Advertisement

மின்னல் – 11

                  தள்ளாட்டத்துடன் நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவளை நான்கே எட்டில் அடைந்தவன்,

“இந்த நேரம் இங்க என்ன பண்ணிட்டிருக்க அஷ்மி? யார் கூட வந்த?…” சுற்றிலும் பார்த்தபடி கேட்க,

“டிரைவர் கூட வந்தேன். அவன் போய்ட்டான்…” கண்கள் சொருக மேலும் பாட்டிலில் இருந்ததை குடிக்க அதை பிடுங்கியவன்,

“என்னத்த குடிச்ச அஷ்மி, இப்டி நடு ராத்திரியில வீட்ல வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்க?. வீடு லாக்ல தான இருந்தது…” அதிரூபன் கேட்க,

“பெரிய அரண்மனை பாரு. என் பிங்கர் ப்ரிண்டும் தான இருக்கு. அதுதான் வந்துட்டேன்…” என்றவள்,

“லேடிஸ் டிரிங் தான்டா. மனசுல இருக்கறத சொல்லனும்டா அதான் குடிச்சேன். எனக்கு உன் மேல லவ் வந்துடுச்சுடா….” என சொல்ல அதிர்வாய் பார்த்தான் அவன்.

“தப்பு தப்ப்பு தப்பு.. சரியா சொல்லனும். உன் லவ் மேல லவ் வந்துடுச்சு அதி…” என சொல்ல அவன் ஆடித்தான் போனான்.

“ஹா ஹா ஹா பயந்தியா? பயந்தியா?. அந்த பயம் இருக்கட்டும்…” என சிரித்தவள் பின் அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு,

“அம்மாடியோ என்ன லவ்டா உனக்கு துவா மேல. குடுத்துவச்ச்ச பொண்ணுடா. குடும்பமே கொல்லனும்னு துடிக்கிற ஒரு பொண்ணு கூட குடும்பம் நடத்த எத்தனை ப்ளான்? வாவ், வாவ்…” என்று கைதட்டி சொல்லி தடுமாறி கீழே விழ போக தாங்கி நிறுத்தியவன் சோபாவில் அமரவைத்தான்.

“ஏன்டா இப்படி பன்ற? இதை சொல்லவா குடிச்ச?…” என்றதற்கு,

“அதி நீ ரொம்ப நல்லவன்டா…”

“இதை நீ குடிக்காமலே சொல்லியிருக்கலாம். என்ன பழக்கம் இது புதுசா?…”அதிபன் எரிச்சல்பட அதை கண்டுகொள்ளாதவள்,

“சத்தியமா சொல்றேன். உன்னை மாதிரி ஒருத்தனை பார்த்தா விடவே மாட்டேன். கண்டிப்பா கல்யாணம் தான். ஆனா இல்லையே. அதி வேற. லவ் வேற…”

“அஷ்மி, என்ன உளறல் இது?…” என்றவனின் வாயில் டப்பென்று அடித்தவள்,

“மூச், பேசாம கேளுடா…” என அதட்டியவள்,

“உனக்கு தெரியுமா? நீ துவாரகா மேல வச்சிருக்கிற லவ்வை நான் பீல் பண்ணுவேன்டா. எனக்கு ஏன் இவ்வளவு பிடிக்குதுன்னு  நிறைய நேரம் என்னையே நான் குழப்பிருக்கேன். உன்னை லவ் பன்றேனோன்னு. ஆனா உன் முகத்தை பார்க்கறப்போ எனக்கு லவ் பீல் வராது. அதை தாண்டி ஒன்னு…” தாடையில் விரல் வைத்து யோசித்தவள்,

“ஹ்ம்ம், இந்த மூஞ்சில நட்பை தாண்டிய ஒரு அன்பை தான் என்னால உணர முடியுதுடா. லவ். ம்ஹூம். ஏன்டா?…” அவனிடமே கேட்க பதில் சொல்லாமல் பார்த்தான்.

அவளின் பேச்சில் தெறிக்கும் அவன் மீதான அன்பு எத்தனை அபரிமிதமானது என்பதை இன்றுதான் உணர்ந்தான் அதிரூபன். இவள் அளவுக்கு தான் அன்பாய் உள்ளோமா என்றால் நிச்சயம் இல்லைதான்.

“நம்ம மேரேஜ் ப்ரபோசல் பத்தி டாடி என்கிட்டே சொன்னப்போ கூட எனக்கு எந்த பீலுமே இல்லையே? வாழ்க்கை துணைன்னு ஒருத்தர காட்டினா இயல்பா ஒரு பெண்ணுக்கு வரும் சின்ன சின்ன எதிர்பார்ப்பும், ஆசையும் எதுவும் வரலை. ஜஸ்ட் கற்பனைல கூட உன்னை வச்சு பார்க்க முடியலையே. ஏன்டா?…”

“நாம ஷேர் பண்ணிக்காத விஷயமே இல்ல. அது எல்லாத்தையும் தாண்டி துவாரகாவை பத்தி நீ என்கிட்ட பேசறதை கேட்கறப்போ எனக்கு அவ்வளோ பிடிக்கும்டா…”

“அப்பப்போ நினைப்பேன் நான் பாட்டுக்கு உன்னை லவ் பண்ணி உன் காதலுக்கு நான் வில்லியாகி அதனால உன்னை கஷ்டபடுத்தி வில்லத்தனம் செஞ்சு. நினைச்சா கூட எனக்கு சிரிப்புதான் வரும். என்னையே நான் சொல்லிக்குவேன் அட காமெடி பீசேன்னு…”

“உங்க வீட்ல பேசினாங்கன்னு என்கிட்டே அப்பா கேட்டப்ப எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை. எனக்குத்தான் துவா தெரியுமே. அதான் உன்கிட்ட கேட்டேன். நீயும் இப்படி ப்ளான் பண்ணின…”

“ஆனாலும் எனக்குள்ள ஒரு குழப்பம். பிக்ஸ் பண்ணின டேட்குள்ள துவாவை கண்டுபிடிக்க முடியலைனா என்ன பண்ண? அதுதான் நிறைய யோசிச்சேன். அப்பதானே சுட்சுவேஷன் ஹேண்டில் பண்ண முடியும்…”

‘தனக்காக அவளுக்குள்ளேயே அவள் எத்தனை போராடியிருக்கிறாள்’

அதிரூபன் மானசீகமாய் தன் தலையில் அடித்துக்கொண்டான். தன்னுடைய சுயநலத்திற்காக அஷ்மியின் மிகநுட்பமான உணர்வுகளோடு இப்படி விளையாடிவிட்டோமே என.

கண்கள் கசியும் போல இருந்தது. அவளின் நட்பிற்கு தான் நியாயம் செய்யவே இல்லை என்று தோன்றியது. நீயெல்லாம் மனிதனா? ஒரு நண்பனா? என தன்னையே காறி உமிழ்ந்துகொண்டான் அதிரூபன்.

மனதிற்குள் அத்தனை முறை அவளிடம் மன்னிப்பை வேண்டினான்.

“இதையெல்லாம் நான் ஏன் நினைச்சேன்னு தெரியுமா? ஒருவேளை விதியோட சதியால நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வந்தா அப்போ என்னோட மனநிலை என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்க எனக்கு நானே ரியலைஸ் பண்ணி பார்த்தேன்…”

டீப்பாயின் மேல் அமர்ந்திருந்தவன் தன் தோழியை பார்த்திருக்க அவளோ கைகளை விரித்து,

“ம்ஹூம் ஒன்னுத்துக்கும் பிரயோஜனமில்ல. எத்தனை யோசிச்சும் உனக்கு வொய்பா சும்மா நினைக்க கூட முடியலை. அப்போ புரிஞ்சது. இந்த மூஞ்சி என்னைக்குமே இந்த அஷ்மியோட லவ்வர்பாய் ஆகவே முடியாதுன்னு. ஆமா தானே?…”

இப்படியும் அப்படியுமாய் தலையாட்டி அவனிடம் கேட்க அஷ்மியின் பாவனையில் அவனுக்கோ லேசாக இதழோரத்தில் சிரிப்பு பூத்திருக்க,

“ஆமாம்டா அஷ்மி. நான் உனக்கு ஏத்தவன் இல்லைடா. உனக்குன்னு பொறந்திருக்கிற அந்த அதிர்ஷ்டசாலி எங்க இருக்கானோ?…” சிறு புன்னகையோடு அவளின் கன்னம் தாங்கி சொல்ல,

“ஹூ. எங்கடா இருக்க?…” என்று கையை உயர்த்தி சத்தமிட அவளின் வாயை அடைத்தான்.

இரவு நேரம் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்துவிடும் அபாயம் தெரிய அதற்குள் சந்தோஷும், விஷாலும் வந்துவிட்டனர். சங்கடமாய் அவர்களை பார்த்த அதிபன்,

“அஷ்மி வா வீட்டுக்கு போகலாம்…” என அழைக்க கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை அஷ்மிதா. விட்டால் அங்கேயே உறங்கிவிடுவாள்.

“அங்க யார் இருக்கா எனக்கு? அப்பா பாரின் போயாச்சு. வர டூ டேய்ஸ் ஆகும்…” அசால்ட்டாய் சொல்லி சோபாவில் காலை நீட்டி ஒரு பக்கம் சாய்ந்தவள் விஷாலை பார்த்து,

“இங்க வா…” என கை மட்டும் நீட்ட அவள் முன்னே நின்றான். மெல்ல எழுந்து நின்றவள் யாரும் எதிர்பாராவண்ணம் பளாரென அறைந்தவள்,

“இன்னைக்கு எதுக்குடா அப்டி பார்த்த? எவ்வளவு தைரியம்டா உனக்கு?…”

“அஷ்மி…” என அதிரூபன் அவளை அதட்ட,

“”என்னா? என்னா சவுண்டு? உன் பொண்டாட்டியை கடத்திவச்சு அடிச்சு காயப்படுத்தியிருக்கான். அதை கேட்க உனக்கு துணிச்சல் இல்லை. என்னை அரட்ட வந்துட்ட. இந்த அஷ்மி யாருக்கு பயப்படமாட்டா…” என்றவள்,

“நீ கொஞ்ச நேரம்…” வாயின் மேல் கை வைத்து சைகை காண்பிக்க தலையில் அடித்தான் அதிபன். ஆனால் அடிவாங்கிய விஷாலோ தலைகுனிந்து நின்றான்.

காரணம் தன் அண்ணன். அவன் முன்னே அஷ்மிதாவை எதுவும் பேசமுடியாது. அவள் அவனுக்கு எத்தனை முக்கியம் என்று தெரியும். இன்னொன்று அவனுக்கே அவளிடம் என்னை கேட்க நீ யார் என கேட்டு இந்த குடும்பத்திலிருந்து தள்ளிவைக்க தோன்றவில்லை.

தன் அண்ணன் இதுபற்றி கேட்காமலும், தன்னிடம் இயல்பாக பேசாமலும் இருப்பதே உறுத்தலாக இருக்க அட்லீஸ்ட் இவளாவது அவன் முன்னே கேட்கிறாளே என்று தோன்றியது.

“சொல்லுடா, அண்ணனுக்கு இல்லைன்னு தம்பிக்கு கேட்டதும் ஸார்க்கு தைரியம் வந்துடுச்சோ. என்னை கட்டிக்கலாமான்னு பார்க்கற. தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை. நினைப்புல கூட இந்த அஷ்மி மேல பயம் இருக்கனும் உனக்கு…”

அவனை பிடித்து பின்னால் தள்ளியவள் மீண்டும் சோபாவில் அமர்ந்துகொள்ள சந்தோஷ் வந்து அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்தான்.

“அதி, இவனை என் கண்முன்னால வரவேண்டாம்னு சொல்லு. வந்தான் விஷாலுக்காவது அடி கிடைக்கும். இவனை நான் கொன்னே போட்ருவேன்…”

சந்தோஷை பார்க்க விருப்பமின்றி அதிபனிடம் கத்த சந்தோஷின் முகம் கறுத்துவிட்டது. எத்தனை உத்தமமான தோழி அஷ்மிதா. இனி அவளின் நட்பு தனக்கில்லை என்பதை உணர்ந்து ஒதுங்கி நின்றான் சந்தோஷ்.

“அதி உன்கிட்ட இன்னொன்னும் மறைச்சிட்டேன்டா. துவா வரவும் அவளோட உனக்கு மேரேஜ் ஆகிடும். ஆனா அப்பா எனக்கு ஒரு யோசனை சொன்னார். இந்த விஷால் நல்ல பையன் தானே. பேசாம இவனை நே மேரேஜ் பண்ணிக்கோன்னு கேட்டார்…”

அஷ்மிதா சொல்லவுமே இது என்ன புதுசா? என்று தான் அதிர்ச்சியாக பார்த்தனர் மூவருமே.

அதில் சந்தோஷ்க்கும் விஷாலுக்கும் புரிந்த ஒன்று அதிபனின் திருமணம், மணப்பெண் மாற்றம் அனைத்தும் அஷ்மிதா, ராஜாங்கம் என அனைவருக்குமே தெரிந்த ஒன்று என. இது அவர்கள் நடத்திய நாடகம் என்பதை அறிந்துகொண்டனர்.

“அப்போ நீங்க இந்த மேரேஜை ப்ளான் பண்ணி தான் நிறுத்தினதா?…” பொறுக்கமாட்டாமல் விஷால் கேட்டுவிட,

“ஆமா, எங்க ப்ளான் தான். இப்ப என்னன்ற? பேசிட்டு இருக்கும் போது கூட கூட பேசறதை நிப்பாட்டு…” என்றவள்,

“எனக்கும் கூட ஓகே வா தான்டா இருந்துச்சு. இவன் மேல பெருசா எந்த அபிப்ராயமும் இல்லைனாலும் துவா விஷயத்தை தவிர மத்தபடி நீங்க எல்லாரும் நல்லவங்கன்னு நினைச்சேன்டா. அதிலும் உன் வீடு. நான் வேண்டாம்னா சொல்லுவேன்…”

“அதுதான் டாட்கிட்ட மேரேஜ் அன்னைக்கு பார்த்துக்கலாம்ப்பா. சப்போஸ் இந்த டாக் வந்தா ஓகே சொல்வோம். இல்லைனா இருக்கட்டும்னு சொல்லிட்டேன். அப்பாவுக்கு உங்க பேமிலியை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா மயில்சாமி கேட்பாருன்னு சொன்னார். இது துவா நம்ம ஹாஸ்பிடலுக்கு வரதுக்கு முன்ன இருந்த வ்யூ…”

“ஆனா என்னைக்கு துவாவை இவனுங்க ஹாரஸ் பண்ணினானுங்கன்னு தெரிஞ்சதோ இந்த ஜென்மத்துல மட்டும் இல்லை இனி எந்த ஜென்மத்துலையும் இவன் முகத்திலையே முழிக்க கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன். ராஸ்கல்ஸ்…”

“உன் தம்பியை லவ் எல்லாம் பன்ற அளவுக்கு எனக்கு பிடிக்கலை அதி. ஆனா மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஒரு தாட் . ஒரு மரியாதை, கொஞ்சம் பிடித்தம் இது எல்லாம இருந்துச்சு. இப்ப க்ளீன் ஸ்லேட்…”

அஷ்மிதா சொல்ல சொல்ல பேச்சற்று போனான் அதிரூபன்.

விஷாலுக்குமே  இது அதிர்ச்சிதான். தன் திருமணம் பற்றி தானறியாமல் ஒரு பேச்சு, அதிலும் ஒரு பெண் தன்னை கல்யாணம் செய்துக்கனும்னு நினைச்சிருக்கா என்கிற நினைப்பே உவகை கொடுப்பதற்கு பதிலாக வருத்தத்தையும் வேதனையையும் கொடுத்தது.

நினைக்க நினைக்க அத்தனை கீழிரக்கமாக தோன்றியது தன் நடத்தை. இதுவரை பெரியப்பாவிற்காக என பெருமையாய் நினைத்தவன் முதன் முதலாய் ஒரு பெண்ணை இப்படி செய்துவிட்டோமே, என்ன காரணமாக இருப்பினும் தான் செய்தது மகாபாவம் என்பதை எண்ணி வருந்தினான்.

அஷ்மியை எப்படியாவது வேறு யாரும் பார்க்கும் முன் இங்கிருந்து கிளப்ப வேண்டும் என முளுமுயர்சியாக பேச அவளோ அவனை பேசவிடாமலும் அங்கிருந்து நகராமலும் நிறைய நிறைய பேசினாள்.

திருமண அலுப்பு, இன்று நடந்த நிகழ்வுகள் என வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்து உறங்க வேறு யாரும் வரவில்லையே என நினைத்து ஆசுவாசம் கொள்வதற்குள்,

“அதிபா. இங்க என்னப்பா பன்றீங்க?…” என லுங்கியும், பனியனும், தோளில் போட்ட துண்டுமாக வந்து நின்றார் ரத்தினசாமி.

“அப்பா…” என அதிரூபன் எழுந்து நிற்க கண்களை சுருக்கி அவரை பார்த்தாள் அஷ்மிதா.

“அதி உன் வீட்டு சமையல்க்காரனுக்கு ராத்திரில என்னடா வேலை?…” என கேட்டுவைக்க அப்போதுதான் அஷ்மிதாவை கவனித்தவர் அவளை பார்த்ததும் கண்டுகொண்டார்.

“அதிபா, என்ன கருமம்டா இது? இவ எதுக்கு இந்நேரம் குடிச்சுட்டு இங்க வந்துருக்கா?…” கோபத்தில் கண்கள் சிவக்க அவளை அடிப்பதுபோல வேகமாய் அருகில் செல்ல அவரை பிடித்துக்கொண்டான் விஷால்.

“பெரியப்பா, இருங்க…” என நிறுத்த,

“அடடே மயில்சாமியா?…” என்றுவேறு அஷ்மிதா கேட்டுவைக்க,

“ஆத்தாடி சம்பவம் ஸ்டார்ட் ஆகிடுச்சு…” சந்தோஷிற்கு படபடப்பாக இருந்தது.

“என்ன என்ன சொன்ன?…” விஷாலிடமிருந்து திமிறிக்கொண்டு அவளை அடிக்க போக,

“அடிச்சுடுவியா? அஷ்மியை அடிச்சுடுவியா? யோவ் அடியா, அடிச்சு தான் பாருய்யா. உன்னால என்னை அடிக்க கூட முடியாதுன்றேன்…”

அஷ்மிதா வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்பதை போல தன் ஷர்ட்டின் கையை மடக்கி விட்டு எழுந்து நிற்க அவளின் தடுமாற்றத்தை பார்த்து,

“அஷ்மி, பேசாம இரு…” அவளை பிடித்து நிறுத்தியவன்,

“அப்பா நீங்க போங்க. அவ எதையோ தெரியாம குடிச்சுட்டு வந்திருக்கா. நாங்க பார்த்துக்கறோம்….”என்றவன்,

“கூட்டிட்டு போயேன்டா…”   விஷாலை பார்த்து கடுகடுக்க,

“குடிச்சிருந்தா ஆள் வரைமுறை தெரியாம போய்டுமா? ஒரு மரியாதை வேணாம்?…”

“உனக்கெல்லாம் எதுக்குயா மரியாதை?. அப்படித்தான் கூப்பிடுவேன். மரியாதை நாங்களா தரனும். உன் நடத்தைய பார்த்து வரனும். வராது இந்த ஜென்மத்துல வராது…” அஷ்மி விடாமல் அலப்பறையை கூட்ட,

“அடி வாங்க போற அஷ்மி. பேசாம நீ என் ரூம்க்கு வா…” அதிபன் அரட்ட,

“நண்பன்டா. நீ நண்பன். அடிச்சுக்கோ. ஆனா இந்த மயில்சாமி கையை நீட்டட்டும் அதுக்கப்பறம் இந்த அஷ்மி யாருன்னு தெரியும்…”

மீண்டும் ரத்தினசாமியை பார்த்து கை நீட்டி எச்சரிக்க அதற்குமேல் முடியாமல் பொங்கிவிட்டார் ரத்தினசாமி.

“யார பார்த்து கை நீட்டி பேசற. பொம்பளைப்புள்ளையா போய்ட்ட இல்லை. முகரையை பேத்திருப்பேன்…” விஷால் மட்டும் பிடிக்காமல் இப்பொழுது சந்தோஷும் சேர்ந்து வந்து அவரை நிறுத்த அசால்ட்டாக பார்த்த அஷ்மிதா,

“என்னய்யா என்ன பண்ணுவ? இந்த ரெண்டு தறுதல புள்ளைங்கட்ட சொல்லி என்னையும் ஏதாவது ஒரு ரெசார்ட்ல வச்சு அடிச்சு கொடுமை படுத்துவியோ? இல்லை என் அப்பாவை கொன்னுடுவேன்னு மிரட்டுவியோ?…” என்றவள்,

“இல்லை என்னை யாருக்காச்சும் கடத்தி வித்துடுவியோ?…” இதை அதிபனை பார்த்துக்கொண்டே கேட்க கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டான் அவன்.

“ஆமா நீ அரசியல் பன்றன்னு பார்த்தா மானங்கெட்ட வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க. இதுக்கு உனக்கு கைக்கூலியா உன் படிச்ச புள்ளைங்க வேற…”

அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க கேட்க ரத்தினசாமி பதறித்தான் போனார். இப்படி அஷ்மிதா அத்தனையும் புட்டுபுட்டு வைப்பாள் என எதிர்பார்க்காத ரத்தினசாமியும் விஷாலும் கூனிக்குறுகி நின்றனர்.

இவர்களுக்கு இதுவும்  தேவை, இதற்கு மேலும் தேவை  என்பதை போல சந்தோஷ் நின்றான். அவனுக்குமே இன்னொரு பெண் தன் வீட்டு தவறுகளை பொட்டில் அடித்தார் போன்று சொல்லிகாண்பித்து கழுவி ஊற்ற வாயை திறக்கமுடியாமல் அவமானப்பட்டு நின்றனர்.

“சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம என்ன பாடு படுத்துனீங்க. அவளுக்கு ஒண்ணுனா உன் புள்ளை கேட்பானோ இல்லையோ இனி நான் கேட்பேன். ஜாக்கிரதை. நீங்க பண்ணின அத்தனைக்கும் ஆதாரம் என்ட்ட இருக்கு. வெளில விட்டேன் ஊர் உலகமே காறி துப்பிடும்…”

“அப்படி என்னைய்யா உனக்கு அவ மேல காண்டு. இரக்கமே இல்லாம இவ்வளவு கொடுமை பண்ணியிருக்கீங்க? பகைன்னு வந்துட்டா எதுவுமே தப்பில்லையோ?…”

அஷ்மிதா குடித்திருந்தாலும் கேட்க வேண்டிய அனைத்தையும் நன்றாய் அவர்களுக்கு உரைக்க உரைக்க கேட்கத்தான் செய்தாள்.

“ஓகே, எனக்கு கூட உங்க குடும்பத்துல ஒரு காண்டு. இந்த ஸ்வேதா இருக்கால அவளை எனக்கு சுத்தமா பிடிக்கலை…”

சந்தோஷை பார்த்துக்கொண்டே தான் அஷ்மிதா இதை கூறினாள். சந்தோஷிற்கு தெரிந்தது அடுத்து அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று.

“நானும் உன் வீட்டு பொண்ணை நீ துவாவை நடத்தின மாதிரி, பேசின மாதிரி பேசட்டுமா? ஏனா என்கிட்டயும் பணபலம் இருக்கு. அரசியல் பின்னணியும் இருக்கு. உங்களுக்கு மேல என்னால செய்ய முடியும். செய்யட்டுமா? நானும் அவளை கடத்தி…”

“அஷ்மி…” அவளை அதற்கு மேல் பேசவிடாமல் அதிபன் தடுக்க,

“என்னடா உனக்கு சுருக்குன்னு இருக்கா? நேத்து உன் பொண்டாட்டிக்கும் இதுதான்டா நடந்துச்சு. நான் வாய் வார்த்தையா சொல்லும் போதே உனக்கு இவ்வளவு வருது. அப்போ அந்த வீடியோவை பார்த்தப்ப ஏன் வரலை?…”

“உன்னை போய் நல்லபொண்ணுன்னு நினைச்சேன் பாரு…” என்றார் ரத்தினசாமி.

தன் குற்றங்களை ஒப்புவிக்கும் அவளை அவருக்கு இந்த நிமிடம் சுத்தமாய் பிடிக்காமல் போனது. அதிலும் தன் மகன் தன்னை வெறுத்துவிடும் அபாயம் ஏற்கனவே இருக்க அதை உறுதியாக்கும் விதமாய் அத்தனை உண்மைகளையும் இவள் சொல்ல சொல்ல பயந்தேபோனார்.

“நீயெல்லாம் எனக்கு சர்டிபிகேட் குடுக்கறியா? யார் கேட்டா? யோவ் முதல்ல நாம நல்லவங்களா இருக்கனும். அதுக்கப்பறம் மத்தவங்களை மதிப்பிடலாம்…” என்றவள்,

“ஆமா, என்னமோ உன் வீட்டு மாப்பிள்ளை தப்பே பண்ணலையா? அவருக்கு என்ன தண்டனை குடுத்த? இன்னொரு பொண்ணை தாயாக்கி தவிக்க விட்டுட்டு வந்தவருக்கே தங்க தட்டுல தாங்கற. அந்த பொண்ணு என்னய்யா பண்ணுச்சு? உனக்கு கேட்கனும், தண்டிக்கனும்னா அந்தாளை போய் கேளேன். அது முடியாதுல…” பட்டென்று வைத்தியநாதனை இழுக்க,

“இந்த பாருமா, இதை பத்தி நீ பேசனும்னு அவசியமில்லைமா. இது என் குடும்ப விஷயம்…” மீண்டும் அவளின் வாயை கிளற,

“ஸ்யப்பா, யோவ் மயில்சாமி. இந்த டயலாக் எல்லாம் உன் பையன்கிட்ட வச்சுக்க. இந்தா நிக்கிறான் பாரு அவன் கேட்பான். நான் ஏன்யா கேட்கனும்? எனக்கு தப்புன்னு பட்டா கேட்கத்தான் செய்வேன். என்கிட்டே மட்டும் நீ நல்லவரா இருந்தா போதுமா?…”

சகட்டுமேனிக்கு ஏகவசனத்தில் ரத்தினசாமியை தாளித்துக்கொட்ட அதிபன் முகம் வேறு இறுக்கமாய் கல்போல இருக்க உள்ளுக்குள் மிரண்டு போனார். அவன் முன் அஷ்மிதாவின் வாயை அடைக்கமுடியாமலும், அவளை அடக்கமுடியாமலும் கையாலாகாதவராய் நின்றார்.

“தப்புன்னா அது என் அப்பாவே பண்ணினாலும் சட்டையை பிடிச்சு கேட்பேன். லெப்ட் அன்ட் ரைட் விடுவேன். உனக்கு இந்த மரியாதையே போதும்…”

அதற்கு மேலும் நிற்கமுடியாமல் துவண்டுபோனவள் சோபாவில் படுக்க அஷ்மிதாவையே பார்த்த ரத்தினசாமியின் ரத்த அழுத்தம் எகிறியது.

இதை வேறு யாரேனும் பார்த்துவிட்டார்களா? என்று வேறு சுற்றிலும் பார்வையை ஓட்ட யாருமில்லை என்கிற நிம்மதி வேறு அவரை ஆட்கொண்டு இனியும் அவளை பேச வைக்க வேண்டாம். இன்னும் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளோ? என நினைத்து அங்கிருந்து மாடியேறிவிட்டார்.

“அரசியல் அரசியல் தான். எங்க இன்னும் நின்னா திரும்பவும் அஷ்மி ஆரம்பிச்சுடுவாங்களோன்னு ஓடறாரு பாரு உன் பெரியப்பா…” என சந்தோஷ் விஷாலின் காதை கடிக்க,

“அதிபா, இனி இந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது…”

மாடியில் இருந்து மகனிடம் செய்தி அனுப்பியவர் வன்மமாய் அஷ்மிதாவை பார்க்க படக்கென நிமிர்ந்தவள்,

“யோவ் மயில்சாமி தைரியம் இருந்தா கீழே வந்து சொல்லுயா என்கிட்டே. யோவ், மயில்சாமி…” என கத்த அவளின் வாயை பொத்தினான் அதிபன்.

மீண்டும் அஷ்மிதா எழுந்து நின்று கத்த தொடங்கியதும் வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் ரத்தினசாமி. பார்த்து நின்ற சந்தோஷிற்கு சிரிப்பு பொங்கியது.

சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடக்கிக்கொண்டவனுக்கு ஏனோ அத்தனை ஆறுதலாக இருந்தது. சொல்லபோனால் இதையெல்லாம் நிச்சயம் இந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் கேட்கவே மாட்டார்கள்.

“என்னடா இப்படியெல்லாம் பேசிட்டாங்க. பெரியப்பாட்ட என்னவெல்லாம் கேட்கிறாங்க…” விஷால் கேட்க,

“இதுக்கு பேருதான் நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்கிறதுன்னு சொல்வாங்க. சும்மா பச்சமிளகாயை கடிச்சது மாதிரி இருந்துச்சா? இதுக்குத்தான் நான் முதல்லையே சொன்னேன்…” சந்தோஷ் அவனிடம் பேச,

“அதி, அந்த பாட்டிலை குடுடா. செம கிக்கா இருக்கு…” அஷ்மி வசனம் பேச,

“வாயை மூடு அஷ்மி. பண்ணின வரைக்கும் போதும். வா போய் தூங்கலாம்…”

அதிபன் அவளை கைத்தாங்கலாக எழுப்பி நிறுத்திவிட்டு கீழே வைத்திருந்த பாட்டிலை எடுத்து சந்தோஷிடம் நீட்டியவன்,

“இதை வெளியே எறிஞ்சிட்டு வா சந்தோஷ்…” என கொடுக்க,

“பச்சக்கிளிட்டையா குடுக்க. பார்த்துடா இதையும் குடிச்சுட்டு ரெசார்ட்கு போய்டாம. இப்ப எவனை நம்பறதுன்னே தெரியலை…” அஷ்மி அசராமல் சொல்ல சந்தோஷின் கண்கள் கலங்கிவிட்டன.

சந்தோஷை ஒரு பார்வை பார்த்தவன் பதில் ஏதும் பேசாமல் அஷ்மிதாவை அழைத்துக்கொண்டு மாடி ஏற,

“அண்ணா, வந்து ஒரு நிமிஷம்…” என விஷால் நிறுத்த திரும்பி பார்த்தவன் என்னவென்று பார்வையிலேயே கேட்க விஷால் சந்தோஷை பார்க்க புரிந்துகொண்டவன்,

“அஷ்மியை ஸ்வேதா ரூம்ல தூங்க சொல்லுங்க. இல்லைனா என் ரூம்க்கு பக்கத்து ரூம்ல தூங்கட்டும்…” அஷ்மிதாவை பார்க்காமலேயே சொல்ல,

“அது சரிவராது. தனியா விட்டா திரும்ப அப்பா ரூம்க்கு போய் பார்த்து பிரச்சனை பண்ணுவா. ஏதோ நல்ல நேரம் வேற யாரும் வரலை. ஸ்வேதாவுக்கும் அஷ்மிக்கும் ஆகாது. பிரச்சனை ஆகிடும்…” என சொல்ல,

“இல்லனா, உங்க ரூம்ல எப்படி?…” மீண்டும் விஷாலே கேட்க,

“உங்க வேலையை மட்டும் பாருங்க. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு…”

முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டு அஷ்மியுடன் மாடியேறிவிட சந்தோஷும் பாட்டிலை வெளியில் வீச போய்விட விஷால் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அதிரூபனின் அறைக்குள் நுழைந்ததும் அவளை அமரவிடாமல் பாத்ரூமினுள் தள்ளியவன்,

“மரியாதையா ப்ரெஷ் ஆகிட்டு வா. கொஞ்சமும் போதை இருக்க கூடாது சொல்லிட்டேன்…” என சொல்லி கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு,

“நானே வந்து திறந்துவிடறேன். கதவை தட்டி துவாவை எழுப்பிவிடாதே…” என்றும் சொல்லி சென்றான்.

சமையலறைக்கு சென்றவன் அஷ்மிதாவிற்கு லெமன் ஜூஸ் தயாரித்து எடுத்துவந்தவன் இன்னும் ஹாலில் அமர்ந்திருந்த விஷாலை கண்டும் காணாமல் சென்றுவிட விஷாலிற்கு கண்ணீர் வரும் போல இருந்தது.

“ஸாரி அண்ணா…” மானசீகமாய் அவனிடம் மன்னிப்பை யாசித்தான்.

தன் அறைக்கு வந்ததும் பாத்றோம் கதவை திறந்துவிட்டவன் கொஞ்சம் தெளிவாய் வந்த அஷ்மியிடம் ஜூஸை நீட்ட வாங்கி குடித்துவிட்டு சோபாவில் படுத்துக்கொள்ள,

“மேடம் என்ன பண்ணுனேங்கன்னு ஞாபகம் இருக்கா?…” கடுப்பாய் கேட்க,

“ம்ம், எல்லாம் ஞாபகம் இருக்கு. என்ன பன்றோம்னு தெரியாத அளவுக்கு ஒன்னும் நான் குடிக்கலை. இப்படி பேசினாதான் மயில்சாமிட்ட. இல்லைனா நீ பேசவா விடுவ? ப்ளீஸ் அதி. எனக்கு தலை வலிக்குது. தூங்கறேன்…” என அஷ்மிதாவும் சொல்ல ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன்,

“ஓகே, தூங்கு. குட்நைட்…” என்று படுத்துவிட கண்ணை மூடிய நிமிடம் உறங்கியும் போனாள் அஷ்மிதா.

காலையில் எழுந்து பார்க்கும் பொழுது இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள் துவாரகா. சப்தம் எழுப்பாமல் முகம் கழுவி கீழே வர அவளை பார்த்த அதிரூபன்,

“குட்மார்னிங் அஷ்மி…” என சொல்ல பதிலுக்கு அவளும் சொல்லியவள் அவனிடமிருந்த பேப்பரை வாங்கி அமர,

“ஹேய் அஷ்மி, எப்போடா வந்த…” அவளை பார்த்த பத்மினி மகிழ்வாக கேட்க,

“நைட்டே வந்துட்டேன் ஆன்ட்டி. துவாக்கு நைட் முடியலை. அதி கால் பண்ணான். அதான் வந்தேன்…” சரளமாக பொய்யை அடுக்க அதிபன் கண்டுகொள்ளவில்லை.

“ஓகேமா. காபி கொண்டுவரேன்….” என சொல்ல,

“இல்லை ஆன்ட்டி பசிக்குது. சாப்பிடறேன். நெக்ஸ்ட் காபி…”  என சிரிக்க,

“வாடாம்மா…” என அழைத்து சென்றார் பத்மினி.

பத்மினிக்கு எப்பொழுதுமே அஷ்மிதாவை பிடிக்கும். அதிலும் நேற்று மகனின் வாழ்க்கைக்காக அவள் விட்டுகொடுத்து துவாரகாவிடம் நட்பு பாராட்டிய விதம் இன்னுமே அவரை கவர்ந்தது.

டைனிங் டேபிளில் ஏற்கனவே ஸ்வேதாவும், ரத்தினசாமியும் சாப்பிட்டுக்கொண்டிருக்க,

“ஏங்க நம்ம அஷ்மி வந்திருக்கா பாருங்க…” என பத்மினி சொல்ல கோபமாய் எழுந்தவர் கையை உதறிக்கொண்டு அவளை முறைத்தவண்ணம் நகர அவளோ தோளை குலுக்கி அலட்சியமாய் அவரை கடந்தாள்.

அதில் இன்னும் வெகுண்டவர் வேகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டார். வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய பின்புதான் தான் உடை கூட மாற்றாமல் வந்துவிட்டது புரிய மீண்டும் வீட்டிற்கே திரும்பினார்.

அப்போதுதான் அவரை அழைக்கலாம் என மொபைலை எடுத்த அதிரூபன் மீண்டும் அவரே வந்துவிட,

“அப்பா, இன்னைக்கு முக்கியமான அப்பாயின்மென்ட் இருக்கா?…”

காலை அதிரூபன் எழுந்து வந்ததிலிருந்து அவரை ஏறிட்டும் பார்க்காமல் தவிர்த்து பேசவந்தவரிடம் இருந்து விலகி போனான்.

ஏதாவது அவனாகவேணும் பேசிவிடமாட்டான என அத்தனை முறை அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு இப்போது அவனே வந்து பேசிவிட மகிழ்ந்துபோனார்.

“அதிபா, நீ சொல்லுப்பா. அப்பா வீட்லயே இருக்கேன்…” சிறுபிள்ளை போல அவனின் முன்னால் வந்து நிற்க அவரை சாப்பிட்டுக்கொண்டே இகழ்ச்சியாய் பார்த்தாள் அஷ்மிதா.

அதை எதையும் கண்டுகொள்ளாதவராய் மகன் என்ன பேசபோகிறானோ என உள்ளுக்குள் பயந்து வெளியில் ஆவலாக காத்திருக்க,

“அப்போ வீட்ல இருங்க. நான் போய் குளிச்சுட்டு துவாவை கூட்டிட்டு வரேன். வீட்ல எல்லார்ட்டையும் பேசனும்…” என்று சொல்லி  சென்றுவிட யோசனையாக அமர்ந்துவிட்டார் ரத்தினசாமி.

“நம்ம பையன் தெறிக்க விடப்போறான்னு நம்புவோமாக. அசத்துடா அதி…” அஷ்மிதா வேண்டுமென்றே சொல்லி சிரிக்க அவள் பேசியது ரத்தினசாமியின் காதுகளில் மட்டுமல்ல அவள் அருகே சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷாலின் காதுகளிலும் விழுந்தது.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement