Advertisement

மின்னல் – 12

                    ரத்தினசாமி முகம் முழுவதும் அத்தனை குழப்பம். என்ன பேசுவான் எது பேசுவான் என்று தவிப்புடன் இருக்க அவரருகில் வந்த பத்மினி,

“என்னங்க டென்ஷனா இருக்கீங்க? இன்னும் கிளம்பலையா? வெளில போனமாதிரி இருந்ததே?…” என கேட்க,

“அதிபன் ஏதோ பேசனும்னு இரிக்க சொல்லியிருக்கான். நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என்று எழுந்து உள்ளே சென்றுவிட அன்னபூரணி இன்னும் சாப்பிட வராமல் இருக்கவே அவரை தேடி சென்றார்.

கதவு திறந்திருந்தாலும் வெளியில் நின்று இரண்டுமுறை தட்டிவிட்டு,

“பூரணி சாப்பிட வரலையே?…” என வாசலில் நின்றே கேட்க,

“உள்ள வாங்க அண்ணி, இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்டார். இதோ இவருக்கு சாப்பிடறதுக்கு முன்னாடி குடுக்கிற டேப்லட் குடுத்துட்டு கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்…”

“சரிம்மா, நீ சீக்கிரம் வா…” என சொல்லி செல்லவும் பூரணியின் முகத்தை நிமிர்ந்துகூட பாராமல் வைத்தியநாதன் எங்கோ வெறித்தபடி இருக்க அவரின் நிலை அன்னபூரணிக்கு அத்தனை வலித்தது.

“நீங்க கவலைப்படாதீங்க. நம்ம பொண்ணுதான் நம்ம கூடவே இருக்க போறாளே. இனியும் எதுக்கு இந்த கலக்கம்?…” அவரை சமாதானம் செய்ய,

“அகிலா…” என ஒரு வார்த்தை மட்டும் சொல்லியவர் நெஞ்சை நீவிவிட்டுக்கொள்ள,

“ஐயோ திரும்ப உணர்ச்சிவசப்படாதீங்க. நம்ம அதி அப்படி ஒன்னும் விட்டுடமாட்டான். முடிந்தால் அகிலாக்காவையும் சமாதானம் செய்திடுவான்…”

அன்னபூரணி சொல்வதை கேட்க நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது வைத்தியநாதனுக்கு நன்கு தெரியும்.   

“நாளைக்கு நடக்கிறத நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ போய் நாம சாப்பிடலாம்…” என அவரின் வீல்சேரை உருட்டிக்கொண்டு வெளியே வந்த அன்னபூரணிக்கு,

‘இனிதான் நிறைய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும் உறுதியோடு தயாராக இருக்கவேண்டும்’ என நினைத்துக்கொண்டார்.

டைனிங்ஹாலில் அஷ்மிதாவை பார்த்ததும் ஆச்சர்யப்பட்ட அன்னபூரணி வைத்தியநாதனின் சேரை சரியா நிறுத்திவிட்டு,

“எப்ப வந்த அஷ்மி? எப்படி இருக்க?…” என ஸ்நேகமாக கேட்டுவைக்க,

“நைட்டே வந்துட்டேன் ஆன்ட்டி. நேத்துதானே பார்த்தோம். அதுக்குள்ளே ஏதும் மாறிடுமா என்ன? அப்படியே தான் இருக்கேன்…” அஷ்மிதா சாதாரணமாக சொல்ல நினைத்தாலும் அன்னபூரணிக்கு அது அப்படி தெரியவில்லை.

“ஏன் மாறாது அஷ்மி? எதுவும் மாற ஒரு நாள் தான் வேணுமா என்ன? ஒரு நிமிஷம் கூட போதும். நேத்து வரைக்கும் நீ தான் இந்த வீட்டு மருமகள்ன்னு நாங்க எல்லாருமே எதிர்பார்த்திட்டு இருந்தோம். ஆனா இன்னைக்கு துவாரகா தான் மருமக. மாற்றம் எப்ப வேணும்னாலும் நடக்கலாம்…”

அன்னபூரணியும் சிரித்தபடி அஷ்மிதாவிற்கு பதில் சொல்ல அவளோ அவரையும் வைத்தியநாதனையும் ஆழமாக பார்த்தவள்,

“எஸ் ஆன்ட்டி கரெக்ட் தான். மாற்றம் எப்ப வேணும்னாலும் நடக்கலாம். இதுவரை யாரை ஆகவே ஆகாதுன்னு ஓடஓட விரட்டி அடிச்சீங்களோ, யாரை அண்டவே விடக்கூடாதுன்னு சட்டம் போட்டு வச்சிருந்தீங்களோ இந்த வீட்டோட சட்டத்தை உடைச்சு அதி துவாவை கல்யாணம் செஞ்சுட்டான். எவ்வளவு பெரிய மாற்றம்?…”

“அஷ்மி, நான் என்ன சொல்றேன், நீ எதைமா பேசற?…” அன்னபூரணி யோசனையாக கேட்க,

“மாற்றம் ஆன்ட்டி. அதைத்தான் பேசறேன். பலவருஷங்களுக்கு முன்ன நீங்ககூட அங்கிள் லைப்ல எவ்வளவு பெரிய மாற்றத்தை குடுத்திருக்கீங்க. இன்னைக்கு அதே மாற்றத்தை அதி குடுத்திருக்கான். எப்ப வேணும்னாலும் எதுவேணும்னாலும் மாறும்னு சொல்ல வரேன்…”

அஷ்மிதா பேச பேச வாயடைத்து அன்னபூரணி நிற்க வைத்தியநாதன் தலைநிமிரவே இல்லை.

‘இவள் எதற்கும் எதற்கும் முடிச்சிடுகிறாள்’ என திகைப்பாய் பார்த்தார்அன்னபூரணி.

“சாப்பிடுங்க ஆன்ட்டி. எவ்வளோ நேரம் நிற்பீங்க?…” என கேட்டு கைகழுவ எழுந்துகொள்ள,

“அதுக்குள்ளே சாப்பிட்டியா அஷ்மி. உனக்கு குழிப்பணியாரம் ஊத்த சொல்லியிருந்தேன். புதினா சட்னியோட…” என பத்மினி வர,

“போதும் ஆன்ட்டி. நான் போய் துவாவை பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன். நேரமாகுதே…”

“அதுக்குள்ளே ஏன் கிளம்பற? இரு. எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகனும். மறந்துட்டியா? பொண்ணு மாப்பிள்ளை பேர்ல பூஜைக்கு சொல்லியிருக்கேன். நீயும் கண்டிப்பா இருக்கனும்…”

அவளின் கன்னத்தை வருடி வாஞ்சையாக சொல்ல பத்மினியின் பாசத்தில் நெகிழ்ந்துதான் போனாள் அஷ்மி.

“வரனும்னு தான் நினைக்கிறேன் ஆன்ட்டி. ஆனா ட்ரெஸ் எதுவும் எடுத்திட்டு வரலை. அதுவும் கோவிலுக்கு. கொஞ்சம் ட்ரடீஷ்னல் லுக் இருக்கனுமே. நான் வீட்டுக்கு போய்ட்டு அங்க இருந்தே கிளம்பி கோவிலுக்கு வந்திடறேன். சரியா?…”

“ஓகேமா. உன் இஷ்டம். கோவில்…”

“எனக்கு தெரியாதா என்ன? வந்திடுவேன்…”

“அப்பாவையும் கூப்பிட்டதா சொல்லு…”

பத்மினிக்கு ராஜாங்கத்தை முன்பே அவ்வளவாய் பிடிக்காது தான். ஆனால் அதிபனின் திருமணத்தில் எந்த பிரச்சனையும் பண்ணாமல் ரத்தினசாமியையும் பண்ணவிடாமல் சமயோசிதமாக செயல்பட்டவர் மீதி மிகுந்த மரியாதையும் நன்றியும் வந்திருந்தது. அதன் காரணமாக இந்த அழைப்பு.

“அப்பா பாரின் போயாச்சு ஆன்ட்டி. சடனா கிளம்பவேண்டியதா போச்சு. வர டூ த்ரீ டேய்ஸ் ஆகும்…”

“என்ன இப்படி சொல்ற? அப்போ நீ இங்கயே இரேன்மா. எதுக்கு அவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்கனும்? இங்க நம்ம ஸ்வேதா ரூம்லயே தங்கிக்கோ. உனக்கும் டைம் பாஸ் ஆகும்…” அவர் சொல்லவும் ஸ்வேதாவை நினைத்து சிரிப்பு வந்துவிட,

“ஸ்வேதா ரூம்ல தானே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆன்ட்டி. அவகிட்ட கேளுங்க…” என்றவள்,

“நானும் பெங்களூர்ல தனி ப்ளாட்ல தனியா தான் தங்கியிருந்தேன்னு அப்பப்ப நீங்க மறந்திடறீங்க போங்க…” என சொல்லி சிரிக்க இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டே வைத்தியநாதனுக்கு பரிமாறிவிட்டு தனக்கும் வைத்துக்கொண்டு சாப்பிடாமலே அமர்ந்திருந்தார் அன்னபூரணி.

தனிமைப்பட்டுவிட்டதை போல ஏனோ அத்தனை பாரமாக இருந்தது மனது.

கணவர் சாப்பிடுகிறாரா இல்லையா என்பதை கவனித்துக்கொண்டே இருந்தாலும் ஒரு வாய்கூட தொண்டைக்குள் இறங்கவே இல்லை அவருக்கு.

பத்மினியும் அஷ்மியுடனான பேச்சு சுவாரஸியத்தில் இதை கவனிக்கவே இல்லை. ஆனால் ரத்தினசாமி கவனித்துவிட்டார்.

அஷ்மிதா அங்கே இருக்கிறாள் என்கிற ஒரே காரணத்தால் டைனிங் ஏரியாவிற்குள் வராமல் ஹாலிலிருந்தே அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் அன்னபூரணியிடம் அஷ்மிதா பேசி முடித்த பின்புதான் அவருமே ஹாலிற்குள் வந்தார் ரத்தினசாமி.

அஷ்மிதா அன்னபூரணியிடம் பேசியதை கேட்டிருந்தால் அங்கேயே ஆடியிருப்பார். அவர் ஆட ஆரம்பித்தால் அஷ்மி அதற்கு மேல் ருத்ரதாண்டவமே ஆடியிருப்பாள் என்பதும் வேறுவிஷயம். ஆனாலும் ரத்தினசாமியால் தன் தங்கை மனம் நோக்குவதை பார்க்க முடியாதல்லவா?

“பத்மி…” என கோவத்துடன் வந்தவரை புரியாமல் பார்த்த பத்மினி,

“என்னாச்சுங்க?…” என கேட்க வேகமாய் அவரை தள்ளி நிறுத்தியவர் அன்னபூரணியின் அருகில் அமர்ந்து தங்கைக்கு ஊட்ட ஆரம்பித்தார்.

“வேண்டாமண்ணே நானே சாப்பிடறேன்…” கலங்கிய கண்களை மறைத்தவாறே அவர் மறுக்க துடித்துவிட்டார் ரத்தினசாமி.

“அண்ணன் இருக்கேன்டா. நீ சாப்பிடு. மாப்பிள்ளை நீங்களும் சாப்பிடுங்க…” என அன்னபூரணி மறுக்க மறுக்க ஊட்டிவிட பத்மினிக்கு பதறியது.

“என்னாச்சுங்க? பூரணி என்னம்மா?…” என வந்து நிற்க அஷ்மிதா ஒருவித அலட்சியத்துடனும் அர்த்தத்துடனும் ரத்தினசாமியை பார்க்க அவரோ,

“என்ன நோன்னாச்சு? என் தங்கச்சி ஒரு வாய் கூட சாப்பிடலை. இதுதான் நீ அவளை கவனிக்கிற லட்சணமா? எல்லாருக்கும் துளிர்விட்டு போச்சுல. காமிக்கிறேன் இந்த ரத்தினசாமி யாருன்னு…”

கடுகடுத்தவாறே பேசிக்கொண்டே தங்கையை கவனித்து பார்த்து ஊட்ட பத்மினிக்கு கவலையாக் போனது.

“பேச்சுல கவனிக்கலைங்க. மன்னிச்சுடுங்க…” என கெஞ்சும் குரலில் கேட்க,

“அதைத்தான நானும் சொல்றேன். என் தங்கச்சி குடும்பத்தை நீ என்ன கவனிச்ச? உனக்கு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? உனக்கெப்படி இருக்கும்?…”

குத்தலாய் அவர் பேச பத்மினி அன்னபூரணியை பார்த்து அவர் தட்டில் மேலும் ஒரு தோசையை வைக்க போக தடுத்த ரத்தினசாமி,

“போதும் உங்க நாடகமெல்லாம். போய் பேசிட்டே இரு. என் தங்கச்சியை பார்த்துக்க எனக்கு தெரியும்…” என உதாசீனமாக பேச அன்னபூரணியும் அதற்கு மறுத்து பேசாமல் அமைதியாக இருக்க வேதனையாக பார்த்தார் பத்மினி.

“விடுங்க ஆன்ட்டி. இதை காரணமா வச்சு இன்னைக்கு பூரணி ஆன்ட்டிக்கு சாப்பாடு ஊட்டிட்டாங்க உங்க ஹஸ்பண்ட். பீல் ப்ரீ ஆன்ட்டி…” என சொல்லிய அஷ்மி,

“ஆனா ஆன்ட்டி பாசம்ன்றது எல்லாருக்கும் பொதுவானது. அங்கிள்க்கு அவங்க தங்கச்சி பாசம் மாதிரி ஒவ்வொருத்தவங்களுக்கும் அவங்களுக்கு வேண்டப்பட்டவங்க மேல பாசம் அன்பு எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதை யாரும் தடுக்க முடியாது…” என்றவள்,

“பாசம், அன்பு, காதல் எல்லாம் ஒருத்தர் சொல்லி இன்னொருத்தர் மேல வலுக்கட்டாயமா வரவழைக்க முடியாது. நமக்கு பிடிக்கலைன்னாலோ நமக்கு பிடிச்சவங்களுக்கு பிடிக்கலைனாலோ உடனே உண்மையான அன்பை வெட்டிவிடறது பேர் பாசமே இல்லை…”

அன்னபூரணிக்கு புரிந்துவிட்டது. அஷ்மிதா எதையும் எதார்த்தமாக பேசவில்லை என்பது. கண்டிப்பாக இதில் உள்நோக்கம் எதுவோ இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.

பத்மினிக்கு அஷ்மிதா என்ன சொல்ல வருகிறாள் என்பது ஓரளவிற்கு புரிந்துவிட ரத்தினசாமியின் முகத்தை பதட்டத்தோடு பார்த்தவர் அவர் பயந்தது போலவே அத்தனை பயங்கரமாக மாறியிருக்க,

“அஷ்மி துவாவை பார்க்கனும்னு சொன்னியே. போய் போய் பார்த்துட்டு கிளம்பு. நான் கோவிலுக்கு போகும் போது கால் பன்றேன்…” என சொல்லி அனுப்பிவைத்தார்.

பத்மினியின் பதட்டம் அஷ்மிதாவிற்கு துளியும் இல்லை. ரத்தினசாமியை தீவிரமாக பார்த்து,

“நாம மட்டும் பாசம் காட்டலாம். அதுவே வேற யாரும் யார்மேலையும் காட்டிட்ட கூடாது. வெட்டுவேன் குத்துவேன்னு டாட்டா சுமோல கிளம்பிடறது…”

“அஷ்மி…” பத்மினி மீண்டும் அழுத்தமாய் சொல்ல,

“போறேன் ஆன்ட்டி. பொதுவா சொன்னேன்…” என்றவள்,

பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும் ஹேய் நான் அலங்கா நல்லூர் காளை
ஹேய் வைகை மண்ணுச்சொல்லும் என் பேர
எம்பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு புழுதிப்பறக்கும் பாரு
ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன்
உன் முட்டியத்தான் உடைப்பேன் உடைப்பேன்

என்ற பாட்டை பாடிக்கொண்டே அதற்கு ஏற்ப தோளை குலுக்கி லேசாக நடனமில்லா நடனத்தோடு நடந்து செல்ல பத்மினிக்கு பயத்தையும் மீறிய சிரிப்பு தொற்ற அதை மறைத்தபடி ரத்தினசாமியை பார்த்தார்.

அவரோ அத்தனை கோபமாக அஷ்மியை பார்த்துக்கொண்டே குளிர்ந்த நீரை சட்டை நனைய தொண்டையில் கவிழ்த்துகொண்டார். அத்தனை குளிர்ச்சியும் அவரின் நெஞ்சு தணலை கொஞ்சமும் அணைக்கவில்லை.

‘ஆனாலும் இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம் தான்’ ரசனையோடு அஷ்மியை பார்த்தவருக்கு விஷாலுக்கு எடுத்திருக்கலாம். ஒத்துக்கமாட்டேன்னுட்டாங்களே  என்ற கவலை பிறந்தது புதிதாய்.

மாடிக்கு அதியின் ரூமிற்கு வர எதிரில் விஷாலும் நடந்துவர அவனோடு வந்த அர்னவ் இவளை பார்த்து ஸ்நேகமாய் புன்னகைக்க அவனையும் முறைத்தவள்,

“என்னா லுக்கு? போடா…” என மிரட்டிவிட்டு அதிபனின் அறைக்குள் சென்றுவிட அர்னவிற்கு அத்தனை அவமானமாக போயிற்று.

“ஏன்டா ப்ரெண்ட்லியா தானேடா சிரிச்சேன். அதுக்கு ஏண்டா இப்படி இன்சல்ட் பண்ணிட்டு போறாங்க…” என கேட்க விஷால் வாயே திறக்கவில்லை.

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு…” என கடுப்பாகி வேகமாய் அர்னவ் சென்றுவிட விஷால் அதை கவனிக்கும் நிலையில் கூட இல்லை. மனதளவில் மிகவும் துவண்டிருந்தான் அவன்.

“இவனுங்க கண்ணுமுன்னால வந்தே கடுப்பேத்தறானுங்க…” என திட்டிக்கொண்டே அதிபனின் அறைக்குள் நுழைய அங்கே தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் அவன்.

கட்டிலில் அவனையே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் துவாரகா. உறங்கி எழுந்த கலைந்த ஓவியம் போல இருந்தது அவளின் தோற்றம்.

“என்னடா அதி? இவளை இன்னும் கிளப்பலையா நீ?…” என கேட்டுக்கொண்டே,

“குட்மார்னிங் துவா…” என்று அவளிடமும் சிரிக்க அவள் கொஞ்சமும் திரும்பவில்லை அஷ்மியிடம். பார்வை மொத்தமும் அதிபனிடம் மட்டுமே.

“இப்ப என்ன இங்க பஞ்சாயத்து?அஷ்மினாலே ஜட்ஜ்மென்ட்னு ஆகிப்போச்சு. சொல்லு சொல்லு முடிச்சுவிட்டு கிளம்பறேன்…” என சாவகாசமாக சோபாவில் அமர,

“டாக்டர்…” என துவா அழைத்தாள்.

“சொல்லுடா துவா. இந்த குடும்பத்துல டாக்டர்ன்னு என்னை ஒத்துக்கற ஒரே ஆளு நீ மட்டும் தான்…” என அவளின் முன்னே வந்து அமர்ந்துகொள்ள தலையில் அடித்தான் அதிபன்.

“அவனை ஏன் பார்க்கற? இவன் கிடக்கறான் சாம்பார். நீ சொல்லு….” என்று அதிபனை சீண்ட,

“அம்மாட்ட போகனும், கூட்டிட்டு போக சொல்லுங்க டாக்டர். எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. பயமா இருக்கு…”

துவாரகா கூறியதை கேட்டதுமே விளக்கெண்ணையை குடித்ததை போல பார்த்தவளின் மண்டைக்குள் விடுகதையா இந்த வாழ்க்கை என்னும் பாடல் கேட்க துவாவை முறைத்தவள்,

“நான் கிளம்பறேன். அங்க ஒரு மலை என்னை பார்த்து மலைச்சு போய் வண்டி வண்டியா தண்ணிய மண்டுது. இவ என்னையே மண்டவச்சிடுவா போலவே…” என புலம்ப,

“அஷ்மி உட்கார்…” என்றவன் துவாரகா துள்ள துள்ள அவளை அள்ளிக்கொண்டுபோய் பாத்ரூமினுள் விட்டவன்,

“இன்னும் பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு வெளில வர. இல்ல நான் வந்து உன்னை குளிச்சுவிடுவேன்…” என்று சொல்லி அவள் திகைத்து நிற்கும் போதே வெளியில் பூட்டிவிட்டு வந்து அமர்ந்தான்.

அவனை பார்த்து சிரித்தவள், “உன் பாடு திண்டாட்டம் தான் போலவே அதி?…” என நக்கலடிக்க,

“இந்த கிண்டல் கேலி எல்லாம் இருக்கட்டும். நேத்து எதுக்காக அப்படி பண்ணின?…” என்றதற்கு,

“எல்லாம் ப்ளான் பண்ணிதான் பண்ணினேன். அதுக்கு என்னன்ற?…” அஷ்மிதாவும் சளைக்காமல் பதில் கொடுக்க,

“உன் மேல இங்க எவ்வளவு மதிப்பு தெரியுமா? அவரை பத்திதான் உனக்கு தெரியுமே. அதுக்கப்பறமும் எதுக்காக இப்படி?…”

“மண்ணாங்கட்டி மரியாதை. எனக்கு தேவை இல்லை. உன்னை மாதிரி எல்லாத்தையும் கண்டும் காணாம இருக்க நான் ஒன்னும் கடவுள் இல்லை. அந்த கடவுளுக்குதான் கண் இருந்தும் இல்லாத மாதிரி எல்லாத்தையும் பார்த்தும் எந்த ஆக்ஷனும் எடுக்கமாட்டான்…”

“அஷ்மி, நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலைடா…”

“எனக்கு எதுவும் புரியவேண்டாம். தெரிஞ்சுதான் பண்ணேன்னு சொல்றேன். திரும்ப திரும்ப அதையே சொல்ற. எனக்கு மயில்சாமி றெக்கையை பிச்சு எரியனும்ன்ற அளவுக்கு கோவம் இருந்துச்சு. ஆனாலும் நான் காட்டினது சாம்பிள் தான்…”

“அதுக்குன்னு விஷாலை அடிப்பியா?…”

“அடிப்பேன் அதுக்கு மேலையும் செய்வேன். இதெல்லாம் நீ பண்ணனும். உனக்குத்தான் அதுக்கு கட்ஸ் இல்லையே. இப்பவும் விட்டா இந்த வீட்ல துவாவுக்கு பாதுகாப்பில்லை. நீ கண்டும் காணாம இருந்தா என்னவேணும்னாலும் செய்வாங்க. அவங்களுக்கு ஒரு பயம் இருக்கனும். அதான் அப்படி பண்ணினேன்…”

“நான் துவாவ பார்த்துப்பேன் அஷ்மி…”

“அப்பப்பா பார்த்தேனே. நான் கிளம்பறேன்…” என எழுந்துகொள்ள,

“நான் இன்னும் பேசி முடிக்கலை அஷ்மி…” அவளை நேர் பார்வை பார்த்து கேட்க,

“இப்போ என்ன நான் உன்கிட்ட ஏன் அப்டி பேசினேன்னு தான? அப்போ உன்கிட்ட முதல்ல பேசினது எல்லாம், உண்மையில அந்நேரம் எனக்கு உன்கிட்ட சொல்லனும்னு இருந்துச்சு. சொல்லகூடாதுன்னு நினைச்சுட்டே தான் இருந்தேன். ஆனாலும் சொல்லிட்டேன்…”

“ஏனா உன் வீட்டு வாசலுக்கு வரவும் தான் அதை குடிச்சேன். குடிக்கவுமே நீ வரவும் எல்லாத்தையும் சொல்லிட்டேன். சொல்லும் போது சொல்லிடாத சொல்லிடாதன்னு எனக்குள்ள சொல்லிட்டே உன்கிட்ட கொட்டிட்டேன். போதையோட தாக்கம்…” என்றவள்,

“ஆனா உன் தம்பி வரவும் பாதி போதை அப்படியே இறங்கிடுச்சு. நீ ஹாஸ்பிட்டலுக்கு கைல கந்தல் கோலமா தூக்கிட்டு வந்த துவா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா. அதுலயும் மயில்சாமி வரவும் மொத்த போதையும் இறங்கிடுச்சு. கிழிச்சு தொங்கப்போடனும்னு நினைச்சேன். ப்ச் மிஸ் ஆகிடுச்சு…”

கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டோமே என்கிற ஆற்றாமை அவளிடம் அப்பட்டமாய் தெரிய சிரிப்புத்தான் வந்தது அதிபனுக்கு.

“ஆனாலும் உனக்கு ரொம்ப துணிச்சல், என் முன்னாலையே என் அப்பாவை, தம்பிங்களை, தங்கச்சியை பேசற. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்ற தைரியம் தானே?…” என்று வாயை கொடுக்க,

“ஓஹ் சார்க்கு இப்படி வேற நினைப்பிருக்கோ? அதுசரி. ஏன் சொல்லித்தான் பாரேன். மயில்சாமி மண்டை உருளுதோ இல்லையே உன் தலை என் கைல. மவனே பந்தாடிருப்பேன். துவாவுக்கு ஒண்ணுனா உன்னை கூட சும்மா விடமாட்டேன். மைண்ட் இட்…”

அவனையும் எச்சரித்துவிட்டு கிளம்பிவிட இன்னும் புன்னகை பெரிதானது அதிரூபனுக்கு.

‘சரியான காரமிளகாய்’ என சொல்லிக்கொண்டவன் மனைவி வந்துவிட்டாளா என பார்க்க அவளும் வந்து நின்றாள் நல்லபிள்ளையாய்.

“வெரிகுட். இதுக்கு இத்தனை போரா? நமக்குள்ள இந்த வார் வேண்டாமே துவா. என் மேல இன்னுமா உனக்கு முழுசா நம்பிக்கை வரலை?…”

ஆமாம் இல்லை என்கிற எந்த பதிலுமே சொல்லாமல் கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள் துவாரகா. ஒரு பெருமூச்சோடு அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.

கடைசி படிவரை அவனின் இழுப்பிற்கு ஒத்துழைத்து நடந்து வந்தவள் ரத்தினசாமி யாரிடமோ பேசிக்கொண்டிருக்க அவரின் குரல் கேட்டு அதிபனின் பின்னால் ஒடுங்கி நின்றாள்.

“வா துவா, சாப்பிட போகலாம்…” என அவளின் கையை பிடித்து இழுக்க அசையாமல் அவனின் முதுகில் தலையை வைத்து அலுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். உடல் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது.

இதை எல்லாவற்றையும் வருத்தத்தோடு பத்மினியும் அன்னபூரணியும் பார்த்தனர்.

வைத்தியநாதனோ மகளின் முகத்தை ஒருமுறையாவது நிறைவாக பார்த்துவிடமாட்டோமா என ஏக்கத்தோடு பார்த்தார். மொத்த குடும்பமும் அங்கே தான் கூடி இருந்தனர். சந்தியாவின் கணவர் மட்டும் கிளம்பிவிட சந்தியா அங்கே தான் இருந்தாள்.

“அண்ணே, அதிபன்…” சங்கரன் குனிந்து ரத்தினசாமியின் காதில் சொல்ல வேகமாய் திரும்பியவர் மகன் அவனின் மனைவியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க அதை பார்க்க சகிக்காமல் முகம் திருப்பிக்கொண்டார்.

‘என் மகன் யாரு, எப்பேர்ப்பட்டவன். இவட்ட எல்லாம் இறங்கி பேசறானே. இப்படி அவனை பேசவச்சிட்டாளே?’ என்று அத்திரங்கள் அத்தனையும் பெருக்கெடுத்தது  ரத்தினசாமிக்கு.

“துவா இப்ப நீயா நடந்து வரலை இங்க இருந்தும் டைனிங்ஹாலுக்கு தூக்கிட்டு தான் போவேன்…” என மிரட்ட பதறிக்கொண்டு அவனுக்கு பக்கவாட்டில் வந்தவள் அவனின் கையை இறுக்கமாய் கோர்த்துக்கொண்டாள்.

அவளின் நெருக்கத்தில் புன்னகைத்தவன்,

“பயத்துல தான் கிட்ட வர. ஆனாலும் இந்த நெருக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு துவா…” என கண்ணடிக்க அவளுக்கோ இன்னமும் பயம் தெளியவில்லை.

யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ?, தன்னை பார்த்துக்கொண்டு கோபத்தில் இருப்பார்களோ? இதற்காய் தன்னை என்ன செய்ய போகிறார்களோ? என நினைத்து நினைத்து அவளது தொண்டையே வற்றிவிட்டது.

இருவரின் குரல்கள் கேட்கவில்லை என்றாலும் பத்மினிக்கும், அன்னபூரணிக்குமே அத்தனை நிறைவாய் இருந்தது அவர்களின் தோற்றமும், நெருக்கமும்.

துவாரகாவை அத்தனை அழகாய் அரவணைத்து அழைத்துசென்றவனை பார்த்த சந்தியா,

“செம ஜோடில. சுத்திதான் போடனும். ஆனாலும் அண்ணியை அண்ணன் ரொம்பத்தான் மிரட்டறாங்க போல. அண்ணி பயந்துபோய் இருக்காங்க. ஆனாலும் அழகா இருக்காங்க. என்ன கொஞ்சம் ஹைட் கம்மி அண்ணிக்கு…”

சந்தோஷிடம் சொன்னாலும் அர்னவிற்கும் விஷாலிற்கும் பொட்டில் அடித்தமாதிரி ஒன்று உரைத்தது.

‘அண்ணி. ஆமா. இனி இவர் நமக்கு அண்ணி. அண்ணி அம்மாவிற்கு சமம்’

தன்னையே செருப்பால் அடித்ததை போன்று உணர்ந்தனர் அந்த நிமிடம். எத்தனை உரிமையாய் சந்தியா உறுத்தலின்றி அண்ணி என ஆழ்மனதிலிருந்து அன்போடு அழைக்கிறாள். தங்களால் அப்படி அழைத்து உரையாடிட முடியுமா என நினைக்கையிலேயே தலைசுற்றி போனது.

நேற்று திருமணம் ஆகையிலேயே துவாரகா தான் அண்ணனின் மனைவி என்பது பதிந்துவிட்டது. ஆனால் அண்ணியாக நினைக்கவே இல்லை. இப்பொழுது இந்த நிமிடம் அங்கு அமரவே பிடிக்கவில்லை.

எப்படி துவாரகாவை எதிர்கொள்வது என்கிற நினைப்பே அவர்களை அங்கிருந்து ஓடிவிட எச்சரிக்க அப்படி செய்துவிடமுடியாமல் ரத்தினசாமி இருக்கிறாரே.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை என்றால் வைத்தியநாதனின் நிலையோ பரவச நிலை. அதிபனின் முதுகிலிருந்து வெளியே வந்தது முழுநிலவொன்று மேகத்தின் மறைவிலிருந்து வெளிவருவதை போல இருந்தது.

“அகிலா” என உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துப்போய் பார்த்தார்.

“பூரணிம்மா, அகிலா…” என மனைவியை அழைத்து காண்பிக்க,

“ஆமாங்க, அப்படியே அகிலாக்கா தான்…” என அவரும் பூரிப்பாய் ஆமோதித்தார்.

ஆம், அகிலவேணியின் அச்சு அசலாய் துவாரகா. அதே அழகு, அதே நிறம். அதே சுண்டியிழுக்கும் விழிகள். ஆனால் அவரிடம் இல்லாத ஒன்று துவாரகாவிடம் கொட்டிகிடப்பது பயம் மட்டுமே.

அகிலவேணி எதற்கும் பயம் கொள்ளாதவர். யாரிடமும் பணிந்து செல்லாதவர். எந்த இடத்திலும் தன்மானத்தை விட்டுகொடுக்காது நிமிர்ந்து நிற்பவர். தனக்கென்று ஒரு வரைமுறையை வைத்து அதன்வழி நடப்பவர். யார் என்ன சொன்னாலும் தான் எடுத்த முடிவிலிருந்து சற்று பின் வாங்காதவர்.

அது சரியோ, தவறோ. ஆனால் இறுதிவரை அதில் நிலையாய் நிற்பவர். இதுதான் அகிலவேணி.

“நான் என் பொண்ணை பார்த்துட்டேன் பூரணி…” என கலங்கிய குரலில் சொல்ல,

“நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க…” அதை அன்னபூரணி திருத்த ஸ்வேதாவிற்கு பார்க்க வெறுப்பாய் இருந்தது.

இதை அனைத்தையும் ரத்தினசாமி கேட்டுக்கொண்டு தான் இருந்தார். தங்கையை வைத்துக்கொண்டு மாப்பிள்ளையை முறைக்கமுடியாதே.

அதிரூபன் இதைகண்டும் காணாதவனாக பார்த்துக்கொண்டே துவாரகாவிற்கு பரிமாறி அவளை சாப்பிட சொல்ல தட்டுல் இருந்த இட்லிகளை வெறித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

“சாப்பிடு துவா…” என சொல்ல ஏனோ கைகளை மேஜையின் மீது கூட வைக்காமல் நடுங்கியபடி தன சுடிதாருக்குள் மறைத்தாள். அவளின் கண்களில் இருந்து துளிகள் திரண்டு உணவிருந்த தட்டில் விழ அவனுக்கு புரிந்துபோனது.

இதயத்தில் சுருக்கென தைக்க அந்த வலியோடு இட்லியை பிய்த்து சாம்பார் சட்னியில் தோய்த்து முதலில் தான் உண்டான். அதன் பின் அடுத்த வாய் அவளுக்கு ஊட்ட கைகளை நீட்ட தாங்க முடியாது முகத்தை மூடிக்கொண்டு கதறியவள் அவனின் தோள் சாய்ந்துகொள்ள தாங்கிக்கொண்டான் அவன்.

“ஒண்ணுமில்லடா, நான் இருக்கேன்னு சொல்லியிருக்கேன்ல. எப்பவும் உனக்கு ஒரு கஷ்டமும் வரவிடமாட்டேன். அப்படி வரதா இருந்தா எனக்குத்தான் முதல்ல வரும். இப்போ என்ன இதுல விஷம் எதுவும் இல்லைன்னு புரிஞ்சிடுச்சுல. நீ சாப்பிடு…”

அவளுக்கு சமாதானம் சொல்லி கண்ணீரை துடித்தாலும் வெறுமையாய் ஹாலில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தான்.

வேகமாய் அங்கிருந்து ஓடிவந்த பத்மினியும், சந்தியாவும் துவாரகாவின் அருகில் நின்று அவளிற்கு ஆதராக இருக்க,

“இந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்னு தான் நான் போறேன்னு சொல்றேன். ப்ளீஸ் மாமா. என்னை போகவிடுங்க. எனக்கு சத்தியமா நம்பிக்கை வரும்னு தோணலை. எனக்கு உங்கள மட்டும் தான் பிடிக்கும். ஆனா எதுவும் மாறாது. இந்த வீட்டுமேல என்னோட அபிப்ராயம் மாறவே மாறாது…”

“தாகமேன்னு ஒரு தண்ணி குடிக்கனும்னா கூட உடனே எடுத்து இயல்பா குடிச்சு தாகத்தை தீர்த்துக்க இந்த வீட்ல என்னால முடியாது. முடியாது மாமா…” என்று இன்னும் விசும்பி அழ பத்மினி வரும் வரை இருந்த கேவல் பயத்தில் விசும்பலாய் குறைந்துபோனது.

“நான் அழனும்னா கூட இங்க என்னால முடியாது மாமா. இவங்க எப்ப என்ன பண்ணுவாங்களோன்னு. வேண்டாம் மாமா. ஒவ்வொரு நிமிஷத்தையும் நரகமா கடக்க என்னால முடியாது. எங்கையாவது போய்டறேன். ஆனா இவங்க இந்த கல்யாண கோபத்துல அம்மாவை எதாச்சும் பண்ணிடுவாங்க மாமா…”

“ஏன்மா இப்படி எல்லாம் பேசற? நாங்க இருக்கோம்டா…”

அவளின் அழுகையில் கலங்கிப்போனார் பத்மினி. அன்னபூரனியால் தானகவே முடியவில்லை. ஆனாலும் அவர்களின் அருகில் வந்துவிடவும் முடியவில்லை. அதிபன் அதை விரும்பமாட்டான்.

“அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது. அவங்க என்னோட பாதுகாப்பில் தான் இருக்காங்க. இங்க யாராலையும் அவங்களை நெருங்க முடியாது. முதல்ல நீ தைரியமா இரு. சாப்பிடு…” என ஊட்ட வாயை திறக்காமல் பத்மினியை பார்த்தாள்.

சந்தியாவிற்கு இப்பொழுது தன் குடும்பத்தினர் மீது அத்தனை கோபம் எழுந்தது. எந்தளவிற்கு இவளை படுத்தி இருந்தால் இவ்வளவு பயந்துபோயிருப்பாள் என நினைக்கவே அச்சமாக இருந்தது.

“இப்போ என்னம்மா இதுல யாரும் எதுவும் கலந்திருப்பாங்கன்னு தான பயப்படற. இரு…” என்ற பத்மினி வேகமாய் இரண்டு ப்ளேட்களில் துவாரகாவிற்கு வைத்ததை போல வைத்து அவளருகிலேயே அமர்ந்தவர்கள் வேகமாய் சாப்பிட,

“வேண்டாம்ங்க. வேண்டாம்ங்க. நான் எதுவும் பேசலை. கோவப்படாதீங்க. பேசலை…” என வாயை பொத்திக்கொண்டு அழுகையை அடக்கி அதிபனின் தோளில் முகம் புதைக்க இன்னமும் மிரண்டு போயினர் அனைவரும்.

“இல்லம்மா துவா, நாங்க கோவப்பட்டு சாப்பிடலை. உன் மேல கோவமில்லை. இங்க பாரு. உனக்கு நம்பிக்கை இல்லைன்னு சொன்னியே. இதே சாப்பாட்டை நாங்களும் எடுத்து சாப்பிட்டிருக்கோம். எங்களுக்கு எதுவும் ஆகலை தானே?. அதுக்காக தான் சாப்பிட்டோம். துவா…”

மன்றாடும் குரலில் பத்மினி பேச சந்தியாவும் சமாதானம் சொல்ல அதிபன் முகம் இறுகிக்கொண்டே போனது.

“அன்னைக்கும் எங்களை பார்த்துட்டு கோவப்பட்டு அம்மாவை ஜெயில்ல போட்டாங்க. என்னை, நான் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல. நைட் புல்லா. பயந்துட்டேன். போலீஸ் அவங்க, அங்க…”

கோர்வையில்லாமல் பயத்தில் விக்கி விக்கி பேச பேச அவளை கட்டிக்கொண்டான் அதிரூபன்.

“வேண்டாம்டா, அதெல்லாம் நீ பேசாதே. நாம போய்டலாம். போய்டுவோம். எனக்கும் இங்க வேண்டாம்…”

“அதிபா…” என வேகமாய் எழுந்து நின்றார் ரத்தினசாமி.

இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் அதிரூபனும் துவாரகாவும் இல்லை. அன்றைய நாளின் துயரத்தில் கண்ணீரில் கரைக்க முடியால் அவளும் அத்துயரத்தையே காற்றோடு கரைத்துவிட அவனும்.

இவர்களின் போராட்டத்தை செய்வதறியாமல் பார்த்து கலங்கியது அங்கிருக்கும் சில நெஞ்சங்கள்.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement