“எனக்கு உன்கிட்ட பேசணும் கிருஷ்ணா?”
“அப்புறம் பேசலாம், இப்போ தானே நீ யாரு எனக்குன்னு சொல்லியிருக்க. கொஞ்சம் நாள் போகட்டும், பேசலாம்!”
“இப்போவே பேசலாம்” என்று ஆரம்பித்தாள்.
“முதல்ல நான் ஏதாவது என் வாழ்க்கைல பண்றேன், எட்டு மாசமா என் வேலையை விட்டுட்டு வெட்டியா சுத்திட்டு இருக்கேன். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்” என்றான் தீர்மானமாக.
“ம்ம்” என காவ்யா தலையை உருட்டியவள், “ரெண்டு நாளா தூங்கலை, எனக்கு ஜுரம்”
“இப்படி தான் என்கிட்டே ரொம்ப முன்ன பேசி தள்ளுவ” என்றான், இப்படியாக விடியும் வரை பேசினார்கள். காலையில் வெளிச்சம் வரவும் தான் “அச்சோ” என்றவள், “அம்மா மேல வந்துடப் போறாங்க. எனக்கு ஜுரம் எப்படி இருக்குன்னு பார்க்க வருவாங்க” என்றவள், வேகமாக எழுந்து அந்த சுவரை தாண்டி அந்த புறம் நின்று பை என சொல்லி போய்விட்டாள்.
கிருஷ்ணா அப்படியே திரும்ப அமர்ந்து கொண்டான். வேலைக்கு போகலாமா தொழில் ஏதாவது செய்யலாமா என்று. பின்பு தொழில் செய்ய பணம் வேண்டும் அல்லவா சில காலம் வேலைக்கு போவோம், பின்பு பணம் சேர்ந்த பிறகு தொழில் செய்யலாம் என்று மனதிற்குள் வகுத்துக் கொண்டவன், எழுந்து பின்பு சென்ற இடம் பார்பர் ஷாப் தான்.
காவ்யாவிடம் உரைத்தது போல, அவனின் தாடியை எடுக்காமல் மீசையும் தாடியும் சேர்ந்து ட்ரிம் செய்தான். தாடி சற்று நீளமாக இருக்க, அது ஒரு வகையாக ஸ்டைலாக இருந்தது.
கிருஷ்ணா வீட்டிற்க்குள் வந்ததுமே அப்பா அம்மா ரேணு என மூவரும் அதிசயித்து பார்த்தனர், “எப்படி இருந்தான் இந்த மாதங்களாக” என்று.
“கிருஷ்ணா இதென்ன இவ்வளவு ஸ்டைல் ஆகிட்ட” என்றாள் ரேணு.
கிருஷ்ணா ஒரு புன்னகையுடன் “குளிச்சிட்டு வர்றேன்” என்று அவர்களை கடந்தான்.
சசிகலா “இப்போ தான் பார்க்கற மாதிரி இருக்கான்” என்று ராஜேந்திரனிடம் சொன்னார்.
“ரொம்ப சந்தோஷப்படாதே. மனசை தயார் பண்ணிக்கோ. காவ்யா தான் உன் மருமக, எப்போ வேணும்னாலும் சொல்வான்” என்றார் ராஜேந்திரன்.
சசிகலாவின் முகம் பொலிவிழந்து விட்டது.
அவர்கள் எதிர்பார்த்திருக்க அந்த வார்த்தைகளை கிருஷ்ணா சொல்லவேயில்லை. ஒரு வருடம் அப்படியே தான் சென்றது. முன்பிருந்தது போல, கிருஷ்ணா முன்பை விட இப்போது குறைவாகவே பேசினான்.
ராஜேந்திரனும் சசிகலாவும் நேர்படும் போதெல்லாம் முன்பு போல பார்வைகள் எதுவும் காவ்யாவினிடத்தில் இல்லை. சிறிதாக பார்வையை மாற்றிக் கொண்டிருந்தாள்.
இப்போது அவளின் கவனத்தில் கிருஷ்ணா கிருஷ்ணா மட்டுமே. வேலையை விட்டதும் அவளுக்காக என்று அனுமானிதிருக்க, அவன் மாறும் போது தானும் மாற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
அவ்வப்போது “ஆமாம், நாம லவ் பண்றோமா?” என்று காவ்யா கிண்டல் மொழி கூட பேசுவாள். அதற்கு பதில் சொல்லாதவன், அவளை பார்க்க மட்டும் செய்வான்.
“முன்னையாவது உன்னை ரகசியமா சைட் அடிப்பேன், இப்போ அதுக்கும் வழி கிடையாது. நேரா உன்னை பார்க்கறேன். ஆனாலும் உன் கிட்ட எந்த ரெஸ்பான்சும் இல்லை” என்பாள் அவ்வப் போது இரவில் மொட்டை மாடியில்.
பின்பு அவர்கள் சந்திக்கும் நேரமும் இடமும் அதுதான். முன்பு போல ஒரு உரிமை எடுத்து அவன் காவ்யாவிடம் யார் முன்னும் பேசுவதில்லை. சில கோபங்கள் அப்படியே இருந்தன. ரத்னா மேல் பின்பு காவ்யா மேல் எல்லாம்
ஆனாலும் அவள் தான் வாழ்க்கை என்று தெரியும். இந்த ஒரு வருடமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. சம்பளமும் அப்படி ஒன்றும் குறைவெல்லாம் இல்லை. ஒரு குடும்பம் நடத்தும் அளவு இருந்தது.
காவ்யாவும் இப்போது வேலையில் சேர்ந்து இரண்டாவது வருடம் முடியும் தருணத்தில் இருந்தாள். அவளுக்குமே நல்ல சம்பளம். வேலையிலும் நன்கு ஸ்திரமாகியிருந்தாள். ரேணு இன்னுமே அந்த பார்ட் டைம் வேலையில் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
டைவர்ஸ் கிடைத்து ஆறு மாதமாகியிருந்தது.
எல்லாம் நன்றாக செல்வது போல தோன்றினாலும், ஒரு கொஞ்சல், ஒரு குலாவல், எதுவும் கிருஷ்ணாவிடம் இருந்து வராது. காவ்யாவும் நான் சைட் அடிச்சேன் அடிக்கிறேன் என்று சொன்னாலும் முதல் நாள் கைபிடித்து அருகில் சென்று காட்டிய நெருக்கம் பின்பு எப்போதுமே இல்லை.
அன்றுமே அப்படி தான் நடு இரவில் அவன் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். காவ்யா முன்பே அவனிடம் வந்து பேசி சென்று விட்டிருந்தாள்.
பின்பு தூக்கம் வரவில்லை. கிருஷ்ணா எப்படி தன்னிடம் நடந்து கொள்கிறான் என்ற சுய அலசல் தான். முன்பு போல கிருஷ்ணா இல்லை என்பது நிச்சயம். அதாவது இங்கிருந்து போவதற்கு முன்பிருந்த கிருஷ்ணா.
அந்த யோசனையோடே வெளியே வர, சிகரெட் பிடிக்கும் கிருஷ்ணா கண்ணில் பட்டான்.
அவன் கண்ணில் படுமாறு சென்று இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தாள். இந்த ஒரு வருடமாக சிகரெட் பிடிப்பது கண்ணில் படவில்லை. இன்று தான் படுகிறான்.
முன்பு போல எல்லாம் கிருஷ்ணா கீழே போடவில்லை. இவளை பார்த்தும் வாயினில் வைக்க, “அதை கீழ போடு” என்றவளிடம், “கொஞ்சம் தான் இருக்கும், முடிஞ்சிடும்”
“சரி குடு, எப்படி இருக்குன்னு நான் டேஸ்ட் பண்றேன்” எனக் கையை நீட்டினாள்.
முறைத்து பார்த்தவனிடம், கையை நீட்டியபடி இருக்க, கை மேல் பட்டென்று ஒரு அடி வைத்தவன், அதை தூக்கி எரிந்து இந்த புறம் தாண்டி வந்தான்.
வந்தவன் ஒன்றும் பேசாமல் நெருங்கி நிற்க, “அட என்ன இது அதிசயமா பக்கத்துல வர்ற? நீ சாமியாரா போற ஐடியால இருக்கன்னு நினைச்சேன்” என்றவளிடம்,
“ம்ம், சாமியாராப் போற ஐடியால தான் இருக்கேன். அதுக்கு ப்ராக்டிஸ்க்கு தான் கிட்ட வர்றேன்” என்று இன்னும் நெருங்க,
“உவ்வே, சிகரெட் ஸ்மெல் பக்கம் வராத” என்று தள்ளி நிற்க, அவன் நெருங்க, இவள் தள்ள, என்று சிறு விளையாட்டு. சுவரில் காவ்யா முட்டி நிற்கவும் முடிவுக்கு வந்தது.
மிக அருகில் முகத்தைக் கொண்டு போக, “நீயும் உன் தாடியும், உன் சிகரெட் ஸ்மெல்லும்” என்று முகத்தை திருப்பினாள் அவனை பார்க்காமல்.
திருப்பியவளின் கழுத்து வளைவில் முகத்தை அப்படியே புதைத்தான்.
காவ்யா எதிர் பார்க்கவேயில்லை, “ஹேய் என்ன பண்ற நீ?” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. “பேசாதடி” என்று அவன் அப்படியே பேச, அந்த உதடுகளின் உராய்வு உடலில் என்ன என்னவோ செய்தது
வேண்டும் போலவும் இருக்க, வேண்டாம் போலவும் இருக்க, நொடியில் சுதாரித்து அவனை தள்ளினாள்.
முகத்தை எடுத்துக் கொண்டாலும் அவளை செல்லவிடாமல் கைகளை காவ்யாவின் இருபுறமும் அணைகட்டி இருந்தான்.
“நீ என்ன இவ்ளோ நாளா இல்லாம இப்போ இப்படி பண்ற?” என்று கிசுகிசுப்பாய் கேட்டாள்.
“அதுவா? வருஷக் கணக்கா இந்த மொட்டை மாடில பார்த்துக்குறோம். அதுவும் லவர்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு வருஷமா பார்த்துக்கறோம், இப்படி எதுவும் பண்ணலைன்னா, இந்த மொட்டை மாடிக்கு ஒரு மரியாதை இருக்காது. நீங்க எல்லாம் லவ் பண்றீங்களான்னு வரலாறு என்னை கிண்டல் பண்ணக் கூடாது இல்லையா? அதுக்கு தான்!” என்று புன்னகையோடு பேசினான்.
“நீ இப்படிக் கூட பேசுவியா? ஷப்பா இப்போதான் எனக்கு நிம்மதியாச்சு?” சன்ன சிரிப்போடு பேசவும்,
“என்ன நிம்மதியாச்சு?”
“இல்லை, உனக்கு நாம லவர்ஸ்ன்னு தெரியுமா இல்லையான்னு ஒரு சந்தேகம்?” என கண்ணடித்து சொல்லியவளின் முகத்தை ஒரு கையால் அசைய விடாமல் பிடித்தவன்,
“ரொம்ப பேசுது இந்த வாய்” என்று உதடுகளை முத்தமிட அருகில் செல்ல, முடியாது என்பது போல வாயை இருக்க மூடிக் கொண்டாள்.
சின்ன சிரிப்போடு பார்த்தவன், அவளின் மூக்கினை இன்னொரு கையால் அழுத்தி பிடித்துக் கொள்ள, சில நொடிகளில் மூச்சு விடுவதற்கு உதடுகளை பிரித்தே ஆகவேண்டியிருக்க, பிரித்து விட்டவளிடம்,
“சிகரெட் ஸ்மெல்லோட முதல் முத்தம் வேண்டாம் நினைச்சேன், சிகரெட் குடிச்சு பார்க்கணும்னு கை நீட்டின தானே, இப்படி முதல்ல சென்ஸ் பண்ணு” என, அவள் திமிறத் திமிற முத்தமிட்டான். முதலில் திமிறியவள் பின்பு திமிறல் விட, சில பல நொடிகள் நீடித்தது.
ஏனோ அந்த முத்தம் கிருஷ்ணாவின் சஞ்சலத்தை நீக்கியது. அவளை விட்டு விலகியவன் “என்கிட்டே ஏன் சொல்லலை?” என்றான்.
“இன்னுமா உனக்கிந்த கோபம்” என்று பார்த்தவளிடம்,
“இன்னும் என் மனசுக்குள்ள அந்த உறுத்தல் இருந்துகிட்டே தான் இருக்கு, ஏன் சொல்லலை? உன்னோட எனக்கான காதல் அவ்வளவு தானா? இல்லை நான் காதல் சொல்ற அளவுக்கு இல்லையா?” என்றான் திரும்பவும்.
“நான் அப்போவே உன்கிட்ட பேச வந்தேன், நீ தான் கேட்கலை” என்றாள் கோபமாக.
“இப்போ பேசு”
“அதெல்லாம் பேச முடியாது, நீ எப்படி உன் தாடியை கல்யாணத்துக்கு அப்புறம் தான் எடுப்பியோ, அது மாதிரி நானும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் பேசுவேன்”
“சொல்லு, எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்றான் உடனே.
“எங்கம்மா எப்போ என்னை கல்யாணம் பண்ணி குடுக்கறாங்களோ அப்போ?”
“உங்கம்ம்மா என்க்கிட்ட சொல்லாம மாப்பிள்ளை பார்த்தாங்க?”
“நீ எதையும் மறக்க மாட்டியா?”
“முடியலை, காதல் அது இப்போ தான் ஆனா உனக்கான என்னோட அக்கறை அதை ஏன் மதிக்கலை”
“சரி, பிடிச்சிட்டு தொங்கு!” என்றவள், “நான் தூங்கப் போறேன்” என்றாள் முறுக்கியவளாக.
“என் அப்பா அம்மாவை பொண்ணு கேட்க சொல்லட்டுமா? நீ அவங்களை பார்க்கற பார்வை மாத்திக்கிட்டியா” என்றான் ஆழ்ந்த குரலில்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். “என்னை மறுக்கக் காரணம் அவங்க தானே!”
“அவங்க உங்க அப்பா அம்மா கிருஷ்ணா, அவங்களை விட்டு உன்னை மட்டும் வான்னு சொல்லி காதல் சொல்ல என்னால முடியாது. கண்டிப்பா காதல் அப்பா அம்மா பார்த்து வராது தான். அதனால வந்துடுச்சு, கல்யாணம் அவங்க இல்லாம எப்படி? அதனால நான் சொல்லலை!”
“சின்ன வயசுல இருந்து அவங்களோட தானே உன்னை பார்க்கிறேன்” என்றவள், “நாம மேல மேல பேச வேண்டாம், எதுவும் மாத்த முடியாது!” என்றாள் தீர்மானமாக.
“அதனால தான் ஒரு வருஷம் விட்டேன், என்ன பண்ணட்டும்?” என்றான் கிருஷ்ணாவும்.
“நீ என்ன பண்ணினாலும் எனக்கு சம்மதம், எனக்கு வாழ்க்கையில வேண்டியது, ஒரே ஒரு விஷயம் தான்! நான் சொல்லாமையே நீ பண்ணுவன்னு நம்பிக்கை இருக்கு” என்றாள்.
“இந்த நம்பிக்கை ஏன் உனக்கு முன்ன இல்லை?”
“எனக்கு கல்யாணமே வேண்டாம்” எனப் போய் கதவை அடைத்துக் கொண்டாள். அடைத்த கதவை ஒரு புன்னகையுடன் பார்த்திருந்தான்.
காலையில் ராஜேந்திரன் சசிகலாவுடன் வந்து ரத்னாவிடம் காவ்யாவின் ஜாதகம் கேட்டார்.
அதனை பார்த்திருந்தவள், அவர்களை “வாங்க” என்று கூட சொல்லும் யோசனையில்லாமல், ஃபோனை எடுத்து கிருஷ்ணாவை அழைத்தவள், “எதுக்கு ஜாதகம் வாங்க வந்திருக்காங்க” அவள் சற்று பதட்டமாக பேசுவதால் சத்தமாகப் பேச, அங்கிருந்த அனைவருக்குமே கேட்டது.
“ஏண்டி இப்போ என்ன?” என்று பதிலுக்கு கத்தினான் கிருஷ்ணா.
“என்ன வா? ஜாதகம் சரி வரலைன்னா?” என கவலையாகக் கேட்க,
“நேத்து யாரோ என்கிட்டே கல்யாணம் வேண்டாம் சொன்னாங்க” எனக் கிருஷ்ணா சொல்லவும்,
“ம்ம் எனக்கு சரியா காது கேட்கலை?” என்றாள்அவ்வளவு சத்தமாக.
“யாரோ என்னை பிடிக்கும், ஆனா சொல்லவே மாட்டேன்! கல்யாணம் பண்ணவே மாட்டேன் சொன்னாங்க!”
“யாரோ இல்லை, நான் தான்! நான் தான்! போதுமா!” என எரிச்சல் குரலில் சொன்னவள், பின்பு “கிருஷ்ணா” என்றாள் பாவம் போல.
“காவ்யா” என்றான் அவ்வளவு காதலை குரலில் தேக்கி, அது ஒரு வகையில் அவளை அமைதி படுத்தியது.
“ம்ம்” என்றவளிடம், “எனக்கு நீ ஒரு கிபிட் தரணும்” என்றான்.
“என்ன”
“முதல்ல சிரிச்ச முகத்தோட, மரியாதையா அவங்களை வாங்கன்னு சொல்லு போ” என்றான் ஆழ்ந்த குரலில்.
பதிலில்லாததால் “தருவியா” என,
அவளின் தலை “தருவேன்” என்பது போல சம்மதமாக ஆடியது அவனுக்கு கைபேசியில் தெரியவில்லை.