்துக்கொண்டவளின் உள்ளம் ஒரே ஒருமுறை அவனின் தோள் சாய்ந்துகொள்ள, அவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்து வர ஆவல் கொண்டு மனத்திருள் போராடியது.

இல்லை. முடியாது. அவனை அத்தனை வருடம் பார்க்காமல் பார்க்க கூடாத நிலையில் பார்த்த பின்னும் அவன் கல்யாணம் என சொல்லவும் அனைத்தையும் மறந்து தலையாட்ட வைத்தது அவன் மீதாவ விருப்பம்.

இன்று அவனுடன் சரிபாதியாகி கூடி களித்து ஒன்றாய் உயிராய் வாழ்ந்துவிட்ட பின் இப்பொழுது வேண்டாமென முடிவு செய்தபின் மீண்டும் தொட்டால் தொடரத்தான் ஆசை பிறக்கும்.

அவனை மறக்கமுடியாமல் தவித்து அன்னைக்கு துரோகமிழைத்து என குறுகினாள். ஆம் துவாரகாவை பொறுத்தவரை தன் காதலை அடைந்துவிட்டாள்.

ஆனால் அகிலாவிற்கு துரோகம் தானே இழைத்துவிட்டாள். அப்படித்தான் என அவளின் மனம் ஆணித்தரமாய் எண்ணியது.

தானா இத்தனை யோசிக்கிறோம்? எப்பொழுதும் அகிலா அகிலா, அடுத்து அதிபன். இப்படி இன்னொருவரின் நிழலிலேயே பழக்கப்பட்டுவிட்டவள். தனக்கு யோசிக்க தெரியும் என்பதே இன்றுதான் உணர்ந்தாள். இந்த யோசனைகள் ஏன் தனக்கு முன்பிருந்தே இல்லாமல் போனது.

“துவா…” அவளின் எண்ணங்களை நிறுத்திய அதிரூபனின் குரலில் அதிர்ந்து திரும்பியவள்,

“ஹாங், என்ன?…” என கேட்டாலும் அவனின் உருவத்தை மனதிற்குள் மிச்சமில்லாமல் நிரப்பினாள்.

“ஹாஸ்பிட்டல் வந்தாச்சு. இறங்கு…” என்று சொல்ல அவன் பேச்சு புரியாதவளை போல அவள் விழிக்க அவளின் பார்வைக்கான அர்த்தம் விளங்காதவன் தான் இறங்கிவிட்டு மறுபுறம் வந்து அவள் பக்கமிருந்த கதவை திறக்க அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் இறங்கினாள்.

இனி எந்த ஜென்மத்திலும் இவன் எனக்கானவன் இல்லை. இந்த ஒரு ஜென்மமே போதும். இந்த நாட்களே போதும்.

‘அடுத்து எனக்கொரு பிறப்பை கொடுத்து தண்டித்துவிடதே கடவுளே’ என மனதிற்குள் மன்றாடி வேண்டிக்கொண்டாள்.

அதிரூபனுடன் அவள் இணைந்து நடக்க கால்கள் முன்னும் பின்னுமாய் முரண்டுபிடிக்க தளர்ந்தாள். அந்த நடையில் தெரிந்த தளர்வில்,

“துவா, டயர்டா இருந்தா கேண்டீன் போய் ஜுஸ் ஏதாவது சாப்பிடலாம்…” என அழைக்க வாயை திறக்காமல் வேண்டாம் என தலையசைப்பை மட்டும் பதிலாய் கொடுக்க துணுக்குற்றான்.

“துவா, நில்லு. என்ன நினைக்கிற இப்போ நீ? உன் முகம் என்னவோ எனக்கு தோணுது. அத்தையை நினைச்சு பயப்படறியா? நான் தான் உன் கூடவே இருக்கேன்ல?…” என சொல்லி அவளை ஆறுதலாய் அணைக்க போக வேகமாய் அவனிடமிருந்து விலகியவள் தள்ளி நின்றாள்.

“துவா…” சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை அதிரூபன்.

‘திரும்பவும் முதலில் இருந்தா?’ என்றுதான் எண்ணினான்.

அவளிடம் விளக்கம் கேட்டு தெளிவுபடுத்த இது நேரமில்லை என நினைத்தவன்,

“ஓகே, லெட்ஸ் கோ…” என சொல்லி தனது கைகளை பெண் பாக்கெட்டினுள் நுழைத்துக்கொண்டு முன்னே நடக்க துவாரகாவின் முகம் அழுகையை எட்டியது.

கசிந்துவிட்ட கண்ணீரை அவனுக்கு காண்பிக்காமல் துடைத்துக்கொண்டவள் இதயமோ இணையப்போகும் தாய்க்கும், பிரியப்போகும் கணவனுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு கதறியது.

இனி மனதின் பேச்சை கேட்பதாய் இல்லை என நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் அதிபனுடன் நுழைந்தாள்.

அங்கே கட்டிலில் சாய்ந்தமர்ந்து பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் அன்னையிடம் ஓடத்துடித்த கால்களை இழுத்து நிறுத்தினாள்.

அகிலாவாக அழைக்காமல் தன்னை ஏற்றுகொள்ளாமல் அவரின் அருகில் செல்வதற்கு கூட பயமாய் இருந்தது.

ஹாஸ்பிட்டல் உடையில் தலை மொட்டையடிக்கப்பட்டு கட்டுபோடப்பட்டிருக்க கொஞ்சமும் அந்த கம்பீரமும் தன்னம்பிக்கையும் கண்களின் தீட்சண்யமும் குறைந்தபாடில்லை. இன்னும் எதுவோ ஒன்று அவரிடம்.

“மேடம் அவங்க வந்துட்டாங்க…” டாக்டர் சொல்ல இவர்கள் பக்கம் நிமிர்ந்துபார்த்தார் அகிலவேணி.

அதிரூபனுக்கும் துவாரகாவிற்கும் இதயம் பந்தையக்குதிரையின் வேகத்தையும் விஞ்சிக்கொண்டு பயந்தது.

என்ன சொல்ல போகிறார்? எப்படி தங்களை எதிர்க்கொள்ள போகிறார்? என பதட்டத்துடன் பார்க்க,

“தேங்க் யூ டாக்டர். நான் பேசிட்டு உங்களை பார்க்க வரேன்…” என்றதும் டாக்டரும், உண்ட் இருந்த நர்ஸும் அங்கிருந்து கிளம்பிவிட யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.

பதினைந்து நிமிடங்கள் கரைந்தது. டாக்டர் சென்றதும் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார். ஆனாலும் அகிலா பேசவில்லை. துவாரகா தலைகுனிந்து நின்றாள். இனியும் அவர் பேசுவார் என தோன்றாததால் ஒரு பெருமூச்சை வெளியிட்டு அதிரூபனே பேச்சை ஆரம்பிக்க,

“எப்படி இருக்கீங்க அத்தை?…” என்று கேட்க,

“தேங்க் யூ மிஸ்டர் அதிரூபன் ரத்தினசாமி. டாக்டர் சொன்னாங்க. எனக்கு கரெக்ட் டைம்ல ட்ரீட்மென்ட் குடுத்து காப்பாத்தினதா. எல்லாத்துக்குமே தேங்க்ஸ்…”

“அத்தை இது என்னோட…” என்றவனை பேசவே அனுமதிக்காமல் போதும் என்பதை போல கை நீட்டி நிறுத்தியவர்,

“நான் பேசி முடிச்சிடறேன் மிஸ்டர். என்னை பொறுத்தவரை எனக்கு உறவுகள்ன்னு யாருமே இல்லை. எந்த அடிப்படையில் நீங்க என்னை அத்தைன்னு கூப்பிடறீங்கன்னு புரியலை. இதைநான் விரும்பலை…”

“நீங்க சமயத்துக்கு என்னை இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்து பணம் கட்டி என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க. இதுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். எப்போ வேணும்னாலும் அதுக்கு பிரதிபலனா நீங்க என்கிட்ட கேட்கலாம். என்னால முடிஞ்ச உதவியை நானும் பண்ணுவேன்…”

“இந்த இடத்துல பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. என்னோட பேங்க் பேலன்ஸ் சொல்லுக்கும் படி தான் இருக்கு. ஆனாலும் தாகம் எடுக்கறப்ப கை நிறைய பணம் இருந்தாலும் ரெண்டு துளி தண்ணீர் கிடைக்குதே. அதுதானே பெருசு…”

“அது மாதிரி தான். பணம் என்கிட்டே இருந்தாலும் அதை எடுத்து கட்ட யாருமே இல்லாம போனது தான் என்னோட துரதிர்ஷ்டம்…”

“அத்தை ப்ளீஸ், துவா…”

“உங்க மிசஸ் துவாரகா அதிரூபன். அதாவது மிஸ்டர் ரத்தினசாமி மருமகள் இவங்க தானே?…” என்றுவிட,

“அம்மா, என்னை மன்னிச்சுடுங்கம்மா…” என கதறிக்கொண்டு அவரின் காலை பிடித்தாள் துவாரகா.

துவாரகாவின் விரல் நுனி கூட தன் மீது பட்டுவிடாமல் அவளை விட்டு விலகி கீழே இறங்கி கட்டிலின் மறுபுறம் நின்றுகொள்ள,

“அம்மா…”

“ஸாரி மிஸ்டர் அதிரூபன் ரத்தினசாமி…” மீண்டும் மீண்டும் ரத்தினசாமியின் பெயரை சொல்லிக்கொண்டே இருந்தார்.

இது அதிரூபனை இந்த ராட்சசனின் மகன் தானே நீ என்று சுட்டிகாண்பிக்கவா இல்லை தனக்கே நினைவுருத்திக்கொள்ளவா என தெரியாமல் சொல்லிக்கொண்டே இருந்தார் அகிலா.

“நீங்க கிளம்புங்க. நான் ரெஸ்ட் எடுக்கனும்…” வெட்டிவிடுவதை போல பேச இருவருக்குமே அதிர்ச்சி தான்.

“நீங்க என்னை இங்க சேர்த்து பணம் குடுத்து எனக்கு நல்ல ட்ரீட்மென்ட் குடுத்து காப்பாத்தி இருக்கலாம். ஆனா அதுக்கு என்னால எல்லாத்தையும் அனுமதிக்க முடியாதில்லையா?…”

“இந்த நிமிஷமே உங்க பணத்தை என்னால திருப்பி கொடுத்துட முடியும். ஆனா அது காலத்தில் செய்த உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆனா அதுக்குன்னு உங்க பணத்தை நான் அப்படியே வச்சுக்கவும் போறதில்லை. அது சேரவேண்டிய இடத்துக்கு கண்டிப்பா சேர்ந்திடும்…”

“எனக்கு இன்னொருத்தர் பொருளையும், பணத்தையும் வச்சுக்க என்னைக்குமே விருப்பம் இருந்ததில்லை…” இது வெறும் பணத்திற்கு மட்டமே சொன்னதாக தெரியவில்லை அதிரூபனுக்கு. துவாரகாவையும் தான் சொல்கிறார் என புரிந்துகொண்டான்.

“அத்தை ப்ளீஸ், நான் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பன்றேன். எனக்கொரு சான்ஸ் குடுங்க…”  

“என்னால இதுக்கு மேல பேசமுடியாது…” என மெதுவாய் படுக்கையில் அமர,

“அம்மா, என்கூட பேசுங்கம்மா…” கண்ணீர் வழிய வழிய துவாரகா அழுகையுடன் கெஞ்ச,

“இப்ப என்ன தப்பு நடந்திருச்சுன்னு நீங்க இவ்வளவு பிடிவாதம் பன்றீங்க? உங்க பொண்ணு எத்தனை அழறான்னு பாருங்க…” அதிரூபன் கோபமாய் கேட்க,

“பொண்ணா? யார் யாருக்கு பொண்ணு? உயிரோட இருக்கிறவளை செத்ததா நினைச்சுக்கறேன்னு சொல்ல நான் விரும்பலை. ஆனா எனக்கு ஒரு பொண்ணே பொறக்கலைன்னு நான் நினைச்சுப்பேன். இதுக்கு மேல ஆர்க்யூமென்ட் பண்ணவேண்டாம்…”

“யாரோட வாழ்க்கையையும் நான் தடை போட விரும்பலை. அதே நேரம் எனக்கு இந்த உறவுகள் ஒத்துவராது. எப்பவோ போயிருக்கவேண்டிய உயிர்…”

“ஏதோ காரணத்திற்காக நான் வாழனும்னு இருக்கு. வாழ்வேன். எதுக்காகவும் எதையும் நினைச்சு என் பயணத்தை நான் நிறுத்த முடியாது. அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க தான் வாழனும். எதுவும் யாருக்காகவும் நிற்க போறதுமில்லை. நடக்க போறதும் இல்லை…”

“அகிலாத்தை துவாவை நினைச்சு பாருங்க. அழறா அவ. உங்களுக்கு கவலை இல்லையா உங்க பொண்ணை நினைச்சு?…” என்றவனை உணர்வின்றி பார்த்தவர்,

“நான் யாரை நினைச்சும் கவலைப்படபோவதில்லை. கவலைப்படுமளவிற்கு எனக்கு யாருமில்லை…” பற்றற்ற குரலில் கூறியவரை கண்டு கதறி அழ ஆரம்பித்தாள் துவாரகா.

அவளின் அழுகுரல் கூட அகிலாவின் இரும்பு மனதை மாற்றவே இல்லை.

“எனக்கு யாரும் அழறது பிடிக்காது. அழுகை கோழைத்தனம். ஒருவரின் இரக்கத்தை சம்பாதிக்க நினைக்கும் ஆயுதம். என்னைக்குமே அதை நான் விரும்ப மாட்டேன். இந்த கண்ணீரில் நான் இளகிவிடுவேன்னு நினைச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமில்லை. புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்…”

“முதல்ல இங்கிருந்து கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு…” என சொல்லி அங்கிருந்து நகர்ந்து பாத்ரூமினுள் சென்றவரை கசந்த விழிகளோடு பார்த்தவன் துவாரகாவை அணைத்து தனக்குள் இறுக்கிக்கொண்டான்.

ஆனால் அவள் அவளுக்குள் இருகிப்போனாள். தனக்கொரு பொண்ணே பிறக்கலைன்னு நினைக்கிற அளவுக்கு நீ நடந்துட்ட. இனியும் உனக்கு உன் காதல் பெரிதா? என தனக்குள் கேட்டுக்கொண்டவள் கண்ணீர் கூட வற்றிவிட்டது.

என் அம்மாவிற்கு நான் வேண்டாமா? என்னை பெறவே இல்லையாமே? இது அனைத்திற்கும் காரணம் முதலில் நான், நான் அதிபனிடம் கொண்ட காதல், ரத்தினசாமி, அவன் குடும்பம் என்ற எண்ணம் வலுப்பெற்றது துவாரகாவிடம்.

தான் மட்டும் அம்மாவோடு அவர் சொல்லியதை கேட்டிருந்தால் இன்று தாயில்லா பிள்ளையாக தவித்திருக்க வேண்டியதில்லையே. என்னால் தான் என் அம்மாவிற்கு இந்த கஷ்டம். என்னால் மட்டும் தான்.

இருவரும் அங்கிருந்து வெளியேற வெளியே அஷ்மி நின்றிருந்தாள். துவாரகாவை பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது அஷ்மிதாவிற்கு.

“அஷ்மி…”

“ஹ்ம்ம் கேட்டேன்டா. நீ ஒன்னும் சொல்லவேண்டாம். டாக்டர்க்கிட்ட எல்லாமே நான் பேசிட்டேன். கிளம்பலாம். போற வழியில சொல்றேன்…”

அதிரூபனிடம் துவாரகாவை காட்டி அங்கிருந்து முதலில் கிளம்புமாறு சைகை காண்பிக்க அவளை அழைத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றினான்.

“நானும் உன்னோடவே வரேன் அதி. ப்ரெண்ட்ஸ் கூட இங்க வந்தேன். ஒரு டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண. அப்படியே அகிலா ஆன்ட்டியை பார்க்க போனப்போ உன்னை பார்க்கனும்னு சொல்லி அவங்க வர சொன்னதான் கேட்டு நானும் வேலையை முடிச்சுட்டு வெய்ட் பண்ணேன்…”

“வாட்? பார்க்கனும்னு வர சொன்னாங்களா?…” என கேட்க,

“முதல்ல ரெண்டு பேரும் பின்னாடி உட்காருங்க. நான் ட்ரைவ் பன்றேன்…” என கார் சாவியை அவனிடமிருந்து பறித்து ட்ரைவிங் ஸீட்டில் தான் ஏறிக்கொள்ள துவாரகாவிடம் அசைவே இல்லை. அதிரூபன் பின்னே வந்து அமர சொல்லி அழைத்தும் அவள் இறங்கவில்லை.

“ஓகேடா. அவளை ப்ரீயா விடு. கெட் இன் அதி…” என காரை கிளப்ப ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது அதிபனுக்கு.

ஹாஸ்பிட்டல் வளாகத்தை விட்டு கார் மெயின்ரோட்டில் மிதக்க ஆரம்பித்தது.

“அதி, ஒரு விஷயம்…” என அஷ்மி ஆரம்பிக்க,

“ஹ்ம்ம் சொல்லுடா…” பின் ஸீட்டில் நன்றாய் தலை சாய்ந்து கண்களை மூடியபடி கேட்க,

“அகிலா ஆன்ட்டிக்கு த்ரீ டேய்ஸ் முன்னாடியே நினைவு திரும்பி இருக்கு…” என்றதும் திடுக்கென எழுந்து அமர்ந்தான் அதிரூபன்.

“வாட்?…” என கேட்க,

“பதறாதடா ராஸ்கல். நான் பயந்துட்டேன்…” என கடிந்தவள்,

“கொஞ்சம் அமைதியா கேளு. பதறியும் கதறியும் நோ யூஸ்…” என சொல்லி,

“ஆன்ட்டி கண் முழிச்சு துவாவைத்தான் தேடியிருக்காங்க. டாக்டர்ஸ் அவங்களை செக் பண்ணிட்டு உனக்கு இன்பார்ம் பண்ண தரை பண்ணியிருக்காங்க. ஆனா நீ பிக்கப் பண்ணலை போல…”

“எஸ், அன்னைக்கு ஆபீஸ்ல ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங். நான் மொபைல் சைலன்ட்ல வச்சிருந்தேன். ஆனா திரும்ப கூப்பிட்டப்ப அசைவு தான் இருக்கு. அதை சொல்லத்தான் கூப்பிட்டதா சொன்னாங்களே?…” என சொல்ல,

“அங்கதான் ராஜா ட்விஸ்ட்டே. ஆன்ட்டி இது என்ன ஹாஸ்பிட்டல் அது இதுன்னு டீட்டய்ல்ஸ் கேட்க அவங்களும் உங்க மருமகன்தான்னு உன்னோட ஜாதகத்தை விளக்கி உங்க கல்யாணத்தை வீடியோ இல்லாம டெலிகாஸ்ட் பண்ணி உன்னை பத்தி அருமை பெருமையா பேசியிருக்காங்க…”

“அதை கேட்ட ஆன்ட்டி தான் கண் முழிச்சுட்டதா உடனே சொல்லி அவங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். சின்ன பிள்ளைங்க. ரெண்டு மூணு நாள் ஆகட்டும்னு சொல்லி ப்ராமிஸ் வாங்கிட்டாங்களாம். சத்தியத்துக்கு கட்டுப்பட்ட பேர்லயே சத்தியத்தை வச்சிருக்கிற டாக்டர் சத்தியபாமாவும் உடனே ப்ளாட்…”

“அந்த டாக்டரை?…” என மொபைலை எடுக்கபோக,

“என்ன பண்ண போற? இல்ல என்னதான் பண்ண முடியும்? இன்னைக்கு வாங்கின சாட்டையடி அன்னைக்கே கிடைச்சிருக்கும். அவ்வளவு தான். ஆன்ட்டி வாங்கின ப்ராமிஸ் உங்களை அவாய்ட் பன்றதுக்காகவோ, உங்கட்ட என்ன பேசனும்னு யோசிக்கிறதுக்காகவோ இல்லை…”

“பின்ன?…” அதிபன் கேட்டதற்கு அஷ்மிதாவின் பதில் என்னவாக இருக்கும் என துவாரகா எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

“துவாவுக்கு உன்னோட நடந்த கல்யாணத்தை டயஜிஸ்ட் பண்ணிக்கறதுக்காக. அதுக்காக மட்டுமே தான் இந்த கால அவகாசம்…” என்ற அஷ்மிதா,

“ஐம் ஸாரி டூ சே திஸ்…”  என சொல்லி இருவரையும் பார்த்தவள்,

“அவங்க பேசினதுல என்ன தப்பு இருக்கு? நீயே யோசிச்சு பாரு. தப்புன்னு சொல்லிடமுடியுமா உன்னால?. ஏன் துவா நீ சொல்லுவியா உன் அம்மா எடுத்த முடிவு தப்புன்னு?…” என்றதற்கு பதிலே பேசாமல் முகத்தை மூடிக்கொண்டாள்.

அஷ்மிதா புருவம் சுருக்கி துவாரகாவை பார்த்தாள். அவளிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாய் தெரிந்தது.

அனைத்திற்கும் பயந்து நடுங்கி அழுகையில் கரைப்பவள் இன்று தன் தாய் தன்னை வேண்டாம் என்றதற்கு பிறகு ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லையே என யோசனையாய் பார்த்தாள்.

பின் ஒன்றும் பேசாமல் காரை வீட்டிற்கு திருப்பினாள். சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பும் நேரம் ராஜாங்கத்திற்கு அழைக்க அவரும் வந்துவிட்டு அதிபனுடன் பேசிவிட்டு எதுவானாலும் தன்னிடம் கேட்டுக்கொள்ளும் படி துவாரகாவிற்கும் அழுத்தமாய் சொல்லி சென்றார்.

அவர் சொல்லியது அவளுக்கு உரைத்தால் தானே. அவர்கள் பேசியதை மௌனமாய் கேட்டு தலையாட்டி அவர்கள் கிளம்பியதும் தனிமையில் சென்று அமர்ந்துகொண்டாள்.

அதிரூபன் வந்து பேச்சுக்கொடுத்து அவளின் மனதை திசைதிருப்ப முயல முடியவே இல்லை அவனால். ஏற்கனவே அஷ்மிதாவும் சொல்லி சென்றிருந்தாள் துவாரகாவை கவனமாய் பார்த்துக்கொள்ளுமாறு.

அவனும் அவளை தாங்கித்தான் பார்த்தான். அவளோ அவனிடம் இருந்து விலகுவதிலேயே குறியாய் இருக்க இப்போதைக்கு அவளின் போக்கிலேயே விட்டுபிடிக்க முடிவு செய்தான்.

ஏனோதானோவென இருந்தது அவளின் செயல்பாடுகள். ஏதோ சாப்பிட்டோம், கொஞ்சமாய் தூங்கினோம், அவன் கேட்டதற்கு ஓரிரு வார்த்தையில் பதில் என்றே இருக்க அதிரூபனுக்கு தான் தலைசுற்றியது.

இப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டது. அன்று முதல்நாள் இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தவன் வந்ததும் படுத்து உறங்கிவிட்டான். எழுந்து பார்க்கும் பொழுது அருகில் துவாரகா இல்லை.

‘இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி பட்டும்படாமலும் இருப்பாளோ?’ என நினைத்துக்கொண்டே முகம் கழுவி ப்ரெஷ் ஆகிவிட்டு கீழே வந்தான்.

“துவா, காபி கொண்டுவா…” என்று கேட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து பேப்பரை படிக்க துவங்கினான். ஓரளவிற்கு காபிபோட, சமைக்க என கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுகொண்டிருந்தாள் துவாரகா.

அவன் கேட்டு முடித்த அடுத்த நிமிடமே கீழே பின்னால் இருந்த ஒரு அறை கதவு படபடவென தட்டப்பட்டது. பதறி எழுந்தவன் வேகமாய் சென்று பார்க்க உள்ளே யாரோ முனகும் குரல் கேட்க வேகமாய் கதவை திறந்தான்.

கலைந்த தலை, கசங்கிய உடை ஆளுக்கு படிந்து என பார்க்கவே அலங்கோலமாய் நின்றிருந்தார் ரத்தினசாமி.

“அப்பா…” என அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

“அதிபா?…” என தொய்ந்து போய் நிற்கமுடியாமல் நின்றார் ரத்தினசாமி.

அவரை தாங்கிப்பிடித்தவன் சோபாவிற்கு நடத்தி வந்து அமர்த்த,

“தண்ணீ, தண்ணீ…” என்று கேட்கவும் வேகமாய் சென்று குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து குடிக்கவைத்து,

“நீங்க எப்படிப்பா இங்க? அதுவும் அந்த ரூம்ல?…” என கேட்க,

“நான் தான் உள்ள வச்சு பூட்டினேன்…” என்றபடி காபி கப்போடு வந்து நின்றாள் துவாரகா.

“என்ன?…” என அதிரூபனின் கண்கள் உட்சபட்ச அதிர்வில் விரிந்தது.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement