விடுமுறை என்பதால் மஞ்சுவின் போன் சஞ்சனா கைவசமானது. எல்லா நேரமும் போனில் தான் இருந்தாள் .
முதல் முறையாகச் சமூக ஊடகங்களில் உலா வருவதால், அதில் பெரிதும் ஈர்க்கப்பட்டாள் . ஃபேஸ்புக் , இன்ஸடாகிராம் என்று எல்லாவற்றிலும் கணக்குகளைத் துவங்கினாள் . நிறைய நண்பர்கள் கிடைத்தனர் , சாட்டிங்.. சாட்டிங்… என்று அவளுக்குப் பொழுது ஓடியது.
சஞ்சு ஆர்வமிகுதியால் “ரீல்ஸ் “ எடுத்து இன்ஸடாகிராமில் அப்லோட் செய்தாள் .மஞ்சுவிற்கு வேலையே சரியாக இருக்க , இதையெல்லாம் கவனிக்கவில்லை . விவேக்கிற்கும் தெரியவில்லை .
ஒரு மாலை கீத்து , விவேக்கைப் போனில் அழைக்க, என்னடா அரைக்காபடி அழைக்கிறது ?என்று ஒரு குறுகுறுப்புடன் போனை எடுத்தான் .
உடனே கீத்து , “தனியாக இருக்கிங்களா? கொஞ்சம் பேச வேண்டும்…” என்று தயக்கதோடு சொல்ல ,
ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ ? அங்கிள் , ஆன்ட்டி சரியாகக் கையாளவார்களே ? என்னை எதுக்கு… என்று மனதில் ஆயிரம் கேள்விகள் ஓட , “சொல் கீத்து, தனியாகத்தான் இருக்கிறேன் “
பின் தயங்கியபடி , “சஞ்சு ரீல்ஸ் போடுகிறாள்…”
“ஓ…!” என்றவன் , மேலே சொல்லக் காத்திருந்தான் .
“தப்பாக எதுவும் இல்லை , ஆனால், இதனால் எதுவும் பிரச்சனை வந்தால் , அங்கிளை நினைத்தால் பயமாக இருக்கிறது. நானும் லேசாகச் சொன்னேன் , அவள் மிகுந்த உற்சாக மனநிலையில் இருக்கிறாள் . புரிந்து கொள்ள மறுக்கிறாள் . நீங்கள் கொஞ்சம் பார்த்துப் பக்குவமாகச் சொல்லுங்கள் . அப்புறம் உங்கள் இன்ஸ்டா கணக்கைச் சொல்லுங்கள், உங்களுக்கும் அனுப்புகிறேன்.”
“சரி , ரொம்ப நன்றி கீத்து , அப்படியே உன் தோழியோட கணக்கையும் அனுப்பு…”
“அப்புறம், நான் சொன்னேன் என்று தெரிய வேண்டாம்..” என்று கீத்து தயங்க ,
“புரிகிறது கீத்து , நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்று போனை வைக்கப் போக ,
“ஒரு நிமிடம் , பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்…”
“சரி…” என்று போனை வைத்தான் . இவன் ஏன் வேண்டாத வேலையெல்லாம் பார்க்கிறாள்? என்று டென்ஷனானான். பின்பு தன்னைச் சமன்செய்து விட்டு, இதை எப்படிக் கையாளவது என்று யோசித்த வேளையில் , கீத்து அவன் கணக்கிற்கு அனுப்பிருந்தாள் .பத்து ரீல்ஸ் வரை செய்திருந்தாள் , எல்லாம் சாதரணமான வகைதான். தப்பாக எதையும் செய்திருக்கவில்லை என்பதைக் கண்டவுடன் ஆசுவாசமானான் .அம்மாவிற்கு உதவாமல் , இந்த வெட்டி வேலையைத் தான் செய்து கொண்டிருந்தாள் என்று நினைக்கும் போது கோபம் வந்தது .இதை எப்படிக் கையாள்வது? என்று யோசிக்கத் தொடங்க, அப்பாவிடம் சொல்ல முடியாது என்பது தெளிவாகப் புரிய,
அம்மாவிடம் சொல்லாமா ? வேண்டாமா ? இல்லை நாமே நேரடியாகக் கையாள்வோமா? என்று பல குழப்பத்தில் இருந்தான்.
முதலில் சஞ்சுவின் இன்ஸ்டா கணக்கிற்கு தன்னை நண்பனாக சேர்க்கும் படி அழைப்பு விடுத்தான் .சஞ்சுவும் பெரிதாக எதையும் யோசிக்காமல் , ஆமோதித்தாள் .
இரண்டு நாள் சென்ற பிறகு , அம்மாவிடம் மெதுவாகக் காண்பித்தான் .உடனே மஞ்சு பதறினார் . “ஏன்டா ராஜா..? இப்படி தேவையில்லாத வேலை பார்த்திருக்கிறாள் , அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்று விடுவார்…” என்று பயந்தார் .
“நாமே சமாளிப்போம் அம்மா , அப்பாவிடம் சொல்ல வேண்டாம்.”
மஞ்சுவோ பயங்கர பதட்டத்தில் , “எப்படிடா ?”
“பொறுமையாகப் பேசுவோம் அம்மா.”
“வீட்டில் அப்பா இருக்கிறார். வெளியேயும் அழைத்துச் சென்று கூட பேச முடியாதே..”என்று மஞ்சு கவலைப்பட,
“பார்த்துக்கலாம் அம்மா…” என்று தைரியமூட்டினான்.
அப்பா வேலையில் கவனமாக இருக்கும் நேரத்தில் , சஞ்சு அறைக்குச் சென்றான் .மெதுவாக வேறு கதைகள் பேசினான். பின் அம்மாவும் வர , அப்போது தான் அம்மாவிடம் காண்பிப்பது போல அவள் ரீல்ஸை காட்டினான் .
மஞ்சுவும் முதன்முறையாக பார்ப்பது போல பார்க்க , சஞ்சு அம்மாவை ஆவலுடன் பார்த்தாள் .பின்னர் சிறிது நேரம் ரீல்ஸை வைத்து விவேக்கும் , மஞ்சுவும் கலாய்த்தனர் .
“அம்மா..” என்று சஞ்சுவும் சிணுங்க , ஒரு இலகு மனநிலை உருவாகியது .மெதுவாக விவேக் , “அப்பாவிடம் காண்பிப்போமா… ?” என்று கேட்க ,
உடனே சஞ்சு , “ஏன் அண்ணா இந்தக் கொலைவெறி..?”
அப்போது மஞ்சு , “ அப்பா பார்த்தால் என்ன நடக்கும் என்று யோசிக்க வில்லையா?” என்று கொக்கிப் போட,
“நான் ஒன்றும் அசிங்கமாகச் செய்யவில்லையே அம்மா…” என்று தன்னுடைய நியாயத்தைச் சொன்னாள் .
“சஞ்சும்மா , நீ செய்தது நன்றாக நீட்டாக உள்ளது , ஆனால் எல்லோரும் ஒரே பார்வையில் பார்க்க மாட்டார்களே..! என் அனுபவத்தில் சொல்கிறேன், சில பசங்களோட கண்ணோட்டம் வேறு மாதிரி இருக்கும். எல்லோரும் உன்னைத் தங்கையாகப் பார்க்க மாட்டார்கள் சஞ்சு , புரிகிறதா?” என்று நிறுத்தினான் .
“என்ன அண்ணா? ஏதேதோ சொல்லி பயமுறுத்துகிறாய்? என் தோழிகள் பலர் இது மாதிரி செய்திருக்கிறார்கள… .”
“இல்லை சஞ்சும்மா , இந்த வயதில் இதெல்லாம் சகஜம் தான். நீ செய்ததைத் தப்பு என்று சொல்லவில்லை. எதற்குத் தேவையில்லாத பிரச்சனை என்று தான் கேட்கிறோம்…”
சஞ்சு யோசிக்க , உடனே விவேக் , “நிறைய கமெண்ட்ஸ் வரும். சில நல்ல மாதிரி இருக்கும். ஆனால் பல கமெண்ட் வர்கள், மன உளைச்சலை உண்டாக்கக் கூடிய பாலியல் சீண்டல்களாகவும், துன்புறுத்தல்களாகவும் இருக்கும். அதைக் கையாள உனக்குப் பக்குவமும் தைரியமும் வேண்டும் . ஏதேனும் தவறு நடந்தால் , அதைக் கையாள குடும்பம் உறுதுணையாக இருக்க வேண்டும் . அந்தச் சூழ்நிலை நம் வீட்டில் இருக்கிறதா?”
“இதெல்லாம் வேண்டாம் சஞ்சும்மா. அப்பாவை நினைத்துப் பார்த்து முடிவு எடு…” என்றவர், பின், எனக்கு வேலை இருக்கிறது என்று கிளம்பினார் .
விவேக்கும் கிளம்பும் முன் , “இந்தக் காலத்தில் சமூக வலைதளங்களைத் தவிர்க்க முடியாது , எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவுக்குத் தொந்தரவுகளும் உண்டு . நாம் தான் தெளிவாக இருக்க வேண்டும் . நன்றாக யோசி….”
மொத்தத்தில் சஞ்சு குழம்பிப் போனாள் . வழக்கம் போல் அண்ணன் மீது கோபப்பட்டாள் . மறுநாள் அனைத்தையும் கீத்துவிடம் போனில் புலம்ப ,
“ உங்கள் அண்ணன் சொன்னது சரி தான். எங்கள் வீட்டிலும் போன் கொடுக்கும் போது இதைப் பற்றிப் பேசினார்கள்…”
“என்ன கீத்து சொல்கிறாய் ?”
“அவங்க பயம் அவங்களுக்கு சஞ்சு. மார்ப்பிங் செய்து பெண்களை மிரட்டுவது , நம்ம கணக்கில் ஆபாசமாக பதிவிடுவது , உருவக் கேலி செய்வது என்று எத்தனையோ விசயங்கள் நடக்கும் . அப்புறம் முக்கியமான விசயம் தெரியாத நபர்களை , உன் நட்பு வளையத்திற்குள் வரப் பார்ப்பார்கள். அதனால் பல பிரச்சனைகள் வரும்….” என்று கீத்து பேசவும், சஞ்சுவும் சற்று தெளிவானாள் .
மறுநாள் அம்மாவிடம் , “யோசிக்காமல் செய்து விட்டேன் அம்மா. இனி ரீல்ஸ் எதுவும் போட வில்லை” என்று வாக்குறுதி தந்தாள் .
“ரொம்ப சந்தோஷம் டா. நீ புரிந்து கொள்வாய் என்று எனக்குத் தெரியும்” என்று தோளனைத்தார் .எங்கே வயது காரணமாக சரியாகப் புரிந்து கொள்ள மாட்டாளோ..? என்று பயந்து கொண்டே இருந்தவர், நிம்மதியானார்.
ஆனால் விதி யாரை விட்டது? விஜயனுடன் வேலை பார்க்கும் ரகுபதியின் மகளும் சஞ்சுவின் பள்ளியிலே படிக்க , பள்ளி நட்பு வட்டத்தின் மூலம் அவள் கணக்கிற்கு சஞ்சுவின் ரீல்ஸ் வர , அது ரகுபதி மூலம் விஜயனை அடைய ,விஜயன் ருத்ர தாண்டவம் ஆடினார் .
இதுவரை பெரிதாகக் கையை நீட்டாதவர். அன்று அடிப் பின்னிவிட்டார் . தடுக்க வந்த மஞ்சுவையும் , விவேக்கையும் வார்த்தைகளால் விளாசினார். மஞ்சுவின் வளர்ப்பு முறையையும் கேவலமாக பேசினார் .
“இந்த மாதிரி ஆட்டக்காரியாகத்தான் க்ரீம் கேட்டு அடம்பிடித்தாயா? புத்தி ஆட்டத்தில் போனால் படிப்பு எப்படி வரும் ? என்று சஞ்சுவைத் திட்டியவர், மஞ்சு பக்கம் திரும்பி, “மகளை நன்றாக வளர்த்திருக்காய் …, உனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும்…”என்று எள்ளி நகையாடியவர், பின், “இதெல்லாம் உனக்குத் தெரிந்து தான் நடக்கிறதா?” என்று கோபமாகக் கேட்க,
“இல்லைங்க , சின்னப் பெண் தானே,ஏதோ புரியாமல் செய்து விட்டாள். இனி நடக்காமல் பார்த்து கொள்கிறேன்…” என்று மஞ்சு கெஞ்சினார் .
ஆனாலும் விஜயன் விடவில்லை , பின் வந்த நாட்களில், சஞ்சுவை குதறிக் கொண்டிருந்தார் . கைப்பேசியையும் அவளிடமிருந்து பிடுங்கினார் .
மகள் விஜயனின் தீரா கோபத்திற்கு ஆளாகிவிட்டாள் என்று புரிந்து மஞ்சு பதறினார் .சஞ்சுவை பற்றிய கவலை மஞ்சுவை ஆட் கொண்டது . ஆனாலும் மஞ்சுவிற்கு வேலையே சரியாக இருந்தது . கிடைத்த நேரத்தில் சஞ்சுவை சமாதனப்படுத்த முயன்றார் .
கீத்துவிடம் கூட சொல்லி ஆறுதல் தேட முடியாத சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டாள் சஞ்சு . வீட்டிலே விஜயன் இருந்ததால் சஞ்சுவால் அம்மாவிடம் கூட அழுது புலம்ப முடியவில்லை . சஞ்சு மன உளைச்சல் தாங்காமல் முதன்முறையாக யாருக்கும் தெரியாமல் , பிளேடால் கண் பார்வைக்குப் படாத இடமாக தொடையில் கிழித்துக் கொண்டாள், கீறலின் வலியால் நெஞ்சில் வலி குறைவது போல் உணர்ந்தாள் . மொத்தத்தில் சஞ்சு பயந்து ஒடுங்கிப் போனாள்.
மஞ்சுவால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது.விஜயனிடம் எந்தப் பேச்சும் எடுபடாது என்பதால் தன்னால் ஆன சமாதானத்தைச் சொல்லி, சஞ்சுவை தேற்ற முயன்றார் . விவேக் என்ன செய்வது? என்று தெரியாமல் திணறினான் .
மஞ்சு தன் தோழிகளைக் காண முடியாமல் மிகவும் தவித்தார் . போனில் தான், அதுவும் சில நிமிடங்களே, அவரால் தோழிகளிடம் பேச முடிந்தது. அப்படியான ஒரு தருணத்தில், “சஞ்சு விளையாட்டுத் தனமாக இருக்கிறாள் அம்மா , புத்தி சொல்லுங்கள் , புரிய வையுங்கள் என்று விவேக் எச்சரித்த போதெல்லாம் அசால்ட்டாக விட்டு விட்டேனே… , இன்று என் தங்கம் கஷ்டப்படுகிறாளே ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறேனே….” என்று என்று வேதனைப்பட்டார் மஞ்சு .
“சீக்கிரம் சரியாகிவிடும்…” என்று ராதா தேற்ற முயல
“இல்லை, அவருக்கு யார் மீதாவது தப்பான அபிப்பிராயம் வந்து விட்டால், மாற்றுவது மிகவும் கடினம் ராதா . இன்று அவருக்கு சஞ்சு மீது தாழ்ந்த அபிப்பிராயம் வந்துவிட்டது . இதை நான் எப்படி மாற்றப் போகிறேனோ…?” என்று புலம்பினார் .
“நல்லதே நடக்கும்..” என்று தோழிகள் தேற்றினர் .
அத்தியாயம் 15
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் போக , ஒரு மாதம் சென்றிருக்க , இந்தியாவைத் தாக்கிய கொரோனா வகையால் பெரிய ஆபத்துகள் இல்லை என்று தெரிய வர , மக்கள் சற்று ஆசுவாசமானார்கள் .ஆனால், பள்ளி , கல்லூரி , அலுவலகம் என்று எதுவும் திறக்கவில்லை
மூன்று மாதம் ஓட , மக்கள் நியூ நார்மல் என்ற புதிய இயல்பு நிலைக்குப் பழக ஆரம்பித்தனர் . பள்ளிகள் , கல்லூரிகள் , இணையத்தில் இயங்கத் தொடங்கின . விவேக் நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைத்தான். விஜயன் அலுவலகத்திற்குச் சென்றார் . ஓரளவு வீட்டின் இயல்புகள் சீராகத் தொடங்கின.
அன்று சஞ்சுவிற்கு தேர்வு முடிவு வந்தது . சுமாரான மதிப்பெண்களே பெற்றிருந்தாள் . வீடு மீண்டும் ரணகளமாகியது . விஜயன் தேளாய் கொட்டினார் . “வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தாயே ? மதிப்பெண்களைப் பார்…” என்று மஞ்சுவை வறுத்தெடுத்தார்.
“ஆட்டம் பாட்டம் என்று திரிந்தால் எப்படிப் படிப்பு வரும்…” என்று சஞ்சுவை கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்தினார் . “மேலும், முட்டாளுக்கெல்லாம் பணம் கொடுத்து சேர்க்க முடியாது. கஷ்டபட்ட காசை வீணாக்க முடியாது. அதேமாதிரி, சீட்டு கொடுங்கள் என்று எவன் காலிலும் போய் விழவும் மாட்டேன்” என்றார் உறுதியாக .
பின்,“இந்த மார்க்கிற்கு என்ன கல்லூரி கிடைக்கிறதோ? அங்கே போய் படி. பெற்ற கடமைக்குப் பணம் கட்டுகிறேன்…” என்று சொல்ல, சஞ்சு மனதளவில் மிகவும் நொடிந்து போனாள் .
தன் கணவனின் பிடிவாதத்தை மாற்றமுடியாது என்று தெரிந்த போதும் , மகளுக்காகக் கெஞ்சிப் பார்த்தார். பிடித்த பிடியிலே நின்றார் .
இந்தச் சூழ்நிலையில் , சஞ்சு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றதாக விஜயனுக்குப் பள்ளியிலிருந்து போன் வர , தனக்கு தெரியாமல் கலந்து கொண்டதை அறிந்த பின் , கடுங்கோபத்திற்கு ஆளானார் .
மஞ்சுவின் உதவியின்றி இது நடந்திருக்காது என்பதால் மஞ்சுவும் அவருடைய லிஸ்டில் இணைந்தார் .அவரை மீறி, சஞ்சு செய்தால் என்பதே முன்னே நிற்க , வேறு எதையும் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை .
ஏற்கனவே அவள் மீதிருந்த கோபம் , நல்ல மதிப்பெண்கள் பெறாதது , தன் சொல் பேச்சுக் கேளாமல் ஓவியப் போட்டியில் கலந்தது என்று எல்லாம் சேர ,சஞ்சு நின்றால் குற்றம் உட்கார்ந்தால் குற்றம் என்று சஞ்சுவின் எல்லா செயல்களும் பரிகாசத்திற்கு உள்ளாக்கினார் விஜயன் .
மேலும், “நீங்கள் தான் பெரிய ஆளாகி விட்டீர்களே , என் பேச்சைக் கேட்காமல் நீங்களே போட்டியில் கலந்து கொள்கிறீர்கள். அப்புறம் எதற்கு கல்லூரிக்கு மட்டும் என்னிடம் வருகிறீர்கள்? நீங்களே கல்லூரியை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கல்லூரிக்காக விரலைக் கூட அசைக்காமல் பிடிவாதமாக நின்றார் விஜயன் .
மஞ்சுவும் பேச முடியாத சூழ்நிலையில் இருக்க ,அப்பாவின் நடவடிக்கையால் , எதிர்காலத்தின் மீதான பயத்தால் . மிகுந்த வேதனையால் சஞ்சு இரண்டாம் முறையாகக் கீறிக் கொண்டாள் .
பிள்ளைகளுக்காகத்தான் வாழ்க்கை என்று வாழ்ந்தவரால் , சஞ்சு எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதை நினைத்து மிகவும் நொந்து போனார் மஞ்சு. இந்தக் குழப்பத்தில் , பயத்தில் மஞ்சுவும், மஞ்சுவின் நடவடிக்கையைக் கவனிக்காமல் போனார் .எவ்வளவோ அவமானங்களைத் தாங்கி , தாண்டி வந்ததே பிள்ளைகளுக்காகத்தானே , அதுவே ஆட்டம் காணும் போது , வாழ்க்கை மேல் விரக்தி ஏற்பட்டது . கணவன் மீது எங்கோ ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பிரியமும் அறுந்தது . கடமைக்காக வேண்டா வெறுப்பாக வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தார் .
அப்பாவிடமிருந்து, தங்கையைத் தான் காப்பாற்ற முடியவில்லை. அவள் எதிர்காலத்திற்காவது நல்லது செய்ய வேண்டும் என்று விவேக் உறுதி பூண்டான் .