விவேக் பொறுப்பை எடுத்துக் கொண்டான் .ஓவியப் போட்டியின் வெற்றி சஞ்சுவை ஃபைன் ஆர்டஸில் சேர்க்கலாம் என்ற யோசனையை விவேக்கிற்குத் தர , அதைக் குறித்த தேடல்களைத் தொடங்கினான் . இணையத்தில் , நண்பர்களுடன் , அந்தத் துறையில் இருக்கும் பெரியவர்களுடன் பேசி , தனக்குத் தேவையான தகவல்களைத் திரட்டினான் .பின் அம்மாவிடம் , சஞ்சுவிடம் விளக்கினான் .
பின் சஞ்சுவிடம் , “எனக்கு என்னமோ இந்த வகையான படிப்பு உனக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறது. நான் கவனித்த வரை கலை தொடர்பான விசயங்கள் உன்னை ஈர்க்கிறது , அந்த விசயங்களுக்கு உன்னிடம் மெனக்கெடல்களும் , நேர்த்தியும் இருக்கிறது சஞ்சு. ஆகையால் இந்தப் படிப்பு பற்றிய விவரங்களை இணையத்தில் பார்…” என்று அறிவுறுத்தினான்.
மேலும், “அப்படிப்பு படிக்கும் மாணவர்களின் போன் நம்பர்களை வாங்கிக் கொடுத்து , பேசச் சொன்னான் . அப்படிப்பில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கினான்.”
பின்,“இரண்டு நாள் தருகிறேன்.நன்றாக யோசி.அதன் பின் உன் தெளிவான முடிவைச் சொல். அப்புறம் அப்பாவிடம் பேசலாம்….”
மஞ்சு தன் மகனின் பொறுப்பில் மகிழ்ந்து போனார் , கண் கலங்க, “ராஜா…” என்று கட்டிக் கொண்டார் . அப்பாவின் புறக்கணிப்பால் நொந்திருந்த சஞ்சுவிற்கு விவேக்கின் வழிகாட்டுதல் மிகுந்த ஆறுதலைத் தந்தது . “நன்றி அண்ணா..” என்று நெகிழ்ந்தாள் .
“எனக்காக எதையும் செய்யாதே சஞ்சு , உனக்குப் பிடித்திருந்தால் மட்டும் சொல் . உனக்கு வேறு சாய்ஸ் இருந்தாலும் சொல். அதைப் பற்றியும் விசாரிப்போம்…” என்று தலை கோதிச் சென்றான் .
ராதா , ராஜியிடம் விவரத்தைச் சொல்லி , மஞ்சுவும் விசாரிக்கச் சொன்னார் . “இவ்வளவு அகங்காரம் கூடாதப்பா. மகளின் வாழ்வையே தன் ஈகோவிற்காக பலியிடுகிறாரே…” என்று தோழிகள் வருத்தப்பட்டனர் .
பின்,“கவலைப்படாதே மஞ்சு , கீத்து அப்பாவிடம் விவரம் கேட்கச் சொல்லுகிறேன் , தைரியமாக இரு..” என்று நம்பிக்கை ஊட்டினார் ராதா.
ராஜியும் தன் பங்கிற்கு , “என் மகனின் நண்பர்கள் இல்லை தெரிந்தவர்கள் யாராவது இப்படிப்பை எடுத்திருக்கிறார்களா ?– என்று விசாரிக்கச் சொல்கிறேன்” என்று தைரியமூட்டினார் . தோழிகளுடன் பேசிய பின் , மஞ்சுவிற்கு மனதில் நம்பிக்கை ஒளி கீற்றுப் பிறந்தது .
இறுதியில் சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் ஓவிய படிப்பு (BFA ) நான்கு வருடம் படிக்கலாம் என்று முடிவு செய்தார்கள் . அப்பாவிடம் முடிவைத் தெரிவிக்க , அவர் பெரிதாக ஆர்வம் காட்டாமல்,“ஒழுங்காகப் படித்திருந்தால் , நல்ல கல்லூரிக்குச் சென்றிருக்கலாம். பொறியியல் படித்து நிம்மதியாக செட்டிலாகி இருக்கலாம். ஆட்டம் பாட்டம் என்று இருந்தால் இப்படித்தான்...” என்று குறை சொல்ல,
இடை புகுந்த விவேக் , “பொறியியல் படிப்புக்கு நீங்கள் உதவுகிறீர்களா அப்பா ?”
“என் பேச்சைக் கேட்காதவளுக்கு, நான் எதற்கு செய்ய வேண்டும்? பெற்ற கடமைக்குப் ஃபீஸ் கட்டுகிறேன். மற்றபடி எதையும் எதிர்பார்க்காதீர்கள்…” என்றார் விஜயன் வீம்பாக.
பின் மஞ்சுவின் இடத்தை விவேக் எடுத்துக்கொண்டு , அவரிடம் கெஞ்சினான். போராடினான்.
“பெரிய மனுசனாகிவிட்டாய்…” என்று அவனையும் திட்டினார்.“எல்லாம் நீ ஏத்திவிடுவது…” என்று மஞ்சு மீதும் பாய்ந்தார் . பின் சஞ்சுவை முறைத்தபடி , “கடமைக்காகச் செய்கிறேன்..” என்றார் .
ஒரு வழியாக சஞ்சுவின் கல்லூரிப் போராட்டம் முடிவுற்றது .
அத்தியாயம் 17
கீர்த்தனாவிற்குப் பொறியியல் தான் விருப்பம் என்பதால் கவுன்சிலிங்கிற்குக் காத்திருந்தாள் . ஆன்லைனில் கவுன்சிலிங் என்று வர , “ வீட்டுக்கு வரமுடியுமா விவேக்? இன்னும் இரண்டு நாளில் கவுன்சிலிங்கிற்குக் கல்லூரியின் தர வரிசை அனுப்ப வேண்டும். நீ கொஞ்சம் கீத்துவிற்கு உதவ முடியுமா…?” என்று கேட்டார் ரமேஷ் .
“என்ன அங்கிள் ? இப்படி பேசுகிறீர்கள். வா விவேக் என்று சொல்வதை விடுத்து…” என்று செல்லமாகக் கோபிக்க,
“சரி, சரி வாப்பா…” என்று சிரித்தபடி போனை வைத்தார்.
விவேக் வீட்டுக்கு வர நால்வரும் இணைந்து , துறை மற்றும் கல்லூரியின் சாதகபாதகங்களை ஆராய்ந்து , கீத்துவின் விருப்பத்திற்கேற்ப வரிசையைத் தயார் செய்தனர் . பின்பு சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்தனர் . விவேக்கும் தன் கல்லூரியில் நிகழ்ந்த காமெடி நிகழ்வுகளை சொல்ல , இடமே சிரிப்பால் அதிர்ந்தது.
அப்போது ராதா , “ரொம்ப சந்தோஷம் விவேக். பொறுப்பான அண்ணனாக இருந்து சஞ்சுவை வழி நடத்திவிட்டாய்…” என்று புகழ ,
“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆன்ட்டி. அங்கிளோட இன்புட் மற்றும் இத்துறையில் உள்ளவர்களின் அறிவுரைகளால் தான் இது நடந்தது” என்றான் அடக்கமாக .
ரமேஷ் தோளில் தட்டிக் கொடுக்க , “மஞ்சு ரொம்ப கவலைபட்டாள் , நல்ல வேளை எல்லாம் சரியாக முடிந்தது” என்று பெருமூச்சு விட்டார் ராதா.
“நான் கிளம்புகிறேன்…” என்று விவேக் சொல்ல ,
“அதெல்லாம் முடியாது சாப்பிட்டு போ” என்றார் ராதா .
“ஏன் அம்மா , இந்த கொலை வெறி ? விட்டு விடும்மா , நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்” என்று கீத்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க ,
ராதா முறைக்க , இடைபுகுந்த ரமேஷ் , “விவேக் ஓடிப் போய் விடு…” என்று கேலி செய்ய , கீத்துவும் , அவள் அப்பாவுடன் ஃஹைபை செய்ய , கீத்து முதுகில் ராதா செல்ல அடி போட்டாள் .
விவேக்கிற்கு இந்தக் காட்சிகளைப் பார்க்க , அவ்வளவு ரம்மியமாக இருந்தது . மனதோரத்தில் ஒரு ஏக்கம் கூடத் தோன்றியது . இந்த விளையாட்டில் குதித்த விவேக் , “உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடு வேண்டாமா அங்கிள்?” என்று கண் சிமிட்ட ,
உடனே ரமேஷ் , “அதை வேற ஏம்பா ஞாபகப்படுத்துகிறாய் , வயிறெல்லாம் புண்ணாகிக் கிடக்கு…” என்று சினிமா வசனத்தைத் தனக்கு வசதியாக மாற்றிப் பேச , விவேக் வெடித்துச் சிரித்தான் .
“அய்யோ , உங்களுக்கு வயிற்றுப் புண்ணா ? அப்போ இரண்டு நாளைக்குக் கஞ்சி தான்..” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு , ஏற்ற இறக்கத்துடன் ராதா சொல்ல ,
“ஆஹா..!” நாமே ஆப்பைத் தேடி உட்கார்ந்து விட்டோமே என்று ரமேஷ் திருதிருக்க , மீண்டும் சிரிப்பலை பரவியது .இங்கே கூடுதல் நேரம் இருக்க விரும்பியே விவேக் சாப்பிட ஒத்துக் கொண்டான் . ஒருவரை ஒருவர் ஓட்டி , கேலி செய்தபடி சாப்பிட்டனர். இந்த அன்யோன்யமும் , அன்பும் மிகவும் அழகாக இருந்தது . விவேக் மிகவும் ரசித்தான்.
அத்தியாயம் 18
கீர்த்தனா உயர்ந்த பொறியியல் கல்லூரியில் கணினி பிரிவில் சேர , சஞ்சு கலைக்கல்லூரியில் சேர்ந்தாள் . அனைவருக்கும் ஆன்லைனில் கல்லூரி தொடங்கியது . விஜயன் வேலைக்குப் போக ஆரம்பித்தார்.
வீட்டில் அதிக நேரம் இருக்க இந்த ஆன்லைன் வகுப்புகள் தோதாக அமைய , வகுப்புகளுக்கிடையே பேச்சு, சிரிப்பு , அரட்டை என்று வீட்டில் ஒரு இலகுத்தன்மை வந்தது. வீட்டுச் சூழ்நிலை சற்று மாறியது . சஞ்சுவின் மனநிலையும் மாறியது . பழைய துள்ளல், விளையாட்டுத்தனம் இல்லாத போதும், சற்று தெளிந்திருந்தாள் .
விவேக் கல்லுரியில் சேர்த்துவிட்ட பிறகு, சஞ்சுவிற்கு அண்ணன் மீதான பார்வையும் மாறியது. தன் நன்மைக்குத் தான் அண்ணன் பேசியிருக்கிறான் என்ற புரிதல் உண்டாகியது . விவேக் சஞ்சுவிற்கிடையே பிரியம் கூடியது . எப்போதும் “அம்மா அம்மா…” என்பவள் , இப்போது “அண்ணா…” என்று வந்து நின்றாள், இதைக் கண்டு மஞ்சுவும் மகிழ்ந்தார்.
மாலையில் தோழிகளைச் சந்தித்த பொழுது , “எப்போதும் ஒரு யோசனை ஓடிக் கொண்டே இருக்கும். எனக்குப் பின்னே பிள்ளைகள் எப்படியிருப்பார்களோ? என்று இப்போது அந்த கவலை தீர்ந்தது” என்று வீட்டில் நடந்ததைத் தோழிகளுடன் பகிர்ந்தார்.
ரொம்ப சந்தோஷம் என்று தோழிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் .
சஞ்சுவும், தன் அண்ணனை நல்லவன் , வல்லவன் என்று புகழ , கீத்துதான் காதில் இரத்தம் வடிய கேட்க வேண்டியதிருந்தது .
வாழ்க்கைச் சக்கரம் இலகுவாக ஓட, சஞ்சுவும் கல்லூரியில் நன்றாகவே படித்தாள். விவேக்கிற்கும் கேம்பஸில் அதிக சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைத்தது. ஐந்து இலக்கச்சம்பளம் என்றவுடன் விஜயனுக்கு பெருமை பிடிபடவில்லை , பணியிடத்தில் பந்தா காட்டினார் .
“ஒழுங்காக நான் சொன்ன மாதிரி படித்தான். இப்போது செட்டிலாகி விட்டான் . நீயும் இருக்கிறாயே… , என்ன செய்யக் காத்திருக்கிறாயோ ?” என்று கரித்துக் கொட்ட,
அண்ணனின் வெற்றியை சந்தோஷமாகக் கொண்டாட முடியாமல், சஞ்சுவை வருந்தச் செய்தார்.
நாட்கள் ஓட , மூவரிடையே அன்பு கூடியது. நல்ல புரிதலும் உருவாகியது .சஞ்சுவும் பிடித்த பாடம் என்பதால் நன்றாக ஆர்வமுடன் படித்தாள். முதல் செமஸ்டரில் நல்ல மதிப்பெண் வாங்கினாள். ஆனால் விஜயனுக்கு அது பெரிதாகப் படவில்லை . அவர் வழக்கம் போல் அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார் .
“உன் வாழ்க்கையில் ஜெயித்து இதற்குப் பதிலடி கொடு” என்று மஞ்சு தேற்றினார்
பாடங்கள் ஆன்லைனில் என்பதால் புரிவதும் , படிப்பதும் கடினமாகயிருக்க , கீத்து விவேக்கின் உதவியை நாடினாள் .
விவேக்கிடம் படிக்க கீத்து வர , பயங்கரமாகப் பந்தா விட்டான்.“குரு என்று சொல். வணக்கம் வை. அப்போது தான் சொல்லித் தருவேன்” என்று வம்பு செய்தான் .கீத்து கடுப்பானாள். வேறு வழியில்லாமல் மண்டையாட்டினாள் .
“உங்க அண்ணன் ஓவராகப் பண்றான் , கீத்துவைப் பற்றி சரியாகத் தெரியவில்லை , ஒரு நாள் இருக்கு…” என்று சபதம் செய்தாள் .
என்ன வம்பு செய்தாலும் , பொறுமையாக , விளக்கமாகக் கற்றுக் கொடுத்தான். அவனின் நோட்ஸ்களைப் படிக்கக் கொடுத்தான் .விவேக்கின் அறிவு கண்டு வியந்தாள் . அவன் மீது தனி மரியாதை வந்தது . முதலில் விவேக்கின் வற்புறுத்தலால் “குரு” என்று அழைத்தவள். பின்பு அவளாகவே உணர்ந்து அழைத்தாள் . விவேக்குடன் நட்பும் நெருக்கமும் கூடியது .
ஒரு நாள் கீத்து வரும் போது விஜயனிருக்க , அவள் படிப்பைப் பற்றி எல்லாம் விசாரித்தவர் , பின்,“உன் கூடத் தானே இருந்தாள் , கொஞ்சம் சொல்லிக் கொடுத்து மதிப்பெண் வாங்க வைத்திருக்கலாமே? பார். இப்போது ஒரு உருப்படாதப் படிப்பை எடுத்துள்ளாள்….” என்று குறைபாடினார் . பின்,“உன்னைச் சொல்லி என்ன செய்ய? அவள் அடங்கினால் தானே?” என்று கீத்துவிடம் சஞ்சுவை அசிங்கப்படுத்தினார் .
கீத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்க, ,மஞ்சுவும் இடைபுகுந்து பேசினால் ஏழரையைக் கூட்டி விடுவார் என்று அமைதியாக நின்றாள்.
சஞ்சு அவமானத்தில் குறுகினாள் .
“வா கீர்த்தனா , எனக்கு வேலையிருக்கிறது , ஒரு அரைமணி நேரம் மட்டும் தான் சொல்லித் தர முடியும்..” என்று அந்த இடத்தை விட்டு நகர்த்தினான் விவேக்.