Advertisement

மின்னல் – 14

                 துவாரகா கிட்சனுக்கு சென்று வெகுநேரம் சத்தமில்லாமல் போக இன்னும் என்னதான் செய்கிறாள் இவள் என பார்ப்பதற்கு அதிரூபன்.

‘ஒரு காபிக்கு எவ்வளவு நேரம் இந்த பொண்ணுக்கு?’ என்றபடி உள்ளே வர திகைத்துபோனான்.

அங்கே மூன்று பால் பாக்கெட்டுகள் பிரித்து கிடக்க காபி பவுடர் கீழே சிதறிக்கிடக்க வாயில் விரலை வைத்து கடித்தபடி யோசனையோடு அடுப்பில் இருந்த பாத்திரத்தை பார்த்தபடி நின்றாள்.

அவனின் ட்ராக் பேண்ட், டிஷர்ட் சகிதமாக கூந்தலை தூக்கி கொண்டையிட்டு அவள் நின்ற கோலம் உதடுகளில் கள்ளச்சிரிப்பை உண்டு பண்ணியது. அவளறியாமல் ரசித்தவண்ணம் நின்றான் சில நிமிடங்கள்.

“மை க்யூட்டி வைப்…” என சில்லாகித்தான்.

ஆகிற்று இரண்டு நாட்கள் இந்த வீட்டிற்கு வந்து. இது அதிரூபனின் பேரில் அவனே டிஸைன் செய்து கட்டி வைத்திருக்கும் வீடு. வீடு மொத்தமும் அவனின் ரசனைகள் கொட்டிக்கிடக்கும்.

இன்று தன் ஒட்டுமொத்த ரசனைகளின் நடுவே தன் மனதிற்கு பிடித்த மனைவி நின்றுகொண்டிருக்கையில் நெஞ்சாக்கூட்டிற்குள் சிலுசிலுவென சாரல் அடிப்பதை போல அத்தனை குளுமையாய் பார்க்க ரம்யமாய் இருந்தது.

வந்த முதல்நாள் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், சொல்ல வருவது என்னவென்றும் கேட்காமல், இருப்பது வேறு வீடு என்பதை அறியாமல் அழுது கரைந்தவள் இரண்டாம் நாள் தான் கொஞ்சம் சுற்றிலும் பார்த்தாள்.

இருக்கும் இடத்தின் வித்தியாசம் ஆள் அரவமற்று தங்கள் பேச்சு சத்தங்கள் என உணர்ந்த பின்புதான் ஓரிரண்டு வார்த்தைகள் அவனிடம் பேசி இன்று மொத்தமாய் முகம் தெளிந்து தைரியமாய் அவளாகவே எழுந்து கிட்சனுக்கு வந்திருக்கிறாள்.

இரண்டு நாட்கள் தவித்த தவிப்பு நீங்கி இன்று அவளே காபி போட வந்து இவ்வளவு நேரம் என்ன செய்கிறாளோ என பார்க்க வந்து அப்படியே நின்றவன் அவள் மீண்டும் ஒரு பாக்கெட்டை கட் செய்து பாத்திரத்தில் ஊற்ற,

‘இப்பத்தான் காபி போட ஆரம்பிக்கிறாளோ? இவ்வளவு நேரம் பாத்திரத்தையா சூடு பண்ணிட்டு இருந்தா? அப்ப கட் செஞ்சிருந்த பாக்கெட் பால் எல்லாம்?’ என குழம்பிப்போனவன்,

“துவா என்னடா பன்ற?…” என வேகமாய் உள்ளே வந்துவிட அவனின் திடீர் குரலில் பதறிப்போனவள் கண்ணை மூடிக்கொண்டு காதை பொத்தி அவனின் மார்பில் சாய்ந்து,

“மாமா, திட்டிடாதீங்க மாமா….” என தன் வழக்கமான ஜபத்தை ஆரம்பிக்க அவனிதழ்களில் புன்னகை பூத்தது.

“சமத்து. ஆரம்பிக்கிறதுக்கு முன்னவே சரண்டர். சரி, திட்டமாட்டேன். என்னன்னே தெரியாம ஏன் திட்டபோறேன்? நிமிர்ந்துக்கோ….” என சொல்லி நிமிர்த்தியவன்,

“என்ன பண்ணி வச்சிருக்க? எதுக்கு இத்தனை பால் பாக்கெட்? இவ்வளவு பெரிய பாத்திரம்? காபி பவுடர் வேற இப்படி கொட்டிக்கிடக்கு?…” அடுத்தடுத்து கேட்க பேந்த பேந்த விழித்தாள்.

பதில் சொல்வாளென பார்க்க அவளோ பாத்திரத்தை பார்த்தபடி நிற்க சமையல் மேடையில் இருந்த காலி பால் பாக்கெட்களை தூக்கி குப்பை தொட்டியில் போட்டவன் மேடையையும் சுத்தம் செய்துவிட்டு அவளை தூக்கி அதில் அமர்த்தினான்.

பார்த்திரத்தை எட்டி பார்க்க அதிலிருந்த காபி கலரே அத்தனை கர்ண கொடூரமாய் இருக்க வேகமாய் அடுப்பை அணைத்துவிட்டு அந்த பாத்திரத்தையும் தூக்கி சிங்க்கில் போட்டுவிட்டு கையை கழுவி முடித்து திரும்பியவன்,

“இப்ப சொல்லு. என்ன பண்ணின?…” சிரித்த முகமாகவே கேட்க அதில் தைரியம் வரப்பெற்றவள்,

“எனக்கு காபி போட தெரியாது மாமா…” தன் விரல்களை பிரித்தபடி மெதுவாய் சொல்ல,

“ஹ்ம்ம் தென்?…” அவனும் கன்னத்தில் கைவைத்து கையை மேடையில் ஊன்றிக்கொண்டு கதை கேட்க ஆரம்பித்தான்.

“அம்மா போடறதை பார்த்திருக்கேன். ஆனா அளவு தெரியாது. அம்மா என்னை கிட்சன்லையே விடமாட்டாங்க…”

“நான் அந்த கதையை கேட்கலை. இப்ப என்ன பண்ணுனீங்க முயல்க்குட்டி?…”

“முதல்ல பால் ஊத்தினேன். பொங்கினதும் காபி பவுடர் போட்டேன். அது கூடிடுச்சு. இன்னும் கொஞ்சம் பால் ஊத்தினேன். கரெக்டா வந்துச்சு. சுகர் போட்டேனா அது கூடிருச்சு. திரும்ப பால், திரும்ப காபி பவுடர், திரும்ப சுகர்…” என்று கணக்கு சொல்ல வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தவன்,

“போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது. சோ நாலு பாக்கெட் பால் காலி, சுகர் காலி, காபி பவுடரும் காலி. இல்லையா?…” என்று சிரிக்க துவாரகாவின் முகமே சுருங்கிவிட்டது.

“ஓகே ஓகே, முகத்தை தூக்கி வச்சுக்காத. காபி போடறது ஒன்னும் அவ்வளோ கஷ்டம் இல்லை. நான் சொல்லித்தரேன்…” என வேறு ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து ப்ரிட்ஜில் இருந்த இன்னொரு பாக்கெட்டை காய்ச்ச ஆரம்பித்தான்.

எத்தனை கப்பிற்கு எத்தனை ஸ்பூன் என காபிக்கும், சர்க்கரைக்கும் அளவை சொல்லியவன் தங்கள் இருவருக்கும் சேர்த்து காபி கலந்து அவளுக்கும் கொடுத்து தானும் குடிக்க ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம் நாட் பேட்…” என தனக்கு தானே சொல்லிக்கொள்ள,

“ஆமா, எங்கம்மா இதை விட சூப்பரா போடுவாங்க. இது சுமார் தான்…” என இயல்பாய் சொல்லி குடிக்க,

“அடிங்க ராஸ்கல், போனா போகுதேன்னு போட்டு குடுத்தா கிண்டலா பன்ற?…” என அவளின் காதை பிடித்து திருக அவளின் கண்கள் கலங்கிப்போயிற்று.

“ப்ராமிஸா நான் உங்களை குறையா சொல்லலை மாமா. நம்புங்க. கோவப்படாதீங்க…” என குரலுடைந்து சொல்ல,

“அடடா, துவா நான் உன்னோட விளையாடத்தான் செஞ்சேன். நீ கிண்டலா பேசனும். அப்பப்ப சீண்டி விளையாடனும். எனக்கு அதுதான்டா இஷ்டம். கணவன் மனைவிக்குள்ள இது எல்லாமே சகஜமான ஒன்னு. நீ இதுக்கு போய் அழலாமா? இப்படி ஒன்னொன்னுத்துக்கும் பயந்துட்டா இருப்ப?…”

அவளின் கன்னம் தட்டி பொறுமையாக சொன்னவனின் கையை பிடித்துக்கொண்டு தலையாட்டியவள்,

“அப்ப நிஜமாவே நீங்க கோபப்படலையா?…”

“இல்லைடா…” காபியை கீழே வைத்துவிட்டு அவளின் கன்னம் பற்றி தலையில் முட்டியவன்,

“இப்போன்னு இல்லை எப்பவுமே துவா மேல எனக்கு கோவமே வராது. ப்ராமிஸ்…” என சொல்லி சிரிக்க அவனை கட்டிக்கொண்டாள் துவாரகா.

“இன்னும் மேடம் எவ்வளவு நேரம் இப்படியே இருப்பீங்க? ஹாலுக்கு போவோமா?…” என கேட்க அவனை விலகியவள் மேடையை விட்டு இறங்கிக்கொள்ள,

“காபியை குடிச்சு முடிச்சுட்டு போகலாம்…” என்று நிறுத்தி கப்பை அவளின் கையில் கொடுக்க,

“விடிஞ்சிடும். எனக்கு வேற வேலையில்லையா? காலாங்காத்தால எதையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்குது. சத்திய சோதனை அஷ்மி…” என கிட்சன் வாசலில் நின்று கண்ணை மூடிக்கொண்டு அஷ்மிதா கத்த,

“ஹைய் டாக்டர்…” என துவாரகா சந்தோஷிக்க,

“உன்னை யாரு கிட்சன் வரைக்கும் வர சொன்னா? ஆள் இல்லைனா ஹால்ல வெய்ட் பண்ணவேண்டியதுதான?…” அதிபன் கேட்டுக்கொண்டே அஷ்மிதாவின் தலையில் குட்ட,

“ஏன்டா சொல்லமாட்ட? உன் பொண்டாட்டியை பாரு சின்னபிள்ளை மிட்டாயை பார்த்தா குதூகலிக்கிற மாதிரி என்னை பார்த்ததும் குதிக்கிறா. நீ சலிச்சுக்கற. இதுக்கு ஏன் என்னை வர சொன்ன?…”

“ஏன், என் துவா சின்னப்பிள்ளை தானே? உனக்கேன் இவ்வளோ காண்டு?. உன்னை பார்த்தா துவா கொஞ்சம் எனர்ஜியா இருக்கா. அதுக்குதான் வர சொன்னேன்…” அதிபனும் கேட்க,

“பொழைச்சுப்ப. ஆனா எனக்கு தேவைதான்டா. குரங்கை காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டற மாதிரி அப்பப்ப இவளுக்கு என்னை காமிச்சு எனர்ஜி ஏத்தறயாக்கும்? இதை நான் என் ரசிக மக்கள்க்கிட்டையே நியாயத்தை கேட்கறேன்…” என சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்த்து,

“அஷ்மியை அறிந்த மக்களே எனக்காக இவனிடம் நியாயம் கேளுங்கள். கேட்கும் கேள்வியில் தாரைதப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா?…” என கூச்சல் போட,

“டாக்டர் என்னாச்சு உங்களுக்கு?…” எதுவும் புரியாமல் துவாரகா சந்தேகமாய் கேட்க நொந்துகொண்டாள் அஷ்மிதா.

“நீ ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டேன்மா செல்லக்குட்டி…” என கூற துவாரகா அஷ்மிதாவின் கையை பிடித்துக்கொண்டு,

“வெளில ரோட்ல யாருமே இல்லை. திடீர்ன்னு வெளில கூப்ட்டு பேசினா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? என்கிட்டே சொல்லுங்க. நான் மாமாட்ட கேட்கறேன்…” என்றதும் அஷ்மிதாவின் முகம் போன போக்கில் உருண்டுபுரண்டு சிரிக்க ஆரம்பித்தான் அதிபன்.

“அவங்க அப்படித்தான், நீங்க சொல்லுங்க டாக்டர். சொல்லுங்க, சொல்லுங்க…” என அவள் கையை பிடித்து உலுக்கினாள் துவாரகா. அவள் அஷ்மிதாவை விடுவதாய் இல்லை.

“ஹைய்யோ கை கழண்டுருச்சு. எனக்கு பேக்ரவுண்ட்ல ஏந்திரி அஞ்சலி ஏந்திரி அஞ்சலின்னு வாய்ஸ் கேட்குதுடா அதி…” என பரிதாபமாய் சொல்லி,

“துவாக்குட்டி, என்னத்த சொல்ல சொல்ற? இதை உனக்கு நான் விளக்கி அதை நீ தெரிஞ்சு அதுக்கப்பறம் இவன்கிட்ட  நியாயம் கேட்டு தாரதப்பட்டை கிழியாது. நான் தான் திரும்ப தைக்க முடியாத அளவுக்கு கிழிஞ்சுடுவேன்…” என்றதற்கு,

“சரி, நான் எதுவும் கேட்கலை. நீங்க சொல்ல பிரியப்படலை…” என முகம் வாடி நிற்க,

“நீதான் தைரியமான ஆளாச்சே. சொல்லேன். சொல்லிப்பாரேன்…” என அதிபனும் அஷ்மியிடம் கேலி பேச அவனை முறைத்தவள்,

“அப்படி இல்லடா செல்லக்குட்டி. உன் மாமா அளவுக்கு நான் தெளிவா சொல்லமுடியாது பாரு. அதனால நான் கிளம்பினதும் அவன்கிட்டயே கேளு. ஸார் வரைபடத்தோட விளக்குவார்…”

அதிபனை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்து அவனை போட்டுவிட அதற்கும் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் அவன்.

“ஏன்டா இதுக்கப்பறமுமா உனக்கு சிரிப்பு வருது?…” என்றதற்கு,

“நீ இன்னும் ஞானம் பெறவேண்டும் மகளே. உனக்கு இது புரியாது…” என சொல்லி இன்னும் சிரிக்க,

“சிரிக்கிறானே சிரிக்கிறானே, அஷ்மி உடனே கவுன்ட்டர் குடுடா…” என கடுப்பாகி சோபாவில் இருந்த பில்லோவை எடுத்து அவனை மொத்த அப்படி ஒரு சிரிப்பு அதிபனின் முகத்தில். துவாரகாவும் இதை பார்த்து கலகலவென சிரிக்க அதை கண்டு மகிழ்ந்தவள்,

“என்னடா கண்ணுல பல்ப் எரியுது?…” என்று கேட்க,

“நீ முதல்ல நான் கேட்டதை கொண்டு வந்தியா? அதை விட்டுட்டு வழவழன்னு பேசிட்டு இருக்க?…”

“எல்லாம் கொண்டு வந்துட்டேன். அதோ அந்த ட்ராலில இருக்கு…” என சொல்லி அதை உருட்டிக்கொண்டு வர,

“ஓகே நான் போய் இதை ரூம்ல வச்சிட்டு வரேன்…” என தூக்கிக்கொண்டு மாடி ஏறினான்.

“டாக்டர் என்ன அது?…” துவாரகா கேட்க,

“தனியா இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு. அவனோட ட்ராக் பேண்ட், டிஷர்ட்லையே மேடம் சுத்திட்டு இருக்கீங்க. வேற ட்ரெஸ் வேண்டாமா? அதுதான்…” அஷ்மிதா கேலியாக சொல்ல துவாரகாவின் முகம் சிவந்துவிட்டது.

“அப்பப்பா, இவ்வளவு நேரம் இல்லாத வெட்கம் இப்ப மட்டும் என்னவாம்?…” என சொல்ல,

“துவா…” என்றபடி வந்த அதிபன்,

“போய் குளிச்சுட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. நாம மூணுபேரும் லஞ்ச்க்கு வெளில போகலாம்…” என்றதும் தலையாட்டி வேகமாய் குளிக்க சென்றாள் துவாரகா.  அவள் தலை மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அதிபன்.

“ம்க்கும்…” என அஷ்மிதா இரும வேகமாய் திரும்பியவன் அவள் கண்களில் தெரிந்த விஷமத்தில் அசடு வழிந்தான்.

“ஐயோ, போதும்டா. சத்தியமா கண்கொண்டு பார்க்க முடியலை உன் வெட்கத்த. இந்தா துடை. டன் கணக்குல வழியுது…” என கைக்குட்டையை நீட்ட அவளின் தலையில் கொட்டினான் அதிபன்.

“உனக்கு இது மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்டா என்னை எப்போ பாரு தலையில கொட்டிட்டே இருக்கறது. ஆனா நேத்து செம்ம ரிவீட் போல. பத்மினி ஆன்ட்டி கால் பண்ணினாங்க எனக்கு…” என்றதுமே முந்தைய நாள் ஞாபகத்தில் இறுகிவிட அதை கண்ட அஷ்மிதா,

“அதை மறந்திட்டு சந்தோஷமா இரு அதி. உன் மனசுல இருக்கிறதை கேட்டுட்டல. இனி ப்ரீயா பீல் பண்ணு…”

“இல்ல அஷ்மி, நான் கேட்கவேண்டியது இன்னும் இருக்கு. அம்மா முகத்துக்ககவும், துவாவுக்காகவும் தான் இப்பவும் சும்மா விட்டேன். இனியும் அவங்க துவாவை துன்பப்படுத்த நினைக்க கூடாது. திரும்ப சீண்டினாங்க…” என கொந்தளிக்க,

“சரி, சரி. அதை விடு. ஆனாலும் கேடிடா நீ. தனிக்குடித்தனம் வரனும்னா உள்ளதை சொல்லிட்டு வரவேண்டியது தான. ஏகப்பட்ட ஸ்டன்ட் செஞ்சு பிச்சுக்கோன்னு தலைதெறிக்க மயக்கத்தில இருந்தவளை அள்ளிக்கிட்டு ஓடிவந்திருக்க…”

அஷ்மிதா சொல்லி சிரிக்கவும் மீண்டும் முகம் மென்மையானது அவனுக்கு.  அவளின் சமயோசிதத்தை நினைத்து சிரித்தான்.

“ஆனாலும் ஒரு காபிக்கே இவ்வளவு அக்கபோரா இருக்கேடா? நம்ம நாக்கு வேற நீளம். திரும்பவும் சொல்றேன். சத்திய சோதனைடா. பத்மினி ஆன்ட்டியே சரணம்னு கட்சி மாறிடவேண்டியது தான்…”

சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல பக்கென்று சிரித்துவிட்டான் அதிரூபன்.

“அது, முகத்துல சிரிப்பில்லைனா சுத்தமா நல்லா இல்லடா நீ. இதுவரைக்கும் நடந்ததை விடு. இனிமே நீ சந்தோஷமா இருக்கனும்.  அதுதான் எனக்கு வேணும். நீ ஹேப்பியா இருந்தா தான் துவாவும் ஹேப்பியா இருப்பா. புரியுதா?…”

“ஹ்ம்ம். ஆனா அகிலா அத்தையை நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு. அவங்க நினைவு வந்து என்ன செய்வாங்களோன்னு?…”

“என்ன செய்ய போறாங்க? நீ துவாவை, அகிலா ஆன்ட்டியை இக்கட்டான சூழ்நிலைல காப்பாத்தி இருக்க. இனியும் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருக்க என்னவெல்லாம் செய்யனுமோ எல்லாமே செஞ்சிருக்க. கண்டிப்பா அவங்க புரிஞ்சுப்பாங்க அதி…”

“ம்ஹூம் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை…”

“சரி இந்த மேரேஜை அவங்க ஏத்துக்கலைனா என்ன செய்யறதா இருக்க?…” என அஷ்மிதா கேட்டதும் பதில் சொல்லமுடியாமல் திணறினான்.

“சொல்லு அதி?…”

“இல்லை. என்ன செய்யபோறேன்னு எனக்கு தெரியலை. ஆனா என்னால துவாவை விட்டுக்கொடுக்க முடியாது…” இதை அத்தனை ஸ்திரமாய் அவன் சொல்ல,

“இந்த டயலாக் எல்லாம் இருக்கட்டும். இப்ப அவங்களை பத்தி யோசிக்காம முதல்ல உன் வாழ்க்கையை நீ பாரு. அவங்க எப்ப எழுந்துக்கறாங்களோ அன்னைக்கு மத்த பிரச்சனையை பத்தில் யோசிக்கலாம்…” என்றதற்கு அதி தலையசைக்க அதை குறும்பாய் பார்த்தவள்,

“இதை இப்பவே நினைச்சு நினைச்சு இருக்கிற மூளையும் சூடாகி காத்துல கரைஞ்சிடாமா. அப்பறம் அஷ்மின்னு என்னைத்தான் உயிரை வாங்குவ. அஷ்மி ஷெட்யூல் ரொம்ப பிஸியாகிடுச்சு. இங்க உள்ள ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணிட்டேன்…” அவள் சொல்லவும் அதிபன் சிரித்தபடி,

“அவ்வளவு சீக்கிரம் நீ என்னை விட்டுடுவ பாரு. பிஸியாம்?…”

“போதும் அதி. நீ உனக்குள்ளேயே நடத்தின போராட்டம். இத்தோட முடியட்டும். இனியாவது நீ நிம்மதியா இருக்கனும்டா. இன்னைக்கு துவா முகத்திலையும் ஒரு தெளுச்சி தெரியுது…” என்றதற்கு ஆமோதிப்பாய் அவன் தலையசைக்க,

“பேசாம நீ இங்கயே இருந்திரு அதி. அதுதான் உனக்கும் துவாவுக்கும் நல்லது. நிம்மதியா சந்தோஷமா இருப்பீங்க. ஒருவேளை அகிலா ஆன்ட்டி வந்தா கூட அவங்களோட இல்லாம நீங்க தனியா இருக்கிறதா பார்த்து கொஞ்சம் மனசு மாறலாம் இல்லையா?…” என்றதற்கு யோசனையாக அவன் பார்க்க,

“ரொம்பத்தான் யோசிக்கிறடா நீ. அந்த வீட்ல புத்தனும், சித்தனுமா இருக்காங்க. அந்த பெரிய தியாகிங்களை விட்டுட்டு வர இவ்வளவு யோசிக்கிற. இது எல்லாம் சரிப்படாது. அந்தம்மா வந்து உன்னை லெப்ட் அன்ட் ரைட் வாங்கனும். அப்பத்தான் அடங்கி இந்த வீட்ல உட்காருவ…”

அஷ்மிதாவிற்கு மீண்டும் அதிபன் துவாரகாவுடன் அந்த வீட்டிற்கு செல்வதில் துளியும் விருப்பமில்லை. அதே நேரம் அதிபனை இப்படியே அவன் வீட்டினர் விட்டுவிடுவார்கள் என்று நம்பிக்கை இல்லை.

எதுவோ ஒன்று, இங்கிருக்கும் வரை அவர்களின் தலையீடு இன்றி வாழ்க்கையை தொடங்க வேண்டும் இவர்கள் என நினைத்தாள்.

“ஸாரிடா அஷ்மி. அன்னைக்கே நீ இங்க வரேன்னு சொன்ன. நான் தான்…”

“பார்ரா குடும்ப இஸ்திரி ஆனதும் ஸார் பார்மாலிட்டீஸ் பத்தி எல்லாம் பேசறார். போடா, போடா. எனக்கு புரியாதா உன்னை. ஸாரி பூரின்ன பார்த்துக்கோ…”

“நேத்துவரை துவா ரொம்ப அப்செட். அவளா தெளிந்து வரனும்னு தான் உன்னை வரவேண்டாம்னு சொன்னேன். நீ எதுவும் நினைக்கலைல…” மீண்டும் பாடிய பாட்டையே திருப்பி பாட,

“அட ராமா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி…” என அஷ்மி கத்த,

“என்ன இது கொசுத்தொல்லை, அது இதுன்னு?…” அதிபன் கேட்க,

“நம்ம குரு ஒருத்தவங்க இந்த டயலாக்கை தான் அடிக்கடி சொல்லுவாங்க தம்பி. அதுதான் நாமளும் ட்ரை பண்ணலாம்னு…”

“அது யாரு உன் குரு?…” என்க,

“முடிஞ்சா கண்டுபிடி பார்க்கலாம்…” என கண்ணடித்து சொல்ல தலையில் அடித்துக்கொண்டான்.

அதற்குள் துவாரகாவும் கிளம்பி வர மூவருமாய் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வீட்டிற்கே திரும்பி வர வந்த உடனே அஷ்மிதாவிற்கு அவசர செய்தி வர உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி ஓடினாள்.

மாலை ஐந்து மணி வரை நன்றாக தூங்கிய துவாரகாவை எழுப்பிய அதிரூபன் அவளை குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்ப சொல்ல மறுபேச்சின்றி கிளம்பி வந்தாள்.

“துவா சுடிதார் வேண்டாம். உனக்கு சேரி கூட அஷ்மி எடுத்துட்டு வந்திருக்கா. அதுல ஒண்ணை எடுத்து கட்டிட்டு வா…” என்க,

“மாமா, இதுதான் கம்பர்டபுள். நான் இதுலையே வரேன். ப்ளீஸ்…” விழிகளை சுருக்கி கெஞ்சலாய் கேட்க கள்ளப்புன்னகை புரிந்தவன்,

“நோ நோ. கல்யாணத்துக்கு பின்னால நாம ரெண்டு பேரும் சேர்ந்து முதன் முதலா கோவிலுக்கு போறோம். கண்டிப்பா புடவை தான். சில்க் சேரியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்…” என்று சொல்லியவனின் விழிகளில் புதிதாய் ஒன்று.

நெஞ்சம் படபடக்க அவனிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டவள் வார்த்தையாடாமல் வேகமாய் மேலே சென்றுவிட்டாள்.

“குட் கேர்ள், கண்ணை கொஞ்சம் பார்த்தே கண்டுபிடிச்சுட்டா…” என சிரித்துக்கொண்டான்.

“மாமா…” என்றபடி வந்தவளை பார்த்து அசந்துதான் நின்றான்.

மிதமான பிங்க் நிற சில்க் காட்டன் புடவையில் தங்க சரிகைகள் மின்ன வந்து நின்றவளின் கோலம் பச்சை குத்தியதை போல ஒட்டிக்கொள்ள,

“ஹ்ம்ம் என்ன சொல்ல?…” என அவளை சுற்றி வந்து பார்த்தவன்,

“சும்மா தாறுமாறா இருக்க…” என்றதும் சிரித்தவள்,

“கோவிலுக்கு…” என கேட்க,

“ஆமா, கோவிலுக்கு. போலாமே. வெய்ட் நானும் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என்று போய் அவள் சேரிக்கு மேட்ச்சாக ஷர்ட் ஒன்றை போட்டுக்கொண்டு வந்தவன் அவளின் கைகோர்த்து வெளியில் வந்தான்.

கோவிலுக்குள் நுழைகையிலேயே அத்தனை ஏகாந்த மனநிலை. இருவருக்குமே சொல்லமுடியாத ஒருவித உணர்வு. இதைத்தான் பாஸிட்டிவ் வைப்ரேஷன்னு சொல்லுவாங்களோ? என நினைத்தனர்.

அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வலம் வந்து ஒரு இடத்தில் அமர்ந்த இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. புன்னகை முகமாக அங்கு வருவோர் போவோரை பார்த்தபடி இருந்தனர்.

“அதி…” என்ற அழைப்பில் அவர்களின் மோன நிலை அறுபட சட்டென நிமிர்ந்து பார்க்க அங்கே பத்மினியும், அன்னபூரணியும் நின்றுகொண்டிருந்தனர்.

“அதி, அம்மாட்ட பேசமாட்டியாப்பா? அம்மா என்னடா பண்ணினேன்? போன் பண்ணினா கூட எடுக்கலை நீ?…”  என்று கேட்டவர் அழவே ஆரம்பித்துவிட பதறிப்போய் எழுந்தான்.

அவனோடு துவாரகாவும் பரிதாபமாய் வந்து நின்றவர்களை பார்த்து மிரண்டுபோய் பார்த்தாள்.

“நீ பயப்படாதம்மா. நான் இவனை கூட்டிட்டு போக வரலை. என்கிட்டே பேசலையே அதுதான் கேட்க வந்தேன். நான் என்னம்மா பாவம் பண்ணினேன்? நீயே சொல்லு…” என அவளிடம் முறையிட அதிபனின் முதுகின் பின் மறைந்தாள் துவாரகா. அதை கண்ட அதிரூபன்,

“அம்மா, பேசக்கூடாதுன்னு இல்லை. பேசற மூட்ல நான் இல்லை. இவளை பார்த்துக்கனுமே. அந்தளவுக்கு காயப்பட்டிருக்கா. இதுக்கு போய் அழலாமா?…”

அவரின் கண்ணீரை துடைத்தவன் துவாரகாவை தன் பின்னால் இருந்து முன்னுக்கு இழுத்து தனக்கு இடதுபுறம் நிறுத்தி தோளில் கைபோட்டுக்கொண்டு அவளை மீண்டும் பின்னால் போய்விடாதவாறு நிறுத்திக்கொண்டான்.

“ரொம்ப சந்தோஷம்ப்பா. எங்க என் குரலை கேட்டு எழுந்து போய்டுவியோன்னு பயந்துட்டே தான் வந்தேன்…” என சொல்லவும்,

“என்னம்மா நீங்க. நான் உங்ககிட்ட எதுக்கு அப்படி செய்யப்போறேன்…” என்றவன் அவரின் பின்னால் நின்றிருந்த அன்னபூரணியின் புறம் கண்களை கொண்டு செல்லவே இல்லை.

“அந்த வீட்டுக்கு கூப்பிடாத வரை எனக்கு நிம்மதி. என்னை இப்படியே நீங்க விட்டுடுங்க. உங்களுக்கு உங்களுக்கு மட்டும் எப்போ எங்களை பார்க்கனும்னு தோணினாலும் தாராளமா வீட்டுக்கு வாங்கம்மா…” என சொல்லியவன் மறந்தும் அன்னபூரணியை அழைக்கவே இல்லை.

ஆனால் இதை எதையும் அன்னபூரணி கண்டுகொள்ளவே இல்லை. துவாரகாவை பார்த்து கண்கள் கலங்க அவர் நின்றார். அத்தனை நிறைவாய் இருந்தது இருவரையும் காண.

“ஓகேம்மா, லேட் ஆகிடுச்சு. நாங்க கிளம்பறோம். துவா வா போகலாம்…” என அங்கிருந்து நகரப்போக பத்மினியை தாண்டிக்கொண்டு முன்னால் வந்தார் அன்னபூரணி.

கேள்வியாய் அவரை அவன் பார்க்க துவாரகாவின் விரல்களில் நடுக்கம் பிறந்தது அன்னபூரணியின் நெருக்கத்தில். அதை பார்த்தவர் இயல்பாய் அர்ச்சனை கூடையில் இருந்து பிரசாதத்தை எடுத்து ஒருவரின் நெற்றியிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் வைத்து,

“நூறு வருஷம் குழந்தை குட்டிகளோட சந்தோஷமா நிறைவான வாழ்க்கையை நீங்க வாழனும். அத்தனை செல்வங்களையும் பெற்று ஏகபோகமா வாழனும்…”

கலங்கிய விழிகளை கண்ணீர் நனைத்திருக்க துவாவின் கன்னம் தடவி அதிபனின் தலையில் கைவைத்து ஆசிர்வதிப்பதை போல செய்துவிட்டு விடுவிடுவென நடந்துவிட்டார் அன்னபூரணி.

இதை பத்மினி கூட எதிர்பார்க்கவில்லை. தான் கூட தன் பிள்ளைகளுக்கு இதை செய்யவில்லையே என எண்ணினார்.

அதிரூபனின் மனதை பிசைந்தது அன்னபூரணியின் செயல். அவனும் நல்லதுகெட்டதை அறிந்துகொள்ளும் வயது வரை அத்தை அத்தை என இருந்தவன் தானே.

“அதி…” பத்மினி அழைக்க,

“அம்மா நீங்க கிளம்புங்க. டைம் ஆகிடுச்சு பாருங்க. ரொம்ப லேட்டா எதுக்கு கோவிலுக்கு வரீங்க? செக்யூரிட்டீஸ் வேற இல்லை…” என கடிந்துகொள்ள,

“மப்டி போலீஸ் வந்திருக்காங்கப்பா. இன்னைக்கு என்னவோ லேட்டா தான் கிளம்பினோம். ட்ராபிக் வேற…” என சொல்லிக்கொண்டு அவரும் இருவருக்கும் பிரசாதத்தை வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

அதன் பின் இன்னும் ஒரு பத்து நிமிடம் போல அங்கேயே அமர்ந்துவிட்டு இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

வரும் வழியிலேயே உணவை முடித்துக்கொண்டு வர காரிலேயே உறங்கிவிட்டாள் துவாரகா. அவளின் உறக்கம் கலையாதவாறு காரை வீட்டினுள் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டு வந்தவன் காரின் கதவை திறக்க துவாரகா விழித்திருந்தாள்.

“ஏன் மாமா என்னை கார்லயே வச்சு பூட்டிட்டு போனீங்க?. இன்னைக்கு நீங்க சரியில்லை…” என்றதும் புன்னகைத்தவன்,

“நத்திங்டா. வா உள்ள போகலாம்…” என்று கை குடுத்து எழுப்ப அவனோடு உள்ளே சென்றவள் நேராக தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.

அறைக்கதவை திறந்தவள் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட அவளின் பின்னோடு வந்தவன் அவளை தாண்டிக்கொண்டு பால்கனி சென்று நின்றுகொண்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ? மேதுவார் பார்வையை சுழலவிட பால்கனியில் அவளையே பார்த்தவாறு அதிரூபன். முகத்தில் அத்தனை காதல். காதல் அந்த காதல் கட்டியது அவ்வளவு வர்ணஜாலம்.

மெதுவாய் அவனிடம் அவள் நடந்து செல்ல அவளுக்காகவே காத்திருந்தான்.

“துவா…” காதல் கரையுடைக்க அதிரூபனின் மொத்த உணர்வுகளும் நிரம்பிய குரலில் அவளது பெயர்தான். ஆனால் ஏதோ புரியாத பாஷை கேட்டது போல நிமிர்ந்து பார்த்தாள்.

ஒரு சின்னப்பூத்திரியில்

ஒளி சிந்தும் ராத்திரியில்

இந்த மெத்தையிலே

இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா

உயிரை சுண்டி இழுக்கும் அவனின் ராஜகுரலில் இரவின் இனிமையில் அவன் பாடியதில் அவளின் மனம் மயங்கி நின்றவள் நாண உடை போர்த்தி அவனின் நெஞ்சத்தில் முகம் புதைக்க காதலால் அவளை அணைத்துக்கொண்டான் அதிரூபன் முகம்கொள்ளா புன்னகையோடு.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement